சச்சிதானந்தம்
இறை வணக்கம்
ஐயமற்று உள்ளத்தில் மைய மிட்ட,
ஐங்கரனுக் கன்பொழுகக் கவிதை யிட்டு,
வையகத்தைக் காத்து நிற்கும் கானகத்தை,
மையமாக வைத்தினிய கவிதை செய்வோம்! 1
எளிதினும் எளிய கவிதை சொல்லி,
இனிதினும் இனிய குறவன் கதையைப்,
புதிதினும் புதிய முறையில் சொல்லப்
புதியவன் முயற்சிக்கு முருகன் துணை! 2
நன்றியைச் சொல்லி நெகிழ்வ தற்காக,
ஒன்றியென் மனதில் உன்னை நினைத்தேன்,
இன்றியுன் கருணை, கவிதைகள் ஏது?
சண்முகன் உன்னால் பண்களைச் செய்தேன்! 3
பரமனை வணங்கிக் குறவனைப் பாடப்,
பாமரன் செய்யும் முயற்சி இது,
ஓமெனும் மந்திரம் பயின்றவன் அருளால்,
பாவெனும் மந்திரம் பழக வந்தேன்! 4
குறிஞ்சி வணக்கம்
நானிலத்தில் முதல் நிலம்,பொங்கும்
பாநயத்தைத் தரும் நிலம்,உயர்
மாமலைகள் அதன் பலம்,அடர்
கானகமாய் வளர்ந்திடும்,குறிஞ்சிக்கு வணக்கம்! 5
குமரன் முகமெனக் குளிர்ந்த குறிஞ்சியை,
விமலன் சடையென விரிந்த குறிஞ்சியை,
கமழும் நறுமணம் நிறைந்த குறிஞ்சியை,
மமனம் குவித்து வணங்கிடு வோமே! 6
ஓரறிவு உயிர்கள் முதல், உயர்
ஆறறிவு மனிதன் வரை, வாழப்
பேருருவம் எடுத்து நின்று காக்கும்
கானகத்தைக் கரம் கூப்பித் தொழுவோமே! 7
தமிழ் வணக்கம்
பயிற்சி இல்லாதவன் செய்திடும் முயற்சியில்,
முயற்சியின் பலனாய் நவின்றிடும் நவிற்சியில்,
பிழை இருந்தால் பெரும்பிழை பொறுத்தருள்க,
பைந்தமிழே செந்தமிழே காத்தருள்க! 8
சொற்பிழை பொருட்பிழை இன்சுவை கெடுக்கும்,
தளை தட்டும் கவிப் பிழை,
இலக்கண விதிகளை மீறிடும் பெரும்பிழை,
எப்பிழை இருப்பினும் பொறுத்தருள் தமிழே! 9
முன்னோர் வடித்த நூல்களில் இருந்து,
மேன்மை பொருந்திய கற்பனை நயங்களை,
மென்மை நிறைந்த சொற்றொடார் வழங்களை,
மனமறியாமல் கையாண்டிருந்தால் ஏற்றருள் தமிழே! 10

Leave a Reply