Month: January 2023

  • இசைக்கவியின் இதயம் – புதிய தொடர் நிகழ்ச்சி

    இசைக்கவியின் இதயம் – புதிய தொடர் நிகழ்ச்சி

    வணக்கம்!

    இதோ ஒரு புதிய தொடர் நிகழ்ச்சி!

    பல்லாண்டு காலமாக எனக்குப் பாட்டும், கவிதையும் தந்து பராசக்தி என்னைப் பாலித்து வருகிறாள். நானொரு தமிழ்க் கவிஞன் என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் நான் சுமப்பதில்லை.

    அவள் தந்த கவிதைகளையும், பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே ஒரு தொடர் நிகழ்ச்சி. மாதம் ஒரு முறை.

    என்பால் பேரன்பு கொண்ட இரு நண்பர்கள் இதை எடுத்து நடத்த முன்வந்திருக்கிறார்கள் – ஒருவர் இடம் தந்து, நேரலை ஒளிபரப்பும், யூடியூப் பதிவும் செய்யும் திரு. ராமகிருஷ்ணன், ஆர் கே கன்வென்ஷன் சென்டர். இன்னொருவர், தேசப் பற்றாளர், ஆன்மிகப் பயணி, வியாசர்பாடி திரு. குருமூர்த்தி ஐயா அவர்கள்.

    வாருங்களேன்! கவிதையும் பாடல்களும், கொஞ்சம் சிற்றுண்டியும் உங்களுக்காகக் காத்திருக்கும்!

    17.01.23, செவ்வாய், மாலை 6.30, ஆர் கே கன்வென்ஷன் சென்டர், லஸ் முனை அருகில், மயிலாப்பூர், சென்னை 600004.

    நேரில் வர இயலாதவர்கள் நேரலையில் காண: https://youtu.be/lfoxwaqOV1A  

    அன்புடன்,
    ரமணன் 

    Share
  • குறளின் கதிர்களாய்…(434)

    குறளின் கதிர்களாய்…(434)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(434)

    நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு.

    -திருக்குறள் – 791 (நட்பாராய்தல்)

    புதுக் கவிதையில்…

    நட்பு நாடி அதிலே
    ஊன்றி நிற்பவர்க்கு,
    ஒருவரோடு நட்பு கொண்டபின்
    அந்நட்பை
    விட்டு விலகுதல்
    மிகக் கடினம்..

    அதனால்
    முன்பே ஒருவரைப் பற்றி
    நன்கறிந்து ஆராயமல்
    நட்புக் கொள்வதைப்போல்
    கேடு தருவது வேறில்லை…!

    குறும்பாவில்…

    நட்பை விரும்பியதில் ஊன்றிநிற்பவர்க்கு
    ஒருவருடன் நட்புக்கொண்டபின் விலகுதல் கடினமென்பதால்,
    நன்கறியாமல் நட்புக்கொளல் பெரும்கேடே…!

    மரபுக் கவிதையில்…

    விரும்பியே நட்பினை ஏற்றவர்க்கு
    விலகியே செல்லுதல் எளிதல்ல,
    ஒருவரை நட்பினில் சேர்க்குமுன்னே
    ஒழுங்குடன் அன்னவர் குணநலன்கள்
    பெருமைகள் போன்றவை அனைத்தையுமே
    பெரிதுமாய்த் தெரிந்திடா நிலையினிலே
    நெருங்கியே நட்பினைக் கொள்ளுதல்போல்
    நேரடிக் கேடென வேறிலையே…!

    லிமரைக்கூ…

    நட்பினை ஏற்றபின் விரும்பி,
    விலகுதல் கடினமென்பதால் நன்கறியாமல் ஒருவரிடம்
    நட்புக்கொண்டால் கேடுவரும் திரும்பி…!

    கிராமிய பாணியில்…

    நட்புகொள்ளு நட்புகொள்ளு
    நல்லமொறயில நட்புகொள்ளு,
    நல்லா அறிஞ்சி நட்புகொள்ளு..

    நட்ப விரும்பி
    ஒருத்தரோட நட்ப ஏத்தபெறகு
    விட்டுவெலகுறது செரமம்,
    அதுனால
    ஒருத்தரப்பத்தி நல்லாத்
    தெரிஞ்சிக்காம
    நட்புகொள்ளுறதப்போல கேடு
    வேற இல்ல..

    அதால
    நட்புகொள்ளு நட்புகொள்ளு
    நல்லமொறயில நட்புகொள்ளு,
    நல்லா அறிஞ்சி நட்புகொள்ளு…!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 25

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 25

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசன் கவிதைகளில் வடிவக் கோட்பாடுகள்

    ஆய்வு முன்னுரை

    கவிதைகளின் யாப்பமைதியை அவற்றின் வடிவம் என்று கூறலாம். தொடைகளும் அவற்றின் விகற்பங்களும் வடிவத்தை நிர்ணயிக்கும் கூடுதல் காரணிகளாகப் பணியாற்றுவதும் உண்டு. இது பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர் பலரும் தங்கள் நுண்மாண் நுழைபுலத்தால் நுண்ணிய செய்திகளையும் கண்டு கூறுவர். பாடலொன்றை எடுத்துக் கொண்டு அதன் பெயர் இனம், தொடை, விகற்பங்கள் முதலியவற்றையெல்லாம் விரித்துக் கூறுவர். இந்தக் கட்டுரையில் அத்தகைய நுட்பமான ஆய்வு முறை மேற்கொள்ளப்படவில்லை. பண்ணை கவிக்கோ வசந்தராசன் அவர்கள் அவ்வப்போது முகநூலில் எழுதி வரும் கவிதைகளின் யாப்பமைதியைப் புதிய நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    1.0. இலக்கிய வடிவங்களும் கவிதையும்

    இலக்கியத்தின் வடிவங்கள் பல. செய்யுள், நாடகம், சிறுகதை, புதினம், புதுக்கவிதை என அவை விரியும். இறக்குமதியான வடிவங்களும் கவிதைகளில் இடம் பெறுவதுண்டு. தமிழைப் பொருத்தவரையில் கவிதையே தலைசிறந்த வடிவமாக எல்லாராலும் ஏற்பளிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில்கூடப், ‘புதுக்கவிதை’ என்னும் வழக்கைப்போல் ‘புதுச்சிறுகதை’, ‘புதுநாடகம்’ என்னும் வழக்கின்மை நோக்குக. புதுமையானதை ஏற்றுக் கொள்ளும் பாங்கும் ஆழந்த உணர்ச்சிகளையும் ஒன்பான் மெய்ப்பாடுகளையும் குறைந்த சொற்களில் வெளிக்கொணரும் சிறப்பும் கவிதைக்கு இருப்பதே ஏனைய வடிவங்களைவிடவும் இது சிறப்பாகக் கருதப்படுவதற்கான காரணங்கள் எனலாம். எனவேதான் கற்பனை, உணர்ச்சி, வடிவம், கருத்து என்னும் இலக்கியக் கூறுகள் பற்றி ஆராயும் ஆய்வாளர்கள் கவிதைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

    1.1. கவிதை வடிவங்கள்

    “கலையின் வடிவமே கலைஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்பு படுத்தும் கருவியாகும்” வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா அவற்றின் இனங்கள் எனப் பல்கிப் பெருகிய தமிழில் சிந்துகளும் வந்து கலந்த வரலாறு உண்டு. இவற்றுள் எதிலும் அடங்காத நாட்டுப்புறப் பாடல் வடிவங்களும் சிலப்பதிகாரம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை தங்கள் இலக்கிய உரிமையை நிலைநாட்டியிருக்கின்றன. யாப்பே மரபு என்பார் உள்ளத்து இருத்த வேண்டிய இன்றியமையாத செய்தி இது.

    1.2. வடிவத்தின் வரையறை, பயன், இன்றியமையாமை

    உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதை என்பது உண்மையே. ஆனால் அழகான கற்பனையும் பொருத்தமான வடிவமும் அமையாவிடின் கவிதையின் படைப்பு நோக்கம் முழுமை பெற இயலாது. படைப்பவனின் உணர்ச்சியனுபவத்தை நுகர்வோனுக்குக் கொண்டு சேர்க்கும் தனித்ததொரு ஊடகமாகச் செயல்படுவது வடிவமே.

    “கவிஞர் தன் எண்ணத்தையும் உணர்ச்சியையும் பிறருக்கு உணர்த்த முற்படும் ஆழ்ந்த முயற்சிகளே வடிவமாகும்.  இலக்கியம் அழகு பெறுவது வடிவத்தால்”

    என்பார்கள் அறிஞர்கள். உணர்ச்சிக்கும் கருத்துக்கும் இசைந்த வடிவம் அமையாவிடிலோ அவை தம்முள் மாறுபட அமைந்துவிடிலோ கருச்சிதைவைப் போலப் படைப்புச் சிதைவும் தடுக்க இயலாமற் போய்விடுவதோடு இலக்கியத்தின் வெற்றியும் பெருமளவுக்குப் பாதிப்புக்கு ஆளாகும். “ஓர் இலக்கியம் சிறந்ததா இல்லையா என்பது அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொருத்தது, ஓர் இலக்கியம் நன்கு அமைந்ததா இல்லையா என்பது உணர்ச்சிக்குத் தரப்பட்ட வடிவத்தைப் பொருத்தது” மகாகவி பாரதி அனைத்து கவிதை வடிவங்களையும் அறிந்தவர். ஆனால் அவர் பாஞ்சாலி சபதத்தைக் குறிப்பிட்ட வடிவத்தில் எழுதாமல் விருத்தம், சந்த விருத்தம், சிந்து முதலிய வடிவங்களைக் கையாண்டு நிறைவு செய்திருப்பதற்குக் காரணம் உணர்ச்சிக்கேற்ற வடிவம் தர தன்னை இழந்ததுதான்.

    1.2.1. யாப்பின் மந்தணம் ஓசை ஒழுங்கே

    யாப்பு என்பது இயற்றமிழ் இலக்கணம். இசைத்தமிழ் இலக்கணமன்று. எனினும் அதன்கண் நுட்பமாக அமைந்துள்ள ஓசையொழுங்கே அதன் கொடுமுடியாகும். ‘இன்ன சீர்கள் இன்னவாறு அமைந்தால் இன்ன தளைகள் தோன்றும். தோன்றவே இன்ன ஓசை புலப்படும்’ என்பது யாப்பறி கல்வியின் தொடக்க நிலையாகும். குறிப்பிட்ட ஒரே யாப்பில் அமைந்த பாடல்கள் பலவற்றைப் பலகாலும் பயின்று ஓசையொழுங்கின் அடிப்படையில் பாடல்கள் படைக்கப்படின் அப்பாடல்களில் முறையான தளையும் வரவேண்டிய சீரும் தாமாகவே அமையும் என்பது யாப்பறி கல்வியின் இறுதி நிலையாகும். “யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதையாகும்” என்னும் சுரதாவின் வரிகள் காட்டும் கவிதை அரிச்சுவடி இதுதான்.

    1.2.2. யாப்பும் படைப்பும்

    கலத்தையும் காரிகையையும் மட்டும் கற்றுப் பாடல் எழுதுகிறவர் வெறும் சொற்களைப் பின்னுகிறவராகத்தான் இருப்பர். ஒலி நயத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து கருப்பொருள் பாடுகிறவர் ‘கவிஞராக’ ஒளிர்வர். தமிழ்க்கவிதை உலகைப் பொருத்தவரையில் இலக்கியத்தின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்கக் காலம் தொடங்கிப் “புதுக்கவிதை”யின் பொற்காலம் எனப் புகழப்படும் தற்காலம் வரை இவ்வடிப்படையில் அமைந்த படைப்புக்களே காலத்தை வென்று நிற்கின்றன. இன்றைய கவிதைப் படைப்பாளர் பெரும்பாலோர் மரபுவழி வந்த யாப்பமைப் பாடல்களைப் பாட எத்தனிக்கும்போது அவர்கள் கொள்கிற அச்சமே இதற்குப் போதிய சான்றாகும்.

    பொங்கிவரும் உணர்ச்சிகளைக் கவிதைப் படைப்பாக மாற்ற முயலும் படைப்பாளனுக்கு யாப்புப் பற்றிய தெளிந்த அறிவும், உணர்ச்சிகளுக்கேற்ற வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை உணர்வும் பெரிதும் தேவைப்படுகின்றன. நிதானம், பொறுமை, தெளிந்த அறிவு, நிறைந்த பயிற்சி முதலியவை ஒருங்கிணைந்தாலேயொழிய இந்தக் கவிதை வித்தையில் அர்ச்சுனர் ஆவது கடினம்.

    1.2.3. உணர்ச்சியும் வடிவமும்

    யாப்பு உணர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பவர் தமிழ்க்கவிதை மரபையும் வரலாற்றையும் துளியும் அறியாதவரே. புகழேந்திப் புலவர் நளவெண்பாவை நேரிசை வெண்பாவில் பாடினார். அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியை ‘யாப்பின் பாசக்கயிறான’ கட்டளைக் கலித்துறையில் பாடிக்காட்டினார். ஆண்டாள் கலிவிருத்தத்திலும் கொச்சகக்கலியிலும் பாசுரங்களையும் பாவையையும் பாடினார். ‘பாவை பாடிய வாயால் கோவை’ பாடிக் கொச்சகக்கலியிலும் கட்டளைக் கலித்துறையிலும் கொடி நாட்டினார் மணிவாசகப்பெருமான். இந்த இலக்கியங்கள் எல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பதை ஒருமுறை ஓதுபவரும் உணர்ந்து கொள்ளலாம். வடிவமோ அதற்கான காரணியாகிய யாப்பும் கவிஞனின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குத் தடையாக இருந்ததே இல்லை. தற்காலத்திய இத்தகைய புலம்பலுக்குக் காரணம் உணர்ச்சியற்றவர்களெல்லாம் கவிதை புனைய எத்தனித்ததே. மேற்சொல்லப்பட்ட பல்வகை யாப்புக்களும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியப் பொருண்மைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. உணர்ச்சிக்கேற்ற யாப்பு என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கொள்கையாகும். “என் உணர்ச்சி என்னைப் பிசைந்து பிசைந்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது” என்பார் வைரமுத்து.

    1.2.4. வெண்பாவின் தோல்வியும் விருத்தத்தின் வெற்றியும்

    உணர்ச்சிக்கும் கருத்துக்கும் ஏற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைக் கொள்கை. வடிவத்தை வைத்துக் கொண்டு உணர்ச்சியைக் கொட்ட முடியாது. வடிவத்தை வைத்துக் கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்ய முடியாது. அவையிரண்டும் முன்னவை. யாப்பு பிந்தியது. மைசூர் பாகு முன்னால். அதற்கான அச்சு பின்னால். கடினமான யாப்பு என்பதாலேயே அதனால் செய்யப்படும் இலக்கியங்கள் வெற்றி பெற்றுவிடும் என்பது ஒரு மாயை. உண்மை நிலைக்கு மாறானது. பாரதக் கதைக்கு வில்லிப்புத்தூராழ்வாரின் உணர்ச்சி விருத்தத்தைத் தேர்ந்தெடுத்தது. அதே பாரதக்கதைக்குப் பெருந்தேவனார் கொண்டிருந்த உணர்ச்சி வெண்பாவைத் தேர்ந்தெடுத்தது, என்ன ஆனது? எளிமையான விருத்தத்தால் வில்லியார் பெற்ற இலக்கிய வெற்றியை, மிகக் கடினமான வெண்பாவினால் எழுதிய பெருந்தேவனார் பெற முடியவில்லையே? யாருக்காவது பெருந்தேவனார் பாரதம் தெரியுமா? “புறநானூற்றுப் பாடல்களை விருத்தங்களில் எழுதியிருந்தாலும் உலகப்பன் பாட்டைக் கலிப்பாவில் எழுதியிருந்தாலும் என்றோ இரண்டும் அழிந்து போயிருக்கும்” என்பார் பெருஞ்சித்திரனார். கவிதைகளை அவற்றின் அழகும் செப்பமும் குறையாமல் வார்த்தெடுக்கும் ஆற்றலும் நுட்பமான ஆய்வு நோக்கும் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் கண்ட உண்மை, நம் கருத்துக்குப் போதிய அரணாகும். பொருளுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற வடிவம் என்பது வைரத்தைத் தங்கத்தில் வைத்துப் பார்ப்பதுபோன்ற அனுபவமாகும்.

    2.0 தொல்காப்பியச் செய்யுளியலும் வடிவக்கோட்பாடும்

    தற்காலத் திறனாய்வாளருள் பலரும் தொல்காப்பியச் செய்யுளியல் இன்றைய இலக்கிய நுகர்ச்சிக்கோ திறனாய்வுக்கோ பயன்படாது என்று விடாது கூறிவருகின்றனர். ஆனால் உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவெல்லாம் செய்யுளின் கூறுகளாதலின் தொடையும் தொடை விகற்பங்களும் வடிவத்துள் அடங்கும் என்பது பெறப்படும். பெறவே தொடை விகற்பங்களைப் பற்றிய தொல்காப்பியச் சிந்தனை வியப்பளிப்பதாக உள்ளது.

    “மெய்பெறு மரபின் தொகை வகை தாமே
    ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐந்நூற்றொடு
    தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூற்று
    ஒன்பஃதென்ப உணர்ந்திசி னோரே!”

    ஐ ஈர் ஆயிரம்                                   10000
    ஆறு ஐந்நூறு                                     3000
    தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூறு        699

    ஆக 13699. எப்படி? மோனை 1019. எதுகை 2473. முரண் 2. இயைபு 182. அளபெடை 159. பொழிப்பு 654. ஒரூஉ 654. செந்தொடை 8556 ஆக தொடை விகற்பம் 13699. இலக்கியத்தை அனுபவித்தல் அக்காலச் சமுதாயத்தினருக்கு இல்லையென்றால் தொடை வகைகளை இவ்வாறு வகைப்படுத்தித் தொகைப்படுத்தி விளக்கங்களைத் தந்து கூற முடியாது. அதனால் இலக்கியத்தை நன்றாக அனுபவித்தவர்கள் தமிழர்கள் என்பதுடன் அதற்குரிய இலக்கணமும் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. வடிவமே கவிதையாகாது. ஆனால் வடிவமே கவிதை என்னும் கருத்துடையார் குறைந்த அளவு இத்தனை தொடை விகற்பங்களில் தாம் எழுதும் கவிதைகளில் இடம் பெற்றவை எத்தனை எனச் சிந்திப்பதற்கு உரியாரே.

    2.1. நோக்குமிடமெல்லாம் யாப்பன்றி வேறில்லை

    ‘வடிவக்கோட்பாடுகள்’ என்பது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தொடைவிகற்பங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே. இவற்றினும் தனித்து நிற்பது யாப்பு. யாப்பினால் உருவாகும் செய்யுட்கள் அல்லது கவிதைகளில் முன்னவை பெறும் இடம் இன்றியமையாதன என்பதை அறிதல் வேண்டும். வெண்பா என்று தனித்து ஒன்றில்லை. ஆசிரியப்பா எனத் தனித்து ஒன்றில்லை. கலிப்பா என்று தனித்து ஒன்றில்லை. வஞ்சிப்பா என்று தனித்து ஒன்றில்லை. நாம் ஏதேனும் பாடல் எழுதுகிறோம் என்றால் அவற்றின் வகைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் எழுதுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா, ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக்கலிப்பா, கலிவெண்பா, வெண்கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என்னுமாறு கிடந்த பாவகையினுள் (கலிப்பாவின் விரிகள் தனி) தற்காலக் கவிஞர் பெருமக்கள் எத்தனை யாப்பினைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் பாக்களிலிருந்தே அறிந்து கொள்ள இயலும்.

    இவை வெறும் பாக்கள் மட்டுமே. இனி இனம், தாழிசை, துறை, விருத்தம் என நான்கு வகைப்பாக்களுக்கும் கூட்டி உறழத் தோன்றுபவை கடல்போலக் காட்சிதரும். வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கலி விருததம், வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் என்னுமாறு கிடந்த பாவினங்களுள் எத்தனைப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பதைச் சிந்திக்க வேண்டாமா? இந்த மாபெருங்கடலுள் ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்றாகிய ஆசிரிய விருத்தத்தில் இரண்டினை மட்டும் எழுதிக் கொண்டு தன்னை ஒரு மரபுப் பாவலர் என்று கூறிக் கொள்வாரை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    3.0. வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி

    தமிழை முறையாகப் பயின்றவர் வசந்தராசன். யாப்பினைப் பொருத்தவரையில் வசந்தராசன் பாக்கள், பாக்களின் இனங்கள் ஆகிய அனைத்தையும் கையாளவில்லை என்பதை முன்னமே சொல்லிவிட வேண்டியதாகிறது. அவரும் தன்னை யாப்பியல் வல்லார் என்றும் கூறிக் கொண்டதில்லை. நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணைக் கொச்சகக்கலிப்பா, சிந்து முதலிய பாவகைகளையும் எண்சீர், அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்களையும் மட்டுமே எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கும் புதுக்கவிதைகளுக்கு வெளிப்பாட்டு உத்தியே வடிவமாகலின், வடிவத்திற்குத் தனி இலக்கணமுடைய தமிழ் மரபுகளுக்கு உகந்ததாக அது கருதப்படவில்லை. எனவே அது பற்றிய ஆராய்ச்சியும் இங்கு எழவில்லை. எனவே வடிவத்தைப் பொருத்தவரையில் தமிழ்க்கவிதை வடிவங்களைப் புதுக்கவிதை வடிவத்தோடு ஒப்பிடுவது எள்ளின் முனையளவும் ஆய்வுப் பயனை நல்காது என இக்கட்டுரை உறுதிபடக் கருதுகிறது.

    3.1. எண்சீர் விருத்தமும் இலக்கண அமைதியும்

    பாக்களுக்கு இருப்பது போன்ற சீர் கட்டுப்பாடுகள் விருத்தங்களுக்கு இல்லை. சான்றாக எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றால் அடிக்கு எட்டுச்சீர்களாக நான்கடியில் அமையவேண்டும் என்பது மட்டுமே விதி. இன்னும் தெளிவாகச் சொன்னால் அளவொத்த நான்கடிகள் அமையுமாயின் அது விருத்தம். இதில் அடிக்கு நான்குசீர் என அமைந்தால் அது கலிவிருத்தமாய்விடும். ஐந்து சீர் என்று அமைந்தால் அது கலித்துறை ஆகிவிடும். எனவே ஆறுசீர்களும் அதற்கும் மேலும் அமைந்து நான்கடியாய் அமைவதே கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். எனவே எட்டுச்சீர் கொண்ட அடிகள் நான்காய் அமைந்தால் அது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். ஏனை வெளிவிருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என இருப்பினும் தமிழ்க்கவிதைகளின் பெரும்பரப்பு முழுவதையும் பட்டா போட்டுக் கொண்டிருப்பது இவ்விரண்டு விருத்தங்களே.

    “அம்மாமித் தமிழெழுதி ஆகா என்பார்!
    அறிவில்லாத் தமிழரதை வாங்கிக் கற்பார்!
    செம்மை சேர் இலக்கியத்தின் சீரைக் கொன்றே
    சிறப்பாரும் தனித்தமிழை வேண்டாம் என்பார்!
    கைம்மைசேர் புலைமொழியைக் கொச்சைப் பேச்சை
    மடமையினால் காதலிப்பார்! காதைத் தீய்ப்போம்!
    நம் மறைமலையார் கொள்கை போற்ற
    நலனில்லாத் தமிழ் வளர்ப்போம் நன்மை செய்வோம்!”

    எண்சீர் விருத்தங்களுள் இது ஒரு வகை. காய் காய் மா மா என்பது அரையடிக்கான இலக்கண மரபு. நினைவிற் கொள்ளவேண்டும். இலக்கணமன்று. இலக்கண மரபு. இந்த அரையடியில் 3,4 சீர்கள் மாவில் வரலாம் என்று இருந்தாலும் 3வது சீரில் தேமா வரலாம் புளிமா வரலாம். ஆனால் 4வது சீரில் தேமா மட்டுமே வரவேண்டும். இதில் இது யாப்பு வல்லாண்மை என்றால் 3 மற்றும் 4வது சீர்கள் அனைத்திலும் தேமாவாகவே வைத்துக் கோப்பது. மேலே காட்டப்பெற்ற பாடலுள் நான்கடியுள் அமைந்த 16 சீர்களும் தேமாவாகவே இருப்பது காண்க. இவ்வாறு அமைவது அரிதினும் அரிது. ஒரு விருத்தத்திற்கு இத்தகைய 16 சீர்களும் தேமா என்பது அரியதாயினும் 15, 14, 13, 12 என தேமா பயின்று வருமாறு விருத்த வல்லாளராகவே வசந்தராசன் திகழ்கிறார்.

    “சேர்ந்தெழுந்தால் வானிறங்கிக் கால்பி டிக்கும்!
    செதுக்கிவைத்த காலமது கால்கி டக்கும்!
    வேர்மேடை அரங்கத்தை ஊர்நி றைக்கும்!
    விசிறிவைத்த நிழல்வீட்டில் தேர்ந டக்கும்!
    ஊர்கூடி நடந்தாலே போதும் அந்த
    வெற்றிமங்கை எதிர்வந்து கொண்ட ழைக்கும்!
    யார்கூற்று மல்லவிது! இயற்கை காட்டும்
    கூர்கூற்று! உணர்ந்தாலே ஞானம் பேசும்!”

    “வான்பரப்பைச் சிறகளந்து வளைத்து வைத்தேன்!
    வட்டநிலா தொட்டிலுக்குள் போட்டு வைத்தேன்!
    தேன்சிந்தும் செந்தமிழில் பாட்டெ டுத்துத்
    தென்றலாலே தொட்டிலாட்டித் தூங்க வைத்தேன்!
    நான்நடிக்கும் நாடகத்தை நானே பார்த்தேன்!
    நாக்குவழி சுவாசித்துக் காலம் யாத்தேன்!
    தோன்றுமிட மெல்லாமே என்னைப் பார்த்தும்
    தொலைந்துவிட்டேன் உன்னிடம்நான்! தேடித் தாயேன்!”

    என்னும் விருத்தங்களுள் 15 தேமாக்கள் வந்து சந்த கம்பீரத்தை உயர்த்துவதைக் காணலாம். இத்தனைத் தேமாக்கள் என எண்ணிக் கொண்டு எழுதியதனால் அமைந்ததல்ல இவை. கவிஞன் உணர்ச்சியைக் கொட்டுகிறான். கொட்டுவது கவிதையாகிறது. கொட்டப்பட்ட கவிதையில் கிடந்த சீர்கள் இவை. அவ்வளவுதான்.

    “சிறகுகளின் இறகெழுத்தில் என்னைப் பார்த்தேன்!
    சிற்றிடையுன் வளைவிருந்து நாணம் பார்த்தேன்!
    பரபரக்கும் இமையிரண்டின் விளிம்பில் நின்று
    படும்பார்வை தூரம்வரை நின்று பார்த்தேன்!
    சரசரக்கும் சேலையிழை மடிப்பில் நின்று
    சாய்ந்தாடி அத்தனையும் தின்று பார்த்தேன்!
    திறமைகளின் பேரழகுத் தீவே! உன்னில்
    தொலைந்துபோய் கிடக்குமெனைத் தேடித் தாயேன்!”

    என்னும் விருத்தத்துள் 14 தேமாக்கள் அமைந்திருக்கின்றன என்றால் பின்வரும் விருத்தத்தில் 13 தேமாக்கள் அமைந்துள்ளதைக் காணலாம்.

    “ஈக்கடிக்கும் கொசுக்கடிக்கும் எறும்பி னோடும்
    எக்கடிக்கும் உனைக்காத்த என்னை யின்று
    நீகடித்துப் பார்க்கின்றாய்!தாய்ப்பால் வற்ற
    நெஞ்சார ரத்தத்தால் பசித ணிப்பேன்!
    நாகடித்துக் கொள்ளாதே அவச ரத்தில்!
    நானிருப்பேன் பொறுமையாக! என்னை மட்டும்
    சாகடிக்கும் பழியுனக்கு வேண்டாம்!நானே
    செத்துபல நாளாச்சு! போய்வா!போய்வா!”

    வசந்தராசனின் இத்தகைய எண்சீர் விருத்தங்களால் சாதாரணமாக, மிக மிகச் சாதாரணமாக யாப்பியல் மரபினைப் பேணும் இயல்பை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அமைதல் வேண்டும் என்று எண்ணிக் கணக்கெடுத்து அவர் எழுதவில்லை. அவர் எழுதுகிற பாட்டில் அப்படி அமைந்துவிடுகிறது. இதுதான் யாப்பின் இரகசியம். தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்றிருந்த அரையடி யாப்பு, தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா என்றும் புளிமாங்காய் தேமாங்காய் புளிமா தேமா என்றும் இன்னும் பலவாகவும் விரிந்து காட்சியளிக்கிறது. இருப்பினும் எந்த நிலையிலும் எட்டுச் சீர்களில் 4 மற்றும்  8 ஆகிய சீர்களில் புளிமா வரக்கூடாது என்னும் மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது. எல்லாரும் அறிந்த இன்னொரு வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது.

    “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளுவம்வகை கிடைத்த
    குளிர்தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே!
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே!
    உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே!
    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே!
    மென்காற்றில் விளைசுகமே! சுகத்திலுறும் பயனே!
    ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!”

    வள்ளற்பெருமான் உள்ளங்கவர்ந்த யாப்பு இது. அவருடைய அருள்விளக்க மாலை, அருட்பிரகாச மாலை, இங்கித மாலை முதலியனவெல்லாம் இந்த யாப்பில் அமைந்தனவே. பாவேந்தர் பாரதிதாசனுக்கும் இந்த யாப்பு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் அதிகமான பாடல்களை இந்த யாப்பில் அவர் எழுதவில்லை.

    “தென்திசையைப் பார்க்கின்றேன்! என்சொல்வேன்? என்றன்
    சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடடா!
    அன்றந்த இலங்கையினை ஆண்டமற வேந்தன்
    ஐயிரண்டு திசையனைத்தும் தன் புகழை வைத்தோன்!
    குன்றெடுத்த பெருந்தோளான்! கொடைகொடுத்த கையான்!
    குள்ளநரி செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
    என்தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
    இராவணன்காண்! அவன்பெருமை இவ்வுலகம் அறியும்”

    என்பது போன்ற ஒருசில பாடல்களையே எழுதியிருக்கிறார். இவ்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அரையடி காய் காய் காய் என மூன்று சீர் அமைந்து (அதாவது தேமாங்காய் புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்) எனக் கலந்தமைந்து) நான்காவது சீர் தேமா, புளிமா முதலிய வாய்பாடுகளில் அமையும். ஆனால் அவை கூவிளம், கருவிளம் வாய்பாடுகளில் அமைவதில்லை. இது மரபு. இப்படி அமைவதற்கு எந்த நூலிலும் இலக்கணம் இல்லை தாங்களாகவே இலக்கணம் செய்து கொண்டவர்களைத் தவிர. வசந்தராசன் இத்தகைய யாப்பிலும் தன் ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார்.

    “பொற்கால ஆட்சியின் பூபாளம் வாழ்க!
    பொன்னிநதி தோற்கவரும் பெருந்தாய்மை வாழ்க!
    சொற்கோலம் தினம்வரையும் செந்தமிழே வாழ்க!
    சோராத பேருழைப்பின் சூத்திரமே வாழ்க!
    நற்பேறே! தமிழகத்தின் நாயகனே வாழ்க!
    நடந்துவரும் ஓய்வறியா சூரியனே வாழ்க!
    வற்றாத தமிழ்நாட்டு வரலாறே வாழ்க!
    வசந்தங்கள் பூப்பெய்ய வாலிபமாய் வாழ்க!”

    என்னும் விருத்தத்தில் அரையடி ஈறு ‘வாழ்க’ என்னும் தேமாவில் முடிந்திருப்பது காண்க. பலரும் அறியாத வேறொரு வகை எண்சீர் விருத்தத்தை மணிவாசகப் பெருமானும் மகாகவி பாரதியும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் இருவரைத் தவிர பிறர் எழுதியிருக்கிறார்களா என்பது கட்டுரையாசிரியருக்குத் தெரியாது. பின்னூட்டம் இடும் அன்பர்கள் காட்டினால் நன்றியுடையேன். மணிவாசகப் பெருமானின் திருப்பள்ளியெழுச்சி இப்படி அமைந்திருக்கிறது.

    “கூவின பூங்குயில்! கூவின கோழி!
    குருகுகள் இயம்பின! இயம்பின சங்கம்!
    ஓவின தாரகை ஔிஒளி உதயத்து
    ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
    தேவநற் செறிகழல் தாளினைக் காட்டாய்!
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
    யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
    எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!”

    மணிவாசகப் பெருமானின் இந்தப் பாடலில் உள்ளத்தைப் பறிகொடுத்த மகாகவி பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியை இதே யாப்பில் எழுதியிருக்கிறார்.

    “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
    புன்மை இருட்கணம் போயின யாவும்
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
    தொழுது வாழ்த்தி வணங்குதற்கு இங்குன்
    தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம்!
    விழிதுயில் கின்றனை இன்னும் எம்தாயே!
    வியப்பிதுகாண் பள்ளி எழுந்தரு ளாயே!”

    வழக்கமான காய் காய் மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த விருத்தங்களை எழுதித் தாங்களே படித்துக் கொள்ளும் மரபுக் கவிஞர்களுக்கு ஒரு சேதி! மணிவாசகப் பெருமான், மகாகவி இவர்கள் எழுதியிருக்கும் இந்த எண்சீர் விருத்தங்கள் தம்முள் அளவொத்து அமைந்த நான்கடியாய் அமைந்தனவேயன்றிச் சீர் வரையறையில்லை என்பதை அருள்கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். காரணம் விருத்தத்திற்குச் சீர், தளை வரையறை கிடையாது. இதில் என்ன வியப்பு என்றால் மணிவாசகரும் மகாகவியும் பயன்படுத்தாத யாப்பே இல்லை என்பதுதான். பெரும்பாலும் இவற்றை நிலைமண்டில ஆசிரியப்பா என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு வியப்பும் உண்டு. அதாவது மரபுக்கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார் யாரும் இந்த வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தைக் கையாண்டு கவிதைத் தொழில் செய்துள்ளனரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

    3.2. அரையடி இலக்கணமும் அறுசீர் விருத்தமும்

    எண்சீர்க் கழிநெடிலடி மற்றும் ஒருசார் அறுசீர்க் கழிநெடிலடி விருத்தங்களுக்கு இலக்கணம் சொல்வார் முழுமையான அடிக்குச் சொல்லாமல் அரையடிக்கு இலக்கணம் சொல்வார். காரணம் இவற்றுள் முற்பாதி போலப் பிற்பாதி அமைவதில்லை. தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா என்று முதல் அரையடி இருக்கும். புளிமாங்காய் கருவிளங்காய் புளிமா தேமா என்று அடுத்த அரையடி இருக்கும். இந்தக் குழப்பத்தைச் சீர் செய்ய வேண்டுமானால் அரையடி இலக்கணமே சரி என்று அவர்கள் கருதியிருக்கிறார்கள்.

    “வெள்ளம்போல் தமிழர்க் கூட்டம்
    வீரங்கொள் கூட்டம் அன்னார்
    உள்ளத்தால் ஒருவ ரேமற்
    றுடலினால் பலராய்க் காண்பர்
    கள்ளத்தால் நெருங்கொ ணாதே
    எனவையம் கலங்கக் கண்டு
    துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் 
    சொக்கும் நாள் எந்த நாளோ?”

    பாவேந்தரின் இந்தப் பாட்டில் முதலடியின் முற்பாதி ‘தேமாங்காய் புளிமா தேமா’ என்றும் பிற்பாதி ‘தேமாங்காய் தேமா தேமா’ என்றும் அமைந்திருத்தல் காண்க. அடுத்த அடியோ முந்தைய அடியினும் மாறுபட்டு தேமாங்காய் புளிமா தேமா என்றும் கருவிளம் புளிமா தேமா என்றும் அமைந்திருப்பதைக் காணலாம். கம்பன் முதல் அத்தனைப் பேருக்கும் இதுதான் நிலை. எனவே விருத்தங்களில் சீர் வரையறை இல்லாத காரணத்தால் ஒரு முழுமையான அடிக்கு இலக்கணம் இல்லை என்பது பெறப்படும். இது கட்டளைக் கலித்துறைக்கும் பொருந்தும்.

    “செம்பிட்டுச் செய்த இஞ்சித்
    திருநகர் செல்வந் தேறி
    வம்பிட்ட தெரியல் எம்முன்
    உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
    அம்பிட்டுத் துன்னம் கொண்ட
    புண்ணுடை நெஞ்சோ டைய!
    கும்பிட்டு வாழ்கிலேன் யான்
    கூற்றையும் ஆடல் கொண்டேன்”

    முதல் அரையடியைத் “தேமாங்காய் தேமா தேமா” என்றமைத்துக் கொண்ட கம்பன் அடுத்த அரையடியைக் கருவிளம் தேமா தேமா என்றமைத்துக் கொள்வதைக் காண்க.

    “எய்திய நிருதர கோனும்
    இராமனை இறைஞ்சி எந்தாய்!
    உய்திறன் உடையார்க் கன்றோ
    அறன் வழி ஒழுகும் உள்ளம்
    பெய்திறன் எல்லாம் கொண்டு
    பேசினேன் பெயரும் தன்மை
    செய்திலன் குலத்து மானம்
    தீர்ந்திலன் சிறிதும் என்றான்”

    இதுவும் கம்பன் எழுதிய அறுசீர்க் கழிநெடிலடி விருத்தமே! சென்ற பாட்டில் மூவசைச்சீரில் தொடங்கி எழுதியவன் இந்தப் பாட்டில் நான்கடிகளின் தொடக்கத்தையும் கூவிளம் என்னும் வாய்பாட்டிலேயே அமைத்திருப்பது காண்க. இந்த மரபைத்தான் வசந்தராசன் பின்பற்றி எழுதுகிறார். அதனால் இது மரபுக்கவிதை.

    “புயலிலே பிறந்த பூவே!
    பூமணத் தமிழின் நாவே!
    வயலெலி தின்னும் நெல்லும்
    வயிறுகள் காணா நம்மை
    இளமையில் வறுமை தின்னும்
    இடுக்கிலே துளிர்த்து வந்தோம்
    வளமையைக் கனவு காணும்
    வயதில்நீ மறைந்த தென்ன?”

    “கருவிளம் புளிமா தேமா
    கூவிளம் புளிமா தேமா
    கருவிளம் தேமா தேமா
    கருவிளம் தேமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா”

    என்னும் வாய்பாடுகளில் வைத்துப் பாடுகிறார் வசந்தராசன். இளமையில், வளமையில் என்பன மகரக் குறுக்கங்கள். வயதில்நீ என்பதில் ஒற்று அலகு பெறாது ஒலிநோக்கி. இன்னொருவகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இருக்கிறது. அதில் அரையடியின் ஈற்றுச்சீர் மூவசைச்சீராகப் பெரும்பாலும் காய்ச் சீராக வரும். முதல் இரண்டு சீர்களும் மாச்சீர்கள் வரும்.

    தேமா தேமா தேமாங்காய்!
    புளிமா தேமா புளிமாங்காய்!
    தேமா புளிமா புளிமாங்காய்!
    புளிமா தேமா தேமாங்காய்!

    என்னுமாறு அரையடி இலக்கண வாய்பாடுகள் அமையும்.

    “கூடிக் கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரால்?
    வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனா?
    ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
    ஆடி ஆடி ஆனந்தம் அதுவே யாக அருள் கலந்தே”

    என்பது திருவாசகம். ‘தேமா தேமா கூவிளங்காய்’ என்பது முற்பகுதி இலக்கணம். ‘புளிமா புளிமா புளிமாங்காய்’ என்பது பிற்பகுதி இலக்கணம். இரண்டாவது அடி மாறுபட்டுத் தேமா தேமா புளிமாங்காய், தேமா புளிமா தேமாங்காய் என அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ்க்கவிதை யாப்பு என்பது நெகிழ்ச்சி உடையது என்பதும் இதனாற் புலனாகலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்த யாப்பில் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.

    “கம்ப மதத்துக் களியானைக் காவற் சனகன் பெற்றெடுத்த
    கொம்பும் என்பால் இனிவந்து குறுகினள் என்றகம் குளிர்ந்தேன்!
    வம்புசெறிந்த மலர்க்கோயில் மறையோன் பெற்ற மாநிலத்தே
    தம்பியுடையான் பகையஞ்சான் என்னும் மாற்றந் தந்தனையால்!”

    என்பன இந்த யாப்பில் அமைந்த புகழ்பெற்ற பாடல்கள். பெருமக்கள் கையாண்ட இந்தக் கவிமரபு தம்பி வசந்தராசன் கவிதைகளில் வெகு சாதாரணமாக இழையோடுவதைக் காணலாம். வாய்பாடுகளைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டு எழுதுகிற எவரும் இந்தக் கலையில் வெற்றிபெற முடியாது. ஓசையொழுங்கை உள்வாங்கி உணர்ச்சிகளை அவ்வொழுங்கில் அடுக்கி வைப்பதே கவிதையாகும். வசந்தராசன் எழுதுகிறார்.

    “எவரின் வாயாய் அசைகின்றாய்?
    எவரின் விசையால் நடக்கின்றாய்?
    சுவராய் நிற்கும் தமிழ்நாட்டின்
    சுண்ணாம் பாய்நீ ஒட்டியவன்!
    தவறாய் நாக்கை நீட்டாதே!
    தலையில் கல்நீ சுமக்காதே!
    உவர்நீ ராக வயலுக்குள்
    வந்தால் வரப்புகள் விடமாட்டோம்!”

    என்றெழுதும் வசந்தராசன் வேறொரு வழக்கான அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தையும் எழுதியிருக்கிறார். இது காய் காய் காய் காய் மா மா என்னும் வாய்பாடுகளைக் கொண்டது. வில்லி பாரதம், கம்பராமாயணம். பாரதிதாசன் முதலியோர்க்குச் சர்க்கரைப் பொங்கலாக இனித்த யாப்பு இது.

    “வெம்மடங்கல் வெகுண்டனைய
    மனமடங்க செயலடங்க
    வினையம் வீய
    தெம்மடங்கு பொருதடக்கைச்
    செயலடங்க மயலடங்க
    ஆற்றல் தேய
    தம்மடங்கு முனிவரையும்
    தலையடங்க நிலையடங்கச்
    சாய்த்த நாளின்
    மும்மடங்கு பொலிந்தனஅம்
    முறைதுறந்தான் உயிர்துறந்த
    முகங்கள் அம்மா!”

    என்று இராவணனின் மரணப் பொலிவைப் பாடுவான் கம்பன். சொரணையற்ற தமிழர்களுக்குச் சொரணை வரவேண்டும் என்பதற்காய்ப் பாவேந்தர் பாடிய தமிழியக்கம் என்னும் நூல் முழுமையும் இதே யாப்பில் அமைந்தது.

    “ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
    முன்னேற்றம் ஒவ்வொன்றும்
    உன்முன் னேற்றம்!
    கண்டறிவாய் எழுந்திரு நீ!
    இளந்தமிழா! கண்விழிப்பாய்!
    இறந்தொ ழிந்த
    பண்டைநலம் புதுப்புலமை
    பழம்பெருமை அனைத்தையும்நீ
    படைப்பாய்! இந்நாள்!
    தொண்டு செய்வாய் தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
    துடித்தெ ழுந்தே!”

    கம்பனையும் வில்லிப்புத்தூராரையும் பாரதிதாசனையும் கவர்ந்த இந்த அறுசீர் விருத்த யாப்பு நம் வசந்தராசனையும் கவர்ந்திருக்கிறது. சொற்களின் கம்பீரம் குறையாமல் கையாள்வதற்கு இந்த வகை யாப்பு இடந்தரும். இந்தக் கவிஞர்களின் விருத்தங்களுக்கும் சிலர் எழுதும் ஜிகினா விருத்தங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.

    “போனவனே திரும்பிவந்தான்! திரும்பிப் போனான்!
    போகாத இன்னொருவன் சேர்ந்து வந்தான்!
    நானும்தான் போனவுடன் திரும்பி வந்தேன்!
    நடுச்சாலை வந்தவுடன் திகைத்து நின்றேன்!”

    என்று எழுதுவதற்கு யாப்பருங்கலமோ காரிகையோ தேவையில்லை. இலக்கணம் மட்டுமே கவிதையாகாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தற்காலத்தில் பாட்டெழுதத் தெரிந்தவர்கள் மரபுக்கவிஞர்கள் எனப் பறைசாற்றிக் கொள்வதற்கு இந்த விருத்தங்களே போதுமானவை என்னும் கருத்து நிலவுகிறது. உண்மையில் ஒலியை உள்வாங்கிய யாரும் விருத்தத்தை எழுதிவிட முடியும். இன்னும் துணிந்து சொன்னால் யாப்பறிவு இல்லாமலேயே விருத்தங்களை எழுதலாம். ஒலியமைதி பிடிபட்டால் போதும். அப்படியானால் விருத்தங்களை எழுதியவர்கள் அனைவரும் இவ்வாறுதான் எழுதினார்களா என்றால் இல்லை. யாப்பு செறிவுக்குச் சொல் பயன்பாடு தலையாய காரணம். சொற்செறிவு இருந்தாலேயொழிய விருத்தத்தில் அடர்த்தி அமையாது. அடர்த்தி குறையா விருத்தங்களை எழுதியவர்கள் கம்பர், சேக்கிழார், வில்லிப்புத்தூராழ்வார், பாவேந்தர், சுரதா, முடியரசன், முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னிவளவன், நன்னியூர் நாவரசன், நம் வசந்தராசன் முதலியோர்.

    “புதுமைகளின் புன்னகையே!
    பொற்றுகளின்  நாக்கிடங்கே
    இளமைக் காவே!
    முதுமைக்கே வழியடைத்து  
    மொட்டுமல ராய்ச்சிரிக்கும் 
    மூத்த நாவே!
    எதுவந்து நின்றாலும்
    எதிர்வந்து பொருதாலும்  
    வாகை ஒன்றே
    நிதம்சூடும் செந்தமிழே 
    நெஞ்செல்லாம் நீயாகும்
    நெற்றிப் பொட்டே!”

    செந்தமிழ்த்தாயைத் தம் சித்தம் நிறைய அவள் சிந்தை குளிர வாழ்த்தும் இந்தப் பாடல் யாப்பு, மரபின் தாக்கம் என்பது சொல்லாமலேயே புலப்படும். எளிய யாப்பு எனப் பாரதி கூறுவது இதனைத்தான். இந்த எளிய யாப்பினை அழகான கற்பனையால், ஆழமான உணர்ச்சியினால் விழுமிய கருத்தினால் அலங்கரிக்கத் தெரிந்தவனே கவிஞன். நம் வசந்தராசன் ஒரு கவிஞன். அது ஒரு தனி ஆய்வு.

    3.3. சந்த விருத்தம் தரும் தமிழ்க்கவிஞன்

    இலக்கண வரம்புடைய பாடல்களைக் கவிஞர்கள் தம் சொல்லாற்றலின் காரணமாகச் சந்தச் சுகத்தைத் தரும் கவிதைகளாக மாற்றும் வித்தையால் நம்மைக் கவர்ந்து விடுகிறார்கள். அத்தகைய பாக்கள் இயற்றமிழ்ப் பாக்களாகவும் இருக்கும். சந்தப்பாக்களாகவும் இனிக்கும்.

    “தத்திவரும் முத்துமொழித் தத்தையென முத்தமிடும்
    சித்திரம்போல பூஞ்சிவப்பு சிந்திநின்ற — அத்தைமகள்
    பூப்பெய்தி விட்டாளாம்!. பூமகளின் காலடியில்
    பூப்பெய்தேன் என்னவியப் பு?”

    இப்படியொரு நேரிசை வெண்பாவை எழுதியிருக்கிறார் வைரமுத்து. முதல் இரண்டு அடிகளில் உள்ள எட்டுச் சீர்களும் வெண்பா உரிச்சீர்களாக நின்று, வெண்டளை பிறழாது உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஓசை சந்தமாகியிருக்கும் ரகசியத்தை உணர்தல் வேண்டும்.! பாட்டை ஒருமுறை வாய்விட்டுப் படித்தால் செப்பலோசை மறைந்து சந்தம் பிடிபடும். இலக்கணத்தில் வழுவாத இந்த நேரிசை வெண்பா எப்படிச் சந்த வெண்பாவாகியிருக்கிறதோ அதுபோலவே வசந்தராசன் எழுதிய சில பாடல்கள் விருத்தயாப்பில் இருந்தாலும் சந்த விருத்தங்களாக மலர்ந்திருக்கின்றன.

    “புலிநகத்தைக் கடிப்பதற்கு எலிகள் கூட்டமா?
    பூஞ்சகாளான் முகம் வெளுத்தால் இடிநடுங்குமா?
    அலிபுணர்ந்தால் ஆண்குழந்தை அடைய முடியுமா?
    அரைஞாணில் ஆனைகளை அடக்க முடியுமா?
    சிலைவடிக்கச் சிற்பியின்றி உளிகள் போதுமா?
    சீழ்பிடித்த சிந்தனையால் ஈழம் மலருமா?
    அலைகடலைத் தோற்கடிக்கும் மறவர் கூட்டமாம்!
    அணிவகுப்போம்! அடையுமட்டும்! ஈழம் வாழ்த்துவோம்!”

    தமிழில் அருகிவரும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்று இதனைச் சொல்வது எளிது. ஆனால் பாட்டின் ஒலியமைப்பு ஒரு சந்தவிருத்தமாகவே அமைந்துவிடுவதற்குக் காரணமாகிவிடுவதைக் காணலாம்.

    4.0. வெண்பாவைத் தன்பாவாய் ஆக்கிக் கொண்ட வசந்தராசன்

    இந்தக் கட்டுரை தமிழின் முழுமையான மரபியல் யாப்பினை முன்னெடுக்கும் மூன்று நூல்களில் ஒன்றான யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலை அடியொட்டி எழுதப்படுகிறது. அதன்படி வெண்பாவின் வகைகளை நிரல்படுத்துகிறபோது குறளடி, சிந்தடி, அளவடி, பலவடி என்னும் நிரல்படுத்தாமல் குறளடி, அளவடி சிந்தடி, பலவடி என்று நிரல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது குறள் வெண்பாவிற்கு அடுத்ததாகச் சிந்தியல் வெண்பா வரவேண்டும். அதற்குப் பிறகே நேரிசை வெண்பா அமைய வேண்டும். ஆனால் குறள் வெண்பாவிற்குப் பிறகு நேரிசை வெண்பாவை அமைத்து அதன் பிறகே சிந்தியல் வெண்பா அமைகிறது. காரணம் குறள் வெண்பாதான் அடிப்படை. குறள் வெண்பா தெரிந்த ஒருவன் எந்த வெண்பாவையும் எழுத முடியும். இரண்டு குறள் வெண்பா இணைந்தால் ஒரு நேரிசை வெண்பா. எனவே நான்கடி. நான்கடியின் திரிபெல்லாம் இன்னிசை வெண்பா. நான்கடி மூன்றடியானால் சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமையின் அது பஃறொடை வெண்பா.

    பாரதவெண்பா, நளவெண்பா, மணிமேகலை வெண்பா முதலியனவெல்லாம் நேரிசை வெண்பாவினால் கட்டமைக்கப்பட்ட நூல்கள். தமிழில் ஒரு இலக்கண நூலையே வெண்பாவினால் எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பெயர் புறப்பொருள் வெண்பா மாலை. புறத்திணைச் சிந்தனைகளைக் கூறும் இந்த நூலில் அமைந்துள்ள  நேரிசை வெண்பாக்களுக்கு மின்னல் வெண்பாக்கள் என்று பெயர். காரணம் செப்பலோசையைத் திகட்டத் திகட்டத் தருவதனால் மின்னலாய்த் தோன்றி மறைந்துவிடும் என்பதாம். இருபதாம் நூற்றாண்டில் வெண்பாப் புலியைப் பூனைக்குட்டியாக்கியவர் கவிமணி.

    “முத்து பவளம் முழுவயிரம் மாணிக்கம்
    பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் சித்தன்
    சிரங்கப்ப ராயன் சிந்தை யிரங்கித்
    தரங்கண்டு தந்த தனம்”

    தன் உடம்பு முழுவதும் வந்திருந்த சிரங்கைப் பாடிய கவிமணி கையறு நிலையை வெண்பாவில் இறக்கி வைக்கிறபோது கல் நெஞ்சும் கரையும்.

    “கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச செக்கிழுத்து
    மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்ற – ஐயன்
    சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல் இன்று
    சுதந்திரம் காண்பாயோ சொல்!”

    என்னும் அவருடைய வெண்பாவில் ஒரே தொடரை ஒரு நேரிசை வெண்பாவாக ஆக்கியிருக்கும் சதுரப்பாட்டை அறியலாம். வெண்பாவைத் தளை கொண்டு அளப்பவர் பலர். தமிழ் கொண்டு அளந்தவர் சிலர். அந்தச் சிலருள் நம் வசந்தராசனும் ஒருவர்.
    “விண்ணிருந்து கலைஞர் விண்ணப்பம் நீட்டினரோ?
    மண்ணிருந்து போகின்றாய் மன்னவனே!-சண்முக
    நாதனே! அன்பின் சுருக்கெழுத்தே! நம்கலைஞர் 
    சாதனைக்கு நீயன்றோ சான்று!”

    என்பது ஒரு கையறுநிலை வெண்பா. கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகநாதனின் மறைவுக்காக எழுதியது. ஒரு முழுமையான நேரிசை வெண்பா எப்படி அமைதல் வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான வெண்பா இது. பாட்டில் இருக்க வேண்டிய பதினைந்து சீர்களில் பத்து வெண்பா உரிச்சீர்கள். ஐந்து ஆசிரிய உரிச்சீர்கள். எட்டு வெண்சீர் வெண்டளை. நான்கு இயற்சீர் வெண்டளை. முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் பொழிப்பு மோனை. மூன்றாம் அடியில் ஒரூஉ மோனை. முதலடியில் பொழிப்பெதுகை. இரண்டாம் அடியில் மேற்கதுவாய் எதுகை. நான்கடி வெண்பாவில் இரு விகற்பங்கள். ‘சண்முக நாதனே!’ என்பதில் வகையுளி. சுருக்கெழுத்தராய் வாழ்வைத் தொடங்கியவரைச் ‘சுருக்கெழுத்தே!’ என்று அழைக்கும் கவிதை நயம்! இத்தனையும் நிறைந்த பாடல் இது. தங்கு தடையின்றிப் பொங்கி வரும் உணர்ச்சியை யாப்புக்குள் இறக்கி வைக்கிறபோது கட்டுமானம் சிதைவதற்குக் காரணமில்லை. இலக்கிய நயமும் குறையாது. தொடை விகற்பங்களுக்கும் சேதாரம் இல்லை.

    4.1. வெண்பா அந்தாதி

    சோதனை முயற்சி என்பது அறிவியலுக்கு மட்டுமன்று. கவிதைக்கும் பொருந்தும். அந்தாதி என்பது யாப்பு முறை அன்று. தொடையழகு. எந்த யாப்பிலும் அந்தாதி எழுதலாம். இலக்கியம் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் மாலை, சதகம், அந்தாதி, கலம்பகம் முதலிய இலக்கியங்களே அந்தாதித் தொடையில் அமையும். நால்வர் நான்மணிமாலை, திருச்சதகம், அபிராமி அந்தாதி, நந்திக் கலம்பகம் முதலியன அவ்வாறு அமைந்தவற்றுள் சில. நம் வசந்தராசன் வெண்பாவில் அந்தாதி பாடியிருக்கிறார். அதாவது அந்தாதி இலக்கியத்தை வெண்பா யாப்பில் பாடியிருக்கிறார். மரபு காக்கும் மாண்பால் மறக்காமல் அதற்கு அந்தாதி மாலை என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். வெண்பாவில் அமைந்த நூல்கள் உண்டு. ஆனால் அந்தாதி உண்டா என்பது தெரியவில்லை.

    “பார்போற்றும் எங்கள் பகுத்தறிவுத் தந்தையெனக்
    கூர்சொற்கள் தேர்ந்தே கொடைசெய்தார்! —சீரசையால்
    மாலைகட்டி  நம்மின் மனமாளும் சந்தனப்பாச்
    சோலையெனத் தந்தார் சுடர்! (1)

    என்று தொடங்கி அந்தாதியால் நடத்திச்,

    “சீர்தந்து பாட்டால் சிறைசெய்யும் பேராற்றல்
    ஆர்தந்தார் ஆனந்தா? பேரன்பே! –நேர்தந்த
    வேர்முகத்தில் கார்மழைபோல் வெற்றி பேர்கொடுக்கும்!
    பார்பெறுவாய் பாட்டுக்குப் பார்!”

    என்னும் இறுதிப்பாட்டை நூலைத் தொடங்கிய சீராலேயே முடித்தும் காட்டியிருக்கிறார். வடிவத்தில் புதுமை காணும் முயற்சி இது. பொதுவாகப் பாட்டுக்குத்தான் தொடையழகு. ஆனால் அந்தாதி நூல் முழுமையும் விரவிக் கிடப்பதால் நூலுக்கே அழகாக அமையும். ஏனைய தொடைவிகற்பங்களுக்கு இல்லாத பெருமை இது.

    4.2. எவரும் அறியாத இன்னிசை வெண்பாக்கள்

    “நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி அமைந்தால் அது இன்னிசை வெண்பா” என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. ஆனால் படைப்புக்கள் கவிஞனின் சிந்தனையோடு தொடர்புடையதேயன்றி இலக்கணத்தோடு தொடர்புடையது அன்று. அந்த அடிப்படையில் சிந்தித்தால் சில வினாக்கள் தோன்றும். ஒரு நேரிசை வெண்பாவில் இரண்டாம் அடியில் அமைய வேண்டிய தனிச்சொல் மூன்றாம் அடியில் அமைந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு அடியின் இறுதியிலும் முதற்சீருக்கு ஏற்ப ஒரூஉத்தொடை பெற்றமைந்தால் என்ன செய்வது? இரண்டு எதுகைக்குப் பதிலாக நான்கு எதுகையாக அமைந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்று வந்தால் என்ன செய்வது? ஒரு நேரிசை வெண்பாவின் ஒரு சீர் கனிச்சீராக அமைந்து போனால் அந்த அருமையான பாட்டைத் தள்ளிவிட முடியுமா? இந்த வினாக்களுக்கு விடை காணும் முயற்சியை இதுவரை எழுதிய எந்த மரபுக்கவிஞரும் தம் சிந்தனையில் கொள்ளவில்லை. ஒன்றும் பலவும் ‘விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் அஃது இன்னிசை துன்னும்’ என்ற யாப்பருங்கலக்காரிகை இலக்கணத்தில் அமைந்த ‘துன்னும்’ என்ற மிகைச்சொல்லால் (விதப்புக்கிளவி) உரையாசிரியர் மேற்சொன்ன ஐயங்களைக் கிளப்புகிறார். அவ்வாறு அமைந்த வெண்பாக்களையெல்லாம் இன்னிசை வெண்பாவிலேயே அடக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு தரமான விதிவிலக்கையும் எடுத்து மொழிவதை மரபுக்கவிஞர்கள் மறக்காமல் நினைவிற் கொள்ள வேண்டும். வசந்தராசனும் இதற்கு விதிவிலக்கல்லர். ஆனால் அவர் எல்லா யாப்பையும் படைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒருசில யாப்புக்களையே பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. யாப்பே மரபு என்னும் கருத்துடையோர் கொள்ள வேண்டிய கவலை இது.

    தமிழ் மரபியல் யாப்பு நெகழ்ச்சியுடையது. சான்றாக வெண்பாவை எடுத்துக் கொள்ளலாம். எப்படி எண்சீர் விருத்தம் தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்னும் அரையடிக் கட்டுமானத்திலிருந்து காய் காய் மா மா என்னும் கட்டுமானத்திற்கு இறங்கி வந்து நின்றதோ அதுபோல் தான் வெண்பாவும். இப்பொழுது எந்தக் கவிஞரும் வெண்பாவிற்கு உரிய செவ்வையான கட்டுமானத்தில் எழுதுவதில்லை.

    ‘தன் சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்றால் காய்ச்சீர் நின்று மற்றொரு காய்ச்சீர் வந்து அதன் முதலசையோடு ஒன்றுவதுதான் வெண்சீர் வெண்டளை. அதாவது தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நின்று வருகின்ற தேமாங்காய் கூவிளங்காய் என்னும் மூவசைச்சீர்களின் முதலசையோடு ஒன்றுவதுதான் வெண்சீர் வெண்டளை. இவ்வாறு கட்டமைக்க இயலாத நிலையில் நின்ற சீருக்குத் தளை பார்த்தால் போதும் என்று தளர்ச்சி கண்டதுதான் தமிழ்யாப்பு. வெண்பா அந்தணர் பா என்கிறார்கள். வெண்பாவிற்கென்று வெண்பா உரிச்சீர் இருக்கிறபோது வெண்பாவிற்கென்று உரிய தளைதானே அதில் வரவேண்டும்? ஆனால் நிலைமை அவ்வாறு இருக்கிறதா? இல்லையே! கட்டிக் கொள்கிறவன் ஒருவன் கலந்து கொள்கிறவன் இன்னொருவனா? காய்ச்சீர் நான்கும் நின்று வருஞ்சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றினால் அது வெண்சீர் வெண்டளையாம். பொருந்துமா? அதனைவிடக் கொடுமை ஆசிரிய உரிச்சீர்களின் உறழ்ச்சியிலிருந்து பெறப்படும் தளைக்கு இயற்சீர் வெண்டளையாம். வெண்சீரில் வெண்டளை என்றால் இயற்சீரில் இயற்றளைதான் வருமேயன்றி வெண்டளை வருமா? ஆனால் அது இயற்சீர் வெண்டளையாம். அந்த இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வெண்பாவில் வரலாமாம். இதனைத் தான் நாம் நெகிழ்ச்சி என்கிறோம். கொச்சையாகச் சொல்லப் போனால் நம்முடைய இயலாமையையெல்லாம் இலக்கணமாக்கிவிட்டோம்.

    இதே நிலைதான் பாக்களின் வகைகளுக்கும். தமிழ் யாப்பின் நெகிழ்ச்சித் தன்மையைக் குறிப்பதற்குப் பாக்களின் வகைகளின் பாகுபாடே போதிய சான்றாகும். குறள் வெண்பாவிற்கு மட்டுமே இலக்கணம் உண்டு. இரண்டு குறள் வெண்பா இணைந்தால் அது நேரிசை வெண்பா. நாலடியாலான நேரிசை வெண்பா தனிச்சொல் இன்றி வந்தால் அது இன்னிசை வெண்பா. தனிச்சொல்லோடு மூன்றடியால் நடந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல் இல்லாமல் மூன்றடியால் நடந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. பல அடிகளால் வந்தால் அது பஃறொடை வெண்பா. “தட்டிப் போட்டால் வடை. உருட்டிப் போட்டால் போண்டா” என்ற கதைதான் தமிழ்க்கவிதைகளின் யாப்பு நெறி என்பதை உயத்துணர வேண்டும். குறள் வெண்பா மட்டும் எழுதத் தெரிந்தவனுக்கு எந்த வெண்பாவும் எழுத முடியும் என்பதுதான் நடப்பியல் உண்மை. ஒரே சிலப்பதிகாரத்தை வைத்துப் பல பட்டங்களைப் பெறுவது போன்றது இது.

    இந்தப் பின்புலத்தில் வசந்தராசன் எழுதியிருக்கும் சில இன்னிசை வெண்பாக்களின் கட்டுமானத்தை ஆராயலாம்.

    “ஊற்றுப் பெருக்கெடுக்கும்! ஓடி கடல்குடிக்கும்!
    சேற்று வயல்புரண்டு செம்மை பசிதணிக்கும்!
    காற்றின் வியர்வைக்கும் கைவிசிறி யாகுமதை
    ஆற்றுப் படுத்துவ தார்?”

    “காய்ந்தாலோ மேகம்! கவிழ்ந்தால் மழை!காற்றில்
    சாய்ந்தால் புயலாகும் சாட்டை! சுழன்றே
    ஓய்ந்தபின்னும் சொட்டுக்குள் ஓர்வான வில்வளைத்துப்
    பாய்ந்து உளம்திருடும் பார்!”

    மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இவ்வெண்பாக்கள் நேரிசை வெண்பாவிலிருந்து மாறுபட்டுத் தனிச்சொல்லை வேண்டுமென்றே தவிர்த்து எழுதப்பட்டதாகத் தோன்றலாம். உண்மை அதுவன்று, கவிஞன் எழுதுகிறபோது சீர்கள் தன்னிச்சையாக அமைகின்றன. அவை தனிச்சொல்லாகவும் தோன்றலாம். தொடரில் அமைந்த சீராகவும் தோன்றலாம். ‘தனிச்சொல்’ என்னும் சொல்லாட்சி பாட்டுக்குத் தொடர்பில்லாத ஒரு சொல் என்னும் கருத்தியலைத் தாங்கி நிற்பதன்று. இடத்தால் பெயர் பெற்ற சொல். சான்றாகச் ‘சேற்றில் வயல்புரண்டு செம்மை பசிதணிக்கும்’ என்பது ஒரு தொடர். மேலே காட்டிய நேரிசை வெண்பாவில் அமைந்த ‘மன்னவனே சண்முக நாதனே! என்பதும் அவ்வாறு விழுந்த சீர்களேயன்றிப் பதிந்த சீர்கள் அல்ல. ஒன்று முதலடியின் முதற்சீருக்குகந்த எதுகையாக அமைய மற்றொன்று அவ்வாறு அமையவில்லை. அமைந்தால் நேரிசை! அமையாவிடின் இன்னிசை! வேறு எந்த இலக்கண மாற்றமும் இல்லவே இல்லை!

    “வானைத்தன் கால்விரலில் வைத்திருக்கும் பேரண்ட
    மோனப் பெருவெளியின் முன்முட்டை ஓடதனைத்
    தானே உடைத்துவந்த தன்மானத் தாய்த்தமிழே!
    கூனல் சிறிதின்றிக் குத்தீட்டி போல்நிற்கும்
    மானத் தமிழ்மறவர் மன்றம் வருபவளே!
    சீனப் பெருஞ்சுவரைச் சின்னதாய்க் காட்டுகின்ற
    ஞானச் செருக்குகளின் நாற்றங்கால் ஆனவளே!
    ஏனமாய்ப் பூவிருந்து ஏந்தியுனைப் பரிமாற
    மோனையாய் முந்துகின்ற முத்தமிழே! சங்கத்தின்
    மானத் தமிழ்மடியாய் மல்லர்கள் தோள்நின்று
    நாணச் சுரப்பிகளின் நாவிருந்த காதலுக்கு
    மோன மொழிகொடுத்து முத்தமழை பெய்தவளே!
    ஊனம் சிறிதுமின்றி உயிர்ப்பாட்டில் தீவளர்த்து
    கான மொழிமழையில் காதல் நனைத்தவளே!
    வீணர் விரலெழுத்தில் விற்கத் துடிக்கையிலும்
    பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே எழுந்துவந்து
    ஆனமட்டும் கீழடியின் ஆழப் புதையலெனக்
    காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!
    கோணல் உலகத்தின் கோடாய் உயர்ந்தவளே!
    நாணல் உலகின் நரம்பறுத்து நிற்பவளே!
    வீணில் விருந்தாக்க வேற்றுமொழி தான்கலந்து
    வானில் பருந்தெனவே வாய்பிளந்து நிற்போரைத்
    தேனில் விடம்கலந்து திண்ணைகளில் விற்போரைச்
    சாணைப் பிடிநீ! எமக்குச் சங்கத்தமிழாய்
    வாநீ! தமிழே!வளர்பிறை மட்டுமினி!
    ஆணை! தமிழே! அறி!”

    என்பது அவரெழுதிய பஃறொடை வெண்பாக்களில் ஒன்று. வெண்பாக்களுக்குரிய சீர், தளை, அடி வரையறை, இறுதி நிலை வாய்பாடு ஆக அத்தனையும் அமைந்து செப்பலோசை குன்றாது அமைந்த பஃறொடை வெண்பா இது. இந்தப்பாட்டின் தொகைவிகற்பங்களைச் சுட்டி எழுதப்போனால் அது தனிக்கட்டுரையாக விரியும் என விடுக்கப்படுகிறது. “மோனையாய் முந்துகின்ற முத்தமிழே!”, “வீணர் விரலெழுத்தில் விற்க”, “வீணில் விருந்தாக்க வேற்றுமொழி”, “பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே” என்றெல்லாம் அமைந்திருக்கும் கூழையும் “காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!” என்னும் முற்றும் பொங்கலில் முந்திரியாய்ப் புன்னகைக்கும் பொழிப்பும் ஆகிய தொடைவிகற்பங்களோடு வசந்தாராசன் பாராட்டு சொந்தம் கொண்டாடுகிறது.

    5.0. மரபார்ந்த வடிவமும் மாற்றமும்

    கலிப்பா ஒத்தாழிசைக்கலி, கொச்சகக்கலி, வெண்கலி, கலிவெண்பா என நான்கு வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசைக்கலி மூன்று வகையாகவும் கொச்சகக்கலி ஐந்து வகையாகவும் அமைந்து, ஏனைய இரண்டும் இணைய கூடுதல் கலிப்பா பத்து வகைப்படும். கலிப்பாவின் இனங்கள் தனி. இவற்றுள் கொச்சகக்கலி தரவு கொச்சகக்கலி, தரவிணைக் கொச்சகக்கலி, மயங்கிசைக் கொச்சகக்கலி, சிஃறாழிசைக் கொச்சகக்கலி, பஃறாழிசைக் கொச்சகக்கலி என ஐவகையாக அமையும். அவற்றுள் தரவு கொச்சகக்கலிப்பாவில் வசந்தராசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். மணிவாசகப்பெருமான், ஆண்டாள், பெருஞ்சித்திரனார் முதலியோர் தரவு கொச்சகக்கலியை எட்டடித் தரவாகவே எழுதியிருக்கின்றனர். திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆரும் அறிந்ததனால் பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப்பாவையிலிருந்து ஒரு பாடல் காட்டப்படுகிறது.

    “கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்? மான்விழியே! நாட்டுநலம்
    உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாலோ
    கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
    குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையில் தள்ளுகின்றார்!
    முற்றும் தமிழரினம் மூங்கையதா போகுமுனம்
    பெற்ற குலத்தோரே! பேருரிமை காக்கவல்லார்!
    பொற்றொடியே துஞ்சல் புரையேலோர் எம்பாவாய்!”

    வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவி வந்த இந்தக் கொச்சகக்கலிப்பா எட்டடித் தரவினைக் கொண்டது. வசந்தராசன் இதே கொச்சகக்கலிப்பாவைப் பத்தடித் தரவைக் கொண்டு அமைத்திருக்கிறார்.

    “ஊரின் இருபுறமும் ஓய்ந்த இருகுளங்கள்!
    தேரின் வடமாய்த் தெருக்கள்!  இவைநடுவே
    சீராய்ப் பிரித்தபடிச் செல்லும் நடுச்சாலை!
    நாரின்பூக் கட்டெனவே நன்றிணைந்த வீடுகள்முன்
    பேரின்பம் பேசும் பெருந்திண்ணை! சூழ்ந்திருக்கத்
    தூரெடுத் தூட்டும்  துணைதொடக்கப் பள்ளி !ஆங்குப்
    பேரெடுத்தப் பேர்கள் பெருங்கூட்டம்!காலையிலே
    ஏரின் கலப்பைக் கெழுந்தூதும் சங்குகள்!
    நீரின் நிலைதேடி நீளும் இடைகுடங்கள்!
    சேரக் கிடைப்பதுகாண் செந்தமிழூர் எம்பாவாய்!”

    பாவை இலக்கியம் படைப்பதிலும் அதனை வெண்டளை விரவி வரும் கொச்சகக்கலியால் பாடுவதிலும் மரபினைப் பின்பற்றும் வசந்தராசன், அதனைப் பத்தடித் தரவாகப் பாடி மரபில் மாற்றம் செய்வதைக் காணமுடிகிறது. இந்த மரபு மாற்றத்தை அவ்வளவு எளிதில் யாரும் கண்டறிய முடியாத வண்ணம் பாட்டின் கட்டமைப்பு அமைந்துவிடுவதை உணர்தல் வேண்டும்.

    6.0. சந்தச் செல்வங்களான சிந்துகள்

    சிந்து இலக்கியம் பற்றிய இலக்கண விதிகள் பிற்காலத்திய வீரசோழியம், பஞ்சமரபு முதலிய நூல்களில் காணக்கிடக்கின்றன. சிந்தினை இயற்றமிழ்ச் செய்யுட்களாகக் கொள்வாரும் நாட்டுப்புற இலக்கிய வடிவமாகக் கொள்வாரும் என இருதிறத்தார் உளர். மக்கள் வழக்கின்றிச் செய்யுள் வழக்கு அமையாதாதலின் எல்லா இலக்கிய வழக்கும் மக்களுக்குக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சிந்து பெரிதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எழுத்து வடிவ இலக்கியங்களைப் பாவெனக் குறித்த தொல்காப்பியம் எழுத்து வடிவம் இல்லாத மக்கள் இலக்கியங்களைப் பண்ணத்தி என்னும் சொல்லால் குறித்தது என்பதை அறிதல் வேண்டும்.

    “பாட்டிடைக் கலந்த பொருளவாகிப்
    பாட்டின் இயல பண்ணத் திய்யே”

    என்பது தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவாகும். இதற்கு உரையெழுதிய பேராசிரியர்,

    “இஃது எழுதும் பயிற்சியில்லாத புறஉறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப’ என்பது நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின”

    என்று விளக்கிக் காட்டுகிறார். தொல்காப்பியம் குரவை, வள்ளை முதலிய நாட்டுப்புற இலக்கிய வடிவங்களைக் கூறுகிறது. ஏர்மங்கலம், முகவைப்பாட்டு, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, கொடிச்சியர் பாடல், வேலன் பாணி, வள்ளைப் பாட்டு, உழவர் ஓதை, கழங்காடு மகளிர் பாணி என்பனவெல்லாம் சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் ஆகும். இவற்றை நோக்க, புலவர் பெருமக்கள் ஒருபுறம் செவ்வியல் இலக்கியங்களை வளர்க்க, மக்கள் தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் இத்தகைய இலக்கியங்களை வளர்த்து வந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம். செவ்வியல் இலக்கியங்களில் திருவாசகத்தில்தான் எண்ணற்ற நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை மணிவாசகப் பெருமான் பயன்படுத்தியிருக்கிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவாழி பரப்பினான் கூத்தன் என்பார் எழுதிய பெயர் தெரியாத சிந்து இலக்கியமே தமிழின் முதல் சிந்து இலக்கியமாகும் என்பது அறிஞர் மு.அருணாச்சலனார் அவர்கள் ஆய்வு முடிவு. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களுள் ஒன்றான சிந்தின் இலக்கணத்தைப் பின்வருமாறு வரன்முறை செய்யலாம். வரன்முறை விதியாகாது. விதிக்குக் கவிதை உட்படாது.

    1. சொற்களோ அடிகளோ மடங்கி வருதல்
    2. தனிச்சொல் பெறுதல்
    3. எதுகை மோனைகளுடன் இயைபும் பொருந்தி வருதல்
    4. கண்ணிகளாக அமைதல்
    5. ஒலிநலன் உடைமை
    6. உறுப்புக்கள் உடைமை
    7. தாளகதியில் அமைதல்
    8. எளிய நடை

    என்னுமாறு அமைந்தவையெல்லாம் சிந்துகளே. புலவர் குழந்தை முதலிய யாப்பறி வல்லார்கள் சிந்துகளை வளையல் சிந்து, வழிநடைச் சிந்து, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, தெம்மாங்கு என்றெல்லாம் வகைப்படுத்தியிருக்கிறார்கள். அப்பெருமக்கள் எல்லாம் பாடிய இலக்கியத்திற்குத்தான் வடிவம் அமைத்திருக்கிறார்களேயன்றி இப்படித்தான் பாடவேண்டும் என இலக்கணவிதிகளை வகுக்கவில்லை என்பதைக் கற்பார் உணர்தல் நலம். வகுக்க இயலாது என்பது நடப்பியல். சிந்து பற்றிய விரிவான ஆராய்ச்சி செய்திருக்கும் புதுவை திருமுருகனார் சிந்துகள் இலக்கண வரையறைக்குள் உட்பட வாய்ப்பில்லை என்பதைத் தாம் எழுதிய சிந்து இலக்கியம் என்ற நூலில் குறிப்பாகக் கூறியிருக்கிறார். தற்காலச் சிந்துகளுக்கு வடிவ மூலம் வழங்கியவர்கள் சித்தர்களே! அவருக்குப் பின்னால் சிந்துக்குப் பேரரசர் என்னும் உண்மையான பட்டம் கட்டிக் கொண்டவர் அண்ணாமலை ரெட்டியாரே. இந்தப் பின்புலத்தில் வசந்தராசன் எழுதிய சிந்துகளின் அமைப்பை ஒப்பீட்டு வகையால் ஆராய்வது படைப்பாளியின் உணர்ச்சிக்கும் படைப்பின் வடிவத்திற்குமான உறவைப் புரிந்த கொள்ள ஏதுவாகும்.

    “பாலைவனங்களும் பட்டுடுத்த – இனி
    பாட்டுத் தறியினை நெய்திருப்போம்!
    நாளைச் சரித்திரம் நாம் படைப்போம் – அதை
    நல்ல சரித்திரம் ஆக்கி வைப்போம்”

    என்று எழுதியிருக்கும் வசந்தராசன் இன்னொரு சிந்தினை இப்படி எழுதியிருக்கிறார்.

    “எள்ளில் கிள்ளலில் என்னைப்படி! எனை
    ஏற்பதில் ஏனின்னும் தயக்கமடி? தினம்
    முள்முடி சுமக்கவா மூளையடி – நான்
    மீண்டும் உயிர்த்திட வேண்டுமடி!”

    இந்தச் சிந்தில் அளவொத்த இரண்டடிகள் அமைந்து ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்று வந்திருப்பதைக் காணலாம். மேலே காட்டிய சிந்தில் கண்ணிக்கு ஒரு தனிச்சொல். இங்கே ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல். கவிஞனின் உணர்ச்சிக்கு ஏற்பவே வடிவம் அமையுமேயன்றி எந்த இலக்கணமும் அவனைக் கட்டுப்படுத்தாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்டால் அது கவிதையாகாது.

    “கன்னத்தில் கனிமுத்தம் தந்து – உடல்
    கட்டிவிட்டான் கவிதை கைப்பந்து – எந்தன்
    எண்ணத்து எழுங்கவிதை
    எழிலாக்கிப் பாடிடுவான்
    வந்து – வண்டின் – சிந்து!”

    என்றெழுதப்பட்டிருக்கும் சிந்து அண்ணாமலை ரெட்டியாரின்,

    “பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
    பக்கத்தில் வந்து மேவிப் – பஞ்ச
    பாதகன் ஒரு பாவி – சிறு
    பாவையை மெள்ளக் கூவி — கையைப்
    பற்றிக் கொண்டேகினான், பதை
    பதைக்குதே என்றன் ஆவி!”

    என்னும் சிந்தினை எண்ணத் தூண்டுகிறது. சித்தர்கள், வள்ளற் பெருமான், பாரதி, பாரதிதாசன் முதலிய எவராயினும் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச் சிந்தின் குறைந்த அளவு வடிவக் கோட்பாட்டைக்கூடப் பின்பற்ற இயலவில்லை என்பது அவர்களுடைய படைப்புக்களிலிருந்து தெளிவாகும் உண்மையாகும். இன்று கிட்டியிருக்கும் இருபத்து நான்கு பாடல்களிலேயே சந்தத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் கொண்டு வந்து நிறுத்துகிறார் ரெட்டியார். சந்தச் சிந்துகளுக்கு உயிராக அமைவன எதுகை, மோனை. இவற்றையும் விட இயைபு.

    “சிந்தி வைத்தநம் குருதித் துளியெலாம்
    சேர்ந்து ஒன்றென ஆகுது! – தினம்
    வெந்த சோற்றுக்கே நொந்து வாழ்கிற
    வேதனை எல்லாம் தீருது!”

    என்னும் வசந்தராசன் எழுதியுள்ள சிந்தில் எதுகை, மோனை, இயைபு ஆகிய அனைத்தும் இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். பொழிப்புச் சந்தங்களை நிரல்படக் கோத்து ஒரு புதிய வகைச் சிந்தினை வசந்தராசன் எழுதியிருக்கிறார்.

    “பொன்னும் பொருளுமொரு மண்ணில் வைரமலை
    என்னை மயக்கவில்லை தாயே!  கேள்!
    பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! – அட
    மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
    பெண்ணும் மயக்கவில்லை தாயே! – நீ
    தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்!
    தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”

    கவிதைகளின் மென்மையை மெல்லினங்கள் மேலும் மென்மையாக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு.

    “கடல் சுருங்கி அலையாக மாறும் – உன்றன்
    காலடியில் வால்சுருட்டி வீழும்!
    மடலெழுதிச் சூரியக் கை நீளும் – உன்றன்
    மலர்ப்பாத விரல் சொடுக்கிக் காயும்!
    நடைபாதை மணற்பூக்கள் விரியும் – நீ
    நடனமிட நண்டு வனம் சிரிக்கும்!
    கடன் வாங்கி மேகம் குடை பிடிக்கும் உனைக்
    கண்டதுமே அடிவானம் சிவக்கும்!”

    ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் சிந்தில் ஒவ்வொரு வரியிலும் தனிச்சொல் வரும். வசந்தராசனின் இந்தப் பாடலில் ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் வந்து சந்தம் நிறைப்பதைக் காணலாம். முதலிரண்டின் அடிகளின் ஈற்றியைபு தேமாவில் அமைய இறுதியிரண்டடிகளின் ஈற்றியைபு புளிமாவில் முடிந்திருப்பது காண்க. வசந்தராசன் எழுதியுள்ள அனைத்துச் சிந்துகளும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் அறிக.

    கட்டுரைச் சாரம்

    பண்ணைக் கவிக்கோ துரை.வசந்தராசனின் கவிதைகள் சிலவற்றை ஆய்ந்து அவற்றில் கண்ட வடிவக் கோட்பாடுகள் பற்றிய கருத்துக்கள் பின்வருமாறு தொகுத்துரைக்கப்படுகின்றன.

    • அசை, சீர், தளை ஆகியவற்றின் முறையான அமைப்பு ஒலிவகை தோன்றுவதற்குக் காரணமாயினும் நுட்பமான ஒலியமைப்பை உள்வாங்கிக் கொண்டு படைக்கும் கவிதைகளிலேயே மேற்சுட்டிய செய்யுட் கூறுகள் அமைந்திருக்கும் என்னும் யாப்பியல் நுண்ணியத்தை அவருடைய கவிதைகள் காட்டுகின்றன.
    • கவிதையின் பாடுபொருளுக்கும் உணர்ச்சிக்கும் இவற்றை வெளிப்படுத்தும் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அவருடைய கவிதைகள் உறுதி செய்கின்றன.
    • தொல்காப்பியத் தொடைவிகற்பம் பதின்மூன்றாயிரத்து அறுநூற்று தொண்ணூற்றொன்பது (13699) என்பது தமிழ்மக்களின் கவிதைச் சுவையுணர் திறத்தினைக் காட்டும் அளவுகோலாகும்.
    • வசந்தராசனின் கவிதைகளில் நான்குவகை ஆசிரியப்பாக்களைத் தவிர, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, பல்வகை ஆசிரிய விருத்தங்கள் கையாளப்பட்டுள்ளன.
    • கொச்சகக்கலியைப் பாவைக்கு உரித்தாக்கியிருக்கும் இவர் ஆசிரிய விருத்தங்களில் அமையும் பல்வகை வடிவங்களையும் கையாண்டிருக்கிறார்.
    • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மற்றும் அறுசீர் விருத்தங்கள் மட்டுமே ஒருவரை மரபுக்கவிஞர் எனச் சுட்டுவதற்குப் போதுமானவையாகா என்னும் கருத்து அவர்க்கு உடன்பாடே.
    • ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி யாப்பு கொண்ட எண்சீர் விருத்தத்தில் மூன்றாவது சீரைப் பெரும்பாலும் புளிமாவில் அமைக்காமல் தேமாவிலேயே அமைத்துக்காட்டும் திறன் கண்டறியப்பட்டுள்ளது.
    • சீருக்குள் வாய்பாட்டையும் வாய்பாட்டுக்குள் சீரையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பின்னிப் பிணைத்து நோக்கும் பெருங்கவியாற்றல் இவர்க்கு இயல்பிலேயே கைவரப்பெற்றிருக்கிறது என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.
    • “சிறகுகளின் இறகெழுத்தில் என்னைப் பார்த்தேன்! சிற்றிடையுன் வளைவிருந்து நாணம் பார்த்தேன்! பரபரக்கும் இமையிரண்டின் விளிம்பில் நின்று படும்பார்வை தூரம்வரை நின்று பார்த்தேன்!” என்றவாறு ஓர் அடியை ஒரு தொடராக்கியும் ஈரடியை ஒரு தொடராக்கியும் தங்குதடையில்லாமல் சீர்கோக்கும் பேராற்றல் இவர்க்கு இயல்பு.
    • எதுகை நோக்கி முதற்சீரை அமைக்காமல் எந்தச் சீரையும் தொடக்கச்சீராக அமைத்துத் தொடர்ந்து வரும் சீர்களைப் பொருத்தமாக அமைத்துக் காட்டும் ‘சீராளி’யாகவே இவர் விளங்குகிறார்.
    • எதுகைக்காக இறவாணம் பார்க்கும் இயல்பு இவர்க்கு இல்லை என்பதும் எழுதிய பாக்களிலோ இனங்களிலோ எந்த வகைச் சீரையும் இயல்பாக அமைத்துக் காட்டும் குற்றால அருவியாகவே இவருடைய கவிதைகள் இவரைக் காட்டுகின்றன என்பதும் அறியத்தக்கன.
    • புதிய சொல்லாட்சிகளையும் பழைய சொல்லாட்சிகளையும் தேவை கருதி அளவு நோக்கிப் பயன்படுத்தும் கவி பக்குவம் இவர்க்கு உண்டு.
    • இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை என்னும் கொள்கையைப் பாவேந்தரைப் போலவே இவரும் உடைத்தெறிந்திருக்கிறார்.
    • கவிதைத் திடலில் சிந்துப் பந்துகளை உருட்டி விளையாடுவதில் இவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே காட்சி தருகிறார்.
    • தொடைவிகற்பங்களைக் கணக்கெடுத்துக் கொண்டு கவிதை செய்யாமல், எழுதுகிற கவிதைகளில் அவை தாமாக விரும்பி வந்து அமரும் காந்தத் திறனை இவருடைய கவிதைகள் பெற்றிருக்கின்றன.

    நிறைவுரை

    வாழுகின்ற கவிஞன் ஒருவன் தானறிந்த யாப்புக்களைக் கையாளும் செவ்வியல் பற்றிச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டது. தமிழின் மேற்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களாலும், கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் வெண்பா வகைகளாலும் ஆனவை என்பதையும் விருத்தங்கள் மிகவும் பிற்காலத்தவை என்பதையும் தற்கால ‘மரபுக்கவிஞர்கள்’ உணர வேண்டும். ஓரளவு யாப்பு மரபைப் பின்பற்றியவர்களில் வள்ளற்பெருமான், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். எந்தக் கவிஞனும் எல்லா யாப்புக்களையும் கையாண்டுவிட முடியாது என்பது நடப்பியல். யாப்புக் கட்டுமானமும் தொடைவிகற்பங்களும் பின்னிப்பிணைந்தவை. வடிவமாகிய புறஉறுப்பை அகவுறுப்பாக மாற்றுவதே கவித்திறன். அவையிரண்டும் தம்பி வசந்தராசனின் கவிதைகளில் அரவப்புணர்ச்சிபோல் அங்கம் வகிக்கின்றன என்பதை இக்கட்டுரையால் ஓரளவு தெளிந்து கொள்ளலாம்.

    (தொடரும்…….)

    Share
  • பொங்கல் கோலங்கள் 2023

    பொங்கல் கோலங்கள் 2023

    பொங்கல் திருநாள் அன்று தமிழக வீதிகளை அலங்கரித்த கோலங்களின் எழில்மிகு அணிவரிசை. முதல் பகுதி.

    இரண்டாம் பகுதி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 8

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 8

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் | சத்தியமங்கலம் சேனாபதி

    விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் | சத்தியமங்கலம் சேனாபதி

    40 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சத்தியமங்கலம் சேனாபதி, கவனமாக உழைத்தால் விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் என்கிறார். உழவர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, அவருடன் ஓர் உரையாடல். நம்பிக்கை அளிக்கும் இவரது வார்த்தைகளைக் கேளுங்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொங்கல் பொங்கி மகிழ்வோமே!

    பொங்கல் பொங்கி மகிழ்வோமே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்
    தளர் வகலப் போகுதடி தங்கமே தங்கம்
    கை நிறையப் போகுதடி தங்கமே தங்கம்
    கை யணைத்து நிற்போமே தங்கமே தங்கம்

    பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம்
    புத்துணர்வு பெற்றிடுவோம் தங்கமே தங்கம்
    மங்கலங்கள் வரவெண்ணி தங்கமே தங்கம்
    பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம்

    உறவுகளைக் கூட்டிடுவோம் தங்கமே தங்கம்
    உவகையுடன் பொங்கிடுவோம் தங்கமே தங்கம்
    அறவுணர்வை அகமிருத்தி தங்கமே தங்கம்
    அனைவருமே பொங்கிடுவோம் தங்கமே தங்கம்

    புதுப்பானை எடுத்திடுவோம் தங்கமே தங்கம்
    புத்தரிசி வாங்கிடுவோம் தங்கமே தங்கம்
    அடுப்பெடுத்து வைத்திடுவோம் தங்கமே தங்கம்
    அதில்பானை ஏற்றிடுவோம் தங்கமே தங்கம்

    மங்கலமாய் கோலமிட்டு தங்கமே தங்கம்
    மண்பானை அலங்கரித்து தங்கமே தங்கம்
    பாலூற்றி பக்குவமாய் தங்கமே தங்கம்
    பால்பொங்க பார்ப்போமே தங்கமே தங்கம்

    பொங்கிவரும் வேளையிலே தங்கமே தங்கம்
    போட்டிடுவோம் புத்தரிசி தங்கமே தங்கம்
    வெந்துவரும் வேளையிலே தங்கமே தங்கம்
    வெல்லத்தைப் போட்டிடுவோம் தங்கமே தங்கம்

    குடும்பமாய் சூழ்ந்தபடி தங்கமே தங்கம்
    குதூகலத்தில் மிதப்போமே தங்கமே தங்கம்
    பொங்கல்தரும் வாசனையோ தங்கமே தங்கம்
    பூரிப்பை வழங்குமடி தங்கமே தங்கம்

    வாசலிலே கோலமிட்டு தங்கமே தங்கம்
    மங்கலமாய் விளக்கேற்றி தங்கமே தங்கம்
    ஆதவனைப் பார்த்தபடி தங்கமே தங்கம்
    அவர்க்குப் பொங்கல் படைப்போமே தங்கமேதங்கம்

    புத்தாடை உடுத்திடுவோம் தங்கமே தங்கம்
    புறப்படுவோம் கோவிலுக்கு தங்கமே தங்கம்
    பெரியவரை வணங்கிடுவோம் தங்கமே தங்கம்
    பெற்றவரை அணைத்திடுவோம் தங்கமே தங்கம்

    பட்டாசு வெடித்திடுவோம் தங்கமே தங்கம்
    மத்தாப்புக் கொழுத்திடுவோம் தங்கமே தங்கம்
    பட்சணங்கள் பலகொடுப்போம் தங்கமே தங்கம்
    பகிர்ந்தளித்து உண்டிடுவோம் தங்கமே தங்கம்

    பட்டிமன்றம் நடத்திடுவோம் தங்கமே தங்கம்
    பல்சுவைகள் வழங்கிடுவோம் தங்கமே தங்கம்
    இட்டமுடன் இணைந்திடுவோம் தங்கமே தங்கம்
    இறைநினைப்பை நிறைத்திடுவோம் தங்கமே தங்கம்

    கஷ்டங்கள் அகலவெண்ணி தங்கமே தங்கம்
    கடவுளைநாம் வேண்டிடுவோம் தங்கமே தங்கம்
    கலகலப்பு நிறைகவென தங்கமே தங்கம்
    கைகூப்பி இறைஞ்சிடுவோம் தங்கமே தங்கம்

    அரசியலார் அறம்நடக்க தங்கமே தங்கம்
    ஆண்டவனை வேண்டிடுவோம் தங்கமே தங்கம்
    தர்மமது தலைநிமிர தங்கமே தங்கமே
    தாழ்பணிந்து இறைஞ்சிடுவோம் தங்கமே தங்கம்

    போரரக்கன் நோயரக்கன் போய் அகல
    பொங்கல் திருநாளினிலே வேண்டி நிற்போம்
    சாந்தியெனும் பேரொளியே எழுந்து நிற்க
    சங்கற்பம் எடுத்திடுவோம்  தங்கமே தங்கம்

    Share
  • பொங்கலென்னும் மங்கலத் திருநாள்!

    பொங்கலென்னும் மங்கலத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா      
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று – பொங்கல் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம். வறுமை அகல வேண்டும். வாய்மை நிலைக்க வேண்டும். பொறுமை பொலிய வேண்டும். பொய்மை அகல வேண்டும். அறிவு பெருக வேண்டும். ஆன்மீகம் சிறக்க வேண்டும். அன்பு நிலைக்க வேண்டும். அறியாமை மறைய வேண்டும்.

    பொங்கல் என்றாலே புத்துணர்வு வருகிறதல்லவா! பொங்கல் என்றாலே பூரிப்பு பெருகிறது அல்லவா! பொங்கல் என்றாலே ஆனந்தம் பெருக்கெடுக்கிறது அல்லவா! அதனால்த்தான் “பொங்கலோ பொங்கல்“ என்று பொங்கலை மகிழ்வாய் வரவேற்றுப் பொங்கியும் மகிழுகின்றோம்.

    உறவுகள் கூட வேண்டும். ஒற்றுமை ஓங்க வேண்டும். பிரிவுகள் மறைய வேண்டும். பெரியவர் வாழ்த்த வேண்டும். இளையவர் சிறக்க வேண்டும். இன்பமே இருக்க வேண்டும். இதுதானே பொங்கலின் உட்பொருளாய் அமைந்திருக்கிறதல்லவா!

    பொங்கலின் சிறப்புகள் எங்கள் தமிழினத்தின் ஏற்றமிகு பண்பாட்டுப் பெட்டகமே ஆகும். புத்தரிசி, புதுப்பானை,  கோலம், மாவிலை, வாழையிலை, மஞ்சள், கரும்பு, அது தரும் சுவையான சர்க்கரையும் வெல்லமும். வெற்றிலை, பழங்கள், நிறைகுடம், குத்துவிளக்கு, இலக்குமியாய் எங்களின் பசுக்கள், அது அன்பாய் பொழியும் அமுதாம் பசும்பால், அத்தனையும்  பொங்கலுக்கு வாய்த்திட்ட பொக்கிஷங்கள் அல்லவா!

    இனிப்பாய் இருக்க வேண்டும். சிறப்பாய் இருக்க வேண்டும். பொறுப்பாய் உழைக்க வேண்டும். நன்றியாய் இருக்க வேண்டும். நலிந்தோர்க்கும் நல்கவேண்டும். பொங்கிய பொங்கலை நாமும் உண்ண வேண்டும். மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழவும் வேண்டும்.

    உதவும் மாடுகளுக்கு நன்றி. உழைக்கும் உழைப்புக்கும் நன்றி. ஒளி கொடுக்கும் ஆதவனுக்கும் நன்றி.

    மண்ணுக்கும் நன்றி. விண்ணுக்கும் நன்றி. மண்போட்ட விதை முளைக்க வைத்திட்ட மாமழைக்குக்கும் நன்றி. இத்தனைக்கும் உரித்தாய் அமைந்திருக்கும் உன்னதத் திருநாள் தான் எங்களின் “பொங்கல்த் திருநாள்“. அந்தத் திருநாளைப் பற்றி அறிவதும் அகத்திருத்துவதும் அவசியம் அல்லவா!

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர் ந்து வரவேண்டும் என்பதே யாவரதும் ஆசையாகும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்               
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்                                               
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்                                     
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்                                           
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்                               
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  –  

    என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த் துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டி நிற்கிறதல்லவா?  அப்படி ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் எங்கள் ஆழ் மனதில் அமர்ந்திருக்கிறதல்லவா? அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரதும் ஆசை!

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்                             
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்                                        
    பழுதுண்டு வேறோர் பணிக்கு“ 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவா பொங்கல் திருநாள்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.

    உலகிலே  உயிர் வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது. நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைத்து வைத்தார்கள் எங்கள் முன்னோர்கள். இதனால் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது லென்பதும் நோக்கத்தக்கது.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம் கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறான். விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல்  என்பது  நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்“ என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால்,  சர்க்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள். எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் “காணும் பொங்கல்” அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மத பேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்! உதவுவதை உளமிருத்த பொங்கல் திருநாளில் அனைவரும் சங்கற்பம் எடுத்திடுவோம். கற்பவர்க்கு இயலுமான வரை கைகொடுக்க எண்ணிடுவோம். ஏழையாய் இருப்பார்க்கு இயன்றவரை இருப்பதைக் கொடுத்திடவும் எண்ணிடுவோம். கற்கின்ற மாணவர்கள் ஏழ்மையால் உழலுவதைக் கைகட்டி நின்று பார்க்கும் மனநிலையைக் கைவிட்டு அவர்களைக் கையணைப்போம். உள்ளங்கள் அன்பாய் அருகணைய வேண்டிடுவோம். பொங்கல் திருநாள் புத்தொளியை தந்திடட்டும்! பொங்கல் திருநாள்  புதுப்பாதை திறந்திடட்டும்!

    தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
    பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
    அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

    அத்தனையும் தித்திக்கிற நாள்தான்                                  
    எங்கள் தை பிறக்கும் நாள்தான்
    ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
    அன்பாகச் சேர்ந்துமே பொங்கி மகிழ்வோம் 

    Share
  • திருப்பாவை – 30 | வங்கக் கடல் கடைந்த

    திருப்பாவை – 30 | வங்கக் கடல் கடைந்த

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘வங்கக் கடல் கடைந்த’ எனத் தொடங்கும் நிறைவுப் பாடலான முப்பதாம் பாசுரத்தை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் 19 | குத்து விளக்கெரிய

    திருப்பாவை விளக்கம் 19 | குத்து விளக்கெரிய

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம், குத்து விளக்கெரிய.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘சிற்றஞ் சிறுகாலே’ எனத் தொடங்கும் இருபத்து ஒன்பதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் 18 | உந்து மதகளிற்றன்

    திருப்பாவை விளக்கம் 18 | உந்து மதகளிற்றன்

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம், உந்து மதகளிற்றன்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) சூர்யகாந்தனின் முள் மலர் வேலி – புதினத்தில் பழமையும் நம்பிக்கையும்

    (Peer Reviewed) சூர்யகாந்தனின் முள் மலர் வேலி – புதினத்தில் பழமையும் நம்பிக்கையும்

    முனைவர் ச. சங்கர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி) 
    மன்னன்பந்தல்.

    முன்னுரை

    கிராமங்கள் இன்று நகரமயமாக்களுக்கும், நவீன கால மாற்றத்திற்கும் ஆட்பட்டு தனக்குரிய அடையாளச் சின்னங்களை இழந்து வருகின்றன. இத்தாக்கத்தால் வேளாண் தொழிலும் அதனைச் சார்ந்தப் பிற தொழில்களும் மறைந்து வருவதுடன் அதனோடு இணைந்த வாழ்வும், பண்பாடும், கலாச்சாரமும், கலைச்சொற்களும் என இவைகளும் மங்கிப்போதல் வருத்தமான உண்மையும் கூட. ஒரு கிராமத்திற்கு அடையாளமாகத் திகழும் அவர்கள் மேற்கொண்ட தொழில்களோடு பழமையான நம்பிக்கைகளும், பழங்கதைகளும், பழமொழிகளும், பாரம்பரிய பழக்கவழக்கங்களும் என இவைகள் இக்கால இளையப் தலைமுறையினர்க்கு எட்டாக் கனியாக இருந்து வருதலை அறிய முடிகிறது.  இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை இலக்கியப் படைபாளர்கள் சிலர் தம் படைப்புகளில் பதிவு செய்து வருதலைக் காணமுடிகிறது.  அவ்வகையில் சூர்யகாந்தன் அவர்கள் ‘முள் மலர் வேலி’ எனும் நாவலில் குறிப்பிட்டுள்ள பழமையான சில  நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் வருங்கால சந்ததியினர்க்கு நினைகூறும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

    ஒர் அழகான கிராமத்திற்குரிய அமைப்பினை ஒவியம் போல் வரைந்து செல்வதுடன் அங்கு வாழும் மனிதர்களின் உறவுகள் தொழில்கள் எனவும் களைப்புத்தீர சாராயம் குடிக்கும் தொழிலாளர்கள்  இவர்களுக்கு இடையேயான உறவு நிலைகள் – தாழ்ந்த ஜாதியினர்க்கு கிராமங்கிடையே அளிக்கப்படும் பாகுபாட்டு நிலை – கிராமிய உணவுமுறை வைத்தியமுறை எனக் கிராமங்களுக்குரிய வாழ்கை முறை அருகில் இருக்கும் நகரங்களின் வளர்ச்சியால் அடையும் மாறுதல்  என்னவென்பதை கோடிட்டுச் செல்கிறது இப்புதினம். ரியல் எஸ்டேட்டின் வரவாக சாலையோர வேளாண் விளைநிலங்கள் புதுப்புது  கடைகளாக மாறும் நிலை – பாரம்பரிய தொழில் பாதிப்பிற்குள்ளானதால் வருமானத்திற்காகப் புதிய தொழில்களை நாடும் கிராம மக்கள் மாற்றுத் தொழிலை ஏற்காத சிலர் குறுக்குவழிதனில் தவறான தொழில் மேற்கொண்டு நாடும் கிராம மக்கள் மாற்றுத் தொழிலை ஏற்காத சிலர் குறுக்குவழிதனில் தவறான  தொழில் மேற்கொண்டு கைதாகிப் பின் திருத்தி புதிய தொழில்கள் தொடங்குதல் தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் அடுத்தடுத்த சந்ததியினர்க்கு  ஏற்படும் வருமான இழப்பு – இளைய தலைமுறையினர்  இதிலிருந்து விடுபட்டு கல்வி பயின்று காலமாற்றத்திற்கேற்ப புதிய தொழில் செய்தல் – அறிவியலோடு இணைந்து வேளாண்தொழில் மேற்கொள்ளுதல் முதல் படி நிலைதனை இந்நாவல் பதிவு செய்திருப்பதை உணராலாம்.

    பழமைகள்

    உணவு உடை பழக்கவழக்கம் பண்பாடு எனக் காலமாற்றத்திற்கேற்ப மாறினும் சிலர் இன்றும் பழமை விரும்பிகளாக இருத்தலை அறியலாம். “ழுடன ளை புழடன” என்றும் கூறும் இவர்கள் பழமைவாதிகள் அல்ல. பழமையின் சிறப்பினை உணர்த்த  இன்று எவ்வளவோ ஆங்கில மருத்துவ முறைகள் வந்தும் டெங்கு காய்ச்சலுக்குப் பயன் அளிப்பது நிலவேம்பு கசாயமும் பப்பாளி இலைச்சாறும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.  பழமையின் பெருமைதனை அறியாது சிலர் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறார்கள் உதாரணமாக எத்தனையோ பற்பசை விளம்பரங்கள் மருத்துவர்களே பரிந்துரைப்பது போல் வருகின்றன. அவற்றை உண்மையென நம்பி பயன்படுத்துவோர்க்குப் பல்லில் உபாதை ஏற்படாமல் இல்லை அவர்கள் பல் மருத்துவரை நாடும்போது புதிதாக ஒரு பற்பசையை அவர் எழுதி தருகிறார். அப்படியெனில் பல்லுக்கு உறுதியளிக்கும் பற்பசைதான் எது? நம் முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் சொன்ன  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதைப் பின்பற்றின் இந்த இடர்பாடுகள் வர வாய்ப்பில்லை. (இதனைக் கடைப் பிடிப்பது தற்போது சாத்தியக் குறைவே)

    பெண்கள் முகத்துக்குப் பூசும் எத்தனையோ முகக்கீரிம் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அழகு  நிலையங்களும் அதிகரித்துதான் வருகின்றன. இதனைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் அழகுதான் கூடியுள்ளதா? பக்க விளைவு ஏற்பட்டு பின் மருத்துவரைத் தானே பெரும்பாலானோர் நாடுகின்றனர். அக்காலம் தனில் பாட்டி அம்மா என நம்மவர்கள் முகத்திற்கு கஸ்தூரி மஞ்சளும் தலைக்கு அரப்புறம்(இலுப்பை புண்ணாக்கு) மேனிக்கு பயறு மாவும் கடலைமாவும் என இயற்கையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாகத் தானே வாழ்ந்தனர். பல நாள்  தலை குளிக்காமல் சிக்கு விழுந்திருந்தால் களிமண்ணைப்பூசி சிறிது நேரம் கழித்து நீராடினால் போதும் முடி பஞ்சு போல் ஆகும். ஆனால் இன்று பல ஷாம்புகள் பயன்படுத்தி முடிகொட்டுதலே மிச்சம். மேனிக்கு பல சோப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வாமை அலர்ஜி என மருத்துவரை நாடுவதேன்? இவ்வாறான நிலைதனில் இயற்கையான அழகினைப் பெறுவதற்கு பழைய வழிமுறைதனை நினைவுறுத்தும் விதமாக இப்புதினம் ஆசிரியர் “ரஞ்சிதம்” எனும் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

    “நாம நம்மோட மொக அழகை மட்டுமில்லாமல் உடம்போட நலத்தையும் நல்லபடியாக வெச்சுக்கிறதுக்கு சாப்பிடுற சாப்பாட்டு விசயத்துலயும் கவனம் இருக்கனும்  காரத்தையும் புளியையும் கொறச்சலாக உணவுல   சேர்த்துட்டாலே போதும். புளிக்குப் பதிலாக தக்காளியைச் சேர்த்துக்கப் பழகிக்கனும்;. தக்காளிப் பழச்சாறு ஆரஞ்சிப் பழச்சாறு  இதுகளெ அன்னாடம் ஒன்னு அல்லது அரை டம்பளர் அளவுல குடிச்சிட்டு வரோனும். இது ஒடம்புக்கு நலத்தைக் குடுக்கறதோட மொகத்துல இளமையின் பொலிவு மாறாமக் காப்பாத்தும். எலுமிச்சம் பழத்தை மொகத்தில் தேய்ச்சுக் கொஞ்ச நேரம் இருந்து அப்புறம் குளிச்சால் மொகம் பளபளப்பாக ஆகும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறது. மொகத்துக்கும் ஒடம்புக்கும் ரொம்ப நல்லது. தோல் பாதுகாப்புக்கு இது முக்கியம்.  தோல்ங்றது சுருக்கம் வுழுகாமலும் மினுமினுப்புக் கொறையாமலும் இருக்கப்பண்ணும்”

    “குளிக்கிறதுக்கு சோப்பை உபயோகிக்காமல் இருக்கிறது எவ்வளவோ நல்லது. நம்மபாட்டி, கொள்ளுப் பாட்டி காலந்தொட்டு இப்ப நம்ம அம்மாமாருக வரையிலுமே மொகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கத்தை மறக்காமல் கடைப்பிடிச்சிட்டு வந்தாங்க! காலப் போக்குல அதை நடைமுறையில வுட்டுட்டாப்ல ஆயிடுச்சி. மஞ்சள் நம்ம மொகத்தோட தோலுக்கு அழகான நெறத்தைக்; குடுக்கிறது மட்டுமல்லாம் கிருமிகளெக் கொல்றதும், தொத்து நோவுகளெத் தடுக்கிறதும் செய்யுது. மூக்குக்கும் கீழ் ரோமக்கால்கள் அரும்புகட்டுனாப்ல சிலருக்கு இருக்கும்! லேசா மீச மொளச்சாப்ல! அதைப் பார்க்கிறவிகளுக்குத் தெரியும்! மஞ்சள் பூசிக் குளிக்கிறவிகளுக்கு இது நீங்கிவிடும். குறிப்பா எலுமிச்சம்பழம் எண்ணெய் பயித்தம் பருப்புப் பொடி அப்புறம் இந்த மஞ்சள் இதுகளெ மட்டுமே உபயோகிச்சு மொகத்தோட அழகு கெடாத வகையில் பாதுகாப்புச் செஞ்சுக்கலாம்” எனத் தன்னைச் சார்ந்தப் பெண்களிடம் ரஞ்சிதம் ஆலோசனைக் கூறவதையும்;;

    மேலும்.“நல்லெண்ணெய் கொஞ்சம் போதும் அதுல ரெண்டு மூணு சொட்டு தண்ணியெ விட்டு நல்லா சூடு ஏற்படறாப்ல  உள்ளங்கையில் கொழைச்சம்னா நெய்போல ஆகும். அதெ மொகத்துல தேய்ச்சுக்கணும். தேங்கா எண்ணெய் உள்ளங்கையில் தடவி அதையே மொகத்துல தேய்சுக்கலாம். இது பளபளப்புக்கு ஒதவும் பாலாடையை எடுத்து  அதிலெ நீங்க சொன்ன எலுமிச்சம் பழச்சாரைக்; கலந்து  மொகத்துல தேய்ச்சுட்டு வந்தாலும் பத்துப் பன்னெண்டு நாள்ல மொகம் நல்லா சுத்தமா பளபளப்புக் கூடி வர்றது வெளங்கும். இது பருக்கள் வராமயும் சுருக்கங்க வராமயும் பாதுகாக்கும்” (பக்கம் 30-33 ) என இயற்கை அழகைப் பெறுவதற்குப் பழம் முறையினை பெரியோர்கள் கூறியுள்ளதைக் காணமுடிகிறது.

    “உள்ளங்கையி ஒப்பனைக்கு மருதாணித் தழை போதும்! செவந்த நெறத்தையும் குளிர்ச்சியையும் கைக்கும் குடுக்கும். எந்தக் கெடுதலும் வராது! நம்பிக்கையாச் செய்யலாம்! முதிர்ச்சி அடையாத இலைகளாக  பசுந்தழைகளாகப் பார்த்துச் சேகரிக்கவேணும். அதுகளோட களிபாக்குகளெயும் நாலஞ்சை சேர்த்தி நல்லா வெண்ணெய் பதத்துக்கு அரைச்சு கிண்ணத்தில் எடுத்துக்க வேணும். அப்புறம் கடுக்காயெ பொடி செய்து தண்ணீர்ல போட்டு கொஞ்ச நேரம் ஊறவெச்சு பொறகு அதை வடிகட்டி எடுத்துக்கணும். அந்தக் கடுக்காய்த் தண்ணியை விட்டு மருதாணித் தழைகளை அரச்சாலும் ரத்தமாட்டச் செவப்பு நெறம் கெடைக்கும். இந்த மருதாணிச் சாந்தை உள்ளங்கையில் வட்டமாப் பூசிக்கலாம். என்று ரஞ்சிதத்திடம் பயிற்சி பெற்ற கோகிலா. உள்ளங்கையின் ஒப்பனைக்கு மருதாணி பயன்படும் விதத்தினைக் கூறுவதுடன்  எளிமையானது மருத்துவ குணம் கொண்டது என்பதை இக்கதாபாத்திரத்தின் வழி அறியமுடிகிறது.

    நம்பிக்கைகள் 

    கிராமப்புற மக்கள் காலை எழுந்ததிலிருந்து உறங்கும் வரை “நிகழும் ஏன் இரவில் தூக்கத்தில் வரும் கனவு என ஒவ்வொன்றிலும் ஒரு நம்பிகை வைத்துள்ளனர். இவ்வாறு கிராமங்களில் உளவி வரும் பாம்பு குறித்த குறித்த நம்பிகைகள் பல உண்டு. இரவு நேரத்தில் பாம்பு எனச் சொல்லக்கூடாது. சொன்னால் பாம்பு வரும் என்ற நம்பிகை – யாரையும் தீண்டாது வயது முதிர்ந்த பாம்பின் விசம் நாகமணியாக மாறும். அம்மணியை இரவில் கக்கிவைத்தே பாம்பு இரைதேடும்- அதை எடுத்தால் அதிஸ்டம் நல்ல பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும் போது அவ்விடம் உ;ந்து வறுக்கும் மணம் வீசும். அப்பகுதிக்குச் செல்லக்கூடாது. செல்வோரைக்கடிக்கும்  நல்லபாம்பினை அடித்துக் கொன்றால் பால்  ஊற்றி காசு போட்டுப் புதைக்க வேண்டும் என்பன போன்ற நம்பிகைகள்  இந்நாவலில் பாம்பு குறித்த நம்பிகைகளை இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    ராக்கி எனும் கதை மாந்தர் தான் பார்த்த காட்சிதனை எண்ணெய்க் காரியிடம்“இந்தக் கோயில்கிட்டெ வந்தாலே எப்பவும் கொஞ்மா நெதானிச்சுத்தா வருவேன். இப்படித்தா ஒரு நா நல்ல நெலா வெளிச்சம். சைக்கிள்ல வந்துட்டு இருந்தவன் எதுக்காலெ என்னமோ சல்லைக் குச்சிக நிக்கிறாப்ல தெரிய வண்டிய பிரேக்போட்டு நிறுத்துனேன். மின்னால பாத்தா களமாட்டம் கெடக்குற அந்த வாசல்ல பாம்புக பொணயல் போட்டுட்டு அப்பிடி வெளையாடிட்டு இருக்குதுக”.

    “நாகப்பாம்பும் சாரப்பாம்பும்; நெலா வெளிச்சத்துல அப்பிடிச் சந்தோசமா இருக்குதுங்கிறதைத் தெரிஞ்சுட்டு சத்தமில்லாம ஒதுங்கிப்போய் வேலிக்கிட்டெ நின்னுட்டேன். துளியூண்டு சலசலப்புக் கேட்டுச்சுன்னாலும் போச்சு….! அதுகளுக்குத் தொந்தரவு ஆயிடுச்சுங்குற கோபத்துல ரெண்டும் பரிஞ்சு வந்து தொரத்தித் தொரத்தி கொத்திப் போடும்னு பெரியவுக சொன்னது மனசுக்குள்ளே கேவகம்! நல்லா சூரிக்கயித்தே ஒண்ணாட ஒண்ணா முறுக்கிப் போட்டா எப்படி ஒரே கணக்காக் கெடக்குமோ அப்படிப் பொரண்டு பொரண்டு வெளையாடுதுக! நெலத்துல வால் பாகத்தை ஊனி கரும்புச் சல்லையாட்டம் எந்திரிச்சு ஆறடி ஒசரத்துக்கு நிக்குதுகுக” எனத் தொடர்ந்து செல்வதுடன் மேலும்

    “அப்படிப் பொணயல் போட்டுட்டு பாம்புக ஜோடியாகப் பொரள்ற எடத்துல அதுகளுக்குத் தெரியாம வெள்ளைத் துணி ஒண்ணெக் கொண்டு போயி விரிச்சுட்டுப் போட்டு வந்துரோனுமாம்! அதுக உருண்ட்டே வந்து அந்தத்துணி மேலயும் பொரண்டு ஆசைத்தீர வெள்ளையாடிப் போட்டு அப்புறமாய் பிரிஞ்சு அதுபாட்டுக்குப் போயிடுமாம்! நாம போயி அந்தத் துணியெ எடுத்துக் கொண்டாந்து வூட்ல பொட்டியிலயோஇ போழையிலயோ வெச்சுட்டோமுன்னா செல்வமும் சுகபோகமும் பொங்கிப் பெருகுமாம்” எனக் கூறிச்செல்லும் ராக்கியிடம்

    “இப்படி பாம்புக ரெண்டும் பொணையல் போட்டுட்டு ஆனந்தமா இருக்கும்கிறதை மத்தவிக சொல்ல நானும் கேட்டுருக்கிறேன்!  சாரைப்பாம்பு ஆண் அப்பிடின்னும் நாகப்பாம்பு பொண்ணு அப்பிடின்னும்; பெரியவிக சொல்லுவாங்க” என்கிறாள் எண்ணெய்காரி. இவ்வாறு பாம்பு குறித்த நம்பிகைகள் கிராமங்களில் இருத்தலை இவ்விரு கதைமாந்தர்கள் உரையாடல் மூலம் இப்புதின ஆசிரியர் பதிவு செய்திருத்தலை உணரலாம். (பக்கம் : 73-76)

    கீரிப்பிள்ளைகள் இருக்கும் இடங்களில் பாம்புகள் அண்டாது பாம்பினை கொள்ளும். பின்னர் வி~ முறிவிற்காக “பெரியாநங்கை” செடிதனை நாடி அதனைத தின்று பிழைத்துக் கொள்ளும். என்ற நம்பிக்கைகள் உண்டு. இதனை உறுதி செய்யும் விதமாகப் பச்சியம்மாஇ வையாபுரி உரையாடல் அமைகிறது (பக்கம் : 80-81) மாடுகள் காளைக்கு (சினைக்கு) கத்தும் போது தீனிதிங்காது மாட்டுமேல் ஆள் மேல் ஏறிவிழும் காளைக்கு ஒட்டிப் போகும் போது முதல் மாடாக போக வேண்டும். பின்னர் மாட்டுக்கு தண்ணீர் காட்டக் கூடாது- தூக்கியே கட்ட வேண்டும்  அப்போது தான் பலன் பிடிக்கும் என்ற பல நம்பிகைகள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது. மேலும் வையாபூரி மூலமாக“மாட்டுக்கு நசியமும் செரியா இருக்குற தருணத்தில் கொண்டு போனம்னாத்தா பலன் புடிக்கும். அதுதா வெட்ட வெடியால மொதல் மாடா இருக்குட்டும்னு புடிச்சுட்டுப் போனம் பாருங்க.இந்த நாலஞ்சு நாளாவே கட்டுத்தரைல கத்தீட்டு மேவும் திங்க மாட்டீங்குது. பக்கத்துல போனா ஆளெ மோந்து மோந்து பாத்துட்டு எடக்குப் பண்ணுச்சு”(பக்கம்: 34-40) எனச் சூர்யகாந்தன் அவர்கள் பேசியிருப்பது நோக்கத்தக்கது.

    “உணவே மருந்து என்பர். அதற்கேற்ப உடல் உபாதைகளுக்கும் சைவம், அசைவம் என உணவினையே மருந்தாக எடுத்துக்கொண்டு குணமடைவர். அந்நிலையில் இங்கு, எலும்புகள் முட்டுமுட்டாக முழங்கால் முழங்கைப் பகுதிகளில் விட்டுவிட்டு வலிக்கும் “சரவாங்கி” எனும் நோய்க்கு கீரியின் கறி…துப்பினால் சீழ் போல் வடியும் தீராத சளிக்கும் “கக்குவாய்”இருமலுக்கும் நத்தையின் கறி…. உட்காரக்கூட விடாமல் துன்புறுத்தும் மூலவியாதிக்குப் பன்றி மாமிசம்….”(பக்கம் : 106)  எனக்கூறிச் செல்வது கிராமபுற மக்கள் அசைவ உணவின் மீது கொண்டுள்ள மருத்துவ நம்பிக்கைதனைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

    முடிவுரை:

    இன்றைய சமுதாய மக்கள் நாகரிகம் என்ற வட்டத்துக்குள் இருந்துகொண்டு பழமையையும், நம்பிகைகளையும் மறந்துவிட்டனர். மூதாதையரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்துவதையும் இன்றைய தலைமுறையிடம் காணமுடிகிறது. மேலும்  கிராமங்களில் இன்று வேளாண் தொழில் சிறப்பிழந்து  வருதலை அறியமுடிகிறது. இவற்றால் வேளாண் தொழில் அல்லாது மக்களின் வாழ்கையோடு இயைந்த கிராமங்களில் பண்பாட்டு விழுமியங்களும் மறைந்து போகின்றன. சூர்யகாந்தன் போன்ற சில படைப்பாளர்கள் தம் படைப்புகளின் வழி கிராமப்புற மக்களின் பழமைதனையும் நம்பிக்கையும் பதிவு செய்து வருதல் சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

    அடிக்குறிப்பு

    1.சூர்யகாந்தன் –  முள் மலர் வேலி          பக் 14-15

    2. மேலது – மேலது                                         ப-42

    3. மேலது – மேலது                                         ப- 62

    4. மேலது – மேலது                                         பக்- 33-34

    5. மேலது – மேலது                                         பக்- 73-76

    நாவல் – முள் மலர் வேலி
    ஆசிரியர் – சூர்யகாந்தன்
    முதற்பதிப்பு – டிசம்பர் 2010
    பதிப்பகம் – பாவை ப்பளிகேஷன்ஸ் 142, ஜானி
    ஜான் கான் சாலை சென்னை 600 014

    Share
  • நியூட்டன் படைப்பு விதிகள்

    நியூட்டன் படைப்பு விதிகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    பிரபஞ்சப் பெருவெடிப்பு
    நியதி
    பிழையாகப் போச்சு !
    ஒற்றைப் புள்ளி மூல முடிச்சு
    தொடக்கம்
    எப்படி அவிழ்ந்தது ?
    தானாய்,
    உள்ளியங்கி வெடித்தது
    எப்படி
    நியூட்டன் புற இயக்கி
    ஏதும் இல்லாமல் ?
    ஊதிப் பெருகும் பிரபஞ்ச
    பலூன்
    ஊசி குத்தி
    பஞ்சர் ஆகிப் போச்சு !
    நியூட்டன் விதிகளை மீறிய
    பெரு வெடிப்பு
    நியதி
    பியூட்டி இழந்து போச்சு !
    ஒற்றைத் திணிவை
    உடைக்க முதல்
    புற இயக்கி எங்கே ?
    உள்வெடிப்பை உந்துவதற்குப்
    புற இயக்கி எங்கே ?
    பிரபஞ்சம் உருவாக நூற்றுக்கும்
    மேலான
    மூலகங்கள், பல்கோடி
    மூலக்கூறுகள்
    பெருகிப் பிணைக்க
    அக இயக்கிகள் எங்கே ?
    பயிரினம்
    பல்கோடி உயிரினம் தோன்ற
    உயிரியக்கி எங்கே ?
    இயற்கை வினைப்பாடு தொடர
    தேவையான,
    பேராற்றல்  ஊட்டும்
    பிரமாண்டப் புற இயக்கி எங்கே ?
    படைப்பு விதிகள்
    ஆக்கிய
    நியூட்டன் ஏற்க மாட்டான் !
    பெரு வெடிப்பு நியதிக்குப்
    பூரண விளக்கமில்லை,  ஆணி
    வேரில்லை !
    விதையும் இல்லை !

    Share
  • இசைக்கவி ரமணன் – பாரதியின் வார்ப்பு

    இசைக்கவி ரமணன் – பாரதியின் வார்ப்பு

    பாஸ்கர் சேஷாத்ரி

    இசைக்கவி ரமணன் ஒரு பெரும் தத்வார்த்தமான பேச்சாளர். அவரின் வார்த்தைப் பிரயோகமும், சுத்தமான தமிழ் உச்சரிப்பும், நினைவில் கொண்டு சொல்லும் கவிதைகளை நீங்கள் கேட்க வேண்டும். அபாரமான நினைவாற்றல், பிசிறு இல்லாத பேச்சுத் திறன் , வளமான குரல், பெரும் தமிழ் பக்தன். ரமணனின் பாரதி பற்றிய கூட்டம் மாதா மாதம் ஆர்கே அரங்கில் நடைபெறுகிறது. ஒரு பேச்சாளன் எப்படி தனது பேச்சில் உண்மையாக இருக்கிறான் என்பதற்கு இவர் ஒரு சான்று. பாரதி கவிதைகளை அவர் பாடிக் காட்ட. நீர் கேட்டால், கண்ணில் நீர் வரும். அவர் உணர்ச்சிக்கவி. கவிதையை மனனம் செய்யலாம். ஆனால் உணர்ச்சிப் பிழம்பை எப்படிக் கொண்டு வர முடியும்?. ரமணன் செய்வார் .வித்தை தெரிந்த சொல்லாளர் அவர். கவிதையை அவர் உணர்வோடு சொல்லி, பொருள் சொல்லும் பாங்கு உன்னதம். பல உணர்வுகளை எந்தப் பேச்சிலும் வெளிப்படுத்த முடியாது. அது மர்மமான பிரதேசம். தத்துவங்களும் அப்படியே.

    பாரதியின் பல கவிதைகள் தத்துவமான மர்ம தேசம். அதைப் பிடிக்க வாசிப்பு போதாது. அதை விளக்க ஒரு மந்திரக்கோல் வேண்டும். ரமணன் கையில் அது உண்டு. நேற்று ரமணனின் பேச்சில் வெளியைப் பற்றிச் சொன்னபோது எனக்கு ஜிட்டு கிருஷ்ணமுர்த்தியும், ரமணரும் நினைவுக்கு வந்தார்கள். ரமணன் அந்த மாயா ஜாலத்தை நேற்று செய்தார். வெளி என்ற விஷயத்தை விளக்க அவர் காட்டிய மேற்கோள் மிகச் சிறப்பு. கூர்மையான பேச்சு, எறிந்த வேல்கம்பு கூர்தீட்டிச் செல்லும் வேகம் ரமணனின் பலம்.

    சென்னையில் பல இடங்களில் அவர் பேசுகிறார். மயிலையில் அவர் ஆர்கே அரங்கில் ஜனவரி பதினேழாம் தேதி மாலை பேச இருக்கிறார். வந்து கவிப்புனலில் திளையுங்கள் . நீர் புதிதாய்ப் பிறப்பீர். உம் கண்கள் விரியும், வாழ்க்கை மேலும் பொருள் கொண்டதாக இருக்கும்.

    ரமணன் அவர்களை இன்று பாரதியின் பிரதிநிதியாக நான் பார்க்கிறேன். கவிஞனின் உள்ளத்தை நம்முள் கொண்டு வருவது அரிய செயல் .எனக்குப் பாரதியின் மேல் இருக்கும் ஈர்ப்பு மேலும் வலுவடைந்து என்னை ஆட்கொள்ளக் காரணம் ரமணன் தான். நான் வீழ்ந்துவிட்டேன். வீழ்வது பாரதிக்குப் பிடிக்காது. ஆனால் இது வேறு வீழ்ச்சி. பாரதியால் கூட என்னை எழுப்ப இயலாது.

    இது போன்ற நிகழ்ச்சிகளை அந்த அரங்கில் அளிக்கும் ஆர்கேவுக்கு எனது நமஸ்காரம். ஒரு சிறிய இடத்தை அளித்து என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஒரு பேச்சுரை அளித்து நிகழ்ச்சிகளை அவர் நடத்த அனுமதி கொடுத்து இயல் இசை நாடகத் துறையை வளரச் செய்வது பெரும் சேவை. அதுவும் நகரின் மையத்தில் குளிரூட்டிய அறையும் நல்ல இருக்கையும் கொடுத்து, மக்களை மேம்படுத்த அவரின் சீரிய முயற்சி மேலும் வளர்க. அவரின் மதுரத்வனிக்கு நன்கொடை செய்க – அவருக்கு எனது வணக்கம். ஆர்கே அரங்கம், சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பழைய தண்ணீர்த் துறை சந்தை எதிரில் உள்ளது.

    வாழ்க ரமணன் – வாழ்க ஆர்கே. வாழ்க பாரதி. வாழ்க தமிழ். எனது பணிவான வணக்கம்.

    Share