ஜெயஸ்ரீ ஷங்கர்

 “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்…
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…”

இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட  அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும்.

இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள்  செயலாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து “வெற்றிக் கொடி ” ஏந்தி வெளிவந்து , அதை எழுதியவருக்கு “மலர் மாலையை” அணிவித்து அழகு பார்த்தால்..!
ஆம்…அதுவும் நடந்தது. உண்மையின் அடிப்படையில் செய்யும் இந்த விமர்சனம் நிலைக்கும் என்று   நம்புகிறேன் நம்புகிறேன்.

இரவும், பகலுமாக கருமமே கண்ணாக ஊன், உண் மறந்து  துயில் துறந்து சமுதாயச் சிந்தனையோடு பல தலை முறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு “மணியான சுதந்திர எண்ணங்களை” ‘மணிக்கொடி’ கதையாக  900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வரலாற்றில் இடம் பெரும் வண்ணம் நாவலை எழுதி முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டதும்….அந்த ‘மணிக்கொடி’ மகளே தன்னை ஈன்ற தாய்க்கு மலர்மாலையை பெற்றுத் தந்து அணிந்தவரை அழகு பார்க்கும் பாக்கியம் எழுத்தாளருக்கு மட்டும் தான் கிட்டும்  ஒரு வரப்பிரசாதம்.

அந்த இன்பத்தை தமது வாழ்வில் அனுபவித்தவர் பிரபல சமூக எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர்.’ஜோதிர்லதா கிரிஜா‘ அவர்கள் என்று இந்த உலக மகளிர் தினத்தில் சொல்லிப் பெருமைப் படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தோடு வாழ்வை பின்னிக் கொண்ட “சாதனைப் பெண்மணி”  காலங்களைக் கடந்து பேசப்படும் பொக்கிஷமான ‘மணிக்கொடி‘ என்ற புத்தகத்தை தன் வாழ்நாளின் சாதனையாக எழுதிப் படைத்தவர். சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்றது மணிக்கொடி.

ஏதோ…பிறந்தோம்….இருந்தோம்…வாழ்ந்தோம் என்று மட்டும் இல்லாமல் ‘நாட்டுக்கு நீ என்ன செய்தாய்’..? என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் ‘நாட்டுக்காக இவர் இதைச் செய்தார்..’ என்று சொல்லும் பட்டியலில் இவரது ‘மணிக்கொடி’யே …’தாயின் மணிக்கொடி பாரீர்’  என்று ‘வெற்றிக் கொடியை ‘ உயரே பிடித்தபடி, தன்னையும் உயர்த்தி தன்னைப் படைத்தவரையும் உயர்த்தி நிறுத்தும் போது …

மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்மணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துச் சொல்லும் விதமாக என்றென்றும் அழியாப் புகழ் கொண்ட எழுத்தாளர் ‘ஜோதிர்லதா கிரிஜா ‘ அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நல்லாசிகள் வேண்டுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.