குறளின் கதிர்களாய்…(367)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(367)

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.

– திருக்குறள் – 282(கள்ளாமை)

புதுக் கவிதையில்…

குற்றங்களைத் தம்
நெஞ்சால் நினைத்தல் கூடத்
துறந்தோர்க்குத்
தீராத பாவமாகும்..

அதனால்
அடுத்தவன் பொருளை
அவன் அறியாமல்
கள்ளமாய்க்
கவர்ந்திடலாம் என்று
கருதற்க…!

குறும்பாவில்…

துறவியர் குற்றங்களை நெஞ்சில்
நினைப்பது கூடப் பாவச்செயல் என்பதால்,
பிறர்பொருளைக் கவர்ந்திடக் கருதவேண்டாம்…!

மரபுக் கவிதையில்…

முற்றும் துறந்த முனிவோரும்
முறையைத் தவறிச் செயல்படாதே
குற்ற மதனை நெஞ்சினிலே
கொண்டே நினைத்தல் பாவமாமே,
மற்றோ ரறியா வகையினிலே
மறைந்தே யவர்தம் பொருட்களையே
முற்றாய்க் கவர்ந்து கொண்டிடவே
முயற்சி கொள்ள வேண்டாமே…!

லிமரைக்கூ…

குற்றமதை நினைக்கும் உள்ளம்
கூடாது துறந்தோர் கென்பதால் வேண்டாமே
பிறர்பொருள் அபகரிக்கும் கள்ளம்…!

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம் கள்ளத்தனம்
வாழ்க்கயில வேண்டாம் கள்ளத்தனம்,
அடுத்தவன் பொருள
அபகரிக்கிற கள்ளத்தனம்
வேண்டவே வேண்டாம்..

தவறியும் தவறுகள
மனசால நெனச்சாலே
பெரும்பாவம் தொறவிகளுக்கே..

அதுனால
அடுத்துவன் பொருள
அவனுக்குத் தெரியாமக்
களவாடுற வேலயே வேண்டாம்..

தெரிஞ்சிக்கோ,
வேண்டாம் வேண்டாம் கள்ளத்தனம்
வாழ்க்கயில வேண்டாம் கள்ளத்தனம்,
அடுத்தவன் பொருள
அபகரிக்கிற கள்ளத்தனம்
வேண்டவே வேண்டாம்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க