ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

0
1

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.     

சித் என்றால் அறிவுஞானம்தெள்ளிய பார்வை, கூர் நோக்குவிரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் – சித்தர்களை அறிவாளிகள்ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள்கூர்ந்த நோக்கினை உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொடுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

மக்கள் சேவையினை மகேசன் சேவையாய்” எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் – பல சித்தர்கள் இருக்கிறார்கள்அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகிறோம்.

பாரத நாட்டில் திருமூலருடன் சித்தர் பரம்பரையினை இணைத்துக் கூறுவது வழக்கம். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இம்மண்ணு லகில் வாழ்ந்து பல அரியபெரியபணிகளையெல்லாம் ஆற்றினார் என்று அறிகிறோம். அவரின் பேராற்றல் வியந்து பார்க்கக் கூடியதாகும். அவரின் திருமந்திரம் என்னும் திவ்விய நூல் பலவித கருத்துக்களின் பொக்கிஷமாய் மிளிர்கிறது எனலாம். திருமூலரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பாரத மண்ணில் வந்தார்கள். அவர்களில் சிலர் ஈழத்திலும் கால்பதித்து சமூக நலனுக்காய் பலவற்றைச் செய்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

ஈழத்துச் சித்தர்கள் என்றும் சொல்லும் பொழுது மற்றய சித்தர்களை விட மாறு பட்டவராய்வேறு பட்டபராய் ஒருவர் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்துஎல்லா இடமும் திரிந்து, யாவருக்கும் சுமை தாங்கியாய்ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவது சாலவும் பொருந்தும் என எண்ணுகின்றேன். ஆடையில் ஆரம்பரம் இல்லை. தனிப்பட்ட எந்த அலங்காரங்களும் இல்லை. எளிமையான வாழ்வு. பரிவாரங்கள் இல்லை. பவனி இல்லை. யாரும் சந்திக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதும் இல்லை. நாடியவர்களின் நலன் காக்கும் நன்மருந்து.

நல்லூரில் தேரடியில் ஞானம் பெற்றுகொழும்புத் துறையில் குடிசையில் அமர்ந்து அருளாட்சி புரிந்து இறையடியைச் சரண் புகுந்த யோகர் சுவாமிகள்தான் அப்பெரும் சித்தராவார்.

மாவிட்டபுரத்தில் சைவக்குடும்பத்தில் பிறந்து “சதாசிவன்” என்னும் பெயர் பெற்று கத்தோலிக்க பள்ளியில் “யோன்” என்று பெயர் மாற்றப்பட்டு நிறைவில் யோகநாதனாகிப் பின் “யோகர் சுவாமி” என்னும் சித்தராய் மலர்கிறார் இந்த மகான். தாயார் சிறுவயதில் இறக்கிறார். தந்தையார் மலை நாட்டில் வேலை செய்கிறார். மகனை எப்படியாவது படிக்க வைக்கத் தந்தை விரும்புகிறார்.

தந்தையின் உடன் பிறந்த சகோதரன் சின்னையாவோ கொழும்புத் துறையில் கத்தோலிக்கப் பெண்ணை மணம் முடித்து அம்மதத்துள் நிற்கின்றார். அந்தச் சூழலில் சதாசிவன் – யோனாகி கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டதைக் கண்டதும்தந்தையுடன் பிறந்த சகோதரி முத்துப்பிள்ளை என்பவர் மருமகனை மீட்டு சைவத்துள் கொண்டுவர முயலுகின்றார். சமணத்துக்குச் சென்ற தம்பியை மீட்ட திலவதியார் போல – மருமகனைச் சைவத்துக்குள் இழுத்திட மாமியார் முன்வந்து நின்றார் எனலாம். மருமகனை மாற்று மதம் தீண்டா வண்ணம் சைவப் பற்றினை ஊட்டுவதற்காக மாமியார் முத்துப்பிள்ளை கையாண்ட வழிகள் நல்ல வெளிச்சமாய் அமைந்தது எனலாம். மாமியாரின் நெறிப்படுத்தலினால் – யாழ் மண்ணுக்கு நல்லதொரு சித்தர் கிடைக்கப் பெற்றார் என்பதும் பொருந்தும் அல்லவா!

கந்தப்பெருமான் அருள்புரியும் மாவிட்டபுரத்தில் பிறந்தவர் கந்தப் பெருமான் அருள் புரியும் நல்லூரில் ஞானம் பெற்றார் என்பது திருவருள் அல்லால் வேறு எப்படி என்று  எடுக்க முடியும்!

எல்லோரையும் போலவே சாதரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே வளர்ந்தார். சாதாரணமாகவே படித்தார். அதன் பின் அரச உத்தியோகமும் பார்த்தார். அவரின் பிறப்பில்கூட எந்த அதிசயமும் நிகழவில்லை என்பதும் நோக்கத்தக்கது. ஆனால் பெரும் மகானாகபெரும் சித்தராக அவர் வளர்ந்து நின்றார் என்பதற்கு இறையருளை தான் காரணம் எனச் சொல்லக்  கூடியதாக இருக்கிறது .

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு “     

என்ற வள்ளுவத்தின் கருவே யாழ் மண்ணின் சித்தரிடம் நிறைந்து காணப்பட்டது எனலாம்.

மற்றவர்கள் துயிலும் பொழுது ஞானி விழித்திருப்பான்” என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அது முற்றிலும் எங்கள் யாழ் மண்ணின் ஆன்மீக ஜோதி யோகர் சுவாமிகளுக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்தது எனலாம். கிளிநொச்சியில் சுவாமிகள் நீர்ப்பாசனப் பகுதியில் கடமையாற்றும் வேளை – வேலை முடிந்து மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவர். சுவாமியோ அவ்வேளை நித்திரையை விட்டு விட்டு நெடுநேரம் “தியானத்தில்” இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. சுவாமிகள் இப்படி இரவில் நடந்து கொள்ளுவதை – அங்கு சென்று வரும் அவரின் மாமியாரின் மகனாகிய  வயித்தியலிங்கம் என்பார் சுவாமிகளுக்கு “விசர்போக்கு” ஆரம்பித்து விட்டது என்று கூறியதாகவும் அறிய முடிகின்றது. கிளிநொச்சியில் இருந்த காலத்தில் – தேவாரம்திருவாசகம்திருமந்திரம், அருணகிரியார் பாடல்கள்தாயுமானவர் பாடல்கள்சித்தர் பாடல்கள்ஒளயார் பாடல்கள்ஆகியவற்றை மனனம் செய்திருக்கிறார் என்றும் அறிய வருகிறது.

சுவாமிகளின் வாழ்கையில் அவரது இருபத்தைந்தாவது வயது குறிப்பிடத் தக்க காலம் எனலாம். அவர் வேலையை விட்டு யாழ்மண்ணுக்கு வருகிறார். இலங்கைவந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரைக் காணும் பேறும் அவருக்கு வாய்க்கின்றது. சுவாமி விவேகானந்தருக்கு யாழ்மண்ணில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்தும்விவேகானாந்தரிடத்தும்இராமகிருஷ்ண அமைப்பிலும் சுவாமிகளுக்கு மிகுந்த நம்பிக்கையும் ஈடுபடும் இருந்தது எனலாம். மயில்வாகனம் என்னும் மட்டுநகர் பெருமகன் இராமகிருஷ்ண அமைப்பில் இணைய விழைந்த வேளை அவரை ஆசீர்வதித்து வரவேற்று நின்றவர் யோகர் சுவாமிகளாவர். அந்த மயில்வாகனே பிற்காலத்தில் முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்த “சுவாமி பிபுலானந்த” அடிகள் ஆவர்.

எப்பவோ முடிந்த காரியம்”

முழுவதும் உண்மை”

“நாமறியோம்”

முழுவதும் உண்மை”

இவையாவும் உபநிடத வாக்கியங்களின் மொழி பெயர்ப்புப்போல் தென்படுகிறதல்லவா ஆம் …. யாழ்மண்ணில் வந்து நின்ற மகா சித்தரான செல்லப்பா சுவாமிகளின் உள்ளத்தினின்றும் வெளிவந்த வாக்கியங்களே இம் மகா வாக்கியங்களாகும். இவற்றை உபநிடதம் அல்லால் வேறு என்ன வென்று சொல்ல முடியும் !

நல்லூர் தெரிவில் சிரித்தபடி திரிந்தார். வெறித்த பார்வையராய் இருந்தார்.

வேடம் எதையுமே விரும்பினர் அல்லர். கறுப்பு நிற மேனியும்கந்தையுமே

அவரடையாளம். அவரைப் பித்தன் என்று மற்றவர்கள் பேசித்திரிவார்கள்.

அவரை நாடி வந்தால் வந்தவரைப்பார்த்துச் சீறுவார். வீதியால் செல்லுபவர்களைப் பேசுவார். புகழ்சியே இகழ்ச்சியோ எல்லாவற்றையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளுவார். திருநீறு அணிய மாட்டார். நெற்றியில் பொட்டும் இருக்காது. முதல் கூறியதைத் திரும்பக் கூறாதவர். சாதியைசமயத்தைப் பேசி சங்கடத்துக்குள் அகப்படாதவர். இப்படியெல்லாம் இருந்தவர்தான் நல்லூர் தேரடியில் இருந்த பெரு ஞானிசித்தர்செல்லப்பராவர்.

அந்த ஞானியை யோகர் சுவாமிகள் 1904 ஆம் ஆண்டில் நல்லூர் தேரடியில் காணுகிறார். “டேய் நீ யார்” என ஒரு உலுக்கு உலுக்கி “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்று உறுமினார். “தேரடாவுள்”,  “தீரடா பற்று”என்னும் உபதேசங்கள் அங்கு அவருக்குக் கிடைத்தன. செல்லப்பரின் உறுமல் யோகர் சுவாமிகளைக் கட்டிப் போட்டது.

ஞான தேசிகனைச் சந்தித்ததும் அதனால் தன்னுள் ஏற்பட்ட பரிபூரண நிலையையும் சுவாமிகள் பாட்டாகவே காட்டியுள்ளார்.

இருவருந் தேடிக் காணா இறைவன் என்போல் உருத்தாங்கி
இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னான் இவனென்ன
ஒருவரு மறியா தோடியுலாவி உவகை பூத்த முகத்தினராய்
ஒருநாள் என்றனை உற்று நோக்கி ஓர் பொல்லாப்பு மில்லையென்று
அருவமுங் காட்டி உருவமுங் காட்டி அப்பாற் கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டிக் அந்த மாதி யில்லாச்
சொரூபமும் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சுமத்தில் மாட்டிவிட்டான்
துன்பம் இறந்தன இன்பம் இறந்தன சோதிசோதி சிவசோதி”

உபதேசம் கிடைத்தும் சுவாமிகள் குருவை விட்டகலாதே இருந்தார். ஆனால் குருவோ அவருக்குச் சோதனைமேல் சோதனைகள் கொடுத்தார். தேறினார் யோகர் சுவாமிகள். ஆனால் செல்லப்பரோ ஏறியே விழுந்தார். இறுதியில் இரு யானைகள் ஒரு தறியில் கட்டப்படாது” என்று செல்லப்பர் கூறி சுவமிகளைக் கலைத்துவிட்டார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு”

இக்குறள் வழியில் யோகர் சுவாமிகள் இருந்தார். அதனால் குருவின் ஏச்சோபேச்சோ அவரை மாற்றிவிடக் கூடியதாக அமையவில்லை. எல்லாமே தனக்கு வாய்த்த உபதேசம் என்று சுவாமிகள் எடுத்துக்கொண்டார்.

குருநாதர் செல்லப்பர் உடல்நலம் இல்லாது படுத்திருந்த வேளை சுவாமிகள் அவரைப் பார்க்கச் சென்றாராம். “என்ன பார்க்கப் போகிறாய்நில் அங்கேஉன்னைச் சிந்தித்துப் பார்” என்றாராம் செல்லப்பர். அவ்வார்த்தையுடன் திரும்பிய சுவாமிகள் அந்தப்பக்கமே போகவில்லை என்று அறிய முடிகிறது.

யோகர் சுவாமிகள் கொழும்புத்துறையில் ஒரு சிறு கொட்டிலில் தனது வாழ்வினை ஆரம்பிக்கிறார். அங்கு ஆன்மீக ஒளி அனைவருக்கும் கிடைக்கிறது. சாதிசமயஇனமொழி, வேறுபாடுகளைக் கடந்து பலருமே அவரை வந்து வணங்குகிறார்கள். ஆசிகளைவாழ்த்துகளைப் பெற்று திருப்தி அடைகிறார்கள்.

யோகர் சுவாமிகளை நாம் இன்றும் நினைத்து அவருக்குக் குருபூசை வழிபாடுகள் செய்வதற்குக் காரணம் அவரின் வாழ்வியல் முறைகளே எனலாம்.

அவரின் பூரணமான துறவு நிலை அவரை பெரும் ஞானியாய் சித்தராய் மிளிர வைத்திருக்கிறது எனலாம். பலரும் சமூகத்தில் துறவு நிலையினை மேற் கொண்டு பிரமச்சாரிகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலையும்  யோகர் சுவாமிகளின் வாழ்வியலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதன்று. அவர்களின் நிலை வேறு. சுவாமிகளின் நிலை வேறு.

தமக்கென வாழா பிறர்க்குரியவராய்” சுவாமிகள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தனக்கு நாளைக்குத் தேவை என்று கருதி எதையும் அவர் வைத்திருக்க எண்ணுவதே இல்லை. அன்பர்கள் கொடுப்பதில் ஒரு சிறுபகுதியை பயன்படுத்துவார். மற்றவற்றை எல்லாம் பங்கிட்டு அளித்து விடுவார். பணம்கூட அவருக்கு ஒரு பொருட்டல்ல. தேவையான பொழுது அவருக்குக் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக பொன்னோபொருளோ எதையும் சுவாமிகள் மனம் நாடுவதே இல்லை.

பற்று இல்லாதவனிடத்து எல்லாப் பொருள்களும் வந்து சேரும்” என்பதற்கு சுவாமிகள் அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு எனலாம். இன்று சித்தர்கள்ஞானிகள்ஆன்மீக வழிகாட்டிகள் என்று நாட்டில் தலைவிரித்து நிற்கும் பலர் பொருள் ஒன்றே குறிக்கோளாய் மனமிருத்தி மக்களை ஏமாற்றி ஆன்மீகத்தையே இழிவு படுத்திக் கேவலத்துக்கு ஆளாகி நிற்பதை இன்று யதார்தமாகவே காணமுடிகிறதல்லவாஆனால் யோகர் சுவாமிகளோ பற்றினைப் பற்றா நின்றவர்”. பரமனைப் பற்றினார். பண்புகளைப் பற்றினார். சமூக நலன்களைப் பற்றினார். ஆன்மீகத்தைப் பற்றினார். அக ஒழுக்கத்தைப் பற்றினார். அன்பைப் பற்றினார். ஆறுதலைப் பற்றினார்.

பலவித கொள்கையினை உடையவர்கள்அரசியலில் உயர் நிலையில் இருப்பவர்கள்அரச உயர்பதவிகளில் இருப்பவர்கள் என்று பலவகைப் பட்டவர்கள் சுவாமிகளை நாடி வருவர். வருபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்திட சுவாமிகள் விரும்பியதே இல்லையாம். இப்படி சுவாமிகள் நடப்பதால் வருபவர்கள் மனதில் – தங்களின் கொள்கையினை உடையவர் தான் சுவாமிகள் – என்னும் எண்ணம் உருவாகி விடுகிறது எனலாம்.

பார்க்கும் இடமெங்கும் நீக்கமறப் பரம் பொருளையே”  சுவாமிகள் காண்பதனால் அவருக்கு வருபவர்கள் வேறுபாடுகள் தென்படுவதில்லை எனலாம்.” ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செய்ய வேண்டும்” என்பதை வருபவர்களுக்கு சுவாமிகள் பெரும் உபதேசமாக வழங்குவார். பஞ்சமா பாதகங்களை ஒருவன் ஒழித்தாலே வாழ்வு சிறக்கும் என்பது சுவாமிகளின் பெரு நம்பிக்கையாய் அமைந்தது. துறவு பூண்டுதான் உண்மையினை உணர வேண்டும் என்பதில்லை. இல்லறத்தே இருந்தாலும் நல்லறமாய் வாழ்க்கையினை அமைத்துக் கொண்டால் உண்மையினை உணரலாம் என்பது சுவாமிகளின் நல்ல தொரு தத்துவமாயும் வாழ்வியலுக்கு ஏற்ற வழிகாட்டியாயும் அமைந்தது எனலாம்.

உலகத்தைத் திருத்த முயலுதல் என்பது நாய் வாலை நிமிர்த்த முயல்வது போலாகும். உன்னை முதலில் திருத்த முயற்சி செய். உலகத்துக்கு நன்மை செய்ய முற்பட்டால் நாமே அதிக நன்மையை அடைகிறோம் என்பதை நாம் அனைவருமே உணருதல் வேண்டும் என்னும் அரிய தத்துவத்தை சுவாமிகள் மொழிந்திடுவார். இது யோகர் சுவாமிகளின் சமுதாய அக்கறையினைப் பறைசாற்றி நிற்கிறதல்லவாமுற்றும் துறந்த பற்றற்ற சித்தரான யோகர் சுவாமிகளின் இச்சிந்தனையாலேதான் இன்றும் நாம் அவரை நினைக்கவும் பூசிக்கவுமான நிலை ஏற்படுகிறது எனலாம். துறவி என்றால் காட்டுக்குப் போய் கடுந்தவம் ஆற்றுவதல்ல. நாட்டுக்குள்நாட்டு மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து நாட்டுமக்களின் நல் வாழ்வுக்கு வெளிச்சமாய் இருப்பதுதான் சரியான துறவியின் இலட்சணம்இலக்கு என்பதைக் காட்டியவர் யோகர் சுவாமிகள் என்பதை எவருமே மறுத்துரைத்துவிட முடியாது! அதனால் தான் அவரை நாடு கடந்தும் மொழி கடந்தும் இனங்கடந்து பின்பற்றிப் பல சீடர் பரம்பரையும்நல்ல வழிகாட்டுதல்களும் மலர்ந்திருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

யோகர் சுவாமிகளின் நெறிப்படுத்தலால் பல இளைஞர்கள் வாழ்விலே திருந்தி இருக்கிறார்கள். பொதுமக்களுக்கான சேவைகளை இன்றும் யாழ்மண்ணில் செய்து கொண்டு பல உள்ளங்கள் இருக்கின்றன என்றால் அதற்கெல்லாம் வித்தாகி உரமாகி நிற்பவர் யோகர் சுவாமிகளே ஆவர். ஆண்டவன் இல்லை என்று அடித்துக் கூறியவர்கள் பலர் சுவாமிகளின் அறிவுரைகளால் ஆன்மீகத்தில் நாட்டங் கொண்டு ஆண்டவன் புகழ் பாடும் நிலையில் வந்து நின்றார்கள் என்பதும் அறியக்கூடிய ஆனந்தமான அவசியமான தகவல் எனலாம்.

திருவாசகத்தை பெரிதும் சுவாமிகள் விரும்பினார். திருவாசகத்துள்ளும் சிவபுராணத்தை அவர் முக்கியத்துவப் படுத்தினார். ஈழத்தில் சிவபுராணம் பள்ளிகள் தோறும் வெள்ளிக் கிழமைகளில் பிராத்தனை மண்டபத்தில் படிக்கப்படுவதற்கும் யோகர் சுவாமிகளின் வழிகாட்டலே துணையாய் அமைந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிவதொண்டன் நிலையம் சுவாமிகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இராகமாகப் பாடி திருமுறைகளை ஓதுவதில் சுவாமிகள் பெரு விருப்புடையவராக இருந்தார் எனலாம். அவரின் திருவாக்காய் மலர்ந்திருக்கும் “நற்சிந்தனைகள்” மிகப் பெரிய தத்துவக் கருத்துகளை உள்ளடக்கிய எமக்கு வாய்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

சித்தர் என்றால்யோகி என்றால்ஞானி என்றால்சாத்திரம் சொல்லுவார். தொட்டவுடன் நோய்களைப் போக்குவார். கேட்டவற்றை உடனே கண்முன்னே வரவழைத்துக் கொடுப்பார். உருவை மாற்றுவார். சித்துக்கள் காட்டுவார். என்றெல்லாம் நாம் அனைவரும் எண்ணியே நிற்கின்றோம். இப்படியெல்லாம் செய்யும் நிலைக்கும் ஞானத்துக்கும் எந்தவித தொடர்புமே இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். இதை நம்மில் பலர் அறியவில்லை எனலாம்.

யாழ்மண்ணின் யோக புருஷரான யோக சுவாமிகள் மானிடம் தளைக்க நல்ல ஆன்மீக ஒளி பாய்ச்சிட வந்த மகானாகவே விளங்கினார். அவரிடமும் எதிர்காலத்தை அறியும் ஆற்றலும்வருகின்ற அல்லல்களை அறியும் ஆற்றலும்நிரம்பியே இருந்தது. ஆனால் அவர் அவற்றை மக்கள் மத்தியில் காட்டி செல்வாக்கினைப் பெற்றிட ஒரு நாளுமே எண்ணம் கொண்டவராக இருந்ததே இல்லை. தனது மனதுக்குப் பட்டால் சிலவேளை சிலருக்கு வழி காட்டியிருக்கிறார் என்பதை அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ள முடிகிறது. “பெரியோர்களை நாடுவதன் தலையாய நோக்கம் நம்மைச் சீர்படுத்துவதற்கே அன்றி வேண்டியதைப் பெறுவதற்கு அல்ல” என்னும் கருவினைத் தமது உள்ளத்தில் கொண்டு செயற்பட்டபடியால் தான் இன்றும் நாம் யோகர் சுவாமிகளை நினைத்து அவரைப் போற்றுகிறோம் எனலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.