குறளின் கதிர்களாய்…(93)

செண்பக ஜெகதீசன்

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.   (திருக்குறள் -782: நட்பு)

புதுக் கவிதையில்… 

வளர்பிறைபோல் வளரும்                                moon phases
நல்லறிவுடையோர் நட்பு,
தேய்பிறை நிலவுபோல்
தேய்ந்து மறையும்
பேதையர்தம் நட்பு…! 

குறும்பாவில்… 

வளரும் நட்பு வளர்பிறைநிலவாய்
அறிவுடையோரிடம்,
தேயும் நிலவாய்ப் பேதையரிடம்…! 

மரபுக் கவிதையில்… 

நல்லதாய் அறிவு கொண்டோர்தம்
     -நட்பு வளரும் நாள்தோறும்
நில்லா நிலவு வளர்பிறையில்
     -நன்றாய் வளர்ந்திடும் வளர்ச்சிபோல,
பொல்லாப் பேதையர் கொளும்நட்பு
     –பொலிவ தில்லை இதைப்போல,
இல்லா தாகும், தேய்பிறையில்
-இருளாய்த் தேயும் நிலவெனவே…! 

லிமரைக்கூ… 

வளர்பிறை நிலவாய் வளர்ந்து காயும்
நல்லறிவு கொண்டோர் நட்பதுவே,
பேதையர் நட்பு தேய்பிறையாய்த் தேயும்…! 

கிராமிய பாணியில்… 

நெலவுநெலவு பால்நெலவு
நெதமும்வளரும் பால்நெலவு,
இதுதான்நெலவு வளர்பெறயில்
இதுபோல்வளரும் நட்பதுவும்
படிப்பறிவுள்ளவர் நட்பதுவும்… 

தேயும்தேயும் அதேநெலவு
தேய்பெறவந்தா தேஞ்சிபோவும்,
அதுபோலத்தேயும் நட்பதுவும்
அறிவில்லாதவர் நட்பதுவும்,
தேய்பெறநெலவாத் தேஞ்சிபோவும்… 

நெலவுநெலவு பால்நெலவு
நெதமும்வளரும் பால்நெலவு…!

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *