எஸ். சசிகலா

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரை ஒரு சகாப்தம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழும் நாளில் வாழ்வது வாழ்க்கையல்ல, இறந்தபின்னும் வாழும் வாழ்க்கைதான் சிறந்தது என்றொரு பொன்மொழி உண்டு.  அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்தே நீக்கமற நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்.

  • உதயம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்ன் முழுப்பெயர் எம் ஜி ராமச்சந்திரன். 1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தார். தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவர்,பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு. சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால், நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துதுறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களை மனதளவில் பெரியதாக அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

  • மண வாழ்க்கை….

எம்ஜிஆர், தங்கமணி என்ற கிராமத்துப் பெண்ணை முதலில் திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலமின்றி சிறிது நாட்களிலேயே இறந்துவிட, பின்னர் சதானந்தவதி என்ற பெண்ணை மறுமணம் செய்தார். அவரும் காசநோயால் இறந்துவிட இறுதியாக நடிகை வி.என்.ஜானகியை மணம் முடித்தார்.

  • திரை வாழ்க்கை….

அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார். எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம்நாடோடி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.1974ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது .ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

  • அரசியலில்………

திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோதும், திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள்தங்கள் மனங்கவர்ந்த நாயகரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு,அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார்.    தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை  மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த காரணத்தால், அவர் கட்சி தோல்வியைச் சந்திக்கவே இல்லை. 1977ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார்.

  • பொன்மனச் செம்மல்

எம்.ஜி.ஆர் என்னும் பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றளவும் நினைவுகூரத்தக்கதாக இருப்பதை யாராலும் மறக்கவே மறுக்கவே முடியாது. எல்லோரும் தமது சம்பாத்தியத்தை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளும்போது, இவர் மட்டும் தன் வருமானத்தின் பலனை அனைவருக்கும் அளித்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். பல திருமணங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பத்தவர்களுக்கு தேவையான தொகையைப் பரிசாக வழங்கிவந்தார். ஈகை அவரது மிகப் பெரியபலம்.அதனாலேயே பொன்மனச் செம்மல் என்று மக்கள் இவரை அன்போடு அழைத்தனர்.

  • மறக்க முடியாத மாமனிதர்

எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதும்கூட, ”அறியாமல் செய்யும் இவர் பாவங்கள் மன்னிக்கக்கடவது….” என்று பரமபிதா சொன்னதாக பைபிள் சொல்கிறது. அதற்கு இணையாக, இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது

1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி இராமாவரம் இல்லத்துக்குள்ளே புகுந்த எம்.ஆர். இராதா, வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம் பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டு போய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

அந்தத்தன்மைதான் எம்ஜிஆரின் உயரிய குணங்களில் ஒன்றாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதுவே இன்றளவும் மக்கள் மனதில் அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த இக்கட்டான நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வவல்லமையும், செல்வாக்கும் படைத்த செம்மல் காத்து நிற்கிறார்.

தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் போலத்தான் வாழ்ந்திருக்கிறார் மக்கள் திலகம்.

  • கேட்டவர்க்கு கேட்டபடி…

பள்ளிக் குழந்தைகள் பசியோடு பயிலக்கூடாது என்பதற்காக, மதிய உணவுத்திட்டத்தை வழி வகுத்தவர் மக்கள் திலகம்.

பசி என்று ஒருவன் வந்துவிட்டால், அவனின் பசியைப் போக்கிப் பரவசம் அடைவார். ஒருவன் அணிந்து கொள்ள ஆடை வேண்டி வந்தால், அவனுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பார். இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கேட்கிறார்.

1967-ல் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பின், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகையில்,கலைஞர் வள்ளலைச் சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். அதைக் கேட்ட மக்கள் திலகம், ஒருநிமிடம் யோசித்தார். அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

அதற்குப்பிறகு, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து,மதியச் சாப்பாட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறார். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு  இன் முகத்துடன் இலட்சிய நடிகரின் தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை எடுத்து வந்து வைக்கிறார். இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்….என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார்.

அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

உடனே, “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

“சரி நீங்க சாப்பிடுங்க..” ஒப்புதல் அளிக்கிறார் இலட்சிய நடிகர். அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார்.

வள்ளல் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் வானத்தையும் வசப்படுததும் வலிமை பெற்றவர் என்பதும், நினைத்ததை முடித்துக் காட்டும் வல்லமை மிக்கவர் என்றும், நம்பி வந்தவர்களுக்காக நட்புக்காகத் தன்னையே இழக்கத் துணிகிற குணமும் தெளிவாகத் தெரிகிறது. அதுவே அவரை மனதில் வாழும் மனிதராகவும் வைத்திருக்கிறது.

  • வாடிய பயிரைக் கண்ட வள்ளல்

1972-ல் வள்ளல் துவங்கிய கட்சி, 1977-ல் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அசுர பலம் கொண்டு வளர்ந்த நேரமது. வள்ளல் தமிழகம் முழுவதும் சுற்றி வலம் வருகிறார். அப்பொழுது ஏரி-குளங்களில் வற்றி, வாடிய பயிர்களும், வாடிய முகங்களும் மட்டுமே வள்ளலின் பார்வையில் படுகின்றன.

கங்கை காவிரித் திடமெல்லாம் சட்டச் சிகலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் தன்னிடம் இல்லாத பட்சத்திலும், தன்னால் ஆனதைச்செய்ய முடிவெடுக்கிறார் வள்ளல். உடனே கர்நாடகப்பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷணன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,மறுநாள் மதியம் அவர் வீட்டிற்குச்சாப்பிட வருவதை தெரிவிக்கிறார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் அவர்கள், இதற்கு முன்பு பலமுறை வள்ளலை விருந்துக்கு அழைத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமாக வருகிறேன்’ என்று மழுப்பி வந்த வள்ளல், இன்று வலிய போன் செய்து வருகிறேன் என்று சொன்னதும், அமைச்சருக்கும், அவரது தாயாருக்கம் ஆனந்தம் தாளவில்லை! அமைச்சரின் தாயார் வள்ளலின் தீவிர ரசிகையும் கூட!

மறுநாள் மதியம் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து சாப்பாட்டு நேரத்திற்குச் சரியாக வந்த வள்ளலை, அமைச்சரின் தாயார் அக மகிழ்வுடன் சாப்பிட அழைக்கிறார். அவரே விழுந்து விழுந்து உபசரிக்கிறார்.

வந்த நோக்கத்தை அமைச்சருக்குத் தெரிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த வள்ளல், இரண்டுமூன்று வாய் சாப்பிட்டுவிட்டு வேண்டுமென்றே விக்க  ஆரம்பிக்கிறார். வள்ளலின் தொடர் விக்கல் சத்தம் கேட்டு,அடுக்களையில் இருந்தவாறே, “ஏம்பா! பிள்ளை சாப்பிட முடியாம விக்கிக்கிட்டு இருக்குது. பக்கத்துல இருக்கிற நீ பார்த்துக்கிட்டு இருக்கியே? தண்ணிய எடுத்துத் தரக்கூடாதா?” என் கடிந்து கொள்கிறார்.

உடனே வள்ளல், “எங்கே உங்க பிள்ளை தண்ணி தர்றாரு?” என்று சூசகமாய்ச்சொல்ல அதற்கு அமைச்சரின்தாயார், உனக்கா என் பிள்ளை தண்ணி தரமாட்டேங்குறான்…” என்று யதார்த்தமாகய் சொல்லிக் கொண்டே தண்ணீர் சொம்பை நீட்டுகிறார்.

அமைச்சரின் தாயாரிடமிருந்து தண்ணீர் சொம்பை வாங்கிய வள்ளல், “அம்மா நீங்க எனக்குச்சாப்பிட சோறும், குடிக்கத் தண்ணீரும் தாராளமாக கொடுக்கிறீங்க..! ஆனா தமிழ் நாட்டுல சாப்பிட சோறே கிடைக்காத அளவுக்கு ஜனங்க தண்ணியில்லாமத்தவிக்கிறாங்க. பயிர் பச்சையெல்லாம் வாடிக் கிடக்குது…” என்று தான் வந்த நோக்கத்தைக் கோரிக்கையாக அமைச்சரின் தாயார் மூலம் அமைச்சரின் பார்வைக்கு நேரடியாகத் தெரிவிக்கிறார் வள்ளல்.

புரிந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர், நட்பு நாடி வந்து நாசுக்காகத் தன்நாட்டு மக்கள் பிரச்சினையை முன் வைத்த வள்ளலைக் கட்டித் தழுவிக்கொள்கிறார். வள்ளல் பெங்களூரில் இருந்து சென்னை வந்து சேருவதற்குள் கர்நாடகத் தண்ணீர் தமிழகம் வந்து சேர்கிறது.இப்படி சாப்பாட்டு வேளையில்கூட சரித்திரம் படைத்தவர் வள்ளல் ஒருவர் மட்டும்தானே!

  • பெற்றால்தான் பிள்ளையா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ‘முதலாளி’ என்று அழைத்த சிலரில் சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலு மணியும் ஒருவர். அவர் எம்.ஜி.ஆரைத் தன் படத்தில் நடிக்கும் ஒரு நடிகராக மட்டும் நினைக்காமல், தன் மனதில் வைத்து தன் குடும்ப உறுப்பினராகவே பாவித்து வந்தார். தன் வீட்டில் எந்த ஒரு விசேஷம் நடத்த நினைத்தாலும் எம்.ஜி.ஆரைக் கலந்தாலோசிந்துத்தான் முடிவெடுப்பார்.

ஒரு நாள் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் வந்தார் வேலுமணி.

“என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?”

“அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….”

“சொல்லுங்க!”

“பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழை! அது மட்டும்மல்லாம, அம்மா-அப்பா இல்லாத அநாதை! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குது அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..”.

என்ன முதலாளி ஸ்டேட்டஸ்? இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”

மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார். வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள்.

அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லியவர், காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோம் சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்றார் பொன்மனச்செம்மல்.  அவரின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

“கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடத்துணிந்தோமே! முகம் தெரியாத முகவரி அறியாத யார் பெத்த பிள்ளைக்காகவோ பரிஞ்சு பேசி, மகளாகத் த்த்தெடுக்க முன்றவந்திருக்கிறாரே! ஆனா நம்ம பெத்த பிள்ளை காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட கைவிட நினைச்சோமே..’ என்று மனம் உருகி மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு வேலுமணி விடைபெறுகிறார்.

திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. காரில் வரும் பொழுதுதான், நின்று போகவிருந்த தனதுதிருமணம், மக்கள் திலகத்தாலதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற விவரம் தோழிகள் மூலம் மணப்பெண் சாந்திக்குச்சொல்லப்படுகிறது. அவ்வளவுதான், மணமேடைக்குச்செல்ல வேண்டிய மணப்பெண் சாந்தி, காரைவிட்டு இறங்கியவுடன் பொன்மனச் செம்மலை நோக்கி ஓடி வருகிறார். அதுவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரைத் தனக்கு அப்பாவா பார்க்கிறோமே என்கிற பரவசத்தில் அப்படியே சாஷ்டாங்கமாக்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.

அந்த குணம்தான் எம்ஜிஆரை மக்களின் மனதில் அணையா விளக்காக வைத்திருக்கிறது.

  • மனங்களில் வாழ்கிறார்

உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது அவரது மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *