மெல்பேண் மாநகரில் துவாரகன் – அபிதாரணி மிருதங்க அரங்கேற்றம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியா 

முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச் சகோதரரின் மிருதங்க  அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின்னணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இருமருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன. வாழைகளின் நடுவில் பச்சையினை வெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருகேற்றி நின்றன. மேடையின் முன்னே மங்கலமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய்க் கோலமிட, கோலத்தின் நடுவே – தேவ சபையில் சிவனாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து, மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினைப் பாராட்டியே ஆக வேண்டும். விநாயகப்  பெருமானும் கல்வித்  தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய்அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.

இறை வணக்கத்துடன், குரு வணக்கத்துடன்பெற்றவர்கள் ஆசியுடன் அரங்கேற்றம் தொடங்கியது. அரங்கேற்றம் காணும் திருவளர் செல்வன் துவாரகன், திருவளர் செல்வி அபிதாரணியின் அன்புத் தந்தையார் கவிஞர், எழுத்தாளர் சந்திரன் அவர்கள்,

            ” உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே “

என்று கம்பநாடன் கவியினை முன்வைத்து வரவேற்புரையினை மிகவும் கச்சிதமாய் வழங்கினார். வரவேற்புரைக்கு அவர் தேர்ந்தெடுத்த கம்பநாடன் கவியினூடாக அவரின் இலக்கிய நோக்கும் அவர்வழி பயணப்படும் அவர் குடும்பத்தின் நோக்கும் தெள்ளிதிற் புலப்பட்டது.

வரவேற்புரை நிறைவுற்றதும் திரை விலகியது. தேவ உலகத்தில் இருக்கிறோமா என்று எண்ணும் வகையில் மேடை ஒழுங்கமைப்பு எல்லோரையும் பிரமிக்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அணிசெய் கலைஞர்கள் அமர்ந்திருக்க, வெண் மேகமாய் மேடை ஜொலித்திட, மேடையின் இரு பக்கங்களிலும் இருந்து அண்ணாவும் தங்கையும் மேடையை நோக்கி வந்த விதம் அவையினரை அசர வைத்தது. எந்த ஒரு மிருதங்க அரங்கேற்றத்திலும் இடம்பெறா வகையில் இது கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது. அன்புச் சகோதர்களின் குருவான யோகன் கந்தசாமி அவர்கள் மேடையின் முன்வந்து ஆயத்தம், ஆரம்பம் என்று மூன்று முறை கைத்தட்டி தலைநிமிர்ந்து தனது நாற்பத்து எட்டும் நாற்பத்து ஒன்பதாவதுமாகிய மிருதங்க அரங்கேற்றம் என்று சொல்லிப் பூரித்து நிற்க, விக்கினங்கள் அகற்றும் விநாயகப் பெருமானின் துதியான “வாதாபி கணபதிம்” என்னும் கீர்த்தனையுடன் தொடங்கிய தொடக்கம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. பாடிய அகிலன் சிவாநந்தன், வயலின் மேதை முரளிக்குமார், கடம் செல்வன் மருத்துவர் திவாகர் யோகபரன், மோர்சிங் கலைஞர் கம்பன் புகழ்பாடும் ஜெயராம் ஜெகதீசன்ஆரம்பக் கட்டத்தைத் தூக்கி நிறுத்தினார்கள்.

ஹம்சத்வனியுடன் அரங்கேற்றம் ஆரம்பமானதே களிப்பினை நல்குவதாய் அமைந்தது எனலாம். அகிலன் சிவானந்தன் எப்படிப் பாடினாலும் முரளிக்குமார் எப்படி வாசித்தாலும் அத்தனைக்கும் ஈடு கொடுக்கும் வண்ணம் துவாரகனும் அபிதாரணியும் தங்களின் விரல்களால் வித்தை காட்டியது அவையினரின் அகத்தினில் புகுந்து விண்ணதிரும் வகையில் கரவொலியாய் எழுந்தது. 

ஆதி தாளத்தில் ஹம்சத்வனியில் ஆரம்பித்த இசைக்கோலம், ரூபக தாளம், கண்ட ஜதி, துருவ தாளம்மிஸ்ர நடை, ஜம்பை தாளம் என வளர்ந்து, தொடங்கிய ஆதி தாளத்துடன் மங்களமாய் மலர்ந்தது. கண்ட ஜதி துருவ தாளத்தில் பல அட்சரங்களை அலாதியாய் அகிலன் சிவானந்தன் மெதுவாயும் துரித கதியிலும் பாடி நிற்க – அகிலனின் வேகத்துக்கு ஏற்றாற் போல், தேர்ந்த வித்துவான்கள் வாசிப்பது போன்று துவாரகனும் அபிதாரணியும் அரங்கில் மிருதங்க வாத்தியத்தை அனுபவித்து வாசித்துக் காட்டி அனைவரையும் தம்வசமாக்கி விட்டனர். இடைவேளை எப்படி வந்தது என்று தெரியாமலே அரங்கேற்றம் விறுவிறுப்பாய் அமைந்திருந்தது.

இடைவேளையின் பின்னர், அரங்கேற்ற அரங்கு முற்றிலுமாக மாறியே காணப்பட்டது. பெரும்பாலான மிருதங்க அரங்கேற்றங்களில் வீணை வாத்தியம் இணைவது என்பது குறைவாக இருக்கிறது. ஆனால் இங்கு புதுமையாக இரண்டு வீணைகள் இணைந்து நின்றன. இணைந்தமை புதுமையன்று. வீணையை வாசித்த வித்துவான்கள் ராம்நாத் ஐயர், கோபிநாத் ஐயர் இருவரும் சகோதரர்கள். மிருதங்க அரங்கேற்றம் செய்யும் துவாரகனும் அபிதாரணியும் சகோதரர்கள். இதைத்தான் இசைக்கோலத்தின் புதுமை என்பதா? அல்லது இந்த மிருதங்க அரங்கேற்றத்தின் பெருஞ்சிறப்பு என்பதா?அல்லது சந்திரன் உஷா தம்பதியினரின் ஆளுமை என்பதா? எப்படிப் பார்த்தாலும் அன்புச் சகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம் புத்தம் புதுமையாய் அமைந்தது எனலாம்.

வீணைச் சகோதரர்கள் தாங்களாகவே வடிவமைத்த கெளரி மனோஹரி இராகத்தில் மிஸ்ர ஜம்பை தாளத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவி – துவாரகன் அபிதாரணி சகோதரர்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்தாலும் அண்ணாவும் தங்கையும் கற்ற வித்தையினைக் கச்சிதமாய்க் காட்டி – பெற்றவர்களையும், பேணி நின்ற குருவினையும் பார்த்துப் பருகவந்த ரசிகப் பெருமக்களையும் வியக்க வைத்தார்கள். 

வீணைகள் இணைய, வயலின் அருகணையமோர்சிங்கும் கடமும் துணையாக அகிலன் சிவானந்தனின் அருமையான தில்லானா களைகட்ட, சந்திரனின் பாடல் உள்நுழைய, தமிழ்வாழ்த்து வந்து நிற்க, முத்தைத் தரு பத்தித் திருநகை அமைந்திட வேண்டும் என்னும் பக்தியின் நோக்கில் அருணகிரியார் அருட்திருப்புகழுடன் அன்புச் சகோதர்களின் மிருதங்க அரங்கேற்றம் ஆனந்தமாய் நிறைவடைந்தது.

ஈன்ற பொழுதில் பெரிதுவந்து நின்ற தாயார் உஷாவும் அவையவத்து முந்தியிருக்கச் செய்ய எண்ணிய தந்தை சந்திரனும் பூரித்து நின்றனர். அவர்களின் செல்வங்களான துவாரகனும் அபிதாரணியும் வள்ளுவன் வழியில், பெற்றவர்களை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டி நின்றனர். இவை அத்தனையும் மிருதங்க அரங்கேற்றத்தின் அடிநாதமாய் அமைந்திருந்தது என்பதை மனந்திறந்து சொல்லி மகிழ்கின்றேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க