Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!

    பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள்  தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    புதுமைக்கவிஞர், புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான்  பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும், மானமும், ரோஷமும், உணர்ச்சியும், அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும்  அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    எந்த நாடென்றாலும் எந்த மொழியென்றாலும் காலத்தின் போக்குக்கு இணங்கவே இலக்கியம் அமைகிறது எனலாம். 19-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியத்துக்கும் 20-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியக்கியத்துக்கும் பல நிலைகளில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிகிறது எனலாம். முந்தைய நூற்றாண்டு இலக்கியம் வரட்சியைக் காட்ட பின்னர்வந்த நூற்றாண்டு இலக்கியப் போக்கு வளமுள்ளதாக அமைந்ததற்கு காலமே காரணமெனலாம். இலக்கியம் என்பது காலத்தின் கருத்தாகாவே மலர்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அமிசம் ஆகும்.

    அரசர்களும், பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை பொதுமக்கள் பெறும் நிலை இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட காரணத்தால் இலக்கியமும் அதன் படைப்புகளும் பொதுமக்களை மையப்படுத்தியே அமைவதைக் கண்டு கொள்ளுகிறோம். பொதுமக்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களது முன்னேற்றத்துக்கு குறுக்காக நிற்கும் சாதிக் கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு, என்பவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதுப்பாதையில் பயணிக்கும் இலக்கியம் பழைய இலக்கிய மரபுகளைவிட்டு விடுதலை பெறவேண்டியதாயிற்று.அந்த விடுதலையை இக்கால இலக்கியத்துக்கு அளித்தவராக பாரதியார் விளங்குகிறார் எனலாம். பழைய இலக்கிய மரபுகளை விடுதலை அடையச் செய்த பாரதி பழமையின் சிறப்பினை விட்டுக் கொடுத்தாரில்லை என்பது முக்கியமாகும். பழமையின் சிறப்பினை பாரதியார் எடுத்துப்பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் – இந்தியரின் – பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    பாரதநாட்டு பழைய நாகரிகமும் மேனாட்டு புதிய நாகரிகமும் இந்தியாவில் சங்கமித்துக் கொண்டிருந்த காலத்தில் பிறந்தவர்தான் பாரதியார். இதனால் மேல்நாட்டு நாகரிகத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்களை தமிழ் மக்களும் ஏற்பது நல்லது என்னும் கருத்து பாராதியார் உள்ளத்தில் ஏற்படலாயிற்று. அதேவேளை மொழி, தமிழ் இனம், பாரதநாடு, பெண்ணுரிமை, சாதிபற்றிய ஏற்றத்தாழ்வு, முரண்பாடுகள், வறுமையின் நிலை, இவை பற்றிய கருத்துக்கள் அவரின் உள்ளத்தில் உரம்பெற்றும் இருந்தன எனலாம். இந்த நிலையில் பாரதியாரிடம் இருந்து வெளிவந்த படைப்புகளும் பன்முக நோக்குடையன வாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத்தக்கதே.

    பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரிந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன.தெய்வத்தைப் பாடுவார். தேயத்தைப் பாடுவார். சாதியைப் பாடுவார். சன்மார்க்கத்தைப் பாடுவார்.பெண்மையைப் பாடுவார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடுவார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடுவார்.பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடினார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழுதினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பயணம் செய்தார்.அத்தோடு நிற்காமல் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதித்தார்.இப்படிப் பார்க்கையில் பாரதியையும் அவரின் படைப்புக்களையும் பன்முக நோக்கில்த்தான் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது எனலாம்.

    தேசிய கீதங்கள், பக்திப் பாடல்கள், ஞானப்பாடல்கள், பல்வகைப் பாடல்கள், தனிப் பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலிசபதம், குயில்ப் பாட்டு, வசன கவிதை , புதிய பாடல்கள், யாவும் பாரதியார் எமக்களித்த சொத்துக்கள் எனலாம். இவைகள் ஒவ்வொன்றுமே பாரதியாரை யாரென்று அடையாளப் படுத்தி நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம். பாரதியார் பழமையைப் போற்றினார். முன்னோர்களை மதித்தார். கம்பனை , வள்ளுவனை , இளங்கோவை , உயரிடத்தில் வைத்துப் பார்க்கிறார்.  வள்ளுவன் தன்னை உலகினிக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவை போற்றுகிறார். கம்பனைப் போற்றுகிறார். ஆனால் அவர்கள் போல் பாடாமல் அவர்கள் போல் நில்லாமல் அதேவேளை அவர்களை மனமிருத்தி அவர்களை வழிகாட்டி என எண்ணி தன்னிலையை வகுத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ப தனது படைப்புக்களை அளித்திருப்பதால் பாரதியார் பெரும்புலவராய் மதிக்கப் படுகிறார் எனலாம். பாடுவதில் புதுமை. கையாளும் சொற்களில் புதுமை. எடுத்தாளும் உவமைகளில் புதுமை. சொல்லும் பாவடிவங்களில் புதுமை.இவைகள் பாரதியின் படைப்புகளின் சிறப்புகள் எனலாம்.

    பாரதியின் படைப்புகள் பலதிறப்பட்டனவாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொருவகையில் சிறப்பினை உள்ளடக்கி காட்டுகின்றன.ஒவ்வொரு படைப்பினையும் பன்முக நோக்கில் நோக்கினால் இக்கட்டுரை பெருநூலாகி விடும் என்பதனால் எடுத்துக் கூறக்கூடிய விடயங்களை மட்டும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.பாரதியின் படைப்புகளை நோக்குவதற்கு முன்னர் அவருக்கு முன்னிருந்த தமிழ்க் கவிதைகளை படைப்புக்களை நோக்குதல் வேண்டும். பாரதியின் படைப்புக்களை நோக்கும்வேளை பாரதிக்குமுன் பாரதிக்குப் பின் என்று வகுத்தல் சிறப்பாகும்.பாரதிக்கு முன் ஆசிரியப்பாக்கள், வெண்பாக்கள், செல்வாக்குற்று இருந்தன.பின் விருத்தம் வந்து நின்றது.இவை பாரதியின் முன் இருந்த நிலை. பாரதிகாலத்தில் கண்ணிவகைகள் கரைபுரண்டோடிய காலம் எனலாம். சிந்தும் பாரதியின் சொந்தமாகிக்கிடந்தது.பாரதியின் பின் பல கவிஞர்கள் பாரதியைப் பின்பற்றி பாரதிவழி சென்றார்கள். பாரதி தொடக்கிய புதுக்கவிதை , வசன கவிதை , இன்று பலராலும் பின்பற்றப் படுகிறது என்பதும் பாரதியின் படைப்புத் திறனின் விளைவு எனலாம்.

    பாரதியாரின் ஆளுமையால் பலபடைப்புகள் வெளிவந்தாலும் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு , குயில்ப்பாட்டு , பாரதி அறுபத்தாறு , விநாயகர் நான்மணிமாலை , வேதாந்தப் பாடல்கள் , தோத்திரப்பாடல்கள் , ஆத்திசூடி , முரசு , பாப்பாப்பாட்டு , சமூகம் , வசனகவிதை  யாவராலும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்த படைப்புகளாகி நிற்கின்றன. இப்படைப்புகள் வழியே இதுவரை தமிழில் இல்லாத வடிவிலும் பொருளிலும் பல புதிய இலக்கிய வகைகளைப் பாரதி பெற்றெடுத்து வழங்குகிறார் எனலாம்.பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் ஏக்கம், கோபம், ஆக்ரோஷம்,கேலி , கிண்டல், அறிவுரை ஆவேசம் அனைத்தையும் காணுகிறோம். ” என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் – என்றெம தன்னைகை விலங்குகள் போகும் ” என்று ஏங்கிய ஏக்கம் தீர அடிமைத் தளையிலே வீழ்ந்து கிடக்கின்ற பாரதத்தாயினை விடுவிக்க மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏக்கமே பாஞ்சாலி சபதமாய் பாரதியாரால் படைக்கப்பட்டது.பாரதியின் உணர்ச்சியின் வடிவமாய் அமைந்த படைப்பே பாஞ்சாலி சபதமாகும். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பக் கூடிய மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருபவர் நம் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவபவர் ஆகின்றார். ஓரிரண்டு வருஷம் நூல் பழக்கம் உடைய தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காப்பியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமல் எழுதுதல் வேண்டும்.தமிழ் சாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே இத்தொழிலில் என்னைத் தூண்டினாள்” என்று பாரதியாரே கூறுவதிலிருந்து அவரின் பாஞ்சாலி சபதம் என்னும் படைப்பின் உன்னதம் புலப்பட்டு நிற்கிறதல்லவா?

    தமிழரின் அரசியல்- பொருளியல்- நோக்கிலும் இந்த நூற்றாண்டின் வரலாற்று நோக்கிலும் சிறப்பான இடம்பெறும் கவிதைகள் பாரதியின் தேசீய கீதத்தினுள்ளும் சுயசரிதையுள்ளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். கவிதாதேவி அருள் வேண்டல், காலனுக்குரைத்தல், க தற்பாட்டுக்கள், அந்திப்பொழுது, வேய்ங்குழல், வள்ளிப்பாட்டு, அம்மாக்கண்ணு பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, என்று பல படைப்புகள் பல்சுவைதரும் வகையில் பாரதியின் சிந்தனையாக வந்தமைகின்றன.

    பாரதியின் படைப்புகளை நோக்கும்பொழுது புரட்சிவழிப் பொதுமையை வரவேற்றமையும், வடிவத்தில் புதுக்கவிதை என்னும் இலக்கிய வகைக்கு வித்திட்டமையையும் காணமுடிகிறது.பாரதியார் படைப்புகளில் சமதர்மவாதக் கருத்துகளும் கம்யூனிஸ வாதிகளும் வரவேற்கப்படும் அதே வேளை கடவுள் பற்றியும் பாடுகிறார். தெய்வத்தை முழுசாகவே நம்புகின்றார். இவை இரண்டும் முரண்பட்டு இருந்தாலும் இப்படிப் பாரதியாரின் படைப்புகள் பல நோக்கில் அமைந்தமைக்கு அக்கால சூழலும் அக்கால அரசியல் தலைவர் களுமே பாரதியாரின் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் எனலாம். விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் தெய்வபக்தியில் திளைத்தவர் களாக விளங்கியதால் பாரதியாரின் சிந்தனையின் அவரின் நோக்காய் படைப்புகள் மூலமாய் வெளிப்பட்டது எனலாம்.

    பாரதியால் படைக்கப்பட்ட உரைநடைப் படைப்புகளை நோக்கும் பொழுது தருக்க முறை, திறனாய்வு முறை, வருணனை முறை, விளக்கமுறை, எடுத்துரை முறை, சொற்பொழுவு முறை, தத்துவ முறை, எள்ளல் முறை, என்னும் பன்னோக்கினைக் கண்டு தெளியலாம். பாரதி என்னும் கவிஞன் முரண்பாடுகள் உள்ளவனாய் படைப்புகள் மூலம் பார்க்க முடிகிறது. ஆங்கிலக் கல்வியை வெறுக்கிறான். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறான். ஆனால் ஆங்கிலக்கவி ஷெல்லியை மனமிருத்தி “ஷெல்லிதாசன்” என்ன்னும் புனை பெயரில் பாப்புனைகிறான்.

    தெய்வத்தை நம்புகிறார். பராசக்தியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியிடம் வேண்டுகிறார். ஆனால் சாத்திரங்கள் எனக்கூறி சமூகநீதிக்கு எதிராய் வருவதை மூர்க்கமாய் எதிர்க்கிறார். “சாத்திரங்கள் ஒன்றுங்காணார் – பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே” என்றும், “உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்” “பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்” என்றும் “சூத்திரனுக்கொரு நீதி – தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லுமாயின் – அது சாத்திரம் மன்று சதியென்று கண்டோம்” என்று பாரதியார் நிற்கும் நிலை அவரின் படைப்புகளின் பன்முகமாய் தெரிகிறது அல்லவா?

    பாரதியாரின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கினால் அங்கு பன்முகங்கள் தென்படுவதைக் கண்டுதெளியலாம். அவரின் படைப்புகள் பன்முக நோக்கினையே பறைசாற்றி நிற்கின்றன என்பதை நுணுகிப் பார்க்கும் வேளை கண்டு கொள்ளலாம். கடவுளரைப் பாடுகிறார். பராசக்தியின் உபாசனா தெய்வமாகவே தெரிகிறது. பாரதியாருக்கு முன்னர்வந்த பக்திப்பாடல்கள் சிவலோகம் பற்றியும் வைகுந்தம் பற்றியும் காட்டி நிற்க பாரதியார் படைப்பின் நோக்கு வேறுவிதமாய் அமைகிறது. தானும் நலமுற வாழவேண்டும் நாட்டு மக்களும் நலமுற வாழவேண்டும். அதற்காகவே தெய்வத்திடம் முறையிடும் புதுமை நோக்கு இப்படைப்பின் பால் வெளிப்பட்டு நிற்கிறது. “எண்ணில்லாத பொருட்குவைதானும் ஏற்றமும் புவியாட்சியும் தருவன் இன்றென தன்னையென் காளி மண்ணில் யார்க்குந் துயரின்றிச் செய்வேன், வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்று பாரதியாரின் வேண்டுகோளைக் காட்டி நிற்கும் இப்படைப்பின் நோக்கு பரந்து பட்டதாய் சுயநலம் அற்றதாய் விளங்குவது புலப்பட்டு நிற்கிறதல்லவா?

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கை பாரதியாரின் படைப்புகள் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் கண்டு பெருமிதம் கொள்ள வேண்டும். “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சம் இல்லை” இது நம்பிக்கையின் உச்சம்! “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா – தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு தீங்கும் வரமாட்டாது பாப்பா” உற்சாகமூட்டும் உரம்! “ரெளத்திரம் பழகு” , “தையலை உயர்வு செய்”, “தொன்மைக்கு அஞ்சேல் , “போர்த்தொழில் பழகு”, நேர்படப்பேசு” , “வெடிப்புறப்புறப் பேசு”, இவை ஊக்க மருந்தாகும். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா” இவ்வாழ்வினை அனுபவித்துவிடு என்று காட்டும் பெருவெளிச்சம்.

    பாட்டுப்பாடியதும் கட்டுரை கதை எழுதியதும் ஊடகத்துறையில் இருந்ததும் என்றெல்லாம் பாரதியின் படைப்பின் பன்முகம் வெளிப்பட்டாலும் அத்துடன் அச்சிந்தனை நின்றுவிடவில்லை. தமிழ் அறிவியலுடன் இணைதல் வேண்டும் என்னும் பன்முக நோக்கும் புலப்பட்டு நிற்கிறது. “புத்தம் புதிய கலைகள் பஞ்சப் பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் – மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”, இங்கு பாரதியின் படைப்பின் வாயிலாக தெரிகின்ற பன்முகங்கள்தான் பாரதியாரையும் அவரது படைப்புகளையும் இன்றுவரை உயர்வுடன் பார்க்க வைக்கிறது எனலாம்.

    Share
  • முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்!

    முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து – தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது. அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று – பண்டிதராய்கல்லூரி ஆசிரியராய், அதிபராய்தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம். மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து –

    ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல  உற்றுப் பெற்ற
    பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல”

    என்னும் மனப்பாங்கினைப் பெற்று – என்கடன் பணி செய்து கிடப்பதே‘ என்னும் விசாலித்த நோக்குடன்இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி – விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். 

    காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும்என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்   என்றால் – அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவறத்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம். 1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் உள்ளத்தாலும்.  தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து – துறவியாய்ப் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

    வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
    வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
    வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

    என்று சிந்திக்கும் நிலையினை அடைந்த காலம்தான் துறவுக்காலம் என்பதை முத்தமிழ் வித்தகரின் வார்த்தைகளே சான்று பகர்வதாய் இருக்கிறதல்லவா ?

    மயிவாகனன் விரும்பி இருந்தால் – அவருக்கு வாய்த்த வாய்ப்புகளைப் பயனாக்கி இல்லறத்தில் இணைந்து இகபோக இன்பங்களை இஷ்டமுடன் ஏற்றிருக்கலாம் அல்லவாஆனால் அவரைக் கருவில் உருவாக்கிய அந்த ஆண்டவனே அவரை அகிலத்துக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் – துறவுக்குள் அவர் மனத்தை நாட வைத்துவிட்டான் என்றுதானே எடுக்க வேண்டி இருக்கிறது. இல்லறத்தில் இணைந்திருந்தால் காரைதீவின் மைந்தன் மயில்வாகனன் குடும்பஸ்தனாகி குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தி சாதாரண மானவராகவே மறைந்திருப்பார். ஆனால் கிழக்கின் முத்தாய் ஒளி விட்டு எல்லோர் இதயத்திலும் பதிந்திருக்கிறார் என்றால் அதற்கு வழி வகுத்தது துறவுதான் என்பதை எவருமே மறுத்து உரைத்திட முடியாது.

    சுந்தரரை இல்லறத்தில் இணைய விடாமல் எம்பெருமான் தடுத்தாட்கொண்டார். அரச போகத்தில் இருந்த சித்தார்த்த கெளதமர் இல்லறத்தை ஒதுக்கி  இறைஞானம் பெற்றார். அதே போன்ற ஒரு நிலையினையே மயில்வாகனுக்கும் கிடைத்தது எனலாம் . எல்லாமே இறையருள் அல்லால் வேறென்றும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    ஆண்டவனின் பரிபூரணமான அனுக்கிரகத்தைக் கருவிலே தாங்கி வந்த காரணத்தால் அடிகளாகிஆசானாகிபேராளுமையாய் பிரகாசித்து பயனுற வாழ்ந்தார் எனலாம். விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கிறார்.தமிழை மூச்சாக்கி நிற்கின்றார்.சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணப்படுகிறார். ஆனால் சைவத்தைக் கைகளில் ஏந்துகிறார். இவையெல்லாம் துறவால் விளைந்த விளைவுகள் என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.துறவு வாழ்க்கை என்பது முத்தமிழ் வித்தகரின் பாதையில் வாய்த்த பெரும் பொக்கிஷம் என்றேகொள்ள வேண்டும்.

    துறவறத்தின் பின்னர்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதற் தமிழ்ப்பேராசியராகிறார். தமிழ் நாட்டில் தமிழ் அறிந்த பலபேர் இருந்தும் – ஈழத்து மைந்தனை எப்படித் தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச் செட்டியார் கண்டுகொண்டார் என்றால் – அதுதான் துறவறத்தின் பெருவெளிச்சம் எனலாம்.பற்றுக்களையும் அறுக்கிறார். ஆனால் ,மொழியில்சமயத்தில்கலாசாரத்தில்பண்பாட்டில்ஆராய்ச்சியில்சமூகத் தொண்டில், இசையில்நாடகத்தில்கொண்ட பற்றுகளை இழந்தாரில்லை. அவற்றில் அவரின் பற்றானது பல்கிப் பெருகி பயனளிக்கும் வகையில் அமைந்தது எனலாம். இவையாவும் துறவு வாழ்க்கையின் பின் துலங்கியது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

    நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே”

    என்று போற்றப்படும் நாவலர் பெருமான் இல்லறத்தை விட்டு துறவுநிலையில் நைட்டிக பிரம்மசாரியாய் ஆனபின்தான் – அவரின் பணிகள் ஆல்போல் விருட்சமாகியது. வேதாசலம் மறைமலையடிகள் ஆனதின் பின்தான் அவரின் பணிகள் துலங்கின.நாவலர் பெருமானை நல்ல அரசாங்க உத்தியோகத்தில் பார்த்திட அவர் குடும்பத்தார் விரும்பினார்கள்.ஆங்கிலக்கல்வியைக் கற்ற ஆறுமுகமும் அக்காலத்தில் நல்ல உயர் பதவியில் அமர்ந்து இல்லறத்துள் புகுந்திருந்தால் – எல்லோரும் ஏற்றிப் போற்றும் ” நல்லை நகர் நாவலர் ” என்னும் பொக்கிஷம் எமக்குக் கிடைத்திருக்குமாஆறுமுகம் துறவுக்குள் சென்றதால்த்தான் – கந்தபுராண கலாசாரம் வந்தது. சைவம் பிழைத்தது.தமிழும் தளைத்தது எனலாம்.

    முத்தமிழை மூச்சாக்கினார் அடிகளார். இயற்றமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ் எங்களின் சொத்துக்களாகும். பழந்தமிழ் இலக்கியங்கள் முத்தமிழினைப் போற்றியே நின்றன. பழந்தமிழ் இலக்கியங்களை இதயத்தில் இருத்திய அடிகளார் – பழந்தமிழ் இசையினை ஆராய முற்படுகிறார். இலக்கியத்தை,  இலக்கணத்தைவரன்முறையாகக் கற்றவர் அடிகளார். அதே வேளை பன்மொழிப் பாண்டித்தியமும்விஞ்ஞானப் புலமையும் மிக்கவர். குறிப்பாக பெளதிகத்தில் பேராளுமை உடையவர்.தான்கற்ற பெளதிக அறிவை முன்னிறுத்தி பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கின்ற இசையினை ஆராய முற்படுகிறார். அவரின் அளப்பெரும் ஆராச்சியால்  வையம் பயனுற வாய்க்கிறது “யாழ்நூல்”. யாழ் நூலினைத் தந்திட்ட முத்தமிழ் மாமுனிவரின் பேராற்றலை வியக்காதார் இல்லை எனலாம். எவருமே தொடாத துறை! எவருடைய ஆராய்ச்சிக்கும் எட்டாத துறை ! அந்தத்துறையினைத் தொட்டிருக்கிறார் எங்கள் விபுலா னந்தத்துறவி! இப்பேராய்ச்சி மலர்ந்ததும் முத்தமிழ் வித்தகரின் துறவின் பின்தான் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

    நரேந்திரன் விவேகானந்தர் ஆனபின்தான் இராமகிருஷ்ண அமைப்பே உருவாகிறது. வீரத் துறவியாய் அதே வேளை ஈரத் துறவியாய் பரிணமிக்கிறார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை பல நிலையிலும் நிலை நிறுத்துகிறார். இந்த வழியினை எங்கள் முத்தமிழ் முனிவரும் மனத்தினில் பதிக்கிறார். முத்தமிழ் முனிவரும் விவேகானந்தர் எப்படி துறவறத்தின் பின் துலங்கினாரே அப்படியேதான் துறவுக்குப்பின் துலங்கி நின்றார் எனலாம்.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல்தமிழ் பேராசிரியரான பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராயும் அணி செய்கின்றார். கல்வியைசமயத்தை – சமூகத்தைக் கருத்திருத்தி அவர் ஆற்றிய அத்தனை பெரும் பணிகளும் துறவுக்குப் பின்தான் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    இலங்கையில் பல பகுதிகளில் கல்விக்கூடங்களை நிறுவினார். ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார்.இலக்கிய கட்டுரைகள், சமயசன்மார்க்கக் கட்டுரைகள்ஆராய்ச்சி நூல்கள்மாநாடுகள் பலவற்றில் பேருரைகள்என்றுமே பயன்தரும்வகையில் பல நயமிக்க பொருள் பொதிந்த கவிதைகள்கவிதை நூல்கள்என்று பல்துறைகளில் – பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்திய காலம் முத்தமிழ் வித்தகரின் துறவுக்காலமேதான் என்பததுதான் உண்மையாகும்.

    ஐப்பத்து ஐந்து ஆண்டுகள்தான் அவருக்கு ஆண்டவன் கொடுத்த வாழ்வாகும். அதிலும் அவர் துறவில்  வாழ்ந்த காலம் இருபத்து மூன்று ஆண்டுகளே. ஆனாலும் அந்தக்காலத்தில் போதித்ததோடு நின்றுவிடாமல் சாதித்தும் காட்டினார். நல்லவைகளை எல்லாம் அவர் விரும்பினார் ஏற்றுக் கொண்டார். அல்லவைகளை அவர் பார்த்தாரில்லை. அவற்றை நினைத்தாருமில்லை. அவரின் ஆக்கங்கள்அவரின் தொண்டுகள் என்றுமே எங்கள் மனத்தைவிட்டு அகலா.

    அதனால்தான் அவருக்கு விழாக்கள் எடுக்கிறோம்! அவருக்குச் சிலை எடுக்கிறோம்! அவர்பற்றிய மலர்களையும் வெளியிடுகிறோம்!  துறவு என்றால் காட்டுக்குள் ஓடுவதல்ல! துறவு என்றால் சமூகத்தைவிட்டு ஒதுங்கி நிற்பதும் அல்ல ! துறவு என்றால் காவியை அணிந்து மொட்டை அடித்து மெளனமாய் குகைக்குள் புகுந்து இருப்பதும் அல்ல!

    மக்கள் மத்தியில் வாழவேண்டும். மக்களுக்கு ஏற்ற சேவைகளைச் செய்ய வேண்டும். மொழியைபண்பாட்டைகலாசாரத்தைசமயத்தைசன்மார்க்கத்தைஅறிவியலைசமூகத்துக்கு எப்படியாயினும் கொடுக்க வேண்டும் என்பதை துறவின் வழியில் பயணப்பட்டே கொடுத்த பேராளுமையாய் விளங்குபவர்தான் எங்களின் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்! அவரின் பெயரினை உச்சரிப்பதும்நினைப்பதும் கூட எங்களுக்குள் நல்லதோர் உணர்வைஊக்கத்தை,   உந்துதலை உருவாக்கும்!

    Share
  • வாதவூர் வண்டை மனமதில் இருத்துவோம்!

    வாதவூர் வண்டை மனமதில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேனை நாடி வண்டுகள் ஓடும். தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற்றைய வண்டுகள் போன்றதன்று. இவ்வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடிநிற்க – வாதவூர் வண்டுவேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உயரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் – தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும். சொல்லச் சொல்ல இனிக்கும் சொற்களால்  ஆனதுதான் அந்த வாசகம் “திருவாசகம்”.  இதனால்த்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.

    திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர் என்றும்மணிமணியான வார்த்தைகளை வழங்கியதால் மணிவாசகர் என்றும்அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும்தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என்றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.

    அந்தணகுலத்தில் பிறந்துபேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின்றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் – அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான். மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை

    தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்
    மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
    மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
    மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன்

    வாதவூராரினை தனது அகத்தில் ஏற்றிய மன்னவன் – மற்ற மன்னவர்களும் மதிக்கும் வண்ணம், அவருக்கு நன்மதிப்பினைக் கொடுத்தான். நவரெத்தினாலான ஆபரணங்கள்பட்டுப்பீதாபரங்கள்சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடைமுத்திலான சிவிகைபொன்னாலான காப்புசாமரையானை என்று அளித்து ஆனந்தம் அடைந்தான். என்று வாதவூரடிகள் புராணம் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    அதிகாரம் மிக்க பதவி! அரசனின் அன்பும் ஆதரவுமான நிலை! எதையும் செய்யும் இருப்பிடம்! இவை எவையையும் வாதவூரர் உள்ளம் பெரிதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. புகழும்ஆடம்பரங்களும் நிலையாய் இருக்க மாட்டா என்னும் நினைப்பால் நிலையாயிருக்கும்  அப்பரம் பொருளையே அவர் நாளும் பொழுது எண்ணியபடி அமைச்சர் என்னும் பெயரில் பாண்டியன் அவையில் இருந்தார் எனலாம். “ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும்” எண்ணமே அவருள்ளத்தில் ஆழமாய் ஆணிவேராய் இருந்தது எனலாம்.

    திரும்பெருந்துறையில் நல்ல அரோபியக் குதிரைகள் வந்திருப்பதாயும் அதனைப் பார்த்து வாங்கிவரும்படியும் திரவியங்களை அரசன் அமைச்சரான வாதவூரரிடம் கொடுக்கிறான். அமைச்சரான வாதவூரரும் குதிரைகளை வாங்குவதற்கு செல்கிறார். அங்கு அவர் குருந்தமர நிழலில் ஒரு ஆனந்தப் பேரொளியினைக் காணுகிறார். தன்னை மறக்கிறார். தான் வந்த பணியை மறக்கிறார். அந்த ஞான ஒளியுடை மகானின் திருவடியில் சங்கமம் ஆகிறார்.

    குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் நீண்டநாள் வராதபடியால் அரசன் தூதுவர்களை அனுப்பி நிலைமையினப் பார்த்துவருமாறு பணிக்கிறான் சென்ற தூதுவர்கள் வாதவூரரின் நிலையினை மன்னனிடம் தெரிவிக்கவே மன்னவன் அடங்காச் சினங்கொள்ளுகிறான். சினத்தால் வாதவூரரை வதைக்கிறான். உலகினை மறந்த வாதவூரார் அந்தப் பரம்பொருளிடம் அடைக்கலமாகிறார்.

    ஆண்டவனின் ஆணைப்படி – “ஆவணி மூலத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்த குதிரைகள் வரும் என்று” அரசனால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாதவூரர் மொழிகின்றார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வருகின்றன. அரசன் வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்கின்றான். ஆனால் வந்த குதிரைகள் அனைத்துமே அன்றிரவு நரிகளாய் மாறிவிட்டன. அரசன் ஆத்திரம் மேலோங்குகிறது. வாதவூரரை சிறையில் அடைக்கின்றான். உயரிய பதவியைக் கொடுத்த அரசனே அவரை திரவியங்களை அபகரித்த குற்றவாளியாக்குகிறான். வாதவூரர் துன்பம் படைத்தவனுக்குப் பொறுக்கவில்லை. வைகை ஆறு பெருக்கெடுக்கிறது. அரசன் திகைக்கிறான். பெருகிவரும் நீரைத்தடுக்க நாட்டுமக்களுக்கு அரசன் ஆணையிடுகிறான்.

    பலரும் தமக்கான பங்கினை செய்கிறார்கள். ஆனால் பிட்டவைத்து பிழைப்பு நடத்தும் செம்மனச் செல்வி என்னும் மூதாட்டிக்கு உதவிட யாருமே இல்லா திருந்தது. அவ்வேளை எம்பெருமானே வேலையாளாய் வருகிறார். ஒழுங்காய் வேலை பார்க்காத காரணத்தால் அரசனின் காவலர்கள் பிரம்படிக்கு ஆளாகிறார் ஆதி அந்தமில்ல அந்த அரும்பொரும் ஜோதி!

    பரம்பொருளின் முதுகில் விழுந்த அடி அரசனின் முதுகில் விழுந்தது. அனைவரின் முதுகிலும் விழுந்தது. அரசன் விழித்தான். அஞ்ஞானம் அகன்றது. வாதவூரரை விடுவித்து விழுந்து விழுந்து வணங்கினான். என்ன நல்ல கதையாக இருக்கிறதா! வாதவூரர் வரலாற்றில் இவற்றைக் காணுகிறோம்.

    கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
    காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
    வில்லால் ஒருவன் அடிக்க
    வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க …
    அந்த வேளை யாரை நினைத்தீரோ… அய்யா
    பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமே அய்யா  –

    என்று ஒரு இறையன்பர் பாடுவதில் பிரம்படி பட்ட செய்தி எப்படி வருகிறது பாருங்கள்.

    மனிதன் தெய்வத்தோடு வைக்கின்ற இணக்கமானது எப்படியாய் இருப்பினும் அது நல்லதையே நல்கும்.அடியுண்ட அரசனுக்கு நல்லறிவு பிறந்தது. வாதவூரருக்கு பலவகையில் உதவிட அரசன் முன்வந்தான். ஆனால் வாதவூரரோ தாம் துறவறத்தையே நாடுவதாகக் கூறினார். அரசனும் வாதவூரர் வழியினைப் பெருவழியென ஏற்றுக் கொண்டான்.

    மனிதன் என்பவன் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பொழுது அத்துறைக்கு ராஜன் ஆகிறான். பாண்டிய மன்னன் அவையில் அமைச்சர் ஆனதால் வாதவூரர் புவிராஜனாகிறார். தித்திக்கும் திருவாசகத்தை அளித்த தமையால் கவிஜாரன் ஆகிறார். அவரின் பக்தியுடை வாழ்வால் அவர் தவராஜனாகிறார். பல சிறப்புக்களைப் பெற்ற வாதவூரர் நிறைவில் நடராஜனுக்கே உரியவராய் திகழ்கிறார் எனலாம்.

    வாதவூரர் வண்டாய் பறந்தார். அந்த வண்டு “திருவாசகம்” என்னும் தேன் கூட்டையும் “திருக்கோவையார்” என்னும் தேன் கூட்டையும் கட்டி நாமனைவரும் நாளும் பொழுதும் வேண்டிய தேனைப்பெற்று சுவைத்திட வழி சமைத்திருக்கிறது எனலாம்.

    உடையாள் உந்தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
    அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
    அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து
    முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே

    என்னும் வேண்டுகளை வாதவூர் வண்டு இறைவனிடம் சொல்லுகிறது. இது தெவிட்டாத் தேனாகி இனிக்கிறதல்லவா!

    திருவாசகமென்னும் தேன் பருகினார் ஒரு அடியவர். அவரால் தனது உணர்வினை வெளிப்படுத்த சொற்களைத் தேடுகிறார்.அவர் தேடியதை அளிக்கிறார் பருகுவோம் வாருங்கள்….

    வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே –  இப்படிச் சுவைத்தவர்தான் வள்ளல் பெருமான்.

    வாதவூர் வண்டு மலர்கள்தோறும் எடுத்தவந்த தேனால் ஆக்கப்பட்ட திருவாசகத்தை தமிழர்களாகிய நாம் மட்டும் சுவைத்து மகிழ்வது பெருமைதான். ஆனால் தமிழ் அறியா ஒருவர்எங்கள் சைவம் சாரா ஒருவர்அதுவும் ஆசிய நாட்டைச் சேராத ஒருவர், ஆங்கில நாட்டை சேர்ந்த ஒருவர் கிறீத்தவ பாதிரியாரானவர் திருவாசகமென்னும் தேனைத் தொட்டதும் தன்னை மறந்தார். அந்தத் தேன்கூட்டுக்குள்ளேயே புகுந்து தேனை மாந்திக் கொண்டே இருந்தார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா!

    சிவனை முழுமுதற் கடவுளாகப் பாடி உருகிடும் திருவாசகம் என்னும் தேன் – ஒரு கிறீத்தவ  அருட் தந்தையை எப்படிக் கவரமுடியும்இது ஒரு முரண்பட்ட நிலையாகத் தெரிகிறது அல்லவா! இறைவன் என்பவன் ஒருவனே. திருவாசகத்தில் “சிவனாக” காட்சியளிக்கும் ஆண்டவன்தான் – பரமண்டலத்தில் வீற்றிருக்கும் பிதாவாக கிறீத்தவ அருட்தந்தை ஜி.யூ போப் அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கலாம். இதனால் அவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தேனை மொழிபெயர்த்து அனைவருமே பயனுறச் செய்தார் எனலாம். இலண்டன் மாநகரில் கிறீத்தவ தேவாலயத்தில் முழந்தாளிட்டு செபம் செய்யும் வேளை தன்னருகில் மாணிக்கவாசகரும் செபம் செய்வதாக‘ தான் உணர்ந்ததை  – திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதுவே சமயங்கடந்த பக்தி நிலை எனலாம்.இதனை வாதவூர் வண்டின் திருவாசகம் என்னும் தேன்‘ செய்திருக்கிறது.

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
    கோகழியாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் ஆனெகன் இறைவனடி வாழ்க

    என்று இறைவனுக்கு வாழ்த்துக் கூறிய வாதவூர் வண்டினை நாமனைவரும் மனத்தினில் இருத்துவோம். இருத்தினால் ……

    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீங்கும்! அல்லல் அறுபடும்! ஆனந்தம் பெருகும்! அத்துடன் மருவா நெறியும் அளிக்கும் !

    அருள்வாத வூரர்சொல  அம்பலவர் தாமெழுதும்
    திருவா சகத்தைத் தெளிந்தால் – கருவாம்
    பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே
    சிவகதியும் உண்டாம் சிவம்

    Share
  • மெல்பேண் மாநகரில் துவாரகன் – அபிதாரணி மிருதங்க  அரங்கேற்றம்

    மெல்பேண் மாநகரில் துவாரகன் – அபிதாரணி மிருதங்க அரங்கேற்றம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க  அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின்னணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இருமருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன. வாழைகளின் நடுவில் பச்சையினை வெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருகேற்றி நின்றன. மேடையின் முன்னே மங்கலமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய்க் கோலமிட, கோலத்தின் நடுவே – தேவ சபையில் சிவனாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து, மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினைப் பாராட்டியே ஆக வேண்டும். விநாயகப்  பெருமானும் கல்வித்  தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய்அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.

    இறை வணக்கத்துடன், குரு வணக்கத்துடன்பெற்றவர்கள் ஆசியுடன் அரங்கேற்றம் தொடங்கியது. அரங்கேற்றம் காணும் திருவளர் செல்வன் துவாரகன், திருவளர் செல்வி அபிதாரணியின் அன்புத் தந்தையார் கவிஞர், எழுத்தாளர் சந்திரன் அவர்கள்,

                ” உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
    நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
    அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
    தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே “

    என்று கம்பநாடன் கவியினை முன்வைத்து வரவேற்புரையினை மிகவும் கச்சிதமாய் வழங்கினார். வரவேற்புரைக்கு அவர் தேர்ந்தெடுத்த கம்பநாடன் கவியினூடாக அவரின் இலக்கிய நோக்கும் அவர்வழி பயணப்படும் அவர் குடும்பத்தின் நோக்கும் தெள்ளிதிற் புலப்பட்டது.

    வரவேற்புரை நிறைவுற்றதும் திரை விலகியது. தேவ உலகத்தில் இருக்கிறோமா என்று எண்ணும் வகையில் மேடை ஒழுங்கமைப்பு எல்லோரையும் பிரமிக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அணிசெய் கலைஞர்கள் அமர்ந்திருக்க, வெண் மேகமாய் மேடை ஜொலித்திட, மேடையின் இரு பக்கங்களிலும் இருந்து அண்ணாவும் தங்கையும் மேடையை நோக்கி வந்த விதம் அவையினரை அசர வைத்தது. எந்த ஒரு மிருதங்க அரங்கேற்றத்திலும் இடம்பெறா வகையில் இது கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது. அன்புச் சகோதர்களின் குருவான யோகன் கந்தசாமி அவர்கள் மேடையின் முன்வந்து ஆயத்தம், ஆரம்பம் என்று மூன்று முறை கைத்தட்டி தலைநிமிர்ந்து தனது நாற்பத்து எட்டும் நாற்பத்து ஒன்பதாவதுமாகிய மிருதங்க அரங்கேற்றம் என்று சொல்லிப் பூரித்து நிற்க, விக்கினங்கள் அகற்றும் விநாயகப் பெருமானின் துதியான “வாதாபி கணபதிம்” என்னும் கீர்த்தனையுடன் தொடங்கிய தொடக்கம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. பாடிய அகிலன் சிவாநந்தன், வயலின் மேதை முரளிக்குமார், கடம் செல்வன் மருத்துவர் திவாகர் யோகபரன், மோர்சிங் கலைஞர் கம்பன் புகழ்பாடும் ஜெயராம் ஜெகதீசன்ஆரம்பக் கட்டத்தைத் தூக்கி நிறுத்தினார்கள்.

    ஹம்சத்வனியுடன் அரங்கேற்றம் ஆரம்பமானதே களிப்பினை நல்குவதாய் அமைந்தது எனலாம். அகிலன் சிவானந்தன் எப்படிப் பாடினாலும் முரளிக்குமார் எப்படி வாசித்தாலும் அத்தனைக்கும் ஈடு கொடுக்கும் வண்ணம் துவாரகனும் அபிதாரணியும் தங்களின் விரல்களால் வித்தை காட்டியது அவையினரின் அகத்தினில் புகுந்து விண்ணதிரும் வகையில் கரவொலியாய் எழுந்தது. 

    ஆதி தாளத்தில் ஹம்சத்வனியில் ஆரம்பித்த இசைக்கோலம், ரூபக தாளம், கண்ட ஜதி, துருவ தாளம்மிஸ்ர நடை, ஜம்பை தாளம் என வளர்ந்து, தொடங்கிய ஆதி தாளத்துடன் மங்களமாய் மலர்ந்தது. கண்ட ஜதி துருவ தாளத்தில் பல அட்சரங்களை அலாதியாய் அகிலன் சிவானந்தன் மெதுவாயும் துரித கதியிலும் பாடி நிற்க – அகிலனின் வேகத்துக்கு ஏற்றாற் போல், தேர்ந்த வித்துவான்கள் வாசிப்பது போன்று துவாரகனும் அபிதாரணியும் அரங்கில் மிருதங்க வாத்தியத்தை அனுபவித்து வாசித்துக் காட்டி அனைவரையும் தம்வசமாக்கி விட்டனர். இடைவேளை எப்படி வந்தது என்று தெரியாமலே அரங்கேற்றம் விறுவிறுப்பாய் அமைந்திருந்தது.

    இடைவேளையின் பின்னர், அரங்கேற்ற அரங்கு முற்றிலுமாக மாறியே காணப்பட்டது. பெரும்பாலான மிருதங்க அரங்கேற்றங்களில் வீணை வாத்தியம் இணைவது என்பது குறைவாக இருக்கிறது. ஆனால் இங்கு புதுமையாக இரண்டு வீணைகள் இணைந்து நின்றன. இணைந்தமை புதுமையன்று. வீணையை வாசித்த வித்துவான்கள் ராம்நாத் ஐயர், கோபிநாத் ஐயர் இருவரும் சகோதரர்கள். மிருதங்க அரங்கேற்றம் செய்யும் துவாரகனும் அபிதாரணியும் சகோதரர்கள். இதைத்தான் இசைக்கோலத்தின் புதுமை என்பதா? அல்லது இந்த மிருதங்க அரங்கேற்றத்தின் பெருஞ்சிறப்பு என்பதா?அல்லது சந்திரன் உஷா தம்பதியினரின் ஆளுமை என்பதா? எப்படிப் பார்த்தாலும் அன்புச் சகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம் புத்தம் புதுமையாய் அமைந்தது எனலாம்.

    வீணைச் சகோதரர்கள் தாங்களாகவே வடிவமைத்த கெளரி மனோஹரி இராகத்தில் மிஸ்ர ஜம்பை தாளத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவி – துவாரகன் அபிதாரணி சகோதரர்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்தாலும் அண்ணாவும் தங்கையும் கற்ற வித்தையினைக் கச்சிதமாய்க் காட்டி – பெற்றவர்களையும், பேணி நின்ற குருவினையும் பார்த்துப் பருகவந்த ரசிகப் பெருமக்களையும் வியக்க வைத்தார்கள். 

    வீணைகள் இணைய, வயலின் அருகணையமோர்சிங்கும் கடமும் துணையாக அகிலன் சிவானந்தனின் அருமையான தில்லானா களைகட்ட, சந்திரனின் பாடல் உள்நுழைய, தமிழ்வாழ்த்து வந்து நிற்க, முத்தைத் தரு பத்தித் திருநகை அமைந்திட வேண்டும் என்னும் பக்தியின் நோக்கில் அருணகிரியார் அருட்திருப்புகழுடன் அன்புச் சகோதர்களின் மிருதங்க அரங்கேற்றம் ஆனந்தமாய் நிறைவடைந்தது.

    ஈன்ற பொழுதில் பெரிதுவந்து நின்ற தாயார் உஷாவும் அவையவத்து முந்தியிருக்கச் செய்ய எண்ணிய தந்தை சந்திரனும் பூரித்து நின்றனர். அவர்களின் செல்வங்களான துவாரகனும் அபிதாரணியும் வள்ளுவன் வழியில், பெற்றவர்களை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டி நின்றனர். இவை அத்தனையும் மிருதங்க அரங்கேற்றத்தின் அடிநாதமாய் அமைந்திருந்தது என்பதை மனந்திறந்து சொல்லி மகிழ்கின்றேன்.

    Share
  • பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

    பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஸ்திரேலியா

    அந்தணக் குலத்தில் ஆளுமைகள் பலர் இருந்து அரும்பணிகள் ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் கிரியைகளை ஆற்றும் நிலையிலும் அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அகவொழுக்கம்புறவொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

    வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. விக்கிரகங்களைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகெனலாம். கிரியைகளை ஆற்றி ஆலய கும்பாபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

    கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய்நல்ல வழிகாட்டியாய்நல்ல ஆலோசகராய்விளங்கிய அழகும் –  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை, ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு, அந்தணப் பெரியார்கள் பெருந்துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

    வித்துவான் கணேசையர்வித்தியாதிபதி சதாசிவ ஐயர்காசிவாசி செந்திநாத ஐயர் வித்தியாதிபதி லக்ஷ்மண ஐயர்பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள்பண்டிதர் பஞ்சாட்சரசர்மா இந்த வரிசையில் வந்து நிற்பவர்தான் காரைநகர் ஈந்த பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் ஆவர். ஆலயத்திலும் நிற்பார். ஆன்றோர் அவையிலும் நிற்பார். வேதமும் ஓதுவார். வித்துவான்கள் மத்தியில்  தொல்காப்பியமும் செப்புவார். இறைவனைப் பற்றி அருட்பாடல் களையும் பாடுவார். இலக்கியக் கூட்டங்களில் இலக்கியப் பாடல்களையும் எடுத்து நயமுரைப்பார். ஆனாலும் அந்தண ஆசாரத்தை அகமிருத்தியே அனைத்தையும் ஆற்றுவார்.

    இப்பேராளுமை 1916ஆம் ஆண்டு கணபதீஸ்வரக் குருக்கள் சிவயோக சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு நற்புத்திரனாய் நானிலத்தில் இறையருளால் பிறந்தார்கள். ஆண்டவனையே அனுதினமும் நினைக்கும் ஆசாரசீலரான கணபதீஸ்வரக் குருக்களின் உதிரத்தில் உதித்த காரணத்தால் அவரின் புத்திரராய் பிறந்த வைத்தீஸ்வரக் குருக்களும் ஆண்டவன் அருளினைப் பெற்றே இம்மண்ணில் நல்லவண்ணம் வந்தார் மலர்ந்தார் எனலாம். தந்தையைக் குருவாய் கொண்டு தனது கல்வியை ஆரம்பித்தார். தந்தையின் வழி காட்டலில் நல்ல ஆசான்கள் இவருக்கு வந்தமைந்தார்கள். பண்டிதர் பஞ்சாட்சரசர்மாபண்டிதர் சுப்பிரமணிய தேசிகர்மகாவித்துவான் கணேசையர் இவருக்கு நல்ல வெளிச்சத்தைக் காட்டினார்கள். சமயத்தைக் கற்றார். அன்னைத் தமிழையும் ஐயந்திரிபறக் கற்றார்.சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலமும் அறிவார். ஆனாலும் அவரின் கற்றல் தாகம் அடங்கிவிடவே இல்லை.

    வைத்தீஸ்வரக் குருக்கள், பேராளுமையாய் மிளிர்வதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கினார். நல்ல ஆசான்களிடம் கற்றதோடு அமையாது மேலும் கற்றலின் வழியில் பண்டிதராய்,  பயிற்றப்பட்ட ஆசிரியராய், நற்றமிழ் நாயகராய் உயரும் நிலைக்கு வந்து நின்றார் எனலாம்.

    கற்றுத் தேர்ந்த குருக்கள் அவர்கள் கற்றதைக் கொடுக்க வேண்டும் என்னும் ஆவலினால் ஆசிரியப் பணியினை அணைத்துக்கொண்டார். கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் தொடங்கிய  ஆசிரியப் பணி நாட்டின் பல இடங்களில் பயணித்து நிறைவில் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    கொழும்பில் பணியாற்றும் வேளை கற்பித்தலோடு அமையாது ஏனைய நிலையிலும் தன்னுடைய ஆற்றலைப் பகிர்ந்துகொண்டார். விவேகானந்த சபையில் நடத்தப்படும் சைவ சமயப் பாடக் குழுதினகரன் பத்திரிகை செய்திப் பிரிவு ஆகிய இவற்றில் தனது பங்களிப்பினை வழங்கினார். அத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று அறப்போதனையும் ஆற்றினார்.

    ஓய்வு பெற்றபின்னர் மேடையில் பேசுவார், எழுதுவார். அத்துறைக்கு வருகின்றவர்களுக்கும் ஊக்கம் ஊட்டுகின்றவராகவும் இருப்பார். சைவத்தையும் தமிழையும் நாவலர் பெருமான் தனது இரு கண்களாகவே கொண்டாரென்று பலரும் விதந்து போற்றுவார்கள். அந்த நிலையில் எங்கள் குருக்கள் அவர்களும் விளங்கினார் என்றால் அதனை எவரும் மறுத்துரைக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன என்பது வெள்ளிடை மலையாகும்.

    யாழ்ப்பாண ஆன்மீகப் பேரொளி யோகர் சுவாமிகளின் நல்லாசியுடன் 1940ஆம் ஆண்டில் குருக்கள் அவர்களால் “காரைநகர் மணிவாசக சபை” ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையின் பிறப்பால் இளைய சமுதாயத்திடம் சைவத்தைப் பற்றிய சிறப்பான புரிதல் உருவாகியது என்பது முக்கியம் எனலாம். காரை நகருக்கு மட்டுமல்லாது யாழ்மண்ணுக்கே இந்த அமைப்பு நல்லதோர் சமய வழிகாட்டுதலை வழங்கியது எனலாம். இந்தச் சபையினை அமைத்ததோடு நின்றுவிடாமல் இந்தியாவில் இருக்கின்ற சைவ ஆதீனங்களையும் இணைக்கும் பாலமாகவும் குருக்கள் விளங்கினார் என்பது மிகவும் முக்கியம்.

    ஈழத்துச் சிதம்பரம் என பக்தி சிரத்தையுடன் போற்றி நிற்கும் காரைநகர் சிவன் சன்னிதானத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபையினூடாக 1955ஆம் ஆண்டு தொடக்கம் திருவெம்பாவைக் காலத்தில் “மணிவாசகர்” விழா நடைபெறத் தொடங்கியது. தொடர்ந்து ஆண்டுதோறும் இவ்விழாவினை நடத்துவதில் குருக்கள் அவர்களின் பணி மிகவும் போற்றப்பட வேண்டியதென்றே கொள்ளல் வேண்டும். இந்த விழாக்களில் தமிழகத்து அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பிப்பதும் ஈழத் திருநாட்டின் அறிஞர் பெருமக்கள் அவர்களோடு இணைந்து நிற்பதும் குருக்கள் அவர்களின் சிந்தனையால்.  செயற்றிறனால் விளைந்த நல்ல பலனல்லவா! சங்கமிக்கும் அறிஞர்களால் பல அரிய பெரிய விஷயங்கள் எல்லாம் யாவருக்கும் கிடைக்கும் பெருவாய்ப்பும் வாய்த்திருந்தது. ” காரைநகர் மணிவாசகர் சபை” சைவமும் தமிழும் நல்கும் பொக்கிஷமாய் மிளிர்ந்தது. அந்தப் பொக்கிஷத்தை ஆக்கி அளித்த பேராளுமையாக எங்கள் குருக்கள் திகழ்கிறார்.

    “‘காரை நகரில் சைவ சமய வளர்ச்சி” என்னும் குருக்கள் அவர்களின் நூல்  பல்கலைக்கழத்தில் வைக்கப்படவேண்டிய பெறுமதியான நூலென்றே சொல்லலாம். பெறுமதியான நூலை ஆக்கிய வைத்தீஸ்வரக் குருக்களென்னும் பேராளுமை – பதிப்புத் துறையிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். கந்தர் மடத்தைச் சேர்ந்த சுவாமிநாதப் பண்டிதரால் ஆக்கப்பட்ட “திருமுறைப் பெருமை ” பிரம்மஶ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணைபுர அந்தாதி” திருப்போசை வெண்பா” , “”தன்னை அந்தாதி” திக்கை அந்தாதி” வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் “நன்நூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “தெரி நிலை வினயெச்சம்”, “வினைத் தொகை” ஆகியவற்றைப் பதிப்பித்ததோடு அமையாது; ஏழாலைப் பண்டிதர் கந்தையா அவர்களின் ” நாவலர் பிள்ளைத்தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”மற்றும் திருவாளர் சபாபதியால் எழுதப்பட்ட” அருள் நெறித் திரட்டு ” ஆகிய நூல்களையும் பதிப்பித்தார் என்பது குருக்கள் அவர்களின் பதிப்புத்துறைப் பக்கம் எனலாம். அவரின் பதிப்புத்துறைக்கு முத்திரை பதிக்கும் வகையில் அமைந்த நூல்தான் – தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனார் புலவர்மணி சோஇளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ண புரச் சுந்தரேசர் புராணம் என்னும்  ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும்.

    திருவாதிரைக் கால நிகழ்வுகளை மலராக்கி ஐந்து மலர்களாய் குருக்கள் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமன்றி ” காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”காரைநகர் மணிவாசகர் சபைப் பொன்விழா மலர் “, “காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் கும்பாவிஷேக மலர்” என்று வெளிவந்த மலர்கள் அனைத்துக்கும் எங்கள் பேராளுமை குருக்கள் அவர்களே ஆசிரியராய் இருந்து நெறிப்படுத்தி இம்மலர்களை மணம் கமழ வைத்தார் என்பது மனக்கொள்ளத் தக்கதாகும்.

    திருவாசகத்தை தந்தை தாயார் வழியில் பெற்றுக் கொண்ட குருக்கள் அவர்கள் தானும் அதனுட் புகுந்து மணிவாசகரின் உருகும் வாசகத்தை அகமிருத்தியதன் விளைவே மணிவாசகர் சபை ஆகியது எனலாம்.சைவத்தின் உயர் தத்துவங்கள் பொதிந்திருக்கும் திருவாச கத்தைக் கையில் எடுத்த பாங்குடன் நின்று விடாது – சைவத்துக்குத் தமிழும் இன்றியமையாதது என்பதை மனமிருத்தி 1960 ஆம் ஆண்டில் ” தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ” ஆரம்பித்தார். இதன் வாயிலாகப் பல தமிழ்ப்பணிகளுக்கு வழி சமைத்தார் எனலாம். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக இருபத்து ஆறு நூல்களை வெளியிட்டார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இக்கழகம் பெரிதும் துணையாக விளங்கியது என்பதை மறுத்துவிட முடியாது. இக்கழகத்தின் செயற்பாடு 1970 தொடக்கம் 1980 காலப் பகுதியில் பெரு வெளிச்சமாய் அமைந்தது எனலாம்.

    பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் சைவத்தையும் தமிழையும் அகமிருத்தி தன்னாலான பணிகளை மேற்கொண்டார் என்பதை பலரும் காய்தல் உவத்தலின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அவரை வந்து சேர்ந்த விருதுகளும் பட்டங்களும் குவிந்து கிடக்கின்றன எனலாம்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவரை வியந்து அவருக்குத் “தத்துவக் கலாநிதி” என்னும் பட்டத்தை 2020ஆம் ஆண்டில் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.

    இலங்கைக் கம்பன் கழகம் “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கி குருக்கள் அவர்களைக் கெளவித்தமையும் மனங்கொள்ளத்தக்கதாகும். குருக்கள் அவர்களைக் கெளரவிப்பதன் மூலமாக கெளரவித்த அமைப்புகளே பெருமையுற்றன எனலாம். அந்த வகையில் – வடக்குக்கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு “கலைஞான கேசரி” என்னும் பட்டத்தையும்சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் “சிவாகம கிரியா பூஷணம்” என்னும் பட்டத்தினையும் வழங்கிப் பெருமைப்பட்டன எனலாம்.

    நூல்கள்மீது தீராத காதல் கொண்டிருந்தார் குருக்கள். அதனால் அவரின் இருப்பிடமே பெரியதொரு நூல்நிலையமாய் திகழ்ந்தது என்பதைப் பலரும் அறிவார்கள். மலர்கள்பத்திரிகைகள்பல்வேறு வகையான நூல்கள் குருக்கள் அவர்களைச் சூழ்ந்தே இருந்தன எனலாம். தனது சேமிப்பில் இருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை – அவரின் தந்தையாரும் ஈழத்துச் சிதம்பர நூலின் ஆசிரியருமான சிவஶ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் பெயரில் அமைக்கப்பட்ட ” கணபதீஸ்வரக் குருக்கள் நூல் நிலையத்துக்கு ” வழங்கி யாவரும் என்றுமே பயனுறச் செய்தார்.

    தள்ளாத வயதானாலும் தமிழையும் சைவத்தையும் மனங்கொண்டவராகவே குருக்கள் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு அவரின் தொண்ணூற்று ஏழாவது வயதில் “சைவக் களஞ்சியம்” என்னும் அரிய நூலின் தொகுப்பு ஆசிரியராய் இருந்து 2013 ஆம் ஆண்டில் வெளியீடு செய்தமை பெருஞ் சான்றாகும்.

    எழுதிபேசிபதிப்பித்துசமூகத்தில் முன்னின்ற குருக்கள் அவர்கள் அறவழியினையும் உபதேசிக்கும் ஆசானாயும் விளங்கி இருக்கிறார்கள். முப்பத்து இரண்டு விதமான அறங்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தார் என்று அறிய முடிகிறது. திருமணம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு உதவுதல் வேண்டும் என்பார். இறந்தவர் உடலைத் தகனம் செய்ய இயலா நிலையில் இருப்பார்க்கு உதவ வேண்டும் என்று எடுத்துரைப்பார். ஆதரவற்றோரை அரவணைத்தல்அவருக்கு இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல்கற்கும் மாணவர்களுக்கு உணவளித்தல்என்று பலவகை அறங்கள் செய்வது பெரும் புண்ணியம் என்றும் அவற்றைச் செய்தல் வேண்டும் என்பதும் குருக்கள் அவர்களின் விரிந்த பரந்த சிந்தனையாய் இருந்திருக்கிறது என்றும் அவரின் வரலாற்றால் அறிந்திட முடிகிறது.

    ஈழத்து மண்ணில் அதுவும் வட புலத்தில் காரைநகர் என்னும் புனித ஊரில் இப்படி ஒரு பேராளுமை, அந்தணப் பெரியோர் – சிவத்தமிழ் வித்தகராக, பண்டிதமணியாக, கலாநிதியாக, விளங்கி இருக்கிறார் என்பது சைவத்துக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த பெருமை என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    அந்தணர்க்குண் மனையனையான் அருங்கலைகள்
    மிகப் பயின்றான் அருமை ஆசான்
    சந்தததும் சிவனன்பு தழைக்கின்ற
    உள்ளத்தான் தகைசால் நண்பன்
    கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணாபுரங்
    கவினோங்குங் கருத்து மிக்கான்
    வந்தவருக்கு அமுதளிப்பான வண்பெயர்கொள்
    வைத்தீஸ்வரக் குருக்கள்

    Share
  • பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

    பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் “பக்தி இலக்கியம்” என்னும் சிறப்பாகும். பக்தி என்பது – இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய்வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா!

    பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும்வைணவ ஆழ்வார்க ளும்  உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி “பக்தியின் மொழி” என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் “பக்தி இலக்கியம்” தமிழின் தமிழ்ச்சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகிவிட்டது எனலாம்.

    சைவ பக்தி இலக்கியத்தின் எழுகின்ற ஞாயிறாக விளங்குவர் காரைக் கால் தந்த தவப்புதல்விதமிழ்ச்செல்வி, புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார் ஆவர். சிவஞானச் செந்திருவான இவ்வம்மையார் சைவத் திருமுறைகளின் தோற்றுதல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதை பலரும் ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆன்ம ஞானத்தைஆன்ம சுதந்திரத்தைஆன்ம முக்தியை பெற்று பெண் குலத்துக்கே பெருமையினைத் தேடித்தந்தவராக இவ்வம்மையார் திகழுகிறார் எனலாம்.

    சைவசமயம் போற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவர்மட்டுமே பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுள் மூத்தவராய் தலையானவராய் இருப்பவர் காரைக்கார் அம்மையார் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். மற்றைய பெண்களைவிட காராக்கால் தந்த தமிழ்ச்செல்வி யாவற்றிலும் முன்னிற்பவர் ஆகிறார் எனலாம். இவ்வம்மையாரைப் பன்முக நோக்கிலே தான் பார்க்கவேண்டி இருக்கிறது.

    தத்துவச் செறிவு மிக்கார். மெஞ்ஞான உணர்வு மிக்கார். சமயசாதனை மிக்கார். இலக்கியச் சாதனை மிக்கார். என்று இவரின் நோக்கு பரந்து விரிந்து சைவ பக்தி இலக்கியத்துக்கு வெளிச்சமாய் நிற்கிறது எனலாம்.

    அதிசயங்கள் இல்லாமல் பிறந்த அம்மையார் அனைவரும் மெச்சும் ஆன்மீக அதிசயமாகிறார். சித்துக்கள் அறியாத அம்மையார் சிந்தனைகளை விதைத்த பெரும் சித்தராகவே ஆகிறார் சைவபக்தி உலகில்.சாதாரண பெண்ணாக வளர்ந்து சாதாரணமாகவே இல்லறவாழ்வில் இணைக்க ப்படுகின்றார். இல்லறத்தில் நல்லறம் விளையும் வண்ணம் வாழ்ந்தவரின் வாழ்வில் ஆண்டவன் அருள் பாய்ந்து அவரின் கோலம் மாறுகிறது. குடும்பம் மாறுகிறது. சைவ பக்தி உலகுக்கு தத்துவஞான முத்துக் கிடை க்கிறது எனலாம். இது காரைக்காலில் வந்து பிறந்த ஏனைய பெண்களுக்கு வாய்க்கவில்லை. இவருக்கு மட்டுமே வாய்த்திருக்கிற தென்றால் திருவருள் என்பது கருவிலேயே வந்து அமர்ந்து விட்டது என்றுதான் கருத்தத் தோன்றுகிறதல்லவா! மாங்கனியின் வருகை ஒரு மங்கையின் வாழ்வையே பக்திக்குள் புகுந்துவிட வைக்கிறது! மாங்கனியால் மானிலத்துக்கே ஆன்மீக அம்மையாய் ஆகிவிடுகிறார் காரக்கால் ஈந்த புனிதவதியான தமிழ்ச்செல்வி!

    காரைக்கால் தந்த ஆன்மீக முத்து சைவ பக்தி இலக்கியத்தின் முன்னோ டியாக விளங்கினார் என்பதற்கு அவரின் பரந்துபட்ட செயற்பாடுகளே அர ணாகி நிற்கின்றன. கோவில்களில் இருக்கின்ற நாயன்மார்களின் சிலைகள் நின்றபடியே இருக்க காரைக்கால் அம்மையார் சிலைமட்டும் இருந்தபடி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மற்றவர்கள் எல்லாம் நிற்க இவர் மட்டும் இருக்கும் வண்ணம் சிறப்புற்றதற்குக் காரணந்தான் என்ன?

    மாங்கனியை இறைவனிடம் பெற்றதாலாபேயுடலுடன் கயிலை மலையில் தலையால் நடந்து அதியம் புரிந்ததாலாபுலமையில் சிறந்து விளங்கியதாலாதியாகங்களைச் செய்தலாலாஅப்படியெல்லா மெண்ணிப் பார்க்கையில் அம்மையாரைவிட பல செய்தவர்கள் இருந்திரு க்கிறார்கள் எனலாம். அப்படி இருக்க இவருக்கேன் இப்படிச் சிறப்பென்றால் “இவர் தோன்றி இருக்காவிட்டால் சைவமும் இல்லை மற்ற சிவன் அடியார்களும் இல்லை” என்பதனாலாகும் என்பது பல பெரியோர்களின் கருத்து எனலாம்.

    “இவள் நம்மைப் பேணும் அம்மை” என்று முழுமுதற் கடவுளான சிவனே செப்பியதாகக் கூறப்படுகிறது. உண்மையில் சைவத்தைப் பேணிய தாய்! சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெருஞ் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் அவர்களேயாவர். சமணமும் சாக்கியமும் சைவத்தை நிலைகுலையச் செய்யாமல் சைவத்தை தலைநிமிரச் செய்தவர் சைவம் நிலைபெறச் செய்தவர் காராக்கால் அம்மையார் என்பதனாலேயே அவர் முக்கியத்து வப் படுத்தப்படுகிறார். முன்னிலையில் அமர்ந்திருக்கிறார் எனலாம். எந்த ஒன்றும் தாயின் வயிற்றில்த்தான் பிறக்க வேண்டும் என்பதை நாமனைவரும் அறிவோம்.  முழுத்தன்னை பெற்ற சைவம் என்ற ஒன்றுசிவ வழிபாடு என்ற ஒன்று , காரைக்கால் அம்மையாராகிய தாய் வயிற்றில் பிறந்ததாகும் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.தமிழ் நாட்டில் சைவத்தைக் காத்திட்ட பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும் எனலாம். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்த்தான் பின் வந்த அடியார்கள் செப்பமாய் செல்ல முடிந்தது எனலாம். “தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாய்”  ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் என்னும் நிலையில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி புனித வதி அம்மையார் திகழுகிறார் எனலாம்.

    சைவசமயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாய் இருந்த காரைக்கால் அம்மையார் தமிழ் இலக்கியத்திலும் புத்திலக்கிய முன்னோடியாக மிளிர்கிறார் எனலாம். சங்க இலக்கியம் காதலை யும் , போரையும் கருவாய் கொண்டு மகிழ்ந்தது.காப்பியங்கள் சாதனை புரிந்த தலைவர்கள் புகழ்பாடி போற்றும் வகையில் எழுந்தன. ஆனால் பக்தி எனும் பாதையில் மலர்ந்த  பக்தி இலக்கியங்களோ மானுடக் காதலைமனிதனைப் புகழ்ந்து பாடுவதை விடுத்து இறைகாதலையும்பரமான்வாவைப் பாடுதலையும்இறை தொடர்பினைத் தேடுவனவாகவுமே மலர்ந்தன எனலாம். இவ்வாறு மலர்ந்த பக்தி இலக்கியத்தில் சிறப்பாக சைவபக்தி இலக்கியத்தின் முன்னோடியாக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார் எனலாம். நாயன்மார் களுக்குக் காலத்தால் முற்பட்ட இவ்வம்மையார் தமிழ் இலக்கியத்தில் பல இலட்சியப் புதுமைகளைச் செய்து புத்திலக்கிய முன்னோடியாக விளங்குகிறார் என்பதை தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் அனை வருமே ஏற்று நின்கின்றார்கள் என்பது மனம் இருத்தவேண்டிய கருத் தெனலாம்.

    அற்புதத் திருவந்தாதிதிருவிரட்டை மணிமாலைதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்பன அம்மையார் தமிழ் இலக்கியத்துக்கு அளித்த மிகப் பெருங்கொடைகள் எனலாம். முதல் ஆழ்வார்களின் பங்களிப்பும் அம்மை யாரின் பங்களிப்பும் பல்லவர் காலத்தில் பக்திப் பாடல்கள் தோன்றுவதற்கு விடிவெள்ளியாய் அமைந்தாலும் – பல்லவர்கால இலக்கியக்கியப் போக்கினுக்கு வழிகாட்டிய பெருமையினை அம்மையாரே பெற்றுக் கொள்ளுகிறார் எனலாம். அந்த வகையில் அம்மையாரின் பிரபந்தங்கள் விளங்குகின்றன என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வியந்து போற்றுகின்றனர். இந்த ரீதியில் காரைக்கால் தந்த தமிழ்ச்செல்வி காரைக்கால் அம்மையார் தமிழகத்துப் பெரும்புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க சிறப்பு வாய்ந்த தமிழிலக்கியப் படைப்பாளியாக விளங்கு கிறார் என்பது மிகவும் பொருத்த முடையதேயாகும்.

    நூற்று நாற்பது செய்யுட்களே காரைக்கால் அம்மையாரின் இலக்கிய வெளிப்பாடாய் கிடைத்திருக்கிறது.நான்கு சிறைய பிரபந்தங்கள் வாயிலாக இப்பாடல்கள் வந்திருக்கின்றன. குறைந்த அளவில் இலக்கியத்தில் இணைந்து நிற்கும் இவரை பெரும்புலவர் என்று எப்படிக் கருத முடியும்அப்படி எண்ணுமளவுக்கு அம்மையாரின் இலக்கிய ஆளுமைதான் என்னஎன்று சிந்திக்கத் தோன்றுகிறதல்லவா! இலக்கியத்தரம் என்பது எண்ணிக் கையால் வருவதுதல்ல! இலக்கியத்தைப் படைத்த சிறப்பினைக் கொண்டே தீர்மானிக்கப் படுவதெனலாம். அந்த வகையில் அம்மையாரின் ஆற்றல் அவரை உன்னத நிலையில் காணவே வைத்திருக்கிறது எனலாம்.

    பின்னால் வந்த நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பொருள் மரபிலும்,யாப்பு முறையிலும் அம்மையாரே வழிகாட்டியாய் அமைந்திருக்கிறார். அவரின் பிரபந்தங்கள் அவர்களுக்கு பாடமாக நல்லாசிரியனாக முன்னின்றது எனலாம். வெண்பாவைக் கையாண்டு சங்கமருவிய கால நிலையினைப் பேணினார். ஆனால் தனது உள்ளத்தில் எழும் தெய்வானுபங்களை , உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெண்பா யாப்பு சிறந்ததாக எனக்கருதி விருத்தம் என்னும் யாப்பினைக் கையெடுக்கின்றார். அம்மையாரின் இந்தச் சிந்தனையானது தமிழ் இலக்கியப் பாதையில் புதிய இலக்கிய மரபு ஆரம்பித்து வைத்தது எனலாம்.

    இசையால் இறைவனைப் பாடும் பதிகப் பாதையினை அம்மையாரே தொடக்கி வைக்கிறார். பதிகத்தின் நிறைவில் இடம் பெறும் திருக்கடைக் காப்புப் பாடலில் – பாடுபவர் பெயர்பாடுவோர் பெறும் நலன்கள்ஆகிய வற்றை ஆரம்பித்து வைத்தவரும் அம்மையாரே ஆவர். இதுவே சம்பந்தப் பெருமானுக்குக் கைகொடுத்தது எனலாம். அந்தாதி என்னும் யாப்பினை அம்மையார் காட்டுகிறார். பின்னர் தொடரும் இலக்கியப் பெருவழிக்கு இவையாவுமே பெருவெளிச்சமாய் அமைகிறது என்பதை மனமிருத்தினால் அம்மையாரின் ஆளுமை தெள்ளிதிற் புலனாகும்!

    நிலையாமையை வலியுறுத்தி இலக்கியம் பேசப்பட்ட நிலையில் – இல்லறத்தில் இன்பங்காணா இறைவன்பால் இன்பங்கண்ட காரைக்கால் அம்மையாரின் சிந்தனையும் அதன் நிமித்தம் வெளிவந்த அவரின் இலக்கிய வெளிச்சமும்மக்கள் மனதில் நல்லதோர் நம்பிக்கையினை வாழ்க்கையில் உருவாக்குவதாக அமைந்தது எனலாம். பெண்ணாக இருந்தும் ஈமப்புறங் காட்டினைக் கண்டு அஞ்சாமல் அங்கு ஆண்டவன் ஓயாமல் நடனமிடுகிறான் என்று கண்டு  கொள்ளுகிறார். இச்செயலானது அம்மையாரினால் அஞ்சிய பெண்களுக்குக் காட்டிய புதிய பாதையாக எடுத்துக் கொள்ளவும் – அம்மையாரின் புதியதான ஒரு சமயப்பாதையினைக் காட்டி நிற்பதையும் விளக்கி நிற்கிறது அல்லவா! இப்படிச் செய்தமையால் காரைக்கால் அம்மையார் தனித்துவம் மிக்க பெண்ணரசியாய் மிளிர்கிறார் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. சுடு காட்டில் இறைவனின் நடனத்தைக் காண ஒரு சாதரண பெண்மணி விரும்பியமையும்சுடலையினை நடனமிடும் இடமாகக் கண்டு ஆனந்தம் அடைந்தமையும் , அம்மையாரின் மனதில் தோன் றிய வித்தியாசமான போக்கினையே காட்டுகிறது எனலாம். அந்த நடனத்தை ரசிப்பவர்கள் பேய்களாக இருப்பதால் தனக்கும் பேய் உருவினை ஆண்டவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதும் அம்மையாரின் நிலையினை அடியார்கள் நிலையில் பார்க்கும்பொழுது மிகவும் வேறுபட்டமாறுபட்டபுதிய தொரு கோணத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    சிவனைப் பற்றி ஏனைய இலக்கியங்களில் காட்டியதை விட காரைக்கால் அம்மையார் தனது பாடல்கள் வாயிலாக காட்டிய பாங்கு மிகவும் வளர்ச்சி உடையதாகவே இருக்கிறது என்று பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் குறிப்படுவது நோக்கத்தக்கதாகும். “இறைவனுடன்  அன்பு பூண்டுஅவனுக்கு அடியவனாகவும்அடிமையாகவும், வாழ முற்படவேண்டும்.இறை வனை ஏத்தினால் பிறவி நீங்கும். இறைவனை நினைப்பவர் நெஞ்சுளே உறை கின்றான். அவனை அன்பு செய்யத் தொடங்கினால் அவலம் இல்லை. அவனிடம் அன்பு  செய்தால் இருவினை கழலும் என்ற கருத்துக்கள் சிவ வழி பாட்டு வரலாற்றில் முதன் முதலாகக் காட்டி தனது பக்திப் பனுவல்களை வழங்கியவர் காரைக்கால் அம்மையார் என்பது மனங்கொள்ளத் தக்கதெனலாம்.

    கரைக்கால் தந்த தவச்செல்வி , தமிழ்ச்செல்வி , புனிதவதி என்று பெருமையுடன் காட்டும் சேக்கிழார் அவர்கள் – அம்மையாரை சைவ பக்தி இலக்கிய வரலாற்றில் மிகவும் உன்ன்னத நிலையிலே வைத்து ஏற்றிப் போற்றுகிறார் எனலாம் பின்னே வரப்போகின்ற சம்பந்தர்அப்பர்சுந்தரர் ஆகிய அருளாளார்கள் பாடவிருக்கும் பதிகங்களுக்கெல்லாம் முன்னோடி யாகப் பாடிய பெருமை மிக்கவர் அம்மையார் என்பதால் அவரின் பதிகளுக்கு மூத்த நல்பதிகம்” என்னும் பெயரைக் கொடுத்து பெருமைப் படுத்துகிறார்.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு‘ என்னும் நிலையினை வெறுத்து நிற்கும் – சேக்கிழார் காரைக்கால் அம்மையாரின் பெருமையைக் காட்டி அவரைத்தொடர்ந்து திலவதியார்,  மங்கையற்கரசியார் போன்றவர்களைக் காட்டி பெண்கள் எல்லோருக்கும் – ஏன் பெண்களை ஒதுக்கிய சமூகத்துக்கேநல்லதோர் பாடத்தைப் புகட்டுகிறார் என்பது புலனாகிறதல்லவா?

    தமிழ் நாட்டிலே முதன்முதலாக சைவநாயன்மார் வரிசை யில்,வணங்கப் பெற்றவர் என்னும் பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார் அவர்களே ஆவர். சிலை அமைத்து வழிபாடும் அம்மையாருக்கு நடத்தப்படுகிறது. வணிகத்துக்குச் சென்றவர்கள் அம்மையாரின் சிலையினை எடுத்துச் சென்றுள்ளனர் என்று அறிய முடிகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலே இவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத் தென லாம். அம்மையாரின் வழிபாடானது தாய்லாந்து,  கம்பூச்சியா,  இந்தோனேசியாபாலிபோன்ற இடங்களில் பரவியிருக்கிறது என்பதையும் வரலாற்றால் கண்டு கொள்ளுகிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அம்மையாரின் வழிபாடு பரவி இருந்திருக்கிறது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றன என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    காரைக்கால் அம்மையாரின் வழிபாடு மட்டுமல்ல அவரின் வரலாறும் வடமொழிதெலுங்குகன்னடம் , போன்ற பிறமொழிகளிலும் பரவி இருக்கிறது  என்பது  தமிழ் மொழிக்கும் சைவத்துக்கும் கிடைத்த மிகப்பெரியசிறப்பு என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. அப்படிப் பெருமைக்குரியகாரைக்கால் ஈன்ற தவச்செல்விதமிழ்ச்செல்விபுனிதவதியான காரைக்கால் அம்மையினை நினைப்போம். அவரின் ஆற்றலைபக்தியை அனைவருடனும் பகிந்து அவரைப் போற்றி நிற்போம் .

    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்துபாடி
    அறவாநீ நீயாடும்போது அடியின் கீழுருக்க என்றார்”

    Share
  • ஆன்மீக ஒளிபரப்பிய  ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

    ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.     

    சித் என்றால் அறிவுஞானம்தெள்ளிய பார்வை, கூர் நோக்குவிரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் – சித்தர்களை அறிவாளிகள்ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள்கூர்ந்த நோக்கினை உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொடுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

    மக்கள் சேவையினை மகேசன் சேவையாய்” எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் – பல சித்தர்கள் இருக்கிறார்கள்அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகிறோம்.

    பாரத நாட்டில் திருமூலருடன் சித்தர் பரம்பரையினை இணைத்துக் கூறுவது வழக்கம். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இம்மண்ணு லகில் வாழ்ந்து பல அரியபெரியபணிகளையெல்லாம் ஆற்றினார் என்று அறிகிறோம். அவரின் பேராற்றல் வியந்து பார்க்கக் கூடியதாகும். அவரின் திருமந்திரம் என்னும் திவ்விய நூல் பலவித கருத்துக்களின் பொக்கிஷமாய் மிளிர்கிறது எனலாம். திருமூலரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பாரத மண்ணில் வந்தார்கள். அவர்களில் சிலர் ஈழத்திலும் கால்பதித்து சமூக நலனுக்காய் பலவற்றைச் செய்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

    ஈழத்துச் சித்தர்கள் என்றும் சொல்லும் பொழுது மற்றய சித்தர்களை விட மாறு பட்டவராய்வேறு பட்டபராய் ஒருவர் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்துஎல்லா இடமும் திரிந்து, யாவருக்கும் சுமை தாங்கியாய்ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவது சாலவும் பொருந்தும் என எண்ணுகின்றேன். ஆடையில் ஆரம்பரம் இல்லை. தனிப்பட்ட எந்த அலங்காரங்களும் இல்லை. எளிமையான வாழ்வு. பரிவாரங்கள் இல்லை. பவனி இல்லை. யாரும் சந்திக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதும் இல்லை. நாடியவர்களின் நலன் காக்கும் நன்மருந்து.

    நல்லூரில் தேரடியில் ஞானம் பெற்றுகொழும்புத் துறையில் குடிசையில் அமர்ந்து அருளாட்சி புரிந்து இறையடியைச் சரண் புகுந்த யோகர் சுவாமிகள்தான் அப்பெரும் சித்தராவார்.

    மாவிட்டபுரத்தில் சைவக்குடும்பத்தில் பிறந்து “சதாசிவன்” என்னும் பெயர் பெற்று கத்தோலிக்க பள்ளியில் “யோன்” என்று பெயர் மாற்றப்பட்டு நிறைவில் யோகநாதனாகிப் பின் “யோகர் சுவாமி” என்னும் சித்தராய் மலர்கிறார் இந்த மகான். தாயார் சிறுவயதில் இறக்கிறார். தந்தையார் மலை நாட்டில் வேலை செய்கிறார். மகனை எப்படியாவது படிக்க வைக்கத் தந்தை விரும்புகிறார்.

    தந்தையின் உடன் பிறந்த சகோதரன் சின்னையாவோ கொழும்புத் துறையில் கத்தோலிக்கப் பெண்ணை மணம் முடித்து அம்மதத்துள் நிற்கின்றார். அந்தச் சூழலில் சதாசிவன் – யோனாகி கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டதைக் கண்டதும்தந்தையுடன் பிறந்த சகோதரி முத்துப்பிள்ளை என்பவர் மருமகனை மீட்டு சைவத்துள் கொண்டுவர முயலுகின்றார். சமணத்துக்குச் சென்ற தம்பியை மீட்ட திலவதியார் போல – மருமகனைச் சைவத்துக்குள் இழுத்திட மாமியார் முன்வந்து நின்றார் எனலாம். மருமகனை மாற்று மதம் தீண்டா வண்ணம் சைவப் பற்றினை ஊட்டுவதற்காக மாமியார் முத்துப்பிள்ளை கையாண்ட வழிகள் நல்ல வெளிச்சமாய் அமைந்தது எனலாம். மாமியாரின் நெறிப்படுத்தலினால் – யாழ் மண்ணுக்கு நல்லதொரு சித்தர் கிடைக்கப் பெற்றார் என்பதும் பொருந்தும் அல்லவா!

    கந்தப்பெருமான் அருள்புரியும் மாவிட்டபுரத்தில் பிறந்தவர் கந்தப் பெருமான் அருள் புரியும் நல்லூரில் ஞானம் பெற்றார் என்பது திருவருள் அல்லால் வேறு எப்படி என்று  எடுக்க முடியும்!

    எல்லோரையும் போலவே சாதரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே வளர்ந்தார். சாதாரணமாகவே படித்தார். அதன் பின் அரச உத்தியோகமும் பார்த்தார். அவரின் பிறப்பில்கூட எந்த அதிசயமும் நிகழவில்லை என்பதும் நோக்கத்தக்கது. ஆனால் பெரும் மகானாகபெரும் சித்தராக அவர் வளர்ந்து நின்றார் என்பதற்கு இறையருளை தான் காரணம் எனச் சொல்லக்  கூடியதாக இருக்கிறது .

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு “     

    என்ற வள்ளுவத்தின் கருவே யாழ் மண்ணின் சித்தரிடம் நிறைந்து காணப்பட்டது எனலாம்.

    மற்றவர்கள் துயிலும் பொழுது ஞானி விழித்திருப்பான்” என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அது முற்றிலும் எங்கள் யாழ் மண்ணின் ஆன்மீக ஜோதி யோகர் சுவாமிகளுக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்தது எனலாம். கிளிநொச்சியில் சுவாமிகள் நீர்ப்பாசனப் பகுதியில் கடமையாற்றும் வேளை – வேலை முடிந்து மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவர். சுவாமியோ அவ்வேளை நித்திரையை விட்டு விட்டு நெடுநேரம் “தியானத்தில்” இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. சுவாமிகள் இப்படி இரவில் நடந்து கொள்ளுவதை – அங்கு சென்று வரும் அவரின் மாமியாரின் மகனாகிய  வயித்தியலிங்கம் என்பார் சுவாமிகளுக்கு “விசர்போக்கு” ஆரம்பித்து விட்டது என்று கூறியதாகவும் அறிய முடிகின்றது. கிளிநொச்சியில் இருந்த காலத்தில் – தேவாரம்திருவாசகம்திருமந்திரம், அருணகிரியார் பாடல்கள்தாயுமானவர் பாடல்கள்சித்தர் பாடல்கள்ஒளயார் பாடல்கள்ஆகியவற்றை மனனம் செய்திருக்கிறார் என்றும் அறிய வருகிறது.

    சுவாமிகளின் வாழ்கையில் அவரது இருபத்தைந்தாவது வயது குறிப்பிடத் தக்க காலம் எனலாம். அவர் வேலையை விட்டு யாழ்மண்ணுக்கு வருகிறார். இலங்கைவந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரைக் காணும் பேறும் அவருக்கு வாய்க்கின்றது. சுவாமி விவேகானந்தருக்கு யாழ்மண்ணில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்தும்விவேகானாந்தரிடத்தும்இராமகிருஷ்ண அமைப்பிலும் சுவாமிகளுக்கு மிகுந்த நம்பிக்கையும் ஈடுபடும் இருந்தது எனலாம். மயில்வாகனம் என்னும் மட்டுநகர் பெருமகன் இராமகிருஷ்ண அமைப்பில் இணைய விழைந்த வேளை அவரை ஆசீர்வதித்து வரவேற்று நின்றவர் யோகர் சுவாமிகளாவர். அந்த மயில்வாகனே பிற்காலத்தில் முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்த “சுவாமி பிபுலானந்த” அடிகள் ஆவர்.

    எப்பவோ முடிந்த காரியம்”

    முழுவதும் உண்மை”

    “நாமறியோம்”

    முழுவதும் உண்மை”

    இவையாவும் உபநிடத வாக்கியங்களின் மொழி பெயர்ப்புப்போல் தென்படுகிறதல்லவா ஆம் …. யாழ்மண்ணில் வந்து நின்ற மகா சித்தரான செல்லப்பா சுவாமிகளின் உள்ளத்தினின்றும் வெளிவந்த வாக்கியங்களே இம் மகா வாக்கியங்களாகும். இவற்றை உபநிடதம் அல்லால் வேறு என்ன வென்று சொல்ல முடியும் !

    நல்லூர் தெரிவில் சிரித்தபடி திரிந்தார். வெறித்த பார்வையராய் இருந்தார்.

    வேடம் எதையுமே விரும்பினர் அல்லர். கறுப்பு நிற மேனியும்கந்தையுமே

    அவரடையாளம். அவரைப் பித்தன் என்று மற்றவர்கள் பேசித்திரிவார்கள்.

    அவரை நாடி வந்தால் வந்தவரைப்பார்த்துச் சீறுவார். வீதியால் செல்லுபவர்களைப் பேசுவார். புகழ்சியே இகழ்ச்சியோ எல்லாவற்றையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளுவார். திருநீறு அணிய மாட்டார். நெற்றியில் பொட்டும் இருக்காது. முதல் கூறியதைத் திரும்பக் கூறாதவர். சாதியைசமயத்தைப் பேசி சங்கடத்துக்குள் அகப்படாதவர். இப்படியெல்லாம் இருந்தவர்தான் நல்லூர் தேரடியில் இருந்த பெரு ஞானிசித்தர்செல்லப்பராவர்.

    அந்த ஞானியை யோகர் சுவாமிகள் 1904 ஆம் ஆண்டில் நல்லூர் தேரடியில் காணுகிறார். “டேய் நீ யார்” என ஒரு உலுக்கு உலுக்கி “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்று உறுமினார். “தேரடாவுள்”,  “தீரடா பற்று”என்னும் உபதேசங்கள் அங்கு அவருக்குக் கிடைத்தன. செல்லப்பரின் உறுமல் யோகர் சுவாமிகளைக் கட்டிப் போட்டது.

    ஞான தேசிகனைச் சந்தித்ததும் அதனால் தன்னுள் ஏற்பட்ட பரிபூரண நிலையையும் சுவாமிகள் பாட்டாகவே காட்டியுள்ளார்.

    இருவருந் தேடிக் காணா இறைவன் என்போல் உருத்தாங்கி
    இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னான் இவனென்ன
    ஒருவரு மறியா தோடியுலாவி உவகை பூத்த முகத்தினராய்
    ஒருநாள் என்றனை உற்று நோக்கி ஓர் பொல்லாப்பு மில்லையென்று
    அருவமுங் காட்டி உருவமுங் காட்டி அப்பாற் கப்பாலாம்
    அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டிக் அந்த மாதி யில்லாச்
    சொரூபமும் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சுமத்தில் மாட்டிவிட்டான்
    துன்பம் இறந்தன இன்பம் இறந்தன சோதிசோதி சிவசோதி”

    உபதேசம் கிடைத்தும் சுவாமிகள் குருவை விட்டகலாதே இருந்தார். ஆனால் குருவோ அவருக்குச் சோதனைமேல் சோதனைகள் கொடுத்தார். தேறினார் யோகர் சுவாமிகள். ஆனால் செல்லப்பரோ ஏறியே விழுந்தார். இறுதியில் இரு யானைகள் ஒரு தறியில் கட்டப்படாது” என்று செல்லப்பர் கூறி சுவமிகளைக் கலைத்துவிட்டார்.

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு”

    இக்குறள் வழியில் யோகர் சுவாமிகள் இருந்தார். அதனால் குருவின் ஏச்சோபேச்சோ அவரை மாற்றிவிடக் கூடியதாக அமையவில்லை. எல்லாமே தனக்கு வாய்த்த உபதேசம் என்று சுவாமிகள் எடுத்துக்கொண்டார்.

    குருநாதர் செல்லப்பர் உடல்நலம் இல்லாது படுத்திருந்த வேளை சுவாமிகள் அவரைப் பார்க்கச் சென்றாராம். “என்ன பார்க்கப் போகிறாய்நில் அங்கேஉன்னைச் சிந்தித்துப் பார்” என்றாராம் செல்லப்பர். அவ்வார்த்தையுடன் திரும்பிய சுவாமிகள் அந்தப்பக்கமே போகவில்லை என்று அறிய முடிகிறது.

    யோகர் சுவாமிகள் கொழும்புத்துறையில் ஒரு சிறு கொட்டிலில் தனது வாழ்வினை ஆரம்பிக்கிறார். அங்கு ஆன்மீக ஒளி அனைவருக்கும் கிடைக்கிறது. சாதிசமயஇனமொழி, வேறுபாடுகளைக் கடந்து பலருமே அவரை வந்து வணங்குகிறார்கள். ஆசிகளைவாழ்த்துகளைப் பெற்று திருப்தி அடைகிறார்கள்.

    யோகர் சுவாமிகளை நாம் இன்றும் நினைத்து அவருக்குக் குருபூசை வழிபாடுகள் செய்வதற்குக் காரணம் அவரின் வாழ்வியல் முறைகளே எனலாம்.

    அவரின் பூரணமான துறவு நிலை அவரை பெரும் ஞானியாய் சித்தராய் மிளிர வைத்திருக்கிறது எனலாம். பலரும் சமூகத்தில் துறவு நிலையினை மேற் கொண்டு பிரமச்சாரிகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலையும்  யோகர் சுவாமிகளின் வாழ்வியலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதன்று. அவர்களின் நிலை வேறு. சுவாமிகளின் நிலை வேறு.

    தமக்கென வாழா பிறர்க்குரியவராய்” சுவாமிகள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தனக்கு நாளைக்குத் தேவை என்று கருதி எதையும் அவர் வைத்திருக்க எண்ணுவதே இல்லை. அன்பர்கள் கொடுப்பதில் ஒரு சிறுபகுதியை பயன்படுத்துவார். மற்றவற்றை எல்லாம் பங்கிட்டு அளித்து விடுவார். பணம்கூட அவருக்கு ஒரு பொருட்டல்ல. தேவையான பொழுது அவருக்குக் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக பொன்னோபொருளோ எதையும் சுவாமிகள் மனம் நாடுவதே இல்லை.

    பற்று இல்லாதவனிடத்து எல்லாப் பொருள்களும் வந்து சேரும்” என்பதற்கு சுவாமிகள் அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு எனலாம். இன்று சித்தர்கள்ஞானிகள்ஆன்மீக வழிகாட்டிகள் என்று நாட்டில் தலைவிரித்து நிற்கும் பலர் பொருள் ஒன்றே குறிக்கோளாய் மனமிருத்தி மக்களை ஏமாற்றி ஆன்மீகத்தையே இழிவு படுத்திக் கேவலத்துக்கு ஆளாகி நிற்பதை இன்று யதார்தமாகவே காணமுடிகிறதல்லவாஆனால் யோகர் சுவாமிகளோ பற்றினைப் பற்றா நின்றவர்”. பரமனைப் பற்றினார். பண்புகளைப் பற்றினார். சமூக நலன்களைப் பற்றினார். ஆன்மீகத்தைப் பற்றினார். அக ஒழுக்கத்தைப் பற்றினார். அன்பைப் பற்றினார். ஆறுதலைப் பற்றினார்.

    பலவித கொள்கையினை உடையவர்கள்அரசியலில் உயர் நிலையில் இருப்பவர்கள்அரச உயர்பதவிகளில் இருப்பவர்கள் என்று பலவகைப் பட்டவர்கள் சுவாமிகளை நாடி வருவர். வருபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்திட சுவாமிகள் விரும்பியதே இல்லையாம். இப்படி சுவாமிகள் நடப்பதால் வருபவர்கள் மனதில் – தங்களின் கொள்கையினை உடையவர் தான் சுவாமிகள் – என்னும் எண்ணம் உருவாகி விடுகிறது எனலாம்.

    பார்க்கும் இடமெங்கும் நீக்கமறப் பரம் பொருளையே”  சுவாமிகள் காண்பதனால் அவருக்கு வருபவர்கள் வேறுபாடுகள் தென்படுவதில்லை எனலாம்.” ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செய்ய வேண்டும்” என்பதை வருபவர்களுக்கு சுவாமிகள் பெரும் உபதேசமாக வழங்குவார். பஞ்சமா பாதகங்களை ஒருவன் ஒழித்தாலே வாழ்வு சிறக்கும் என்பது சுவாமிகளின் பெரு நம்பிக்கையாய் அமைந்தது. துறவு பூண்டுதான் உண்மையினை உணர வேண்டும் என்பதில்லை. இல்லறத்தே இருந்தாலும் நல்லறமாய் வாழ்க்கையினை அமைத்துக் கொண்டால் உண்மையினை உணரலாம் என்பது சுவாமிகளின் நல்ல தொரு தத்துவமாயும் வாழ்வியலுக்கு ஏற்ற வழிகாட்டியாயும் அமைந்தது எனலாம்.

    உலகத்தைத் திருத்த முயலுதல் என்பது நாய் வாலை நிமிர்த்த முயல்வது போலாகும். உன்னை முதலில் திருத்த முயற்சி செய். உலகத்துக்கு நன்மை செய்ய முற்பட்டால் நாமே அதிக நன்மையை அடைகிறோம் என்பதை நாம் அனைவருமே உணருதல் வேண்டும் என்னும் அரிய தத்துவத்தை சுவாமிகள் மொழிந்திடுவார். இது யோகர் சுவாமிகளின் சமுதாய அக்கறையினைப் பறைசாற்றி நிற்கிறதல்லவாமுற்றும் துறந்த பற்றற்ற சித்தரான யோகர் சுவாமிகளின் இச்சிந்தனையாலேதான் இன்றும் நாம் அவரை நினைக்கவும் பூசிக்கவுமான நிலை ஏற்படுகிறது எனலாம். துறவி என்றால் காட்டுக்குப் போய் கடுந்தவம் ஆற்றுவதல்ல. நாட்டுக்குள்நாட்டு மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து நாட்டுமக்களின் நல் வாழ்வுக்கு வெளிச்சமாய் இருப்பதுதான் சரியான துறவியின் இலட்சணம்இலக்கு என்பதைக் காட்டியவர் யோகர் சுவாமிகள் என்பதை எவருமே மறுத்துரைத்துவிட முடியாது! அதனால் தான் அவரை நாடு கடந்தும் மொழி கடந்தும் இனங்கடந்து பின்பற்றிப் பல சீடர் பரம்பரையும்நல்ல வழிகாட்டுதல்களும் மலர்ந்திருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    யோகர் சுவாமிகளின் நெறிப்படுத்தலால் பல இளைஞர்கள் வாழ்விலே திருந்தி இருக்கிறார்கள். பொதுமக்களுக்கான சேவைகளை இன்றும் யாழ்மண்ணில் செய்து கொண்டு பல உள்ளங்கள் இருக்கின்றன என்றால் அதற்கெல்லாம் வித்தாகி உரமாகி நிற்பவர் யோகர் சுவாமிகளே ஆவர். ஆண்டவன் இல்லை என்று அடித்துக் கூறியவர்கள் பலர் சுவாமிகளின் அறிவுரைகளால் ஆன்மீகத்தில் நாட்டங் கொண்டு ஆண்டவன் புகழ் பாடும் நிலையில் வந்து நின்றார்கள் என்பதும் அறியக்கூடிய ஆனந்தமான அவசியமான தகவல் எனலாம்.

    திருவாசகத்தை பெரிதும் சுவாமிகள் விரும்பினார். திருவாசகத்துள்ளும் சிவபுராணத்தை அவர் முக்கியத்துவப் படுத்தினார். ஈழத்தில் சிவபுராணம் பள்ளிகள் தோறும் வெள்ளிக் கிழமைகளில் பிராத்தனை மண்டபத்தில் படிக்கப்படுவதற்கும் யோகர் சுவாமிகளின் வழிகாட்டலே துணையாய் அமைந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிவதொண்டன் நிலையம் சுவாமிகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இராகமாகப் பாடி திருமுறைகளை ஓதுவதில் சுவாமிகள் பெரு விருப்புடையவராக இருந்தார் எனலாம். அவரின் திருவாக்காய் மலர்ந்திருக்கும் “நற்சிந்தனைகள்” மிகப் பெரிய தத்துவக் கருத்துகளை உள்ளடக்கிய எமக்கு வாய்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

    சித்தர் என்றால்யோகி என்றால்ஞானி என்றால்சாத்திரம் சொல்லுவார். தொட்டவுடன் நோய்களைப் போக்குவார். கேட்டவற்றை உடனே கண்முன்னே வரவழைத்துக் கொடுப்பார். உருவை மாற்றுவார். சித்துக்கள் காட்டுவார். என்றெல்லாம் நாம் அனைவரும் எண்ணியே நிற்கின்றோம். இப்படியெல்லாம் செய்யும் நிலைக்கும் ஞானத்துக்கும் எந்தவித தொடர்புமே இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். இதை நம்மில் பலர் அறியவில்லை எனலாம்.

    யாழ்மண்ணின் யோக புருஷரான யோக சுவாமிகள் மானிடம் தளைக்க நல்ல ஆன்மீக ஒளி பாய்ச்சிட வந்த மகானாகவே விளங்கினார். அவரிடமும் எதிர்காலத்தை அறியும் ஆற்றலும்வருகின்ற அல்லல்களை அறியும் ஆற்றலும்நிரம்பியே இருந்தது. ஆனால் அவர் அவற்றை மக்கள் மத்தியில் காட்டி செல்வாக்கினைப் பெற்றிட ஒரு நாளுமே எண்ணம் கொண்டவராக இருந்ததே இல்லை. தனது மனதுக்குப் பட்டால் சிலவேளை சிலருக்கு வழி காட்டியிருக்கிறார் என்பதை அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ள முடிகிறது. “பெரியோர்களை நாடுவதன் தலையாய நோக்கம் நம்மைச் சீர்படுத்துவதற்கே அன்றி வேண்டியதைப் பெறுவதற்கு அல்ல” என்னும் கருவினைத் தமது உள்ளத்தில் கொண்டு செயற்பட்டபடியால் தான் இன்றும் நாம் யோகர் சுவாமிகளை நினைத்து அவரைப் போற்றுகிறோம் எனலாம்.

    Share
  • நற்றுணையாவது நமச்சிவாயவே

    நற்றுணையாவது நமச்சிவாயவே

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும்வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்கு கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். பசித்திருவில் – பதனித்திருவில் – தவிழித்திருவில் – விஇம்மூன்று எழுத்தையும் சேர்த்தால்  வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்து விடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவாபதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி அதாவது இறைவனது அருள் என்னும் பதவிமனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவிஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில்எழுந்திடும் பதவிஎன்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவசமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்பு காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோமற்றவரைக் குறை சொல்லுவதோ  தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ, சீட்டாடுவதோ, களியாட்ட விடுதிகளை நாடுவதோ, முறையல்ல. விழிப்பது முக்கிய மானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருடபுராணம்அக்னிபுராணம்அருணாசலபுராணம்சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றி யெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும்அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப் பிளம்பாக காட்சி கொடுத்த சம்பவமும்அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும்கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடிங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பலகாலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசிமாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு புராணக் கதைகளை விட அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவாஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடை கின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும் அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை  நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியைமகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே

    ஆசீர்வாதம் (Self Blessing)  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும்.

    இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    சிவன் என்றால் மங்களம் என்பது பொருளாகும். அந்த மங்களமான சிவனைக் குறிப்பதுதான் சிவராத்திரி. எம்மை யெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் ஒரு பற்றுக்கோடு தேவையாகின்றது. அந்தப் பற்றுக்கோடாக விளங்கும் ஆற்றல்தனைத்தான் சிவன் என்கிறோம். இந்தச் சிவனை உருவமாய்அருவமாய்அருவுருவமாய் வழிபடுகிறோம். இது சிவ வழிபாட்டில் அமைந்திருக்கும் சிறப்பெனலாம்.

    சிவனுக்கு உகந்த மந்திரமாய் பஞ்சாட்சரம் மந்திரம் விளங்கு கின்றது என்று அருளாளர்கள் எடுத்து மொழிந்திருக்கிறார்கள். சம்பந்தர் தொடக்கம் மணிவாசகப் பெருமான்திருமூலர். அருணகிரி நாதர்வரை சொல்லி இருக்கிறார்கள். சைவசித்தந்தமே நமச்சிவாய என்னும் நாமத்தைப் பெரிதும் போற்றி அதற்கெனப் பல தத்துவார்த் தங்களையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பதையும் காணமுடிகிறது எனலாம்.

    வேதம் நான்கினும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே”

    நற்ற வாவுனை நான்ம றக்கினும்
    சொல்லும் நாநமச்சி வாயவே”

    நமச்சிவாய வாழ்க”  இந்த வார்த்தை சிவனைக் குறிக்கும் சக்தி மிக்க வார்த்தையாகும்.

    நமசிவாய என்பதற்கு – சிவனை வணங்குகிறேன் என்பது அர்த்தமாகும். இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்வில் நலம் பெருகும். மனம் வெளிக்கும். சிவனின் அருள் என்றுமே துணையாகி நிற்கும்.

    நமசிவாய மந்திரதை உச்சரித்தால் உலக இன்பங்கள் கிடைக்கும். நலம் பெருகும்.ஞான மார்க்கத்தின் முதற்படிக்கு எம்மையெல்லாம் இட்டுச் செல்லும்.ஆகவேதான் அடியார்கள் இம்மந்திரத்தை உயிரெனப் போற்றினார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சிவராத்திரியில் இந்தச் சக்திமிக்க சித்திவழங்கும் “நமச்சிவாய” என்னும் நாமத்தை மறவாமல் மனமார நினைந்து வாயாலே உச்சரித்தால் நிச்சயம் பரம்பொருளான அந்தச் சிவனின் அருள் கிட்டுவதோடு எமது அழுக்கான மனமெல்லாம் அழுக்ககன்று ஆண்டவனின் நினைப்பு நிச்சயம் அமரும் என்பதை அனைவரும் அகமிருத்துவோம்.

    எமது சமயம் நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந் தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினைத் தெளிவாக்கல் சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திடச் சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    “சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    “சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானவன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே” 

    “இல்லக விளக்கது விருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே” 

    Share
  • பெண்களுக்கும் சமூகநீதி!

    பெண்களுக்கும் சமூகநீதி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமைபெண்களின் நலன்யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலாளர்களின் உரிமையை, பிரச்சினைகளை, மனமிருத்தி – உலகெலாம் ஒலிக்கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும்அவர்களின் செயற்பாடுகளுக்கும் பெரும் உந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரம்பெண்களின் வாக்குரிமைபெண் அடிமை, விடுதலைஎன்னும் கோஷங்களுடன் பேரெழுச்சியாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும். இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண்களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது. ஜேர்மனிஆஸ்திரியாடென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப்பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் ‘ சர்வதேச மகளிர் தினத்தைக் “ கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயிஸ் இணக்கம் தெரிவித்தார். இது இடம் பெற்றது மார்ச் மாதம் 8ம் திகதியேயாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டுதோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் 8ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முன்வந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை  வென்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  ” பெண்கள் ” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்குபெண்களுக்கு பேசும் உரிமை எதற்குபெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்குபெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை எதற்குபெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள்.இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும்.அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண்கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணுகிறோம். ஆனாலும் பெண்களுக்கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை.

    பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. இன்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும்சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடைமுறை வாழ்வில் சமஉரிமை கிடைப்பதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியாகவும்இன சமூகரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும் அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்களின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது. காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது.

    நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்

    என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக்கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செயலாக்குதல் மிக  அவசியம்.

    Share
  • தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். ஆனால் சென்றவருடம் பொங்கலைப் பொங்கி மகிழ்ந்த பின்னர் கண்ணூறு பட்டதுபோல் சீனாவின் சீதனம் வந்திறங்கியது. சீதனத்தின் சீரழிவால் வாழ்வே தடம்புரண்டு நிற்கும் நிலை ஆகிவிட்டது. பொங்கல் இப்பொழுது வந்து நிற்கிறது. பொங்குவதா விடுவதா? பொங்கினால் பகிர்ந்து கொடுத்து மகிழலாமா? அல்லது அவரவர் பாட்டில் வீட்டிலே பொங்கி நிற்பதா என்றெல் ல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம் குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் ”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    ” உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், அத்தனையும் சீனாவின் சீதனத்தால் நாளும் பொழுதும் சீரழியும் நிலையினைப் பற்றிய அறிவிப்புக் களை வெளிப்படுத்தியபடி இருக்கின்றன. “வாழப்பழகிக் கொள்ளுங்கள்” என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு பரவிய பாவி பரந்து நிற்கிறது. விலத்திப் போகவேண்டும். பாதுகாப்புடன் வாழுவோம் என்னும் நிலையில் இவ்வருடப் பொங்கல் வந்திருக்கிறது.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்கரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வாய்ப்பு வருமா என்பதை எண்ணியே யாவரும் சிநதனைக்குள் மூழ்கி நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    என்றாலும் இதுவும் கடந்து போகும் என்னும் துணிவுடன் பொங்கலை மங்கலமாய் வரவேற்றிடத் துணிய வேண்டும் என்றும் ஒரு பக்கம் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

    அப்படிச் சொல்லும் வேளையில் தைப்பொங்கலைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா? பார்த்தால் மனதின் கலக்கம் சற்று ஓய்வெடுக்கும் அல்லவா?

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப் படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறதுஇந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள்உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப் படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப் படுகின்றன.இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமை யாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசிபால்சர்கரைகரும்பு, இஞ்சிமஞ்சள்வாழைமாவிலைஇவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன் படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமாவருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப் படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம்உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய்கபடுசூதுவாதுஇவற்றையெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரைபெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல்போகித்திருநாள்காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ. புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம்.மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாப மாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும்இந்துக்களாயினும்தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    Share
  • மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!

    மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    இருபதே சென்றுவா
    இருபதொன்றே நன்றுவா
    வந்திடும் கொரனாவை
    வராதுமே செய்துவா!

    நல்லன அளிக்கவா
    வல்லன கொடுக்கவா
    வெல்லுவோம் என்றிடும்
    வீரத்தை உணர்த்தவா!

    மதுவினை ஒழிக்கவா
    மங்கையர் காக்கவா
    சதிகளை தடுக்கவா
    சன்மார்க்கம் நிலைக்கவா!

    அரசியல் சிறக்கவா
    ஆட்சிகள் நிலைக்கவா
    கயமைகள் விரட்டவா
    கண்ணியம் காக்கவா!

    உழவர்கள் உயரவா
    உழைப்பவர் சிரிக்கவா
    கயவர்கள் ஓடவா
    காமுகர் மடியவா!

    ஆணவம் அகலவா
    ஆன்மீகம் பெருகவா
    நாடெலாம் நலமுடன்
    நாளுமே இருக்கவா!

    கற்றிடும் மாணவர்
    கல்வியில் உயரவா
    பெற்றவர் வாழ்விலே
    பெருஞ்சுமை குறையவா!

    மழைவளம் சிறக்கவா
    வறட்சியை விரட்டவா
    மாநிலம் எங்கணும்
    மங்கலம் பொங்கவா!

     

    Share
  • நாவலர் பெருமான்!

    நாவலர் பெருமான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அன்னியமாம் பேரிருளில் அகப்பட்ட சைவமதை
    முன்னின்று பேரொளியாய்க் காத்திடவே வந்தமைந்த
    நல்லைநகர் நாவலராய் நல்வரமாய் ஆறுமுகம்
    எல்லோரும் மதித்திடவே பிறந்தனரே ஈழத்தில்

    கருவினிலே சமயநெறி நிறைந்தவராய்ப் பிறந்தமையால்
    கருதியது அத்தனையும் சமயநெறி ஆகியது
    குறைகளையப் புறப்பட்ட குறையில்லாப் பெருமகனாய்
    நிறையறிவாய் விளங்கினரே நிமலனருள் நாவலரும்

    நீறணிந்த மேனியராய் நெஞ்சமெலாம் சிவனினைவாய்
    ஆறுமுக நாவலரும் ஆசாரம் பேணினரே
    தந்தையினைக் குருவாக்கி தாம்கற்றார் பலவற்றை
    ஐயமின்றி கற்பதிலே அவர்கவனம் நின்றதுவே

    ஆங்கிலத்தைக் கற்றிட்டார் அன்னியத்தை ஒதுக்கிட்டார்
    அழகுதமிழ் இலக்கணத்தை அறிந்துவிட உரைவகுத்தார்
    பாமரரும் விளங்குதற்குப் பாங்கான உரைநடையைப்
    பக்குவமாய் வழங்கிட்ட வல்லாளர் ஆகிநின்றார்

    சமயத்தை விளக்குதற்குச் சரியான வழியென்று
    பிரசங்க வடிவத்தைப் பேருரமாய்க் கொண்டாரே
    அரனாரின் ஆலயங்கள் அரங்கமாய் ஆக்கியே
    ஆறுமுக நாவலரும் அரும்பணிகள் ஆற்றிநின்றார்

    சமயத்தை வளர்ப்பதற்குத் தமிழையே கையெடுத்தார்
    தமிழ்கொண்டு சைவத்தைத் தான்விளக்க முன்னின்றார்
    கல்வியொடு ஒழுக்கமதைக் கற்பிக்கப் பலபள்ளி
    நல்லைநகர் நாவலரும் நன்றாகத் தாபித்தார்

    அன்னைத் தமிழோடு ஆங்கிலமும் வடமொழியும்
    ஆறுமுக நாவலரின் அரணாக அமைந்ததுவே
    கேட்டிடுவார் மனம்பதியக் கருத்துரைக்கும் ஆளுமையால்
    நல்லைநகர் பெருமானார் எல்லையிலாப் புகழடைந்தார்

    ஈழத்தின் வரலாற்றில் இணையில்லாப் பெருமகனாய்
    நல்லைநகர் நாவலரை நாடுபோற்றி நிற்கிறது
    வேதமொடு ஆகமங்கள் விளங்குகின்ற சைவமதம்
    நாவலரை நினைப்பதற்கு நம்சொத்தாய் அமைந்திருக்கு

    Share
  • கதிரவன் எழுந்தனன் !

    கதிரவன் எழுந்தனன் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    கதிரவன் எழுந்தனன்
    காரிருள் அகன்றது
    பறவைகள் பாடின
    பகலவன் மகிழ்ந்தனன்
    நிலமகள் மலர்ந்தனள்
    நீள்துயில் கலைந்தது
    மலர்களின் வாசனை
    வளியினில் கலந்தது

    சங்கொலி கேட்டது
    சன்னதி திறந்தது
    மங்கல வாத்தியம்
    மனமதை நிறைத்தது
    கருவறை திறந்தது
    கரமெலாம் குவிந்தன
    மந்திரம் ஒலித்தது
    மனந்தெளி வடைந்தது

    மணிநிறை கதிர்கள்
    மண்ணினைத் தொட்டன
    குலையொடு வாழைகள்
    தளர்விலா நின்றன
    அணிலது கடியால்
    சிதறின மாங்கனி
    அயர்விலா உழவர்
    வயல்களில் இறங்கினர்

    கன்றுகள் ஓடின
    கறவைகள் சுரந்தன
    வண்டுகள் பறந்துமே
    தேனினைச் சுவைத்தன
    மயில்களும் ஆடின
    குயில்களும் கூவின
    பனித்துளி நிலமெலாம்
    பளிச்செனச் சிரித்தது

    Share
  • தீபம் ஏற்றுவோம்!

    தீபம் ஏற்றுவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
    வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
    வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர்

    அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
    அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
    சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    கார்த்திகைப் பெண்கள் ஏந்திய குழந்தை
    கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க
    கந்தனைச் சொந்தமாய்க் கொண்டிடும் பக்தர்
    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    மாலயன் அடிமுடி தேடிய நிலையில்
    மாபெரும் சோதியாய் வந்தனன் சிவனும்
    பேரொளிப் பிழம்பு தோன்றிய நாளை
    யாவரும் கார்த்திகைத் தீபமாய்க் கண்டனர்

    அக்கினித் தலமாய் ஆகிய தலத்தில்
    அகண்ட தீபம் ஏற்றுவார் அடியார்
    கார்த்திகை நாளில் ஏற்றிடும் தீபம்
    கந்தனைத் தந்தையை இணைத்திடும் தீபம்

    சோதியாய் சுடராய் ஆகிடும் தெய்வம்
    ஆதியாய் அந்தமாய் ஆகிடும் தெய்வம்
    அப்பனாய், பிள்ளையாய் அமைந்திடும் தெய்வம்
    அனைத்துமே கார்த்திகைத் தீபத்துள் சுடருமே

    Share
  • கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

    கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    விரதம் என்றால் என்னபசித்திருப்பது.  தனித்திருப்பதுவிழித்திருப்பது. அதே வேளை மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஒரே நோக்கோடு இருப்பது. இரண்டுமே வாழ்வில் நன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் இரண்டுமே பொருந்தும்.

    விரதங்கள் என்று பார்க்கும் பொழுது எங்கள் சமயமானது நாளுக்கான விரதம். வாரத்துக்கான விரதம்மாதத்துக்கான விரதம் என்று வருடம் முழுவதுக்குமே விரதங்கள் பல அமையுமாறு வழி வகுத்து விட்டிருக்கிறது. வருடம் முழுவதும் தெய்வீக சிந்தனையுடன் மனத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை எனலாம்.

    இன்பமும் துன்பமும் கலந்ததுதான் இந்த உலக வாழ்க்கையாகும். நம்முடைய முன்வினைப் பயன்களே இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது என்பதுதான் சமயத்தின் நிலையாகும். இப்படியான வினைகளிலிருந்து விடுபட்டு இன்பங்களைப் பெருக்கிக்கொள்ள அமைந்த வழிதான் விரதங்கள் எனலாம்.

    இறைவனை எப்பொழுதுமே சிந்தையில் நிறுத்திக் கொள்ளுவது என்பது ஞானிகளுக்கு எளிதானதாகும். இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இது அவ்வளவு எளிதன்று. எனவேதான் ஒரு குறிப்பிட்ட நாட்களை நிர்ணயித்துக் காட்டிய பாதைதான் விரதங்களாக வந்து அமைந்திருக்கின்றன என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    சிவனைக் குறிக்க கார்த்திகைச் சோமவார விரதம் கார்த்திகை உமா மகேஸ்வர விரதம்மார்கழி திருவாதிரை விரதம்தைமாத சூல விரதம்மாசிமாத மகா சிவராத்திரி விரதம்பங்குனி உத்தரத் திருக்கல்யாண விரதம்வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம்ஐப்பசி மாத கேதார கெளரி விரதம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. நவராத்திரி நிறைவு பெறும் விஜயதசமி அன்று கேதார கெளரி விரதம் ஆரம்பமாகி இருபத்தொரு நாட்கள் அனுடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரி நிறைவில் ஆரம்பித்து தீபாவளி அன்று இவ்விரதம் நிறைவுறுகிறது. நவராத்திரியில் பெண்மை போற்றப்படுகிறது. கெளரவிரதத்திலும் பெண்மை போற்றப்படுகிறது. தீபாவளிக்கும் அடிப்படையின் பெண்மையான சக்தி என்பதும் நோக்கத்தக்கதேயாகும். மூன்றுமே சக்தியுடன் இணைந்து பெண்மைக்கு, தாய்மைக்கு முக்கியத்தைக் கொடுக்கிறது என்பது வாழ்வியலுடன் இணைகிறது அல்லவா?

    சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் இருக்கும் பொழுது தரிசனம் செய்வதற்கு பிருங்கு முனிவர் அங்கு வருகிறார். வந்தவர் சிவனை மட்டுமே வலம்வந்து வணங்கி நிற்கிறார். பிருங்கு முனிவர் சிவனைமட்டுமே வணங்கியது எதற்காக என்று பார்வதி, சிவனிடம் வினவுகிறார். உலகத்தின் இயக்கத்தையே உணர்ந்த சிவன், பார்வதியின் உள்ளக் கிடக்கையினை அவரின் வினாவினால் உணந்துகொண்டார். அன்பும் சிவமும் இரண்டல்ல ஒன்றேதான் என்பது போல – “சிவனும் சக்தியும் இரண்டல்ல ஒன்றேதான்” என்று எண்ணினார். இறைவன் நினைப்பு பார்வதிதேவியிடம் பதிந்தது. பார்வதி தேவியார் இறைவனைக் குறித்து இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்தார். பார்வதியின் விரதத்தைக் கண்ணுற்ற சிவன் அவர்முன் தோன்றி “உனக்கு வேண்டியதைக் கேள்” என்றார்.  “இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்தஉலகின் முதல்வனான நீங்கள் உங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும்”  என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் தன்னுடம்பில் பாதியை அன்னை பார்வதிக்கு கொடுத்து “சிவனும் சக்தியும் ஒன்றே” என்னும் நிலையினை ஆக்கினார்.

    இங்கே கேதார கெளரி விரதம் பற்றிய நிலை கதைவடிவில் புராணமாய் வழங்கி வருகிறது. இங்கே சிறந்ததோர் வாழ்வியல் தத்துவம் வெளிப்பட்டு நிற்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம்.

    மனித வாழ்வில் இல்லற வாழ்க்கை என்பது அன்பின் அடிப்படையில் அமைதல் மிக மிக அவசியமாகும். அன்பு என்பதுதான் இல்லறத்தின் ஆணி வேராகும்.அன்பு மலரும் இல்லறம்தான் நல்லறமாக மலரமுடியும். பெண்கள் என்பவர்கள் சக்தியின் வடிவமாவர். ஆணுக்கு வாழ்க்கையில் அருந்துணையே பெண்தான். இதனால்த்தான் வள்ளுவம் “வாழ்க்கைத்துணை” என்னும் தேடற்கரிய பெயரினைச் சூட்டியது எனலாம். வாழ்க்கையின் துணையான பெண்தான் இல்லறத்தின் உயிர்நாடியாகிறாள். அந்தப் பெண்மைக்கு முக்கியத்துவம் நல்குவதுதான் “கேதார கெளரி விரதம்” ஆகும்.

    சுமங்கலியாய் வாழ்வதையே இல்லறத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் பெருமையாய் பெருவரமாய் எண்ணுகிறார்கள். அந்தப் பெருவரத்தை அவர்களுக்குப் பெற்றுத்தரும் விரதமாக “கேதார கெளரி விரதம்” அமைவதுதான் வாழ்வியலின் மிகச்சிறந்த நிலை எனலாம்.

    ஜோதிடவியல் வழியில் சூரியனும் சந்திரனும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். இரண்டுமே மனித வாழ்வியலோடு இணைந்தே நிற்கின்றன.

    சூரியனை தந்தைக் கிரகமென்றும் சந்திரனை தாய்க்கிரகமென்றும்சூரியனுக்கு உரிய தேவதையாக பரமேஸ்வரனையும் சந்திரனுக்குரிய தேவதையாக கெளரியையும் காட்டும் நிலை ஜோதிடத்தில் இருக்கிறது.

    கேதார கெளரி விரதம் இடம்பெறும் காலத்தில் சூரியன் தனது வலிமையை இழந்து காணப்படுகிறது. அவ்வேளை சந்திரன் இணையும் நிலையில் அதாவது  அமைவாசையில் நல்லதொரு சங்கமம் நிகழ்கிறது. தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் இணையும் காலம் கேதார கெளைரி விரதம் பூர்த்தியாகும் நாளாக அமைவதும் “ஆணான சிவனும் பெண்ணான பார்வதியும்” இணைவதும் மிகவும் பொருத்தமாய் அமைகிறது என்று ஜோதிட நிலை காட்டுகிறது.

    எந்த நிலையில் பார்த்தாலும் ஆணும் பெண்ணும் இணையும் அற்புத நிகழ்வு கேதார கெளரி விரதத்தின் வாழ்வியல் முறை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

    இல்லறத்தின் உயிர்நாடியே இந்த இணைப்பு அல்லவாஅந்த இணைப்பை நல்கிடும் “கேதார கெளரி விரதம்” நல்லதோர் வாழ்வியல் தத்துவமாக மலர்ந்து நிற்கிறது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
    கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

    Share