ஷைலஜா

கர்னாடக சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.

வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்
 
 
 அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
 
இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)

இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை… பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை
 
செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.

மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவ
 அமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,
 வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
 மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .
 
வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு   இந்த வாத்தியங்களை  ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை  திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை  சிறுமியாய்  இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர்  அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார்  உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல  அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே  செய்து்  தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.
 
ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின்  சிறிய  நூல்நிலையத்தில் இருந்தன  உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும்   அந்த   நூல்களைப்  பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன  ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு  ஃபினிஷிங் டச்  கொடுத்தார்.  வேறொருவர் சுருதிக்    கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள்  பலவாறாகக்  காணப்பட்டன.
 
‘சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம்  அதேபோல  ஆற  அமர   சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து  நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவது
 வீணையாகும்” என்றார் அங்கிருந்த  ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள்  திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி  என்றும் சுருதி ஆனந்தம் என்றும்  பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!
 
 உற்பத்தியாளராக  வியாபாரியாக மட்டும்   இல்லாமல் தன்னை  ஒரு கலைஞராயும் அமைத்து  தாம் உற்பத்திசெய்யும்  தம்புரா வீணைகளை  சுருதி மீட்டி சரி பார்த்தார்  அன்று நான் சென்றபொது இருந்த அந்த  உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி  அப்போது  திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,”  வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A  Veena  is  sold  here, but is not  forgotton)

 இசைக்கருவிகளில்  வீணை  சிறந்தது ஏன் என்றால்  அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து  அவற்றை இணைத்து     தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும்   இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால்  ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும் அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே  இருக்கும் , பெண் மனம்  போல!

படங்களுக்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/Saraswati_veena

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வீணையடி நீ எனக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *