நெற்றித்திலகமிடுவோம்!
ஷைலஜா
சகுந்தலை தொலைத்த
கணையாழியைப்போல
காணாமல் போயிருந்த
பெண்ணினத்தின் துணிச்சல்
உச்சியின் கிரீடமாக
இன்று மீண்டிருக்கிறது.
மசிக் கசிவினையெல்லாம்
மனக் கசிவாக்க வேண்டாம்
உபாதைகளை எல்லாம்
நம் பாதைகளாய்ப்
புலம்ப வேண்டாம்
மறைமுகமின்றி
உள்முகம் காட்டுவோம்
அடுப்பு வெளிச்சத்தில்
எழுதிய எழுத்துக்களை
ஆற்றலுடன் வெளியே படைப்போம்
நேற்றைய தழும்புகளுக்கு
சோர்ந்துபோகாமல்
இன்றைய வியர்வையினை
நெற்றிக்குத்
திலகமிடுவோம்!