சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

படைப்  பயிற்சியில்  சிறந்தவன்  அதிசூரன். அவன் ஏனாதி நாதரின்  தாயத்து உறவினன். தம் படைக்கலத்  திறத்தை  மற்றவர்க்கும்பயிற்றினான். அதனால் அவனுக்குத்  தற்பெருமை அதிகரித்தது. தம்மை வியந்து கொண்ட அதிசூரன் அரசர்  ஏனாதி நாதர் மேல் பகைமை கொண்டான். அதனால் அரசனை எதிர்த்துப்  போர் புரிய நினைத்தான். தாயத்து  உரிமையை வலியவரே  பெறவேண்டும் என்று சிலருடன் கூடி ஆலோசித்தான். ஆகவே சிறுநரி  சிங்கத்தை எதிர்ப்பது போல், ஏனாதி நாதர் மேல் போர் தொடுக்க எண்ணிப் போருக்கு அழைத்தான்.

ஏனாதி நாதரும் போராட ஆயத்தமானார். இருவர் பக்கமும் படை திரண்டது. ஊருக்கு வெளியே பொதுவான இடத்தில் எதிர்த்துப் போர் புரிந்து வென்றோர் அரசுரிமை கொள்ளலாம்  என முடிவுசெய்து, போர்க்களத்தில் திரண்டனர்.

இருவகைப் படையினரும் கடுமையாக மோதிப் போர் புரிந்தனர். ஈசன் அருளாலும், தம் வலிமையாலும் அதிசூரன் படைகளை  ஏனாதி நாதர் அழித்தார். அப்போது அதிசூரன் படையின் நிலையைச்  சேக்கிழார் கூறுகிறார்.

பாடல்:

தலைப்பட்டார்  எல்லாரும்  தனிவீரர் வாளிற்
கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு,
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வம் முதல்  குற்றம்போல்  ஆயினார்.

பொருள்

கூடி எதிர்ந்தவர்கள் எல்லாரும், ஒப்பற்ற வீரராகிய ஏனாதிநாதருடைய வாளினாற் கொல்லப்பட்டொழிந்தனர். இது கண்டு, வந்தெதிர்க்காத படைஞர் படுகளத்தை விட்டு, நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து ஒழிகின்ற ஆர்வ முதலிய குற்றங்கள் போல ஆயினார்கள்.

விளக்கம்

தலைப்படுதல் – கூடுதல் – ஒன்றுதல். இங்குப் போரில் முனைந்து ஒருவரோ டொருவர் பொருந்தக் கிட்டுதல் குறித்தது. அவர்களுள்  அதிசூரன் பக்கத்தார் அரசன் வாளால்  கொல்லப்பட்டார்.

போர்க்களம்  பலவகைப்படும்;   ஓர் இடத்திற்குப் பெயர் அவ்வப்போது அங்கு நிகழும் நிகழ்ச்சியாற் கூடுவதியல்பு. இங்கு இந்த இடம், முதலில் இந்தவெளி, போர் குறித்து இருபடையும் சேர்ந்தபோது “செருக்களம்”ஆயிற்று. அதன்பின் போர் மூண்டு நிகழும்போது போர்செய்களம் என்றாயிற்று. பின் படைஞரது போர் ஓய்ந்தபின் மேலும் போர் நிகழ நிற்றலின் பறந்தலை  எனப்பட்டது. இங்குத் தனிவீரர் வாளிமுன் எதிர்ந்தார் தம் படைஒன்றும் பயன்படாது கொல்லப்பட்டாராதலின் கொல்களம் எனப்பட்டது காண்க. பின்னர் இவ்வகையிலும் நிகழ்ச்சி உளதாகாமையின் வேறிடம்  அக்களம்,  இடம்  எனப்பட்டது. இவ்வாறு  காலம் மாறிய வகையைச்  சேக்கிழார் பாடுகிறார்.

முட்டாதார் என்ற சொல்,  மாற்றானது படைவீரர்களுள், அவ்வாறு எதிர் வந்து போரில் முனையாதவர்களைக்  குறித்தது. போர்க்களத்தில் கொல்லப் படாதவர்கள் வேறிடத்திற்குச் சென்று மறைந்தனர். பொதுவாக நமக்கு மெய்யுணர்வு  வெளிப்படும்போது, முன்னிருந்த ஆர்வம் முதலான மறைந்தது போல் ஒளிந்தனர். . செயலற்றுப் போய் அங்கு எதிர் நிற்கலாற்றாது மறைந்து போயினர் என்பது. ஒளிந்து மறைந்தனர் என்னாது “குற்றம்போல் ஆயினார்” என்றிவ்வாறு கூறியது அவர்கள் யாதாயினர் என்றே தெரியா வகை மறைந்தனர் என, வீரச்சுவை நீங்க நகைச் சுவைபடக் கூறியவாறு.

நிலைப்பட்ட மெய்யுணர்வு – மெய்யுணர்வு – உண்மைப் பொருள் உணரும் உணர்வு. ஞானமென்ப. வீட்டிற்கு நிமித்தமாகிய செம்பொருளைக் காண்பதுவே மெய்யுணர்வாம். அஃதாவது அருட்கண்ணாகிய சிவஞானத்தால் விளங்கிச் சிவம் – உயிர் – பாசம் என்ற பொருளைக் காணும் மெய்யுணர்வாம். அவ்வகை உணர்வின் முன்னர் ஆர்வம் முதலிய குற்றங்கள் முனைந்து நிற்கலாற்றாது காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலவும், ஒளியின்முன் இருள் போலவும் ஒழிந்துபோம், இவைகளைச் “சார்புணர்ந்து சார்புகெட”, “மூன்றன் நாமம்கெட” என்ற திருக்குறட் பாக்களின் கீழ்க் கண்டு கொள்க.

மெய்யுணர்வின் இயல்பும், ஆர்வம் முதற்குற்றங்களி னியல்பும், மெய்யுணர்வின் முன் குற்றம் நில்லாத இல்பும் ஞான சாத்திரங்களுள்  காண்க.

நிலைப்பட்ட – “கல் லெறியப் பாசி கலைந்து நன்னீர் காணுதல்போல” அப்போதைக்குக் காணப்பட்டு மறையும் உணர்வாயின், அது பின்னர் அப்பாகத்தால் மறைக்கப்படுமாதலின், அவ்வாறல்லாது குற்றங்கள் அறவே ஒழியுமாறு நிலை நின்ற மெய்யுணர் வென்பாார் நிலைப்பட்ட என்று சிறப்பித்தார்.

“இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர் பஞ்சுத்துய் போலுமாதலின்” என்றார் பரிமேலழகர். நிலைப்பட்ட மெய்யுணர்வாவது திருவடி மறவாதிருத்தல். “மறக்குமா றிலாத வென்னை”  என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்”  என்ற புராணமும் முதலிய திருவாக்குக்களிற் குறித்த நிலை இது. ஆர்வம் முதல் குற்றம் – இவை காமம் – வெகுளி – மயக்கம் என்ற மூன்றென்பர்.

“காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும்  நோய்”

என்ற குறளின் கீழ் “அநாதியாய அவிச்சையும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும்; அது பற்றி எனக்கிது வேண்டுமென்னும்  அவாவும், அதுபற்றி அப்பொருட்கண்   செல்லும் ஆசையும், அது பற்றி அதன் மறுதலைக்கண்  செல்லுங் கோபமும் என வடநூலார் குற்றம் ஐந்தென்பர். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சையின் கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலால் மூன்றென்றார்” என்றெல்லாம்   பரிமேலழகர்  உரைத்தவை காண்க. இவற்றைக் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என ஆறாகவும் வகுப்பர்.

“கலையமைத்த காமச்செற்றக் குரோத லோப மதவருடை,
உலையமைத்திங்கு  ஒன்றமாட்டேன்  ஓணகாந்தன் தளியுளீரே”

என்ற ஆளுடைய நம்பிகள் தேவாரம்  காண்க. இவையெல்லாம்  அடங்க “ஆர்வமுதற் குற்ற” மென்றார். இவை மூலமலத்தின் காரியம். நெல்லிற்கு உமி தவிடும் நீள்செம்பினில்  களிம்பும்போல.

அலைப்பட்ட என்ற தொடர் ,  இக்குற்றம் உயிரைப்பற்றி நின்ற முன்னை நிலையினின்றும் மெய்யுணர்வு இவற்றை அலைக்க, அதிலேபட்டுப் பெயர்ந்த என்க. மெய்யுணர் வொன்றே நிலைப்படுவதென்றும்,ஏனைய குற்றங்கள் ஒரு காலத்து அலைப்பட்டொழிவன என்றும் குறித்ததும் காண்க.

இங்கு உவமான உவமேயங்களில் நிலைப்பட்ட மெய்யுணர்வுடையார் ஏனாதி நாதரும், ஆர்வமுதற் குற்றமுடையார் அதிசூரனும் அவன் படை வீரருமாயின பொருத்தமும் அழகும் கண்டு களிக்க.

கொல்களத்தினும் நிலைப்பட்ட மெய்யுணர்வு மயமாக விளங்கினார் நாயனார் என்பது, பின்னர்த் திருநீற்றின் பொலிவினை மாற்றான் நெற்றியிற் கண்டபோதே அவனது கொள்கைக்கு குறிவழிநின்ற நேர்மையாலும், அதன்மேலும் நிராயுதரைக் கொன்றானெனும் தீமை அவனுக்கு எய்தாமைப் பொருட்டே மலைவார்போற் காட்டி அவன் கருத்து முற்றுமளவும் வாளா படைதாங்கி நின்ற நேர்மையாலும் துணியப்படும்.

இவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; உண்மையுணர்ந்த ஞான தேசிகர்பால்  அறியத்தக்கன.

வெம்போரில் தமது உயிர் கொடுத்தும் மெய்யுணர்வின்கண் நின்ற நாயனார் திறத்தின் முன் மாற்றார் படை ஒழிந்த திறத்திற்கு உரியவாறு கொலைக்களத்திலும் நிலைப்பட்ட மெய்யுணர்வும் அலைப்பட்ட குற்றமும் உவமித்த ஆசிரியரது நிலைப்பட்ட மெய்யுணர்வு கண்டு வியக்கற்பாலதாம். இங்குப் போரில்  படை மக்கள் சிகரமுந் தோளும் தாளும் துணிக்கப்பட்டுக் கிடக்கும் கொல்களத்தின் இடையிற் பிறழாது மெய்யுணர்வின் நின்றதுபோலவே கண்ணப்ப  நாயனார்  புராணத்தில், திண்ணனார் வேட்டையில் மாக்கள் படும் கொல்களத் தினிடையும்,

“பலதுறைகளின்   வெருவரலொடு    பயில்வளையற    நுழைமா
வுலமொடுபடர்    வனதகையுற    வுறுசினமொடு    கவர்நாய்
நிலவியவிரு   வினைவலையிடை   நிலைசுழல்பவர்   நெறிசேர்
புலனுறுமன   னிடைதடைசெய்த    பொறிகளினள   வுளவே”

என்று மெய்யுணர்விற் பிறழா நேர்மையின் உவமித்ததும், இவ்வாறுள்ளன பிறவுங் கண்டுய்வோமாக.

ஆகவே  இப்பாடலின்மூலம், சித்தாந்தக் கருத்தின் வழியே, வெகுளி  மயக்கம் முதலான  குற்றங்கள்   காமத்தின் வழியே உருவாதலைச் சேக்கிழார்  மிகவும் நுட்பமாக  விளக்குவதை  அறிந்து மகிழ்கிறோம்; உணர்ந்து நெகிழ்கிறோம்! இப்பாடலில் ஏனாதி நாத நா யனார் அருள்  வரலாற்றையும் முற்படக்  கிளந்த  நுணுக்கத்தை உரையாசிரியர் திறம் போற்றுதற்குரியது.

About திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

கல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்; பணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி - 620 002 (36- ஆண்டுகள் - 2001 பணி நிறைவு) இலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல் சிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்   பெற்ற விருதுகள் : 1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98 2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்) 3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்) 4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை 5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம் 6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம் 7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம் 8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை) 9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம். 10. தமிழ் இலக்கிய சேவாரத்னா - 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் ) எழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்) 2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா) 3. மொழியும் பொருளும் (மணிவிழா) 4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004 5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்) 6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு) 7. பாரதியின் பேரறிவு 2011 8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை) 9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்) 10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்) 11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்) 12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் சொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா.. சொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க