சு. கோதண்டராமன்

தேன் வந்து பாயுது காதினிலே

பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.

அவருடைய கிரணங்கள் என்றாள்.

சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.

இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *