Tag: ஷைலஜா

  • மகான் ஸ்ரீ அரவிந்தர்

    ஷைலஜா

    Aravindharஅரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது

    1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயர் சூட்டப்ப்பட்டது. சிறுவனாக இருக்கும் போதே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்றுத் தரப்பட்டது. அயர்லாந்த்து கன்னித்துறவியர்களால் நடத்தி வரப்பட்ட, டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை அவர் இங்கிலாந்தில் தொடர்ந்தார். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்யார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தார்.

    1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த், ஷேக்ஸ்பியர் என பலரது இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்விக் கூடத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

    தந்தையின் விருப்பத்திற்காக லண்டனில் படித்தாலும் ஐசிஎஸ் தேவில் வெற்றிபெற்றால் ஆங்கிலேய்ரகளின் சம்பளத்தைவாங்கிக்கொண்டு உயர் அதிகாரியாக இருக்க விரும்பாததற்குக்காரணம் ந்ம் இந்தியாவை அடிமைப்படுத்திய. வெள்ளையர்மீது அவருக்கிருந்த கோபம் அவர்களிடமிருந்த பாரதமாதாவைக்காப்பற்றவே 1893ல் இந்தியா திரும்பினார்.

    இந்துபிரகாஷ் மற்றும் வந்தே மாதரம் என்ற பத்திரிகைகள்மூலம் விடுதலை எழுச்சியை ஏற்படுத்தினார்.

    மணமான சில நாட்களிலேயே அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் பொய்கேசில் அரவிந்தரை உள்ளே தள்ளினர் பிறகு வழக்குப்பொய் என வெள்ளையர்களே விடுதலையும் செய்தனர்.

    சிறைவாசத்தில் அவருக்கு கிருஷ்ணதரிசனம் கிட்டியது. பூரண யோகத்திற்குவித்திடவே இச்சிறைவாசத்தை இறைவன் தமக்கு அமைத்ததை உணர்ந்தார்.

    மகாகவி பாரதியார் தான் புதுவையில் அரவிந்தரை வரவேற்ற முதல் தமிழர்.பகவான் அரவிந்தரின் திருப்பாதம் புதுவையில் தொட்ட நாள்DSC08198

    4 4 1910 ஆகும். அரவிந்தரின் தரிசனம் கிட்டியமாத்திரத்தில் பலகாலம் தாம் தேடிய தெய்வம் இவர்தான் என பிரான்சிலிருந்து வந்த மிர்ரா கூற , .இந்த உலகத்து அனைத்து ஈவராசிகளுக்கும் எனக்கும் தாய் மிர்ரா அல்பொன்சா ..அன்னைதான் அவரை வணங்குங்கள் வாழ்வு மேலோங்கும்” என்றார் அரவிந்தர்.

    இரண்டு மகா அவதாரப்புருஷர்கள் ஒரே இடத்திலேயேயோகம் செய்து ஒரே சமாதியிலேயே இருந்துகொண்டு உலகத்தை ரட்சித்து வருவது என்பது பாண்டிச்சேரியின் அரவிந்த ஆஸ்ரமத்தில்தான்.

    இறைவன் தனக்கென்று ஒருநாட்டைதேர்ந்தெடுத்துள்ளான் அது இந்தியத்திருநாடு என்றார் அரவிந்தர்

    சாவித்ரி என்ற மகா மந்திர நூலைப் படைத்த அரவிந்தர் 1950 டிசம்பர் 5ம்தேதி அதிகாலையில் தனது உயிரைத்தன் விருப்பத்தின்படி உடலிலிருந்து விலக்கிக்கொண்டார்.

    இதன் மூலம் சத்திய ஜீவ சக்தியை ஐந்துநாட்கள் அதாவது 111மணிநேரம் பொன்னொளியைத்தன் உடலில் வெளிப்படுத்தொக்கொண்டு இருந்தார்.

    இன்றும் சூட்சம உலகில் இருந்துகொண்டு அன்னையெனும் மகாசக்தியுடன் தனது அருளையும் அளிக்கும் மகான் அரவிந்தரின் பிறந்த நாளும் தாயகம் சுதந்திரம்பெற்ற திருநாளும் ஒன்றாக அமைந்து.ள்ளதில் வியப்பென்ன!!

    Share
  • உள்ளம் கவர்ந்தானை

    ஷைலஜா

    shylajas snapஎங்கள் வீட்டிற்கு ரங்கன் வந்ததிலிருந்து தாத்தா ரொம்பவும் பிசி ஆக ஆகிவிட்டார். யார் அந்த ரங்கன்?. அப்படி என்ன அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?.

    ரங்கன் சுமார் நாலு மாதக் குரங்கு. தாத்தாவுக்கு ரங்கனை குரங்கு என்று சொன்னால் கோபம் வரும். இனிமேல் நாமும் ரங்கன் என்றே அவனை அழைப்போம். அவன் இந்த வீட்டில் நுழைந்ததே தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு கவனக்குறைவு காரணமாகத்தான். தேங்காய் உரிக்க மண்ணுக்குள் சொருகியிருந்த கடப்பாரையை எடுக்க மறந்ததன் விளைவு தாய் குரங்கு கடப்பாரை நுணிக்கு பலியானது. அப்போது அனாதையாக இருந்த குட்டிக்குரங்கை, ஸாரி.. ரங்கனை உடனே தாத்தா வாரி அணைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். தோட்டத்தில் இருந்த அத்தனை வேலையாட்களையும் கடிந்து கொண்டு ஒரு வாரம் பேசவேயில்லை.

    உள்ளே நுழைந்த உடனே நேராக தாத்தாவின் ரூமுக்குள் அவனுக்காக ஏகப்பட்ட வசதிகள் தயாராகிக்கொண்டிருந்தன. காஷ்மீரிலிருந்து அவரது மகளால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட சால்வை மெத்தையாகவும், சோலாபூர் கம்பளம் போர்வையாகவும் மாறியிருந்தன. பால் அருந்த பீங்கான் கப், சாப்பிட ஒரு ப்ளேட், பழங்கள் என்று ஒரு மினி ஜூவாகவே அந்த அறை மாறியிருந்தது.

    தாத்தாவின் அறை ஏறக்குறைய ஒரு ஐசியு அறையாகவே காணப்பட்டது. யாருக்கும் அனுமதி கிடையாது. முதல் ஒரு வாரம் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு சின்னத் திரை சீரியலே தயாரித்துவிடலாம். தாத்தாவுக்கு வேண்டிய உணவு, காபி, டிபன் கூட ரூமுக்கு வெளியேயிருந்து கொடுக்கப்பட்டது. ரங்கனுக்குத் தேவையான பால், வாழைப்பழம் ஆகியவையும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது.

    மாலை நேரத்தில் தாத்தாவின் பால்ய நண்பர் பாபு வந்து ரங்கனை பரிசோதிக்க வருவார். அவர் தான் அந்த ஊரின் முதல் வெடினெரி டாக்டர்.

    “இது ஒரு ஜெனரல் டிப்ரெஷன். கவலைப்படவேண்டாம். சரியாப் போயிடும். இன்னும் பதினைந்து நாளைக்குள் ரங்கனை காவேரிக்கரை ஓரம் உள்ள தாத்தாச்சாரியார் தோப்பில் விட்டு விடலாம். கவலைப்படாதேடா.. திருமலை” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

    ரங்கனுக்கு பாலோ பழமோ பிடிக்கவில்லை. தாத்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனக்காக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த தட்டை திறந்தவுடன் ஓடி வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டது. அவருக்காக வைத்திருந்த உப்புமாவை தனக்குத் தர வேண்டும் என்று கண்களால் கெஞ்ச, தாத்தா ரங்கனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார். கத்திரிக்காய் கொத்ஸு வையும் அது மிகவும் ரசித்து சாப்பிட தாத்தாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

    உடனே பாபுவுக்கு ஃபோன் போட்டு, “ பாபு.. ரங்கனுக்கு என்னோட உப்புமா தான் பிடிச்சுருக்கு. கொடுத்துவிட்டேன். தப்பில்லையே?” என்று கேட்டார்.

    பாபு “ஓ.கே. கோ.. அஹெட். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றார்.

    ‘எத்தனை பறவைகள், விலங்குகள், அதன் பசியை போக்கிக்கொள்ள பசியாறுகின்றன.. இப்படி ஒவ்வொறு உயிரினத்துக்கும், அதற்கு பிடித்த உணவை இறைவன் ஏற்கனவே படைத்துவிட்டான். ஒரு குரங்குக்காக இப்படி உயிரை விடுகிறானே… எத்தனை இளகிய மனஸு..’ என்று தனக்குள் பாபு சிரித்துக்கொண்டார்.

    அன்று இரவு அவனுக்கு காஷ்மிர் ஷால்வை, முள்ளாய் குத்தியதோ என்னவோ, தாத்தாவின் அருகிலே படுத்துக்கொண்டான். தாத்தாவின் வேட்டி நுணியை பிஞ்சு விரல்களால் பிடித்தவாறு மெல்ல தூங்க ஆரம்பித்தான்.

    சிறிய வயதிலே தன்னுடைய தாயை இழந்த திருமலைக்குத் தான் தெரியும் ‘ஒரு தாயின் பிரிவு என்றால் என்ன என்று. பாபு சொல்கிற மாதிரி பதினைந்து நாட்களுக்குள் எப்படி எப்படி சரியாகும்? இன்னமும் அம்மாவை இழந்த துக்கம் என்னுள் புதைந்து கிடக்கிறது. கொஞ்சம் தட்டி விட்டால் போதும், இப்பவும் இந்த தலையணையும் போர்வையும் நனையும் வரை கண்ணிலிருந்து ஜலம் வரும். மனிதர்களுக்கு மட்டும் தானா இந்த பிரிவு, ஏக்கம் எல்லாம்? மிருகங்களுக்கு கிடையாதா?. பதினைந்து நாட்கள் கழித்து ரங்கனை நிச்சயம் பிரியத்தான் வேண்டுமா?.. வேறு வழியே இல்லையா?’ இப்படி பல கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் வேறு வழி இன்றி அவர் நித்திரையில் லயிக்க ஆரம்பித்தார்.

    மறு நாள் முதல் ரங்கன் ரொம்பவும் உரிமையுடனும், நீண்ட நாள் பழகிய தினுசில் தாத்தாவுடன் விளையாட ஆரம்பிக்க அந்த அறையில் சிரிப்பும், விளையாட்டும் வீட்டில் இருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின

    அதற்கு மேல் அந்த அறையில் ரங்கனை வைத்திருக்க அவசியமே இல்லாமல் போயிற்று. ஹால், சமையல் அறை, மாடி, தோட்டம், என்று இப்படி எங்கெல்லாம் தாத்தா செல்கிறாரோ அங்கெல்லாம் அவன் அவருடன் உலவ ஆரம்பித்தான்.

    தாத்தா வாக்கிங்க் ஸ்டிக் வைத்துக்கொண்டு இருப்பதைப் போல அவனும் ஒரு சிறிய குச்சியுடன் அவர் பின் நடப்பது வேடிக்கையாக இருந்தது.

    “போகிற போக்கைப் பார்த்தால் அவன் பெயரில் உயிலையே எழுதி வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று பாட்டி சொல்ல.

    தாத்தா “ பாவம் தாயில்லா ஜீவன். யாரு இருக்கா அவனுக்கு? மிருகங்கள் மனிதர்களுக்காக தங்களின் வாழ்க்கையே அர்ப்பணம் செய்யவில்லையா? அது நாம் நடமாடும் தெய்வமாக கும்பிடும் மாடாகட்டும் அல்லது நாயாகட்டும், நம் வாழ்க்கையில் எத்தனை பெரிய உதவிகளை பிரதி பலன் பார்க்காமல் செய்கின்ற்ன!. நாம தான் கடவுளுக்கு அர்சசனை செய்தால் அவர் நமக்கு என்ன கொடுப்பார்னு கணக்கு பார்க்கிறோம்.” தாத்தா உணர்ச்சி பொங்க பதில் அளிக்கவும் பாட்டிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

    ஆயிற்று. பாபு சொன்ன பதினைந்தாம் நாள் ‘டாண்’ என்று வாசலில் நின்று கொண்டு, “ திருமலை! சீக்கிரம் வா.. காரில் ஏறு. ரங்கனை வழி அனுப்பிவிட்டு வரலாம்” என்று கூவ, திருமலை “ பாபு! சொன்னா கேளுடா.. கொஞ்ச நாளுக்கு அப்புறம்

    பார்துக்கலாம். இப்போ என்ன அவசரம்?” என்றார்.

    “இதோ.. ஐந்து நிமஷம். அவனுக்குப் பிடித்த அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்ஸு கொடுத்துவிட்டு அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

    அரை மனதுடன் காரில் ரங்கனுடன் ஏறிக்கொள்ள, பாபு காரை வேகமாக மாம்பழ சாலையை கடந்து இடது புறமாக செலுத்தினார். வெட்டிச்சாய்த்துவிட்ட பல மரங்களின் நடுவே அங்கும் இங்குமாய் தெரiிந்த நாலைந்து மரங்களை நோக்கி நெருங்க நெருங்க திருமலைக்கு துக்கம் தொண்டையை அடைத்துகொண்டது.

    பாபு காரைத்திருப்பிக்கொண்டு, “ திருமலை, காரை விட்டு இறங்க வேண்டாம். இங்கேயே அவனை இறக்கி விடு. அவன் போய் விடுவான்” என்றார்.

    மனதைக் கல்லாக்கிக்கொண்டு ரங்கனை காரின் கதவைத் திறந்தவுடன் விட்டு விட்டு வந்த வேகத்தில் வேகமாக காவிரிப் பாலத்தைக் கடந்து மெயின் கார்டு கேட் தேவர் ஹால் எதிரே உள்ள பத்மா காபியில் நுழைந்து காபியை ருசிக்க ஆரம்பித்தனர்.

    திருமலைக்கு காபி வேப்பிலை சாறு போல கசந்தது. அவர் மனம் எல்லாம் ரங்கனின் பின்னே. ‘தப்பு செய்து விட்டோமே. அவனை இனிமேல் பார்க்க முடியுமா? அவனை மற்ற குரங்குகள் ஏற்றுக்கொள்ளுமா?’ ஒரே கவலை திருமலைக்கு.

    திருமலையிடம் பாபு, “திருமலை! பீ ப்ராக்டிகல். நாம விலங்குகளின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. ரெண்டு நாளில் அதுக்கு எல்லாம் சரியாப் போயிடும்.” என்றார்.

    “என்ன செய்வது. உன் மாதிரி நான் கல் நெஞ்சக்காரன் இல்லை”
    திருமலையின் வார்த்தையில் சோகம் தோய்ந்திருப்பதை பாபுவால் உணர முடிந்தது.

    திரும்பி வருகையில் ஜோஸஃப் கல்லூரியைக்கடந்து சத்திரம் பஸ் ஸ்டான்டை தாண்டி காவேரிப் பாலத்தின் மேல் கார் செல்லும் போது திருமலையின் கண்கள் தாத்தாச்சாரியார் தோட்டத்தைத் துளைக்கத் தொடங்கியது.

    பாபுவின் கார் இடது புறம் திரும்பி அம்மா மண்டபம், காந்தி சிலையை கடந்து மேலூர் ரோடில் உள்ள வீட்டின் முன் நிற்கும் போது வீட்டின் வாசல் முன் ரங்கன் அவருக்காக காத்து நின்றான்.

    தாத்தாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    தாத்தாவைக் கண்டதும் ஓடி வந்து அவரது வேட்டி நுனியை கையால் கவ்வி அவர் மேல் பாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்த, பாபு, “ என்னை மன்னிச்சுடுடா. அவன் இவ்வளவு திரும்பி வந்திருக்கிறான் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா போய்விடும்? பீ ஹாப்பி அண்ட் எஞ்சாய் வித் ஹிம். நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார்.

    வழக்கம் போல இரவு 9 மணிக்கு தாத்தாவும் ரங்கனும் அவர்களின் அறையில் படுத்தனர். ரங்கன் தாத்தாவின் அருகில் படுத்துக்கொண்டான். தாத்தா “ என்னை மன்னிச்சுடுடா.. இனிமேல் அந்த தப்பு செய்ய மாட்டேன்” என்றபடியே ரங்கனை வாஞ்சனையாக வருடியபடியே தூங்கிப்போனார்.

    இரவு ஒரு மணி இருக்கும். திடீரென்று ரங்கன் தாத்தாவின் தோள்களைக் குலுக்கி ஆரவாரம் செய்ய, தாத்தா விழித்துக்கொண்டார். அவரை இழுத்துக்கொண்டு பாட்டி அருகில் சென்றான்.

    கீழே நிலை தவறி விழுந்திருந்த அம்புஜம் தலையில் லேசான அடி பட்டு இரத்தம் வந்து கொண்டிருந்தது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. முகத்திலும், கைகளிலும் வியர்த்திருந்தது. அவள் அப்போதுதான் விழுந்திருக்கவேண்டும்.

    ஆம்புலன்ஸை வரவைத்து, அமெரிக்கன் ஆஸ்பத்திரி விரைந்தார்.

    பாட்டிக்கு அவசர சிகிச்சை அளித்த டாக்டர் “ சிவியர் ஹார்ட் அட்டாக். நல்ல வேளை. உடனே வந்தீர்கள். கொஞ்சம் தாமதித்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். இந்த மருந்துகளை உடனே வாங்கி வாங்கோ” டாக்டர் இப்படி சொன்னதும் திருமலையின் பார்வை ரங்கனின் பக்கம் சென்றது.

    ‘இப்படி ஒரு பெரிய விஷயத்தை செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போல உட்கார்ந்திருக்கிறானே!. ரங்கனின் வருகைக்கு பாபு சொன்ன காரணம் இது தானோ?’ என வியந்தார்.

    அப்புறம் என்ன!.. ரங்கனிடம் அந்த வீட்டில் எல்லோரும் அன்பைப் பொழிந்தனர். ரங்கனுக்கு கிடைத்த மரியாதையும் சலுகைகளும் ஏராளம்.

    ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த தாத்தாவுக்கு உடம்புக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு, “ கவலைப்படாதீர்கள். சரியாகிவிடும். வயசானாலே ஏதாவது சின்ன நோய் அப்பப்ப வருவது தான்.” வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு சென்றார்.

    தாத்தா அன்று இரவு அவருக்குப் பிடித்த உப்புமாவை சாப்பிடவில்லை. ரங்கனுக்கும் ஊட்டிவிடவில்லை.

    அன்று இரவு படுத்தவர்தான், மறு நாள் காலை எழுந்திருக்கவில்லை. ரங்கன் தாத்தாவின் பிரிவை பொறுக்கமுடியாமல் அவரைச் சுற்றி சுற்றி வந்தான்.

    தாத்தாவின் உடலைத் தகனம் செய்து காவிரியில் அஸ்தி கரைத்துவிட்டு வந்தாயிற்று.

    ரங்கனுக்கு தாத்தாவின் அறையில் இருந்த அவனுடைய தட்டில் உப்புமா பறிமாறப்பட்டது.

    மறு நாள் காலை எழுந்து பார்க்கும்போது ரங்கன் அறையில் இல்லை. தட்டில் உப்புமா அப்படியே இருந்தது.

    ரங்கனை கடைசியாக காவிரிக்கரை ஓரத்தில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். அவனுடைய குச்சி மட்டும் வீடு வந்து சேர்ந்தது. அதற்கு அப்புறம் அவனை யாரும் பார்க்கவே இல்லை.

    Share
  • சிரித்தது செங்கட் சீயம்!….

    ஷைலஜா

     

    இன்று(24-5-2013)) சுவாதி நட்சத்திரம் ! நரசிம்ம ஜயந்தி!

    அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின்  இராமாயண காவியத்தை  தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று  ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

    திருவரங்க  நகரம்  அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

    இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.

    கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே  என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

    அரங்கன் கோயிலில்  பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில்  அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

    வால்மீகியான  தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே  இதை நான் புனைந்தேன்  என்றான். கம்பன்.

    பிறகு இராமாயணக்காதையை  தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

    பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில்  அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

    ”விபீஷணன்  ராவணனுக்கு  எவ்வளவோ அறிவுரைகள்  கூறினான்  காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

    “விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்…? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலைமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று  கத்தினான் .

    “மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள்  அந்த நாராயணனைப்  பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின்  வரலாற்றையும் கூறினான்.

    இப்படி  கம்பன் கூறும்போது,  சில பண்டிதர்கள் திகைத்தனர்.

    உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார்  ஒருவர்.

    மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார். புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!”  என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

    பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

    நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று நன்றுஎன்ன நக்கு;
    விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
    இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
    திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்
    !

    அவ்வளவுதான்….

    ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே!  பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

    கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

    சிரித்தது செங்கட் சீயம்” என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

    அவையில் சிரிப்பு!;

    கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை  ஆரம்பித்தார்.

    அவைத் தலைவர்  இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார்   உத்தரவிடும் குரலில்.

    கம்பர்  திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின்  ஆணையாக வந்த சொற்களை  கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?

    அவையில் பலத்த சிரிப்பொலி …

    “மாட்டிக்கொண்டான் கம்பன் …அவன் ராமாயணக்காதை  முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி!  “

    முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

    திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

     கம்ப மண்டபத்தின்  மிக அருகில்  கல்படிக்கட்டுகள் கொண்ட  மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள்  நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

    ஆ! நரசிம்மர்  திருக்கரம் உயர்த்தி உரக்கச்சிரிக்கிறாரே!

    ஒருக்கணம்தான் எல்லாம்!

    திகைப்பும் பயமுமாய்  கண்டவர்களுக்குக்  காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

    “கம்பனே!  உன்  கவிதையை  யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல  நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி  ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம்  உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால்  தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.

    அனைவரும் மெய்சிலிர்த்தனர் .  கம்பனைப்போற்றி   வணங்கினர்.

    இன்றும் அரங்கன் கோயிலில் அந்த கம்ப மண்டபம் இருக்கிறது ! அதற்குப் பக்கத்தில் சற்றே எதிரே அந்த மேட்டழகிய சந்நிதியும் இருக்கிறது !தூக்கிய திருக்கரமுடன்    தம்மைக் காணவரும் பக்தர்களுக்கு   இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் அன்று  கம்பனைக்காத்த நம் பெருமான் நரசிம்மன்!

    ‘ஆடிஆடி அகம் கரைந்து இசை

    பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

    நாடிநாடி, நரசிங்கா என்று

    வாடி வாடும் இவ் வாள்நுதலே. ‘

    படத்திற்கு நன்றி ;

    http://rammesh.kaaninilam.com/tlogs/srirangam/kambarMandap.htm

    Share
  • ஆராதனா

    -ஷைலஜா

     சின்னக்கடிதம்தான் ஆனால் அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு கடிதத்தைப்படித்ததும் கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த மகனுக்கு உடனே டெலிபோனில் விஷயத்தை தெரிவித்தாள்

    அடுத்த சில நிமிடங்களில் மூச்சிறைக்க வீடுவந்த திவாகரிடம் கடிதத்தைக்காட்டினாள்.”எட்டுவருஷ உறவை வெட்டிக்கொண்டு போய்விட்டாள் ஆராதனா!.எப்படிடா அவளுக்கு நம்மைப்பிரிய மனசுவந்தது? என்னைவிட அவளுக்கு உன்மேல் எத்தனை பாசம் நேசம் அன்பு எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள் அதையெல்லாம் மறந்து போனமாதிரி தெரியலை திவா எல்லாத்தியும் துறந்துபோன மாதிரி ஒரே வாக்கியத்தில் எழுதிவிட்டாளே, இந்தப்பிரிவை நாம் எப்படியடா தாங்கப்போகிறோம்?”

    அகிலாவின் நா தழுதழுக்கும் வார்த்தைகளில் நிலைகுலைந்துபோனான் திவாகர்.

    மௌனம் மட்டும் சிலக்கணங்கள் பேசிக்கொண்டிருந்ததை டீபாய் மீதிருந்த தொலைபேசி ஒலி எழுப்பிக் கலைத்தது.

    “சீக்கிரம் ரிசீவரை எடு திவா நம்ம ஆராதனாவாகத்தான் இருக்கும்…பஸ் ஸ்டாண்டுபோய் மனசு மாறி இருக்கும் அவளால் நம்மைவிட்டெல்லாம் இருக்கமுடியாதுடா…வந்துடுவா பாரேன்..போனை எடு சீக்கிரம்”

    திவாகரும் ஆர்வத்துடன் ரிசீவரை எடுத்தான்.”ஹலோ’ என்பதற்குபதிலாக,”ஆராதனா?” என்று பரபரப்பாய் கேட்டான்.

    “ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?” என்றுகேட்டுவிட்டு,”என்ன அதிசியம் செல் போன்லதான் எனக்குப்பேசுவாய் இன்னிக்கு என்ன வீட்டுபோனுக்கு செய்கிறாய்?” என்றான் சற்று எரிச்சலுடன்.

    ”வாயும் வயிறுமாய் இருக்கிறவளை வையாதடா திவா” அகிலா மெல்லியகுரலில் அவன் அருகில் வந்து சொன்னாள்.

    “என்ன சாருக்கு மூட் அவுட் போலிருக்கு? ஏன் அங்கே அந்தத் திருநங்கை அருகில் இல்லையோ?” என்று நக்கலாய்க்கேட்கவும் திவாகருக்குக்கோபம் தலைக்கேறிவிட்டது. கல்யாணமாகிவந்த இந்த ஒருவருஷத்தில் ஆராதனாவை பூஜா அவமதிக்காத நாளே இல்லை.

    “உன் புருஷன் உயிரைக்காப்பாத்தின தெய்வம்! அவள் மட்டும் இல்லையென்றால் அன்னிக்கு சாலைவிபத்தில் திவாகர் போய்ச்சேர்ந்திருக்கணும், செல்போனில் பேசிக்கொண்டே ரோடைக்கடந்து கொண்டிருந்தவன் கண்ணில் எதிரில் தலை தெறிக்க வந்துகொண்டிருந்த லாரி, மோதித்தள்ள இருந்ததை எங்கிருந்தோ ஓடி வந்து கையைப்பிடிச்சி இழுத்துக்கோண்டு சாலைஓரம் கொண்டுபோய் காப்பாத்தின மனித தெய்வம்! அன்றிலிருந்து அவள் எங்க குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டாள்.அவளைக்கரிச்சிக்கொட்டாதே பூஜா…உன்னைவிட ஓரிரு வருஷம்தான் அவள் மூத்தவள்!” என்று அகிலா ஒருமுறை பூஜாவிடம் சொன்னபோது,” இன்னொண்ணும் கேள்விப்பட்டேனே ஆராதனா உங்க மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததாக? எல்லாத்தியும் மறைச்சி என்னைக்கல்யாணம் செய்துகிட்டீங்க இல்ல? நல்ல படிப்பு நல்ல வேலை பார்க்கவும் அம்சமா இருக்கார் மாப்பிள்ளைன்னு எங்கப்பா ஏமாந்துபோயிட்டார். “ என்று சீறினாள்.

    “என்னம்மா உன்னை நாங்க ஏமாத்திட்டோம்? ஆராதனா எங்க வீட்டோடு இருக்கற விஷயத்தை சொல்லவில்லைதான் அது மகா குத்தமா என்ன? ஆனா ஆராதனா என் மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததை பக்குவமா சொல்லி அவள் மனதை மாத்தித்தான் எங்களோட தங்க வச்சிருக்கோம்.யாருமில்லாத அனாதைக்கு அடைக்கலம் தந்து ஆதரிப்பதை கேவலமாய் பேசாதே பூஜா ! ஆராதனா படித்தவள் புத்திசாலி சமுக சேவகியும் கூட. அவள் உன் வாழ்க்கையில் குறுக்கே வரமாட்டாள்”

    ஆனாலும் பூஜாவின் அலட்சியமும் ஆராதனா மீது அவள்கொண்ட அருவெறுப்பும்தான் இன்றைக்கு அவளை வீட்டைவிட்டு வெளியேறச்செய்துவிட்டது என்பதை திவாகரும் அகிலாவும் அறியாமல் இல்லை.

    ஆராதனா, ஆறுமுகமாயிருந்து பிறகு மாறிய ஒரு திருநங்கைதான். அதனால் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு பல அல்லல்களிடையே சில நல்ல உள்ளங்களின் உதவியால் படித்துமுன்னேறியவள். திருநங்கைளைப் பற்றி சமுதாயத்தில் சரியானவிழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களைக்கேலியாகவும் அருவெறுக்கும் ஜீவன்களாகவும் நோக்கும் மனிதர்களிடையே அகிலா முற்றிலும் மாறுபட்டவளாய் இருந்தாள். ஏற்கனவே இறந்துபோன கணவன் விட்டுப்போயிருந்த வள்ளல்குணமும் இயற்கையாக அமைந்த இரக்க குணமும் சேர்ந்து ஆராதனாவை நிரந்தரமாய் தன்னோடு வைத்துக்கொள்ள எண்ணம் எழுந்தது. தாய் சொல்லை என்றுமே திவாகர் தட்டியதில்லை .ஆராதனா அகிலாவின் வீட்டில் அடைக்கலமானாள். ஆரம்பத்தில் மனதளவில் பெண்ணாக ஆகிவிட்டதாலும் உடலும் அந்த மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதாலும் திவாகரின் மீது ஆராதனாவிற்குக்காதல் பிறந்துவிட்டது.
    ஏச்சும் எள்ளலும் நிறைந்த சமுதாயத்தில் அன்பையும் பாசத்தையும் அளவுக்கு அதிகமாகவே காட்டும் குடும்பத்தில் மனம் ஒன்றித்தான் போனது.

    அகிலா ஆராதனாவிடம் பக்குவமாய் சொல்லிப்புரியவைத்தாள், திவாகரை மணக்க இயலாதென்பதைப்புரிந்து் கொண்டாள் ஆராதனாவும். அதற்குப்பின் அவள் திவாகரைக் காதல்கண்ணோட்டத்தில் பார்க்கவே இல்லை . திவாகரின் திருமண ஏற்பாட்டில் மனமுவந்து பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். உற்றுப்பார்த்தாலே ஒழிய அல்லது பேச்சுக்கொடுத்தாலே தவிர ஆராதனா திருநங்கை என்கிற விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த வனப்பும் உடல் நிறமும் பெண்மையின் நளினமும் அவளை நங்கையாகவே அடையாலம் காட்டின.

    இந்த சமுதாயம் ஏன் இன்னும் திருநங்கைகளை சரியாகப்புரிந்துகொள்ள மறுக்கிறது? ஆராதிக்க வேண்டியவர்களை ஏன் அலட்சியப்படுத்துகிறது?

    திருநங்கைகள் யானைபலம் மிக்கவர்கள்!

    யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா? அல்லது தனது உணவுக்காக மனிதனிடம் பிச்சை எடுக்குமா?

    அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆராதனா இன்று ஒற்றை வாக்கியத்தில்”உங்களை எல்லாம் விட்டு நீண்டதூரம் விலகிச்செல்கிறேன்” என்று எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டாள்! கோழை! தன் பலம் தெரியாத கோழை!
    அகிலா சேலைத்தலைப்பில் கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.

    திவாகர் பெருமூச்சுவிட்டபடி ரிசீவரை கீழே வைத்தான்.

    “அம்மா! இவளால்தான் ஆராதனா இப்படி நம்மைவிட்டு விலகிப்போவதாய் கடிதம் எழுதிவச்சிட்டுப் போயிட்டா..பாவம்மா எங்கபோயி எப்படி திண்டாடுகிறாளோ? இன்னமும் நம் சமூகத்தில் திருநங்கைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு ஆதரிக்க பலருக்கு மனம் இல்லை அம்மா ..கேலியும் கிண்டலும் தான் அவர்கள் பார்வையில்..திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாய் செயல்படுத்த நாம் திட்டமிட்டிருந்தோம்.. அதற்கு ஆராதனாவை முன் மாதிரியாய் நிறுத்த நினைத்திருந்தோம் எல்லாவற்றையும் பூஜா சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டாள்.

    “ஆமாம்ப்பா திவா…உனக்குக்குழந்தைபிறந்ததும் முதல்ல ஆராதனாவைத்தான் ஆசிர்வாதம் செய்ய சொல்லணும்னு நினைத்தேன் அதைப்போல உன்னதம் ஏதுமில்லை…உனக்குக்கொடுத்துவைக்கலை திவா…ஆனாலும் நாம விடாம அவளைத்தேடிக் கண்டுபிடிக்கணும் …இந்தவீட்டில் நீ பூஜாவோட வாழ்ந்துகொள்ளப்பா ஆனா வேற வீட்டில் அவளோட நான் வாழத்தான் போறேன்”

    “என்னம்மா நீங்க? சின்ன வயசுலேயே அப்பா நிரந்தரமா போயிட்டார். இப்ப நீங்களும் என்னைவிட்டுப்பிரியப்போறேன்னு கனவிலும் சொல்லாதீங்கம்மா…வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும் நினைவில் நிற்கும் சில நல்ல விஷயங்களாலும்தான்,,”

    பூஜாவின் சீமந்தம் முடிந்து பிறந்தவீடுபோகும்போது வழக்கத்தைவிட பூரிப்பான முகமுடன் சென்றாள்.ஆராதனாவைத் துரத்திவிட்ட மகிழ்ச்சிதான் அது என்பதை அகிலாவும் திவாகரும் புரிந்துகொண்டு உள்ளுக்குள் வெந்துபோனார்கள்.

    இடைக்காலத்தில் இருவரும் ஆராதனாவைத்தேட எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.

    திவாகரை அச்சில்வார்த்தாற்போலிருந்த மகன் கௌதமுடன் பூஜா மீண்டும் வீடுவந்தவள் கைக்குழந்தையை அகிலாவிடம் விட்டு வேலைக்குப்போக ஆரம்பித்தாள்…அகிலாவால் தனி ஒருத்தியாய் குழந்தையைப்பார்த்துக்கொள்ள சிரமமாக இருக்கவே “பூஜா! நீ வேலைக்குபோயாகவேண்டிய கட்டாயம் இல்லை .குழந்தைபிறக்கிறவரை பொழுதுபோக்குக்கா போனது சரி இப்போ குழந்தையை பார்த்துக்கொள்ளணும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை பிரிஞ்சி எட்டுமணி நேரம் வேலைக்குப்போயே ஆகணுமா?”
    எ்ன்று கேட்டதும்தான் தாமதம் குழந்தையைத்தூக்கிக்கொண்டுபோய் அடுத்த தெருவில் இருக்கும் தூரத்து உறவினர் வீட்டில் விட்டுவிட்டாள்.

    “ எனக்கு அவங்க அக்கா மாதிரி பாவம் அவங்களுக்கு மூணும் பொண்ணு ..என் பையனை ராஜா மாதிரி பாத்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க…“

    கௌதமை ஐந்துவயது வரை அங்கேயே விட்டுவிட்டு அலுவலகம் போக ஆரம்பித்தாள் பூஜா.. எப்போதாவதுதான் வீட்டிற்கே அழைத்துக்கொண்டுவருவாள்.திவாகருக்கே தன் மகன் முகம் மறந்துவிடும் போலாகிவிட்டது.

    ஒருநாள் கூச்சலிட்டான்,” இனிமேலும் கௌதமைக்கொண்டு அங்கே விட்டாயானால் நான் பொல்லாதவனாகிவிடுவேன்…சாது மிரண்டால் என்னாகும் தெரியுமா?”

    திவாகரின் குரலில் சற்று வெலவெலத்துத்தான் போனாள் பூஜா.

    ஆயிற்று, கௌதம் வீடு வந்து நிரந்தரமாக தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது.

    “ஏன்மா இனிமே பிரியா வர்ஷா அதிதி கூட நான் விளையாட முடியாதாம்மா?” கௌதம் கேட்டபோது,”ஆமாண்டா அங்கேருந்து உன் துணிமணி பொம்மை எல்லாம் கொண்டு வந்திடு..உங்கப்பா
    கூச்சல்போடறாரே?” என்று முணுமுணுத்தாள் பூஜா
    –ஆயிற்று, கௌதம் வீடு வந்து நிரந்தரமாக தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது. ஐந்து வருட மாக அந்த மூன்று பெண் குழந்தைகளிடம் அதிகம் பழகியதாலோ என்னவோ கௌதம் பூஜாவைப்போல அதிர்ந்து பேசாமல் மிகவும் மென்மையாக நடந்துகொண்டான் பழகும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது

    அன்று அவனுக்குப்பள்ளி விடுமுறை. பூஜா அலுவலகம் போய்விட்டாள்.திவாகர் தலைவலி என வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.

    அகிலா பேரனுக்குப்பிடித்த சேமியா பாயசம் செய்துவிட்டு கௌதமை அழைக்க அவன் அறைக்குப்போனாள்.
    கதவு சற்று ஒருக்களித்து மூடப்பட்டிருந்தது. தூங்குகிறானோ என்ற தயக்கமுடன் மெல்ல கதவைத்தள்ளியபடி உள்ளே சென்றாள் அகிலா.

    அங்கே அவள் கண்ட காட்சி தூக்கிவாரிப்போட சட்டென திரும்பி ஹாலிற்குவந்தாள்.அங்கே சோபாவில் சாய்ந்திருந்த மகனைத்தட்டி எழுப்பி தன்னோடு வரும்படி சைகை காட்டினாள். திவாகரும் குழப்பமாய் தொடர்ந்தான்.

    இருவரும் ஓசைப்படாமல் கௌதமின் அறைக்குள் போனபோது கண்ணாடிமுன் நின்று தன்கண்ணுக்கு மை வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். பெண்குழந்தைகளின் கவுனை அணிந்திருந்தான். தலையில் பூவினை செருகி இருந்தான். லேசான வெட்கம் முகத்தில் தவழ தன்னைக்கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தான்.

    அகிலாவும் திவாகரும் அதிர்ச்சியும் குழப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

    Share
  • முன்னேறு பெண்ணே!

     

    ஷைலஜா

    அழுதுபுலம்பித்தேய்வதனால்
    ஆகும் பயனிங்கேதுமில்லை
    ஆற்றல் கொண்டே எழுந்திடுவாய்
    அவனியும் உந்தன் வசமாகும்

    தவித்துத் தனியே நிற்பதனால்
    தடைகள் குறையப்போவதில்லை
    புவியை அசைக்கப் போராடிடுவாய்
    புதுமை செய்யப் புறப்படுவாய்!

    அரண்டு அதிர்ந்து நிற்பதனால்
    ஆளுமை செய்ய வழியுமில்லை
    புரட்சி செய்யப் புறப்படுவாய்
    புவனம் உனக்கு வசமாகும்

    வெட்டிப்பேச்சு பேசுவதனால்
    விளையும் பயன்பெற இயல்வதில்லை
    வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய்
    விரைந்து முன்னேறு பெண்ணே!

    ***************************************************

    Share
  • நெற்றித்திலகமிடுவோம்!

     

    ஷைலஜா

    சகுந்தலை தொலைத்த
    கணையாழியைப்போல
    காணாமல் போயிருந்த
    பெண்ணினத்தின் துணிச்சல்
    உச்சியின் கிரீடமாக
    இன்று மீண்டிருக்கிறது.
    மசிக் கசிவினையெல்லாம்
    மனக் கசிவாக்க வேண்டாம்
    உபாதைகளை எல்லாம்
    நம் பாதைகளாய்ப்
    புலம்ப வேண்டாம்
    மறைமுகமின்றி
    உள்முகம் காட்டுவோம்
    அடுப்பு வெளிச்சத்தில்
    எழுதிய எழுத்துக்களை
    ஆற்றலுடன் வெளியே படைப்போம்
    நேற்றைய தழும்புகளுக்கு
    சோர்ந்துபோகாமல்
    இன்றைய வியர்வையினை
    நெற்றிக்குத்
    திலகமிடுவோம்!

     

     

    Share
  • பார்வை என்ன மணல் வெளியோ?

    ஷைலஜா

     

    காதலா என்றிது தெரியவில்லை மனம்
    ஆதலால் என் வசமில்லை-உடல்
    விறகாய் எரிவதைப்பார்த்தாயா-நறு
    மணத்தை அதனில் சேர்ப்பாயா?
    பாடாப்பாடல் அறிந்துகொண்டேன்  – அது
    உன் பேர்தான் எனவும் உண்ர்ந்துகொண்டேன்
    இரவுப்பூவை மலர வைத்தாய்-பின்
    உறக்கத்தில் சுகத்தை வரவழைத்தாய்-உன்
    பார்வை என்ன மணல் வெளியோ-நினைவுப்
    புதைந்து அழுந்தி மீள்கிறதே
    உன் வழிப்பாதையில் என் இதயம் -அது
    மீட்டும் ராகம் இன்று உதயம்!
    நெஞ்சிற்குள் ஏன் இந்நெருப்பு-அட
    நீதானடா இதற்குப்பொறுப்பு!

    Share
  • காற்றின் ஒலி இசையா?…….

    ஷைலஜா

    இசைக்கு மனது கட்டுப்படுகிறது. இசைக்கு மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கூட மயங்குகின்றன.

    மனிதன் ஏற்படுத்தும் ஒலிகளைப்போலவே சில நேரங்களில் இயற்கையும் ஓசையை அதாவது ஒலியை உண்டாக்கும்.

    காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

    பொரியரை விளவின் புண்புற விளைபுழல்
    அழலெறி கோடை தூக்கலின் கோவலர்குழலென…(பாடல்219)

    கோடைவெய்யிலில் மூங்கில்கள் உலர்ந்துவிட்டன. மேல்கற்றுவீசும்போது நெல் உதிர்ந்து பொறிகிறது. அப்போது நகம் நெறிவதுப்பொல ஓசைவருகிறது இதையும் அகப்பாடல் ஒன்றுதெரிவிக்கிறது.

    குன்றின்மீது சுனை நீர்வற்றிவிட்டது காற்று சுனைக்கு உள்ளே மோதிச்செல்கிறது அப்பொழுது பறைமுழங்குவதைபோல ஓசைகேட்கிறது.

    இவை நம்நாட்டு ஒலிகள்.

    இதைப்போன்ற வினோத சில மேல்நாட்டு ஒலிகளைக்கேட்கலாமா?

    பாலைவனங்களில்பயணம் செய்தவர்கள் இனிமையான இசையொலிகளைக்கேட்டதாகக் கூறுவார்கள்.

    மணி ஒலிப்பதைப்போலவும் வேறு சில ஒலிகள் கேட்பதாயும் சொல்வார்கள். எந்தக்கருவியிலிருந்து எந்ததிசையிலிருந்து என சொல்லமுடியவில்லை என்பார்கள்விலங்குகளோ பறவைகளோ அலலது வண்டுகளோ இந்த ஒலியை உண்டாக்குவதில்லை. பாலைவனத்தில் ஆள்நடமாட்டமே இலலாத இடத்தினிலிருந்து இத்தகைய ஒலிகள் வருவது பற்றி டாக்டர் எமிலி சோரேல் என்னும் பௌதீகப் பேராசிரியருக்கு வியப்பாகி, இதனைக்குறித்து சில பரிசோதனைகள் செய்ய முன்வந்தார்.

    டாக்டர் எமிலி தனது துப்பாக்கியை பாலைவன காற்று வேகமாக வந்து மோதும் திசைக்கு எதிராக 45டிகிரி கோணத்தில் நிற்கவைத்தார். என்ன ஆச்சர்யம்? உலோகக்கம்பி அதிர்வதுபோல ஓசை கேட்டது. பிறகு துப்பாக்கியை அப்படியும் இப்படியும் மாற்றிவைத்து பாலைவனத்தில் வழக்கமாய் கேட்கும் கம்பிச்சுருள் அதிர்வதைப்போன்ற ஒலி வரும்படிச் செய்தார் . பிறகு இந்த அமைப்பை மற்றவர் பார்வையில் படாமல் மறைத்துவிட்டு ஒரு விவசாயியை அழைத்து வந்து அந்த ஒலியைக் கேட்கச்செய்தார்.

    பாலைவன இசையைக்கூர்ந்து கேட்ட விவசாயி மணியோசைமிகவும் இனிமையாக இருக்கிறது என்றார்.

    டாக்டர் எமிலி இந்தப்பரிசோத்னையின்படி கூறும் கருத்து…

    ‘அந்த விவசாய நண்பர் என் துப்பாக்கியின்மீது பட்டு ஆற்றலுடன் வெளிப்பட்ட ஒலியை மணியோசை போல இருப்பதாகக் கூறினார். அந்த ஒலி எந்தத் துப்பாக்கியிலிருந்து தோன்றுவது என்பதை நான் அவருக்குக்காண்பித்தேன் அவர் ஆச்சரியம் அடைந்தார்
    அந்த இனியஒலி அருகிலிருந்து கேட்காமல் எங்கொ தொலைவிலிருந்து வருவது போல அவர் கூறியது முற்றிலும் உண்மை .ஏனென்றால் அந்த ஒலிஅப்படித்தான் கேட்டது.

    இந்த சோதனையில் நான் அறிந்த உண்மை இதுதான் பாலைவனத்தில் சுழன்று அடிக்கும் காற்று உயரத்தில் இருக்கும்போது ஏதோ ஒருபொருளின் வழியாக ஊடுருவிச்செல்லும்போது அந்தப்பொருளை அதிரச்செய்கிறது. அப்போதுதான் இந்த விசித்திரமான ஒலிகேட்கிறது.

    காற்றால் அதிரும் அந்தப்பொருள் குன்றின் உச்சியாகவோ பள்ளத்தாக்கை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் பாறையின் கூர்மையானமுனையாகவோ அல்லது தனது நிலையிலிருந்து சற்றே நெகிழ்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றாகவோ இருக்கலாம் .அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை ‘என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.

    மலைச்சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்களில் வண்டுகள் துளை ஏற்படுத்தி இருப்பது இயற்கை அந்ததுளைகளில் காற்று புகுந்து செல்லும்போது இனிய இசை ஏற்படும் என்று இலக்கியங்க்ள் கூறுகின்றன.

    கில்பர்ட் என்பவர் நேச்சர் இதழுக்கு ஒருகடிதம் எழுதி உள்ளார்.

    அந்தக்கடிதத்தில் தனது பண்ணைக்கும் சிறிது தொலைவில் உள்ள வீட்டுமுன்வாயிலுக்கும் உள்ள இடைபட்ட தொலைவில் பூச்சிகள் இறகடித்துப்பறப்பதால் உண்டாகும் ரீங்கார ஓசை கோடைக்கால மதியம் மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து கேட்பதாகக்
    கூறுகிறார்

    சாகத்தை ஏற்படுத்தும் ஆயிரக்கணக்கான தேனிகள் பறப்பது போல ஓசை உண்டானபோதிலும் ஒரு பூச்சிகூட கண்ணுக்குத் தெரியாததுவியப்பு!’ என்கிறார் அவர்

    சில ஓசைகள் எங்கிருந்துவருகின்றன என இதுநாள் வரையிலும் அறிய இயலவில்லை.
    உலகத்தில் தோன்றும் எல்லா ஒலிகளுக்கும் ஏதேனும் ஒருஅடிப்படைக் காரணம் இருக்கும் .

    காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்!

    Share
  • வீணையடி நீ எனக்கு!

     

     

    ஷைலஜா

    கர்னாடக சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.

    வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்
     
     
     அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
     
    இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)

    இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை… பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை
     
    செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.

    மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவ
     அமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,
     வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
     மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

    கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .
     
    வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு   இந்த வாத்தியங்களை  ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை  திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை  சிறுமியாய்  இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர்  அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார்  உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல  அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே  செய்து்  தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.
     
    ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின்  சிறிய  நூல்நிலையத்தில் இருந்தன  உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும்   அந்த   நூல்களைப்  பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன  ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு  ஃபினிஷிங் டச்  கொடுத்தார்.  வேறொருவர் சுருதிக்    கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள்  பலவாறாகக்  காணப்பட்டன.
     
    ‘சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம்  அதேபோல  ஆற  அமர   சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து  நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவது
     வீணையாகும்” என்றார் அங்கிருந்த  ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள்  திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி  என்றும் சுருதி ஆனந்தம் என்றும்  பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!
     
     உற்பத்தியாளராக  வியாபாரியாக மட்டும்   இல்லாமல் தன்னை  ஒரு கலைஞராயும் அமைத்து  தாம் உற்பத்திசெய்யும்  தம்புரா வீணைகளை  சுருதி மீட்டி சரி பார்த்தார்  அன்று நான் சென்றபொது இருந்த அந்த  உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி  அப்போது  திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,”  வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A  Veena  is  sold  here, but is not  forgotton)

     இசைக்கருவிகளில்  வீணை  சிறந்தது ஏன் என்றால்  அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து  அவற்றை இணைத்து     தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும்   இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால்  ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும் அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே  இருக்கும் , பெண் மனம்  போல!

    படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/Saraswati_veena

     

     

    Share
  • பரமஹம்சர் கண்ட பராசக்தி

     
     
    ஷைலஜா
     

    காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

    “சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
     கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக  எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
     கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!”

    இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

    இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
    ஆடிக்களிப்பவன் யாரோ  அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

    விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
    கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.

     “பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
    எந்த படித்துறையிலும்  இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம்  என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
    பலவழிகளைக்  காட்டுகின்றன “என்கிறார் பரமஹம்சர்.

    சக்திசமயத்திலும்  பலபடித்துறைகள் உண்டு.

    தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.

    பாரதியாரின் ஊழிக்கூத்து  பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
     ஆகாயம்  கறுத்து  வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில்  பராசக்தி  இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது  நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

    மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று   பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

    மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய  பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும்  என மேலும் சொல்கிறார்.

    தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

    பேயைக்கொலையை
    பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

    என்கிறார் பாரதியார்.

    அன்னை !அன்னை! ஆடுங்கூத்தை
     நாடச்செய்தாய் என்னை…

    சக்திப்பேய்தான் தலையொடுதலைகள்முட்டிச்- சட்டச்
    சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
    நின் விழியனல்போய் எட்டித்-தானே
    எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

    ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

    பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

    காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
    அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

    தனது மார்க்கம்  இறையைத்  தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

    அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ  பாவித்துவணங்கலாம்  என்னும்
     பரமஹம்சர்”  நான் என்னைக்  குழந்தையாகபாவித்துக்கொண்டேன் “என்கிறார்.

    மனம் உள்முகமாகத்  திரும்பினால் அதுவாசற்கதவை   சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
    போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது   பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

    நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் என்று பலமதங்கள்கூறுவதை  ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

    பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

    அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
     நிலையில் உயரலாம்.

    யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
    தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?

    படத்துக்கு நன்றி

    http://www.facebook.com/pages/Jai-Kali-Maa/120065043581


    Share
  • காந்தியின் மடல்

    ஷைலஜா

    மகாத்மாகாந்திக்கு ஒருசகோதரி இருந்தார். அவர் பெயர் கோகிபஹன். அவர் ஒரு விதவை. அவருடைய வாழ்க்கைச் செலவுக்காக மாதம் பத்துரூபாய் அனுப்பி வைக்கும்படி நண்பர் பிராண ஜீவன் மேத்தாவைக் கேட்டுக் கொண்டர் மகாத்மா. அவரும் அனுப்பினார்.

    சில மாதங்களில் கோகிபஹனின் மகளும் விதவையாகி தாயிடம்வந்து சேர்ந்தார். இருவருக்கும் பத்துரூபாய் போதவில்லை. “அணடை அயலில் மாவரைத்துக்கொடுத்துச் செலவை சரிக்கட்ட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் கூடுதலாகப் பணம் அனுப்பினால் நல்லது” என்று கோகிபஹன் அண்ணலுக்குக் கடிதம் வரைந்தார்.

    “மாவு அரைப்பது நல்லதுதான்.அதனால் உடல்நலம் பெருகும், நாங்களும் ஆசிரமத்தில் மாவரைக்கிறோம். நீங்கள் விரும்பினால் இங்குவந்து தொண்டு செய்யலாம். பணம் அனுப்பும் நிலையில் நான் இல்லை. நண்பர்களிடம் அனுப்பச் சொல்ல இயலாது” என்று பதில் வந்தது  காந்தியிடமிருந்து.

    Share