இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(142)

சக்தி சக்திதாசன்.

 

அன்பினிய வாசக நெஞ்சங்களே !

உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள். மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு இடம்பெறும் வாரத்தில் உங்களை இம்மடலின் மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன்.

மார்ச் 8ஆமாம் மார்ச் மாதம் 8ம் திகதி மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எம் வாழ்விலே அனைத்து வடிவங்களிலும் மகளிர் எம்முடன் இணைந்தே நடக்கிறார்கள்.

அன்னையாக, சகோதரிகளாக, இல்லத்துணைவியராக, இதயம் கவர்ந்த காதலிகளாக, அன்பார்ந்த தோழிகளாக மகளிரின் பாத்திரங்கள் எம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இன்றைய நூற்றாண்டிலே உலகின் பல பாகங்களிலும் மகளிரிருக்குரிய உன்னதமான இடம் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்கள்.

ஆனால் 17ம் நூற்றாண்டிலே வாக்குரிமை அற்றவர்களாக, இரண்டாந்தரப் பிரஜைகளாக அவர்களுக்குரிய … அவர்களுகுரித்தான மதிப்பு கெளரவம் என்பன கொடுக்கப்படாத காலம்.

அடிமைவாழ்வு, மனிதனை மனிதன் அடிமை கொண்டு அடக்கி வாழப்பண்ணுவது எனும் முறை மிகவும் சாதாரணமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்த காலம்.

மேலைத்தேசங்களில் குறிப்பாக … இங்கிலாந்து, அமெரிக்க போன்ற நாடுகள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களை அடிமைப் படுத்தி வாழ்ந்த காலம்.

அத்தகைய காலக்கட்டத்திலே தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த அமெரிக்க ஆப்பிரிக்க நாட்டவர்கள் மத்தியில் பெண்கள் பலரும் இருந்தது எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.

பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் மத்தியிலிருந்து இத்தகைய கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களே அருகியிருந்த காலத்தில் அடிமை வாழ்விற்கெதிராக குரல் கொடுத்த ஒரு அமெரிக்க வெள்ளை இனப் பெண்மணியை ஏறெடுத்துப் பார்ப்பது இம்மடலின் நோக்கமாகிறது.

harriet-Beecher-Stowe2“ஹாரியட் பீச்சர் ஸ்டோ” (Harriet Beecher Stowe), யார் இந்த ஹாரியட் ?

அமெரிக்க வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு அரிய எழுத்தாளர் தான் இந்த ஹரியட்.

1811 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் (Conneticut) எனும் இடத்திலுள்ள லிச்வீல்ட் (Lichfield) எனும் இடத்தில் ஒரு மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தார்.

பெண்கள் பாடசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இவர் பல பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தனது 21வது வயதில் ஒஹையோ எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு இலக்கிய வட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இலக்கிய வட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சனைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1836ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி “கல்வின் எலிஸ் ஸ்டோ” (Calvin Ellis Stowe) என்பவரை மணம் புரிந்தார். இவரது கணவர் ஸ்டோ அடிமைத்தளையை உடைத்தெறியும் பிரச்சாரப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.

இவரது கணவருடன் இவரும் அப்போதைய அடிமை வாழ்வில் இருந்து ஒளிந்து வாழும் ஆப்பிரிக்கர்கள் வாழும் நிலக்கீழ் ரெயில்பாதையில் இணைந்து கொண்டனர்.

இத்தைகைய அனுபவங்களின் மூலம் அடிமை வாழ்வின் கொடுமைகளைப் புரிந்து கொண்ட இவருக்கு, 1833ம் ஆண்டு கெண்டகி எனும் இடத்தில் நடந்த அடிமை ஏலத்திற்கு சென்று பெற்ற நேரடி அனுபவம் உள்ளத்தில் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது.

மனிதனை மனிதன் அடிமை கொண்டு ஏலம் போடும் நிகழ்வின் அனர்த்தம் அவருக்கு அடிமை வாழ்வினை உடைக்கும் பிரச்சாரத்திற்கு உத்வேகம் கொடுத்தது.

1851ம் ஆண்டு இவர் தனது படைப்பான “அங்க்கிள் டாம்ஸ் கேபின்” (Uncle Tom`s Cabin) எனும் தொடர் கட்டுரையின் முதலாவது தொடரை “நேஷனல் எரா” (National Era) எனும் பத்திரிகையில் எழுதினார்.

1852ம் ஆண்டு இத்தொடர் மிகவும் பிரபலமடைந்ததால் அது ஒரு நூலாக வெளிவந்தது. இந்நூலின் 300,000 பிரதிகள் வெளியான முதல் ஆண்டிலேயே விற்பனையாகியது.

lincoln_meets_stoweஇவரது இந்நூல் அடிமை வாழ்வின் கொடூரத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தது. மனிதர்களை இயந்திரங்களாக உபயோகித்து தமது வாழ்வின் வசதிகளை பெருக்கிக்கொள்ளும் வெள்ளை முதலாளிகளினதும், நிறவேற்றுமை கொண்ட உள்ளங்களினதும் மனக்கருமையை வெள்ளைத்திரையில் படம் போட்டுக் காட்டியது.

இவரது இந்நூல் அடிமைத்தளையை உடைக்கப் பாடுபடும் உன்னத மனிதர்களுக்கு ஒரு மாபெரும் உந்து சக்தியைக் கொடுத்தது. அடிமைகளை விடுவிக்க வேண்டும் எனும் கருத்து மேலோங்கியிருந்த அமெரிக்காவின் வடபகுதியில் இவரது நூலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் நிறவேற்றுமை மிகுந்திருந்த அமெரிக்காவின் தென்பகுதியில் இந்நூல் மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகியது.

அடிமைத்தளையை உடைத்தெறிவதற்கான உள்நாட்டு யுத்தம் அமெரிக்காவில் முடிவுற்றதும் 1862ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி ஹாரியட் அவர்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தார்கள்.

20 நாவல்களுடன் பல சமூகப் பிரச்சனைகளை முன்னெடுக்கும் தொடர்களை எழுதிய இந்த சமுதாய வீராங்கனை தனது 85 வது வயதில் காலமானர்.

இவருக்கு “பெரியதோர் சமுதாயப் புரட்சியை ஆரம்பித்த சிறியதோர் பெண்மணி” எனும் அடைமொழி கொடுக்கப்பட்டது.

abraham-lincoln-

இன்றைய இந்தக் காலகட்டத்திலே மகளிர் தினத்தைக் கொண்டாடும் எமக்கு கடந்த கால வரலாற்றில் மகளிர் செய்த அரும்பெரும் சாதனைகள் புரிந்தால் மட்டுமே இன்றைய சாதனை வீராங்கனைகளுக்கு தகுந்த ஆதரவு கொடுக்கலாம்.

இந்த மகளிர் தினத்தில் இதை நமது மனதில் ஆழமாக நிறுத்திக் கொள்வது அவசியமானது.

 

 

 

 

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.