Tag: கவிஜி

  • பெருஞ்செய்தி

    -கவிஜி

    நான் உனக்கு
    அனுப்பியபின்
    நீ எனக்கு அனுப்பும்
    இடைவெளியில்
    ஏதாவது ஒரு
    காற்று சிக்னலில்
    நகம் கடித்து நிற்கலாம்…

    அல்லது,
    பக்கத்தில் வேறோர்
    செய்தியை எட்டிப் பார்த்துப்
    படித்து,
    ட்ராபிக் ஜாம்  செய்துவிட்டுத்
    திரு திருவென விழிக்கலாம்…

    சில போது
    வழி மாறிக்
    காணாமலும் போகலாம்…

    வரும் வரைப்
    பெருஞ்செய்தியையே
    கொண்டு இருக்கிறது
    குறுஞ் செய்தி கூட…!

     

    Share
  • சுற்றும் பூமி

    கவிஜி.

    என் அறை சாளரத்தை திறந்தேன். பனிக் காற்றின் நிறம், வண்ணம் கொண்ட பாலின் ஈரத் துளிகளை விரவிக் கொண்டிருந்தன. முகம் நீட்டி முகர்ந்த பொழுதில் உறைந்து விடும் நிலைக்குள் உடல் மொழி கூட கரைதலாகக் கொண்டேன். நுரையீரல் தீண்டும் சிலிர்த்த துளிகளின் சுவாசத்தில் சில் பயணம். சிலிர்க்கும் வனமெங்கும் பட்டாம் பூச்சியின் ஊடுருவலாய் நான் என்ற விதைக்குள் முளைக்கும் பனி கொட்டும் கவிதையை கடக்கவே முடியாத பக்கத்தில் அப்பிக் கொண்டேன். மரபின் கவிதை தாங்கிய பெண் பாதக் கடற்கரையென …

    ‘அப்பப்பா,’ என்றபடியே சாளரத்தை இழுத்து அடைத்தேன். கப்பென்று காணாமல் போன பனியின் நேசத்தின் தொடர்புகளாய் ஒரு சூடு அறைக்குள் நிரம்பியது. நான் மெய் மறந்த கணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு மெல்லமாக கதவைத் திறந்தேன். ஓ… சாரல் மழை அரிசியை தூவினாற் போல மழைத் துளிகள் பொழிந்து கொண்டிருந்தன. ஆச்சரியப் பார்வையில் நான் முகமற்று மனமானேன்.

    அள்ளி இரைந்த மழை கதவுக்கு பின்னால். சாளரத்துக்குப் பின் பனி மூட்டம் ஒருவேளை என் கனவோ என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அல்லி பூத்த இதயம் போல சிணுங்கிய என் தேடல். மீண்டும் ஓடிச் சென்று வலப்புறம் இருக்கும் சாளரத்தை திறக்கச் சொன்னது. ஓடினேன் திறந்தேன். அடர் வெயில் சுட்டெரிக்கும் பாலைவனத்தின் முகப்பின் நறு நறுப்பாக கண் கொண்ட தேடல் எதுவும் ஒரு வெயில் போல நிறமற்ற பாலையாகிக் கிடந்தது. கணத்தில் முகம் வியர்த்து உடல் வேர்த்து கண்கள் கூட வியர்த்துக் கொட்டியது.

    ஓடிச்சென்று எதிர்ப்புறம் இருக்கும் பின் கதவையும் திறந்தேன். இலையுதிர் காலத்தின் சுவடுகளால் மரங்களின் தலையாட்டலோடு பழுப்பு நிற இலைகள் பாதி பழுத்த இலைகள் எல்லாமே கதை சொல்லியாக, பறந்து கொண்டும் மிதந்து கொண்டும். இணுங்கிய காற்றோடு செல்ல சிணுங்கலின் உயிர்ப்போடு கடந்து கொண்டிருந்தன.ஒன்றிரண்டு கதவு தாண்டி என் கன்னம் உரசியும் சென்றன. இலையுதிர் காலத்தின் வாசம் வரையறுக்கமுடியாத ஒன்று தேகம் நிறைக்கும். ஆனாலும் மிச்சம் ஒன்று உண்டு என்று சொல்ல சொல்பவையாக அது நிறைந்தேயிருக்கும் நிறைதலின் கணம் முழுக்க ஓர் இலையின் மெல்லிசை வாசித்துக் கொண்டே இருக்கும். சிறு வயது தோழியின் காற்றுக்கு தூக்கிக் கொண்ட பாவாடையின் வெட்கமெனத் தலை கவிழ்ந்து அமரும் நாட்குறிப்பின் வர்ணங்களோடு அவை சொல்லிக் கொண்டே இருக்கும், மிதவைகளின் ரகசியத்தை. நான் ஓடி ஓடி ஜன்னல் வாசல் என்று நால்புறமும் திறந்து பார்த்துக் கொண்டே இருந்தேன் ஆச்சரியக் காட்சிக்குள் மலையளவு உயர்ந்து கொண்டே போனேன், சிறு துளியென, அப்போது தான் ஒன்றைக் கவனித்தேன்.

    என் எதிரே என் குழந்தை அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். சற்று உற்றுக் கவனித்தேன்.

    அவன் பூமிப் பொம்மையை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டிருந்தான் சற்று வேகமாகவே.

    Share
  • கடிதம்

    கவிஜி.

    எதற்காக என்றால், எதற்காகவும் அல்ல இக்கடிதம். கடிதங்கள் படிப்பதற்காக அன்றி வேறு எதற்காக என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. காரணமின்றி எழுதும் படிக்கும் கடிதங்கள். ஆனால் எதற்கும் காரணம் உண்டு. காரணம் இல்லை என்பதும் காரணம் தானே.

    படிக்கும் மனநிலையில் நீங்கள் இல்லாமல் இருக்கலாம். இல்லை, வெறுமனே ஒரு செய்தி தாளின் பார்வையோடு படிக்கலாம் அல்லது பிரிக்காமல் கூட உங்கள் மேஜைக்குள் அடைபடலாம். ஆனால், என்றாவது ஒரு முணுமுணுப்புக்குள் வார்த்தைகளாய் வெளிப்பட்டே ஆக வேண்டும். அது தான் கடிதங்களின் வெளிப்பாடு அல்லது பொருள். அவசர உலகம், அத்தியாவசப்பணம், ஓட்டம், தொடர் ஓட்டம், சராசரி அறுபது வயது வாழ்க்கை ஏதோ ஒரு யுகத்திற்கான தேவையை சேகரிக்கச் சொல்கிறதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது. நின்று நிதானமாய் முகம் பார்க்க முடியவில்லை. முகம் பார்க்கும் கண்ணாடிகள் தேவைப் படாத உலகில் கண் கண்ணாடிகள் கடை விரிக்கத்தானே செய்யும். நடந்து, கடந்து தேய்ந்த பாதங்களில் ஊற்றும் ஒரு பாலைவன குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவிய பின் கிடைக்கும் புன்னகை என என் கடிதம் எழுதுகிறேன். நான்கு பக்கம் விவரிக்கும் காதல் கடிதங்கள் கூட குறுஞ்செய்தியில் சுருங்கி போனது. எல்லாம் மாறிப் போனது. எண்ணங்கள் முதல் எல்லைகள் தாண்டி, எல்லாம் மாறிப் போனது. எனக்கென்னவோ, எழுதுபவன் மனநிலைக்கும் படிப்பவர் மனநிலைக்கும் உள்ள தூரமும், இடைவெளியும் மட்டும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அது மாறாத கணம் ஒன்றில் நின்ற படி தான் இதை எழுதுகிறேன்

    ஒற்றைத் தத்துவத்தில் அடைபடாத ஒன்றாய் இந்தப் பூமி சுழல்கிறது. இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. தத்துவங்கள் பசி போக்காத வயிற்றில் பற்றி எரிகிறது நிதர்சனம். கேள்விகள் இல்லாத நாளில் பதில்களின் குவியல்கள், குப்பை பொறுக்கும் சிறுவர்களின் பாதங்களில் அடிபடும் உலக பந்துகள். நான் இப்படிதான், எப்போதுமே சொல்லவரும் விசயங்களை விட்டுவிட்டு ஒரு அனிச்சை செயலைத் தொடர்வண்டியின் விரல் பிடித்து ஒரு தும்பியாய் எதிர்த் திசையில் பயணித்து விடுவேன்.

    நினைக்கும் எண்ணங்கள் அனாதைகளாய் கடிதத்திற்குள் வரமுடியாமல், பேனாவின் முனையோரம் தங்கித் தவிக்கும். கம்பி வேலிக்கு அப்பால் மிரட்சியோடு பார்க்கும் பசி கொண்ட புலிகளின் கண் கொண்ட பார்வையில் மாறிக்கொண்டே இருக்கும். மனநிலையில் எந்த நிலையில் நான் மற்றும் நீங்கள் மற்றும் நமது தோழமை இருக்கிறது? எத்தனை முறை பிரிந்தாலும் அத்தனை முறையும் சேர்ந்துவிடும் இலகுவான மனங்களை நாம் கொண்டுள்ளதாகவே ஒரு பெயரில்லாத பறவை சொல்லிப் போனது. நானும் அதையே நம்புகிறேன்.

    நம்பிக்கையில் சுழலுவதுதானே எல்லாமே. வெறும் இறந்த காலத்தின் குவியலாய் என் கடிதம் இருந்து விடக்கூடாது என்பதில் நான் முனைப்போடு இருக்கிறேன். குவியல்களில் தேடி ஓரிரு பொருள்களை கண்டுபிடித்து அசை போட்டால் நிகழக் கால சூட்டிற்குக் கிடைத்த சிறு மழையென
    இருக்கும் என்றே அந்தப் பெயரில்லாத பறவை இந்தப்பக்கம் பறக்கும் போது சொல்லிப் போனது.

    பறவைகள் சொல்லும் கதைகள்
    பெரும்பாலும்
    பயணமாகவே இருக்கிறது…

    எத்தனைச் சந்திப்புகள்! எத்தனைப் பிரிவுகள்! எல்லாமே என் எங்கிலும் இருக்கிறது. ஆனால், அனைத்தும் பெர்முடா ட்ரை ஆங்கிலுக்குள் செல்லும் எதுவும் மறைந்து விடும் போல ஒரு மறதிக்குள் மறைந்து கிடைக்கிறது. காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஒற்றை ரயிலாய். அந்தந்த வயது மட்டும் ஒற்றைப் பனைமரமாய் வழியெங்கும் தங்கி விடுகிறது. நாமும் வேண்டும் என்றே விட்டு விட்டுக் கடந்து விடுகிறோம் அல்லது குளிரான அல்லது பனிகொண்ட காற்றில் அசைகிறது சில நினைவுகளோடு. தேடல் இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது உள்ளம் கொண்ட உண்மைகள் ஒன்றில் தொலைந்து போவதை உணராமல் இருக்க முடியுமா? எனது வெளிப்பாடுகள் சில போது எனக்கான பிம்பங்களை உடைத்தெறியலாம். உடையாத குமிழிகள் உண்டா? உடைவது அழகுதானே! தனியாகச் சாதனைகள் தேவை, தேவையில்லை என்ற கோட்பாட்டுக்குள் சிக்காத ஓட்டங்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. பல சமயம் ஓடுகிறோம், சில சமயம் வேடிக்கை பார்க்கிறோம். இங்கு நடக்கும் எதுவுமே ஒரு காரணத்திற்காகத்தான். காரணங்கள் உண்டு உறங்கும் அதற்காகவே இருக்கிறது. இந்தக் கடிதத்தை எப்படி முடிக்கலாம் யோசித்துக் கொண்டே போகலாம்.

    அது இது என எல்லாமே மாறிப் போனதை, யோசனைக்குள் சிக்காமல் சுண்டெலியாய் ஓடித்திரியும் ஏதோ நினைவுகள் மட்டும் யாரோ ஒரு பெயரில்லாதவன் வரைந்த ஓவியமாய் படிந்து விட்டதை, மாற்றங்கள் விரும்பாத தூரிகை ஒன்று தலை நரைக்க நரைக்கச் சொல்கிறது. சிலது ஓவியமாய் மாறுகிறது, சில ஓவியம் மாறுவதே இல்லை.

    இப்படியும் முடிக்கலாம், முடிவென்று ஒன்று உண்டோ எதற்கும் எவர்க்கும் ?

    கவிஜி

    Share
  • நிறங்களின் சலனம்…!

    கவிஜி

    நிறங்களின் கூட்டாய்ப்
    பிரிதல்களின்
    வளைவு…

    வளைவுகளின் மீட்சியாய்த்
    திரும்புதலின்
    நெளிவு…

    நெளிவுகளின் சிதறலாய்
    மிதவைகளின்
    அமிழ்வு…

    அமிழ்தலின் விரிசலாய்ப்
    பகிர்வுகளின்
    தெரிவு…

    தெரிவுகளின் ஆட்சியில்
    வளைவுகளின்
    நிறங்கள்…!

     

    Share
  • இன்னொரு நான்!

    -கவிஜி

    யாரோ யாரையோ
    விரட்டிவந்த பொழுதில்
    பயந்து விலகி
    தடுமாறி நகர்ந்ததில்
    தானாக ஏற்றப்பட்ட
    பேருந்தில்,
    நெரிசலில் சிக்கி
    என்னைப் போலவே
    முகம் சுளித்துத்
    திரும்பிய அவளின்
    கணப் பார்வை
    சந்தித்த பொழுதோடு
    என்னைப் போலவே
    வந்து, நசுங்கி, பின்
    கடந்து, நடந்து போய்க்
    கொண்டிருக்கலாம்
    இன்னொருவரும்…!

     

    Share
  • நிலவொன்று கண்டேன்!

    -கவிஜி

    எட்டிக் குதித்த
    கால்களில்
    கொலுசானது
    நிலவொளி…

    நிழல் கூட்டி
    ஓடிய இரவில்
    நிலவுக்கு
    மூச்சிறைத்தது…

    கதவடைத்த பின்னும்
    ஜன்னல் தட்டுகிறது
    நிலா…

    யாவருக்குமான
    முதல் காதல் கடிதம்
    நிலவாகவே இருக்கிறது…!

    ஒரு சாய்த்துப்
    படுக்கையில்
    நிலவாகிறது பெண்மை…

    விழி சாய்த்துப்
    பார்க்கையில்
    மேகம் இழுத்து
    மறைக்கிறது வெட்கம்!

     

    Share
  • மரணத்தின் நினைவுகள்

    -கவிஜி

    இப்போதெல்லாம்
    ஒலி எழுப்பாமலே சற்று
    ஒதுங்கித்தான் போய்க்
    கொண்டிருக்கிறேன்,
    போன வாரம் ஏதோ ஒரு வண்டியில்
    அடிபட்டுச் செத்துப்போன
    தெருநாய் எப்போதும் தூங்கும்
    நடுப்பாதையை…

    நாக்கை வெளியே விட்டபடி
    தூங்கும் நாயின்
    மரணத்துக்குள்
    வண்டிகளின் முகப்பாய் என்
    ஒதுங்குதலும் தெரியலாம்…

    நான் பாதங்களைக் கூடச்
    சத்தமின்றியே
    வைத்து எடுக்கிறேன்…

    முகப்பு வெளிச்சமற்ற
    தேகத்தில் இளைப்பாறட்டும்
    மரணத்தின் முந்தைய நினைவுகள்…!

     

    Share
  • மெல்லத் திறந்தது கதவும்

    கவிஜி.

    ஊட்டி.

    ஊட்டியில் இருந்து 35 கிலோ மீட்டரில் ஒரு காட்டு பங்களா.

    நான், என் அக்கா, தங்கை, தம்பி, மாமா பையன், என் நண்பன் கிரி, அவனின் தங்கை மாயா, மாயாவின் தோழிகள் என்று ஒரு பட்டாளமே பிக்னிக் போயிருந்தோம். ஊட்டிக்குள் நுழையும் நிமிடங்களை மனம் செல்ஃபி எடுத்துக் கொண்டே வந்தது. எடுத்துக் கொண்ட செல்ஃபி நினைவுகளை அசை போட்ட நொடிகளோடு சேர்த்து முகநூலில் ஏற்றிக் கொண்டே இருந்தோம்.

    அன்று இரவு அந்தக் காட்டு பங்களாவில் நாங்கள் ஆளுக்கொரு கதைகள் கொண்ட புது புத்தகமாய் விரிந்து கிடந்தோம். இரவின் பனியும், பனியின் குளிரும் ஊட்டியை விரிந்து கிடந்த வெளியில் ஒரு மிதக்கும் காட்டின் சதுரமாய் நாங்கள் தங்கியிருந்த பங்களா நகர்வது போல நின்றிருந்தது. நாங்கள் எல்லாரும் சுற்றி அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டும் அந்தக் கதையை ஒருவர் பாதியில் விட அதை அடுத்தவர் தொடர்ந்து அவரும் ஒரு கட்டத்தில் நிறுத்த, அதற்கடுத்தவர் அதிலிருந்து தொடர. என்று இரவின் நீட்சிகள் மணி 11 தாண்டியும் சில்லிட்டுக் கொண்டிருந்தன கதைகளாய்.

    டக் … டக் … டக் … டக் … டக் … டக் …

    நாங்கள் ஒரு சேர திரும்பிக் கதவைப் பார்த்தோம்.

    காட்டுக்குள் நாங்கள் நுழையும் போதே இந்தப் பங்களாவின் உரிமையாளர் ‘எக்காரணத்தைக் கொண்டும் இரவில் கதவை திறந்திட வேண்டாம்’ என்று கூறியது அனைவருக்குமே ஒரு கணம் கருப்பு வெள்ளையில் நினைவின் கவனத்துக்கு வந்து போனது. கதவு தட்டப் படும் சத்தம் மிக மெல்லியதாகத்தான் கேட்டது. இப்போதுதான் ஒன்றைக் கவனித்தோம். உள்ளே ரெஸ்ட் ரூம் போய்விட்டு மாமா பையன் பிரபு வந்து கொண்டிருந்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை இவன்தான் உள்ளே போவது போலப் போய் இந்தப் பக்கம் வந்து கதவை தட்டி விட்டு வந்திருக்கிறானோ. என்று அவனைக் கூர்ந்து கவனித்தேன் அவன் எதையும் கண்டு கொள்ளாமல் கதையைக் கவனிப்பதில் கவனமாய் இருந்தான்.

    இப்போது மீண்டும் அதே சத்தம், அதே அளவோடு வந்தது.

    அனைவரும் திரும்பிப் பார்த்தோம், இம் முறையும் உள்ளே இருந்து வெளியே வந்த பிரபுவை நாங்கள் ஒருசேரப் பார்த்து மெல்லச் சிரித்தோம்.

    “டேய் என்ன இப்படிப் போய், அப்படி வந்து கதவை தட்டிட்டுத் தட்டிட்டு வந்துட்டா எங்களுக்குத் தெரியாதா. மொக்கையா இருக்குடா” என்று கலாய்த்தோம்.

    அவன் சீரியசான முகத்தைக் கொண்டு. “ஹே… நான் தண்ணி குடிக்க உள்ள போனேன்ப்பா நான் தனியா வெளிய போவேனா” என்றான்.

    மனதுக்குள் ஒரு வகை திக் தட்டிக் கொண்டே இருப்பதை அனைவருமே மறைக்க முயன்றோம். எனக்குக் கொஞ்சம் வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.

    சற்று நேரத்தில் மீண்டும் அதே டக் … டக்… டக் … சத்தம். அது கதவை தட்டும் சத்தம் தானா என்று சந்தேகிக்கும் அளவுக்குத்தான் சத்தத்தின் வேகம் இருந்ததால் ஒருவேளை பிரமையாகக் கூட இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.

    “இல்ல விஜி. யாரோ கதவைத் தட்றாங்க, நல்லாவே கேக்குது,” என்றாள் என் அக்கா.

    “ஆமா எனக்கும்தான் கேட்டுச்சு,” என்று கூறிய தங்கையின் பின்னால் அப்போதுதான் வந்து அமர்ந்தான் மீண்டும் பிரபு.

    “டேய் பிரபு விளையாடாதா நீதான் கதவை தட்டிட்டுத் தட்டிட்டு வர்ற. நல்லாவே தெரியுது இது விளையாடற டைமா? பயமா இருக்குடா வேண்டாம்,”என்றபடியே “ஆமா, நீ இப்போ எங்க போன?” என்று எல்லாரும் மொத்தமாகக் கேட்டோம். எங்கள் சத்தத்தில் கொஞ்சம் பயம் கலந்த தடுமாற்றம் இருந்தது. ஒருவேளைத் தட்டுவது பிரபுவாக இல்லாமல் இருந்தால் என்ற கேள்விக்குள் மாட்டிக் கொண்ட பார்வையை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டோம்.

    அவன் மெல்ல சிரித்துக் கொண்டே “சத்தியமா நான் வெளிய போகல. நான் சிப்ஸ் எடுக்கத்தான் உள்ள போனேன்” என்றான் கையில் சிப்ஸ் பாக்கெட் இருந்தது. கொறித்துக் கொண்டிருந்தான்.

    அனைவரின் மனதுக்குள்ளும் கதவே நிறைந்திருந்தாலும். கண்டுகொள்ளாதது போல. கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

    பிரபு வாயைக் கை கொண்டு அடக்கியபடியே ஒவ்வொரு முறை தட்டுவது போலவே கதவைத் தட்டினான். தட்டியபடியே தலையை பின்னோக்கி இழுத்துக் கொண்டு ஒளிந்து கொண்டான். கையை மீறும் சிரிப்பை இன்னும் அழுத்தி அடக்கினான். உள்ளே கதவு தட்டப் பட்ட சத்தம் கேட்டதுமே நான் எழுந்தேன். என்னை இரு என்பது போல எல்லாரும் தடுத்தார்கள். பாருங்க பிரபுவக் காணோம் அவன்தான் இந்த வேலைய பன்றான். இப்போ பிடிச்சிடலாம் என்று மெல்லமாக கூறியபடியே நான் கதவு பக்கம் சென்றேன். என் பின்னால் அனைவரும் கூட்டமாக நின்றார்கள். அனைவர் முகத்திலும் இனம் புரியாத வியர்வைத் துளிகள்.

    மீண்டும் தட்டும் சத்தம் கேட்க காத்திருந்தோம்.

    வெளியே பிரபுவும், என்னடா, எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள் போல, என்றபடியே மீண்டும் தட்ட முனைந்தான்.

    மிகப் பெரிய மௌனம் இடையே கதவாய் நின்று கொண்டிருப்பதை இருபக்கமும் உணர்ந்தார்கள்.

    தட்டலாமா, வேண்டாமா, மீண்டும் உள்ளே போய் விட்டு வந்து தட்டலாமா, என்று யோசித்த பிரபு,சரி ஒரு முறைத் தட்டி விட்டு ஓடி விடலாம் என்றே நினைத்தான்.

    அடுத்த கணம் …

    “டக் டக் டக்” கதவைத் தட்டினான் பிரபு.

    “இருடி மாட்ன” என்றபடியே சட்டென்று கதவைத் திறந்தேன்.

    வெளியே புகை போல ஒன்று நின்று கொண்டிருந்ததை நாங்கள் கத்திக் கொண்டே கண்டோம்.

    வெளியே இருந்த பிரபுவுக்கு வீட்டுக்குள் புகை போல நிறையப் பேர் நின்றிருந்தது தெரிந்ததாம். மயங்கிச் சரிந்தான்.

    ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…..

    Share
  • பொது உடைத்தல்!

    -கவிஜி 

    ஜன்னலைத் திறப்பதற்குமுன்
    இந்தப் பக்கம்
    நின்றிருந்தேன்…
    திறந்த பிறகு
    அந்தப் பக்கம்
    நிற்பதாகக் கூறியவர்கள்
    அந்தப் பக்கமே
    நின்றார்கள்…

    பக்கங்களின் அடைதல்களில்
    ஜன்னலின் முன்பின்
    இடம் மாறிக் கொண்டே
    நகரும் வீட்டில்
    நான் ஏழை…
    என் எதிரே பணக்காரன்…
    அவனுக்கும் அப்படியே
    என்றபோது
    வேகமாய் வந்து
    உடைத்தும் விட்டு
    உடைந்தும் போனது
    பொதுவான கை ஒன்று…!

     

    Share
  • நான் என்ற நான்

    கவிஜி.

    ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில் எத்தனை உறவுகளை, எத்தனை நண்பர்களை, எத்தனைத் துரோகங்களை, எத்தனை விரோதங்களை சதா கடந்து கொண்டே இருக்கின்றான். கடப்பதும், கடக்கக் கடக்க யோசிப்பதும், சதா நடந்து கொண்டே இருக்கிறது. மனதின் ஆழ்முனை ஒரு வகை கீறலைக் கொண்டே நகருகிறது. நம்பினோரை சில சமயம் கை விடுகிறோம். நம்பாதவரை சில சமயம் பகைத்துக் கொள்கிறோம். தான் தான் என்று தன்முனைப்பின் வெளிப்பாடாய் கோபங்களும் காழ்ப்புணர்ச்சிகளும் மேலோங்கி நிற்கின்றன என்பதைப் புரிந்தும் புரியாமல் கடந்து செல்கிறோம்.

    இங்கு எல்லாக் கதவுகளும் அடைத்தே கிடக்கின்றன என்று கூறும் நாம், நம் வீட்டு ஜன்னலைக் கூட திறந்து வைப்பதில்லை. சுயநலம் என்று பேசும் சிந்தைக்குள் பொது நலத்தின் சாரல் கூட அடிப்பதில்லை. அர்த்தம் தெரியாத நலன்களின் வாழ்வுக்குள் சிக்குண்ட பிறழ்வின் சூட்சுமக் கடி எறும்பின் நகர்தலாகவே இருக்கிறோம். நாவில் தூய்மை இல்லாத சமூகமாக மாறிப் போவதை கண்டும் காணாமல் ரசிக்கிறோமா என்று கூடச் சந்தேகம் வருகிறது.

    “சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்ற வள்ளுவனின் வாக்கை நினைத்துப் பார்க்கும் அதே சமயம், எப்போதும் யாருக்கும் வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அதைப் பாதியாவது நிறைவேற்றிட முடியாத போது கூட அது பற்றிய சிறு சுய சலனம் கூட இல்லாமலிருப்பதுதான் நாம் கடந்து விட்டதாக நினைக்கும் நாம் தவற விட்ட பாதையாக இருக்கிறது.

    “நீ தவறு”- என்று காட்டும் மனம் கொண்ட நாம், நம்மைப் பற்றிச் சிந்திப்பது குறைவு என்றே படுகிறது. நினைத்த நேரத்தில் எல்லாமுமாக நாமே ஆக வேண்டும் என்று நினைப்பதில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்க்கப் படுகிறது. நினைக்க ஒரு காலம். கூட ஒரு காலம். வெறுக்க ஒரு காலம். வேரோடு அறுக்க ஒரு காலம். என்பது மனித சித்தாந்தத்தில் மிகப் பெரிய பின்னடைவு.

    சுயம் முக்கியம் சுயம் சார்ந்தே யோசிப்பது தத்தளிக்கும் படகு போல …

    “பழகப் பழக பாலும் புளித்தது” என்று பெரியவர்கள் விளையாட்டாகக் கூறவில்லை என்பதைக் கடக்கும் மன நிலை இப்போது உள் வாங்குகிறது. இங்கு எல்லா வேலைக்கும் எல்லா நிகழ்வுக்கும் அதே போல எல்லா உறவுக்கும் ஒரு ஆரம்பம், ஒரு இடைவேளை, ஒரு முடிவு இருக்கிறது. நவீன மயமாக்கலின் விரல் பிடித்த பாதையில் முடிவுகள் சீக்கிரம் சீக்கிரம் எட்டி விடுகின்றன, எட்டாத உறவுகளாய் திகட்டி விட்ட காதல்களாய். முகமூடி கிழிந்த நட்புகளாய் அவரவர் இடத்தில் அவரவர் பெரியவரே என்பதைப் புரிவதும் புரியாதது போல இருப்பதும் ஒரு வித சலனத்துக்கு இட்டுச் செல்கிறது. ஆழ்மனத்தின் வெளிப்பாடு பலபோது மிகக் குரூரமாகவே இருக்கிறது எத்தனைக் கலைகளால் அதை மூடி வைத்தாலும் ஒரு நாள் பீரிட்டு வெளி வந்து விடுகிறது. அந்த முகங்கள் மிக மிக கோரமாக சொல்லாமல் சொல்லிப் போகின்றன மனங்களின் குருதி வழியும் சுவாசத்தை ஒவ்வொரு முகமும், அந்த முகம் அல்ல என்பதைப் பொட்டில் அடித்த உண்மைகளாக இன்றைய பல நட்புகளும் பல உறவுகளும் வெளிப்படுத்தி விடுகின்றன.

    நம்பிக்கை மிகப் பெரிய வாழ்வியல் மானுடத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால், அவநம்பிக்கையின் வெளிப்பாடாய்தான் நம் ஒவ்வொருவரின் கதவும் அடைத்துக் கிடக்கிறது. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு முகம் மாட்டிக் கொள்ளும் நாம் மனதை மாற்றிக் கொள்ள முடியாமல் தவித்து அழுது, புலம்பி பின் நம்பிக்கையற்றவர்களாக மாறி, திட்டி, திட்டு வாங்கி முறிந்த சிறகுகளோடு, தனிமையில் துவளும் இன்றைய வாழ்வு முறை சிக்கல்களைக் கொண்டே கட்டமைக்கப் படுகிறது.

    இன்று கூட யாரோ எழுதிய ஒரு வாசகம் மீண்டும் மீண்டும் மிகப் பெரிய சிக்கலை மனதுக்குள் விதைத்தது.

    “சண்டையிட்டு உன்னை விட்டு விலகிய பின்னும் உன் ரகசியம் காக்கப் படுமாயின் நீ இழந்தது சிறந்த நண்பனை”

    எத்தனை அற்புதமான வரி. நட்பின் புனிதத்தை இதற்கு மேல் எப்படிச் சொல்ல இதே போல்.”சுந்தர பாண்டியன்”என்ற படத்தில் ஒரு வசனம் வரும் “குத்தினது நண்பனா இருந்தா செத்தா கூட வெளிய சொல்லக் கூடாது” என்று. மெய் சிலிர்ந்த நிஜமான அன்பின் ஆழப் பதிந்த வெளிப்பாடாகவே நான் உணர்ந்தேன் (இது இருபாலருக்கும் பொருந்தும். ஆண்களுக்குச் சமமாக பெண்களும், குத்துவதும் காலம் காலமாக நடந்து கொண்டு தானே வருகிறது).

    இன்றைய முகப் புத்தக கால கட்டத்தில் அத்தகைய நட்பும் உறவும் அரிதாகவே இருக்கிறது. நினைக்காத இடத்தில் நின்று விடும் மனதுக்கு ஒன்றுமே புரியாத பனி மூட்டங்களின் கூடு விட்டுக் கூடு பாயும் தத்துவம் மட்டும் நிறைவாகத் தெரிந்திருக்கிறது. தெரியாததைப் போல ஒன்றும் சொல்லாத மணி மகுடத்தின் மேற்போர்வை கலைய கலைய அழிந்து விழும் ஆணவ துகள்களின் நுணுக்கங்களில் யார் கண்டார் கடவுள் கூட மனமாய் வீற்றிருக்கலாம். வருபவர்கள் இப்போதெல்லாம் தங்குவது கூட இல்லை போய் விடுகிறார்கள், போகிறவர்கள் வருவது கூட இல்லை, போயே விடுகிறார்கள். எல்லாமே ஒரு மனக் கணக்கின் அடிப்படையின் சிறகடிப்பாகவே பதியப் படுகிறது. மற்றவர் முகம் காண முடியாத இடத்தில் நின்று கொண்டு முகமறியா சொற்களை வீசிக் கொண்டே இருக்கிறோம், உளம் அறியாத சிந்தை போல.

    எல்லாம் தெரியும் என்ற மனப் போக்கு காற்றுப் புரவி போல. அது கட்டுக்கடங்குவதே இல்லை. விபரீத மலை உச்சிக்கு எப்போது வேண்டுமானாலும் போய் நிற்கும் என்பது புரிந்த பின்னாலும் முடியாத இடைவெளிக்குள் தேநீர் கூடச் சப்பென்று இருப்பது தான் இன்றைய அறிந்த உண்மை. உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே உள்ள நூலிழை புரியாத போது ஒன்றுமே சிந்திக்க முடியாத தன்னார்வத்தில் வெறும் கோபத்துக்குள் தன்னை பூட்டிக் கொண்டு எல்லாம் தெரிந்த மனநிலைக்குள் போய் விடுகிறோம் போயே விடுகிறோம்.

    பொய் நிஜம் கடந்த தெளிவு ஒரு போதும் நம்மை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளுவதில் நம் தனிமை நமக்கு இடம் கொடுக்கிறது. கொடுப்பதும் எடுப்பதும் மரணம் செய்யும் மிகப் பெரிய பிரதான வேலை எனப் படுவதில் எடுத்துக் கொடுக்கும் ஜனனத்தில், தான் மட்டும் அழியவே முடியாத அகங்காரமாய் அழுவதைத்தான் புரியவே முடிவதில்லை. காலம் முழுக்க எதிர்பார்த்து எதிர்பார்த்து பின் காலத்தையே எதிர்பார்க்கும் சிற்றறிவின் வாசலையும் மூடியே விடுகிறோம்.

    எதிர்காற்று வந்து கொண்டேயிருப்பதில் தானே பாதை கண்டடைய வேண்டும்; அப்படித்தானே இந்தப் பரிணாமம் தோன்றியது. எல்லாம் கையில் கொடு, அட இன்னொரு கையையும் கொடு என்பதில் எல்லாமும் அறிந்த மனமாய், முகமூடி போட்டுக் கொள்வதில் கடக்கவே முடியாத பாதையை வசவுகளால் அழித்துக் கொள்கிறோம். கட்டற்ற மனதை அடக்கிப் பிடிக்கவே முடியாத சூழலில் பாதையும் இல்லாத போக்குக்கு வழி உண்டோ? ஒளி தான் உண்டோ!

    புகழும் ஒரு வகை போதை என்று நம்ப மறுக்கும் சூழலில் புகழில் இருந்து கசியும் இறந்த கால எதிர்கால எச்சங்களைத் தாங்கும் மனவலிமையும் அற்றுப் போய்விடுகிறது காலங்களால் எதுவும் மாயும் எதுவும் காயும் என்னும் தத்துவ மலைக்குள் குடி தேடிக் கிடப்பதில் குண்டும் குழியுமான சாலைக்குள் புரண்டு கொண்டே கிடக்கிறது பிறழ்ந்த மனது. “நான்”- கடக்கும் பாதையை அது மூடியே கிடக்கிறது துரோகம் அழிக்கும் கதவை அது திறக்கவே விடுவதில்லை. நம்பினோரைக் கை விடும் பாத்திரத்தை அது நிரப்பியே வைக்கிறது. நம்பிக்கையற்ற தருணம் ஒன்றில் நிலைக் கண்ணாடியிடமும் உண்மை சொல்ல பயந்து மூலையில் பதுங்குகிறது நரி போல வேஷம் போட்டுக் கொண்ட மனம் நம் மனம்.

    Share
  • சாவியின் கதை

    கவிஜி.

    kavijiஎன்னால் அடங்கி இருக்க முடியவில்லை. கையில் கிடைத்த சாவி என்னைத் திறந்து கொண்டே இருந்தது. நானும் என்வீட்டுக் கதவு பூட்டுக்கு பொருத்திப் பார்த்தேன். திறக்க முடியவில்லை. பின், வீட்டுக்குள் இருந்த உள் அறைக்கான பூட்டில்பொருத்திப் பார்த்தேன். ம்ஹும், சரியாக மாட்டிக் கொள்ள வில்லை.

    “அப்படி என்றால் இந்தச் சாவி யாருடையது? எதற்கு என் கையில் கிடைத்திருக்கிறது! என்னால் தூங்க முடியவில்லை.இரவுகளின் கும்மாளம் நிறமற்றுக் கிடந்த கருவிழிக்குள் கருமை அடித்தது போலவே நினைத்துக் கொண்ட நான்மெல்லவெளியே கிளம்பினேன். சாவி இருக்கிறதென்றால் கண்டிப்பாக பூட்டும் இருக்கும். இல்லாமல் போவது போல ஒரு பிரமைஇப்போது இருந்தாலும் இல்லாமல் போகாது. பூட்டு மாயப் பூட்டுகளுக்கு கூட மாயச் சாவிகள் உண்டு என்பதில் திண்ணமாய்ஒரு முறை சாவியை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். மாயங்களின் சாவியோ என்று மனம் மயங்கியது. ஒருவேளை இதில்திறக்கும் பூட்டுக்குப் பின் ஒரு பூதம் கூட இருக்கலாம் தேய்க்க தேய்க்கத் தங்க மழையாகக் கொட்டலாம். பணம் புரளும்ஆற்றைக் கூட நான் திறக்க போகும் பூட்டு தரலாம் என்று கற்பனையின் திறவுகோலைத் திறந்து கொண்டே நடந்தேன்.

    அடுத்த வீதியில் ஒரு கதவு பூட்டப் பட்டிருக்க. மெல்ல அருகில் சென்றேன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றேன்.நிலா மட்டுமே சாட்சி. அதைக் கூட பூட்டிதான் வைத்திருக்கிறார்கள் போல என்பது போல ஒரு புன்னகையோடு அருகில்சென்று திறக்கத் தொடங்கினேன்.

    கரக். சடக் என்று சத்தம் வந்ததே தவிர பூட்டுத் திறந்தபாடில்லை. எனக்கு நெற்றியில் கோடாய் வியர்வை சூடாய் வழிந்தது.வேகமாய் எழுந்து கொண்டேன். “இந்தப் பூட்டுக்கு பின் வெறும் வீடுதான்”என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மீண்டும்நடக்கத் தொடங்கினேன். அடுத்த வீதியில் ஒரு கதவு வெறுமனே சாத்தி இருந்தது.

    ஆர்வம் உந்தித் தள்ள. மெல்ல கதவைத் தொட்டேன் அது தானாக திறந்து கொண்டது ஒரு பேய் வீட்டுக் கதவு போல.

    திக்‘- என்று உணர்ந்து சுதாரித்துக் கொண்ட நான் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தேன். அது வராண்டாவாக நீண்டு கிடக்கமெல்ல, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே உள் நோக்கி நடக்கத் தொடங்கினேன். இடது பக்கம், வலது பக்கம்என்று அறைகள் பூட்டிக் கிடந்தன எல்லாக் கதவுகளிலும் வித விதமான பூட்டுக்கள் தொங்க… எனக்கு மனம் வலுத்தது

    “சரிதான், காரணம் இல்லாமல் இந்தச் சாவி நம் கையில் எப்படி இருக்கும்? இவற்றில் ஒரு பூட்டுக்கு இந்தச் சாவி சொந்தம்திறந்த பின் கண்டிப்பாக அதியசம் ஏதோ நடக்கப் போகிறது”- என்று என் மூளை யோசிக்க யோசிக்க கை வேலை செய்தது.

    இது நான்காவது பூட்டு. ம்ஹும்… திறக்க வில்லை அடுத்து… அடுத்து… அடுத்து … என்று என் உடல் தெப்பலாக நனைந்துவிட்டது. பயம் இருந்தும் பரவசம் மேலோங்கிக் கொண்டே போக, இதோ… இதோ… இந்தப் பூட்டு திறக்கப் போகிறது. அதோ…அதோ… அந்தப் பூட்டு திறக்கப் போகிறது என்று மனம் ஊசலாடிக் கொண்டே இருந்ததில், தவிப்பும் பயமும் மாறி மாறிமனதை நிறைத்தன.

    சோர்வு மட்டுமே மிச்சம் வெளியே வந்தேன். மனம் ஒரு முறை திரும்ப சொன்னது. மெல்லத் திரும்பினேன்.

    திக்திக்திக்… மனதுக்குள் சம்மட்டிக் கொண்டு அடித்தது போல இருந்தது. நான் கடைசியாக திறந்து கொண்டு வெளியேவந்த கதவு. அதாவது முன்பு உள்ளே செல்லும் போது பூட்டாமலே இருந்த கதவு, இப்போது பூட்டிக் கிடந்தது. நான்அனிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தேன். மனம் மாயைக்குள் சுழன்றது. இல்லை, நன்றாக ஞாபகம் இருக்கிறது.முன்பு உள்ளே போகும் போது இந்தக் கதவில் பூட்டு இல்லை. பூட்டியிருக்கவும் இல்லை. பின் எப்படி இப்போது? நான்மெல்லப் பயத்துக்குள் போனேன். திரும்பி வீட்டை நோக்கி வந்து விடத் தோன்றியது . சரி, இந்தப் பூட்டையும் திறந்துபார்த்து விடலாமா என்றும் தோன்றியது. மெல்லப் பூட்டின் அருகே சென்றேன். மனதுக்குள் பயம் தவணை முறையில்அதிகரித்துக் கொண்டேயிருக்க, சட்டெனத் திரும்பி வீடுநோக்கி ஓடி வந்தேன்.

    அந்தப் பூட்டிய கதவுக்குள் பணக் கட்டுகள் பறந்து கொண்டிருந்தன. இதே போல ஒரு கதாப்பாத்திரம் நாளை இந்தச் சாவிக்குதகுந்தாற் போல ஒரு பூட்டைத் தூக்கிக் கொண்டு சுற்றுவதாக இதே கதையாசிரியன் வேறு ஒரு கதை கூட எழுதலாம்இன்றோ நாளையோ.

    Share
  • விசில்

    -கவிஜி 

    ஊர் எல்லையில்
    காவலிருக்கும் அய்யனாரைக்
    கடக்கும் போது மட்டும்
    விசில் ஊதுவதை
    நிறுத்தி விடுகிறார்
    அய்யனாரையும்
    சேர்த்து காவல் காக்கும்
    கூர்க்கா…!

    Share
  • இல்லாதவன் விடமாட்டான் …

    கவிஜி.

    உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், “வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு” என்று நீங்கள் கூறுவீர்களா? அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால் நீங்கள் இந்தச் சட்டத்துக்கும், இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி, உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும். அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம். ஆனால், அதே சமயம் ஒரு கை தவறு செய்கிறதென்றால் அதை வெட்டிப் போடு என்பது வாழ்வின் நிதர்சனம்.

    ஏதோ ஒரு வழியில் தவறை முன்னெடுத்துச் செல்வதற்கு சமம், அநீதிக்கு மறைமுகமாக உதவுவது. கொட்டுவது தேளின் குணம். அதை எடுத்து விடுவது என் குணம் என்று பேசுவது மனிதர்களுக்குள் பொருந்தாது என்றே தோன்றுகிறது. தகுந்த தண்டனை இல்லாத காரணமே இன்னும் இன்னும் குற்றங்கள் அதிகமாவது. சரி, அன்பினால் திருத்தி விடலாம் என்றால் இத்தனைக் காலம் அன்பே இல்லாமல்தான் மனித குலம் வாழ்ந்து கொண்டிருந்ததா? சரி தண்டனை தந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட்டனவா என்ன? என்றும் ஒரு கேள்வி வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கொலைக்குக் கொலை செய்வது மனிதத்தன்மை அற்ற செயல்தான். மறுக்க முடியாத ஒன்று. அப்படியென்றால் கொலை செய்யப் பட்டவன்? செத்தவனைப் பற்றி வருந்துவதைத் தவிர வேறு எந்த ஒரு நியாயமும் செய்யாமல், “கொன்றவனைக் கொன்றால் மட்டும் செத்தவன் திரும்பியா வரப் போகிறான்? இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, கொன்றவன் மன நிலையைப் பொருத்தும் இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள இந்தச் சமூகம் முன்னெடுப்பான காரியங்களை செய்ய வேண்டும்,”என்று கூறுவதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. முரண்பட்டு முரண்பட்டு அது உடன்படும் நிலைக்கு தள்ளிப் போவதைத்தான் இங்கு யோசிக்க வேண்டி இருக்கிறது. எட்டிக் குதித்து பார்த்து விட்டு கிடைக்காது என்று தெரிந்த பின் இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதில் பரிணாமம் இருப்பதாகத் தெரியவில்லை.

    நூறு சதவிகித குற்றங்களில் நம் கவனம் பெறுவது பாதிக்குப் பாதிதான். அதில் அரசியல், அதிகாரம், செல்வாக்கு, பணம், புகழ், பேர், அந்தஸ்து என்று உள்ளே நுழைந்து அதுவும் பாதியாகக் குறைத்து விடுகிறது. அந்த 25 சதவிகிதம்தான் நாம் இங்குப் பேசி கலாய்ப்பதும், பேசாமலே அங்கலாய்ப்பதும், பேசி உடன்படுவதும், பேசி முரண்படுவதும், வாதமும் மற்றும் பிரதி வாதமும்.

    எல்லோருக்கும் எல்லாம் தெரிகிறது. என்ன கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அதுதான் ஆணி வேரின் அச்சத்தை ஆட்டிப் பார்ப்பதும், ஆணியே புடுங்க வேண்டாம் என்று பேசித் தீர்ப்பதும்

    ஒரு சினிமா சம்பந்தமான தீர்ப்புக்கு தரும் முக்கியத்துவத்தை ஏன் நிலுவையில் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு நம் அரசாங்கம் தருவதில்லை (நாமும் காரில் சென்று இலவச டிவி, இலவச ஃபேன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்). திடும்மென உள்ளே புகுந்து அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றவனுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்கள். ஹிட்லரையும் மன்னிக்கச் சொல்கிறதா உங்கள் தத்துவம்? பிறகென்ன? ராஜபக்சேவையும் மன்னித்து விடலாமா? அங்கு மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, இங்கு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அத்தனைப் பேரையும் அல்லவா தூக்கில் இட வேண்டும்!!! என்னையும் உள்பட.

    மக்களுக்கான, இந்த மண்ணுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு போராளிக்கு தரும் தண்டனை, அது எதுவாக இருந்தாலும், ஒரு போதும் அதை அனுமதிக்க முடியாது, சட்டம் சரி இல்லை என்று கூறுபவனை எல்லாம் வெட்டிக் கூறு போட்டுத் தூக்கில் ஏற்றி விட்டு பின் யாருக்காக இந்த அரசாங்கம் நடக்கும்? ஆனால், அதே சமயம் ஒரு தீவிரவாதிக்கு தண்டனை தராமல் போவதும் சரி அல்ல. இப்போது தான் பிரச்சினைக்கு வருகிறோம். இங்குத் தீவிரவாதி யார்? போராளி யார்? இக்கேள்வி மிகப் பெரிய பதிலை நம் முன்னே வைத்துக் கொண்டு நிற்கிறது. நம் உலகப் பார்வை எடைக்கு அதிகமான எடையை எப்படித் தாங்குவது? தோற்கும் போது அவன் தீவிரவாதி ஆகிறான், வெற்றி பெற்றால் போராளி ஆகிறான் என்ற ஈர வெங்காய வசனங்களை தவிர்த்துப் பார்ப்போம். எல்லா வாதத்துக்குப் பின்னும் ஒரு மிகப் பெரிய வலி இருக்கிறதே இதை எப்படி உள் வாங்குவது? அல்லது கையாள்வது? எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டவையே, கொலையும் கற்பழிப்பும் இந்தச் சமுதாயம் சொல்லிக் கொடுத்ததுதான் என்று ஒரு குற்றவாளி சமுதாயத்தைப் பார்த்து கை நீட்டும் உரிமை குற்றவாளிக்கும் உண்டு என்று பேசும் அதே வேளையில்; அன்பும் அரவணைப்பும்தான் இந்தச் சமுதாயம் கற்றுக் கொடுத்தது என்று அவர்களைப் பார்த்து கை நீட்ட சட்டத்துக்கும் உரிமை உண்டு என்பதையும் மறுக்கவியலாது.

    ஒரு தீவிரவாதியை தூக்கில் தொங்க விடாமல் தடுக்கும் மனித உரிமை, அந்தத் தீவிரவாதி சுட்டுத் தள்ளிய அப்பாவி உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? “சரி நீ சுட்ட, நானும் சுடறேன்” என்று கூறுவது பரிணாமமா? என்று கேட்கும் மானுடர்களிடம் மீண்டும் ஒரு கேள்வியைத்தான் கேட்க முடிகிறது. சரி, என்னதான் செய்யலாம். மன்னித்து விடலாமா ? இப்படி மன்னித்து விட்டு விட்டுத் தானே துப்பாக்கிக் கிடைத்தவனெல்லாம் போராட்டம் செய்கிறான். போராட்டம் முக்கியம்தான். அந்தப் போராட்டம் எந்தப் புள்ளியில் தீவிரவாதத் தன்மையில் இருந்து விலகி நிற்கிறது? என்பதைப் பற்றிய சிக்கலையும் ஆராய வேண்டி இருக்கிறதே. அதே சமயம் போராடிப் போராடித்தான் இந்த அளவுக்காவது இங்கு பேசும் உரிமையைப் பெற்று இருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாத இடத்தில் நின்று ட்ரிகரை சுற்றி ஒரு கதாநாயகன் போல சிரித்து சிந்திக்கவும் வேண்டி இருக்கிறது.

    ஆனால் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வராமல் குட்டிச் சுவராய் நின்றுவிட்ட மனநிலை கொண்ட தத்துவத்தில் துருப் பிடித்த அறிவீனமாய், அம்பேத்கரின் பாடலைப் பாடிய மனிதனைக் கொன்று போட்ட சமுதாயத்தை என்ன சொல்வது? எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது? இப்போது, கொன்றவர் தீவிரவாதியா? போராளியா? மனநிலை பாதித்தவரா சாதி வெறி பிடித்தவரா? இல்லை, தன்னைக் கடவுளாக உணர்ந்தவரா? இல்லை, கடவுள் மறுப்பாளரா? (மிருகமென்று எல்லாம் தயவு செய்து சொல்லாதீர்கள்).

    ஆசையை அடக்குதல் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆசையே வராத மனநிலையைப் பற்றி பேசுவது குறைவு. தவறு, அதன் பின்னணி என்று நீண்டு கொண்டே செல்லும் சங்கிலியின் ஆரம்பம் தனி மனித ஆசையாகத்தான் இருக்கிறது. இங்குதான் பொதுவுடைமை வருகிறது. சரி, பொதுவுடைமை என்றால் என்ன? அது காலத்துக்கு தகுந்தாற் போலத் தன்னை மாற்றிக் கொண்டே போகிறதோ என்று கூட ஒரு எண்ணம் தோன்றுகிறது.

    தனியுடைமையாக எல்லா தவறுக்கும் ஒரு சரி இருக்கிறது. சரி… அந்த சரி, எல்லோருக்கும் சரியாக இருக்கிறதா என்று யோசிக்கும் போதுதான் தவறாகிறது. எல்லா தவறுக்கும் தண்டனை உண்டா என்றால், அது மீண்டும் நீளும் கேள்வியாக போகிறது. சரியைத் தவறு என்று வாதிட்டு சம்பந்தப் பட்டவரை வெளியே கொண்டு வரும் வழக்கறிஞர்களையும், தவறே செய்யாதவனை உள்ளே தள்ளி காலம் முழுக்க கொன்று கொஞ்சம் கொஞ்சமாய் குவித்துக் கொண்டே இருக்கக் காரணமான வழக்கறிஞர்களையும் என்ன செய்யலாம்? சரி, எல்லாம் சரியாக இருந்தும் நீதிபதி குளறுபடி செய்தால் என்ன செய்வது? இதில் வருடத்துக்கு 30 முறை ஓட்டுப்பதிவு வேறு. இந்த மாதிரி இருக்கும் சமுதாய, அரசியல் சூழ்நிலையில்தான் தண்டனைப் பற்றியும், தவறுகள் பற்றியும், சட்டம் பற்றியும், குற்றம் மற்றும் அதன் பின்னணி பற்றியும் வாய் கிழிய (விரல் கிழிய) எதையோ சொல்கிறோம் எதையோ எழுதுகிறோம்.

    முகநூலில் நான் தூங்குகிறேன் என்று ஸ்டேடஸ் போடுவதும், ட்விட்டரில் நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போடுவதுமே புரட்சி என்று ஆகி விட்ட சூழ்நிலையில், புரட்சி பற்றி வேறு எப்படி தான் பேசுவது. சரி ஆளுக்கொரு துப்பாக்கி தூக்குவோம் என்றால் அதற்கும் இங்கு வழி இல்லை. கள்ளத் துப்பாக்கிதான் கிடைக்கும், எல்லாமே கள்ளப் பொருளாகி விட்ட நம் சந்தையில். நாம் பொருளற்றவர்களாகி போனதுதான் தத்துவமோ என்னவோ. வெளி நாட்டுக்காரன் வேண்டாம் என்று கூறிய குப்பைகளையெல்லாம் உபயோகப் படுத்த தயாராக இருக்கின்ற நாம், ஆங்கிலத்தில் தான் சிரிக்கவே செய்கிறோம் என்பது எத்தனைக் கேலியான கூத்து?!

    இது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் தோழர்களே. போலி எது? நிஜம் எது? என்று இனம் பிரித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எது நிஜமான தூக்கு? எது நிஜமான கொலை? எது நிஜமான அரசியல்? எது நிஜமான உரிமை? என்று நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

    காசு வாங்கிட்டு ஒட்டு போடுகின்ற சமூகம் உருப்படுமா? காசு கொடுத்து ஒட்டு கேட்கின்ற அரசியல் பிழைப்பிடமா?

    தண்டனைகள் வலுப் பட வேண்டும் அதே சமயம் நிரபராதிகள் விடுவிக்கப் பட வேண்டும். இங்கு மூடி மறைத்திட்ட அறியாமைத் திரைக்குள் யார் தீவிரவாதிகள்? யார் போராளிகள்? என்று எப்படி இனம் காணுவது. மிகப் பெரிய சிக்கலை இன்றைய உலகமயமாக்கலும், நவநாகரீகமும் விதைத்துக் கொண்டு இருக்கிறது, புதைத்துக் கொன்றுமிருக்கிறது. ஒரு பக்கம் சட்டம், தான் செய்யும் கடமை ஒரு பக்கம், எதற்கெடுத்தாலும் போராட்டம். மறியல்… சண்டை… ஒரு பக்கம், ஒன்றுமே புரியாமல் புரிய விடாத சமுதாயத்தை கண்டும் காணாமலும் இருக்கும் மன உளைச்சல்.

    வர்க்கப் போராட்டங்கள், சாதி மத போராட்டங்கள், நிலம் மோசடி பற்றிய போராட்டங்கள், ஊர்… நாடு எல்லை பற்றிய போராட்டங்கள். டாஸ்மாக் போராட்டங்கள், இதில் திருட்டு டிவிடி போராட்டங்கள். கள்ளக் காதல், காதல், கல்லூரி சண்டை, முக நூல் சண்டை, ஓரின சேர்க்கை போராட்டங்கள். சரி… விடுங்கள் போராட்டங்கள்.

    நான் என்ன சொல்ல வருகிறேன் என்று சரியாக புரியவில்லை என்றால் நான் சரியாக எழுதி இருக்கிறேன் என்று அர்த்தம். இதுதான் இன்றைய தனிமனிதனின் குழப்பப் பார்வை அவன் அப்படி ஆகி விட்டான் அல்லது ஆக்கி விட்டோம்.

    வலுத்தவன் எடுத்துக் கொள்ளும் சட்டம் உடையட்டும் இல்லையெனில் (எடுத்துக் கொள்வதென்பது அரச, அதிகார, வர்க்க, முதலாளித்துவ, தனியுடமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) …

    “இருப்பவன் தரமாட்டானென்றால். இல்லாதவன் விடமாட்டான்.”

    Share
  • முகம்

    –கவிஜி.

    இதோ, இப்போது தொட்டு விடலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால் நெருங்க நெருங்க தூரம் போய்க் கொண்டே இருந்தது வானம். அது யாரின் கை என்று தெரியவில்லை. அவன் மேல் நோக்கிதான் பார்க்கிறான். அவன் கையை பிடித்து அவனை மேலே மேலே, மேலே தூக்கிக் கொண்டு போவது மட்டும் யாரெனத் தெரியவேயில்லை. உடலில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும், சில்லிட்டு போகச் செய்யும் ஆனந்த பூங்காற்றும், அவனை எடை இழக்க செய்தது. தன்னை ஒரு சருகாக உணர்ந்தான். அங்கே ஓர் இலையுதிர்ந்த மரம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மரமே வானத்தின் தொடக்கமாக இருக்கும் என்ற அவனின் கற்பனை, அவனை ஒரு வித மாயத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது. ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் காட்சியை அவனால் நன்றாக உணர முடிகிறது. மூச்சு வேக வேகமாக உள்ளிழுக்கப்பட்டு, தட்டுத் தடுமாறி, உடல் நடுங்கி, வியர்த்து, தலை சுற்றுவது போல் உணர்ந்து…

    பிடித்துத் தூக்கிச் சென்ற கை சட்டென தன் பிடியை தளர்த்த, இலையுதிர்ந்த மரம் நோக்கி பறந்து கொண்டிருந்தவன் மைக்ரோ வினாடியில் படுக்கையில் கிடந்தான். வேக வேகமாய் மூச்சு வாங்கியது. சட்டென திறந்த விழிகள் திரு திருவென வெற்றிடங்களை வரி வரியாய் ஆராய்ந்தது.

    எது நிஜம்? தூங்கியதா? பறந்ததா? பறக்கும் போது தூங்கியது தெரிந்ததே. தூங்கிய போதும் பறந்தது தெரிந்ததா? யோசிக்க யோசிக்க சிறுநீர் கழிக்கத் தோன்றியது. மெல்ல எழுந்தான் உடம்பெல்லாம் ஏதோ வலி. புதிய புதிய சிந்தனைகள் அவனுக்குள் ஒரு காட்டாற்றைப் புரட்டிக் கொண்டிருந்தது. மெல்ல எழுந்தவன் கழிவறை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கண்ணில் ஏதேச்சையாக அவன் அறையில் வைக்கப் பட்டிருந்த ஆளுயர கண்ணாடி தென்பட்டது. பார், உற்றுப் பார் என உள்ளுணர்வு சொல்வதாக ஒரு உணர்வு ஏற்பட, உற்றுப் பார்த்தான். அவனின் முகத்தை உற்று உற்று பார்த்தான் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

    மனிதனின் மிகப் பெரிய ஆபத்தான கண்டு பிடிப்பான, அந்த நிலைக் கண்ணாடியில் அவனின் பிம்பம் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. அது வெறும் பார்வை அல்ல அது தேடல். எங்கே அந்த சிறகு? அந்த இலையுதிர்ந்த மரம் கடைசியாக கை நழுவும் நேரத்தில் சொன்ன நினைவுகளை கண்ணாடிக்குள் தேடியதாக அவனின் முக பாவனை இருந்தது. அமைதியாக பார்த்துக் கொண்டேயிருந்தான்.

    பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவனின் தம்பி ராமை என்னடா போட்டோவை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நெற்றி சுருக்கி யோசிக்க வைத்தது.

    “ராம், இங்க வா”, என்றான் அவன்.

    ராம் வந்தான். ‘என்ன?’ என்பது போல பார்த்தான்.

    அவன் போட்டோவில் இருந்து பார்வையை திருப்பாமல் போட்டோவில் இருப்பது யார் என்று கேட்டான்.

    ‘சரியாப் போச்சு’ என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு, “போடாங் கொய்யால அவனவனுக்கு டெஸ்ட், சைக்கிள், டெஸ்ட், மிட் டெர்ம்னு உயிர் போற வேல எவ்ளோ இருக்கு” என்று தொடர்ந்த ராம், “அவன் போட்டோவப் பார்த்துட்டு அவனே யார்னு கேக்கறான்” என்று முணங்கியபடியே பள்ளி செல்ல வெளியேறினான்.

    அடுத்து அம்மா வந்தாள். பையனின் எப்போதும் போலானதொரு விளையாட்டு என்றே முதல் பார்வையை வீசினாள்.

    மெதுவாக, ஆனால் அழுத்தமாக கேட்டான், “அம்மா அந்த போட்டோல இருக்கறது யாரு?”

    “என்னாச்சு தேவன்? ஏன் காலையிலேயே கடுப்படிக்கற?”

    “அது யாருன்னு சொல்லும்மா, எனக்கு தெரிஞ்சாகனும்.”

    தேவனின் வார்த்தைகள் பற்களுக்குள் சிக்கி தடுமாறி குழப்பத்திற்கான ஆரம்பமாய் நெளிந்தது.

    “அட லூசுப் பயலே, அது நீ தாண்டா,” என்றபடியே சமையலறைக்குள் செல்ல முற்பட்டவளை மீண்டும் அழைத்தான்.

    “அம்மா, என்னாச்சும்மா உனக்கு? அது நானா? நல்லா பார்த்து சொல்லும்மா அது நானா??????”

    தேவனின் முகம் யோசித்தபடியே தடுமாறியது.

    இவன் விளையாடறானா? இல்லை நிஜமாகவே ஏதாவது பிரச்சனையா? என்ன இப்படி குழப்பறான்? சமையலறைக்குள் செல்வதை விட்டு விட்டு அம்மா தேவனின் அருகே வந்தவள், “என்ன ஆச்சுடா? உடம்பு ஏதும் சரியில்லையா?” என்றாள். உள்ளுக்குள் ஒரு வித பயம் பந்து உருட்டத் தொடங்கியிருந்தது.

    “ஐயோ, அம்மா, எனக்கு ஒண்ணும் இல்ல. இந்த போட்டோ புதுசா இருக்கே அது தான் யாருன்னு கேட்டேன்,” என்றான் இயல்பாக.

    இல்லை. கண்டிப்பாக தேவன் விளையாடவில்லை, அவனின் போட்டோவைப் பார்த்து யார் என்று கேட்பது விளையாட்டு இல்லை என்பதை உள்ளம் உணர, பாதங்களில் நடுக்கம் வரத் துவங்கியது அம்மாவுக்கு. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “தேவன் விளையாடாத, காலேஜ்க்கு நேரமாச்சு. கிளம்பு,” என்று சொல்லி விட்டு வேக வேகமாய் சமையலறைக்குள் சென்று, சட்டென திரும்பி ஒளிந்து நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று கவனிக்கத் துவங்கினாள்.

    தேவன், தன் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தான். இடப் பக்கமிருந்த நிலைக்கண்ணாடியிலும் தன்னைப் பார்த்தான். மாறி மாறிப் பார்த்தான், பின் கத்தினான், “அம்மா இங்க வா, அம்மா”.

    மீண்டும் அவன் கத்துவதற்குள், இது ஏதோ விபரீதம் போலத்தான் என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டே அவனருகே வேக வேகமாய் வந்தாள்.

    “என்னடா, ஏன் இப்படிக் கத்தற?” என்றாள் இயல்பாக இருப்பது போல. அவளின் உள்ளம் தாறுமாறாக தடுமாறிக் கொண்டிருக்க, கண்களில் அனிச்சையாக அவனின் போட்டோவும், கண்ணாடியும் விழுந்து கொண்டிருந்தது.

    “அம்மா, புரிஞ்சுக்கோ, ஆமா, நீ ஏன் இப்படி நடுங்கற? உனக்கு என்னமோ ஆயிடுச்சு, அது என் போட்டோன்னா, கண்ணாடியில தெரியிறது யாரோட முகம் பாரு என்றான்கண்ணாடியைக் காட்டி.

    மெல்ல கண்ணாடிக்குள் பார்த்தாள். “என்னடா உளர்ற? கண்ணாடியிலையும் நீதாண்டா தெரியற,” விட்டால் அழுது விடுவாள் போல.

    “ம்ம்… இது தான் சரி. கண்ணாடிலதான் நான் தெரியறேன். அது தான் என் முகம். இந்த போட்டோல இருக்கறது என் முகம் இல்ல,” என்றான் அழுத்தமாக.

    “தேவன், அடி வாங்கப் போற. இந்த போட்டோவ உனக்கு நினைவில்லையா? அதுல இருக்கறது நீயில்ல… இல்ல? என்ன கதை விட்டுட்டு இருக்கறயா? ம்ம்..” கண்கள் கலங்கியபடியே அம்மா மிரட்ட, மாறி மாறிப் பார்த்தவன், தலையைப் பிடித்துக் கொண்டு கீழே சரிந்தான்தேவன்.

    போட்டோல இருக்கற தன் முகத்தை யாருன்னு கேக்கறான்னா, கண்ணாடியில தெரியிற அவனுடைய முகம் வேற ஒருத்தரோட முகமாத்தான் இருக்க முடியும். அதாவது, தன் முகத்தையே மறந்து வேறொரு முகத்தை தன் முகமா அவனோட மனசும் மூளையும் நினைக்குது. அந்த முகம் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியுது. இப்போதைக்கு அவன் நினைக்கற, பாக்கற முகத்தையே நாமளும் பார்க்கற மாதிரி அவன்கிட்ட காட்டிக்கணும், இது சயின்ஸ்ல.

    டாக்டர் அவர் முகம் போன போக்கில் பாவனைகளோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க.

    அம்மா மனக்கண்ணில் காலையில், தேவன் தன்னை இதுதான் தான் என்று கண்ணாடியில் காட்டிய அந்த பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவும் அவன் தானே.

    இன்னும் இன்னும்… ஆழமாக ஆழமாக… உற்று உற்றுப் பார்த்தாள். தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

    நாட்கள் நகரத் தொடங்கியது.

    ஒரு நள்ளிரவில் கண்ட கனவில், இலையுதிர்ந்த வான மரத்திலிருந்து ஒரு சருகு மெல்ல மெல்ல காற்றின் கைகளில் தவழ்ந்து தவழ்ந்து அவள் வயிற்றில் விழுவதாக காட்சி முடிய, வெடுக்கென மூச்சு வாங்கி எழுந்து அமர்ந்தாள். அவளின் கண்கள் தானாக கண்ணீரை கொட்டத் தொடங்கியது. ஆழ்மனதிலிருந்து ஒரு அழுகுரல் அறையெங்கும் தவழத் தொடங்கியதாகத் தோன்றிய ஒரு எண்ணத்தில்…

    தேவனுக்கு முன்னால், இப்போது குழந்தை வேண்டாம் என்று கலைத்த அந்த இரண்டு மாத கருவின் உருவம் சருகாய் மிதந்தது …

    Share
  • தேவ(தை) மனிதன்!

    -கவிஜி 

    இரண்டாவது கோடரி
    தங்கத்தில் கிடைத்த பின்னும்,
    இல்லை என்றவன்
    மூன்றாவதாகத் தன்
    கோடரியோடு மற்ற இரண்டும்
    கிடைத்த போதும்
    கோடரிகளே எனதில்லை
    என்று வேகமாய்த்
    திரும்பினான்…

    தலை வணங்கி நின்றன
    மரங்கள்,
    தேவதை அதுவல்ல…
    இவன்தான் என்று!

     

    Share