சு. கோதண்டராமன்.

 

சிரத்தை

Sambrani Powder2

பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி இல்லாமல் சிரத்தை வராது. சிரத்தை இல்லாத பக்தி பயன் தராது.

சிரத்தை என்பது என்ன? இது பல அம்சங்கள் அடங்கியது.

1. ஒரு செயல் செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் நோக்கம் என்ன, அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

2. அதை எப்படிச் செய்வது என்று அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. யாரிடம் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அவரை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அவரிடத்தில் உள்ள நம்பிக்கை கடைசி வரை நிலையாக இருக்க வேண்டும். பாதி வேலையில் இருக்கும்போது நாம் செல்லும் பாதை சரியானது தானா என்ற சந்தேகம் வர இடம் கொடுக்கக் கூடாது.

(சிரத்தையின் முக்கிய பகுதி இந்த நம்பிக்கை என்பதால் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் சொல்லப்படுகிறது. சிரத்தை என்பது விடாத நம்பிக்கை. நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார் பாரதி. ஆனால் நம்பிக்கை தவிர வேறு சில அம்சங்களும் கொண்டது சிரத்தை.)

4. அவர் சொன்னபடி, இலக்கை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விடாமல் கவனத்துடன் செய்ய வேண்டும்.

5. அதற்கு மாறான செயல் எதுவும் செய்யக் கூடாது.

6. இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால் மனம் தளராது தொடர்ந்து முயல வேண்டும்.

சிரத்தையோடு படிக்கும் மாணவன் தன் இலக்கு 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது என்பதை எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்கிறான். எதை எதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் சொன்னபடி திட்டமிடுகிறான். அவர் மேல் முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்ன சொல் தவறாது படிக்கிறான். எல்லா முயற்சிகளையும் செய்கிறான். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறான். கவனத்தைச் சிதறடிக்கக் கூடிய வேலைகளைப் புறக்கணிக்கிறான். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறான். அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளால் மனம் தளராமல் முழு கவனத்துடன் படிக்கிறான்.

இத்தனையையும் மனதில் கொண்டு ஒரு செயலைச் செய்தால் அது சிரத்தையுடன் செய்யப்பட்டதாகிறது. சிரத்தையுடன் செய்யப்பட்ட செயல்கள் வெற்றி பெறும். சில சமயங்களில் தோல்வி ஏற்பட்டாலும் அதில் ஏற்பட்ட படிப்பினை அடுத்த முறை வெற்றி பெற நிச்சயம் உதவும். சிரத்தை இல்லாமல் செய்யப்படும் காரியம் பலன்  தராது. முயற்சி வீணாகும். மனதுக்கும் உடலுக்கும் துன்பம் தரும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சிரத்தை பலன் தரும். சிரத்தை இல்லாதவர் வாழ்வு சீரழியும்.

ரிக் வேதத்தில் 10வது மண்டலம் 151வது சூக்தம் ச்ரத்தா சூக்தம் எனப்படுகிறது. சிரத்தை என்னும் பண்பு இதில் போற்றப்படுகிறது. அதில் சொல்லப்பட்ட கருத்துகளைப் பார்ப்போம்.

அக்னியை மூட்டுவதும் ஆகுதி அளிப்பதும் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். பிறருக்குக் கொடுப்பதை சிரத்தையோடு கொடுத்தால்தான் பலன் கிடைக்கும். தேவர்களும் தங்களை விட வலிமை வாய்ந்தவர்கள் மீது சிரத்தை கொண்டிருக்கிறார்கள். சிரத்தை  செல்வம் தரும்.

இப்படிப்பட்ட சிரத்தையை அடைவது எப்படி? அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தா தேவியைத் தியானித்தால்தான் சிரத்தை வளரும் என்கிறது வேதம். அதாவது சிறு செயல்களைச் சிரத்தையுடன் செய்ய முயன்றால் அதுவே பெரும் செயல்களிலும் சிரத்தையை வளர்க்கும். இதைச் சிறு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.

சடங்குகள்:

சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன. எப்படி என்று பார்ப்போம்.

சந்தியா வந்தனம் முதலாக எத்தனையோ சடங்குகளை நாம் அனுசரிக்கிறோம். ஒவ்வொன்றிலும் பல மந்திரங்கள் உள்ளன. பல செயல்கள் அடங்கி உள்ளன. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு செயலோடு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். அவற்றுடன் மூச்சும் இணைய வேண்டும்.

துவக்கத்தில் இதை எதற்காகச் செய்கிறோம் என்பதை நம் மனதுக்குள் நாமே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். அதுதான் சங்கல்பம் எனப்படுகிறது.

நாமாகவே விரும்பி நம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது.

சிராத்தம் என்பதற்குச் சிரத்தையுடன் செய்யப்படுவது என்பது பொருள். எல்லாச் சடங்குகளும் சிரத்தையாகத்தான் செய்யப்படவேண்டும். ஆனால் இறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் செய்யப்படும் சடங்கு மட்டும் சிராத்தம் எனப்படுவது ஏன் என்றால் இதில் கர்த்தா மட்டும் அல்லாது அவனது குடும்பத்தவரும் செய்து வைக்கும் புரோகிதரும் மற்றவர்களும் கூட சிரத்தையை அனுசரிக்க வேண்டும். இன்ன மாதிரித் தூய்மை செய்து கொள்ள வேண்டும், இன்னின்ன பொருள்களைப் பயன்படுத்தலாம், இன்னின்ன பயன்படுத்தக் கூடாது, இன்ன மாதிரி உடை அணிய வேண்டும், இலையின் நீளம் இவ்வளவு இருக்க வேண்டும், இன்னின்ன திசைகளில் உட்கார வேண்டும், குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுப்பாடுகள் இதில் உள்ளன. இது பல பேருடைய சிரத்தைக்கும் ஒரு சோதனைக் களம்.

ஜப்பானியர் டீ குடிப்பதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதில் செய்யப்படும் முயற்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் பல்வேறு சடங்குகளும் அது போன்ற மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் தாம். எல்லா வைதீகச் சடங்குகளிலும் ஏதோ சில வேத மந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பொருளைப் பார்த்தால் சடங்குக்கும்  சொல்லப்படும் மந்திரத்தின் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இராது.

உதாரணமாக, தர்ப்பண மந்திரத்தில் வரும் மதுவாதா ருதாயதே என்ற மந்திரம் “என் கொள்ளுப் பாட்டனாரே, திருப்தி அடைவீர்களாக” என்று பொருள் தருவது அல்ல. இது தர்மத்தை அனுசரிக்கிறவனுக்கு உலகமே இனிமையாக உள்ளது என்பதைக் கூறுவது.

சிராத்தத்தின் போது இலை போடப்படும் இடத்தைத் தர்ப்பையால் கூட்டும்போது சொல்லப்படும் மந்திரம், “இங்கிருந்து போய்விடுங்கள், இந்த இடம், இறந்து போன இந்த மனிதனுக்காகப் பித்ருக்கள் ஒதுக்கியது, யமன் இதை ஒளியாலும் நீராலும் அலங்கரித்துள்ளார்” என்பது.

தெய்வத்துக்குச் சாம்பிராணி போடும் போது சொல்லும் தூரஸி தூர தூர்வந்தம் என்ற மந்திரம் என் பகைவனை அழி என்று வேண்டுவது. பரிஷேசனத்தில் சொல்லப்படும் மந்திரம் ஸவிதா என் புத்தியைத் தூண்டட்டும் என்ற வேண்டுகோளையும் ருதத்துடன் ஸத்யத்தை சேர்த்து உணர்ந்து வாழ்வோமாக என்ற அறிவுரையையும் கொண்டது.

எதற்காக, இப்படி சம்பந்தமில்லாத வேத மந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்? உண்மை என்னவென்றால், வேத மந்திரங்களின் பொருள் முக்கியமல்ல. அவை சிரத்தையோடு கற்கப்பட்டவை, சிரத்தையோடு பாதுகாக்கப்படுபவை, சிரத்தைப் பயிற்சி பெற்ற வைதிகர்கள் அதை உச்சரித்து வழி நடத்துகிறார்கள் என்பதால் நமக்கும் சிரத்தை ஏற்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் வெவ்வேறு மந்திரங்களை வெவ்வேறு சடங்குகளுடன் இணைத்து வைத்தனர்.

வேதம் பயிற்றுவிக்கப்படும் முறை பற்றி நாம் நன்கு அறிவோம். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்ததால் தான் வேதம் இன்றளவும் உருமாறாமல் இருக்கிறது. கடுமையான சிரத்தைப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவருவதால் தான் எல்லா வைதிகச் சடங்குகளிலும் புரோகிதர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடக்கின்றனர்.

புரோகிதரின் பொறுப்பு மிகப் பெரியது. ஒரு சமுதாயத்தையே வழி நடத்தி முன்னேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் சிரத்தைக் குறைவு ஏற்பட்டால் சமுதாயம் முழுவதும் பாதிக்கப்படும். தானும் சிரத்தையுடன் நடந்து கொண்டு மற்றவர்களுக்கும் சிரத்தையை ஏற்படுத்துவது தான் அவர்களது முதல் லட்சியம், பணம் சம்பாதிப்பது அல்ல.

சமிதா தான மந்திரம், அக்னியே எனக்குச் சிரத்தையைக் கொடு என்று வேண்டுகிறது. சிறு வயதிலிருந்து சந்தியா வந்தனம், சமிதா தானம் முதலானவற்றின் மூலம் சிரத்தைப் பயிற்சி ஏற்பட்டுவிட்டால் அவன் வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுகிறான். பிராமணர்களுக்கு என்று கடவுள் விசேஷமாக அறிவைக் கொடுக்கவில்லை. அவர்களது வளர்ப்பு முறையில் இந்தச் சிரத்தைப் பயிற்சி தான் அவர்களது அறிவைச் சுடர் விட்டு விளங்கச் செய்கிறது. தந்தை சந்தியா வந்தனத்தைக் கைவிடுவதன் மூலம் தன் சிரத்தைக் குறைவைக் காண்பித்தால் அவரையே முன் மாதிரியாகக் கொண்டு பையனும் கைவிடுகிறான். சமுதாயம் சீரழிய இது காரணமாகிறது.

தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அடக்கு முறையால் அமல் நடத்தப்படுகின்றன, ஆசிரியர் இல்லாத நேரத்தில் கட்டுப்பாட்டை மீறும் ஆசை ஏற்படுகிறது. வீட்டில் வைதிகச் சடங்குகளின் கட்டுப்பாடுகள் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் அவற்றை மீறும் துணிச்சல் ஏற்படுவதில்லை. அவற்றில் பயம், பக்தி, சிரத்தை மூன்றும் கலந்து இருப்பதால் அவை மாணவர்களின் ஒழுக்கத்தை நல்ல முறையில் வளர்க்கின்றன.

 

 

படம் உதவி: https://anticastregoneria.wordpress.com/blog/page/22/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.