ரா.பார்த்தசாரதி

 

 

கதிரவனை கண்ட  நாணலே,  நாணத்தால் தலை குனிந்தாயோ

காதலன்  நெருங்கி வருவதை கண்டால் நாணம் கொள்வாயோ

இனியவளே ! உன் நாணத்திற்கு  என் நெருக்கம்தான் காரணமோ

இரு கைகளைக் கொண்டு மறைத்தால்  நாணம் போய்விடுமோ !

 

நாணமெனும்  போர்வைக்குள் உன் உடல் மறைகின்றதோ

கருமேக கூட்டத்திற்குள்  பால் நிலா  மறைகின்றதோ

நாணமென்பது  பெண்ணிற்கு  ஓர்  அணிகலமானதோ

முகத்தை மறைத்தாலும்,கன்னங்கள் சிவந்து வெளிப்படாதோ !

 

நான் விண்ணை பார்க்கும்போது என்னை பார்க்கின்றாய்

நான் உன்னை நோக்கும்போது, குனிந்து காலால் கோலமிடுகின்றாய்

உன் நெஞ்சத்திற்குள்ளே  உன் முன் உலா  வருவேன்

உன்  கன்னம்  சிவக்க காதல் மொழி பேசிடுவேன் !

 

நாணம் என்பது  பருவத்தின்  கண்ணாடியோ !

காதலில் பழகுவதற்கு ஓர் முன்னோடியோ

இலைமறை காய்மறைவாய் காதலை  வெளிப்படுத்துமோ

பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் கதைகள் பேசிடுமே !

 

நாணமும், அச்சமும்  காதலியின்  உடைமையாகுமே

ஒன்று கலந்த நெஞ்சம் உறவை நாடிக்   கெஞ்சுமே

நாணத்தால் முகம் சிவந்து காதல் வெளிப்பட்டதே

அன்பை நினைத்து ஏங்கி, அமுத நிலையை நாடுதே !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *