Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [6 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [6 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    ஆறிரு தடந்தோள் ஐயா போற்றி
    அருமறை போற்றும் முருகா போற்றி
    கூறுசெய் வடிவேல் குமரா போற்றி
    குன்றுகள் தோறும் அமர்ந்தாய் போற்றி

    மாறில்லா வள்ளி மணாளா போற்றி
    மஞ்சையில் ஏறி வருவாய் போற்றி
    குக்குடக் கொடியை உடையாய் போற்றி
    குவலயம் உய்ந்திட உதித்தவா போற்றி

    முருகா போற்றி மால்மருகா போற்றி
    உருகிடும் அடியார் உளமுறைவாய் போற்றி
    பொருதிடு குணத்தை ஒழிப்பாய் போற்றி
    புவனமே போற்றிடும் குமரா போற்றிபோற்றி

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [5 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [5 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பழமான முருகாநீ பழந்தேடி நின்றாய்
    பழனிப் பதியமர்ந்து பக்குவமாய் ஆனாய்
    அழகான இருமாதர் அருகணைத்துக் கொண்டாய்
    அரனாரின் திருக்குமரா திருவடியே சரணம்

    வண்ணமயக் காவடிகள் வருமுந்தன் வாசல்
    வாலைக் குமரியொடு வாலிபரும் வருவார்
    எண்ணமெலாம் உன்நினைப்பை இருத்திவைக்கும் அடியார்
    எழில்முருகா எனப்பாடி  ஏற்றிநிற்பார் உருகி

    கண்களிலே பரவசத்தைக் காட்டிநிற்கும் அடியார்
    கைகூப்பி வேல்முருகா எனவுருகி அழைப்பார்
    மண்புரள வீதியிலே வருமடியார் கூட்டம்
    மால்மருகா எனவுரைத்து உனைநினைத்து வருவார்

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [4 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [4 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    ஓமென்னும் பிரணவத்தின் உட்பொருளும் ஆவாய்
    உலகுய்ய அவதாரம் எடுத்துவனும் ஆவாய்
    தீமையெனும் இருள்சூழா காத்திடுவாய்  முருகா
    தினந்தோறும் பரவுகின்றோம் திருவருள்தா முருகா

    அறமற்ற அரசியலார் ஆட்சி அமர்கின்றார்
    ஆணவத்தை அகமிருத்தி அல்லல் கொடுக்கின்றார்
    நீதியொடு நிதிதன்னில் ஊழல் நுழைக்கின்றார்
    நெஞ்சுருக வேண்டுகிறோம் எமைக்காப்பாய் முருகா

    ஆதியந்தம் இல்லாத அருட்சுடரே கந்தா
    அசுரரது செருக்கடக்கி அமரர்துயர் தீர்த்தாய்
    பேதலித்து நிற்கின்ற அடியார் துயர்தீர்க்க
    பெம்மானின் திருக்குமரா பேரருளைப் பொழிக

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [3 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [3 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    வேலேந்தி நிற்கின்ற வேலவனே போற்றி
    விண்ணவர்கள் துயர்தீர்த்த வேலவனே போற்றி
    மாலயனும் காணவொணா சிவன்மைந்தா போற்றி
    மனவழுக்கைப் போக்கிடுவாய் வடிவழாகா போற்றி

    தேனான திருநாமம் கொண்டவனே போற்றி
    திருக்கையில் வேலேந்தி நிற்பவனே போற்றி
    வள்ளை தேவயானையுடன் அமர்ந்தவனே போற்றி
    மனமமர்ந்து நிற்கின்ற மால்மருகா போற்றி

    ஈராறு கரமுடைய எழிலழகா போற்றி
    ஈனமுடை எண்ணமதை எரித்திடுவாய் போற்றி
    பாரமுடை பாவமூட்டை அழித்திடுவாய் போற்றி
    பரம்பொருளாம் சிவன்மைந்தா முருகையா போற்றி

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [ 2 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [ 2 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    வேதநெறி திருமுறைகள் வியந்துவிடும் முருகா
    நாதனக்கே  ஆசானாய் ஆகிநின்ற முருகா
    வாதமிடு குணமகல வழிசமைப்பாய் முருகா
    வையகத்தார் மனஞ்சிறக்க வைத்திடுவாய் முருகா

    சோலைமலை எல்லாமே கோயில்கொண்டாய் முருகா
    சுவையான தமிழ்கேட்ட துள்ளிவந்தாய் முருகா
    வாலைவள்ளி காதல்கொண்டு லீலைசெய்தாய் முருகா
    வடிவழகா வேலவனே வரமருள்வாய் முருகா

    அருணகிரி தமிழ்பாட அருளிநின்றாய் முருகா
    அமுதத்தமிழ் அனைவரையும் பருகச்செய்தாய் முருகா
    திருமுறைகள் வரிசையிலே அமருகின்ற வகையில்
    திருப்புகழை அருளச்செய்தாய் திருக்குமாரா சரணம்

    Share
  • கந்தசஷ்டிப் பிரார்த்தனை [1 ம் நாள்]

    கந்தசஷ்டிப் பிரார்த்தனை [1 ம் நாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பேரரக்கர் தனையழித்த பெருமானே போற்றி
    பாருலகில் பேரரக்கர் பெருகுகிறார் நாளும்
    தீராத தொல்லையினை கொடுக்கின்றார் தினமும்
    சிவன்மைந்தா தீர்வுதந்து காத்துவிடு ஐயா

    ஊர்சிறக்க உழைக்கின்றார் ஒன்றுங் கிடையாமல்
    உளமுடைந்து உணர்விளந்து உழலுகிறார் ஐயா
    பாருலகில் கலியெழுந்து ஆடுகிறான் கந்தா
    பகையழித்த வேலவனே பொழிந்திடுவாய் கருணை

    ஆலமதை உண்டானின் அழகு திருக்குமரா
    நீலமயில் நீயமர்ந்து எமக்கருள வேண்டும்
    சீலமுடை வாழ்வுதனை தந்திடுவாய் முருகா
    திருவடியே சரணமையா சிவானாரின் மைந்தா

    Share
  • மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்!

    மனமகிழ தீபாவளி வருகிறது வாழ்வில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
    தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார்
    அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே
    ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும்

    தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்
    தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்
    மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை
    மனமகிழ  தீபாவளி வருகிறது வாழ்வில்

    பக்தியொடு பக்குவமும் பாங்காகக் கொண்டு
    பலர்மகிழத் தீபாவளி வருகிறது பாரில்
    சுற்றமெலாம் சூழ்ந்திருந்து சுவைபயக்கும் நாளாய்
    இப்புவியில் தீபாவளி அமைந்திருக்கு எமக்கு

    தீமையெனு மெண்ணம் திசையறியாப் போக
    தீபாவளி எமக்கு வாய்த்திருக்கு வாழ்வில்
    ஞானமதை உணர்த்தி நற்கருமம்  ஆற்ற
    மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு

    புத்தாடை எமக்குப் புத்துணர்வை ஊட்டும்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழ்வைக் காட்டும்
    சொத்தான சுற்றங்கள் சுவைமிக்க உணவு
    அத்தனையும் தீபாவளி ஆனந்தப் பரிசே

    விலவாசி ஏற்றம் விண்ணைத் தொடுகிறது
    வேலையின்றி பலபேர் நாளுமே பெருகுகிறார்
    எரிபொருளின் விலையோ எரிச்சலைத் தருகிறது
    என்றாலும் தீபாவளி எமையணைக்க வருகிறதே

    போர்மேகம் ஒருபக்கம் போட்டியோ மறுபக்கம்
    பொறுப்பின்றி செயலாற்றும் நாடுகளோ பலபக்கம்
    வறுமை ஒருபக்கம் வாய்த்தர்க்கம் ஒருபக்கம்
    வரவிருக்கும் தீபாவளி இவைபோக்க உதவிடட்டும்

    தித்திப்பை மனமிருத்த தினமே நினைப்போம்
    எத்திக்கும் ஆனந்தம் பெருகிடவே எண்ணுவோம்
    சித்தமதில் இறையெண்ணம் என்றுமே இருந்திட்டால்
    இப்புவியில் எல்லாமே இன்பமாய் ஆகிவிடும்

    Share
  • பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

    பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே! [சரஸ்வதி துதி]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    மாதரது குரலிலும் மழலையரின் மொழியிலும்
    கீதமென ஒலித்திடும் குயிலனது குரலிலும்
    பேதமற அமர்ந்துமே பெருங்கருணை பொழிகிறாய்
    வீணையினை மீட்டிடும் வெண்டாமரை வாணியே

    நூல்பல கற்கவேண்டும் நுண்பொருள் உணரவேண்டும்
    வாய்மையாய் வாழவேண்டும் மனவழுக் ககலவேண்டும்
    தாழ்மையாய் இருக்குமெண்ணம் தான்மன மமரவேண்டும்
    வாணியே வேண்டுகின்றோம் வழங்கியே நிற்பாயம்மா

    கற்றவர் அணைக்கவேண்டும் மற்றவர் மதிக்க வேண்டும்
    நற்றமிழ் நாவிலென்றும் நடமிட்டு நிற்கவேண்டும்
    சொற்றமிழ் சிறக்கவேண்டும் சுவையுடன் பாடவேண்டும்
    பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே

    ஞானியர் போற்றுமம்மா நான்மறை உணர்த்துமம்மா
    தேனினும் இனிமைமிக்காய் தெளிவினை ஊட்டுகின்றாய்
    வானவர் வியக்குமாறு மதியினைத் தந்துநின்று
    வையத்தார்  விரும்புவண்ணம் வைத்திட்டாய் வாணித்தாயே

    ஏழைகள் கற்கவேண்டும் இருப்பவர் ஈய்தல்வேண்டும்
    வாழ்விலே கல்விச்செல்வம் வானோங்கி நிற்கவேண்டும்
    தோழமை உணர்வுகொண்டு கற்றவர் இணையவேண்டும்
    நாளெலாம் பரவுகின்றோம் நல்லருள் புரிவாயம்மா

    Share
  • அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பாருலகில் வாழப் படைத்துவிட்டாய் தாயே
    வாழ்வு வளமாகத் தனம்வேண்டுந் தாயே
    தினம் போற்றுமெம்மை திகப்படையா வண்ணம்
    அனுதினமும் எமக்கு அருள்புரிவாய் தாயே

    பொருளில்லா உலகில் பொழுது விடியாதே
    பொருளின்றி எதுவும் எமையணுக மாட்டா
    அருளோடும் பொருளும் உன்னிடத்தே உண்டு
    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா

    நோயின்றி வாழ நூல்கள்பல கற்க
    வாய்மையுட னிருக்க வறுமையது போக
    ஆதார மனைத்தும் உன்கருணை அம்மா
    அருள்சுரந்து எம்மை அரவணைப்பாய் அம்மா

    தானதர்மம் செய்ய பெருமாசை தாயே
    தனமட்டும் எமக்குத் தங்குதில்லை தாயே
    ஆனமட்டும் நாமும் உழைக்கின்றோம் அம்மா
    ஆனாலும் தனமோ அணுகவில்லை அம்மா

    நீமனது வைத்தால் நிறைந்துவிடும் அம்மா
    நினைப் பெல்லாம் நீயாயிருக்கிறாய் அம்மா
    வாழ்நாளில் நாமும் வறுமையின்றி வாழ
    வரமருள்வாய் இலக்குமித் தாயேநீ எமக்கு

    Share
  • இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா!

    இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    ஈரமுடை நெஞ்சை ஈந்திடுவாய் தாயே
    இணையில்லா திருவடியைப் பற்றுகிறோம் தாயே
    கோரமுடை நினைப்பைக் கொன்றொழிப்பாய்  தாயே
    குவலயதில் வாழத் துணைநீயே தாயே

    ஆணவமாம் நினைப்பை அகற்றிவிடு தாயே
    அகந்தை அகமேறா ஆக்கிவிடு தாயே
    தீமையெமை அணுகா திருப்பிவிடு தாயே
    திக்கெட்டும் நிறைந்தாய் துர்க்கையம்மா நீயே

    சோர்வடையும் எண்ணம் துடைத்தெறிவாய் தாயே
    தொலைநோக்குப் பார்வை கொடுத்தருள்வாய் தாயே
    வாய்மையுடன் வாழ வரமருள்வாய் தாயே
    மாநிலத்தில் எமக்குத் துணைநீயே தாயே

    அச்சமதை அகற்ற அருகணைவாய் அம்மா
    ஐயநிலை போக்க அருள்புரிவாய் அம்மா
    இச்சைகொண்டு உன்னை இறைஞ்சுகிறோம் அம்மா
    இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா

    Share
  • புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்!

    புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
    பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
    தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
    உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

    வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே
    தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே
    விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே
    வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு

    மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
    அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட
    பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே
    பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே

    பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே
    பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை
    வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
    வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை

    வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே
    பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
    சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
    சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே

    மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்
    முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
    வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
    வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்

    அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே
    உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
    மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
    இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே

    பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்
    பசிகண்டு வெகுண்டதால் பாரழிப்பேன் என்றாயே
    பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
    பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை யேற்றாயே

    அன்னைத் தமிழின் அக்கினிக் குஞ்சானாய்
    அமிழ்த மெனத்தமிழை அரியாசனம் வைத்தாய்
    அஞ்சாமைக் குணத்தை ஆளுமை ஆக்கினாய்
    அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய்

    முத்தமிழைப்  பாரதியுன் சொத்தாக ஆக்கினாய்
    முத்திரையாய் கவியுலகில் முன்வந்து நின்றாய்
    எத்திக்கும் உனைநினைக்க இவ்வுலகில் வாழ்ந்தாய்
    புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்

    Share
  • தமிழினைத் துறக்காத துறவி!

    தமிழினைத் துறக்காத துறவி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!

    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென!

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!

    பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புகளை
    பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
    பல்கலைக்கழகம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
    பாடமாய்ப் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர்!

    பேராசிரிராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆறாத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார்!

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகி
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

    Share
  • ஆடிமாதம் அம்மனின் மாதமாகும்!

    ஆடிமாதம் அம்மனின் மாதமாகும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                                         
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும்சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை,  சித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகி விட்ட நிலையில்மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமாமுடியவே முடியாது! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள்!

    ஆடி என்றவுடன் – ஆடிச்செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமிஎன்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும்மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும்சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது. ஆடி, புரட்டாசிமார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவாஆடிபுரட்டாசிமார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடுபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார். தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தை பித்ருக்குகளுக்கு வழி பாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறுமாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடிவரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கி சூரியன் பயணிக்கும் பொழுது வெம்பம் தணிந்து – காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக்காலம் தேவர்களுக்கு இராக்கால மாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்கால தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி இரவின் தொடக்கம். மார்கழி விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம். கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது. இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால்த்தானோ என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சு வதும்அம்மனுக்கு வைத்து வழிபடுவது கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா!

    ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே. அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய் கருதி போற்றி வழிபாடுகளில் ஈடுபடு வதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக்கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்குரியதாய் இருந்தாலும்பெரும்பாலன சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த்திருவிழாதெப்பத்திருவிழாதீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரி யாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடை பெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும், தையில் வருகின்ற அமாவாசையும், கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம்உத்தராயன புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்த்தான். சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்த்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்த்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினை பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்த்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்த்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக்குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி” என்னும் முதுமொழியும் பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள். அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்த்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்தியிரையில் பிரசவம் நடக்கும். சித்தியிரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதரணமாக சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம். வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் காலநிலை காரணமாக பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் ஆடிவேல் விழா அகத்தினில் அமர்ந்து விடும்!  எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரும் கட்டாயம் வந்து நிற்பார்.தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டுவருவதும் நாடிவரும் ஆடி அல்லவா !

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்த மானந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கல மான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம்! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனை போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழுவோம் வாருங்கள்.

    Share
  • மா​னிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே மருத்துவர்கள்!

    மா​னிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே மருத்துவர்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா   
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேடிக் கண்டு கொண்டேன் – திரு
    மாலொடு நான்முகனும்
    தேடுத் தேடொணா தேவனை யென்னுள்ளே
    தேடிக் கண்டு கொண்டேன்

    என்னும் திருமுறைப் பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே கண்டு கொண்டதாக உரைத்து நிற்கிறது. உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என்னதான் அவசியம் என்று எண்ணுகிறீர்களாகண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கிறோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படி எல்லாம்  நாங்கள்  நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன்வந்தாலும்கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே. கடவுளைக் காணமுடியுமாஎன்பது உலகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெரு வினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை “கடவுள் போல வந்தீர்கள்” என்று அழைப்பது நம்வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கைகொடுக்கும் செயலைக் கடவுளின் செயலாகக் கருதுகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட  சமூகத்தில் கடவுள் வடிவிலேயே  காணும் நிலையும் காணப்படுகிறது.  தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம்.

    கடவுளை நம்பாதவர்கூட தம்மை அறியாமலே “கடவுளே” என்று சொல்லு வதையும் காண்கிறோம். கடவுளுக்கென பல பெயர்கள் பல உருவங்கள் கொடுக்கப்பட்டாலும் “கடவுள் ஒருவரே” என்னும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதே ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட “கடவுளை இயற்கை வடிவில் காண்கிறார்கள்” என்பதும் நோக்கத்தக்க தாகும். அதுமட்டுமல்ல கடவுள் என்னும் பெயரை உச்சரிக்க விரும்பாதவர்கள் “எமக்கு மேற் பட்ட சக்தி” என்று அழைப்பதும் கருத்திருத்தக் கூடியதே.

    மனிதன் வாழுகின்ற இந்தப்பூமி இப்போது அவலத்தின் மடியில் அல்லற்பட்டு நிற்கிறது. ஆர்வருவார் காப்பாற்ற என்று அவலக்குரல் எழுப்புகிறது. சாதரண வாழ்க்கை சீர்குலைந்து நிற்கிறது. சட்டமா ஒழுங்காசமயமா கோவிலாஎன்றெல்லாம் எண்ணி நிற்கும் நிலையும் காணப்படுகிறது. இனத்துக் காய் சண்டைமொழிக்காகச் சண்டைமதத்துக்காய் சண்டைஎன்று சண்டை செய்த மனோபாவம் மங்கிப்போய் நிற்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்  உணர்வுடன் கலக்க ஆரம்பிக்கின்றது.  சாதிகள் பறக்கின்றன. தத்துவங்கள் பறக்கின்றன. ஏதுவரும் எனவறியா ஏக்கமே மிகுகிறது. போதிமரப் புத்தரும்சிலுவைதரும் கர்த்தரும்பிறை காட்டும் அல்லாவும்விடையேறும் பெருமானும்பள்ளி கொள்ளும் திருமாலும் எல்லாமே சரியென்னும் நிலையிப்போ எழுகிறது.

    எல்லாக் கடவுளும் எல்லா மதங்களும் இணைகின்ற புரட்சியைத்தான் இப்போது காணுகிறோம். இந்தப் புரட்சிக்கு வித்திட்டு சமத்துவத்தை சமநிலையை சமதர்மத்தை உருவாக்கியது கொடுமையான கொரனோ என்னும் நோயாகும்.

    இது ஏன் வந்ததுயார் பரப்பியதுஇதில் அரசியல் உண்டாபொருளாதார நோக்குண்டாஎன்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் விதண்டா வாதங்களையும் வெளிப்படுத்துவதில் காலத்தை கழிக்கிறார்கள். தொலைக்காட்சிகள்முகநூல்கள், கைப்பேசிகள் யாவும் சரியான வகையில் பயன்படாமல் போகும் நிலையும் காணப் படுகிறது.

    இப்படியான விடயங்களை எதற்காக இங்கு காட்டுகிறீர்கள் என்னும் வினா உங்கள் எல்லோர் உள்ளத்திலும் நிச்சயமாக எழாமல் இருக்கவே முடியாது! அவசியம் கருதியே சொல்லும் நிலை! அனைவரின் மனத்திலும் அமரவேண்டிய நிலை! அதனாலேயே இத்தனை விளக்கங்கள்!

    கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரோனா ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து!  குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.

    இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட இக்கட்டான  நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். கொரனோ காலத்தில்  வைத்தியர்களின் சேவையையும், மருத்துவத்தின் துணையினையும், போற்றாமல் இருக்கவே முடியாது! தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரனோவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்ந்திருக்கிறது.  வைத்தியர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவென்றே சொல்லலாம். தங்களின் சிக்கல்கள் தீர்ந்தால் போதும் என்று எண்ணுபவர்கள் –  மருத்துவர்கள் படுகின்ற மனவுளைச்சல்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்களா என்றால் – பெரும்பாலும் இல்லை.

    வைத்தியர்கள், தாதியர்கள் வானத்தால் வந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் எங்களை ஒத்தவர்களே. குடும்பம் அவர்களுக்கும் இருக்கிறது. அன்பான கணவன் ஆசையான குழந்தைஅன்பான மனைவி அணைத்திடக் குழந்தைஅப்பாஅம்மாசகோதரங்கள்என்று உறவுகளால் பிணைக்கப்பட்டே  இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கிறோமே தவிர – அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் களைப்பு இருக்கும். அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப்பதற்கு நாம் ஒருவரல்ல. எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங் கோணாமல் சினங்காட்டாமல் பசியை நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் வேலை செய்யவில்லை பணியாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.

    இரத்தமும்சதையும்மரணமும்ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட  ஓலமிட்டு நிற்பவரும்மரணவாயில் நிற்பவரும்தான் வந்து நிற்பார்கள். கார் இருந்தும்நல்ல வீடிருந்தும்நல்ல படுக்கை இருந்தும்அவர்களுக்கு நல்ல நித்திரைதான் வந்திடுமாஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா?

    நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது. இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்த பின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந்திடலாம். ஆனால் கொரனோவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ மருத்துவ மனையிலேயே இருக்கும் நிலை உருவாகியது.  அதனால்  பணிகூட அவர்களுக்குப்  பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் எட்ட நிற்கும் நிலை. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொடமுடியா நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டி லிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்க தாயில்லை. பார்க்கத்துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை.

    மூன்றுபிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரியவிருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வரமுடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது அடம் பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கை பேசியில் கதைக்கிறார்கள். காணொளியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டு வாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய் காணாமலே போய்விடுகிறாள். கட்டியகணவன் கதறி அழுகிறான். மருத்துவமாது மனிதம் காக்க தெய்வமாகிறாள்!

    இங்கிலாந்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டுபிள்ளைகளின் தந்தை. அர்ப் பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சகமருத்துவர்களால் பெருதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவிக் கொள்ளுகின்றார். இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும்புலமை பெற்றார். மருத்துவத்துக்கே தன்னையே கொடுத்தும் விட்டார். மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார்.

    வீடுசென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும் பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமாமனைவியுடன் குழந்தையுடன் கைபேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே!

    வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர் திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையை காணொளி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவமாது. தாயைக் கண்ட குழந்தை அழுகிறது. அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வரமுடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன்! இதுதான் மருத்துவர்களின் நிலை! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கிவிடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவாவிருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை! பற்றற்ற நிலை!  

    தன்கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தை கண்டதும் தற்கொலை முயற்சிக்கே பல தாதியர்கள் சென்று விடுகிறார்கள். பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள்மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொருவிதம்மக்கள் சேவை மகேசன் சேவை” இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மகான்களே மொழிந்திருக்கிறார்கள். மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று “கண் கண்ட தெய்வம்” ஆகின்றார்.

    விதண்டாவாதம் பேசுவதும்விஷமத்தனமாய் கருத்துகளைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும்நாட்டு நிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையின்மையினையே காட்டும். வீட்டுக்கே வரமுடியாமல் நாட்டினைக் காத்திட தம்வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். “மானிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே”  இவர்கள் என்பதை யாவரும் மனமிருத்தல் அவசியமாகும்.

    கடவுளைக் காண்பது என்பது அரிதினும் அரிது. கடவுள் எப்படி வருவார்? எப்போது வருவார்? அப்படிவரும் பொழுது அவரின் தோற்றம் எப்படி இருக்கும்? என்று அறிந்திடும் ஆவல் அனைவருக்கும் ஏற்படவே செய்யும். அப்படி ஆவலுடன் இருப்பவர்களே…. கடவுள் வேறெங்குமே இல்லை. மருத்துவ உலகில் மலர்ந்து நிற்கும் மருத்துவர்களே – கடவுளின் தோற்றமாய் வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனமாகும். மருத்துவர்கள் அனைவருமே ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களேயாவர். தான் படைத்த மனிதர்களுக்கு  உதவுவதற்காக கடவுள் கையில் எடுத்த வழிதான் மருத்துவமும், மருத்துவர்களும் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? எம்பெருமான் சிவனே மருத்துவம் பார்ப்பதற்கு வைத்தியராக வந்தார் என்று புராணங்கள் வாயிலாக அமையும் செய்தியும் இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். கடவுளே வைத்தியர் உருவினையே அகங்கொண்டார் என்பதிலிருந்து மருத்துவர்களின் உன்னதம் வெளிச்சமாய் தெரிகிறதல்லவா? வைத்திய நாதன், வைத்தீஸ்வரன், என்பதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களாய் அமைந்திருப்பதையும் நாம் அகமிருத்துதல் அவசியமாகும்.

    Share
  • சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள்!

    சேக்கிழார் பெருமானின் சிந்தனைகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    “இலக்கியம் என்றால் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது” என்பதுதான் அதற்கான பொருத்தமான பொருளாகியிருக்கிறது. அந்த இலக்கு எது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்தான் மிகவும் முக்கிய நிலையாகும். கற்பவர்க்கு இன்பத்தைப் பயப்பதுடன் அவர்களின் வாழ்வைத் திருத்திச் செம்மை செய்வதாய் இருக்க வேண்டும் என்னும் ஒரு கருத்தும், படிக்கும் பொழுதே இன்பத்தைப் பயப்பதைத் தவிர வெறொன்றுமே இல்லை என்றும், வேறு பயனை விளைவிக்கவும் கூடாது என்னும் கருத்தும் இருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறு காணப்படும் கருத்தில் – முதலாவது கருத்தினையே தமிழ் இலக்கியங்களும், அதனைப் படைத்த ஆளுமைகளும் அகமிருத்திக் கொண்டார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இந்த நோக்கினை நன்றாகவே தனது குறிக்கோளாக்கிக் கொண்டவர்தான் “சேக்கிழார்” அவர்கள். இவரை பல கோணங்களில் பார்ப்பதும் பொருத்தமாய் அமையுமென்று கருதுகிறேன். அந்த வகையில் இவரின் சிறப்புக்கான காரணந்தான் என்னவாக இருக்க முடியும்?

    பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட” பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா? புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர் ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா? புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாராஅல்லது பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாராஎன்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

    சேக்கிழார் வாழ்ந்த காலம் சோழப்பெருமன்னர்களின் ஆட்சிக் காலமாகும். சோழர்கள் படைநடத்திப் பெரும் வெற்றிகளைக் குவித்தார்கள். நாடு செல்வத்தில் சிறப்புற்றது. அரசர்களின் புகழ் பாடுவதிலேயே அனைவரும் இருக்கும் நிலையும் காணப்பட்டது. அப்படியான வேளையில் சேக்கிழார் சோழ அரசபையில் பொறுப்புவாய்ந்த முதல் அமைச்சராய் அமர்ந்திருக்கின்றார். வெற்றிச் செருக்கென்பது வீழ்ச்சிக்கே இட்டுச் செல்ல வல்லது என்பதை, வெற்றிக் களிப்பில் இருக்கும் எவருமே உணர்ந்திட மாட்டார்கள். மனம்போன போக்கில் மன்னர்கள் போகத்துடிப்பார்கள். மனத்தின் வழியே போய்க்கொண்டிருந்தால் முடிவில் வெற்றி என்பது வீழ்ச்சிக்கே வழிகோலியே விடும். அதனால் மனத்தை நல்வழியில் செலுத்தினால் நாடும் சிறக்கும். நாட்டு மக்களும் சிறப்பர். மன்னனும் வாழ்த்தப்படுவான் என்பதை – அமைச்சராக இருந்த சேக்கிழார் எண்ணிப் பார்க்கிறார்.

    இந்த எண்ணத்தினால், பிற்காலச் சோழமன்னரது போக்கை சேக்கிழார் விரும்பவில்லை. அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்த்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம் மாறமக்கள் விழிப்புப்பெறஅவர்கையாண்ட வழிதான்— ஆண்டவன் அடியாரை அறிமுகப்படுத்தும் அதி உன்னத பணியாக அமைந்தது. அடியார்கள் ஆண்டவனைத் தவிர வேறெதையும் அகமிருத்தாதவர்கள். அவர்களின் குறிக்கோள் என்றுமே உயரிய அந்தப் பரம் பொருள் பற்றியதாகவே அமைந்திருந்தது. அங்கே சிற்றின்பத்துக்கு இடமே இல்லை. பேரின்பம் மட்டுமே பேசுபொருளாக இருந்தது எனலாம். வெற்றிக் களிப்பில் திளைத்த சோழ மன்னன் இவ்வுலக இன்பத்தை எடுத்து வழங்கி நின்ற சீவக சிந்தாமணியிலே மூழ்கிக்கிடந்தான். இந்த நிலை நீடித்தால் அது நல்விளைவினை நல்காது என்பதை முதல மைச்சராய் இருந்த சேக்கிழார் மனஞ் சொல்லியது. இதனால் மன்னனை மடை மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதுவே காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கருதினார். அந்தக் கருத்தின் பயனாக மலர் ந்துதான் பெரியபுராணம் என்னும் பக்திப் பொக்கிஷம் எனலாம்.

    எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி இரண்டுந்தான் சேக்கிழார் மனத்தில் அமர்ந்து கொண்ட மிகவும் சிறந்த கருக்கள் எனலாம். இந்தக்கருக்களை மையப்படுத்தி, அரசனும் உய்ய வேண்டும்,  மக்களும் உய்ய வேண்டும் என்னும் , வாழ்வியலும் உய்ய வேண்டும், என்னும் நோக்கில்தான் பெரியபுராணம் வந்து வாய்க்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். அடியார்கள் பலரின் ஆன்மீகமும், அவர்களின் அகத்தின் பாங்கும் வெளிப்படும் வகையில் பெரிய புராணத்தை அமைத்திட அவர் கொண்ட முக்கிய நோக்கம் – உண்மையான இன்பம் என்றால் என்னவென்று அறியாமல் மனத்தை அலைக்கழித்து நிற்கும் சோழ மன்னன், உண்மையான இன்பத்தை, நிலையான இன்பத்தை அறிய வேண்டும், அதன் வழியில் அவன் பயணப்படல் வேண்டும் என்பதற்கேயாம்.  “குடிஉயரக் கோனுயர்வான் ” என்பதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால்கோன் — அதாவது அரசர்களை உயிர் ப்பூண்டவேண்டும் என எண்ணினார். அதனால் மன்னர்மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச்சிறந் தவழி என்று அதனை மையமாகக் கொண்டுதான் பக்திச்சுவை சொட்டச் சொட்ட பெரியபுராணத்தை ஒரு காவியமாக்கிட எண்ணினார். ஆண்டவனின் மேல் அளவிட முடியாத நம்பிக்கை கொண்டவர் சேக்கிழார் அவர்கள். அந்த ஆண்டவனையே மனமெண்ணி அரசனை அணுகினார். அரசனின் கையிலிருந்த சீவகசிந் தாமணி எந்தபயனுமே நல்காது, அதற்குப் பதிலாக இதனை நீங்கள் அறிந்தால் எல்லாமே வாய்க்கும் என்று நயமாக எடுத்துரைத்தார். ஆண்டவன் அனுக்கிரகிரகம் வாய்க்கப் பெற்ற சேக்கிழார் வார்த்தைகள் அரசன் செவிகளில் புகுந்து அவன் அகத்தினையும் தொட்டு நின்றது. ஆண்டவன் அடியார் பெருமைகளை அவனிடம் சொன்னார். அரசனும் மனநிலை தெளிந்தவனாய் “உங்களின் உள்ளத்தில் உதித்த கருக்களைப் பாடுக எனப்பணித்தான்.  “அரசே அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு என்னால் அடியார் வரலாற்றைப் பாட இயலாது. ஆகையால் ஆடம்பரமும் வேண்டாம்,. அரச போகமும் வேண்டாம், அமைச்சுப் பதவியையும் துறக்கிறேன்” என்று கூறி விட்டு  ஆண்டவன் சன்னிதானத்தை அடைந்து அங்குதான் தன்னுடை அரிய பணியை ஆரம்பிக்கின்றார். “உலகெலாம்” என்னும் அடியானது அசரீரியாய் அமைந்திட பக்திப்பனு வலாய் பெரியபுராணம் மாநிலம் செழிக்க, மன்னவன் பயனுற , மக்கள் உய்திபெற்றிட வந்தமைகிறது.                             

    அமைச்சராய் இருந்த  சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப்போல கவிபாடும் ஆற்றல் அவரிடம் வாய்த்திருந்தது. அவரும் கம்பர் வழியில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளை கம்பரா மாயணத்தைக்கூட விஞ்சியியும் இருந்திருக்க வாய்ப்பு வாய்த்தாலும் வாய்த்திருக்கும் அல்லவா? ஆனால் சேக்கிழாரின் நோக்கம் அப்படியானதாக இருக்கவே இல்லை. அதனால்த்தான் அடியார்கள் வரலாற்றைத் தேடிப் பிடித்திருக்கிறார். தேடிப் பிடித்ததோடு அமையாமல்  அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்தும் தன் குறிக்கோளில் வெற்றியும் பெற்றவராக ஆகியும் விடுகிறார்.     

    சேக்கிழார் காவியத்தின் பாடுபொருளே  வித்தியாசமானதாகும். இளங்கோ அடிகள் சிலம்பினைப் பாட விளைந்த வேளை  உயர்திணை அல்லா ஒன்றை பாடுபொருளாகக் கொண்டிருந்தார். அதனைத் தனது மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் “தொண்டையே” கருப்பொருளாக்கி பெரியபுராணத்தை காவியமாகப் படைத்து விடுவதைக் காண்கின்றோம். அறுபத்து மூன்று அடியவர் கதைகளை வைத்துக் கொண்டு ஒருகாவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல. இதனை நன்கு மனத்திற் கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணைப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான் – அடியார்கள் எவ்வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டு மனப்பாங்கு இருப்பதை அவரால் உணர்ந்து  கொள்ள முடிந்தது எனலாம்.எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்குப் பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண்டை மையமாக வைத்து தொண்டர் பெருமையை பறைசாற்றும் காவியத்தை எழிதாகப் புனைந்து எமக்காகவே வழங்கியிருக்கிறார். இது சேக்கிழாரின் பெருமை என்றுதானே சொல்ல வேண்டும்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணத்தை அமைத்திட  சேக்கிழாருக்கு பெரிதும் கைகொடுத்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.  அவர்களின் பேருதவியைப் பெற்று நின்ற சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அடியார்கள் பற்றிய விஷயங்களை யெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுப்பதில் அயராது நிற்கிறார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள் தோறும் சென்று பல வரலாற்றுத் தகவல்களையும் கல்வெட்டுப் போன்ற வற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார் என்பதும் கவனத்துக் குரியதாகும். இதனால் அவரின் காவிய மான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்ற நிலைக்கு வந்தமைந்தது. இஃது  அவருக்கு உயர்வையும் சிறப்பையும் அளிக்கத்தானே செய்யும் !

    பக்தியை ஊட்டுவதற்குப் பாடப்பட்டதுதான் பெரியபுராணம். எனினும்  சேக்கிழார்  அதன் ஊடாக பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார். இது அவரின் பெரும் சமூக அக்கறையினையே காட்டி நிற்கிறது எனலாம். பலவிஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்த்தான் சோழமன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கி பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடுகளை பெரிய புராணத்தில் கொண்டுவந்து நிறுத்துவதன் மூலம் அவர் தனது  சமூக அக்கறையினை சொல்லியும் நிற்கிறார் எனலாம்.

    பெரியபுராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்களைப் பார்க்கின்ற பொழுது அவர்கள் யாவருமே வெவ் வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அந்தணர் இருக்கிறார். அரசர், இருக்கிறார். புலையர், வேட்டுவர், மீன்பிடிகாரர், வண்ணார், குயவர், மரமேறுபவர்கள், செக்கார், ஆதிசைவர், வேளாளர், இப்படிப்பல சாதிப்பிரி வினரும் இருக்கிறார்கள். இப்படியானார்களையெல்லாம் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்ககளை வணங்கத்தக்க நிலைக்கு கொண்டு வந்தமை யினை என்ன வென்று நோக்குவது? இதனைச் சேக்கிழாரின் புரட்சி என்பதா அல்லது அவருக்கு வாய்த்திட்ட சமூக அக்கறை என்பதா அல்லது அளவுக்கு மிஞ்சிய தனித் துணிச்சல் என்பதா? ஆணென்றோ, பெண் ணென்றோ பார்க்கவில்லை. அவர்களின், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி, எதையுமே அவர் கருத்தில் கொள்ளவும் இல்லை. இவர்கள் அனைவரையும்  சமயம் என்னும் வரம்புக்குள் நிறுத்தி – இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று காட்டி இருக்கும் சேக்கிழாரின் துணிச்சலைக் கட்டாயம் வியந்து பார்க்கவே வேண்டியிருக்கிறது.

    சமூகத்தில் சாதிக்கட்டுப்பாடு என்பது மிகவும் இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக வருகின்ற அடியார்களின் வரலாற்றைக் கொண்டு அறிந்திட முடிகிறது. அது மட்டுமல்ல சமூதாயக் கட்டுப்பாடுகள் இறுக்கமாய் இருந்தமையால் பலர் ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதும், வணங்குவதும் கூட இயலாத ஒரு நிலை காணப்பட்டதையும் அறிந்திடக் கூடியதாகவும் இருக்கிறது. இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக்கருதியிருக்கிறார். இதனால் தமது காவியத்தில் இடம் பெறுகின்ற அறுபத்து மூவரையும் அடியார்களாக்கி விடுகின்றார். பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம்மனத்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டு கொள்ள முடிகிறது.  “ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அனைவரதும் அகத்தினிலும் அமர்த்திட வேண்டும் என்னும் உயரிய, புரட்சிகரமான, சிந்தனையால் சேக்கிழார் என்னும் தமிழ்ப் புலவர் சிறந் தோங்கப் பார்க்கப்டுகிறார் எனலாம்.  ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள் தோறும் சிலை வடிவில் உள்ளே வைத்து பூசனைகள் செய்தும், பெருவிழாஎடுத்தும், குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால்-அந்தப்பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.

    சரித்திரம் என்பது வேறு. சம்பவம் என்பது வேறு.சம்பவங்களைச் சரித்திரமாக்கிய நிலையினை பெரிய புராணம் வாயிலாக சேக்கிழார் செய்திருக்கிறார். சமயத் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும், ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றினையும், மொழிபற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன் முதாலாகப் பதிவு செய்து வித்தியாசமான ஒரு பார்வையினை சேக்கிழார் காட்டியிருக்கிறார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது.

    வீரம் என்றால் என்ன என்பதற்கு ஒரு புது விளக்கத்தைச் சேக்கிழார் காட்டுகிறார். வீரம் எனும் பொழுது – உடலில் மிக்க வலிமை கொண்டிருப்பதையும், போர்களங்கள் பலவற்றைக் கண்டு அங்கு பல வெற்றிகளைக் குவிப்பதையுமே சொல்லுவதுதான் வழக்கமாகிவிட்டது. ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும், வீரர்களுக்கும், வித்தியாசமான விளக்கத்தை அளித்து  வீரம் என்பதற்கே புதுமையான கருத்தினை வெளிப்படுத்தி யாவரையும் வியக்கவே வைக்கின்றார் முதலமைச்சராக பதவியிலிமர்ந்து பல போர்களைக் கண்டிருக்கும் அனுபவம் அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனாலும் அவற்றில் ஈடுபட்டவர்களை வீரர் என்றோ அவர்கள் பெற்றவை எல்லாமே  வெற்றிதான்  என்றோ அவரகம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் என்று வித்தியாசமாய் அவர் உணர்ந்து கொண்டார்.

    இந்த வித்தியாசமான சிந்தினையினை வெளிப்படுத்திக் காட்டிட – தன்னுடைய காவியத்தில் ஒரு அடியாரைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அவர்தான் திருநீலகண்ட நாயனார். திருநீலகண்டரின் வரலாற்றில் அவரிடம் காணப்படும் புலனடக்கத்தைக் காட்டி – அதற்கான ஒரு புது விளக்கத்தை வீரமாய் பார்க்கும் சேக்கிழார் பார்வை மிகவும் புதுமையான பார்வை என்றே எண்ணிட வைக்கிறது. இந்திரியங்களை வெல்லுவதுதான் உண்மையான வெற்றி. இந்திரியங்களை யாரொருவர் வெற்றி கொள்ளுகிறாரோ அவரே பகைகள் அற்றவராய் இருப்பார்கள் என்பதை உள்ளத்தில் இருத்திட சேக்கிழார் எண்ணிய பாங்கினை மெச்சாமல் இருந்திடவே இயலாதிருக்கிறது. தொண்டுள்ளம் வருவதற்கு இத்தகைய வெற்றி என்பதே இன்றியமையாததது என்பதுதான் சேக்கிழாரின் உறுதியான நிலையாகும். இதுவேதான் வீரம் என்றும் அதற்கான வெற்றி என்றும் ஒரு புதிய விளக்கத்தை சேக்கிழார் தருகின்ற நிலையில் அவர் புதுமையை,   புர ட்சியை, விதைப்பவராகவே வந்து நிற்கிறார். 

    “வீரம் என்னால் விளம்பும் தகையதோ என்னும் சேக்கிழார் வாக்கினை நோக்குதல் மிகவும் அவசிய மானது. பற்றை நீக்கி குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் நிலை யினையே தன்னுடைய நோக்கினுக்கான விளக்கமாக்கி இருக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அதேவேளை “ஈர அன் பினர் யாதுங் குறைவிலார்  வீரம் என்னால் விளம்பும் தகையதோ” என்று மொழிந்து அதற்கு உரிய சான்றாக சிறுத்தொண்டர், எறிபத்தர், வீரம்படைத் தவரானாலும் ஈரமும் கொண்டவர்கள் என்று தனது பார்வையின் விசாலத்தை பரவவிடுகிறார். நாவுக்கரசர் வீரத்தை,  குங்கி லியக்கலையர், கண்ணப்பர், வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது சேக்கிழாரின் புதுச்சிந்தனையை வெளிப்படுத்துவதாக தெரிகிறது அல்லவா? வீரத்துக்கு இவ்வ ளவு விளக்கமா என எண்ணத்தோன்றுகிறதா?  வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பது தான் இங்கு சொல்லப்படும் முக்கிய  சிந்தனை எனலாம். இதனை “ஈர அன்பினர் யாதும் குறையிலார்” என்று சேக்கிழார் காட்டுவதை மனமிருத்தல் வேண்டும்.

    பொதுவாக இலக்கியங்களில் பெண்களை அதாவது சமகால இலக்கியங்களில். அவள் வந்தாள் என்று விழிக்கப்பட்ட நிலையில் அதனைப் புறந்தள்ளி  பெண்களுக்கு மரியாதை கொடுத்து அவர்” என்றும் “வந்தார்” என்றும் விழிக்கும் வண்ணம் சேக்கிழார் பெரியபுராணத்தில் அமைத்திருக்கும் பாங்கும் அவரின் புதிய சிந்தனையினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    இலக்கியத்தில் பல சுவைகள் பாடப்படுகின்றன. எட்டுச் சுவைகள் என்பதுதான் வழக்கமாய் இருக்கிறது. ஆனால் சேக்கிழாரே புதுமையாய் சிந்திந்து ஒரு சுவையினைத் தொட்டிருக்கிறார். அதுதான் “பக்திச் சுவை”. பக்திச்சுவையினைப் பக்குவமாய் கையாண்ட பெரும் தமிழ் புலவராய் சேக்கிழாரே விளங்குகிறார். அவருக்கு முன்னோ அல்லது பின்னோ யாருமே இல்லை என்னும் அளவுக்கு பக்திச்சுவையினைக் கையாண்டு காவியம் படைத்தவர் என்னும் புத்திலக்கியச் சிற்பியாகவும் சேக்கிழாரே விளங்குகிறார் எனபதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். பக்தியினைக் காட்டும் வகையிலும் அவரது அணுகுமுறை புதுமையாய் இருப்பதையும் பெரியபுராணத்தால் அறிந்திட முடிகிறது.இதனால்த்தான் “பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ” என்று ஏற்றி போற்றும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    அன்பினைக் காட்டும் விதம், அறத்தினைக் காட்டும் விதம், அடியாரைக் காட்டும் விதம்,  கற்பனையினைப் புகுத்தும் விதம், அனைத்திலும் புதுமையை, புரட்சியையே காட்ட விளைகிறார் சேக்கிழார் எனலாம். உவ மையிலாக் கலைஞானம் உணர் வரிய மெஞ்ஞானம் அத்தனையையும் காட்டுகிறார். அப்படிக் காட்டும் வேளை பழமைவாதியாக ஆகிவிடாமல் புதுமையினைப், புரட்சியினை வெளிக்காட்டும் புதுமைப் புலவனாக, தெய்வீகப் புலவனாகவே தலை நிமிர்ந்து நிற்கிறார் என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

                  என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
                  ஒன்றுகாதலித்து உள்ளமும் ஓங்கிட
                  மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
                  நின்றதெங்கும் நிலவி உலகெலாம்

    Share