இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்?
எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.
வறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் ‘நன்றி உதயா’ எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
உலக வரலாற்றுச் சின்னங்களிலொன்றான சீகிரிய குகையோவியங்கள் இலங்கை தொல்பொருளியலாளர்களால் பாதுகாக்கப்படுபவை. அவற்றினை திட்டமிட்டோ, வேண்டுமென்றோ சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்தான். ஆனால் பாரிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு, அவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுவது அவர்களைத் திருத்துவதற்காகவும், அவர்களை மீள்புனரமைப்பதற்காகவும் எனில் ஒரு ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை எதற்காக? தான் செய்த தவறினை ஒப்புக் கொண்டு விட்டார். இனி ஒரு போதும் அவ்வாறு செய்யவும் மாட்டார். இந் நிலையில் இவ்வாறான தண்டனை அதிகபட்சமானது இல்லையா?
எனில் வாக்குவேட்டைகளுக்காக மட்டும் நம் வீடுகளுக்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளோ, ஊடகவியலாளர்களோ, எழுத்தாளர்களோ, கவிஞர்களோ, அநாதரவான பெண்களுக்காகக் குரல் கொடுப்பவர்களோ, பெண்ணியவாதிகளோ, வலைப்பதிவர்களோ, தமிழ் இணையத்தளங்களோ யாரும் ஏன் இந்த அபலைப் பெண்ணுக்காகக் குரல் எழுப்பவில்லை? இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறதென நீதி கேட்டு ஏன் ஒரு ஆழமான பதிவு கூட இல்லை? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘தமிழனுக்கு ஒரு இன்னலென்றால் உயிரைக் கொடுப்பேன்’ என வீறு கொண்டு பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த ஏழைத் தமிழச்சியை தண்டனையிலிருந்து மீட்க மறந்துபோனதேன்?
இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்கள் ஏழைகள் மற்றும் இயலாதோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. அச் சட்டங்கள் தவறுகளையும் குற்றங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் திட்டமிட்டுச் செய்யும் குற்றங்கள் கூட பண பலம் மற்றும் அதிகாரத்தின் மூலம் ‘தவறு’களாகக் கருதப்பட்டு தண்டனைகளிலிருந்து தப்பி விடுகின்றன. ஆனால் ஏழைகள் செய்யும் சிறு தவறுகள் கூட பாரிய குற்றங்களாகக் கருதப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஏழைப்பெண் அறியாமையால் செய்த தவறுக்கு இவ்வளவு பாரிய தண்டனையெனில், கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொலைகாரர்கள், பாலியல்குற்றவாளிகள், ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரும் சட்டத்தின் தண்டனையிலிருந்து ஓரிரு நாட்களில் வெளிவருவது எவ்வாறு?
சீகிரிய குகையோவியங்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள ஊழியர்கள், இந்தப் பெண் பத்து எழுத்துக்களைக் கிறுக்கும்வரையில் எங்கே போயிருந்தனர்? அவர்கள் தம் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் பெண் இவ்வாறு கிறுக்கியிருக்கச் சந்தர்ப்பம் வாய்த்திருக்காதே? ஏன் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை ஏதுமில்லை?
இந்த அபலைப் பெண்ணுக்குரிய இந்தத் தண்டனை அநீதமானது. இரண்டு வருடங்கள் சிறையில் சித்திரவதைகளோடு கழித்துவிட்டு வரப் போகும் உதேனி சின்னத்தம்பி எனும் இளம்பெண்ணின் எதிர்காலம் முழுவதும் இனிமேல் இருளன்றி வேறென்ன?
இனியும் தாமதமில்லை. தமிழ் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் நீங்கள் நினைத்தால் இவரின் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனையை மீள்பரிசீலனை செய்ய உத்தரவிட்டு இவரைக் காப்பாற்றலாம். இவரை இப்போதே காப்பாற்றப் போகின்றவர் யார்?
– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com