Tag: ரா. பார்த்தசாரதி

  • பொருள் ஒன்று, பயன் வேறு

      ரா.பார்த்தசாரதி

     

    உலை அரிசிக்கு தெரிவதில்லை – அது

    உருமாறி பலரின் பசியாற்றப் போவது!

     

    ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை – அது

    அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!

     

    அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை – அது

    மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!

     

    வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை – அது

    சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!

     

    ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை – அது

    ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!

     

    அரிசி ஒன்று தான் – ஆனால்,

    பயன் வேறு வேறு!

     

    மலர்கள்  ஒன்று சேர்ந்து   திருமண மாலையாகிறது

    மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !

     

    மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது

    மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !

     

    தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது

    அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !

     

    வாழ்க்கை ஒன்று தான் – அது

    வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!

     

     

    Share
  • நாணம்

          ரா.பார்த்தசாரதி

     

     

    கதிரவனை கண்ட  நாணலே,  நாணத்தால் தலை குனிந்தாயோ

    காதலன்  நெருங்கி வருவதை கண்டால் நாணம் கொள்வாயோ

    இனியவளே ! உன் நாணத்திற்கு  என் நெருக்கம்தான் காரணமோ

    இரு கைகளைக் கொண்டு மறைத்தால்  நாணம் போய்விடுமோ !

     

    நாணமெனும்  போர்வைக்குள் உன் உடல் மறைகின்றதோ

    கருமேக கூட்டத்திற்குள்  பால் நிலா  மறைகின்றதோ

    நாணமென்பது  பெண்ணிற்கு  ஓர்  அணிகலமானதோ

    முகத்தை மறைத்தாலும்,கன்னங்கள் சிவந்து வெளிப்படாதோ !

     

    நான் விண்ணை பார்க்கும்போது என்னை பார்க்கின்றாய்

    நான் உன்னை நோக்கும்போது, குனிந்து காலால் கோலமிடுகின்றாய்

    உன் நெஞ்சத்திற்குள்ளே  உன் முன் உலா  வருவேன்

    உன்  கன்னம்  சிவக்க காதல் மொழி பேசிடுவேன் !

     

    நாணம் என்பது  பருவத்தின்  கண்ணாடியோ !

    காதலில் பழகுவதற்கு ஓர் முன்னோடியோ

    இலைமறை காய்மறைவாய் காதலை  வெளிப்படுத்துமோ

    பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் கதைகள் பேசிடுமே !

     

    நாணமும், அச்சமும்  காதலியின்  உடைமையாகுமே

    ஒன்று கலந்த நெஞ்சம் உறவை நாடிக்   கெஞ்சுமே

    நாணத்தால் முகம் சிவந்து காதல் வெளிப்பட்டதே

    அன்பை நினைத்து ஏங்கி, அமுத நிலையை நாடுதே !

     

     

     

     

    Share
  • ஊர் நினைப்பு

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    நான் இல்லாமலேயே  எங்கோ வெகு தூரத்தில் இருக்கிறதே

    என் கால் தடம் படாத அந்த சவுக்கு காடும் இருக்கின்றதே

    மழை வராத காலங்களில் மணல் சுடுவதும் தெரிந்ததே

    கடும் வெய்யிலில் எனக்கு நூங்கும், இளநீரும் தாகம்தீர்த்ததே!

     

    சப்பாத்தி முள்ளில் பெயரெழுதிய அந்த கள்ளிச் செடி வரவேற்றதே

    நான் வளர்த்த தென்னையும்,மாமரமும் காயும்,கனியுமாய் நின்றதே

    ஊர் அம்மன் கோவில் குகை என் குரலை அன்றும் எதிரொலித்ததே

    ஏரியும், குளமும் வறண்டு பாலைவனமாய் காட்சி அளித்ததே!

     

    அன்று மழை பெய்து பயிர்கள் யாவும் பசுமையாய் காணப்பட்டதே

    மழை இன்மையால் உழவு மாடுகளும்,பசுக்களும் காணாமல் போனதே

    விவசாய  நிலங்களும் வீட்டு  மனைகளாக கூறு போடப்பட்டதே

    மக்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாய் ஆனதே!

     

    ஏதோ ஒருநாள் குலதெய்வம் வேண்டுதலுக்காக ஊர்  கூடுகின்றதே

    அன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து விழாவிற்கு உதவி செய்கின்றதே

    யாதும் ஊரே ! யாவரும் கேளிர் என்ற பழமொழி ஞாபகம்  வருகின்றதே

    ஊர் விட்டு, நகரில் வசித்தாலும் ஒரு நாள் ஊர் நினைப்பு   மனதில் தோன்றுதே !

     

     

    Share
  • நட்பு தினம்

    ரா.பார்த்தசாரதி              

    நட்பு என்பது இருபாலார்க்கும், மாநிலங்களுக்கும் பொது 

    ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது  பழமொழி 

    நல்லவர்களது  நட்பு என்பது  வளர்பிறை போன்றதாகும்

    தீயவர்கள்     நட்பு  என்பது  தேய்பிறை  போன்றதாகும் !

     

    நட்பு  என்பதின்   அடிப்படை அன்பும், நம்பிக்கையுமே 

    பழக, பழக  ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையே,

    பண்புடையோர் நட்பு என்றும்  இன்பம் தரும் 

    பண்பிலார்  நட்பு  என்றும்  துன்பத்தை  தரும் !

     

    ஒத்த உணர்ச்சியே  ஒருவனின்  நட்பினை பெருக்கும் 

     மாறுபட்ட  உணர்ச்சியே  ஒருவனின் நட்பினை விலக்கும் 

     ஆடை  அவிழும் போது மறுகை  தானாகவே பிடித்திழுக்கும் 

    நல்ல நண்பனின் உதவியும் தானே தேடி வரும் !

     

    நட்பிற்கு இலக்கணம், பிசிராந்தையார், கோப்பெருங்சோழன்

     நட்பிற்கு இலக்கணம் ஒளவையாரும், அதியமானும் 

    உலகில்  தவிர்க்க முடியாதது  பந்தமும், பாசமும்,

    உலகில்   பிரிக்கமுடியாதது  உறவும்,  நட்பும்  !

                 

    அண்டை மாநிலத்துடன் நட்பாய் இருந்தால் பிரச்சனைகள் தீரும் 

    ஒருவர்க்கொருவர் நேசமும், நட்பாய் இருந்தால் நன்மைகள் பல.

    யாதும் ஊரே, யாவரும் கேளிர் ! என்பது   பழமொழியாகும் 

     நட்பு தினத்தன்று, நட்பை பாலமாக, அமைப்பதே புது மொழியாகும் !

     

     

     

    Share
  • சந்தோஷம் என்றும் நம் பக்கம்

     

    ரா. பார்த்தசாரதி

     

    சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,

    சந்தோஷம்  என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,

    அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,

    சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,

    எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது

    போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது !

    சூரியனைக்  கண்டால்  தாமரை

    சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,

     

    கார்முகில்கள்  திரண்டு  வந்து

    மழை தந்துதான்  பழக்கம்,

    மழையைக்  கண்டால்  மயிலுக்கு

    மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,

    காட்டில்  உள்ள  குயிலுக்கோ

    சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.

     

    கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை

    எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால்

    வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!

    Share
  • எதிர்பாராதது

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    மனித வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்,

    ஏனென்று  தெரியாத வருத்தம்

    மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்

    உள்ளத்தினில் சத்தம் போடாத ஆசைகள்

     

    எதற்குமே வெட்கப்படாத ஏக்கம்

    நெஞ்சினில் வேதனை கலந்த துக்கம்

    படபடப்பில் ஏற்படும் காரணமில்லாத கோபம்

    இழந்ததை கண்டு, கண்ணீர் சிந்தும் தோல்வி!

     

    வாழ்வில் மறக்க விடாத நினைவுகள்

    மனதினில் மறைக்க முடியாத உறவுகள்

    மனதிலே அலைபாயும் காதல்

    மனிதன் அலைந்து தேடும் வேலை!

     

    என்றும் விட முடியாத தொடர்புகள்

    விட்டொழியாத தொல்லைகள்

    கலங்க வைக்கும் அவமானங்கள்

    கலைய மறுக்கும் கனவுகள்!

     

    இத்தனையும் மொத்தமாகி நிற்க

    இவ்வளவு தான் வாழ்க்கை என

    எதையும் தொலைத்து விட வேண்டாம்!

     

    கிடைத்த வாழ்க்கையை

    குறைகள் சொல்லி உடைத்து விடாமல்

    இருப்பதை  கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தாலே!

    மகிழ்ச்சி  என்றும் நம்பக்கம் !

     

     

     

     

    Share
  • கல்யாணம்

     ரா.பார்த்தசாரதி 

     

    கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல காளை வந்தான்

    கழுத்தில் தாலி ஏறும் வேளை  வந்தது

    மாப்பிள்ளை  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது

    கல்யாண சந்தையில் மாப்பிள்ளை  ஒரு வியாபார பொருள்

     

    பிள்ளையை விற்கும் பெற்றோரை  பாருங்கள்

    தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்

    பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப்பொருள்  ஆனதே

    கரும்பு தின்ன கூலி கேட்கும் அவலம்  ஆனதே!

     

    வரதட்சணை உங்களை பூம்,பூம் மாடாக்கியதே

    வருங்காலத்தில் வரதட்சிணை மறைமுகமாக வசூலாகிறதே

    வரதட்சணைக்கு  தடை விதியுங்கள்

    பெண்ணின் இதயத்தை தட்சணையாக கேட்டிடுங்கள்!

     

    உங்கள் அன்பை பெண்ணுக்கு கைமாறாய் கொடுத்திடுங்கள்

    மகள் இல்லா வீட்டில் , மருமகளை மகளாக நினைத்திடுங்கள்

    மகன் இல்லா வீட்டில்  மருமகனை மகனாய் நினைத்திடுங்கள்

    மாப்பிளைகளே வரும் காலத்தில், பூம்,பூம் மாடாய் இருக்காதீர்கள்

     

    வரதட்சணை  இல்லா வாழ்க்கைத்  துணையை நாடுங்கள்

    பணத்தை குறிக்கோளாய் என்றும் நினைத்திடாதே

    படிப்பிற்கும், அறிவுக்கும், மதிப்பு அளித்து விடு

    விட்டுக்கொடுத்து  வாழ்வதே நன்மை என நினைத்திடு  !

     

     

     

     

    Share
  • எதைக் கொடுத்து, எதை வாங்க

     

       ரா.பார்த்தசாரதி

     

     

    நாடகமே   உலகம் என்று கவிஞன் சொல்வதுண்டு

    நாமெல்லாம் அதிலே நடிக்கும் பொம்மைகளாய் இருப்பதுண்டு

    இன்று  வியாபாரிகள்  கையில் பொம்மையாக  சுழல்வதுண்டு

    இன்று எதுவுமே  சும்மா கிடைப்பதில்லை !

     

    இலவசம் என்றாலே மக்களுக்கு  பரவசம்

    ஏமாறாமல்  இருப்பதே  நம்  வசம்

    எதை வாங்க, எதை விலையாய் கொடுக்கின்றாய்

    இலவசப் பொருளின்  விலையும் இதில் அடங்குமே

     

    வேலியே பயிரை மேய்வது  தெரிகின்றது

    அரசும் வரிகளால் மக்களை பிழிகின்றது

    பாதிக்கப் படுவதோ நடுத்தர வர்க்கமானதே

    மக்கள் அவதியுறுவது வரிச்சுமை என தெரிந்ததே!

     

    மகிழ்ச்சியை  தொலைத்து சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம்

    ஆடம்பரத்தில் வீழ்ந்து  மடிகின்றது   ஒரு கூட்டம்

    ஆடையையும், ஆபரணத்தையும் குவிக்கின்றது ஒரு கூட்டம்

    பொன்னிலும்,மண்ணிலும் பற்று கொண்டு அலையுது ஒரு கூட்டம் !

     

    தொலைக்காட்சியில், வியாபார முறையில்  ஆயிரம் விளம்பரம்,

    வேண்டாததை, வாங்கி குவிக்கும் இளைய தலைமுறை கூட்டம்,

    அன்பை ஆராதிக்கவும்,  வளர்க்கவும் இவர்களுக்கு தெரியவில்லை

    பாசம், மனித நேயம்,  இவைகளை பொருட்படுத்தவில்லை !

     

    உண்மையான பாசத்தையும், நேசத்தையும் அடைய பார்

    அதற்காக  அன்பையும், நல்லதையும்  செய்து பார்

    மனமகிழ்ச்சியும், நிம்மதியுமே  உன் வரவு

    உன் மேன்மையையும்,  புகழினையும் வளப்படுத்தும் உறவு !

     

     

    Share
  • அன்பின் பரிமாணம்

     

    ரா. பார்த்தசாரதி

     

    மண்ணின் காதல்,  மழை துளியே

    விண்ணின் காதல், அழகிய மதியே

    மலையின் காதல்,  மேகம்  அன்றோ

    பூவின் காதல், வீசும்  தென்றலன்றோ !

     

    காதல்,  இது இல்லாத இடம்  ஏது ?

    காகிதமும் காதலிக்கும்,தன் மேல் மேவும் எழுதுகோலை

    காதல் ஒன்றையொன்று சார்ந்து நிற்குமே

    ஊருக்குள்  அவை அடையாளம் காட்டுமே !

     

    காதல் என்பது  அன்பின் பரிமாணமன்றோ!

    இரு இதயங்களின்   சங்கமம் அன்றோ

    காதல் என்பது இரு விழிகளின்  நேசமே

    அதுவே  அவர்களின் காதல் தேசமே !

     

    உன்னை என் உள்ளத்தில் அள்ளித் தெளித்தேன்

    இரவில் கனவில் விளையாடி, உறவில் கலந்தேன்

    உன்னிடத்தில் என் நினைவு,என்னிடத்தில் உன் நினைவு

    நம்  அன்பின்  அளவிற்கு  எல்லையில்லா  முடிவு !

     

    இதுதான் காதலோ? கண்கள்  இரண்டும் சொந்தம்  கொண்டாடுதோ

    குறைகள் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளும் உண்மை காதலோ

    அன்பு குறையாமல்  மாற்றம்  காணாத  இன்ப காதலோ

    இரு பார்வைகள் சேர்ந்தும்,  வாய் பேச முடியாத  காதலோ !

     

     

     

     

    Share
  • மழையே தாகம் தீர்த்துவிடு

     ரா.பார்த்தசாரதி

     

    மழையே உன்னை நினைத்து ஏங்காதவர்கள் எவருமில்லை

    பயிர்கள்  உன் வரவுகண்டு மகிழ்ச்சி  கொள்ளாமல் இல்லை

    விட்ட குறை, தொட்ட குறையாய் வந்து செல்கின்றாய்,

    ஏனோ சில மணித்துளி பெய்து வாசல்கோலங்களை அழிக்கின்றாய் !

     

    உன்னை நினைக்காத நாளில்லை தண்ணீர் பஞ்சம் வந்தபோது

    நிலத்தடி நீரையும் பல ஆழ்கிணற்றால்  சுரண்டப்பட்டபோது

    நீரின்றி உலகம் அமையாது என்று மக்கள் நினைத்தபோது

    மனிதன் இயற்கையை எதிர்த்து நீரைப் பெற நினைக்கும்போது!

     

    அருவிகளும், மலைகளும் இருகைகொண்டு உன்னை வரவேற்கும்

    மலைகளும், உன்னை அருவியாய் பிரித்து மக்களை நனைக்கும்

    அருவிகளும் நடனமாடி அழகுடன் மக்கள் மனதில் கலக்கும்

    கடலே உன்னை அணைத்து மீண்டும் மேகமாய் உருவெடுக்கும்

     

    உன்னை வரவேற்க நான்மட்டும்மல்லா, என் தாய்நாடும்தான்

    நானில்லாத நாட்களில் வந்தாலும், உன் அருமை தெரியவில்லை

    நீரை முகந்து , கருமேகமாய் மாறி  உலகிற்கு மழையைப் பொழிகிறாய்

    கைம்மாறு கருதாது  பயிருக்கும்,மக்களுக்கும் தாகம் தீர்க்கின்றாய் !

     

    மழையே,  உன் இதழ் துளி  எங்கள் உயிர் துளி என கருதுவோம்

    என்று தணியும் உன் கோபம், என்று தீரும் எங்கள் தாகம்

    மகன் பிறப்பதும்,மழைபொழிவதும், மகேசனும் அறியார்

    உன்னருமை கண்டு  வான் சிறப்பில் வள்ளுவன் எடுத்துரைத்தார் !

     

     

    Share
  • உலக யோகா தினம் – ஜூன் 21ம் தேதி

     
    ஆய கலைகள் அறுபத்து நான்கு கலையே

    யோகாவும் இதனில் அடங்கும் கலையே

    யோகிகளும், துறவிகளும் தொன்றுதொட்டு வளர்த்த கலையே

    நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !

     

     

    உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும்

    மூச்சு பயிற்சியினால் பலவித நோய்கள் அடங்கும்

    யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,
    அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !

     

     

    யோகாசனங்களில் பல வகைகள் உண்டு
    சில யோகாசனங்களுக்கு மிகுந்த சிறப்புண்டு
    சிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்
    அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

     

     

    யோகா கலை நமது நாட்டில் தோன்றியதே

    பழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே

    முனிவர்களும், சித்தர்களும் வளர்த்த கலையாகும்

    இதன் பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்

     

     

    நோய்யற்ற வா ழ்வே குறைவற்ற செல்வம்,

    யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள்

    யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்

    உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஆசையே அலைபோலே

     

     
    ஆசையின் போக்கில் செல்லும் மனிதனே

    ஆபத்தை விலைக்கும் வாங்கும் மானிடனே

    அடைவது எல்லாம் துன்பமே அறிந்திடுவாயா

    ஆசையை அடக்க மார்க்கத்தினை அறிந்தாயா !

     

     

    துடுப்பிலா படகில் சென்றால் இலக்கை அடையமுடியுமா

    பொறுப்பில்லாமல் வாழ்வதாலே பலன் பெறமுடியுமா

    மனிதனின் மனதினில் அலைபோல ஆசைகள் எழுமே

    ஆசையை கடிவாளமிட்டு அடக்கி ஆள வேண்டுமே!

     

     

    எதை எடுத்தாலும் சந்தேகிப்பவன் வாழ்க்கை துயரமாகும்

    தன்னை நம்பாதவன், கற்பனை செய்து தவிப்பவனாகும்

    மதிப்பினை தருவது நிறை வேற்றப்படும் நற்செயலாகும்

    இதனை மனதில் கொண்டால் வாழ்க்கை நலமாகும் !

     

     

    கையளவு இதயம் வைத்தான், கடலளவு ஆசை வைத்தான்

    ஆசையே மனிதனின் அழிவிற்கு வித்து என உணரவைத்தான்

    மண் மீதும், பெண் மீதும் ஆசை கொண்டவனை அழித்தான்

    மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் உதாரணமாக வைத்தான்

     

     

    ஆசையை துறந்தவன் முற்றும் துறந்த முனிவனாகிறான்

    ஆசையை துறக்காதவன் துன்பமெனும் கடலில் மூழ்கின்றான்

    மது, மாது, சூது இம்மூன்றும் மனித வாழ்வை சீர்குலைக்கும்

    மனிதனின் மனம் செம்மையாய் இருந்தால்தான் நன்மை பயக்கும்!

     

     

    மனமெனும் கடிவாளத்தால் ஆசையினை அடக்கப் பழகு

    பிறர் பொருள் மீது ஆசை படுவதையும் அறவோடு விலக்கு

    ஆசையை விட பேராசையே அழிவிற்கு பாலம் அமைக்கும் 

    ஆசைக்கு அணை போட்டால்தான் வாழ்க்கை நிலைக்கும் !

     

    ரா. பார்த்தசாரதி

    Share
  • உன்னதமான வாழ்க்கை

     
    சும்மாவே இருந்திருந்து, சோம்பித் திரிந்திடுவார்

    வாழ்க்கை வெறுத்துவிட்டது என புலம்புவார்

    தன் கையில் எல்லாம் வரவேண்டுமென எதிர்ப்பார்ப்பார்

    இருப்பிடம் விட்டு நகர்வதற்கும் காலதாமதம் செய்வார் !

     

     

    உடம்பை சுமையாய், மனசை பாலைவனமாய்

    வாழ்க்கை வறண்டதாய் என்றும் நினைத்துடுவார்

    இதுவா வாழ்க்கை என உள்ளுக்குளே புலம்பிடுவார்

    வீணாய் போன, நாட்கள் ஆயுள் பகுதியால் மறைத்துடுவார் !

     

     

    வெந்த சோற்றை தின்று விதிவசத்தால் இறப்பாயா

    வாழ்வின் ஓவ்வொரு கணமும் சுவைக்க பழக மாட்டாயா

    ஓவ்வொரு விடியலும்,தனக்காகவே என எண்ணமாட்டாயா

    வாழ்க்கை வாழ்வதற்க்கே எனவும் நினைக்கமாட்டாயா !

     

     

    உன்முன் பறந்து விரிந்த வர்ணம் சொல்லவில்லை

    பரந்த மனப்பான்மை கொண்டு பார்க்க மனமில்லை

    காலையில் சூரிய கிரணங்கள் கண்களை கூசாமலில்லை

    இன்னும் உன் சோம்பேறிதனத்திற்கு முடிவு இல்லை!

     

     

    உன் மனம் அழுக்கு மூட்டை அல்ல

    வேண்டாத அழுக்கை மனதிலிருந்து நீக்கு

    நல்லெண்ணத்தை மனமெனும் பூந்தொட்டியில் செருகு

    புது,புது எண்ணங்களை எண்ணி வாழ்வை புதிதாக்கு !

     

     

    உனக்கேயின்றி ஊருக்காக உழைத்துப் பார்

    உனக்குள் ஏற்படும் உற்சாகத்தை நினைத்துப் பார்

    மரணம் என்பது மனிதனுக்கு நிரந்தரம் என நினைத்திடு

    உன்னத வாழ்க்கை வாழ்ந்து, புகழினை அடைந்திடு !

     

     

    ரா.பார்த்தசாரதி

    Share
  • நினைக்கத் தெரிந்த மனம்

     ரா.பார்த்தசாரதி

    செய்தித் தாளை பிரித்தால் தினம் ஒரு சாலை விபத்து,

    நினைத்தாலே  பதை  பதைக்கிறது நம் மனம் 

    இரக்கமில்லாமல் கலப்படம் செய்யும் அரக்கர்களை கண்டு

    எதிர்க்க முடியாமல் கொதிக்கின்றது நம்  மனம்!

     

    ஜாதி,மத சண்டைகளை செய்யும் மத வெறியர்களை கண்டால் 

    சமாதானப்படுத்துவதா, பரிதாபப்படுவதா என நினைக்கும் நம் மனம் 

    நாடுகள் வேறாக இருந்தாலும்,அப்பாவிகளை கொல்லும் 

    தீவிரவாதிகளை கண்டால் வெறிக்கிறது நம் மனம் !

     

    சஞ்சலமின்றி சிறை செல்லும் அரசியல்வாதிகளை கண்டால் 

    காறித் துப்ப நமது மனம் எண்ணுகின்றது !

    கோடி,கோடியாக பணம் செலவழித்து திரைப்படம் எடுப்பதை கண்டால்!

    காதலுக்காக உயிர் விடுவது கண்டு நம் மனம் சிரிக்கின்றது!

     

    மக்களின் அறியாமையை மூலதனமாக்கி பணம் சேர்க்கும் 

    ஆன்மிகவாதிகளை கண்டால் நம் மனம் சினம் கொள்கிறது!

    முதல் போட்டு ஆரம்பித்த தொழில் நலிவடையும் போது 

    முதலாளியை கண்டு நம் மனம் வருத்தம் கொள்கின்றது !

     

    தினமும் நம் அறிவும், மனமும் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது  

    நம்மிடம் வெவ்வேறு வேலைகள் வரும்போது இவை திசை மாறுகிறது 

    நினைக்க தெரிந்த மனதிற்கு கெட்டதை மறக்கத் தெரியவேண்டும் 

    மறக்கத்  தெரிந்த மனதிற்கு என்றும் உண்மை புரியவேண்டும்

     

    Share
  • இறைவனின் விளையாட்டு

     

            ரா.பார்த்தசாரதி

     

    இறைவனே ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது

    என் கண்ணெதிரே  கைகால் இழந்தவன்  காட்சியளிக்கின்றான்

    ஊன்று கோல் துணையுடன் அருகில் வந்து கைநீட்டுகின்றான்

    உனக்கும் கீழே பல கோடி  என இறைவன் அறிவுறுத்துகின்றான் !

     

    தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை

    சாலையோரத்தில்  காலணி தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை

    சாலையில் குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை

    மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !

     

    வெய்யில் மழை பாராமல் கூவி கூவி விற்கும் பூக்காரி

    நடை பாதையில் பழரசம் தேநீர் விற்கும் வியாபாரி ,

    பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,

    நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு  சிறு வியாபாரி !

     

    மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை

    அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை

    படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை

    வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !

     

    வாழ்க்கையை, வாழ்க்கையாலே  இறைவன் பிரிக்கின்றான்

    இறைவன் விளையாட்டை  நம்மிடம்  காட்டுகின்றான்

    தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்

    அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !

     

     

     

     

    Share