மீனாட்சி பாலகணேஷ்

ஆடல் பாடல் பயிலல்
(புதிய பிள்ளைப்பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

ஆடலும், பாடலும் பெண்ணினத்துடன் பிறந்தது. அழகுக்கலைகளில் பெண்குழந்தைகளுக்குள்ள ஆர்வத்தைக் கண்டு வருகிறோம். தன்னை மட்டும் அழகு படுத்திக் கொள்வதோடன்றி, நுண்கலைகள் எனப்படும் நடனம், இசை ஆகியனவற்றையும் வாய்ப்புக் கிடைத்தபோது ஆர்வமுடன் பயில்வர் பெண்குழந்தைகள். பெற்றோர்களும், அவருள்ளும் தாய்மார்கள், தத்தம் பெண்குழந்தைகள் இசை, நடனம் இவை கற்க வேண்டுமென்பதில் பெரும் ஆர்வம் காட்டுவர்.

பெண்குழந்தைகளின் இசை, நடனம் இவை தொடர்பான சில சுவையான செய்திகளைக் காண்போமா?

பண்டைக்காலத்தில், அரசகுடும்பத்துப் பெண்களும் ஆண்களும் அறுபத்து நான்கு நுண்கலைகளையும் கற்றுத் தேர்ந்திடுதல் மரபாகும். வீணை வாசிப்பதில் சிறந்த உதயணன்போல், ஆட்டத்தில் சிறந்து விளங்கிய ஆட்டனத்தி எனும் சேரமன்னன்போல் சிலர் இவற்றில் மிகச் சிறந்தும் விளங்குவர். பெண்மக்கள் வீணை, யாழ் என பலப்பல இசைக்கருவிகளையும் இசைப்பதில் வல்லவர்களாக இருப்பர்.

வளர்ந்த பெண்மக்கள், ஆடவர் (இளைஞர்கள்) ஆகியோர் பற்றிய பல செய்திகளை இலக்கியங்களில் காண்கிறோம். உதயணன்- வாசவதத்தை, ஆட்டனத்தி- ஆதிமந்தி, ஆகியோர் இவர்களுள் சிலர். சிறுபிள்ளைகள் பற்றிய செய்திகளைக் கண்டறியோம்.

ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரி எனும் அம்பிகை மீதான ஸ்லோகத்தொகுப்பில் உள்ளதொரு பாடல் அம்பிகை எவ்வாறு ஈசனுக்கு இணையாக உலகம் வாழ நடனமாடுகிறாள் எனக் கூறுகிறது. இதனைக் குற்றாலம் வள்ளிநாயகம் என்பவர் தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

அம்பிகையும் சிவபிரானும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் தாயும் தந்தையும் ஆகியவர்கள். சிவபிரான் ‘தாண்டவம்’ எனும் ஆண்களுக்கான நடனத்தையும், அம்பிகை ‘லாஸ்யம்’ எனும் பெண்களுக்கான நடனத்தையும் ஒருவரையொருவர் பார்த்தபடி ஆடுவதனால் இந்த உலகம் படைத்துக் காக்கப்படுகின்றது. இவர்களின் இடையறாத நடனம் நின்றுவிட்டால் உலகம் அழிந்துவிடும். ஆகவே தம் குழந்தைகளாகிய நம்மீது கருணைகொண்டு நாம் இனிதுவாழ அன்னையும் அத்தனும் இடையறாது நடனமாடுகின்றனர் என்பது இதன் உட்பொருள்.

            ஆதார மூலத்தின் சக்கரத்தே ‘சமயா’
                   ஆடுகின்ற நவரசத்தி னோடு
         பாதார விந்தத்தின் பைரவத் தாண்டவம்
                   பார்த்துநான் கைகூப்பி னேன்
         சேதார ஊழிக்குப் பின்னாலே உருவாகும்
                   ஜெகத்தில்வாழ் உயிர்களுக்குங் கூட
         நீதானே யம்மை! சிவன்தானே தந்தை!
                   நின்னருளே அவ்வுலகும் ஆளும்!1

                                      (குற்றாலம் வள்ளிநாயகம்)

                                   *****
ஒருமுறை சிவபிரான் அம்மையுடன் (காளி) நடனம் ஆடியபோது தனது தோல்விக்கு அஞ்சி, தனது காதுக் குண்டலத்தை வேண்டுமென்றே நழுவ விடுகிறார். பின்பு நடனமாடியவாறே கால்விரலால் அதை எடுத்துச் செவியில் திரும்ப அணிந்து கொள்கிறார். இவ்வாறுசெய்ய காலைச் செவியின் உயரத்திற்கு உயர்த்த வேண்டியதாயிற்று. அம்மையால் அவ்வாறு செய்ய முடியாமையால் (பெண்கள் நடனமாடும்போது அடக்கம் கருதி காலை அவ்வண்ணம் உயர்த்த மாட்டார்கள்!) அன்னை நாணித் தலைகுனிந்து தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். இதைக் குறிப்பிட்டு பாபநாசம் சிவன் அவர்கள் ஒரு அழகான பாடல் புனைந்துள்ளார்.

                        பல்லவி

         ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
         இடது பாதம் தூக்கி  (ஆடும்)

                   அனுபல்லவி

            நாடும் அடியர் பிறவித் துயரற
         வீடும் தரும் கருணைநிதியே நடம் (ஆடும்)

                   சரணம்

         சுபம்சேர் காளியுடனாடி படு தோல்விக்கஞ்சி திருச்செவியிலணிந்த மணித்
         தோடு விழுந்ததாக மாயம் காட்டியும் தொழுபதம் உயரத்தூக்கியும் விரி
         பிரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின் திருப்பதம் தஞ்சமென உனை அடைந்தேன்
         பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே
                                                                  சபைநடுவில் தத்திமியென்று2

                                                                                              (ஆடும்)

அடியார்களின் கற்பனை எவ்வாறெல்லாம் சிறகுவிரிக்கிறது என்பதற்கு இதுவுமொரு அழகிய எடுத்துக்காட்டு.

உளுந்தூர்பேட்டை திரு. சண்முகம் அவர்களால் இயற்றப்பட்டு, இசைப்பேரறிஞர் திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் மிகவும் பிரபலமாகியதொரு பாடல்தான் ‘சின்னஞ்சிறு பெண்போலே’ எனும் பாடல்.

                        பல்லவி

         சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி
         சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

                   அனுபல்லவி

         பெண்ணவளின் கண்ணழகைப் பேசிமுடியாது
         பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

                  சரணம்

         மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
         இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
         பின்னல் ஜடைபோட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்3  எனச் சிவகாமி அன்னையை ஒரு சின்னஞ்சிறுமியாக, ஆடலரசனான நடராசனுக்கு இணையாக நடனம் ஆடுபவளாக அவர் சித்தரித்துள்ளது என் கற்பனையைத் தூண்டியது எனில் மிகையேயில்லை!

இத்தகைய தெய்வீக நடனம் கற்கும் சிறுபெண்ணான உமையம்மையைப் பற்றி நாம் ஓரிரு ‘பிள்ளைத்தமிழ்’ பாடல்களாவது பாடிப்பரவ வேண்டாமோ? என் எளிய காணிக்கை இதோ!

நாதாந்த வெளியினில் சிவபிரானுடன் இடையறாது நடனம் ஆடுபவள் எம்மன்னையான சிவகாமி! வேதாந்த வெளி, விரியும் கற்பனைகள், பிரானின் திருவுள்ளம், வேதங்களின் உட்பொருள் இவற்றுள் எல்லாம் கலந்து ஆடுபவள் அவள்! அவளுடைய இந்த ஆனந்த நடனத்தை உள்ளத்தில் எண்ணும்போது புரியாத தத்துவங்கள் புரியும். அடியார் இன்பவெள்ளத்தில் மூழ்குவர். ஆகவே உனது திருவடிகளை சிறிய சீரடிகளைப் பதித்துப் பேரண்ட வெளியினில் ஆனந்தமாக நடனமாடி அருளுகவே! சிறுமியான அன்னையை உலகையாளும் பேரரசியாகக் கண்டமையால் அவ்வழியமைந்த பாடலிதுவாகும்.

            நாதாந்த வெளியினில் நாதனாம் சிவனுடன்
                   ஆனந்த நடமிடும் ஆதிசக்தியே!
             நன்மைதீ மைகளுக் கென்றும் சாட்சியாய்
                   நடுவா யிருக்கும் நாரணியே!
         வேதாந்த வெளிக்குள் வேரானகற் பனைக்குள்
                   வெட்டவெளி தன்னில் நட்டமிடுபவளே!
             வெண்ணீற ணியய்யன் தன்னுள்ள வெளியினில்
                   வேதங்கள் ஒலிக்கநா தங்கள்கிளர்க்க
         போதாந்த வெளியினில் புரியாத பொருள்சிறக்க
                   பொங்கிடும் களியினில் சிந்தைகளிகூர
             போற்றிடு மடியவர்பெ ருகுமின் பவெள்ள                
                   வூற்றினில் மூழ்கியே உள்ளங்குவிந்திட
         ஆதாரந்தந் திடுமுனற் புதப்பொற் சீரடிபதித்து
                   ஆனந்தமாக வேபேரண்ட வெளியினில்
              ஆடிடுக வம்மையே நடமாடி யருள்கவே!        
                   ஆடலரச னுடனாடி யருள்கவே!4

சிறுமி சிவகாமி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். வாணி தனது வீணையில் இன்னிசை எழுப்ப, இலக்குமி கைத்தாளமிட்டு ஜதி கூறுகிறாள். சசிதேவி மத்தளம் வாசிக்கிறாள். அம்மையின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு ஆடலரசனாகிய சிவபிரான் தானும் வந்து உடனாடுகின்றான். ஒருகட்டத்தில் நடனம் போட்டியாக மாறி உச்சத்தை அடைகிறது. இருப்பினும் சிவனும் சக்தியும் ஒன்றேயாதலால் வெற்றி தோல்வியின்றி அனைவரும் மனம் மகிழும் வண்ணம் நிறைவுறுகின்றது. உலகில் அனைவரும் இன்புற்று வாழும் வண்ணம் சிவகாமி அம்மையே நீ நடனமாடுவாயாக!- என வேண்டுகிறோம்.

            அன்னையே இன்னமுதே ஆனந்த நடராசன்
                   அகங்களிக்கு மானந்தசிவகாமியே!
             அலைமகள் தாளமிட கலைமகடன் கைக்கொண்ட
                   வீணையினி லின்னிசையெழுப்ப      
         பன்னும்பனு வற்சிறக்கப் பரமனும் நின்றுடன்
                   பாடற்கிணங் கப்பரதமாடிட
             பாங்கான நடனங்கள் பலவுங் கூட்டிட
                   பற்பலநர்த் தனங்கள்செய்திட
         மன்னுபுகழ் மாதவத் தோர்மனங் களிகூர்ந்திட
                   மாதேவிநீ யாடியபொழுதில்
             மகாதேவ னவன்மன் றில்தோல் விக்கஞ்சிட
                   மற்றவனு ளமறிந்தம்மைகனிந்திட
         பின்னுமிவ் வுலகுய்ய பெற்றதாய் தந்தையும்
                   ஒன்றானதொரு வடிவல்லவோ?
             பேருலகி லானந்தம்பெற் றுயிர்கள் வாழ்ந்திட
                   பேரானந்த நடமாடியருளுகவே!5      

                                   ****************

இது ஆடல்; இனி அம்பிகையின் பாடலைக் காண்போமா?

அம்பிகையின் மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களில் அம்மானைப் பருவத்தில் அம்மானையாடும் சிறுமியான அன்னை இனிமையாகப்  பாடிக்கொண்டே ஆடுவதனைப் பற்றிப் புலவர்கள் கூறிப்பிட்டிருப்பார்கள்.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தில் மீனாட்சி பாடியவாறே அம்மனையாடுவது விவரிக்கப்பட்டுள்ளது. கொத்தான மணிக்கக் கூட்டத்தால் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் குயிலைப் போல் பேசும் உனது இனிய குரலின் குழல் போன்ற இசைக்கு உருகி, குளிர்ந்த துளிகளைச் சிந்துகின்றன.

            ‘கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
           குயிலின்மி ழற்றியநின்
            குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
           குறுந்துளி சிந்தியிட6 என்பன பாடல் வரிகள்.

பெண்குழந்தைகள் தமது எல்லா விளையாட்டுகளிலும் பாடலைச் சேர்த்துக் கொள்வர் என்பது கண்கூடு!

அன்னையின் உறைவிடமான சிந்தாமணி கிருகம். அன்னை ஆனந்தமாக ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது கலைவாணியான சரஸ்வதி அவள் முன்னமர்ந்துகொண்டு தனது வீணையை மீட்டிப் பசுபதியாகிய பரமசிவனின் பிரதாபங்களைப் பற்றிய பாடல்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். தலையை ஆட்டித் தன் தலைவனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்த உமையம்மை, “நன்றாக உள்ளது,” எனக்கூறுவதற்காக “ஸா” எனக் கூறத் துவங்கவும், வீணையின் தொனி மங்கி விடுகிறது. கலைமகள் நாணமடைந்து வீணையை அதன் உறையினில் இட்டு மூடிவைக்கிறாள்.

இந்த ஆதிசங்கரரின் சமஸ்கிருதச் சுலோகத்தின் தமிழாக்கம்.

            வரமருளும் பரமேசன் சரிதத்தைப் பாடலாய்
                   வாணியவள் வீணையிலே மீட்ட
         பரமசந் தோஷத்தால் தலையசைத்த தேவிநீ
                   சபாஷ் என சரஸ்வதியை வாழ்த்த
         அதிமதுரச் சொல்தனது இசைமிஞ்சிய தாலே
                   அவள்வீணை தனையுறையுள் பூட்டி
         நிதியாக நின்வாக்கை மதித்தடுத்துச் சொல்கின்ற
                   வார்த்தைக்குக் காத்திருப்பாள் தாயே!7

                                                        (குற்றாலம் வள்ளிநாயகம்)

இத்தகைய புகழ்வாய்ந்த அம்பிகையை, இசையின் உள்ளாய்ப் பொலிபவளை, ஈசன் பங்கில் உறைபவளை என்னென்று புகழ்வது? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமெனும் ஏழு சுரங்களாலான பல பண்களால் மேகராகக் குறிஞ்சியையும், மேற்செம்பாலைப் பண்ணையும் இசைக்கிறாள் சிறுமியான சிவகாமி. தனது உள்ளங்கவர் அண்ணலின் பெருமைகளைப் பாடி மகிழ்கிறாள். இந்த அனைத்துலகங்களையுமே தன் அருள் எனும் இசையால் ஆரபி, கௌரிமனோகரி, வசந்தபைரவி, வகுளாபரம், தோடி எனப் பலப்பல ராகங்களால் காதலுடன் நிறைக்கிறாள். இந்தக் கருணையைப்போற்றி உன் தாளிணைகளைப் பணிந்து, ‘இவ்வுலகம் செழிக்க, வல்வினைகள் கெட தர்மவதியான சிவகாமி அன்னையே! இன்னிசை பொழிவாயாக!’ என வேண்டுவோமா?

            ஏழிசையா யிசைப்பயனாய் இலங்கிடு மீசன்பங்கில்
                   ஏந்திழையே நீயுறைந்தாய்
             எழிலோங்கும் உன்நாவில் குரலொடு துத்தம்கைக்
                   கிளையுழை இளிவிளரிதாரமெனு
         மேழிசையாற் பண்ணனைத் தும்பாங்கா கப்பாடுவாய்!
                   மேகராகக்கு றிஞ்சியினுமேற்செம்
             பாலைப்பண் ணினிலும் மூண்டெழுந்த புகழ்மாலை
                   பெருமான்மேற் சாற்றிடுவா
         யாழிசூழ னைத்துலகு முன்னருளிலு மிசையிலும்
                   ஆரபியெனகௌரி மனோகரியெனவ
             சந்தபைரவி யெனவகுளா பரணமென சுந்தரத்
                   தோடியென நிறைக்குமுன்றன்
         தாளிணை தான்பணிந்து தரணியெ லாஞ்செழிக்க
                   தவங்கள் தானியற்றும்
    தாபதருக் கருளுநல் தர்மவதி சிவகாமீ
                   தீங்குரற்றே னிசைபொழிகவே!8

(தொடரும்)

                                   ————————–

பார்வை நூல்கள்:

1, 7. சௌந்தர்ய லகரி- தமிழாக்கம்- குற்றலம் வள்ளிநாயகம்

2. பாடல்- பாபநாசம் சிவன்

3. பாடல்- உளுந்தூர்பேட்டை சண்முகம்

4, 5, 8- சிவகாமியன்னைமீது பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்

6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

  1. திருமதி.மீனாட்சி பாலகணேஷ் எந்த கட்டுரை எழுதினாலும் அதில் முழு ஈடுபாட்டுடனும் மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னும் எழுதுவது தமிழ் எப்போதும் வாழும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.. இத்தகைய எழுத்தாளர்களை தமிழ் கூறும் நல்லுலகம் மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *