படக்கவிதைப் போட்டி 43-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. யெஸ்மெக் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.
மழலைச் செல்வங்களை இடையில் இடுக்கிக்கொண்டு விரைந்தேகும் இந்த மனிதனின் மறுபக்கம் நம் பார்வைக்குப்படுகின்றது. பிஞ்சுக் குழந்தைகளின் கள்ளமற்ற கனிந்த முகம் கவனம் ஈர்க்கின்றது.
எங்கே செல்லும் இந்தப் பாதை? என்ற வினாவோடு இதற்கான விடையை நம் கவிஞர்களிடம் தேடிக் கண்டடைவோம்!
***
காட்டுவழி நோக்கிப் பயணிக்கும் இவர்களின் ’காடடைதல்’தான் (வாழ்வைக்) ’கண்டடைதல்’ என்று சுவையான புதிய விளக்கம் தருகின்றார் திரு. கவிஜி.
நகத்தின் கண்களில்
இரவின் பிளிறல்…
இருந்தும் நுழைந்த
நொடி–விரிந்தது
கீற்று…
விலகியது திறப்பு,
ஒளிர்ந்து மிளிர்ந்த
காட்டுக்குள்
பேய் பிடித்து மயங்கியது
பயணம்….
மீண்டும் தொடரும்
காடடைதல்
என்பது கண்டடைதல்….
அது அப்படித்தான்,
‘ஆ’வென திறந்திருக்கும்
அத்துமீறலின் சுரப்பு…
புரியாவண்ணம் நிறைந்த
கிண்ணம்..
அது ஏந்தும்
பாத்திரத்தின் ஆத்திரம்,
இருந்தும் இனிக்கும்
இன்னிசை வலை..
பின் அது கீறும்
நகம் முழுக்க,
கண்கள்…
மீண்டும் இரவின்
பிளிறலில்
நனையும் எதிர் வினையும்..!
***
’மழைவெள்ளத்தில் சிக்கித் துன்புற்று செய்வதறியாது நின்ற சின்னஞ்சிறு மழலையரை ’மனிதாபிமானம்’ எனும் பண்பு இந்தப் பெரியவர் உருக்கொண்டு காப்பாற்றியது’ என்று உருகுகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.
சென்னை மழைக்குள்ளே சிக்குண்டு சீர்குழைந்த
அன்னைதந்தைக் குற்ற தறியாதச் – சின்னக்
குழந்தைகள் செய்வதற்று நின்றிருக்கக் கண்டு
கிழவர் மனம்பதைத்து காப்பாற்றும் காட்சி
மனிதாபி மானத்தின் சான்று.
***
தன் வாழ்வுப்பாதையில் துணையாக வரும் உறவுகளைத் துவளாது காக்கும் மனிதரைத் தன் கவிதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.
மகிழ்வான தருணங்களில்
தலையில் தூக்கி வைத்து
கொண்டாடி மகிழ்ந்து
துவண்ட பொழுதுகளில்
கைகொடுத்து தூக்கியே
உற்சாகமூட்டி உறுதுணையாகி
வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
சுகமாக ஏற்றுக் கொண்டு
எந்தன் வாழ்வின் பாதைதனில்
துணையாக வரும் உறவுகள்
அனைவரையும் சுமக்கிறேன்
எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
ஏற்றத் தாழ்வுகள் – மேடு பள்ளங்கள்
அனைத்தையும் கடக்கின்றேன் – அந்த
அன்பு உள்ளங்களின் துணையுடனே !
***
இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில் தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும் ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
இயற்கை விதைத்த
வஞ்சத்தில் பெற்றமகனின்
உயிர் இழந்தான்
உடமை இழந்தான்
எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
கஞ்சிக்கே வழியில்லாதபோது
பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
தஞ்சம் ஆகின அவனிடத்தில்
பஞ்சப் பராரியான அவனோ
அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
பிஞ்சுகள் இரண்டும்
பஞ்சாகவும்
நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
ஈரமான ஏழை மனிதன்
வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
மனிதாபிமானம்.
***
’இயற்கைக்கு எதிரான எம் வாழ்க்கைக்கு மழையே நீ தந்த பரிசுதான் இந்த அழிவு என்பதை உணர்கின்றோம். ஆயினும், பெரியவர்கள் செய்த பிழைக்கு ஏதுமறியாத பிஞ்சுகளும் அல்லவோ பலியானார்கள்? தீமையிலும் ஓர் நன்மையாய், எம் வாழ்க்கை இருண்டபோது மனிதாபிமானம் மத்தாப்புக் கொளுத்தியதைக் கண்டோம்’ என்று நெகிழ்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.
இருண்டு நீ
திரண்டபோது
இருளப்போகிறது
எம் வாழ்க்கை யென
எள்ளளவும் எண்ணவில்லை
இருபதாண்டு உழைப்பினை
இரண்டே நாட்களில்
இல்லையெனச் செய்தாய்
இதென்ன நியாயம்
நீ ஓடுகின்ற வழியெல்லாம்
வீடுகளை கட்டியது
எங்கள் தவறுதான்
அதற்காக
எய்தவர்களை விடுத்து
அம்புகளை ஏன் அழித்தாய்
பாலுக்கு குழந்தைகள் அழுததையும்
பச்சை நீர் வேண்டி
முதியோரகள் கெஞ்சியதையும்
பார்த்தப் பின்னரும்
உன் பயங்கரவாத பயணத்தை
ஏன் தொடர்ந்தாய்
பித்தம் தலைக்கேறி
நீ ஆடிய ஆட்டத்திலும்
புத்தம்புது நம்பிக்கைகள்
எங்களுக்குள் பூத்திருக்கிறது
நீறு பூசிய நெருப்பாய்
மறைந்திருந்த மனிதம்
விஸ்வரூபம் காட்டி
வியக்க வைக்கிறது
இடருற்ற நேரத்தில்
இளைஞர்களின் எழுச்சி
நாளைய தேசத்தின் மீது
நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது
[…]
மறுபடியும்
முகிழ்த்தெழுவோம்
இம்முறை
இயற்கை கூறுகளுக்கு
இடையூறின்றி!
***
புனர்வாழ்வை நோக்கிப் புதுப்பயணம் மேற்கொள்ளும் மனிதனை நம்முன் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.
மேட்டுக் காணி நோக்கியே
காட்டு வழியென்று ஆண்டவனையே
கேட்டுச் செல்கிறேன், எஞ்சிய
பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
எட்டுவேன் என்னால் இயன்றவரை!
எசமானின் பிள்ளையோடென் பேரனையும்
நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
செப்பியது அன்று உண்மையோ!
தப்பாத ஒரு தருணமிதோ!
பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்
புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
இரண்டு செல்வங்களோடு என்னையும்
அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!
***
தைரியத்தை ஒருபுறமும் நம்பிக்கையை மறுபுறமும் சுமந்துகொண்டு வசந்தத்தைத் தேடி நடைபயிலும் மனிதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. சத்தியமணி.
வறண்ட காடு
இருண்ட வானம்
தளர்ந்த கால்கள்
உலர்ந்த உதடு
தவிக்கும் பார்வை
நடுங்கும் தோள்கள்
சுருங்கும் நெஞ்சம்
சுவாசம் கெஞ்சும்
சலித்த சொற்கள்
தொலைத்த உறவு
முதிர்ந்த வயது
முடிந்த பாதை
இருந்த போதும்
என் அரவணைப்பில்
நம்பிக்கை ஒருபக்கம்
தைரியம் மறுபக்கம்
ஏளனமாக்க பார்க்காதே என்னை
இன்னும் என்வசம் வசந்தம்தான்
***
சமீபத்திய மழைவெள்ளப் பாதிப்பைக் கவிஞர்களின் கவிதைகள் நெடுகிலும் காணமுடிகின்றது. மனிதவாழ்வோடு இரண்டறக் கலந்துசெல்லும்போது கவிதைகள் மேலும் கவித்துவம் பெறுகின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!
அடுத்து, இவ்வாரத்தின் சிறந்து கவிஞரைக் கண்டுவருவோம்!
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? என்றார் மகாகவி. ஆம்! தேடிச் சோறு தின்பதும், வீண்கதைகள் பேசித் திரிவதுமன்று மானுட வாழ்வின் நோக்கம். வாடிய உயிர்களைக் கண்டு வாடுவதும், அவர்தம் இன்னல் நீக்கி இன்பம் சேர்ப்பதுமே அதன் உண்மை நோக்கம்!
அவ்வகையில், தாயிழந்து தவித்து நிற்கும் மழலைகள் இருவருக்குத் தானே தாயுமான ஆண்மகன் ஒருவனின் தன்னலமற்ற சேவைகளை, “சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும் இழையுமானவன்; மருண்ட கண்களின் மயக்கம் போக்கும் மருந்துமானவன்” போன்ற சிறந்த சொற்களால் செம்மையாய் விளக்கிச்செல்லும் கவிதையினைக் கண்டு உளம் நெகிழ்ந்தேன்.
அக்கவிதை…
தாயைத்தேடிப் பயணம் செல்லும்
தாயுமானவன்……இரு
சேய்களை இடுப்பில் ஏந்திச் செல்லும்
நாயகனானவன்…..பசித்த
வாயினுக்கமுதம் வழங்கச் செல்லும்
தாய்மடியானவன்…கிடைக்கும்
காயினும் மேலாய்க் கனியச் செய்யும்
காலம் ஆனவன்.
இருண்ட மேகம் திரண்ட வான்பொழி
மழையுமானவன்…..எழில்
சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும்
இழையுமானவன்.
மருண்ட கண்களின் மயக்கம் போக்கும்
மருந்துமானவன்….சுவை
அருந்தும் அமுதம் வயிற்றுக்கீயும்
விருந்துமானவன்.
யாரும் இங்கே அனாதை யில்லை
என்றே சொல்லுபவன்……பெற்றோர்
பேரும் அறியாப் பிள்ளைகள் சொல்லும்
பெயரும் ஆனவன்.
வேரைத் தேடி விருட்சம் என்றும்
வியர்த்துப் போகுமோ….மனம்
சேரும் இடத்தைச் சிந்தனையின்றிச்
சேர்தல் கூடுமோ…
வாழும் வரைக்கும் பூமி நமக்கு
வாழ இடங்கொடுக்கும்….உணர்வு
சூழும் வரைக்கும் சாமி இங்கு
சுகத்தை நமக்களிக்கும்
பாழும் எண்ணப் பாழ்கிணற்றினில்
பார்வை விழவேண்டாம்….நாம்
வாழ்வோம் என்னும் மந்திரச் சொல்லே
வாழ்க்கைப் பாடம் ஆகட்டும்.
பாதை நீளும் பயணம் தொடரும்
என்றே காட்டுபவன்….அவன்
பார்க்கும் பார்வையில் சோர்வை நீக்கிச்
சுடரைக் கூட்டுபவன்.
வாதை அழிக்கும் வாழ்வைக் காட்டும்
வழியுமானவன்……எல்லோர்
வேதனை ஒழிக்கும் வேதஞ் சொலுந்தாய்
மொழியுமானவன்.
இந்த இனிய கவிதையை வடித்துத் தந்திருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.
***
கிராம வாழ்வை வெறுத்து நகரமெனும் நரகம் சென்று வாழ்வைத் தொலைக்கும் இளைய சமுதாயத்தின் அவலம் பேசுகின்றது மற்றொரு கவிதை.
”ஒரு நாட்டின் இதயம் அதன் கிராமங்களில்தான் வாழ்கின்றது” என்றார் மகாத்மா காந்தியடிகள். நம் இளைஞர்கள் அதனை மறந்ததேனோ?
பாடுபட்டுப்
படிக்கவைத்தேன் மகனை..
படித்த படிப்புக்கு வேலைதேடிய
பட்டணத்தில் கிடைத்தது,
வேலையுடன்
வாழ்க்கைத்துணையும்..
தாயில்லாப் பிள்ளையெனத்
தன்போக்கில் விட்டதாலே,
இன்று
தாய்மண்ணையே மறந்துவிட்டான்..
பட்டிக்காடு வேண்டாமாம்,
பட்டணத்தில் வீடுகட்டி
பகட்டாய் வாழ்ந்திடவே
காடுமேடு நிலத்தைவிற்று
காசுகொடு என்றுவந்தான்..
கேட்டபடி
கொடுத்துவிட்டேன்,
குடிசையொன்று எனக்காக
வைத்துக்கொண்டு
கிராமத்திலே தங்கிவிட்டேன்..
பட்டணத்தில் மழைவெள்ளம்
பேரழிவு என்றார்கள்,
பதறி ஓடினேன்..
பார்த்ததங்கே–
எங்கும் ஓலம்,
எல்லாம் அழிந்த கோலம்..
எனக்கு,
எல்லாம் போச்சு
கிடைத்தது
என்னிரு பேரப்பிள்ளைகள்தான்..
இவர்களாவது
என்பேச்சு கேட்பார்களா
இனிய வாழ்வு வாழ்வார்களா..
கண்ணீர்க் கடலில்
நம்பிக்கைப் படகில்
நான் போகிறேன்
கிராமம் நோக்கி…!
கிராம வாழ்வின் அருமை பேசும் திரு. செண்பக ஜெகதீசனின் இந்தக் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று தெரிவிக்கின்றேன்.
பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!