பாலம் கல்யாணசுந்தரம் ஐயா

பாஸ்கர் சேஷாத்ரி
இன்று பாலம் திரு கல்யாணசுந்தரம் அவர்களைச் சந்தித்தேன். எளிமைக்குப் பெயர் போனவர். எங்களைக் காத்திருக்கச் சொல்லவில்லை. நேரே வந்து அமர்ந்தார். எங்களைப் பற்றி அவர் விசாரித்த பின் அவரின் சேவை மனப்பன்மையைப் பற்றி வினவினேன். அலட்டிக்கொள்ளாமல், எல்லோரும் சின்ன வகையாய் செய்வதை தாம் பெரிதாகச் செய்வதாகச் சொன்னார்.
கொஞ்சம் இளைத்துத்தான் போயிருக்கிறார். ஆனால் பேச்சின் தீர்க்கம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. ஓய்வுக்குப் பின், தனக்கு வந்த பணத்தை அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்தவர். தனக்குச் சில நிறுவனங்கள் தரும் உணவும் உடையும் போதும் என்கிறார். நாலு ஜோடி சட்டை வேட்டி தான் அவர் சொத்து. எல்லாவற்றிற்கும் காரணம் அவர் அம்மா சிறு வயதில் கண்டிப்புடன் கொடுத்த போதனை – கிடைக்கும் வருமானத்தில் பத்து சதவிகிதம் ஏழை எளியோர்க்கு அளித்து வாழ்ந்தால் அதுவே போதும் என்ற அவரின் அறிவுரையை இன்று வரை கடைப்பிடிக்கிறார். உணவிலும் கூட, கிடைத்ததைப் பகிர்ந்துவிட்டு வாழ்கிறார். பிரம்மச்சாரி. எண்பது வயதை நெருங்குகிறார். தமிழில் பேசுவதைப் பெரிதும் விரும்பகிறார். பட்டதாரி தான். ஆனாலும் அவருக்குத் தமிழ்க் காதல் அதிகம். கொடுப்பதற்கு ஒரு பெரும் மனம் வேண்டும். இந்திய – சீனப் போர் வந்த போது பண்டித நேரு அவர்கள் வானொலியில் பேசுவதைக் கேட்டு, தன்னிடம் இருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலியை அன்றே கொடுத்தவர் . தர்மம் செய்ய எந்தக் கல்லூரியும் கற்றுக் கொடுக்காது.
ஒரு நிகழ்ச்சி சொன்னார். சிறு வயதில் ஏதோ விற்று அம்பது ருபாய் கிடைத்து அவர் சட்டை ஒன்றை வாங்கிக் கொண்டாராம். அதை அம்மாவிடம் சொன்ன போது, பத்து சதிவிகித நிதியை ஒதுக்காத காரணத்தால் இவரைக் கன்னத்தில் அறைந்து, அந்தச் சட்டையை மண்ணெண்ணெய் கொட்டி எரித்தாராம். எவ்வளவு உறுதியான பெண்மணி பாருங்கள்..
இவரை நான் சந்தித்தது பெருமையான விஷயம் – எங்களை அமர வைத்து அருகில் இருந்து சம்பாஷித்தது எனக்குக் கிடைத்த பெரும் ஆசி. இவரைப் போல தர்மம் செய்வதற்காகவாவது நான் நிறைய ஈட்ட வேண்டும். நான் எமோஷனல் ஆவது கொஞ்சம் இயல்பு தான். இன்று அந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான எனது அவருடன் ஆன இருப்பு, என்னைச் சுத்தப்படுத்தி உள்ளது.
இந்தச் சந்திப்பு நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுபோல் அது என் நினைவில் பசுமையாக உள்ளது.