Tag: எம்.ரிஷான் ஷெரீப்

  • அம்மாவின் மோதிரம்

    — எம்.ரிஷான் ஷெரீப்.

    அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.

    அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள்.

    velli mothiramஅவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.

    அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையுமாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரியாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித் துருவி ஆராய்பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட்டாளே ஒழிய மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல் கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும் தானாக தான் வந்த விவரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள். அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தாளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அசதியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலாமென்று எங்கோ தூரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஓட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஓணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.

    அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந்தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பாவுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன் அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமையிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ்வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்தனுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமையாக பனை ஓலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

    மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது தான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதிவரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாக மடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரிடம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டிருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதானித்து காவலாளியை திருப்பி அனுப்பிவைத்து அமைதியாக இருந்தார். பரீட்சைத் தாளை அவன் ஒப்படைத்து வெளியேற முற்பட்டபோதுதான் அவர் அவனிடம் விடயத்தைச் சொன்னார். ஏதும் புரியாமல் முதலில் மௌனமாயிருந்து கேட்டவன் பின் கலவரப்பட்டு வீட்டுக்கு ஓடினான். அவனை பஸ்ஸுக்குக் காத்திருக்க வைக்காமல் நல்லவேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்திருந்தது.

    சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்னசாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக்கொண்டே இருந்தது.

    அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்தாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந்தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.

    காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக்குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்த போது அத்தை கிணற்று நீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில் தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியிருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோரதும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்னை மட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம் ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்வூரின் கிணற்றடிகளில் கூடி விளையாடும் வாய்ப்பு பெரியவர்களால் தடுக்கப்பட்டது. அத்தை ஆவியாக உருமாறி கிணற்றடிகளில் அலையக்கூடுமெனவும் சிறுவர்களை கிணற்றுக்குள் இழுத்துக்கொள்வாள் எனவும் அவர்களிடம் கதைகள் சொல்லப்பட்டன. எவ்வளவோ தேடியும் முதலில் விழுந்த பூனைக்குட்டியைத்தான் இறுதிவரை காணக் கிடைக்கவேயில்லை.

    அத்தையும் போனபின்னால் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக்கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அப்பா பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயிருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்தியமில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காயமடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதியாக ஓர் நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி. வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஓடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.

    பிறகோர் நாள் அவர்களது வயற்காடு எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திவந்த போது அவன் சந்திக்கடையில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேனீர் பருகிக்கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஓரத்தில் வைக்கப்பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத்தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்றுமுடித்துவிட வேண்டுமென்ற பேராசையோடு தீ நாக்குகள் உக்கிரமாகவும் ஒருவித வன்மத்தோடும் வயல் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம்மாவுக்கு ஏதுமாகியிருக்கவில்லை. நிழலுக்காக நடப்பட்டிருந்த பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக்கிடந்தவளுக்கு அருகிலிருந்த இருவர் காற்றடித்துக் கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் போல தீயை அணைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தது.

    வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாகவும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன்னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து மீண்டு, அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போகாதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஓட விட்டார். இறுதியாக அவன் நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி, அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலை வரை கூட வந்தாள். அத்தை வீடு அங்கே அனாதையாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படி மாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில் அவனது மோதிரத்தை வழமை போலவே மின்னச் செய்தபடி ஊர் முழுதும் திரிந்தது.

    நகரத்துக்குப் போய் அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் சொல்லி எப்படியோ வேலை வாங்கிவிட்டான். அவனது அறையிலேயே தங்கிக்கொண்டான். அதன்பிறகும் மோதிரத்தை உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டைவிட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்தபோதுதான் அவனது நண்பன் விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங்கினான். நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாக மனதிலே ஓட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்தசெய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.

    பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக்குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்தபொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகையிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணீரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஓய்ந்தபோது அறையினைப் பெரும் மௌனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி தான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பா திரும்பவும் இருமுறை வழுக்கிவிழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந்தோறும் காலுக்கு எண்ணெய் தடவிவருவதாகவும் சொன்னாள். மறக்காமல் அன்றும் அத்தையின் வீடு பற்றி நினைவூட்டினாள். அவனுக்கு உடனே அப்பாவைப் பார்க்கவேண்டும் போலவும் கோமதியோடு ஏதேனும் பேசவேண்டும் போலவும் இருந்தது.

    கோமதிக்கும் அவன் மேல் காதலிருந்ததை அவன் அறிவான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணீர் எடுத்து வரும் வேளையில் இவன் தேனீர்க் கடையருகில் நின்றிருப்பான். அவள் ஓரக்கண்ணால் பார்த்து, பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழுதும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறுவயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரியவளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப் பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பிவைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.

    அவனது அறைநண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஓயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல்லாம் நவீன ஓவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும்போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த ரேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக் குப்பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம்மைகளை எடுத்துவந்து பொருத்த முயற்சித்தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி கூட விடாமல் படித்து குறுக்கெழுத்து, சுடோகு நிரப்பினான். சிலவேளை தூங்கினான். தினமும் மறக்காமல் அவ் வயதானவனோடு சண்டை பிடித்தான். அவ் இருவரும் ஒருவரையொருவர் குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டை பிடித்துக்கொண்டார்கள். எல்லாம் ஓய்ந்தபின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப்பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

    அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி என்றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன்னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டுமெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப்பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப் போல உடல் பதறியது. அவனால் நம்பமுடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக்கைக்குரியவள்.

    அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியிலழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டான்.

    அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்தமிட்டுப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. காதல் உடைந்து போன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம். இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள்ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரிலிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடாத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழ வேண்டும். அதற்கு அந்த அறை சாத்தியப்படவில்லை.

    அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினைவுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஓசையோடு, யாருமற்ற அவ் வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக, அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழிகளைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்களெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச்சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளையும் அழைப்பதைப் போல கோமதீ… எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத் தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்பு நீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப் போனதாக அடுத்த நாள் காலையில் அவனுக்குச் செய்தி வந்தது.

    Share
  • காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

     அண்மையில் தமிழகத்தில் பெய்த அடைமழை ஏற்படுத்திய சேதங்களுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் தெலுங்குப் பாடகர்கள் இணைந்து பாடி வெளியிட்டுள்ள அருமையான வரிகளைக் கொண்ட உதவி கோரும் பாடல் இது.

    தமிழில் – ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்

    பகிர்வு: – எம்.ரிஷான் ஷெரீப்

    ***

    இவைகள் தண்ணீரா இல்லை கண்ணீர்த் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது?

    நீர் மேலிருந்து கீழ்வரை விழுங்கிவிடுவேன் எனச் சொல்லும்போது எப்படி எதிர்கொள்வது?

    உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது சப்தமின்றி (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா?

    இறந்தவர்களுக்கான தீ மூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா?

    அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

    ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

    மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
    மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
    இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
    உயிர்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக் கொடுக்க மாட்டீர்களா?

    ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கும் உதவிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

    இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்குக் கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்கள்.
    அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
    அவர்களுக்குச் சுவாசம் தாருங்கள்.
    கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோம்.

    கண்களில் கடல்போன்ற நீருடன் நகரத் தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?

    நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவிகோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா?

    குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்.

    இருளே கவிந்தாலும் திசைகள் மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசையை நோக்கி எழு.

    மனிதன் மனிதனுக்கு உதவி.
    மனிதன் மனிதனுக்குத் தைரியம்.
    மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா?

    நான் அன்று! நாம் என்று நாம் அனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றிணைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்லன், அவன் தெய்வம்!

    சினிமா நட்சத்திரங்களுக்கும் நம்மைப்போலவே மனது உண்டு, அவர்களும் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

    சினிமா நட்சத்திரங்களும் நீயும் நானும் ஒன்றே, நாம் என்றே சொல்லி ஆதரவுக்குச் சேர்ந்து நிற்கின்றனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் செய்வோரும், கற்றவர்களும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனர். உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் செய்ய இயலும்.

    அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

    ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

    மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
    மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
    இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
    உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக்கொடுக்க மாட்டீர்களா?

    காணொளி இங்கே
    https://www.youtube.com/watch?v=VJc1cuq-lfY

     

    Share
  • வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்

    arish

    தேவகாந்தன்

                வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

                சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.

                இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

                ‘அம்மாவின் ரகசியம்’ ஒரு பெண்ணிலை நோக்காகவே விரிகின்றது. ஆனாலும் அது மறைமுகமாய் சுட்டுகிற விஷயமும் குறுநாவலில் உண்டு. எந்த அரசும் சரி, அரசாங்கமும் சரி மக்களைப் பார்ப்பதில்லை, அவை தமக்கு முன்னாலுள்ள வர்க்க சார்பான நலனைமட்டுமே பார்த்துக்கொள்கின்றன என்ற உண்மையை பெரும்பான்மையின அனுபவங்களினூடாக வெளிப்படுத்தியுள்ள படைப்பாகவும் இது இருக்கிறது. இக் குறுநாவலின் வேறு அம்சங்களைவிட இதுவே முக்கியமானதாக என் பார்வையில் பட்டது.

                முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

                கலாபூர்வமான அம்சங்களிலும் இக் குறுநாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளதைச் சொல்லவேண்டும். ஒரு கயிற்றில் பிணைத்து பறக்கவிடப்பட்ட பறவை தன் எல்லைவரை பறந்து கயிற்றின் நீளத்துக்கு மேலே செல்ல முடியாது ஒரு அதைப்புடன் திரும்புவதுபோலத்தான், ‘அம்மாவின் ரகசிய’மும், குறுநாவல் என்ற தன் எல்லைக்கு மேல் செல்லமுடியாது அதைப்புடன் திரும்பும் வெளிகள் இப்படைப்பில் மிகுதியாக உள்ளமையை குறிப்பாகச் சொல்லவேண்டும்.

                முத்துலதாவுக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியிலான கொடுமை சிங்கள சமூகத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே ஏற்பட்டதாக இருக்கமுடியாத பட்சத்திலும், அவள் தன் குடும்பம் சார்ந்து அடையும் துயரங்கள் அதன் காரணமாகவே இருக்கிறபட்சத்திலும், அவளுக்கு நேர்ந்தவை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக வரும்வரை ரகசியமாகவே இருப்பது குறுநாவலில் பலஹீனமான அம்சமாகவே தோன்றுகிறது. வளர்ந்த பெண்ணின்மீது அவ்வளவு அக்கறை காட்டும் அவளது அம்மாவுக்குமே அவளது சிதைவு தெரியாமல் போனது அதிசயம். ஆயினும் அவளது தனக்குள்ளான ஒடுங்குகையே முத்துலதாவை அவளது இரண்டு பெண்பிள்ளைகளிடமிருந்தும் அந்நியமாக்குகிறது. அதை உடைக்கிற கணத்திலேயே பிள்ளைகளும் ரகசியம் வெளித்து தாயாக முத்துலதாவைக் கண்டு அன்பு செலுத்துகிறார்கள்.

                இக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே. அடங்கியிருப்பவர்கள் மக்களென்றும், தன் நலனை அச்சுறுத்துபவர்களோ, அச்சுறுத்தக்கூடியவர்களோ தன் எதிரிகளென்றும் அது திட்டமாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறது.

                இலங்கையின் மும்மொழிகளின் இலக்கிய ஊடாட்டத்தை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களால் வளர்க்கமுடியுமென்பதை இங்கே ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

    தேவகாந்தன்

    http://devakanthanswriting.blogspot.com

    Share
  • ‘கறுப்பு ஜூன் 2014’ – தொகுப்பு

    அன்பின் நண்பருக்கு,

    arish1

    எனது ‘கறுப்பு ஜூன் 2014’ – இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் ! எனும் முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பை இத்துடன் மின்னூல் வடிவில் இணைத்திருக்கிறேன்.

    arish

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைகள் குறித்த இக் கட்டுரைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், மனிதாபிமானிகள், வருங்கால சந்ததிகள் என அனைவருக்கும் உதவக் கூடும் என்ற வகையில், உங்கள் ஊடகத்தின் வழியாக இந் நூலை இலவசமாகத் தர விரும்புகிறேன். எனவே இதனை உங்கள் நண்பர்களோடும், வாசகர்களோடும் பகிர்ந்து கொள்வது பலருக்கும் இந் நூல் இலவசமாகக் கிடைக்க வழி செய்யும்.

    இதனை இலவசமாக வினியோகிக்கவும், அச்சிட்டு வெளியிடுபவர்கள் அதற்குரிய செலவினை ஈடுகட்டும் விதத்தில், தகுந்த விலையை நிர்ணயித்து விற்பனை செய்து கொள்ளவும் முழு உரிமை வழங்கப்படுகிறது.

    நூலை இங்கும் அழுத்தி பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்
    23.05.2015

    Share
  • சகோதரிகள் இருவர் (ஆபிரிக்க தேசத்துச் சிறுகதை)

    – அஹ்மத் ஈஸொப்

    தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

     ahmed

                “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு எல்லாத்தையும்  விழுங்கித் தள்ளுவாங்க.”

                “ஏன் நீ அப்பாக்கிட்ட சொல்லக் கூடாது?”

                “அந்தப் பொம்பளையக் கல்யாணம் கட்டினதிலிருந்து அப்பா நாங்க சொல்ற எதையுமே கேட்குறதில்ல. அப்பா நல்ல மனுஷன்தான். ஆனா அந்தப் பொம்பளையைக் கல்யாணம் கட்டினதுக்கப்புறம் அவர்க்கிட்ட இருந்த நல்ல குணங்களெல்லாம் காணாமப் போயிடுச்சு. அவள் அவரை நாசமாக்கிட்டாள். அப்பா எங்களைப் பற்றித் தேடிப் பார்க்கிறதில்ல. அதனாலதான் நான் என்னோட தங்கச்சி  ஹபீபாக்கிட்ட நாம எங்கேயாவது போயிடலாம்னு சொன்னேன். அதுதானே நிஜம் ஹபீபா?”

                “நிஜம்தான்.”

                “இந்தப் பக்கம் வாடகைக்கு அறையொண்ணு இருக்குறதா கூட்டாளிகள் சொன்னாங்க. நாங்க இங்க வந்தது அப்படித்தான். “

                ருகையா என்னிடமும், எனது நண்பன் உமரிடமும் அப்படித்தான் விவரித்தாள். சகோதரிகள் இருவரும் அம் மாடி வீட்டுக்குக் குடிவந்தமை பெரிய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தது. அவர்கள் காற்சட்டையும், நீண்ட ஆடையும் அணிந்திருந்தனர். அதிலேதும் வினோதமாக இல்லை. ஆனால் வினோதமாக இருந்தது அவர்களது தலைமயிரின் நிறம்தான். அவர்களது தலைமயிர் செம்பு நிறத்திலிருந்தது. அவர்களது உடல் நிறத்தோடு செம்பு நிறத் தலைமயிர் சிறிதும் பொருந்தவில்லை. அடர்த்தியாக வளர்ந்திருந்த அவர்களது கூந்தல் கீழ்படியாது அடிக்கடி முகத்தில் விழுந்த காரணத்தால் அதனைச் சரிசெய்து கொள்வதற்காக அவர்கள் அடிக்கடி கூந்தலோடு போராட வேண்டியிருந்தது. எனது நண்பன் உமர் அதனை இப்படி விவரித்தான்.

                “அவர்கள் உல்லாசமான யுவதிகள் என்பதைத்தான் அவர்களது கூந்தல்கள் வெளிப்படுத்துகின்றன”

     hajji

                 ருகையா முப்பது வயதைத் தாண்டியவளாக தெரிந்ததோடு ஹபீபா அதை விடவும் வயது குறைந்தவளாகத் தெரிந்தாள். அதிக நாட்கள் செல்லும் முன்பே அவர்களது ஆடைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று பெண்களின் இயல்பு என்பதால் அல்லது நவீன நாகரிகத்தின் தூண்டுதல் காரணமாக சகோதரிகள் தாம் முன்னர் அணிந்த நீண்ட ஆடைகளைத் தவிர்த்துவிட்டு மேற்கத்தேய ஆடைகளை அணியப் பழகியிருந்தார்கள்.

                உமரும் நானும் அச் சகோதரிகளை நேசிக்கத் தொடங்கியிருந்தோம். நான் இளையவளான ஹபீபாவைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எமது புறத்தில் அவ்வாறான  விசேட தெரிவொன்றும் இருக்கவில்லை. ஆகவே அவர்கள்பால் ஈர்க்கப்பட்ட நாம் இலேசான மனதோடு காதலிக்க ஆரம்பித்தோம்.

                ஹபீபா எப்பொழுதுமே உதைத்தபடியும், ஆடியபடியுமிருக்கும் ஒரு பெண்ணாக இருந்தாள். அவளது உடலானது, முடுக்கிவிடப்பட்ட இயந்திர விளையாட்டுப் பொருளொன்றைப் போன்றது. அவள் நடக்கும்போது கூட விளையாட்டுப் பொருளொன்றைப் போல உதைத்தபடியும், தடுக்கியபடியுமே நடந்தாள். ஒருமுறை இடது பக்கமும், மறுமுறை வலது பக்கமும் திரும்பியபடியும் அடிக்கடி பின்னால் திரும்பித் திரும்பி பார்த்தபடியும் யாரையோ பார்த்து பயந்தது போல நடந்து செல்வாள். அவளது கை கால்களை தொண்ணூறு பாகைகளுக்கே திருப்ப முடியும். தலைகீழாக ஆணியடிக்கப்பட்ட படுக்கையொன்றில் கிடப்பவளைப் போல அவள் நடந்துகொண்டாள். அவளை முத்தமிட்டபோது ஒரு புதிய உணர்வை நான் அடைந்தேன். சரியாகச் சொன்னால் ஒரு நடமாடும் எலும்புக் கூட்டை முத்தமிட்டது போன்ற உணர்வு அது.

                காலம் செல்லச் செல்ல உமரும், நானும் அச் சகோதரிகள் கூட்டணி மீது சலிப்படைந்திருந்தோம். எங்களிடமிருந்து விலகிய அவர்கள் வேறு காதலர்களைத் தேடிச் சென்றார்கள்.

                நேர்த்தியாக உடுத்துக் கொண்டு, தமது அறையிலிருந்து வெளியேறி அவர்கள் படியிறங்கிச் செல்வதை காலையில் எவரும் காணலாம். ருகையா முன்னாலும், அவளுக்கு பாதுகாப்பளிப்பதுபோல ஹபீபா அவளுக்குப் பின்னாலும் நடந்துசெல்வர். அவர்கள் பிரதான தெருவுக்குள் நுழைந்து தமது அலுவலகத்துக்குப் போவதற்காக ட்ராம் வண்டியில் ஏறுவர். சகோதரிகள் இருவரும் விற்பனைப் பிரதிநிதிகளாக கடையொன்றில் வேலை செய்தனர். மாலையில் திரும்பிவரும் அவர்கள் உணவு தயாரித்து உண்டு, பாத்திரங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு அழகாக உடுத்துக் கொண்டு, சில நாட்களில் மிக அழகான சேலைகளை உடுத்துக் கொண்டு காத்திருப்பர். மோட்டார் வாகனங்களில் வரும் மனிதர்கள் அவர்களைக் கூட்டிச் செல்வர்.

                சகோதரிகள் இருவர் குறித்தும் அயலில் வசிக்கும் பெண்களினது நிலைப்பாடானது, அமைதியான வெறுப்பில் தொடங்கி கடும் எதிரிகளாக எண்ணும்வரை வளர்ந்தது. அவர்களது அயல்வீடுகளில் வசித்த  திருமணமான ஆண்கள், தம் மனைவிமாரின்  கண்காணிப்புக்குள்ளானதன் காரணத்தால் அச் சகோதரிகளை நெருங்க முடியவில்லை. ஆனால் திருமணமாகாத இளைஞர்கள் அவர்களை வட்டமிட்டனர். சகோதரிகள் இருவரும் அவர்களது காதலர்களிடையே கை மாறியபடியே சென்று இறுதியில் நரகத்துக்குப் போகப் போவதாக அஸீஸ்கான் எதிர்வு கூறினார்.

                சனிக்கிழமையின் மாலை வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளைகளிலும் சகோதரிகள் இருவரும் கட்டைக் களிசானும், குட்டைப் பாவாடையும் அணிந்து தமது மாடிவீட்டின் இரும்பு வேலியில் சாய்ந்து நின்றபடி கீழேயிருந்த இளைஞர்களோடு கதைத்துச் சிரித்தபடி காலத்தைக் கடத்தினர்.

                எவராலும் எதிர்வு கூறக் கூடிய விதத்தில், சகோதரிகள் இருவரும் கர்ப்பமடைந்தனர். ஆரம்பத்தில் இருவரும் கலவரப்பட்டு குற்றம் சாட்டிக் கொண்டனர். தனது கர்ப்பத்திற்கு உமர்தான் காரணம் என ருகையா குற்றம் சாட்டினாள். அவளிடமிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது.

                “எனக்கு குழந்தை கிடைக்க இருக்குன்னு தயவுசெஞ்சு உமர்கிட்ட சொல்லுங்க. குழந்தையோட அப்பா அவர்தான். நான் எப்ப வேணும்னாலும் அவரைக் கல்யாணம் செஞ்சுக்கத் தயார். அவர் என்னை விட இளையவர். அதுதான் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.”

                “எப்படித் தெரியும்?”

                “நாங்க பொண்ணுங்க. குழந்தைக்கு அப்பா யாருன்னு எங்களுக்குத்தான் தெரியும். அப்படித்தானே ஹபீபா?”

                “ஆமா. அப்படித்தான்.”

                “ஹபீபா உன்னோட குழந்தைக்கு தகப்பன் யாரு?”

                “புது நகரத்துல இருக்குற ஹமீத் மஜீத். அவருக்கு கடையொண்ணும் இருக்கு.”

                “இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா?”

                “நான் குழந்தையப் பற்றி அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஆறு பிள்ளைகளும் இருக்குதென்று அவர் சொன்னார். ஆனா இந்தக் குழந்தையையும் பார்த்துப்பேன்னு சொன்னார்.”

                “நீ அதிர்ஷ்டசாலி.”

                “நானும் அதிர்ஷ்டசாலிதான்” என ருகையாவும் சிரித்துக் கொண்டே கூறினாள்.

                தந்தை எனும் குற்றச்சாட்டைப் பற்றி நான் உமருக்கு அறியத் தந்தேன்.

                “அவள் கர்ப்பமானது என்னாலதான்னுஅவளுக்கு எப்படித் தெரியும்?”

                “சிலநேரம் பொண்ணுங்களுக்கு இருக்குற ஞானத்தால தெரிஞ்சிருக்கும்.”

                “நான் கீழ்ப்படியாத கோமாளியொருத்தன்னு அவ நினைக்கிறாளோ?”

                உமர், ருகையாவைச் சந்திப்பதைத் தவிர்த்தான். அவளிடம் தவிர்க்க முடியாத சாட்சிகளேதேனும் இருக்கும் என எண்ணிப் பயந்தான். அவனது பெற்றோர் என்ன கூறுவர்? மக்கள் என்ன கதைப்பர்? விபச்சாரியொருத்தியின் குழந்தைக்குத் தந்தை? பாடசாலைப் பிள்ளைகள் அவனைக் கிண்டல் செய்வர். மோசமான இளைஞனொருவன் குறித்து உதாரணம் கூற ஆசிரியர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடுவர்.

                சில தினங்களுக்குப் பிறகு ருகையாவைச் சந்தித்து அவளுடனான இக் கொடுக்கல் வாங்கலை முடிவுக்குக் கொண்டுவர அவன் தீர்மானித்தான். அவர்கள் வாக்குவாதம் செய்தனர். உமருக்குள் கண்ணீர், குரோதம், துயரம் பெருக்கெடுத்தது. ஆனாலும் கூட சிக்கலைத் தீர்க்க முடியவில்லை.

                ருகையா திரும்பவும் என்னை அழைத்தாள்.

                “அது என்னோட குழந்தைன்னு உமர்க்கிட்ட சொல்லுங்க. நான்தான் அந்தக் குழந்தையை வளர்ப்பேனே தவிர வேறு யாருமில்ல. உமரை நான் நேசிக்கிறேன்னு உமர்கிட்ட சொல்லுங்க. வருத்தப்பட வேண்டாம்னும் சொல்லுங்க.”

                “ஆனாலும், குழந்தைக்கு கட்டாயமா ஒரு தகப்பன் வேணுமே?”

                “என்னோட குழந்தைக்கு தகப்பனொருத்தன் தேவையில்ல. தகப்பனொருத்தன் இல்லாம இருப்பதே எனக்கு சந்தோஷம். என்னோட மனசுக்குள்ள இருப்பது அப்படித்தான். என்னோட தகப்பனே எங்களைக் கவனிக்கல. அதனால என்னோட குழந்தைக்கும் தகப்பனொருத்தன் தேவையில்ல.”

                “அப்போ ஹபீபா?”

                “ஹபீபாவோட குழந்தையின் தகப்பன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அப்படித்தானே ஹபீபா?”

                “ஆமா. அது உண்மைதான்.”

                காலம் செல்லச் செல்ல சகோதரிகள் இருவரினதும் வயிறுகள் பெரிதாகத் துவங்கின. அயல்வாசிகளின் பண்பாட்டு உணர்வும் கோபமும் பெருக ஆரம்பித்தன.

                “வளர்ற பெண்களுக்குத் தரக் கூடிய புதுமையான வழிகாட்டல் இது” என எமது மாடி வீட்டுச் சொந்தக்காரியான பெண்ணிடம் திருமதி.மூஸா கூறினார்.

                “வளர்ற பருவத்துல எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது அவளுங்களுக்குத் தெரியலையோ?”

                “நல்லவேளை எனக்கு பெண்பிள்ளைகள் இல்ல. அதனால எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.”

                “இதுக்கு ஏதாவது செய்யச் சொல்லி நான் என்னோட புருஷன்கிட்ட கதைக்க வேணும். அடுத்த வீட்டுல கல்யாணமாகாத கர்ப்பிணிப் பொண்ணுங்க இருக்குறதை நாங்க பார்த்திட்டிருக்கிறதெப்படி? அடுத்தது, என்னோட மூத்த மகள் அவங்களோட கூட்டாளி.”

                பாதி சீன வம்சாவளியில் வந்த திருமதி. மூஸா இப்படிக் கூறினார்.

                “கல்யாணமாகாத பொண்ணுங்க ஒருபோதும் கர்ப்பமாக மாட்டாங்கன்னு என்னோட அம்மா அடிக்கடி சொல்வார்.”

                “ஆமா. அது சரிதான்” என மலாய் இனப் பெண்ணான ஹலீமா அதனை ஏற்றுக் கொண்டாள்.

                “கேப்டவுன் நகரத்தில் பொண்ணுங்க ரொம்ப நல்லா நடந்துக்குவாங்க. அவங்க ஆம்பளைங்க கூட சுத்தினாலும் கூட, தங்களைப் பாதுகாக்கவும் தெரிஞ்சவங்க.”

                “ரெண்டு பேருமே ஒண்ணா கர்ப்பமானது எப்படின்னுதான் எனக்குத் தெரியல?” என திருமதி. காஸிம் கேள்வியெழுப்பினார்.

                “சிலவேளை ஒரே ஆம்பளை, ஒரே ராத்திரியில ரெண்டு பேரோடையும் இருந்திருப்பான்” என எனது வீட்டின் சொந்தக்காரி கூறினாள். இவ்வளவு நேரமும் தொடர்ந்து வந்த ஆழமான உரையாடலை மறந்து எல்லோருமே சிரித்தனர்.

                “அவங்க பலதார மணத்தைப் பழக்குறாங்க போல” என சொலமனின் மனைவி டோரதி சிரிப்போசையை அதிகரித்தபடி கூறினாள்.

                “மன்னிக்கணும் திருமதி. சொலமன்”

                திருமதி.மூஸா குறுக்கிட்டார். டோரதி தனது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகச் சந்தேகித்துக் கோபப்பட்டார்.

                “இது பல தார மணமில்ல. அவங்க ஒருத்தனைக் கூட இன்னும் கல்யாணம் கட்டிக்கல.”

                கடந்த வருடம் மக்காவுக்கு புனித யாத்திரை சென்று வந்த ஹாஜியானி பாத்திமா, அரேபியா போன்ற நாடுகளில் இந்த இருவரையும் கல்லெறிந்து கொல்வர் எனக் கூறினார்.

                “அவங்களோட மர்மஸ்தானங்களை வெட்டிப் போடணும்” என டோரதி கூறினாள். (அவள் கீழ்த்தரமான ரசனையைக் கிளப்பிவிடும் நாவல்களை வாசிப்பதற்கு அடிமையானவள்). அவள் கூறிய வசனங்களை இதற்கு முன்பு எவருமே அறிந்திராத காரணத்தால் ஏனையவர்களுக்கு அதனைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. எனவே ஏதோ ஒரு வகையிலாவது அதனைத் தெளிவு படுத்த வேண்டியிருந்தது. ஏனைய பெண்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்ட போதிலும், அஸீஸ்கானின் மனைவி செயன்முறைப்படுத்தத் தீர்மானித்தாள்.

                ஒரு மாலை நேரம், அவள் தனது வீட்டிலிருந்து வெளியேறி சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் போய் நின்றாள். ஆர்வத்தின் காரணமாக சுற்றியிருந்த மக்களும் அங்கே குழுமினர். சகோதரிகள் இருவரும் வந்தபோது அவள், அவர்களது வயிறுகளைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டுக் கத்தத் தொடங்கினாள்.

                “ஆஹ்… முஸ்லிம் பொண்ணுங்க….ஹ்ம்..நீங்க ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணிக்கிட்டீங்க? என்ன பண்ணிட்டிருக்கீங்க? முஸ்லிம்னு சொல்லிக்குற உங்களை ஆண்டவன் தண்டிப்பான்! ஐயோ முஸ்லிம்களே..நீங்க பண்ணிக்கிட்டது!”

                அவள் நிலத்தில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். சகோதரிகள் இருவரும் பயந்துபோய் அவளைப் பார்த்தபடியே படிகளேறிச் சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடித் தாழிட்டுக் கொண்டனர்.

                திருமதி.அஸீஸ்கானின் நடவடிக்கையானது சுற்றிவர இருந்த குடியிருப்பினரது கேலிக்குள்ளானது. அவர்கள் சிறுவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்தனர். எல்லோரும் தாம் வசித்துவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து சகோதரிகள் இருவரும் வசித்துவரும் வீட்டைப் பார்த்தனர். சரியாகச் சொன்னால் ஏதோவொரு துயரம் நிகழ்ந்த வீடொன்றைப் போல காட்சியளித்தது அது.

                மெல்லிய நூலிழையைப் போன்ற மெலிந்த சரீரத்தைக் கொண்ட அஸீஸ்கான் வந்து இவ்வாறு கூறினார்.

                “எனக்கு மட்டும் நேரமிருந்தால் இந்தச் சகோதரிகளுடைய மோசமான நடத்தையைப் பற்றி புத்தகமொன்றே எழுதுவேன். இந்தக் காலத்துல முஸ்லிம் ஜனங்கள் எதிர்கொள்ற ஒழுக்கச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட இவங்கதான் சரியான உதாரணங்கள். இவங்கள சிறையில அடைச்சு சாகும்வரை பட்டினி போடணும்.”

                ‘அவர்களது கர்ப்பத்துக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல’ எனும் கூற்றை ஒருவர் முன்வைத்தார். அதற்கு அஸீஸ்கான் இப்படிக் கூறினார்.

                “அவங்களுக்கு தங்களுடைய சரீரத்துல உள்ள மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியலன்னா நீங்க சொல்ல வர்றீங்க? இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுற பொண்ணுங்க தங்களோட இச்சைக்கு அடிபணிந்து நடத்தை கெட்டுப் போறதுக்கு இஸ்லாம் மார்க்கம் ஒருபோதும் இடமளிக்கிறதில்ல.”

                சில மாதங்களுக்குப் பிறகு சகோதரிகள் இருவரும் பெண்குழந்தைகளிரண்டைப் பிரசவித்தனர். இந்தப் பிரசவம் குறித்தும் பல கதைகள் உலவின. சிலர் குழந்தைகள் மீது அனுதாபம் காட்டியதோடு அவற்றை எடுத்து வளர்க்கவும் தமது விருப்பங்களைத் தெரிவித்தனர். இன்னும் சிலர் ‘அக் குழந்தைகளை மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டுபோய் மிருகங்களுக்குத் தீனியாக்க வேண்டும்’ என்றனர். இன்னுமொருவருக்கு அவர்களது வீட்டுக்கு தீ வைக்க அவசியமாக இருந்தது.

                சகோதரிகள் இருவரையும் அவர்களது குழந்தைகளோடு மாடி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதே அஸீஸ்கானின் தேவையாக இருந்தது. அவர்கள் அங்கே தொடர்ந்தும் இருப்பதானது கலாசாரத்துக்கும், நற்பெயருக்கும், மார்க்கத்துக்கும் கேடு விளைவிக்கும்.

                வெள்ளிக்கிழமை மதியவேளை, ஜும்மாத் தொழுகை முடிந்ததன் பிற்பாடு அஸீஸ்கான் அப் பிரதேசத்தில் பிரபலமாக விளங்கிய கொலைகாரனாகிய குல்லின் வீட்டுக்குத்தான் முதலில் போனார். எனினும் குல் தனது பசியைப் போக்கிக் கொள்வதிலேயே அதிக கவனத்தைச் செலுத்தினான். கலாசாரம் பற்றிய கதையில் அவதானம் செலுத்தத் தவறிய அவன் சமிக்ஞையாகப் புன்னகைத்துக் கதவைச் சாத்தினான்.

                பிறகு அவர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரான, புதுநகரப் பள்ளிவாயிலின் மதகுருவான ஹரூஃப் மௌலவியைத் தேடிச் சென்றார். அஸீஸ்கானைக் கூட்டிச் சென்ற மௌலவியின் ஊழியர்களில் ஒருவரான அப்துல்லாஹ் அங்கு நடந்ததை பின்னர் இவ்வாறு விவரித்தார்.

                “நாங்க முகம்கொடுக்கப் போற ஒழுக்கச் சீர்கேடு பற்றியும், பாரிய சிக்கல்களைப் பற்றியும் அஸீஸ், மௌலவியிடம் விபரித்தான். அதுக்கு அவர் என்ன சொன்னார்னு தெரியுமா? அந்த பொண்ணுங்க ரெண்டுபேருக்கும் தண்டனை தர்றது எல்லாம் வல்ல இறைவனுடைய வேலன்னு அவர் சொன்னார். கோபம் வந்த அஸீஸ் மோசமான வார்த்தைகளால மௌலவியைத் திட்டினான். மௌலவி அவரோட ஊழியர்களோட சேர்ந்து அஸீஸைப் பிடிச்சு நல்லா அடிச்சு வெளியே துரத்திட்டார்.”

                வாடகை வீடுகளின் உரிமையாளர் யூசுப்பை அஸீஸ்கான் அடுத்ததாக நாடினார். குளிர்காலங்களிலும் கூட வெண்ணிற குர்தாவை அணியும் அவர் விசித்திரமான ஒரு நபராவார். அடர்த்தியான நீண்ட தாடியை வளர்த்துள்ள அவரது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ஆழமான மார்க்கப்பற்றுள்ள அவர் நடுத்தெருவில் கூட இறைவனை நாடித் தொழக் கூடியவர். ஒரு தடவை ஈத் பெருநாள் தினமொன்றில் குரங்கொன்றையும் எடுத்துக் கொண்டு அவர் அம் மாடிவீடுகளுக்கு வந்திருந்தார். அக் குரங்கின் தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு துருக்கித் தொப்பி இருந்தது.

                “இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம். இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம் ” எனக் கூறியபடி அதனை அவதானிப்பவர்களுக்கு, விஷேடமாக தனது கூலியாட்களுக்குக் கேட்கும்படி

                “ஆனா நீங்க முஸ்லிமில்ல. நீங்க முஸ்லிமில்ல” எனக் கத்தியபடி இரு கை நிறையக் காசுகளையள்ளி வீசினார்.

                அப் பெட்டை நாய்களிரண்டையும் தனக்குச் சொந்தமான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்ற யூசுப் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். அவர் அதனைத் தனியாகச் செய்வதற்குப் பொறுப்பேற்றார். தனது குடியிருப்பில் இவ்வாறான பெட்டை நாய்கள் இருப்பதற்கு இடமளிக்க அவர் தயாரில்லை.

                ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அவர், சாரதி ஓட்டிவந்த மேர்ஸடீஸ் வாகனத்தில் வந்திறங்கினார். சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் நின்றுகொண்ட அவர், அவர்களைத் தான்  தாக்கப் போவதாக பல தடவை அச்சுறுத்தினார். பீதிக்குள்ளான மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் படிக்கட்டுகளின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்தோடு படியேறினார். படிக்கட்டுகளின் இடையே சற்றுத் தங்கிச் செல்ல கட்டப்பட்டிருந்த இடத்தில் சில நிமிடங்கள் நின்று இளைப்பாறினார்.

                அச்சத்தில் நடுங்கியபடி சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் கதவருகே நின்று கொண்டிருந்தனர். அவர் முதலில் ருகையாவை நெருங்கி அவளது கன்னத்தில் அறைந்து நாயே, பேயே என குஜராத் மொழியில் கத்தினார். அவரைத் தாண்டிச் செல்ல முயற்சித்த ஹபீபாவுக்கும் தலையில் அடி விழுந்தது. அவள் கீழே விழுந்து படிக்கட்டு வழியே கீழே விழப் பார்த்தாள்.

                இதற்கிடையே யூசுப் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். பீதியில் நடுங்கிக் கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறாரென வாசலருகிலேயே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர், கையில் ஒரு பாத்திரத்தோடு முன்னே தோன்றினார். அதன் பித்தளை மேற்பரப்பு சூரிய ஒளியில் மின்னியது. அவர் அதனை படிக்கட்டை நோக்கி வீசியடித்தார். அது டாங் எனச் சத்தமெழுப்பியபடி துண்டுதுண்டாக உடைந்து கீழே சிதறியது. அதனைத் தொடர்ந்து ஒரு கதிரை வந்தது. அவற்றைத் தொடர்ந்து அந்த வீட்டின் சட்டி, பானைகளெல்லாம் வர ஆரம்பித்தன. யூசுபுக்குள் எழுந்த அழிப்புணர்வு உக்கிரமடைந்ததோடு வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கு மேலதிகமாக துணிகளும் பறந்து வரத் தொடங்கின. செய்ய வழியேதுமற்ற சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் சொந்தக்காரர் தமது உடைமைகளுக்குச் செய்யும் அழிவுகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

                தொடர்ந்து யூசுப் குழந்தைகளிலொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தார். ருகையாவும், ஹபீபாவும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். யூசுப் ஒரு கையால் அவர்களைப் பின்னால் தள்ளிவிட்டு மறுகையால் கதறியழும் குழந்தையின் கழுத்தை நெரிக்க முயற்சித்தார்.

                இச் சந்தர்ப்பத்தில் கூட்டத்தை ஊடறுத்துக் கொண்டு படிகளிலேறியபடி சொலமன் முன்னால் வந்தார். அவர் சகோதரிகளிருவரையும் மிருதுவாக பின்னால் நகர்த்திவிட்டு யூசுப்பின் கழுத்தைப் பிடித்து அசைத்தார். அத்தோடு அவரது கைகளிலிருந்து குழந்தையைப் பறித்து தாயின் கையில் கொடுத்தார். பின்னர் யூசுபைப் பிடித்து அவரது முகத்தை கதவு நிலைக்கம்பில் சாய்த்து அழுத்தினார். யூசுப்பின் முகம் வேதனையில் துடித்தது. யூசுப்பை மிக வலிமையாக ஆக்கிரமித்துக் கொண்ட சொலமன், அவரையும் இழுத்துக் கொண்டு படியிறங்கினார். அவர்கள் நிலத்தை அண்மித்ததும் கூட்டம் அவர்களுக்கு இடமளித்தது. சிறுவர்கள் கை தட்ட ஆரம்பித்தனர். யூசுப்பை படிக்கட்டு நெடுகவும் இழுத்துக் கொண்டு வந்த சொலமன், அவரது மேர்ஸிடிஸ் வாகனத்தின் கதவைத் திறந்து அவரை உள்ளே தள்ளினார். நிலைமையை உணர்ந்த சாரதி வாகனத்தைக் கொஞ்சம் பின்னாலெடுத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றான்.

                நெடுங்காலமாக எமக்கு யூசுப்பைக் காணக் கிடைக்கவில்லை. எனினும் மனநோயாளி ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் இதற்குமேலும் வசிக்க முடியாதென சகோதரிகள் இருவரும் தீர்மானித்தனர். அவர்கள் புதுநகரத்திலேயே வேறொரு வீட்டைத் தேடி, அங்கு குடியிருக்கச் சென்றனர்.

    M.Rishan Shareef,

    No – 126,

    Hemmathagama Road,

    Mawanella,

    Srilanka.

     

    mrishanshareef@gmail.com

    Font – Unicode

     

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு

     

    அஹ்மத் ஈஸொப் (Ahmed Essop) –

    arishi

    1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார்.

     

    இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு ‘ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்.

    Share
  • செம்மஞ்சள் பொழுதின் வானம்!

    எம். ரிஷான் ஷெரீப்

    பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்
    நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
    அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென
    வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா?

    எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட
    வேலிகளற்ற தரிசு வயலது
    பரந்து விரிந்த எம் பண்டைய பூமி
    வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த
    சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்!

    என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது
    நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து
    தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி
    பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க
    மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி
    நானதை வளர்த்து வந்தேன்
    அந்நிய நகரத்தில் நீயும் நானும்
    அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி
    அது நன்கு தழைத்திருந்தது
    தேசம் விட்டகன்ற நாளில்!

    அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய
    கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்
    குளிர்ச்சியைத் தந்திருக்கும்
    கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்
    கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்
    சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென
    உழுதபின் வாடிக் களைத்த மூத்தவர்கள்
    அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்

    இன்று
    சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்
    தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்
    பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்!
    எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
    பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
    அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன… இப்போது
    வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
    அதன் உடலிலின்னும்
    சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
    கோடை காலத் தூரிகை!

    அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி
    அந்திப் பேய் வெயில்
    மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென
    ”வான்கோ’வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்
    ஒருங்கே கலந்த நிலம்” என்றாய்
    தங்க பூமியின் ஆகாயத்தில்
    செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்?

     

    Share
  • வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் !

     எம்.ரிஷான் ஷெரீப்

    In_Our_Translated_World_Tamil_poems_English_Collection

                தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

                உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது.

    2242            பண்டைய காலம் தொட்டு, நம் மூத்த குடிகளின் மொழியான தமிழைப் பேணிப் பாதுகாப்பதில் அவர்களது காப்பியங்களும், இலக்கியங்களும் பெரும்பங்காற்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. அச் செல்வங்கள் இல்லையெனில், புராண தமிழின் பெருமையைக் கூறும் சான்றுகள் ஏது? எனில், அவற்றைப் பாதுகாத்து இந் நவீன காலத்துக்குக் கொண்டு தந்த அப் பெருந் தகைகளை எவ்வாறு மறத்தலோ, மறுத்தலோ தகும்?

                அனைத்தும் நாகரிக மயமாகி விட்ட இக் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறும், இலக்கியங்களும், தமிழ் மொழி மூலமான படைப்புக்களும் உலகம் முழுவதும் பரவி விட்டபோதிலும், வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில் தமிழ் மொழி இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அம் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயாகும். இந்த இடத்தில்தான் எழுத்தாளர்களுக்கு ஈடாக, அவர்களது படைப்புக்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களும், அம் மொழிபெயர்ப்புக்களைத் தொகுத்து உலகம் முழுவதும் வாழும் வேற்று மொழி மானிடருக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உலகம் போற்றும் அவர்களது செயல் பெரும் மதிப்புக்குரியதாகிறது.

                சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்க்கும் நோக்கோடு 2001 ஆம் ஆண்டு பலரது ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாகத் தோற்றம் பெற்றதுதான் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம். இத் தோட்டத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்கள், அரிய தமிழ் நூல்களின் மீள்பதிப்பு, திறமையானவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தலும், கௌரவித்தலும், இலவச தமிழ் நூல் வினியோகம் எனப் பல விளைச்சல்கள் வெற்றிகரமாக நடந்துகொண்டேயிருக்கின்றன.

                அவற்றுள் மற்றுமொரு பெறுமதிமிக்க விளைச்சலாக, அண்மையில் காலமான  பேராசிரியர் திரு.செல்வா கனகநாயகம் அவர்களது முயற்சியின் பேரில், கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எம்.எல்.தங்கப்பா, அனுஷியா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘In Our Translated World’ என ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ ஒரு முழுத் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளமையானது, இங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. ‘தமிழ் இலக்கியத் தோட்ட’ வெளியீடாக வெளிவந்த இத் தொகுப்பினை வெளியிடும் அனுமதியைப் பின்னர் பெற்ற இந்திய ‘விகடன்’ பதிப்பகம், இன்னும் பல பிரதிகள் அச்சிட்டு, மலிவு விலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

                கடந்த முப்பது வருடங்களில் தமிழில் பல ஆயிரக்கணக்கான கவிதைகள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதோடு பரந்த அர்ப்பணிப்பும், உன்னிப்பான கவனமும், கவிதைகள் மீதான வெகுவான ஈடுபாடும் தேவைப்படும் பணியாகவிருக்கிறது. அதை மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கமும் அவரது நண்பர்களும் செய்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘தமிழ் இலக்கியத் தோட்டத்துக்காக’ தொகுத்த, அதன் நிறுவுனர்களில் ஒருவரான அமரர் திரு. செல்வா கனகநாயகம் கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு மொழிபெயர்ப்பாளர். எனவே, வேறு சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களை வாசிக்கும்போது எழும் ஐயப்பாடுகளும், குழப்பங்களும், வார்த்தை மயக்கங்களும், பிசகுகளும் இத் தொகுப்பை வாசிக்கும்போது எழவேயில்லை. ஆங்கில மொழிபெயர்ப்போடு, அதன் மூலத் தமிழ்க் கவிதையும் அருகருகே அச்சிடப்பட்டிருப்பதால் தமிழ் வாசகர்களுக்கு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

                எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஆக்கங்களைப் படைப்பவர்கள் எனில், அப் படைப்புக்களை அவற்றின் மூலத்தோடு எவ்வித மாற்றமும் செய்யாது, இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதனை ஒரு தவம் போலவே செய்கிறார்கள். எனவே யதார்த்த வாழ்வியல், யுத்தம், நேசம், துரோகம், இயலாமை, இயற்கை, வன்மம், இழப்பு என மனித வாழ்வில் சந்திக்க நேரும் எல்லாமும் கொண்ட காத்திரமான எழுபத்தெட்டு தமிழ்க் கவிதைகளை, அவற்றின் செறிவும், உள்ளடக்கமும், சாரமும், அழகும் மாறாது இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதென்பது இலகுவான விடயமாக ஒருபோதும் இருப்பதில்லை.

                கடந்து சென்ற அண்மைய மூன்று தசாப்தங்கள் தமிழ் பேசும் மக்களிடத்தில் இலகுவாக மறக்கப்படக் கூடிய காலகட்டமல்ல. அக் காலகட்டத்துக்குள் வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் புதையுண்டு கிடக்கின்றன. எனவே இத் தொகுப்பிலுள்ள இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் பல யுத்தத்தின் துயரங்களையும், கண்ணீரையும் எடுத்துரைப்பவை. விடையற்ற வினாக்களாக நம் முன் வைக்கப்படுபவை. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கவிதைகள் வாழ்வியல் பிரச்சினைகளின் வெவ்வேறான பரிமாணங்களை சித்தரிப்பவை. எல்லாக் கவிதைகளுமே ஒன்றுக்கொன்று வேறானவை. வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தை ஈர்ப்பவை. இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிதைகளுமே சர்வதேசமும் அறிய வேண்டியவை.

                உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் தமிழின் செழுமை அரிதாகும் வாய்ப்பே மிகும். எனவே வரவேற்கத்தக்க இவ்வாறான தொகுப்புக்கள் தொடர்ந்து வெளிவருவதானது காலத்தின் தேவையாக இருக்கிறது. வரவேற்போம் !

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • அபலைப் பெண்ணுக்கு விடுதலை !

    எம். ரிஷான் ஷெரீப்

    இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அப் பெண்ணை விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    தற்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    விரைவில் விடுதலையாகப் போகும் அவருக்காகப் பாடுபட்ட, எனது பதிவினைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும், இணையத் தளங்கள் எல்லாவற்றுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    – எம்.ரிஷான் ஷெரீப்

    02.04.2015

    Share
  • அந்தகாரத்துக்கு முன்பு

     

    – சந்திரகுமார விக்ரமரத்ன

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     Untitled 12(113)

    வாசலருகே மலர்ச்செடியின்

    பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே

    கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ

    அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு

    பாடப்படப்போகும் போதனை கீதங்களை

    கொழும்புக்குச் சென்று

    அப்பாவிடம் உரைப்பீரோ

     

    அமாவாசைக் கனவுகள் வந்து

    தம்பியை அச்சுறுத்துகையில்

    நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட

    யாருமில்லை வீட்டில் இப்பொழுது

    இன்றிரவு சொந்தங்கள்

    எம் குடிசையில் விழித்திருப்பர்

    எவ்வாறிருக்குமோ நாளை

    நாம் உணரும் அந்தகார இருள்

     

    வண்ணத்துப் பூச்சிகளே

    மெதுமெதுவாக

    மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்

    இனி

    பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்

    உறைந்துவிடும் அம்மாவின் வாசனை

    அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு

    மயானத்துக்கு வந்து நாளை

    கூட்டிச் செல்லுங்கள் அப்பா

    சிறைச்சாலைக்கு எம்மையும்

     

    – சந்திரகுமார விக்ரமரத்ன

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • போய்-போய் எனப்படுபவன் (தென்னாப்பிரிக்கச் சிறுகதை)

    – காஸே மொட்ஸிசி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

              களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு குறையுடனே பிறந்திருந்தான். ஆயினும் கூட, பத்து வயதாகும்போதே தனது வாழ்க்கையைக் கொண்டு செல்ல போய்-போய் பணம் உழைக்க ஆரம்பித்திருந்தான். அவன், நகரத்தில் பத்திரிகை விற்பதில் ஈடுபட்டிருந்தான். தேனீயைப் போல பணத்தை சேமித்து ஒளித்து வைத்திருந்த அவனுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு நீளக் காற்சட்டையும், காற்றுப் புகாத பல வர்ண ஆடைகளையும் வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட காற்சட்டையும், பல வர்ணங்களிலான மேற்சட்டையும் உடுத்து, ஊன்றுகோலின் துணையுடன் நடமாடும் அவனுக்கு, தான் ஒரு வளர்ந்த மனிதனாகியிருப்பது போன்ற உணர்வு தோன்றியது.

              எஸ்தர் தனது புதல்வன் குறித்து பெருமைப்பட்டாள். தனது ஒன்பது வயதில் போய்-போய் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்திவிட்ட போதிலும் அவள் அதற்காகக் கவலைப்படவில்லை. ஏனெனில், அறிவைத் தேடிச் செல்லாமலேயே தனது மகனுக்கு வெற்றிகரமான வாழ்க்கையொன்றைக் கொண்டுசெல்ல முடியுமென அவள் நம்பினாள்.

              காலம் செல்லச் செல்ல போய்-போய் மூளை குழம்பிப்போன ஒருவனின் நிலைக்கு ஆளானான். தனது மகன் குறித்து எஸ்தருக்குள் இருந்த பெருமையெல்லாம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அவள் தனது மகனைக் குறித்து சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

              “மாஸேலோ, என்னோட பையன் மூடத்தனமான கேள்விகள் நிறையக் கேட்டுக் கேட்டு என்னைத் தொந்தரவு பண்றான். அவனோட தலைக்குள்ள என்ன புகுந்திருக்குன்னு எனக்குப் புரியல”

              எஸ்தர் தனது அயல்வாசிப் பெண்ணொருத்தியிடம் கூறினாள். எஸ்தர் மிகவும் கவலைக்குள்ளாகியிருப்பதை அறிந்த மாஸேலோ அவளைத் தேற்ற முயற்சித்தாள்.

              “இந்த வயசுல எல்லாப் பசங்களுமே இப்படித்தான். போய்-போய் பற்றி சொல்ல இருப்பதுவும் அவ்வளவுதான். என்னுடைய பசங்களைப் பற்றி சொல்ல இருப்பதும் அவ்வளவுதான்” என அவள் மிருதுவாகக் கூறினாள்.

              “அம்மா”

              “சொல்லு போய்-போய்?”

              “அம்மாவுக்குத் தெரியுமா? ஜோஹன்னர்ஸ்பர்க் ஸ்டேஷனிலிருக்குற படிக்கட்டுக்கள் ஓடுமாம்.”

              “ஆமாம். அது ‘Escavator – அசையும் படிக்கட்டுக்கள்’ என்று அழைக்கப்படுது.”

              என எஸ்தர் விளக்கினாள். அவளைச் சந்திக்க வரும் அநேகமான வாடிக்கையாளர்கள் அவளுக்கு அந்தச் சொல்லை சொல்லிக் கொடுத்திருந்தனர். சிலவேளை அந்தச் சொல்லை சொல்லிக் கொடுத்தது மெற்றிக் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும், மார்பில் மயிரடர்ந்த இள வயது மாணவனாக இருக்கலாம் என ஞாபகங்களைக் குடைந்தபடி யோசித்தாள்.

              “கீழே போகும் படிக்கட்டுகளும் தனியாக உள்ளது”

              “ஆனா, நான் முன்னாடி சொன்ன படிக்கட்டுகள் எப்பவும் மேலேயே போகுதாம். எனக்கு மேலே போற படிக்கட்டில் ஏறி கீழே போக முடியாதா?”

              “எனக்குத் தெரியல”

              “அம்மா முயற்சித்துப் பார்த்திருக்கியா?”

              “எனக்குத் தெரியாது. வாயை மூடிட்டிரு”

              “நான் முயற்சித்துப் பார்க்கப் போறேன்”

              போய்-போய் மேலே செல்லும் படிக்கட்டு நெடுகவும் கீழே இறங்க முயற்சித்ததோடு அது செய்யக் கூடிய ஒரு வேலைதானென அறிந்துகொண்டதில் அதிக பூரிப்புக்குள்ளானான். ஒரு புறம் மாத்திரமே வாகனங்கள் செல்லவேண்டிய பாதையில் வெற்றிகரமாக எதிர்ப்புறத்தில் வாகனத்தை ஓட்டிய சாரதிக்கு ஏற்படும் உற்சாகம் போய்போய்க்குள்ளும் ஏற்பட்டது.

              “அம்மா, எங்களுக்கு போலிஸ்காரன்கள் எதுக்கு?”

              “எங்களுக்கு போலிஸ்காரன்கள் மட்டுமில்ல. போலிஸ்காரிகளும் இருக்கிறாங்க”

              எஸ்தர் தனது மகனின் அடுத்த கேள்வியை எதிர்பார்த்தபடி கூறினாள்.

              “எங்களுக்கு அவங்க எல்லாம் எதுக்கு?”

              “மனுஷங்களக் கைது செய்ய”

              “நான் போலிஸ்காரனாகப் போறேன்”

              போய்-போய் கைவிலங்குச் சோடியொன்றையும் போலிஸ் ஊதியொன்றையும் கண்டெடுத்தான். அவற்றை எங்கு, யாரிடமிருந்து பெற்றுக் கொண்டானென்பது பரம ரகசியமாக இருந்தது. போலிஸ் ஊதியை ஊதுவதன் மூலம் போய்போய் எவ்வளவு திருப்தியடைந்தான்?! அவ்வாறே அந்த ஓசையைக் கேட்டு எஸ்தர் எவ்வளவு திகிலடைந்தாள்?!

              “நான் போலிஸ்காரன். குசினியில் கள்ளச்சாராயம் குடிக்கிற மனுஷங்களை நான் கைது செய்யப் போறேன்”

              போய்-போய் தனது கண்களிலிருந்து கடமையின் ஒளியைச் சிந்தியவாறு எஸ்தரிடம் கூறினான்.

              “நான் உங்களைக் கைது செய்றேன்”

              தனது பாத்திரத்தில் மதுபானத்தை அருந்தியபடி, நரைத்த தலையுடனிருந்த ஒருவரிடம் சென்ற போய்போய் கூறினான்.

              “சரி. கைது செய்”

              பையனுக்கு மகிழ்ச்சி தரும் எண்ணத்தில் வயதான அம் மனிதர் கூறினார். அத்தோடு தனது இரு கரங்களையும் நீட்டினார். கை விலங்குகளேறின.

              அதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகும் கை விலங்குகளை அகற்றுமாறு போய்-போயிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தலை நரைத்த மனிதரைக் காணக் கூடியதாக இருந்தது. முதல்தடவையே போய்போய் அதற்கு ஐந்து சிலிங் காசுகள் கேட்டிருந்தான். இப்பொழுது திரும்பவும் அதையே கேட்டான். தலை நரைத்த மனிதர் கோபத்துக்குள்ளானார்.

              “நீ இதைக் கழற்றலன்னா நான் உனக்குக் காலால…”

              அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே போய்-போய் தனது ஊன்றுகோலினால் அவரது நரைத்த தலையைத் தாக்கினான். ‘எஸ்தர்’ என அவர் ஓலமிட்டார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தலையிலிருந்து சில இரத்தத் துளிகள் சிந்தின.

              தலை நரைத்த மனிதன் தர வேண்டிய பணத்தை எஸ்தர் கொடுத்தாள். கை விலங்குகள் அகற்றப்பட்டன.

              “நானொரு போலிஸ்காரன்” எனக் கத்தியபடி போய்போய் வீட்டிலிருந்து தெருவுக்கு ஓடினான்.

              “நான் இனி ஒருநாளும் இந்த வீட்டுக்குக் குடிக்க வரமாட்டேன்”

              தலை நரைத்த மனிதன் கூறினார்.

              அதற்குப் பிறகு காலக்கிரமத்தில் எஸ்தரின் மதுபான வாடிக்கையாளர்களது எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அவளது ஆண் நண்பர்களது வருகையும் படிப்படியாகக் குறைந்தது. போய்-போயின் நடவடிக்கைகளே அதற்குக் காரணமாக அமைந்தது. நள்ளிரவில் படுக்கையறைக்கு ஓடிவரும் போய்-போய், எஸ்தருக்கருகில் படுத்துக் கொண்டிருப்பது எவராயிருந்தபோதிலும் தனது ஊன்றுகோலால் தாக்கினான்.

              “இந்த வீட்டுல தேவைக்கும் அதிகமாக பூச்சிகள் இருக்கு”

              என ஒருநாள் போய்-போய் தனது தாயிடம் கூறினான். எஸ்தர் பதிலளிக்கவில்லை. தனது மகன் நொண்டியவாறே வீட்டிலிருந்து வெளியேறிப் போவதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

              சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டசினளவு தீப்பெட்டிகளை வாங்கி எடுத்துக் கொண்டு போய்-போய் திரும்ப வந்தான். வாங்கொன்றில் அமர்ந்த அவன் தீப்பெட்டியொன்றைத் திறந்து தீக்குச்சியொன்றை வெளியே எடுத்தான். அதை எரித்த அவன் அதிலிருந்து எழுந்த நெருப்பைப் பார்த்துச் சிரித்தான். தீக்குச்சிகள் தீரும்வரைக்கும் அவன் அக் காரியத்தையே தொடர்ந்தபடி இருந்தான். அது முடிந்ததும் அடுத்த தீப்பெட்டியை எடுத்தான். சொற்ப நேரத்துக்குப் பிறகு பன்னிரண்டு தீப்பெட்டிகளும் முடிந்திருந்தன.

              “இப்ப என்கிட்ட பன்னிரண்டு சவப்பெட்டிகள் இருக்கு”

              வெற்றுத் தீப்பெட்டிகளை அவாவோடு பார்த்தவாறு போய்போய் மேலும் கூறினான்.

              “நான் இன்னிக்கு பன்னிரண்டு பூச்சிகளைப் பிடிச்சு கொன்னு பார்க்கப் போறேன்”

              அன்று பன்னிரண்டு பூச்சிகள் கொன்று புதைக்கப்பட்டன.

              மறுநாள் பலகைத் துண்டுகளையும், ஆணிகளையும் கொண்டு ஏதோ செய்துகொண்டிருந்த மகனை எஸ்தர் கண்டாள். அவன் அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் என்பதால் அவனுடன் கதைக்க விரும்பாவிடினும் கூட, அவளால் கதைக்காமலிருக்க முடியவில்லை. அவள் தனது மகன் செய்துகொண்டிருக்கும் வேலை குறித்து விசாரித்தாள்.

              “நான் டொப்ஸிக்கு ஒரு சவப்பெட்டி செய்றேன்”

              டொப்ஸி, அக் குடும்பத்தின் வளர்ப்புப் பிராணியான நாய்க்குட்டி. வார்த்தையால் விபரிக்க முடியாதளவு பீதியோடு எஸ்தர் வினவினாள்.

              “ஆனா நாய்க்குட்டி செத்துப் போகலையே?!”

              “அது செத்துப் போன மாதிரி நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்”

              அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

              “அது ஒரு கெட்ட கனவு. அது இன்னும் சாகல”

              டக்.டக்.டக். சுத்தியலின் ஓசை கேட்டது.

              “அப்படீன்னா நான் அதைக் கொல்லணும். நான் இந்தப் பெட்டியில அதைப் போட்டுப் புதைக்கணும்”

              எஸ்தர் நாயைத் தேடிக் களைத்தாள்.

              “டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி..டொப்ஸி”

              நாயைக் கண்டுபிடித்த எஸ்தர் அதனைப் பாதுகாக்க வேண்டி அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்த தனது மாமா ஒருவரின் வீட்டுக்கு அதனை எடுத்துச் சென்றாள்.

              அவள் திரும்பவும் தனது வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியிருக்கும். கதவு மூடித் தாழிடப்பட்டிருந்தது. அவள் கதவைத் தட்டினாள்.  ஜன்னல் வழியே பார்த்து போய்-போய் கத்தினான்.

              “இது என்னோட வீடு.. போயிடு”

              “போய்போய் இது நான். உன்னோட அம்மா”

              “போ..போயிடு.. என்னோட அம்மா இன்னும் பிறக்கல”

    **********************

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு :

     

    காஸே மொட்ஸிசி

     rishaa

             கரோபோ மோசெஸ் மொட்ஸிசி (Karobo Moses Motsisi ) என்ற இயற்பெயரைக் கொண்ட காஸே மொட்ஸிசி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

     

              1932 ஆம் ஆண்டு, ஜோஹன்னர்ஸ்பர்கில் பிறந்த இவர், அங்கேயே கல்வி கற்று பின்னர் சிறிது காலம் தென்னாபிரிக்காவின் கௌதெங்க் மாகாணத்திலுள்ள ப்ரிடோரியா எனும் நகரத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அத்தோடு ‘ட்ரம் (Drum) இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றியதோடு ட்ரம் (Drum), த கிளாசிக் (The Classic), த வேர்ல்ட் (The World) ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். 

     

              1977 ஆம் ஆண்டு, தனது 45 ஆவது வயதில் காலமான இவரது படைப்புக்களையெல்லாம்  ஒன்று சேர்த்து ‘ராவன்’ பதிப்பகமானது, 1978 ஆம் ஆண்டு ‘காஸே & கோ (Casey & Co)’ எனும் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

    Share
  • இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்?

    எம்.ரிஷான் ஷெரீப்

    arisha

    இலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.

    வறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் ‘நன்றி உதயா’ எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

    உலக வரலாற்றுச் சின்னங்களிலொன்றான சீகிரிய குகையோவியங்கள் இலங்கை தொல்பொருளியலாளர்களால் பாதுகாக்கப்படுபவை. அவற்றினை திட்டமிட்டோ, வேண்டுமென்றோ சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்தான். ஆனால் பாரிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு, அவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவது அவர்களைத் திருத்துவதற்காகவும், அவர்களை மீள்புனரமைப்பதற்காகவும் எனில் ஒரு ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை எதற்காக? தான் செய்த தவறினை ஒப்புக் கொண்டு விட்டார். இனி ஒரு போதும் அவ்வாறு செய்யவும் மாட்டார். இந் நிலையில் இவ்வாறான தண்டனை அதிகபட்சமானது இல்லையா?

    எனில் வாக்குவேட்டைகளுக்காக மட்டும் நம் வீடுகளுக்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளோ, ஊடகவியலாளர்களோ, எழுத்தாளர்களோ, கவிஞர்களோ, அநாதரவான பெண்களுக்காகக் குரல் கொடுப்பவர்களோ, பெண்ணியவாதிகளோ, வலைப்பதிவர்களோ, தமிழ் இணையத்தளங்களோ யாரும் ஏன் இந்த அபலைப் பெண்ணுக்காகக் குரல் எழுப்பவில்லை? இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறதென நீதி கேட்டு ஏன் ஒரு ஆழமான பதிவு கூட இல்லை? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘தமிழனுக்கு ஒரு இன்னலென்றால் உயிரைக் கொடுப்பேன்’ என வீறு கொண்டு பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த ஏழைத் தமிழச்சியை தண்டனையிலிருந்து மீட்க மறந்துபோனதேன்?

    இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்கள் ஏழைகள் மற்றும் இயலாதோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. அச் சட்டங்கள் தவறுகளையும் குற்றங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் திட்டமிட்டுச் செய்யும் குற்றங்கள் கூட பண பலம் மற்றும் அதிகாரத்தின் மூலம் ‘தவறு’களாகக் கருதப்பட்டு தண்டனைகளிலிருந்து தப்பி விடுகின்றன. ஆனால் ஏழைகள் செய்யும் சிறு தவறுகள் கூட பாரிய குற்றங்களாகக் கருதப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த ஏழைப்பெண் அறியாமையால் செய்த தவறுக்கு இவ்வளவு பாரிய தண்டனையெனில், கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொலைகாரர்கள், பாலியல்குற்றவாளிகள், ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரும் சட்டத்தின் தண்டனையிலிருந்து ஓரிரு நாட்களில் வெளிவருவது எவ்வாறு?

    சீகிரிய குகையோவியங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள ஊழியர்கள், இந்தப் பெண் பத்து எழுத்துக்களைக் கிறுக்கும்வரையில் எங்கே போயிருந்தனர்? அவர்கள் தம் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் பெண் இவ்வாறு கிறுக்கியிருக்கச் சந்தர்ப்பம் வாய்த்திருக்காதே? ஏன் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை ஏதுமில்லை?

    இந்த அபலைப் பெண்ணுக்குரிய இந்தத் தண்டனை அநீதமானது. இரண்டு வருடங்கள் சிறையில் சித்திரவதைகளோடு கழித்துவிட்டு வரப் போகும் உதேனி சின்னத்தம்பி எனும் இளம்பெண்ணின் எதிர்காலம் முழுவதும் இனிமேல் இருளன்றி வேறென்ன?

    இனியும் தாமதமில்லை. தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் நீங்கள் நினைத்தால் இவரின் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனையை மீள்பரிசீலனை செய்ய உத்தரவிட்டு இவரைக் காப்பாற்றலாம். இவரை இப்போதே காப்பாற்றப் போகின்றவர் யார்?

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்!

    எம்.ரிஷான் ஷெரீப்

    துல்லியமான நீர்ப்பரப்பு
    கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது           sea
    சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்!

    போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
    அசைந்தசைந்து
    காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்!

    உன் கையிலொரு மதுக் குவளை
    ‘அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
    மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
    சமுத்திரம் பற்றி மட்டும் சொல்’ என்றாய்
    ‘இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்’
    வேறென்ன சொல்ல இயலும்?

     

    Share
  • ஒரு பனித்துளி ஈரம்

     – எம்.ரிஷான் ஷெரீப்

    இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
    தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
    ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென

    வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
    குளிர்காலக் கம்பளிகளைப்
    பின்னுகிறது காலம்                                  Snowy-Plant

    அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
    நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
    சிறு ஒற்றைக் கொடி

    வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென
    விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
    எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்

    நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
    அலையெனச் சுழலும் காற்றும்
    நிமிரும்போதெல்லாம்
    உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
    விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
    இன்னும்
    மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்

    வரும் காலங்களில்
    அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
    இன்னும் பிறக்கவேயில்லை
    இலைகளின் மறைவுகளுக்குள் தம்
    கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
    கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
    வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
    இன்னும் நகரவேயில்லை எனினும்
    எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
    தாவரங்களுக்கான ஈரத்தை
    மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்

    பனிக் கூட்டம் விடியலைப்
    பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
    காடுகளால் நிரம்பி வழிகின்றன

    தீயிடம் யாசகனாக்கும்
    குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
    வனங்களைத் தொழுத ஆதிவாசிகளைக்
    கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
    துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
    தளிரின் வேருக்கென
    இப் பேரண்டம் தரும்
    ஒரு பனித் துளி ஈரம்!

     

    Share
  • ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

    மூலம் (சிங்களமொழியில்) – தர்மசிறி பண்டாரநாயக்கவின் ‘ஏகா அதிபதி’ நாடகத்தின் ஒரு பகுதி.
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.

    ஏகா அதிபதி நாடகம் குறித்து…

    dharma3

    தர்மசிறீ பண்டாரநாயக்கவினால் எழுதி, இயக்கப்பட்ட ‘ஏகா அதிபதி’ மேடை நாடகமானது 1976 இல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டு, அவ் வருடத்துக்கான சிறந்த நாடக விருது, சிறந்த நடிகருக்கான விருது ஆகிய விருதுகளை உள்ளடக்கிய 8 விருதுகளை சுவீகரித்துக் கொண்டது. அரசியல் சர்வாதிகாரத்தை விபரிப்பதாக உள்ள இந் நாடகம் 1976 முதல் இன்று வரை 1400க்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டு வெற்றிகண்டுள்ளது.

    பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

    dharma1‘ நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?’

    ‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் போலச் செய்தேன்’

    ‘ நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ முன்வந்த நாளிலிருந்து போகத்தொடங்கியது எனது ஊர்’

    ‘ நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினாலும், நாட்டு மக்கள் என் பக்கம்தான் சார்ந்திருக்கிறார்கள்.’

    ‘ அழிவு ஆயுதங்களைக் காட்டினால் அந்த சார்பு நிலையை இல்லாமலாக்க முடியும்’

    ‘ ஆனால் அழிவு ஆயுதங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் நான் செய்திருக்கிறேன்’

    ‘ஆயுதங்களால் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆயுதத்தை நெஞ்சில் வைத்து எந்தவொரு மனிதனிடமிருந்தும் என்னால் வேலை வாங்க முடியும்’

    ‘ வேலை செய்யும் மனிதனின் நெஞ்சில் ஆயுதத்தை வைத்தவுடன் அது வெகுண்டெழத் தொடங்கிவிடும். வேலை செய்யும் மனிதன், தன் உடலைப் பாவிப்பதற்கு எப்பொழுதும் அவனது மூளை நிதானமாக இருக்க வேண்டும்’

    ‘ மூளை? அதன் அழகைப் பார்த்திருக்கலாமடா எல்லோருடைய மூளையும் வெளியே அமைந்திருந்தால். இருப்பவன் யார், இல்லாவன் யார் என்பதைக் கண்ட உடனேயே என்னால் சட்டென்று பிடித்திருக்க முடியும்’

    ‘ மூளை வெளியே இல்லாது போனாலும், இன்று மனிதனுக்கு வெளியே இருப்பவைகளை வைத்து ஒரு தீர்மானத்தில் இறங்கமுடியாது. நானும் உங்களிடமொரு கேள்வி கேட்கிறேன். என்னைச் சிறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் சேவை என்ன?’

    ‘கடமையாயிருந்தாலும் அதை அளவுக்கதிமாகச் செய்ய முற்படும் எவனாக இருந்தாலும், அவனைப் பற்றிக் கொஞ்சம் தேடிப் பார்ப்பது என்பது சந்தேகம் நிறைந்த ஒரு நிர்வாகியின் புத்திசாலித்தனமான வேலை’

    ‘ நான் எந் நேரத்திலும் செத்துப் போகத் தயார், செய்ய வேண்டிய சில கடமைகளைச் செய்து முடித்ததன் பின்னர்’

    ‘ தண்ணீர் நின்று விடும்போது, இன்னும் இரண்டு மாதம் கடந்தால், நீ இங்கிருப்பாயா என்ன?’

    ‘ நான் அந்த எதிர்பார்ப்போடு வேலை செய்யவில்லை’

    dharma2

    ‘ எதிர்பார்ப்பொன்றும் இல்லாமல் வேலையில் இறங்குபவனுக்கு, வேலையில் முன்னேற்றம் காணும்போது, தலையால் ஒளிக்கதிர்களைப் பரப்பிட எண்ணத்தோன்றும். ஒருநாளும் நினைக்கவில்லையல்லவா நீ சாவதற்கு?’

    ‘ பிறந்ததிலிருந்தே செத்துக் கொண்டு வாழ்ந்ததால், புதிதாக மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமொன்றும் எனக்கிருக்கவில்லை’

    ‘ உன்னைப் போல ட்ரான்ஸிஸ்டர்கள் மூலமாக வேலை செய்த வீரர்கள் உலக வரலாற்றிலும் இருக்கிறார்கள். நீ திடீரென இறந்துவிட்டால், சகோதர மக்கள் ஒன்றாக மோதி மோதி அழுவார்கள். அவர்களது கண்ணீரெல்லாம் சேர்ந்து, திரும்ப வெள்ளப் பிரளயமொன்றை ஏற்படுத்தக் கூடும். சும்மா நாங்கள் அதைப் பரீட்சித்துப் பார்ப்போமா?

    ‘ பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் அழுதாலும் இப்பொழுது கண்ணீர் வருவதில்லை’

    ‘ நரம்புகளெல்லாம் இறுக்கமாகக் காய்ந்திருக்கும்’

    ‘ காயாமல் இருந்தவை எங்கள் நரம்புகள் மாத்திரம்தான்’

    ‘ உங்களது நரம்புகள் காயக் காயத்தான் எனதுடலுக்கு எப்பொழுதும் உயிர் வருகிறது’

    ‘ எங்களுக்கு இல்லாமல் போகவென்று ஏதுமில்லை உத்தமமானவரே’

    ‘ வாயை மூடு. இன்னொரு நாள், சூரியன் மறையப் போகும் மாலை நேரம், நான் உன்னை சந்திப்பேன். அன்றுதான் நீ என்னைப் பார்க்கும் கடைசி நாள். அதுவரை பிரிவுப் பாடல்களைப் பாடிக் கொண்டிரு. இங்கிருந்து எதிர்காலத்திட்டங்கள் செல்லுபடியற்றதாகிறது. இப்போது குந்தியிருந்தவாறு உன் கடந்தகாலத்தை யோசி. வீர மக்கள் அநேகம்பேர் சிறைச் சாப்பாடு நன்றாகச் சாப்பிட்டிருப்பதால், உனக்கும் அவை கஷ்டமளிக்காது என நினைக்கிறேன். செருப்புக்குப் பொருத்தமாக பாதத்தை வெட்டியிருந்தால் இவை எதுவுமே இல்லைதானே’

    தர்மசிறீ பண்டாரநாயக்க

    dharma

    தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும் திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான தர்மசிறி பண்டாரநாயக்க (Dharmasiri Bandaranayake : Drama & Film Director Script writer Producer) இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வேவிற்ற என்ற இடத்தில் 06.10.1949 இல் பிறந்தார். இவரது surname நீலப் பெருமாள் (Kalukapuge)

    இவர், தானே எழுதி இயக்கிய முதல் நாடகமான ‘ஏகா அதிபதி’ 1976 இலிருந்து இன்று வரை 1400 இற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது. பிறமொழியில் அமைந்த நாடகங்களின் சிங்கள வடிவத்தினை அனேக தடவைகள் மேடையெற்றி தேசிய நாடகவிழாவில் சிறந்த நாடக இயக்குனர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது, இறுதியாக வெளிவந்த திரைப்படமான ‘பவதுக்க’ – பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகள் – யுத்தம் குறித்து, அனைத்துமே விதிப்படி என்ற பௌத்த சித்தாந்தத்தின் மீது கேள்வியை எழுப்பியிருந்தது.

    A-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இதுவரை 4 சிங்களத் திரைப்பட விழாக்களை நண்பர்களின் உதவியுடன் நடாத்தியுள்ளதுடன் அங்கு சிங்களநாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். வட-கிழக்கு கலைஞர்களை, மக்களைச் சந்தித்து தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நாட்டுக்கூத்து , வில்லுப்பாட்டு, கிராமிய-நாட்டுப்பாடல்கள், இசை, நடனம் இவற்றைப் பார்வையிட்டும் கேட்டும் வியப்படைந்து வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்தில் நாடகத்திற்குரிய மிகவும் வலுவான கூறுகள் (strong theatrical elements) இருப்பதையும் நாட்டார் இசையிலும் நடனத்திலும் வலுமிக்க நாடகத்திற்குரிய உருவங்கள் (strong theatrical images) இருப்பதையும் இனம் கண்டு அவற்றை விடியோ செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டக்கூத்தையும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி ஆங்கில உபதலைப்புக்களுடன் னஎன வடிவில் ஆவணப்படுத்தி தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒரு அரும்பணியை ஆற்றியுள்ளார்.

    தர்மசிறி, இந்தியாவில் நடைபெற்ற இராமாயண நாட்டுக்கூத்துத் திருவிழாவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் கேரளா, தமிழ்நாடு சென்று கலைஞர்களுடன் உரையாடி அங்குள்ள கூத்துவகைகளைப் பற்றி அறிந்ததன் வாயிலாக கதகளியையும் சிங்கள நடனத்தையும் இணைத்து இராமயணத்தை சிங்கள மொழியில் தயாரித்துள்ளார்.

    சிங்கள நடனவகையிலும் இந்தியாவில் உள்ள நடனவகையிலும் காணப்படும் ஒத்த தன்மைகளை இணைத்து ஆசியாவிற்குரிய பாரம்பரியத்தகை கொண்ட கலை படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    தகவல் உதவி – விக்கிபீடியா

    Share
  • பிராயச்சித்தம்

    எம்.ரிஷான் ஷெரீப்

    தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். ‘அச்சு அச்சு’ எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

    அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

    குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

    முத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.

    மெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.

    ” அண்ணா.. தூங்கிட்டிருந்தீங்களோ ? “

    ” ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் “

    அவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.

    அந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.

    முத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.

    சின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.

    முத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.

    போன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.

    பப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.

    விடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக ‘இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்’ எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.

    பழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.

    நல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் ‘இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு’ என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.

    இன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.

    முத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.

    ” தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ? “

    தன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..

    ” வேண்டாமண்ணே..நான் வந்தது…மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்” என்றார்.

    ” சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் ” அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.

    அண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். ‘இதற்கொன்றும் குறைச்சலில்ல’ என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.

    ” தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா? நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல “

    “அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்” முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.

    “அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ?” மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.

    ” இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது?”

    “அவன் எண்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு “

    ” ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்? “

    புருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.

    கதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.

    அந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.

    ” என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்” என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.

    – எம். ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    mrishanshareef@gmail.com

    Share