பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.
புதுமைக்கவிஞர், புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய் பாடிநின்றார். பொறுக்கும் இடத்தில் பொறுத்தார். பொங்கும் இடங்களில் பொங்கிப் பிரவாகித்தார். தலைகுனிந்து வாழுவதை தரக்குறைவாய் நினைத்தார். தலை நிமிர்ந்துவாழ தான் எழுதி நின்றார். காலத்தின் குரலாக அவரின் கருத்துகள் எழுந்தன. வீரமும், மானமும், ரோஷமும், உணர்ச்சியும், அவரின் சொத்துக்களாய் அமைந்தன. சிறுமை கண்டு சீறினார். வறுமைகண்டு பொங்கினார். அடிமையென்னும் சொல்லை வாழ்வில் அகற்றிவிட எண்ணினார். சுதந்திரமாய் மூச்சுவிட துணிந்து பல கூறினார். பக்தியைப் பேசினார். பண்பினைப் பேசினார். புத்தியைத் தீட்டிட புகட்டினார் பலவற்றை. வையத்துள் வாழ்வாங்கு வாழுவதை விரும்பினார். தெய்வத்தை நம்பினார். நல்ல நம்பிக்கைகளுக்கு வரவேற்பளித்த பாரதி மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணியடிக்கவும் தவறவில்லை. திருந்திய வாழ்வும் சிறப்பான சமூகமும் அமைய வேண்டும் என்னும் பேரவா பாரதியின் உள்ளத்தில் உறைந்த காரணத்தால் அதை நோக்கிய அவரின் செயற் பாடுகளும் அவரின் சிந்தனையால் வந்த பல படைப்புகளும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.
எந்த நாடென்றாலும் எந்த மொழியென்றாலும் காலத்தின் போக்குக்கு இணங்கவே இலக்கியம் அமைகிறது எனலாம். 19-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியத்துக்கும் 20-ம் நூற்றாண்டில் காணப்பட்ட இலக்கியக்கியத்துக்கும் பல நிலைகளில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிகிறது எனலாம். முந்தைய நூற்றாண்டு இலக்கியம் வரட்சியைக் காட்ட பின்னர்வந்த நூற்றாண்டு இலக்கியப் போக்கு வளமுள்ளதாக அமைந்ததற்கு காலமே காரணமெனலாம். இலக்கியம் என்பது காலத்தின் கருத்தாகாவே மலர்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அமிசம் ஆகும்.
அரசர்களும், பிரபுக்களும் பெற்றிருந்த செல்வாக்கை பொதுமக்கள் பெறும் நிலை இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட காரணத்தால் இலக்கியமும் அதன் படைப்புகளும் பொதுமக்களை மையப்படுத்தியே அமைவதைக் கண்டு கொள்ளுகிறோம். பொதுமக்களின் வாழ்க்கை, குறிக்கோள், இன்ப துன்பங்கள், அவர்களது முன்னேற்றத்துக்கு குறுக்காக நிற்கும் சாதிக் கொடுமை, சமுதாயக் கட்டுப்பாடு, என்பவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதுப்பாதையில் பயணிக்கும் இலக்கியம் பழைய இலக்கிய மரபுகளைவிட்டு விடுதலை பெறவேண்டியதாயிற்று.அந்த விடுதலையை இக்கால இலக்கியத்துக்கு அளித்தவராக பாரதியார் விளங்குகிறார் எனலாம். பழைய இலக்கிய மரபுகளை விடுதலை அடையச் செய்த பாரதி பழமையின் சிறப்பினை விட்டுக் கொடுத்தாரில்லை என்பது முக்கியமாகும். பழமையின் சிறப்பினை பாரதியார் எடுத்துப்பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் – இந்தியரின் – பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.
பாரதநாட்டு பழைய நாகரிகமும் மேனாட்டு புதிய நாகரிகமும் இந்தியாவில் சங்கமித்துக் கொண்டிருந்த காலத்தில் பிறந்தவர்தான் பாரதியார். இதனால் மேல்நாட்டு நாகரிகத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்களை தமிழ் மக்களும் ஏற்பது நல்லது என்னும் கருத்து பாராதியார் உள்ளத்தில் ஏற்படலாயிற்று. அதேவேளை மொழி, தமிழ் இனம், பாரதநாடு, பெண்ணுரிமை, சாதிபற்றிய ஏற்றத்தாழ்வு, முரண்பாடுகள், வறுமையின் நிலை, இவை பற்றிய கருத்துக்கள் அவரின் உள்ளத்தில் உரம்பெற்றும் இருந்தன எனலாம். இந்த நிலையில் பாரதியாரிடம் இருந்து வெளிவந்த படைப்புகளும் பன்முக நோக்குடையன வாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத்தக்கதே.
பாரதியார் ஒருபக்கம் பார்த்தவர் அல்ல. அவரின் நோக்கு பரந்து விரிந்தது. அவரின் படைப்புகளும் பலதிறப்பட்டன.தெய்வத்தைப் பாடுவார். தேயத்தைப் பாடுவார். சாதியைப் பாடுவார். சன்மார்க்கத்தைப் பாடுவார்.பெண்மையைப் பாடுவார். மனிதர்க்குத் தேவையான உண்மையை பாடுவார்.முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனத்தைப் பாடுவார்.பாப்பாவுக்கும் பாடினார். படித்தவர்க்கும் பாடினார். பாமரர்க்கும் பாடினார். கவிபாடி ஓயாத பாரதியார் கதைகளும் எழுதினார். கட்டுரைகளும் எழுதினார். புதுக்கவிதை என்னும் வழியிலும் பயணம் செய்தார்.அத்தோடு நிற்காமல் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதித்தார்.இப்படிப் பார்க்கையில் பாரதியையும் அவரின் படைப்புக்களையும் பன்முக நோக்கில்த்தான் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது எனலாம்.
தேசிய கீதங்கள், பக்திப் பாடல்கள், ஞானப்பாடல்கள், பல்வகைப் பாடல்கள், தனிப் பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலிசபதம், குயில்ப் பாட்டு, வசன கவிதை , புதிய பாடல்கள், யாவும் பாரதியார் எமக்களித்த சொத்துக்கள் எனலாம். இவைகள் ஒவ்வொன்றுமே பாரதியாரை யாரென்று அடையாளப் படுத்தி நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம். பாரதியார் பழமையைப் போற்றினார். முன்னோர்களை மதித்தார். கம்பனை , வள்ளுவனை , இளங்கோவை , உயரிடத்தில் வைத்துப் பார்க்கிறார். வள்ளுவன் தன்னை உலகினிக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவை போற்றுகிறார். கம்பனைப் போற்றுகிறார். ஆனால் அவர்கள் போல் பாடாமல் அவர்கள் போல் நில்லாமல் அதேவேளை அவர்களை மனமிருத்தி அவர்களை வழிகாட்டி என எண்ணி தன்னிலையை வகுத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ப தனது படைப்புக்களை அளித்திருப்பதால் பாரதியார் பெரும்புலவராய் மதிக்கப் படுகிறார் எனலாம். பாடுவதில் புதுமை. கையாளும் சொற்களில் புதுமை. எடுத்தாளும் உவமைகளில் புதுமை. சொல்லும் பாவடிவங்களில் புதுமை.இவைகள் பாரதியின் படைப்புகளின் சிறப்புகள் எனலாம்.
பாரதியின் படைப்புகள் பலதிறப்பட்டனவாக இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொருவகையில் சிறப்பினை உள்ளடக்கி காட்டுகின்றன.ஒவ்வொரு படைப்பினையும் பன்முக நோக்கில் நோக்கினால் இக்கட்டுரை பெருநூலாகி விடும் என்பதனால் எடுத்துக் கூறக்கூடிய விடயங்களை மட்டும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.பாரதியின் படைப்புகளை நோக்குவதற்கு முன்னர் அவருக்கு முன்னிருந்த தமிழ்க் கவிதைகளை படைப்புக்களை நோக்குதல் வேண்டும். பாரதியின் படைப்புக்களை நோக்கும்வேளை பாரதிக்குமுன் பாரதிக்குப் பின் என்று வகுத்தல் சிறப்பாகும்.பாரதிக்கு முன் ஆசிரியப்பாக்கள், வெண்பாக்கள், செல்வாக்குற்று இருந்தன.பின் விருத்தம் வந்து நின்றது.இவை பாரதியின் முன் இருந்த நிலை. பாரதிகாலத்தில் கண்ணிவகைகள் கரைபுரண்டோடிய காலம் எனலாம். சிந்தும் பாரதியின் சொந்தமாகிக்கிடந்தது.பாரதியின் பின் பல கவிஞர்கள் பாரதியைப் பின்பற்றி பாரதிவழி சென்றார்கள். பாரதி தொடக்கிய புதுக்கவிதை , வசன கவிதை , இன்று பலராலும் பின்பற்றப் படுகிறது என்பதும் பாரதியின் படைப்புத் திறனின் விளைவு எனலாம்.
பாரதியாரின் ஆளுமையால் பலபடைப்புகள் வெளிவந்தாலும் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு , குயில்ப்பாட்டு , பாரதி அறுபத்தாறு , விநாயகர் நான்மணிமாலை , வேதாந்தப் பாடல்கள் , தோத்திரப்பாடல்கள் , ஆத்திசூடி , முரசு , பாப்பாப்பாட்டு , சமூகம் , வசனகவிதை யாவராலும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்த படைப்புகளாகி நிற்கின்றன. இப்படைப்புகள் வழியே இதுவரை தமிழில் இல்லாத வடிவிலும் பொருளிலும் பல புதிய இலக்கிய வகைகளைப் பாரதி பெற்றெடுத்து வழங்குகிறார் எனலாம்.பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் ஏக்கம், கோபம், ஆக்ரோஷம்,கேலி , கிண்டல், அறிவுரை ஆவேசம் அனைத்தையும் காணுகிறோம். ” என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் – என்றெம தன்னைகை விலங்குகள் போகும் ” என்று ஏங்கிய ஏக்கம் தீர அடிமைத் தளையிலே வீழ்ந்து கிடக்கின்ற பாரதத்தாயினை விடுவிக்க மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏக்கமே பாஞ்சாலி சபதமாய் பாரதியாரால் படைக்கப்பட்டது.பாரதியின் உணர்ச்சியின் வடிவமாய் அமைந்த படைப்பே பாஞ்சாலி சபதமாகும். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பக் கூடிய மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருபவர் நம் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவபவர் ஆகின்றார். ஓரிரண்டு வருஷம் நூல் பழக்கம் உடைய தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காப்பியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமல் எழுதுதல் வேண்டும்.தமிழ் சாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே இத்தொழிலில் என்னைத் தூண்டினாள்” என்று பாரதியாரே கூறுவதிலிருந்து அவரின் பாஞ்சாலி சபதம் என்னும் படைப்பின் உன்னதம் புலப்பட்டு நிற்கிறதல்லவா?
தமிழரின் அரசியல்- பொருளியல்- நோக்கிலும் இந்த நூற்றாண்டின் வரலாற்று நோக்கிலும் சிறப்பான இடம்பெறும் கவிதைகள் பாரதியின் தேசீய கீதத்தினுள்ளும் சுயசரிதையுள்ளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். கவிதாதேவி அருள் வேண்டல், காலனுக்குரைத்தல், க தற்பாட்டுக்கள், அந்திப்பொழுது, வேய்ங்குழல், வள்ளிப்பாட்டு, அம்மாக்கண்ணு பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, என்று பல படைப்புகள் பல்சுவைதரும் வகையில் பாரதியின் சிந்தனையாக வந்தமைகின்றன.
பாரதியின் படைப்புகளை நோக்கும்பொழுது புரட்சிவழிப் பொதுமையை வரவேற்றமையும், வடிவத்தில் புதுக்கவிதை என்னும் இலக்கிய வகைக்கு வித்திட்டமையையும் காணமுடிகிறது.பாரதியார் படைப்புகளில் சமதர்மவாதக் கருத்துகளும் கம்யூனிஸ வாதிகளும் வரவேற்கப்படும் அதே வேளை கடவுள் பற்றியும் பாடுகிறார். தெய்வத்தை முழுசாகவே நம்புகின்றார். இவை இரண்டும் முரண்பட்டு இருந்தாலும் இப்படிப் பாரதியாரின் படைப்புகள் பல நோக்கில் அமைந்தமைக்கு அக்கால சூழலும் அக்கால அரசியல் தலைவர் களுமே பாரதியாரின் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் எனலாம். விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் தெய்வபக்தியில் திளைத்தவர் களாக விளங்கியதால் பாரதியாரின் சிந்தனையின் அவரின் நோக்காய் படைப்புகள் மூலமாய் வெளிப்பட்டது எனலாம்.
பாரதியால் படைக்கப்பட்ட உரைநடைப் படைப்புகளை நோக்கும் பொழுது தருக்க முறை, திறனாய்வு முறை, வருணனை முறை, விளக்கமுறை, எடுத்துரை முறை, சொற்பொழுவு முறை, தத்துவ முறை, எள்ளல் முறை, என்னும் பன்னோக்கினைக் கண்டு தெளியலாம். பாரதி என்னும் கவிஞன் முரண்பாடுகள் உள்ளவனாய் படைப்புகள் மூலம் பார்க்க முடிகிறது. ஆங்கிலக் கல்வியை வெறுக்கிறான். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கிறான். ஆனால் ஆங்கிலக்கவி ஷெல்லியை மனமிருத்தி “ஷெல்லிதாசன்” என்ன்னும் புனை பெயரில் பாப்புனைகிறான்.
தெய்வத்தை நம்புகிறார். பராசக்தியிடம் வேண்டுகிறார். சரஸ்வதியிடம் வேண்டுகிறார். ஆனால் சாத்திரங்கள் எனக்கூறி சமூகநீதிக்கு எதிராய் வருவதை மூர்க்கமாய் எதிர்க்கிறார். “சாத்திரங்கள் ஒன்றுங்காணார் – பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே” என்றும், “உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்” “பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்” என்றும் “சூத்திரனுக்கொரு நீதி – தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லுமாயின் – அது சாத்திரம் மன்று சதியென்று கண்டோம்” என்று பாரதியார் நிற்கும் நிலை அவரின் படைப்புகளின் பன்முகமாய் தெரிகிறது அல்லவா?
பாரதியாரின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து நோக்கினால் அங்கு பன்முகங்கள் தென்படுவதைக் கண்டுதெளியலாம். அவரின் படைப்புகள் பன்முக நோக்கினையே பறைசாற்றி நிற்கின்றன என்பதை நுணுகிப் பார்க்கும் வேளை கண்டு கொள்ளலாம். கடவுளரைப் பாடுகிறார். பராசக்தியின் உபாசனா தெய்வமாகவே தெரிகிறது. பாரதியாருக்கு முன்னர்வந்த பக்திப்பாடல்கள் சிவலோகம் பற்றியும் வைகுந்தம் பற்றியும் காட்டி நிற்க பாரதியார் படைப்பின் நோக்கு வேறுவிதமாய் அமைகிறது. தானும் நலமுற வாழவேண்டும் நாட்டு மக்களும் நலமுற வாழவேண்டும். அதற்காகவே தெய்வத்திடம் முறையிடும் புதுமை நோக்கு இப்படைப்பின் பால் வெளிப்பட்டு நிற்கிறது. “எண்ணில்லாத பொருட்குவைதானும் ஏற்றமும் புவியாட்சியும் தருவன் இன்றென தன்னையென் காளி மண்ணில் யார்க்குந் துயரின்றிச் செய்வேன், வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்று பாரதியாரின் வேண்டுகோளைக் காட்டி நிற்கும் இப்படைப்பின் நோக்கு பரந்து பட்டதாய் சுயநலம் அற்றதாய் விளங்குவது புலப்பட்டு நிற்கிறதல்லவா?
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கை பாரதியாரின் படைப்புகள் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் கண்டு பெருமிதம் கொள்ள வேண்டும். “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சம் இல்லை” இது நம்பிக்கையின் உச்சம்! “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா – தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு தீங்கும் வரமாட்டாது பாப்பா” உற்சாகமூட்டும் உரம்! “ரெளத்திரம் பழகு” , “தையலை உயர்வு செய்”, “தொன்மைக்கு அஞ்சேல் , “போர்த்தொழில் பழகு”, நேர்படப்பேசு” , “வெடிப்புறப்புறப் பேசு”, இவை ஊக்க மருந்தாகும். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா” இவ்வாழ்வினை அனுபவித்துவிடு என்று காட்டும் பெருவெளிச்சம்.
பாட்டுப்பாடியதும் கட்டுரை கதை எழுதியதும் ஊடகத்துறையில் இருந்ததும் என்றெல்லாம் பாரதியின் படைப்பின் பன்முகம் வெளிப்பட்டாலும் அத்துடன் அச்சிந்தனை நின்றுவிடவில்லை. தமிழ் அறிவியலுடன் இணைதல் வேண்டும் என்னும் பன்முக நோக்கும் புலப்பட்டு நிற்கிறது. “புத்தம் புதிய கலைகள் பஞ்சப் பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் – மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”, “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”, இங்கு பாரதியின் படைப்பின் வாயிலாக தெரிகின்ற பன்முகங்கள்தான் பாரதியாரையும் அவரது படைப்புகளையும் இன்றுவரை உயர்வுடன் பார்க்க வைக்கிறது எனலாம்.