வெண்பாவில் விடுகதைகள்

ரமணி

தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

1. குறட்பாவானால், பொதுவாக ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும். வெண்பாவானால் விடை பொதுவாக ஒரு சீருக்குள் எந்தச் சீரிலும் அமையலாம். விடை மறைமொழியாக, சீரின் பெரும்பான்மை எழுத்துகளை வைத்துக் கண்டறிவதாக அமையும்.

2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

3. விடைச்சொல் மறைமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

6. சில மறைமொழி உத்திகள்:
6.1. விடைச்சொல்லில் அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து. ஒற்றுகளை மாற்றக்கூடாது.

6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக–குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக–இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

6.5. இருசொல் விடைகள்:
சற்றுக் கடினமான விடுகதைகளில் விடை மறைமொழியாக இரண்டு சீர்களில் இருக்கும். இவ்விரண்டு சீர்கள் வெண்பாவில் ஏதோவோர் அடியில் ஒன்றையொன்று அடுத்துவரும். இரண்டு சீர்களிலும் உள்ள எழுத்துகளில் ஒற்றுகள் தவிரித்து இரண்டு முதல் நான்கு எழுத்துகள் வரை மாறியிருக்கலாம். குறில் நெடில் ஒன்றுக்கொன்று மாறியும் வரலாம். சீரில் உள்ள எழுத்துகளில் பெரும்பாலானவற்றை வைத்து விடையைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக,

எரியும் விளக்கில் எரிவதோ எண்ணை?
எரியும் கிழக்குத் தெரு.

இந்தக் குறட்பாவில் விடை மறைமொழி: கிழக்குத் தெரு; விடை: விளக்குத் திரி.

6.6. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

*****

வெண்பாவில் விடுகதை: உதாரணம்

அடித்தால் வலித்திட ஆனை விரும்பும்
கடித்தால் நுனியில் கசக்கும் – அடியில்
இனிக்கும் மதுரம் இலையது கீறும்
கனமான புல்லாம் எறும்பு.

இந்த வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சொல் வெண்பாவின் பொருளுடன் ஒட்டாமல் நிற்பதால், அதுவே விடை மறைமொழி என்று அறியலாம். ஒற்று மாறாதிருக்க, ’எறும்பு’ என்னும் சொல்லில் இரு குறில் எழுத்துகள் மட்டும் மாறியிருக்க, மற்ற எழுத்துகளை இந்தச் சொல்லில் அமைத்துப் பார்த்தால் ’கரும்பு’ என்னும் விடை எளிதில் கிடைக்கும். இப்போது கரும்பு என்னும் விடையை வெண்பாவில் அமைத்துப் பார்த்தால் அது பொருளுடன் ஒன்றுவது தெரியும்.

*****

வெண்பாவில் விடுகதைகள்: வாசகர் விடை காண

இனி, வாசகர்கள் விடை கண்டறிய, மற்ற வெண்பா விடுகதைகள் ஒவ்வொன்றாக இந்த இழையில் வரும், ஒன்றின் விடை தெரிந்ததும் அடுத்தது என்ற நிரலில்.

1. ஆலமரம் தூங்க…
(அளவியல் இன்னிசை வெண்பா)

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

(தொடரும்)

*****

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெண்பாவில் விடுகதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *