— எம்.ரிஷான் ஷெரீப்.

அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.

அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள்.

velli mothiramஅவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.

அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையுமாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரியாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித் துருவி ஆராய்பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட்டாளே ஒழிய மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல் கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும் தானாக தான் வந்த விவரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள். அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தாளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அசதியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலாமென்று எங்கோ தூரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஓட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஓணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.

அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந்தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பாவுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன் அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமையிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ்வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்தனுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமையாக பனை ஓலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது தான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதிவரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாக மடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரிடம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டிருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதானித்து காவலாளியை திருப்பி அனுப்பிவைத்து அமைதியாக இருந்தார். பரீட்சைத் தாளை அவன் ஒப்படைத்து வெளியேற முற்பட்டபோதுதான் அவர் அவனிடம் விடயத்தைச் சொன்னார். ஏதும் புரியாமல் முதலில் மௌனமாயிருந்து கேட்டவன் பின் கலவரப்பட்டு வீட்டுக்கு ஓடினான். அவனை பஸ்ஸுக்குக் காத்திருக்க வைக்காமல் நல்லவேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்திருந்தது.

சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்னசாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக்கொண்டே இருந்தது.

அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்தாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந்தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.

காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக்குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்த போது அத்தை கிணற்று நீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில் தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியிருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோரதும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்னை மட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம் ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்வூரின் கிணற்றடிகளில் கூடி விளையாடும் வாய்ப்பு பெரியவர்களால் தடுக்கப்பட்டது. அத்தை ஆவியாக உருமாறி கிணற்றடிகளில் அலையக்கூடுமெனவும் சிறுவர்களை கிணற்றுக்குள் இழுத்துக்கொள்வாள் எனவும் அவர்களிடம் கதைகள் சொல்லப்பட்டன. எவ்வளவோ தேடியும் முதலில் விழுந்த பூனைக்குட்டியைத்தான் இறுதிவரை காணக் கிடைக்கவேயில்லை.

அத்தையும் போனபின்னால் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக்கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அப்பா பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயிருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்தியமில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காயமடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதியாக ஓர் நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி. வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஓடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.

பிறகோர் நாள் அவர்களது வயற்காடு எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திவந்த போது அவன் சந்திக்கடையில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேனீர் பருகிக்கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஓரத்தில் வைக்கப்பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத்தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்றுமுடித்துவிட வேண்டுமென்ற பேராசையோடு தீ நாக்குகள் உக்கிரமாகவும் ஒருவித வன்மத்தோடும் வயல் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம்மாவுக்கு ஏதுமாகியிருக்கவில்லை. நிழலுக்காக நடப்பட்டிருந்த பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக்கிடந்தவளுக்கு அருகிலிருந்த இருவர் காற்றடித்துக் கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் போல தீயை அணைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தது.

வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாகவும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன்னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து மீண்டு, அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போகாதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஓட விட்டார். இறுதியாக அவன் நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி, அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலை வரை கூட வந்தாள். அத்தை வீடு அங்கே அனாதையாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படி மாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில் அவனது மோதிரத்தை வழமை போலவே மின்னச் செய்தபடி ஊர் முழுதும் திரிந்தது.

நகரத்துக்குப் போய் அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் சொல்லி எப்படியோ வேலை வாங்கிவிட்டான். அவனது அறையிலேயே தங்கிக்கொண்டான். அதன்பிறகும் மோதிரத்தை உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டைவிட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்தபோதுதான் அவனது நண்பன் விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங்கினான். நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாக மனதிலே ஓட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்தசெய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.

பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக்குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்தபொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகையிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணீரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஓய்ந்தபோது அறையினைப் பெரும் மௌனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி தான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பா திரும்பவும் இருமுறை வழுக்கிவிழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந்தோறும் காலுக்கு எண்ணெய் தடவிவருவதாகவும் சொன்னாள். மறக்காமல் அன்றும் அத்தையின் வீடு பற்றி நினைவூட்டினாள். அவனுக்கு உடனே அப்பாவைப் பார்க்கவேண்டும் போலவும் கோமதியோடு ஏதேனும் பேசவேண்டும் போலவும் இருந்தது.

கோமதிக்கும் அவன் மேல் காதலிருந்ததை அவன் அறிவான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணீர் எடுத்து வரும் வேளையில் இவன் தேனீர்க் கடையருகில் நின்றிருப்பான். அவள் ஓரக்கண்ணால் பார்த்து, பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழுதும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறுவயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரியவளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப் பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பிவைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.

அவனது அறைநண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஓயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல்லாம் நவீன ஓவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும்போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த ரேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக் குப்பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம்மைகளை எடுத்துவந்து பொருத்த முயற்சித்தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி கூட விடாமல் படித்து குறுக்கெழுத்து, சுடோகு நிரப்பினான். சிலவேளை தூங்கினான். தினமும் மறக்காமல் அவ் வயதானவனோடு சண்டை பிடித்தான். அவ் இருவரும் ஒருவரையொருவர் குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டை பிடித்துக்கொண்டார்கள். எல்லாம் ஓய்ந்தபின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப்பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி என்றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன்னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டுமெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப்பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப் போல உடல் பதறியது. அவனால் நம்பமுடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக்கைக்குரியவள்.

அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியிலழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டான்.

அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்தமிட்டுப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. காதல் உடைந்து போன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம். இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள்ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரிலிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடாத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழ வேண்டும். அதற்கு அந்த அறை சாத்தியப்படவில்லை.

அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினைவுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஓசையோடு, யாருமற்ற அவ் வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக, அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழிகளைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்களெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச்சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளையும் அழைப்பதைப் போல கோமதீ… எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத் தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்பு நீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப் போனதாக அடுத்த நாள் காலையில் அவனுக்குச் செய்தி வந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.