நவராத்திரி நாயகியர் (7)
க. பாலசுப்பிரமணியன்
ஞானாம்பிகை
காளத்தி நாதனைக் கைப்பிடித்த காமினியே
காலத்தைக் கடந்தவளே கலைவானின் கருவறையை
வானத்து தேவர்களும் விதியறியா அரக்கர்களும்
வாதமிடும் மதிதன்னின் ஞானக்கடலின் நல்லமுதே!
வானத்து வண்ணத்தில் வில்லான வளிதன்னின்
விதையாகி வளம்காக்கும் பேரொளியே பார்வதியே
புறமெல்லாம் வலம்வந்தும் புரியாமல் தவிப்போரின்
அகமமர்ந்த ஆனந்த போகத்தின் அருள்மொழியே !
சொல்லோடு மொழியும் சுவையிழந்த பருவத்தில்
சுவையான நுண்ணறிவாய் சுகத்தைத் தருபவளே
அஞ்ஞான விஞ்ஞான ஆணவத்தின் ஆர்ப்பரிப்பில்
மெய்ஞ்ஞானத் தத்துவமாய் மோனத்தில் நிற்பவளே!
மறையினில் மறைந்தாயோ மதியினில் உறைந்தாயோ
நாதத்தின் நரம்பினில் நல்லிசையாய் அமர்ந்தாயோ
தாயினங்கள் கருவறையில் தன்னருளைத் தந்தாயோ?
பாதங்கள் போற்றுகின்றேன் பக்குவமாய் சொல்லிடுவாய்
கீதைதந்த நல்லறிவோ? பாதைதேடும் பகுத்தறிவோ ?
மேதைகளின் மூதறிவோ?முன்னோர்கள் மூதுரையோ?
மாதவத்தின் முடிவுரையோ? முற்காலச் சிந்தனையோ ?
மூவுலகும் அறிந்தவளே மெய்ஞ்ஞானம தந்திடுவாய் !
இருள்நீக்கி ஒளிகாட்டும் இறைவி நீயன்றோ
அருள்தந்து ஆட்கொள்ளும் அம்மையும் நீயன்றோ
அதுவாகி இதுவாகி எங்கும்நிறை பராசக்தியே
அருளாட்சி எழில்காண கொலுவிருக்க வருவாயே !