எம். ரிஷான் ஷெரீப்

பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென
வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா?

எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட
வேலிகளற்ற தரிசு வயலது
பரந்து விரிந்த எம் பண்டைய பூமி
வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த
சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்!

என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது
நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து
தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி
பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க
மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி
நானதை வளர்த்து வந்தேன்
அந்நிய நகரத்தில் நீயும் நானும்
அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி
அது நன்கு தழைத்திருந்தது
தேசம் விட்டகன்ற நாளில்!

அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய
கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்
குளிர்ச்சியைத் தந்திருக்கும்
கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்
கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்
சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென
உழுதபின் வாடிக் களைத்த மூத்தவர்கள்
அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்

இன்று
சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்
தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்
பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்!
எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன… இப்போது
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
அதன் உடலிலின்னும்
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
கோடை காலத் தூரிகை!

அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி
அந்திப் பேய் வெயில்
மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென
”வான்கோ’வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்
ஒருங்கே கலந்த நிலம்” என்றாய்
தங்க பூமியின் ஆகாயத்தில்
செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.