கவியோகி வேதம்
எவள்என்றன் முடிகோதி “அஞ்சேல்நீ!” என்றாளோ
இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!
எவள்என்றன் கவலையெல்லாம் ‘தன்’கவலை என்றாளோ
இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!…………1
.
எவளென்றன் பயமெல்லாம் தீர்த்தென்னை அணைத்தாளோ
இவளே இவளேஎன் அன்பு–அம்மை!
எவளென்றன் வாழ்வினிலே ஒளிகூட்டி நிற்பாளோ,
இவளே- ஆம்என்றன் கருணை-அம்மை!…….2
.\
நாடிக்குள் கசடெல்லாம் நீக்கிப்பின் பலம்தந்து
‘நல்மூச்சால்’ உயிர்ப்பிக்கும் பெரும்தேவி!
பாடிநின்றேன், அழுதுவிட்டேன், பரவசத்தில் மிதந்துவிட்டேன்!
பளீர்என்று அருள்தந்தாள் சுடர்த்தேவி!! ………..3
அன்று-ஒரு ராட்சசனின் ஆணவத்தைக் குதிபோட்டு
அடக்கினையோ என்றதற்குச் சிரிக்கின்றாள்!
இன்றெதற்குப் பழையகதை? என்னுடைய நாத்திகத்தை
இளஞ்சிரிப்பால் மாற்றியதைச் சொல்கின்றாள்!….4
எதற்கம்மா ஆயுதங்கள் இத்தனையும் வைத்து-என்னை
இன்னமும்நீ பயமுறுத்தல் வேணும்?என்றேன்!
கதைஇல்லை என்குழந்தாய்! எளியவனாய் மாறுமுன்னைக்
கண்டவர்கள் துன்புறுத்தல் தடுக்கஎன்றாள்! ….5
..
. எலுமிச்சம் பழமாலை, தனி-உன்றன் விருப்பமதோ?
என்றேநான் கேட்டதற்கும் பெரும்சிரிப்பு!
கொலுவிருக்கும் அழகினுக்கும், என்மேலுன் பித்தினையே
குறைப்பதற்கும் வைத்துள்ளேன் எனச்சொன்னாள்!…….6
.
எத்தனைதான் கேள்வியுடன் துர்க்கையம்மை இவளைநான்
இம்சித்தால் கூடஇவள் புன்னகைப்பாள்!
முத்தனைய செல்விஇவள்! மோகமதைத் தூண்டுபவள்!
முழுதுமென்னைத் தந்ததனால் நெஞ்சில்வைத்தாள்!….7
….
அடுத்தஒரு பிறவியிலும் உரிமையுடைக் குழவியென
அழகாக எனை-ஆக்கு துர்க்கையம்மா!!
எடுத்துவிடு மந்திரச்சொல், கொடுத்துவிடு உன்நேசம்!
எப்போதும் இடுப்பிலென்னைத் தூக்கம்மா!


Leave a Reply