( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
காற்றுக்கு மாற்றுப்பேர் நிறையவுண்டு
கவரும்படி வீசினால் தென்றலாகும்
சீற்றமுடன் வந்துவிடின் சூறாவளி
சில்லென்று வீசினால் குளிர்காற்றாகும்
வடக்கிருந்து வந்துநிற்கும் வாடையாகும்
வனங்களிடை வீசினால் சேதமாகும்
அளவோடு வீசினால் இதமேயாகும்
ஆனாலும் காற்றெமக்கு ஆதாரமே !

வாகனங்கள் ஓடுவதும் காற்றாலே
வானூர்தி இயங்குவதும் காற்றாலே
நாமியங்கி நடப்பதுவும் காற்றாலே
நல்விளைச்சல் விளைவதுவும் காற்றாலே
வான்வெளியில் காற்றுநிலை அற்றுப்போனால்
மண்மீது உயிர்கள்நிலை அற்றுப்போகும்
கஞ்சியின்று வாழ்நாளைக் களித்திடலாம்
காற்றின்றி வாழ்ந்துவிடல் அரிதேயாகும் !

சோறின்றி இருந்தாலும் இருந்திடலாம்
சொட்டுநீர் அருந்தாதும் வாழ்ந்திடலாம்
ஆடையின்றி வாழ்ந்தாலும் வாழ்ந்திடலாம்
ஆனாலும் காற்றின்றி வாழமாட்டோம்
நீழ்புவியில் வாழ்வார்க்குக் காற்றுத்தேவை
நிம்மதியாய் வாழ்வதற்கும் காற்றும்தேவை
ஆதாரம் எமக்கென்றும் காற்றேயாகும்
ஆதலால் நற்காற்றைச் சுவாசிப்போமே !

நகரத்தில் நற்காற்றை காணமாட்டோம்
நகரமெலாம் நரகமாய் ஆகிப்போச்சு
கட்டிடங்கள் இஷ்டமுடன் எழும்பியாச்சு
கரியமிலவாயு அங்கே புகுந்துமாச்சு
சுவாசிக்கும் காற்றெல்லாம் சுத்தமின்றி
அபாயத்தை கொடுக்கும்நிலை ஆகிப்போச்சு
சுவாசிக்க நற்காற்றை மக்கள்தேடி
சுற்றுகிறார் வெட்டவெளி நாடிநாடி !

தொழிற்சாலைப் புகையெல்லாம் ஒன்றுகூடி
சுவாசிக்கும் காற்றுக்கு ஆப்புவைக்கும்
அவலநிலை இப்போது அதிகமாகி
அநேகம்பேர் நோயிலினிலே மாழுகின்றார்
இயற்கைதரும் காற்றதனை எமக்குவாரா
இடையூறு பலவழியில் பெருகிப்போச்சு
ஆட்சியாளர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து
அசுத்தமின்றிக் காற்றுவர வழியைக்காண்பீர் !

காயமென்னும் பெயர்பெற்ற உடலம்தன்னை
காற்றதுவே இயக்கி நிற்கும் சக்தியாகும்
மாயமென உருவம்பெற்ற காற்றுமங்கே
மறைந்தோடி விட்டுவிடின் மரணமாகும்
உருவமிலா காற்றுமங்கே உள்ளேநின்று
ஊனுடம்பை உருவமாக்கி காட்டிநிற்கும்
அக்காற்றின் அழுக்ககற்ற முனையாவிட்டால்
அனைவருமே அசைவற்று இருப்போமன்றோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *