-ஷைலஜா

 சின்னக்கடிதம்தான் ஆனால் அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு கடிதத்தைப்படித்ததும் கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த மகனுக்கு உடனே டெலிபோனில் விஷயத்தை தெரிவித்தாள்

அடுத்த சில நிமிடங்களில் மூச்சிறைக்க வீடுவந்த திவாகரிடம் கடிதத்தைக்காட்டினாள்.”எட்டுவருஷ உறவை வெட்டிக்கொண்டு போய்விட்டாள் ஆராதனா!.எப்படிடா அவளுக்கு நம்மைப்பிரிய மனசுவந்தது? என்னைவிட அவளுக்கு உன்மேல் எத்தனை பாசம் நேசம் அன்பு எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள் அதையெல்லாம் மறந்து போனமாதிரி தெரியலை திவா எல்லாத்தியும் துறந்துபோன மாதிரி ஒரே வாக்கியத்தில் எழுதிவிட்டாளே, இந்தப்பிரிவை நாம் எப்படியடா தாங்கப்போகிறோம்?”

அகிலாவின் நா தழுதழுக்கும் வார்த்தைகளில் நிலைகுலைந்துபோனான் திவாகர்.

மௌனம் மட்டும் சிலக்கணங்கள் பேசிக்கொண்டிருந்ததை டீபாய் மீதிருந்த தொலைபேசி ஒலி எழுப்பிக் கலைத்தது.

“சீக்கிரம் ரிசீவரை எடு திவா நம்ம ஆராதனாவாகத்தான் இருக்கும்…பஸ் ஸ்டாண்டுபோய் மனசு மாறி இருக்கும் அவளால் நம்மைவிட்டெல்லாம் இருக்கமுடியாதுடா…வந்துடுவா பாரேன்..போனை எடு சீக்கிரம்”

திவாகரும் ஆர்வத்துடன் ரிசீவரை எடுத்தான்.”ஹலோ’ என்பதற்குபதிலாக,”ஆராதனா?” என்று பரபரப்பாய் கேட்டான்.

“ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?” என்றுகேட்டுவிட்டு,”என்ன அதிசியம் செல் போன்லதான் எனக்குப்பேசுவாய் இன்னிக்கு என்ன வீட்டுபோனுக்கு செய்கிறாய்?” என்றான் சற்று எரிச்சலுடன்.

”வாயும் வயிறுமாய் இருக்கிறவளை வையாதடா திவா” அகிலா மெல்லியகுரலில் அவன் அருகில் வந்து சொன்னாள்.

“என்ன சாருக்கு மூட் அவுட் போலிருக்கு? ஏன் அங்கே அந்தத் திருநங்கை அருகில் இல்லையோ?” என்று நக்கலாய்க்கேட்கவும் திவாகருக்குக்கோபம் தலைக்கேறிவிட்டது. கல்யாணமாகிவந்த இந்த ஒருவருஷத்தில் ஆராதனாவை பூஜா அவமதிக்காத நாளே இல்லை.

“உன் புருஷன் உயிரைக்காப்பாத்தின தெய்வம்! அவள் மட்டும் இல்லையென்றால் அன்னிக்கு சாலைவிபத்தில் திவாகர் போய்ச்சேர்ந்திருக்கணும், செல்போனில் பேசிக்கொண்டே ரோடைக்கடந்து கொண்டிருந்தவன் கண்ணில் எதிரில் தலை தெறிக்க வந்துகொண்டிருந்த லாரி, மோதித்தள்ள இருந்ததை எங்கிருந்தோ ஓடி வந்து கையைப்பிடிச்சி இழுத்துக்கோண்டு சாலைஓரம் கொண்டுபோய் காப்பாத்தின மனித தெய்வம்! அன்றிலிருந்து அவள் எங்க குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டாள்.அவளைக்கரிச்சிக்கொட்டாதே பூஜா…உன்னைவிட ஓரிரு வருஷம்தான் அவள் மூத்தவள்!” என்று அகிலா ஒருமுறை பூஜாவிடம் சொன்னபோது,” இன்னொண்ணும் கேள்விப்பட்டேனே ஆராதனா உங்க மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததாக? எல்லாத்தியும் மறைச்சி என்னைக்கல்யாணம் செய்துகிட்டீங்க இல்ல? நல்ல படிப்பு நல்ல வேலை பார்க்கவும் அம்சமா இருக்கார் மாப்பிள்ளைன்னு எங்கப்பா ஏமாந்துபோயிட்டார். “ என்று சீறினாள்.

“என்னம்மா உன்னை நாங்க ஏமாத்திட்டோம்? ஆராதனா எங்க வீட்டோடு இருக்கற விஷயத்தை சொல்லவில்லைதான் அது மகா குத்தமா என்ன? ஆனா ஆராதனா என் மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததை பக்குவமா சொல்லி அவள் மனதை மாத்தித்தான் எங்களோட தங்க வச்சிருக்கோம்.யாருமில்லாத அனாதைக்கு அடைக்கலம் தந்து ஆதரிப்பதை கேவலமாய் பேசாதே பூஜா ! ஆராதனா படித்தவள் புத்திசாலி சமுக சேவகியும் கூட. அவள் உன் வாழ்க்கையில் குறுக்கே வரமாட்டாள்”

ஆனாலும் பூஜாவின் அலட்சியமும் ஆராதனா மீது அவள்கொண்ட அருவெறுப்பும்தான் இன்றைக்கு அவளை வீட்டைவிட்டு வெளியேறச்செய்துவிட்டது என்பதை திவாகரும் அகிலாவும் அறியாமல் இல்லை.

ஆராதனா, ஆறுமுகமாயிருந்து பிறகு மாறிய ஒரு திருநங்கைதான். அதனால் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு பல அல்லல்களிடையே சில நல்ல உள்ளங்களின் உதவியால் படித்துமுன்னேறியவள். திருநங்கைளைப் பற்றி சமுதாயத்தில் சரியானவிழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களைக்கேலியாகவும் அருவெறுக்கும் ஜீவன்களாகவும் நோக்கும் மனிதர்களிடையே அகிலா முற்றிலும் மாறுபட்டவளாய் இருந்தாள். ஏற்கனவே இறந்துபோன கணவன் விட்டுப்போயிருந்த வள்ளல்குணமும் இயற்கையாக அமைந்த இரக்க குணமும் சேர்ந்து ஆராதனாவை நிரந்தரமாய் தன்னோடு வைத்துக்கொள்ள எண்ணம் எழுந்தது. தாய் சொல்லை என்றுமே திவாகர் தட்டியதில்லை .ஆராதனா அகிலாவின் வீட்டில் அடைக்கலமானாள். ஆரம்பத்தில் மனதளவில் பெண்ணாக ஆகிவிட்டதாலும் உடலும் அந்த மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதாலும் திவாகரின் மீது ஆராதனாவிற்குக்காதல் பிறந்துவிட்டது.
ஏச்சும் எள்ளலும் நிறைந்த சமுதாயத்தில் அன்பையும் பாசத்தையும் அளவுக்கு அதிகமாகவே காட்டும் குடும்பத்தில் மனம் ஒன்றித்தான் போனது.

அகிலா ஆராதனாவிடம் பக்குவமாய் சொல்லிப்புரியவைத்தாள், திவாகரை மணக்க இயலாதென்பதைப்புரிந்து் கொண்டாள் ஆராதனாவும். அதற்குப்பின் அவள் திவாகரைக் காதல்கண்ணோட்டத்தில் பார்க்கவே இல்லை . திவாகரின் திருமண ஏற்பாட்டில் மனமுவந்து பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். உற்றுப்பார்த்தாலே ஒழிய அல்லது பேச்சுக்கொடுத்தாலே தவிர ஆராதனா திருநங்கை என்கிற விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த வனப்பும் உடல் நிறமும் பெண்மையின் நளினமும் அவளை நங்கையாகவே அடையாலம் காட்டின.

இந்த சமுதாயம் ஏன் இன்னும் திருநங்கைகளை சரியாகப்புரிந்துகொள்ள மறுக்கிறது? ஆராதிக்க வேண்டியவர்களை ஏன் அலட்சியப்படுத்துகிறது?

திருநங்கைகள் யானைபலம் மிக்கவர்கள்!

யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா? அல்லது தனது உணவுக்காக மனிதனிடம் பிச்சை எடுக்குமா?

அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆராதனா இன்று ஒற்றை வாக்கியத்தில்”உங்களை எல்லாம் விட்டு நீண்டதூரம் விலகிச்செல்கிறேன்” என்று எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டாள்! கோழை! தன் பலம் தெரியாத கோழை!
அகிலா சேலைத்தலைப்பில் கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.

திவாகர் பெருமூச்சுவிட்டபடி ரிசீவரை கீழே வைத்தான்.

“அம்மா! இவளால்தான் ஆராதனா இப்படி நம்மைவிட்டு விலகிப்போவதாய் கடிதம் எழுதிவச்சிட்டுப் போயிட்டா..பாவம்மா எங்கபோயி எப்படி திண்டாடுகிறாளோ? இன்னமும் நம் சமூகத்தில் திருநங்கைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு ஆதரிக்க பலருக்கு மனம் இல்லை அம்மா ..கேலியும் கிண்டலும் தான் அவர்கள் பார்வையில்..திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாய் செயல்படுத்த நாம் திட்டமிட்டிருந்தோம்.. அதற்கு ஆராதனாவை முன் மாதிரியாய் நிறுத்த நினைத்திருந்தோம் எல்லாவற்றையும் பூஜா சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டாள்.

“ஆமாம்ப்பா திவா…உனக்குக்குழந்தைபிறந்ததும் முதல்ல ஆராதனாவைத்தான் ஆசிர்வாதம் செய்ய சொல்லணும்னு நினைத்தேன் அதைப்போல உன்னதம் ஏதுமில்லை…உனக்குக்கொடுத்துவைக்கலை திவா…ஆனாலும் நாம விடாம அவளைத்தேடிக் கண்டுபிடிக்கணும் …இந்தவீட்டில் நீ பூஜாவோட வாழ்ந்துகொள்ளப்பா ஆனா வேற வீட்டில் அவளோட நான் வாழத்தான் போறேன்”

“என்னம்மா நீங்க? சின்ன வயசுலேயே அப்பா நிரந்தரமா போயிட்டார். இப்ப நீங்களும் என்னைவிட்டுப்பிரியப்போறேன்னு கனவிலும் சொல்லாதீங்கம்மா…வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும் நினைவில் நிற்கும் சில நல்ல விஷயங்களாலும்தான்,,”

பூஜாவின் சீமந்தம் முடிந்து பிறந்தவீடுபோகும்போது வழக்கத்தைவிட பூரிப்பான முகமுடன் சென்றாள்.ஆராதனாவைத் துரத்திவிட்ட மகிழ்ச்சிதான் அது என்பதை அகிலாவும் திவாகரும் புரிந்துகொண்டு உள்ளுக்குள் வெந்துபோனார்கள்.

இடைக்காலத்தில் இருவரும் ஆராதனாவைத்தேட எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.

திவாகரை அச்சில்வார்த்தாற்போலிருந்த மகன் கௌதமுடன் பூஜா மீண்டும் வீடுவந்தவள் கைக்குழந்தையை அகிலாவிடம் விட்டு வேலைக்குப்போக ஆரம்பித்தாள்…அகிலாவால் தனி ஒருத்தியாய் குழந்தையைப்பார்த்துக்கொள்ள சிரமமாக இருக்கவே “பூஜா! நீ வேலைக்குபோயாகவேண்டிய கட்டாயம் இல்லை .குழந்தைபிறக்கிறவரை பொழுதுபோக்குக்கா போனது சரி இப்போ குழந்தையை பார்த்துக்கொள்ளணும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை பிரிஞ்சி எட்டுமணி நேரம் வேலைக்குப்போயே ஆகணுமா?”
எ்ன்று கேட்டதும்தான் தாமதம் குழந்தையைத்தூக்கிக்கொண்டுபோய் அடுத்த தெருவில் இருக்கும் தூரத்து உறவினர் வீட்டில் விட்டுவிட்டாள்.

“ எனக்கு அவங்க அக்கா மாதிரி பாவம் அவங்களுக்கு மூணும் பொண்ணு ..என் பையனை ராஜா மாதிரி பாத்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க…“

கௌதமை ஐந்துவயது வரை அங்கேயே விட்டுவிட்டு அலுவலகம் போக ஆரம்பித்தாள் பூஜா.. எப்போதாவதுதான் வீட்டிற்கே அழைத்துக்கொண்டுவருவாள்.திவாகருக்கே தன் மகன் முகம் மறந்துவிடும் போலாகிவிட்டது.

ஒருநாள் கூச்சலிட்டான்,” இனிமேலும் கௌதமைக்கொண்டு அங்கே விட்டாயானால் நான் பொல்லாதவனாகிவிடுவேன்…சாது மிரண்டால் என்னாகும் தெரியுமா?”

திவாகரின் குரலில் சற்று வெலவெலத்துத்தான் போனாள் பூஜா.

ஆயிற்று, கௌதம் வீடு வந்து நிரந்தரமாக தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது.

“ஏன்மா இனிமே பிரியா வர்ஷா அதிதி கூட நான் விளையாட முடியாதாம்மா?” கௌதம் கேட்டபோது,”ஆமாண்டா அங்கேருந்து உன் துணிமணி பொம்மை எல்லாம் கொண்டு வந்திடு..உங்கப்பா
கூச்சல்போடறாரே?” என்று முணுமுணுத்தாள் பூஜா
–ஆயிற்று, கௌதம் வீடு வந்து நிரந்தரமாக தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது. ஐந்து வருட மாக அந்த மூன்று பெண் குழந்தைகளிடம் அதிகம் பழகியதாலோ என்னவோ கௌதம் பூஜாவைப்போல அதிர்ந்து பேசாமல் மிகவும் மென்மையாக நடந்துகொண்டான் பழகும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது

அன்று அவனுக்குப்பள்ளி விடுமுறை. பூஜா அலுவலகம் போய்விட்டாள்.திவாகர் தலைவலி என வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.

அகிலா பேரனுக்குப்பிடித்த சேமியா பாயசம் செய்துவிட்டு கௌதமை அழைக்க அவன் அறைக்குப்போனாள்.
கதவு சற்று ஒருக்களித்து மூடப்பட்டிருந்தது. தூங்குகிறானோ என்ற தயக்கமுடன் மெல்ல கதவைத்தள்ளியபடி உள்ளே சென்றாள் அகிலா.

அங்கே அவள் கண்ட காட்சி தூக்கிவாரிப்போட சட்டென திரும்பி ஹாலிற்குவந்தாள்.அங்கே சோபாவில் சாய்ந்திருந்த மகனைத்தட்டி எழுப்பி தன்னோடு வரும்படி சைகை காட்டினாள். திவாகரும் குழப்பமாய் தொடர்ந்தான்.

இருவரும் ஓசைப்படாமல் கௌதமின் அறைக்குள் போனபோது கண்ணாடிமுன் நின்று தன்கண்ணுக்கு மை வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். பெண்குழந்தைகளின் கவுனை அணிந்திருந்தான். தலையில் பூவினை செருகி இருந்தான். லேசான வெட்கம் முகத்தில் தவழ தன்னைக்கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தான்.

அகிலாவும் திவாகரும் அதிர்ச்சியும் குழப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “ஆராதனா

 1. ஆராதனா போன்றவர்களின் கதைகள் வருவது மிகக் குறைவு, ஷைலஜா.
  மிக நல்ல முயற்சி, எளிய விறுவிறுப்பான நடை. அகிலாவைப் போன்றவர்கள் உலகில் அதிகம் இருக்கலாமே என்று தோன்றுகிறது.  முடிவு பூஜாவிற்கு அதிக அதிர்ச்சி தரும்.  கதை அருமை, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். 

  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. திருநங்கைகளைக் கேலியாகவும், அவமானச் சின்னமாகவும் பார்ப்பது இந்த சமுதாயம் மட்டுமல்ல. அவர்களின் சொந்த பந்தங்களும்தான். அத்தகைய பெண் ஒருத்தியைக் கதையின் நாயகியாக்கிக் கடைசிவரையில் அவள் நேரடியாகச் பேசுவதாக ’வசனம்’ எதுவும் இல்லாத நிலையிலும் மற்றவர்கள் மூலமே அவள் பாத்திரத்திற்கு வலுவூட்டியிருப்பது மிகச் சிறந்த கதை உத்தியாகவே எனக்குப் படுகின்றது. பாராட்டுக்கள் திருமதி. ஷைலஜா. தொடர்ந்து பல கதைகளைத் தாருங்கள்!

  தேமொழி சொல்வதுபோல் திருநங்கைகள் பற்றி எழுதுவோர் மிகக் குறைவு. அவ்வாறு வந்த கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வாடாமல்லி’ என்னும் கதை. அக்கதையை நான் படித்து வருடங்கள் பல கடந்துவிட்ட போதிலும் இன்னும் அது என் மனத்தைவிட்டு அகல மறுக்கின்றது.

 3. எனக்குக்கூட ‘வாடாமல்லி’ தான் நினைவில் வந்தது. க.சமுத்திரமும் நானும் ஒரு குழுவில் அறிமுகம் ஆனோம். இன்றளவும் சமுதாயம் திருநங்கைகளை ஒதுக்கி வைக்கிறது. ஷைலஜா மென்மையாகக் கையாண்டிருக்கிறார். கதை கொஞ்சம் நீண்டுவிட்டதோ என்ற ஐயம். மேலும், மற்ற உணர்வுகள் மேலோங்கியுளன.

 4. கதையில் வராத ஒரு பாத்திரம் ஆனால் கதையின் முக்கிய பாத்திரம் ஆராதனா. கதையை படித்து முடித்த பின்
  ஆராதன எனும் கேரக்டர் தான் பளிச்சென தெரிகிறது. கதை முழுக்க அவரே தெரிகிறார் இது எழுத்தாளரின் திறமை தான். சபாஷ்.

  ஒரு ஹைகூ

  திரு நங்கை
  ================
  பிரம்மா
  இனி நீ
  இரவில் ஓவர் டைம் பார்க்காதே

  பார்
  உன் பணிச்சுமையால்
  நீ
  செய்திருக்கும் குழப்பத்தை.

 5. வித்தியாசமான கதைக் களம். அருமையான உயிரோட்டமுள்ள நடையில் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். திருநங்கைகளைக் குறித்த சிந்தனையோட்டம் நம் சமூகத்தில் இன்னும் வெகுவாக மாறுதலடைய வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்தும் கதை.

  ‘முற்பகல் செய்யின்…..’ என்பதை எடுத்துக்காட்டும் ‘பளீர்’ முடிவு கதைக்குச் சிகரம். அகிலாவின் பாத்திரம் வெகுவாக ஈர்த்தது. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஷைலஜா அவர்களே!!. 

 6. //பார்வதி இராமச்சந்திரன். wrote on 8 May, 2013, 13:27
  வித்தியாசமான கதைக் களம். அருமையான உயிரோட்டமுள்ள நடையில் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். திருநங்கைகளைக் குறித்த சிந்தனையோட்டம் நம் சமூகத்தில் இன்னும் வெகுவாக மாறுதலடைய வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்தும் கதை.

  ‘முற்பகல் செய்யின்…..’ என்பதை எடுத்துக்காட்டும் ‘பளீர்’ முடிவு கதைக்குச் சிகரம். அகிலாவின் பாத்திரம் வெகுவாக ஈர்த்தது. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஷைலஜா அவர்களே//

  மிக்க நன்றி பார்வதி. கதையை ஆழ்ந்து வாசித்து கருத்து கூறிய உங்களுக்கு மறுபடி நன்றி

 7. தனுசு wrote on 8 May, 2013, 13:04
  கதையில் வராத ஒரு பாத்திரம் ஆனால் கதையின் முக்கிய பாத்திரம் ஆராதனா. கதையை படித்து முடித்த பின்
  ஆராதன எனும் கேரக்டர் தான் பளிச்சென தெரிகிறது. கதை முழுக்க அவரே தெரிகிறார் இது எழுத்தாளரின் திறமை தான். சபாஷ்./// நன்றி மிக தனுசு..

 8. //இன்னம்பூரான் wrote on 8 May, 2013, 10:31
  எனக்குக்கூட ‘வாடாமல்லி’ தான் நினைவில் வந்தது. க.சமுத்திரமும் நானும் ஒரு குழுவில் அறிமுகம் ஆனோம். இன்றளவும் சமுதாயம் திருநங்கைகளை ஒதுக்கி வைக்கிறது. ஷைலஜா மென்மையாகக் கையாண்டிருக்கிறார். கதை கொஞ்சம் நீண்டுவிட்டதோ என்ற ஐயம். மேலும், மற்ற உணர்வுகள் //////////////////////////////

  மிக்க நன்றி இசார்.கதையின் நீளம் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது இனி கவனமாக இருப்பேன்

 9. துளசி கோபால் wrote on 8 May, 2013, 9:59
  அருமை ஷைலூ! ஆராதனாக்களை இன்னும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவில்லை:((((((….//// ஆமம துள்சி…திருநங்கைகளை நாம் இன்னமும் முற்றிலும் உணரவில்லைதான்! நன்றி கருத்துக்கு

 10. மேகலா இராமமூர்த்தி wrote on 8 May, 2013, 7:18
  திருநங்கைகளைக் கேலியாகவும், அவமானச் சின்னமாகவும் பார்ப்பது இந்த சமுதாயம் மட்டுமல்ல. அவர்களின் சொந்த பந்தங்களும்தான். அத்தகைய பெண் ஒருத்தியைக் கதையின் நாயகியாக்கிக் கடைசிவரையில் அவள் நேரடியாகச் பேசுவதாக ’வசனம்’ எதுவும் இல்லாத நிலையிலும் மற்றவர்கள் மூலமே அவள் பாத்திரத்திற்கு வலுவூட்டியிருப்பது மிகச் சிறந்த கதை உத்தியாகவே எனக்குப் படுகின்றது. பாராட்டுக்கள் திருமதி. ஷைலஜா. தொடர்ந்து பல கதைகளைத் தாருங்கள்!

  தேமொழி சொல்வதுபோல் திருநங்கைகள் பற்றி எழுதுவோர் மிகக் குறைவு. அவ்வாறு வந்த கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று மறைந்த எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வாடாமல்லி’ என்னும் கதை. அக்கதையை நான் படித்து வருடங்கள் பல கடந்துவிட்ட போதிலும் இன்னும் அது என் மனத்தைவிட்டு அகல மறுக்கின்றது///

  மிக்க நன்றி மேகலாராமமூர்த்தி! திருநங்கைகளைப்பற்றிய உங்கள் வார்த்தைகள் உண்மைதான்… சு சமுத்ரம் அவர்கள் இவர்களை மையமாக வைத்து எழுதிய அந்தப்படைப்பு எல்லார் நெஞ்சிலும் நிற்கும் உன்னதப்படைப்பு…. நன்றி அழகான கருத்து செறிந்த பின்னூட்டத்திற்கு!

 11. //தேமொழி wrote on 8 May, 2013, 6:22
  ஆராதனா போன்றவர்களின் கதைகள் வருவது மிகக் குறைவு, ஷைலஜா.
  மிக நல்ல முயற்சி, எளிய விறுவிறுப்பான நடை. அகிலாவைப் போன்றவர்கள் உலகில் அதிகம் இருக்கலாமே என்று தோன்றுகிறது. முடிவு பூஜாவிற்கு அதிக அதிர்ச்சி தரும். கதை அருமை, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ….. தேமொழி ///

  நன்றி தேமொழி..இக்கதை உருவாகக்காரணம் அன்றொருநாள் தனியார் தொலைக்காட்சிஒன்றில் கொடுத்த பேட்டிதான்.. அவர்களுக்கும் உள்ளம் என்று உண்டு அதில் ஆசைகள் கனவுகள் காதல் எல்லாம் உண்டு என்பது தெரிந்தது. அதன் பின்னணியில் உதித்த கற்பனைதான் இது. மேலும் அவர்களைப்பற்றி எழுதவேண்டும் சமூகத்தில் அவர்களை மதிக்கச்செய்யவேண்டும் என்கிற அக்கறை இருக்கிறது மிக்க நன்றி ஊக்கம் அளிக்கும் உங்களின் வார்த்தைகளுக்கு!

 12. Nice one, Shylaja Ma’m!

  //திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலை//

  இத்தகைய அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பாட்டார்கள்!! இந்தச் சமூகம் அவர்களுக்கு எந்தவொரு வேலையும் தர தயாரில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூகத்தில் அவர்களை ஒரு அங்கமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. 

  முன்பெல்லாம் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் இரயிலில் டெல்லி செல்லும் போதெல்லாம், வண்டி ஆந்திராவை கடக்கையில், திருநங்கைகள் கூட்டம் உள்ளே புகுந்து, அச்சுறுத்தி பணம் பறிக்கும். அதேசமயம், பணம் தந்தால் வாழ்த்தி விட்டும் போவார்கள். உண்மையிலேயே எனக்கு அவர்கள் மேல் கோபமோ, வெறுப்போ வந்ததில்லை; மாறாக மிகவும் வருத்தமாக இருக்கும். 

  ஐரோப்பிய நாடுகளிலேயே கூட திருநங்கைகளை பரிகாசித்து பார்த்திருக்கிறேன். வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன; மனித மனம் வளராத வரை. 

  //வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும் நினைவில் நிற்கும் சில நல்ல விஷயங்களாலும்தான்//

  இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. 

 13. //வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும் நினைவில் நிற்கும் சில நல்ல விஷயங்களாலும்தான்//

  இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது// என்ற இளங்கோவிற்கு மேலும் தனது கருத்தையும் தெரிவித்தமைக்கும் மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

 14. அன்பு வணக்கம் சகோதரி ஷைலஜா..
  உங்களை இங்கே வல்லமையில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  திருநங்கைகள் என்று சொல்கையிலே ஏளனமாகப் பார்க்கும் 
  இந்த சமுதாயம் கண்முன் நிழலாடுகிறது..

  “தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”
  என்று சொல்வார்கள் அதுபோல..
  நாம் அருவருப்பு அடைந்து வெறுக்கி ஒதுக்கும் சமுதாய நிகழ்வு 
  நமக்கு நடந்தால் தான் அதன் வேதனையும் வலியும் புலனாகும்.

  அருமையான கதை சகோதரி.
  முடிவினில் படிக்கும் நமக்கே நெஞ்சம் பதைத்துப் போகிறது.

  நெஞ்சம் நிறைந்த கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

 15. //மகேந்திரன் wrote on 11 May, 2013, 7:56
  அன்பு வணக்கம் சகோதரி ஷைலஜா..
  உங்களை இங்கே வல்லமையில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  திருநங்கைகள் என்று சொல்கையிலே ஏளனமாகப் பார்க்கும்
  இந்த சமுதாயம் கண்முன் நிழலாடுகிறது..

  “தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”
  என்று சொல்வார்கள் அதுபோல..
  நாம் அருவருப்பு அடைந்து வெறுக்கி ஒதுக்கும் சமுதாய நிகழ்வு
  நமக்கு நடந்தால் தான் அதன் வேதனையும் வலியும் புலனாகும்.

  அருமையான கதை சகோதரி.
  முடிவினில் படிக்கும் நமக்கே நெஞ்சம் பதைத்துப் போகிறது.

  நெஞ்சம் நிறைந்த கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி/////

  மிக்க நன்றி மகேந்திரன் ! தங்களின் உணர்ச்சிபூர்வமான கருத்து அருமையாக இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *