இருந்தாலும், மறைந்தாலும்… பேர் சொல்ல… இவர் போல யாரென்று ஊர் சொல்ல…

ச.சசிகுமார்

வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி…

10409312_1580085308928274_4264682109182792801_n
AVM R.R. ஒலிப்பதிவுக் கூடம். வருடம் 1968. அந்த கல்லூரி இளைஞனின் மனசுக்குள் அடுக்கடுக்காய் கேள்விகள்.தொலைவில் கண்ணாடி அறைக்குள், பெரிய பாடகர்களின் அடுத்த பாடல் பதிவிற்கான ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.அந்த இளைஞன் சமயம் கிடைத்தால் கேட்க நினைத்த கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டான்… அவர் தனியாக கிடைத்தால் கேட்டு விடலாம்… தூரத்தில் தொழில் நுட்பக் கலைஞர் கூட்டத்தின் நடுவே அவர் முழுச் சந்திரனாக புன்னகைத்து பேசிக்கொண்டு… போன வாரம் வரை உலுக்கி எடுத்து விட்ட “Typhoid” காய்ச்சலின் மிச்சம் இன்றைய பாடல் பதிவின் சந்தோஷத்தில் கரைந்து போயிருந்தது.

இளைஞனுக்கு வியர்த்துக் கொட்டியது… நான்கைந்து மணி நேர பாடல் பதிவு முடிந்த திருப்தியும், அசதியும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.அறைக்குத் திரும்பலாம்.அடித்துப் போட்ட மாதிரி தூங்கலாம் அதற்குள் அவரைப் பார்த்து பேசிவிட வேண்டும். நிலா மெல்ல கூட்ட மேகத்திலிருந்து வெளிவந்தது…மெல்ல…அவரது வலது கை கைகுட்டையை எடுத்து நெற்றியை ஒற்றிக் கொண்டது… கூட்டத்தை விட்டு விலகி தனியாக…நடந்து… ஒலிப்பதிவு அரங்கை நோக்கி… அவர் நெருங்கி வர, இளைஞனுக்கு தொண்டை வறண்டு போனது. புன்னைகைக்கிறார்,” தம்பி இன்னும் கிளம்பலியா? சாப்பிட்டீங்களா? வாங்க சாப்பிடலாம்…” இளைஞனுக்கு வார்த்தை வற்றிப் போனது. “Sir… உங்க கிட்ட பேசணும்னு தான்…” மறுபடியும் புன்னகை.” நல்ல குரல் தம்பி… நல்லா பாடினீங்க… என பேசணும் சொல்லுங்க…”

“Sir…தயவு செஞ்சு தப்பா நெனைக்காதீங்க…” ஆரம்பித்து இளைஞன் கேட்கக் கேட்க… அவருக்கு வாய் கொள்ளாத புன்னகை. நெருங்கி வந்து அந்த இருபத்து இரண்டு வயது இளைஞனின் தோளில் கைப்போட்டு நடந்தார். கேட்டு முடித்த இளைஞனின் கண்கள் கலங்கி இருந்தன…

“தம்பி… இந்தப் பாட்டை கிட்டத் தட்ட மூணு மாசமா ஒத்திகை பார்த்து பாடிக்கிட்டு இருக்கீங்க… கூட பாடுறது பெரிய பாடகி சுசீலா… KV மஹாதேவன் இசை… எவ்வளவு கனவு இருந்திருக்கும்? காலேஜ்ல எத்தனை பேர்கிட்ட பெருமையா சொல்லி இருப்பீங்க? உங்களுக்கு Typhoid காய்ச்சல் வந்ததனால அந்த வாய்ப்பு தட்டி போக என் மனசு கேக்கல தம்பி…ஒரு வேளை இந்த பாட்டை வேற யாரையாவது வச்சு முடிச்சிருந்தா, மத்தவங்க என்ன நெனைப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன்…உங்க மனசு எவ்வளவு கஷ்டப் படும்னு யோசிச்சுப் பாத்தேன்…ஜெய்ப்பூர் ஷூட்டிங் தள்ளிப் போனாலும் உங்களுக்காககாத்திருப்பது தான் நியாயம்னு முடிவு பண்ணேன் தம்பி… உண்மையிலேயே, நீங்க அந்த காத்திருப்புக்கு நியாயம் செஞ்சிட்டீங்க… நல்ல உயரத்துக்கு வருவீங்க… தம்பி…” அவர் பேசப் பேச…இளைஞனுக்கு கண்ணீர் கண்களை நிறைத்து கன்னங்களில் உருண்டன. அவர் கைகளைப் பற்றிக்கொண்டான்.

10268658_1379209069029158_3744620627015589432_n

“மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்…
அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை… ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்
இறைவனும் தந்ததில்லை”

—-அன்று மீசை துளிர்விட, ஒடிசலாக கண்ணீர் கலங்க RR ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர் போன திசை நோக்கி வணங்கி நின்ற 20 வயது இளைஞன் இன்று எழுபது வயது சாதனையாளர். தமிழ்த் திரை இசையின்40 ஆண்டுகால அடையாளக்குரல்…S P பாலசுப்ரமணியம். “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா” — அடிமைப் பெண் பாடல் ஒலிப்பதிவு அனுபவம் சொல்லி முடிப்பதற்குள் கண்களும், குரலும் உணர்வில் ஆழ்கின்றன…

M.G.R. மருதூர் கோபால ராமச்சந்திரன்…

· கடந்த நூற்றாண்டின் அதிசயம்.
· எழுபதாண்டு கால வாழ்க்கை.வெறும் இருபத்தைந்தாயிரத்து ஐநூறு நாட்கள் வாழ்ந்த, குறைந்த மனித வாழ்நாளின் அதிக பட்ச, உச்ச சாதனைகளை புன்னைகை மாறாமல் நிகழ்த்தி, புன்னகை மாறாமல் மறைந்து விட்ட அதிசயம்.
· கை வைத்த இடத்தையெல்லாம் பொன்னாகவும், கால் வைத்த இடத்தையெல்லாம் இமயமாகவும் மாற்றிக் காட்டிய ஆச்சர்யம்.
· சிறுவயதில் வாசித்த படக் கதைகளில் வரும் சாகாசக் கார கதாநாயகர்களின் பிம்பம் கலையாமல் தமிழ் மக்கள் மனத்தை வசியம் செய்த பேராளுமை…
· வாழ்நாள் முழுதும் அள்ளிக் கொடுப்பதையே முழுநேரமாய் செய்திருந்தால் கூட இத்தனை கதைகள் இவரைப் பற்றி சாத்தியமா என்பது விடையற்றதொரு வினா…
· சரித்திர கால தமிழ் இளவரசனாக திரையில் தோன்றி நாம் கண்களுக்குள் நிறைந்த வீரம்…
· சமகால மன்னனாக தமிழ் மனங்களை நிறைத்த கம்பீரம்…
· சேரனுக்கு உறவெனினும், செந்தமிழர் நிலவு என என்றென்றும் தமிழ் வானில் உலவும் பவுர்ணமி…

1980 களின் தொடக்கம். கடலூர் கமலம் திரை அரங்கம். ஒரு மாலை வேளை. பஞ்சாமிர்தம் குச்சி ஐஸ் விரல் இடுக்குகளில் பிசு பிசுத்து, முழங்கை வரை வடிகிற பதினோரு வயது சிறுவனாக பெருங்கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன்.அப்பா எப்படியும் படம் பார்க்க டிக்கட் வாங்கி விடுவாரா?? மனம் பதைக் கிறது… வரும் போது அப்பா எதிர் காற்றில் சைக்கிள் மிதித்தவாறே ” படம் வந்து பதினெட்டு வருசமாகுது… நாலாவது தடவையா இங்க போட்டிருக்காங்க…” அப்பா.. வாத்தியாரின் மிகப் பெரிய ரசிகர்.தலைக்கு மேல் பதாகையில் நெற்றியில் புரளும் சுருள் முடி துலங்க மக்கள் திலகம் புன்னகை செய்கிறார். மாலை நேரக் கடற்காற்றில் பதாகை மெல்ல அலையென அசைய புரட்சித் தலைவரின் புன்னகை தீர்க்கமாக மனத்தில் வந்தமர்கிறது.
“சசி… வா போகலாம்” அப்பா முகத்தில் ஏமாற்றம்.

“அப்பா…டிக்கட்…????”
“…ம்ம்… நாளைக்கு வரலாம் டிக்கட் கெடைக்கல..”

தொண்டை அடைக்க…”அப்பா…ட்ரை பண்ணிப் பாருங்கப்பா…” பதாகையில் நாகேஷின் முகம் அஷ்ட கோணல் காட்டி அலைக் கழிக்க அப்பா…”வாடா படம் பாக்க போகலாம்…” சட்டைப் பையிலிருந்து கைகளில் டிக்கெட் எடுத்து சிரிக்கிறார்.”தியேட்டர் மேனேஜர் தெரிஞ்சவர் தான்…டிக்கட் வாங்கிட்டேன்”
சந்தோஷம் பொங்க அண்ணாந்து பார்க்கிறேன்…

“ஆயிரத்தில் ஒருவன்”

பதாகையில் மக்கள் திலகம் கண்சிமிட்டி சிரிக்கிறார்… எனக்கு மட்டும் பிரத்தியேகமாக… அப்பா கையைபிடித்து அவசரப் படுத்துவதையும் தாண்டி நின்று பார்க்கிறேன்… அண்ணாந்து பார்க்கிறேன்…

பார்க்கிறேன்… அன்று தொடங்கி கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அலுக்காமல், ஆச்சர்யம் கலையாமல், ஆர்வம் குலையாமல் குழந்தையாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாழ்வின் கால வெளியில் எத்தனையோ பழையன கழிந்தும், புதியன புகுந்தும், நினைவுகள் உதிர்ந்தும், உறவுகள் மலர்ந்தும் இருந்தாலும், MGR என்ற தனி மனிதனின் நினைவுகளும்,அவர் பற்றிய வியப்பும், அவர் அளித்த நம்பிக்கைகளும் என்னைத் தொடந்து கொண்டிருப்பது அவர் மீது கொண்ட ஈர்ப்பைத் தாண்டிய நேசம்.

வாசித்த இலக்கியமும், புதினங்களும், பின் நவீனத்துவமும், மாய யதார்த்த புனைவுகளும், புதுமைப் பித்தன், லா.ஸா.ரா, தி.ஜா, கு.பா.ரா, நா.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்….இரா.முருகன்… இன்னபிற இலக்கிய ஆளுமைகளின் தாக்கமும், MGR ஐ என்னிலிருந்து விலக்கவேயில்லை. எழுத்தாளர் கலாப்ரியா ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் தன்னை நெல்லை MGR ரசிகர் மன்றத்தில் செயல்பட்ட ஒரு அடிப்படை ரசிகனாகவே முன்னிறுத்தியிருந்ததைப் போல, MGR என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் என்னை என்றும் குழந்தையாகவே உணரச் செய்கிறது. கடந்த பதினைந்து வருட காலத்தில் உலக சினிமா மெல்ல அறிமுகமாகி, எனக்கு திரைப்படத்தின் வெவ்வேறு ரசனைச் சாளரங்களைத் திறந்து விட்டபோதிலும்,

நேத்துப் பூத்தாளே ரோஜாமொட்டு… பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு…”

என அறுபது வயது MGR, பஞ்சகஜம், சிலுக்கு ஜிப்பாவில் லதாவைச் சுற்றி உரிமைக்குரல் கொடுப்பது தொலைக்காட்சியில் ஒலிப்பதை நின்று ரசித்து, மகிழாமல் இன்றுவரை என்னால், தாண்டிப் போக முடிந்ததே இல்லை.

“தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாகக் கொடுத்தே பழக்கப் பட்டவன் இந்த மணிமாறன்”
–என்ற குரல் கேட்கும் போதெல்லாம் போகிற போக்கில், லட்சம் நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துச் செல்கிறது.

“புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ?
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?”

–என்ற அறைகூவல் ஒலிக்கும் போதும், தூண்களுக்கு இடையில் தாவி அவர் எதிரிகளை தாக்கும் போதும் மனசு குழந்தையென இன்று வரை குதூகலித்து மகிழ்கிறது.

வருடங்களைத் தாண்டி என்றும் தொடர்கிற இந்த நம்பிக்கை, இந்த மகிழ்ச்சி, இந்த குதூகலம்… இது என்ன வகை ஈர்ப்பு? என்ன வகை ரசனை? என்ன வகை உளவியல்? என்னைப் போன்ற கோடிக் கணக்கான தமிழ் மனங்களை வென்றெடுத்து சிறைப் படுத்தி வைத்திருப்பது எது?

உலகப் பெரு நடிகர்களின் வரிசையில் தவிர்க்க இயாலாத இடம் பெற்ற சிவாஜிகணேசனை, இலகுவாக இவருக்குப் பின் வரிசையில் வைக்க, மக்களை இயக்கியது எது?

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதராக நிலைத்த, பேச்சாற்றலும், சொலல் வல்லனுமாகிய கலைஞரை சோர்வுறச் செய்து எளிதாய் இகல் வெல்ல வைத்த — இவரின் ஆற்றல் எது?

நாடகத் தன்மைக் குறைந்த இயல்பான நடிப்பா?

பட்டுக்கோட்டை, கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளும், TMS -ன் குரலும், அதற்கேற்ற இவரின் அசைவுகளும் காட்சியமைப்புமா?

திட்டமிட்டு, அளந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் முன்னேறிய நேர்த்தியா?
தான் ஈடுபட்ட திரைத்துறையில் சகலமும் கற்றுத் தெளிந்த ஈடுபாடா?
தான் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் கொண்டிருந்த கண்டிப்பான ஆளுமையா?
எல்லா இடங்களிலும் வெற்றி பெற விழைந்து செயல்படுத்திய மதிநுட்ப ராஜ வியூகமா?
தனது குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே வெளிப் படுத்திய லாவகமான தலைமைக்குண தந்திரமா?
இவை அனைத்தும் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
இவற்றைத் தாண்டிய ஒரு தகுதி…
இவற்றுக்கும் மேலான ஒரு உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான தகுதி…
எது?
அன்பு…
தன்னிலை மறந்த பேரன்பு…
…சக மனிதரிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா பேரன்பு…

நான்கைந்து வருடங்களுக்கு முன்… MGR -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது… ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்… தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக… மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்… மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது… ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த MGR, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல…மெல்ல..நெருங்கி MGR அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே,புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். MGR அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன… கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் MGR -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன… அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன… மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன… சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்… கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற MGR…

உடல் முழுக்க சிலிர்க்கிறது… அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
மரபு தாண்டிய பேரன்பு… தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்…. ஈழம் மலர உதவிக் கரம் நீட்டிய மாண்பில் தழைத்திருந்த மனித நேயம்…

மனித நேயமும், அன்பும் தான் அவர் வாழ்ந்த நாட்களின் கடைசி நாள் வரை தமிழ் மக்களின் மன்னாதி மன்னனாக வலம் வரச் செய்தது. மறைந்தாலும் மக்கள் மனங்களில்… பேரரசனாக இன்றும் தொடர காரணம் மனிதர்களிடத்தில் அவர் கொண்ட பேரன்பைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?

“பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்”

–என்ற பாடல் வரிகள் ஒலிக்க படத் தொகுப்பு நிறைவுற்று நெடுநேரமாகியும்… எழுந்து சென்று பணிகளைத் தொடர இயலாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
மனசுக்குள் நினைவுகள் கலவைகளாக புரண்டன…

“அதோ பாரு… செக்கச் செவேல்னு… பக்கத்து வீட்டு விஜயா அக்கா விரல் காட்டிய திசையில் பார்க்கிறேன்… ஜனத் திரள்… மக்கள் வெள்ளம்… கடலூர் கெடிலம், அண்ணா பாலம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.”அதோ பாரு சசி… வேன்ல நின்னு கும்பிட்டுகினே.. போறாரு…” உயரம் போதவில்லை… பதினோரு வயது சிறுவனான எனக்கு எக்கி நின்று, நின்று… கால்கள் வலிக்கின்றன… எப்படியாவது பார்த்து விட முயன்று தோற்று போகிறேன். அழுகை வருகிறது… “போயிட்டாரு…தூரமா போயிட்டாரு…”விஜயா அக்கா சொல்ல ஏமாற்றம்… .”விடு சசி …தலைவரு அடுத்த தடவை வரும் போது இட்டுகினு வந்து கிட்டக்க காட்றேன்… சுமதி… தலைவரு இன்னா கலரு பாத்தியா? வெயிலுக்கும் அதுக்கும் சும்மா தங்கம் மாதிரி தக தகன்னு ஜொலிக்கிறாரு…”போக மனசே இல்லாமல் கலைந்து, அக்கா விரல்களைப் பற்றி கூட்டத்துடன் கரைந்து போகிறேன் . அதன்பின்னர் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் உடல் நலம் குன்றி அமெரிக்க ப்ரூக்லின் மருத்துவமனை …சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… மொத்த தமிழகமும் ஒரு உயிருக்காக த்த்தமது கடவுளிடம் கையேந்திய வரலாற்று நிகழ்வு… மற்றுமோர் முறை வெற்றி பெற்று தமிழக முதல்வராக அமெரிக்காவிலிருந்து திரும்பிய தருணம்….தொடர்ந்த உடல் நலக்குறைவால் அவர் சோர்வுற்று இருந்த நாட்களென… அவகாசமின்றி, ஆண்டுகள் கடந்து போயின.

24.12.87 மார்கழி மாதக் காலை வேளை 5 மணி இரவுப் பணி முடித்து அப்பா வீடு திரும்பி சைக்கிள் நிறுத்தும் ஓலி கேட்டு எழுகிறேன்…குளிர் பனியைத் தவிர்க்க மாப்ளர் சுற்றியாவாறு அப்பா வாசல் திண்ணையில் அமர்ந்து கொள்கிறார்… நானும் மெதுவாக அவரருகே… இரும்பு கேட்டின் கம்பிகள் குளிர்ந்து கிடக்கின்றன… அடுத்தத் தெருவின் பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியில் சீர்காழி ஆச்சரியமான தணிந்த குரல் , “மயிலாக நான் மாற வேண்டும்… வள்ளி மணவாளன்…என் தோளில் இளைப்பாற வேண்டும்…” அம்மா வாசலில் கோலம் போடத் தொடங்க… அப்பவும் நானும் துணையாக திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்.

பால்காரர் அடிக்கும் மணி சற்று நெருங்கி வர , பால் குவளையைக் கொண்டு வாசலுக்கு வருகிறேன்.
பால்காரர் வருமுன்…”தினத்தந்தி” பெயர்ப் பலகை வைத்த சைக்கிள் வீடு வாசலில் தட தடக்க வந்து நிற்கிறது… சைக்கிளில் இருந்து இறங்கிய காக்கி உடை அணிந்த அலுவலக உதவியாளர் மெல்ல தயக்கத்துடன் அப்பாவிடம் சென்று ஏதோ சொல்லுகிறார்… அப்பா திடுக்கென எழுந்து நிற்கிறார். அலுவலக உதவியாளர் ஏதோ கேட்க அவர் பதில் சொல்கிறார். அப்பா விரைவாக வீட்டினுள் செல்ல,உதவியாளர் சைக்கிள் திரும்ப விரைகிறது… பால்காரர் ஊற்றிய பாலின் இளம் வெதுவெதுப்பு கைகளில் உணர்ந்த வேளை… அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து, சைக்கிள் ஸ்டாண்டை தட்டிவிட்டு “கிட்டு…அவசரமா ஆஃபீஸ் போகணும்…” அம்மாவும் நானும் சற்றே கலவரமாகி…அம்மா,”ஏன்??என்னாச்சு? அப்பாவிடம் பதில் இல்லை

” சொல்லுங்க… என்ன அவசரமா? காப்பியாவது சாப்டுட்டு போங்க…”

“வேண்டாம்… ரொம்ப அவசரம்… பத்திரிக்கை ஸ்பெஷல் எடிஷன் போடணும்… போயிட்டு வரேன்…”

வாசலுக்கு சைக்கிளை இறக்கி அமர்ந்த கடலூர் தினத்தந்தி பதிப்பின் உதவி-செய்தியாசிரியரான எனது அப்பா.. அம்மாவிடம் திரும்பி ” MGR… தவறிட்டாராம்…” அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன.
பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியில் சீர்காழி,”காலை இளங்கதிரில்… உந்தன் காட்சி தெரியுது கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…”” என்று பாடியபடி இருக்க, அப்பா சைக்கிள் கடந்து விரைந்து கொண்டிருக்க… இன்னும் வெளியே யாரும் உணராத இழப்பை முன்கூட்டியே உணர்ந்த பதினோராம் வகுப்பு சிறுவனாக நான் வீட்டுத் திண்ணையில் பால் குவளையோடு உட்கார்ந்து கொண்டிருக்க… மார்கழி மாத காலைக் குளிர் காற்றில் செடியிலிருந்த டிசம்பர் பூக்கள் அசைந்துகொண்டு இருக்க, MGR இல்லாத அந்த டிசம்பர் விடியற்காலைப் பொழுது புலர்ந்துகொண்டிருந்தது.
=========================================================================================================

கட்டுரையை தட்டச்சு செய்து முடித்து, கணினித் திரையிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்க்கிறேன். நள்ளிரவு ஒரு மணி… எதிரே கண்ணாடியிட்ட அலமாரியில் மக்கள் திலகம் புகைப்படத்தில் மாறாப் புன்னகையுடன்…

ஏனோ… ஒரு மென்சோகத்தின் மெல்லிய தடம் இன்னும் தொடர்கிறது……

“விடு சசி …தலைவரு அடுத்த தடவை வரும் போது இட்டுகினு வந்து, கிட்டக்க காட்றேன்… “– விஜயா அக்காவின் குரல், மனசுக்குள் இன்று 2015- லும், கால் நூற்றாண்டின் கால வெளியைத் தாண்டியும்…எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது…

ச.சசிகுமார்
துபாய்,அமீரகம்
0503245204

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *