தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் –  613006.
மின்னஞ்சல் முகவரி –  [email protected]

திருக்குறளும் நன்னூலும்

முன்னுரை

‘இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர இலக்கணத்திற்காக இலக்கியமன்று’ என்பது மரபு. இலக்கியம் என்பது ஈண்டு வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கியதே. அதனால்தான் இலக்கண விதிகளுக்கு மாறுபட்டு மக்கள் வழக்கு அமைகிறபோது இலக்கண ஆசிரியர்கள் அவற்றுக்குப் புறனடை கண்டு அமைத்துத் தழுவிக்கொண்டனர். இந்தக் கட்டுரை ‘இலக்கியத்திற்கு இலக்கணம்’ என்பதை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள உவமங்கள் இலக்கணத்துள்ளும் பயின்று வரும் பாங்கினை ஆராய்வதாக அமைகிறது. தனித்தமிழ் மறை திருக்குறள். தொல்காப்பியத்தின் வழிநூல் நன்னூல். திருக்குறளில் பல்வேறு நேர்வுகளில் பல்வேறு அதிகாரங்களில் கையாளப்படும் உவமங்களை அவற்றின் பொருண்மை விளக்கப் பொருத்தம் கருதிப் பவணந்தியார் அவற்றை அப்படியே தமது நூலில் தொகுத்துரைப்பதை அறிய முடிகிறது. முந்தைய இலக்கியத்திலிருந்து பிந்தைய இலக்கணம் உரிமையோடு எடுத்துக் கையாண்ட சில உவமங்களின் சிறப்புக்களை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

நல்லாசிரியருக்கான அளவுகோல்

தற்காலத்தில் குறிப்பிட்ட பட்டமும் அதற்கான ஆசிரியர் பயிற்சிக்கான பட்டமுமே ஆசிரியர்க்கான தகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பழந்தமிழ்க் கல்விக் கோட்பாட்டில் பண்புகளே ஆசிரியர்களை நிர்ணயம் செய்தன. மாணவர்க்கும் அவை வலியுறுத்தப்பட்டன. ‘உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்கள்’. கற்பித்தலைத் தற்காலத்தைப் போல் வணிமயமாக்காமல் ‘ஈதல் இயல்பு’ என்றார்கள். கல்வி செல்வமானதால் கற்பித்தல் ஈதலாயிற்று. செல்வம் இரத்தற்குரியதாதலின் கற்றல் ‘கோடல்’ மரபாயிற்று. கல்விச் செல்வத்தைத் தகுதியுடையார்க்கு வழங்கும் ஆசிரியரின் பண்புநலன்களைப் பொருளாகவும் உவமத்தோடு பொருத்தியும் கூறும் நன்னூல் நிலம், மலை, மலர், துலாக்கோல் என்னும் பொருள்களை ஆசிரியர்க்கு உவமமாக்கியிருக்கிறது. இந்த நான்கையும் திருவள்ளுவர் பல்வகை நேர்வுகளில் தமது குறட்பாவில் பயன்படுத்தியுள்ளார். நீதி இலக்கியமொன்றில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இலக்கண நூலொன்றில் பயன்பட்டிருக்கும் பாங்கு இனி ஆராயப்படும்.

நிலமும் ஆசிரியரும்

பொறையுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என ‘இகழ்ச்சியைப் பொறுக்கும் தன்மைக்கு’ நிலத்தை உவமமாக்குவார் திருவள்ளுவர். நிலத்தின் மேன்மையும் திண்மையும் பொறுமையும் அளவிட முடியாதது. நிலத்தைப் பயன்படுத்திக் கொள்கிற அளவிற்குத்தான் அதனால் பெறும் பயனும் இருக்கும். இந்தப் பண்புகளை ஆசிரியர்க்குப் பொருத்தினால்  வகுத்தறியப்பட இயலாத கல்வியின் பெருமை வாதப் பிரதிவாதங்களால் கலங்காத திண்மையும் இகழ்ச்சி கண்டு கலங்காத பொறுமையும் கற்பவனின் உழைப்புக்கேற்ற பயன் தரும் தன்மையுமாகிய சிறப்புக்கள் புலப்படும்.

“தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவில் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே!”

என்னும் நூற்பாவால் நிலத்தின் தன்மையை விளக்கிக் காட்டும் நன்னூல், நல்லாசிரியர் ஒருவர்க்கே இது பொருந்தும் என்பதை நன்னிலம் என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காணலாம்.

மலையும் ஆசிரியரும்

மலையுச்சியை ஐம்புலன் அடக்கியார் உயர்ச்சியோடு ஒப்பிடுவார் திருவள்ளுவர். ‘அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது’ என்பது குறட்பா. இந்த மலையென்னும் பொருண்மையின் சிறப்பை,

“அளக்க லாகா அளவும் பொருளும்
துலக்க லாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே”

என விளக்கியுரைப்பார். மலை பற்றிய பவணந்தியாரின் இந்த விளக்கத்தால் அளக்கவும் காணவும் இயலாத கல்வியின் அளவும் புலமையுடையோராலும் அசைக்கமுடியாத அதன் நிலையும் தொலைவிலுள்ளார் பார்வையிலும் படும் உயர்ச்சியும் பொருள் வரும்வழிக் குறுகினாலும் குறையாத கல்விச் செல்வத்தைக் கொடுக்கும் தன்மையும் ஆசிரியர் தம் பண்புகளாகக் கொள்ள முடிகிறது.

மலரும் ஆசிரியரும்

மலர் மென்மைக்கும் மலர்ச்சிக்குமானது. ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ ‘அனிச்சப்பூ கால்களையாள்’, ‘மலரினும் மெல்லிது காமம், என்றெல்லாம் திருக்குறள் பேசும். ஏனைய பணிகளினின்றும் முற்றிலும் வேறுபட்டது கற்பித்தல் பணி. மற்ற பணிகளில் செய்பவனுக்குத்தான் உயிர் இருக்கும். ஆனால் கற்பித்தல் பணி உயிரும் உள்ளமும் உள்ளவரைச் சார்ந்தவருக்கே அமையும். எனவே ஆசிரியரின் பணிக்கு அறிவைவிட மனநிலையே இன்றியமையாதது. அந்த மனம் மென்மையாக இருத்தல் வேண்டும். அந்த மென்மையை முகம் புலப்படுத்தல் வேண்டும். பூவை வெறுப்பார் பூவுலகில் யாருமிலர். மங்கலப் பொருட்களுள் தலையாயது. மங்கல நிகழ்வுகள் பூவின்றி அமையாது. ஆசிரியரின் உள்ளத்தின் மென்மைக்கும் புன்னகை பூத்த முகத்திற்கும் மலரை உவமமாகச் சொல்லியிருக்கிறார் பவணந்தியார்.

“மங்கலமாகி இன்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே”

என்பது நன்னூல். இதனுள் மங்கல நிகழ்வுகளில் இடம்பெறுவதோடு அதன் இன்றியமையாமையையும் புலப்படுத்தியதன் மூலம் கற்றல் பணி ஆசிரியர்க்கு இன்றி அமையாது என்னும் நுட்பம் உணர்த்தியது காண்க.

துலாக்கோலான ஆசிரியர்

பகை, நொதுமல், நட்பு என்னும் முத்திறத்தார் மாட்டும் ஒப்ப நிற்கும்  நடுவுநிலைமை என்னும் பண்பு சான்றோர்க்கு அணியாகக் கருதப்படும். ‘உள்ளத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி’ என்பார் திருவள்ளுவர். அதற்கு உவமமாகக் காட்டப்படும் பொருள் துலாக்கோல் ஆகும். நீதிமன்றங்களில் அறமகள் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுக் கையில் துலாக்கோல் பிடித்திருப்பதன் நோக்கம் யாவரும் அறிந்ததே. பொருளின் எடையைச் சரியாகக் காட்ட வேண்டுமானால் துலாக்கோல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளல் வேண்டும். திருவள்ளுவர் இதனைச் ‘சமன் செய்து’ என்னும் வினையால் குறிப்பார். ‘முன்னே தான் சமமாக நின்று பின்னே தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் கோல்’ என்று விளக்கமளிப்பார் பரிமேலழகர். கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலைமையோடு தன் பணியைச் செய்ய வேண்டும். துலாக்கோல் மாறாது. எடைக்கற்கள் மாறாது. ஆனால் பொருள்கள் மாறும். சிறப்பான பொருள்களும் சிறப்பற்ற பொருள்களும் மதிப்பிடப்படலாம். பொருளின் சிறப்புக் கருதி எடையை மாற்றிக் காட்டுதல் துலாக்கோலின் பெருமைக்கு ஏலாது.

“ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே”

என்னும் உவம விளக்கத்தால் கற்பித்தற்பொருளை ஐயத்திற்கிடமின்றிக் கற்பித்தலும் விருப்பு வெறுப்பின்றிக் கற்பித்தலுமாகிய பண்புகள் ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.

நிறைவுரை

ஊழ் ஆகூழ், போகூழ் என இருவகைத்தாதலின் அறிவும் இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இருவகைப்படும். முன்னது ‘உண்மையறிவு’ என்றும் பின்னது ‘நூலறிவு’ என்றும் திருக்குறள் குறிக்கும். குறிக்கவே ஆற்றலும் இயற்கையாற்றல் எனவும் செயற்கையாற்றல் என இருவகைத்து என்பதும் பெறப்படும். ஆசிரியருக்கு வரைவிலக்கணம் சொல்லவந்த பவணந்தியார் நற்குடிப் பிறப்பு, அருளுடைமை, தெய்வ நம்பிக்கை, உண்மையறிவு, சொல்லாற்றல் முதலிய இயற்கையமைதிகளைத் தொகுத்துச் சொல்லுகிறார். கற்பித்தல் பணிக்குத் தன்னை வடிவமைத்துக் கொள்ளும் ஆசிரியரின் இயல்புகளைச் சுட்டுகிறபோது நேரடியாக இன்னின்ன பண்புகள் எனச் சுட்டாது,  நிலமாகவும், மலையாகவும், மலராகவும், நிறைகோலாகவும் இருத்தல் வேண்டும் என உவமவழியாக அறிவுறுத்தியிருப்பதை அறியலாம். கற்பித்தல் பணி உள்ளம் சார்ந்த பணியாதலின் உள்ளத்தின் மென்மையை முன்னெடுப்பதே பவணந்தியாரின் கற்பித்தல் கொள்கை என்பதையும் அறியலாம். இனி இதற்கு முரணாக அமைந்த ஆசிரியர்களுக்கான உவமங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

(தொடரும்…)   

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க