Tag: இன்னம்பூரான்

  • இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [1]

    இன்னம்பூரான்
    ஜூன் 11, 2016

    hinduism-and-women

    பல வருடங்களாக பெண்ணியத்தைப் பற்றி பலர் எழுதுவதைப் படித்து வருகிறேன். எனக்கும் அது பற்றி ஆழமான கருத்துக்கள் உண்டு. சமுதாயத்தின் பல படிநிலைகளில் வாழும் மனிதர்களுடன், குறிப்பாக பெண்பாலாருடன் என்னால் இயல்பாகப் பழக முடிவதால், பெண்பாலாரில் பலரின் கருத்துக்களம், எண்ணவோட்டம், நினைவலைகள், உள்ளக்கிடக்கை, செயல்பாடுகள், அணுகுமுறை, வாழ்க்கை வழங்கிய மர்மங்கள் ஆகியவற்றை, சட்டப்பூர்வமான ஆலோசகன், நண்பன், நேசன், காதலன், கணவன், உடன்பிறப்பு, வாரிசுகள் என்ற பலவித கோணங்களில் ஓரளவு புரிந்து கொள்ளும் வாய்ப்பு பல வருடங்களாக எனக்குக் கிட்டியிருந்ததாலும், தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பேன் என்று மகளிர் என்னிடம் நம்பிக்கை வைத்திருப்பதாலும், என்னுடைய ஆழமான கருத்துகள் அசைக்கப்பட்டுள்ளன, கிளரப்பட்டுள்ளன. முரண் தோன்றி மறைந்ததும் உண்டு. இனியும் மாறலாம், தீவிரமான சிந்தனைகள் பகிரப்பட்டால். என் பேச்சுரிமை தங்கு தடையில்லாமல் இயங்கும்.

    பெண்ணியம் ஒரு மென்மையான சமுதாய சிந்தனை, நடைமுறை, எதிர்பார்ப்பு. மெல்ல, மெல்ல நடக்கும் புரட்சி. உலகெங்கும் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக நியாயம் கிடைக்கவில்லை. என் பாட்டி பள்ளி சென்றதில்லை. ஆனால், அவளுடைய தெளிவு வீட்டு ஆண்மகன்களில் சிலருக்கு சுத்தமாக இல்லை. என் அத்தையை படிக்கவைத்திருந்தால், அவர் கண்டிப்பான நிர்வாகத்தை வழி நடத்தியிருப்பார். ஏன்? தானே பக்கோடா பொட்டல காகிதத்தைப் பின்னர் படித்து வியக்கும் வகையில் விமர்சனம் செய்வார். பல மொழிகள் கற்றுக்கொண்டார். என் தங்கைகளின் படிப்பு படி தாண்டவில்லை. அடுத்த தலைமுறையில் முனைவர்களும், கலைஞர்களும், நிர்வாகிகளும் தலை எடுத்தனர்,என் பாட்டி படித்திருந்தால், நாங்கள் எங்கேயோ போயிருப்போம். சுற்றத்தில் இந்த முன்னேற்றம் குறைவு. ஆனால், காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் உண்டு. யாருமே குற்றம் காணவில்லை.

    தலித்துகளில் கடை நிலை எனப்படும் ஆதி அருந்ததி குடும்பம் ஒன்று எங்களுடன் வாழ்கிறது. தலைவியை இந்திரா காந்திக்கு ஒப்பிட்டால், மிகையாகாது. சாக்கடையை துப்புறவு செய்யும் அவரும், அவரது பெருந்தன்மை கணவரும், தங்கள் குக்கிராமங்களிலிருந்து வறுமையான குடும்பங்களை வரவழைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, பற்பல உறவினர் முன்னேற ஏற்பாடு செய்தார்கள். [அவர்கள் இப்போது இல்லை]. பிராமணகுடும்பங்களில் இதைக் கண்டிருக்கிறேன், மிக சொற்பமாக. ஆனால், பெண்கள் பின் தள்ளப்படுவார்கள். அப்படி வந்த இரண்டாம் தலைமுறை வாரிசு, இன்றளவும் எங்களுடன் 40 வருடங்களாக தொடர்பில் இருக்கிறார். அத்தகைய குடும்பங்களில் கணவன்மார் குடிபோதையில் இருப்பார்கள். வீட்டுக்கு சல்லிக்காசு கொடுக்கமாட்டார்கள். மகனும், மகளும் படித்து முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தால் தலித் சான்றிதழ்களை கூட தர மறுத்தான், அவளுடைய கணவன். என்னிடம் செம்மையாக அடி வாங்கின பின் தான் தந்தான். ஒரு பிரபல தலித் உத்தியோகஸ்தர் உதவியுடன், ஒரு ஐயங்கார் வந்து சிறார்களுக்கு சான்றிதழ் வாங்க உதவினார். ஆனாலும் நம் தலைவிக்கு பெண்ணை படிக்க வைக்க ஆர்வமில்லை; கணவன் கிடைக்கமாட்டான் என்ற கவலை. என் மனைவி வஸந்தா அடம் பிடித்து, அந்தப் பெண்ணை படிக்க வைத்தாள். அந்தப் பெண் தடபுடலாக ஆங்கில இலக்கியத்தில் முது நிலை பட்டம் வாங்கியுள்ளாள். சுருங்கச்சொல்லின், பெண்மையை நசுக்க விரும்புவது ஆண் வர்க்கம்; உதவி அந்தந்த தலை முறை பெண் சமுதாயம். இன்று கூட, ஒரு மேல்மட்டத்தை சார்ந்த முதிய பெண்மணி ‘பெண்கள் இருக்கும் இடம் தெரியக்கூடாது; வேலைக்கு செல்வது கற்பை குலைக்கிறது என்றார். எனக்கு வேண்டப்பட்ட ஒரு செல்வந்தர், நாயக்கர் இனம். தன் பெண்ணின் திருமணத்துக்கு என்னை அழைக்க வந்தார், குடும்பத்துடன். எல்லாரிடம் அவருடைய நன்கு படித்த மணப்பெண் வேலைக்கு செல்வாள் என்று சொல்லி விடுங்கள் என்ற சத்தியப்பிரமாணம் வாங்கினேன். என்னிடம் சம்மதம் சொல்லி விட்டு, அங்கு திட்டமிட்டு, அதை கோட்டை விட்டார். இது எல்லாம் 2016ம் வருடம். இது நிற்க.

    இவ்வாறு என்னை எழுதத் தூண்டியது சில மணி நேரம் முன்னால் வந்த ஒரு நாளிதழ் செய்தி. டாடா உலகளாவிய ஒரு மாபெரும் தனியார் மூலாதார நிறுவனம். அதன் பிரிவுகள் பல. ஒவ்வொன்றும் பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல், மற்றும் பற்பல. அந்த மூலாதார கம்பெனியில் 1.45 லட்சம் பெண்கள் ஊழியத்தில் இருந்தும் உயர்ந்த பதவிகள் அவர்களுக்குக் கிட்டுவது அரிது. பலர் பொறுப்பான பதவிகள் வகிக்கிறார்கள், ஒரு எல்லைக்கு உட்பட்டு. ஒரு ஆணுக்கு அந்த எல்லையில்லை. ஒரு நிறுவனத்திலாவது தலைமை பொறுப்பு பெண்ணினத்துக்குக் கொடுக்கப்படவில்லை.

    இது மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல. தற்காலம் முதன்மை பொறுப்பு ஏற்று இருக்கும் திரு.சைரஸ் மிஸ்திரி அவர்கள் 2020ம் ஆண்டுக்குள் ஆயிரம் மேலாண்மை பொறுப்பு பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, இப்போது 300 பெண் அதிகாரிகளுக்குத் தீவிரபயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதன் நுட்பம் யாதெனில், எல்லாவிதமான துறைகளின் தலைவர்கள் பயிற்சி அளிப்பதால், இந்த பெண்ணரசிகள் எல்லாத் துறைகளிலும் துரிதமாக முன்னேற முடியும் என்பதே. திரு.சைரஸ் மிஸ்திரி அவர்களின் கனவு நனவு ஆகட்டும் என வாழ்த்துவோம்.

    சீரும் சிறப்புமாகவும் முன்னோடியாகவும் திகழும் டாடா நிறுவனத்திலேயே இந்த கதி. மற்றவர்களை பற்றி கேட்கவேண்டாம். ஆண் சுவபாவத்தை பற்றி ஒரு உண்மை விளம்பல். எங்கள் தணிக்கைத்துறையில் அல்லி ராஜ்யம் என்று சொல்லலாம். பெண் அதிகாரிகள் தான் அதிகம். நான் 1955ல் சேர்ந்த போது பெண் அதிகாரிகள் பத்து பேர்கள் கூட இல்லை. ஆரம்பகாலத்தில் பெண் அதிகாரிகளிடம் வேலை செய்வதை நான் தட்டிக்கழிக்கப் பார்த்தேன். ஆனால், பெண் அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைத்தது. பெண்ணினத்தின் திறன் புரிந்தது. 25-30 வருடங்கள் முன்னால், ஆணாதிக்கம் கொடி கட்டி பறந்த ஒரு அலுவலகத்தில், ஒரு இக்கட்டான நிலையை சமாளிக்க ஒரு பெண்ணதிகாரிக்கு நான் கொடுத்தப் பொறுப்பு மிகுந்த பக்குவத்துடன் கையாளப்பட்டது. அதனால், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது பெரிய கதை. யாராவது கேட்டால், பார்த்துக்கொள்ளலாம்.

    பல காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை நான் இணைத்து வழங்கியதின் காரணம்: பெண்ணியம் தலையெடுக்க சமுதாயம் திருந்த வேண்டும். மேலும் திடுக்கிடும் அட்டூழியங்களைப் பற்றி எழுத விருப்பம். பார்க்கலாம். வெறும் பேச்சு வீண்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    https://lh3.googleusercontent.com/-p7Iu97JWTgM/TYCzTPJe1WI/AAAAAAAAGws/Mkwo65IlHHo/s1600/hinduism-and-women.jpg

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 1 [3] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [3]

    இன்னம்பூரான்
    6. 6. 2016

    “பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
    முழுமைக்கும் பொது உடைமை…ஒப்பிலாத சமுதாயம்…உலகத்துக்கொரு புதுமை…” என்று பாடிய மகாகவி சுப்ரமண்ய பாரதியார்…தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் “ என்றும் சூளுரைத்தது ஆவேசம் மட்டுமல்ல. அதனுள் ஒரு பொருளியல் தத்துவம் அடங்கியுள்ளது. அந்த தத்துவம் உலகுக்கு பொதுமை. நடைமுறை அவ்வாறு இல்லாததால், ஏழ்மையும் திரவிய செருக்கும் எல்லா நாடுகளிலும், அக்கம்பக்கத்தில் பரவி வாழ்கின்றன. இது நிற்க.

    இந்தியா விடுதலை பெற்ற 1947ம் வருடம் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய். அந்த டாலரை 67 ரூபாயில் வாங்க, இன்று சிங்கி அடிக்க வேண்டி இருக்கிறது. அரசியல் பொருளியலாகவும், பொருளியல் அரசியலாகவும் மக்களை அலக்கழித்தால், ஏன் ரூபாய் தம்பிடியாகாது! ‘ஸப்ஸே படா ருபையா’ என்று மகமூது 1976ல் எடுத்த சினிமா ஒரு பொருளியல் விசாரணை: பாரத சமுதாயம் வாழ்கவேண்டும் என்றால் மக்களிடையே/ உலக சந்தையில் ரூபாய் மதிக்கப்படவேண்டும் என்பதே. இதுவும் நிற்க.

    தலைப்புத்தேதியை 6 . 6. 66. கவனிக்கவும். என் சம்பந்தப்பட்டவரை அது மறக்க முடியாத தேதி. எனக்கு ‘உகாய்’ என்ற அடைமொழி ஒன்று உண்டு. தபதி நதியில் உகாய் என்ற பழங்குடி கிராமத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுப்பணி , மற்றும் பல அரசு ஊழியங்களிலும் நிதி ஆலோசகராக பணி ஏற்றத் தருணம். நிதி தான் தட்டுப்பாடு. 6.6.66 அன்று மத்திய அரசு திடீரென்று ரூபாயின் மதிப்பை 37.5% சரித்து விட்டதால், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருந்த எல்லா வெளிநாட்டு கனரக ஊர்திகளின் இறக்குமதி செலவு விண்ணை தொட்டது. முதல்வர் என்னை அழைத்து ‘சிக்கனம் செய்வாயாக’ என்று ஆணையிட்டார். நானும் கோடிக்கணக்கில் செலவை குறைத்தேன். அப்படியும் போறாக்குறை தான். இதுவும் நிற்க.

    கி.பி. ஆறாவது நூற்றாண்டிலேயே ரூபாய் நாணயம் உருவெடுத்தது. ஷெர்ஷா சூரி என்ற மாமன்னரின் காலத்தில் தான் (16வது நூற்றாண்டு) வெள்ளி ரூபாய் அச்சடிக்கப்பட்டது. (அவர் தான் நாடு முழுதும் நீண்ட ராஜபாட்டை அமைத்தார்.). இந்தியா முழுதும் வணிகம் பொருட்டு, லேவாதேவி பொருட்டு பண நடமாட்டம் கனஜோராக 18ம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. வழிப்பறி கொள்ளையும் அடக்குமுறையும் நிலுவையில் இருந்தன.

    விடுதலை பெற்ற காலகட்டதில் நம்மிடையே பிரபல நிதி அமைச்சர்கள் இருந்த போதிலும், ‘ the monkey called ‘money’ – in Crowther’s words) பற்றிய நுட்பங்கள் ஆளுமையில் உற்றதொரு இடம் பெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் சோவியத் ரஷ்யாவை நாடியது. அமெரிக்காவுடன் உறவாட இந்தியாவும் தயங்கியது. சோவியத் ரஷ்யாவும் கவனத்துடன் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இறக்குமதி ஒவ்வாமையை, போதிய காரணமில்லாமல் இந்தியா, கடை பிடித்ததால், தளவாட இறக்குமதியெல்லாம் ரஷ்யாவிடமிருந்து; ரூபிள்-ரூபாய் நீண்டகால ஒப்பந்தம் இந்தியாவை தலையெடுக்கவிடவில்லை.

    இந்த அழகில், பொன்னும், பவுனும் ரூபாய்க்கு அடிப்படை என்ற கொள்கை இருந்தது. 1947ல் ஒரு ரூபாய்க்கு 4.15 க்ரைன் பொன் வாங்கலாம். 6.6.66. அன்று அது 1.83 க்ரைன் ஆக குறைந்தது. ஒரு நாள் முன்னால் ஒரு டாலரின் விலை ரூ.4.75. 6. 6. 66. அன்று அது ரூ.7.50 ( 57%) ஆக எகிறியது. இதற்கு காரணம், இங்கிலாந்து பவுன் உடன் இணைந்து ஏறி இறங்கியது ரூபாய். பவுனோ, டாலருடன் இணைந்து ஏறி இறங்கியது. ஆகஸ்ட் 18, 1949 அன்றே, இந்த முதல் பாடம் நடந்த பின்னரும், இந்தியா பழைய சுருதியில் தான் இசைத்து வந்தது. பணவீக்கமும் 5.8%லிருந்து அடுத்த வருடத்திலேயே [1967] 6.7% அளவுக்கு ஏறி விட்டது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

    சைனா, பாகிஸ்தான் போர்களினால் அதீதமான செலவு ஏற்பட்டதாலும், ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டாலும், அதனால் பணவீக்கம் குறையும், இறக்குமதி தாராளமாகும், மேனாட்டு கொடை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளினாலும், இந்த தடாலடி நிறைவேறியது. வேறு வழிகள் தென்படவில்லை என்று கூட சொல்லலாம். ஆனாலும், அவ்வாறு நிறைவேறவில்லை. மறுபடியும். 1992ல், அக்காலத்து நிதி அமைச்சர் மன்மோஹன் சிங் ரூபாயின் மதிப்பை ( ரூ 25: டாலர் – ரூ.32: டாலர்) குறைத்தார். பின்னர், கோட்பாட்டை சந்தை உள்வாங்கிக்கொண்டது. அதனால் தான் நாள்தோறும் மாற்றங்கள். ரூபாய் மேலும் மேலும் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது, தற்காலம். எப்படி என்றால்:

    6. 6.66: $! = ரூ. 7.50.
    6..6.2016 $1 = ரூ. 67.

    தற்காலத்து அன்னிய செலவாணி பற்றாக்குறை: 1.5% மட்டுமே.

    இந்தியாவின் அன்னிய செலவாணி சேகரிப்பு $ 360 பிலியன் (ஒன்பது மாதம் தாங்கும்).
    2015ல் அன்னிய செலவாணி நல்வரவு அதிகமாக இருப்பது இந்தியா தான்.

    நம் இந்தியா சுபிக்ஷம் அடைய வேண்டும். சுப்ரமண்யம் சுவாமி – ரகுராம் ராஜன் – பிரதமர் விவகாரம் ஒரு பெரிய காண்டம். பின்னர் பார்க்கலாமா? முதலில் இதற்கு வாசகர்கள் கிடைத்தால் தானே, அங்கே போகலாம்.

    ஆவணப்பட்டியல்:

    http://www.livemint.com/Money/3wTK1Nm9I1fVeyHUIO5FAK/6-June-1966-A-date-to-remember-in-the-rupees-history.html

    http://www.hindustantimes.com/business/life-line-of-a-rupee-a-look-back-and-a-peek-into-the-future-of-currency/story-Ss7QcRTBXpm2gayPmQKg5J.html

    விழியம்:

    http://www.youtube.com/watch?v=qUoB80sKxc4″ target=”_blank”>Try watching this video on

    இன்னம்பூரான்

    Share
  • ‘இன்னம்பூரான் பக்கம்’.4.

    சமுதாயமும், நீயும், நானும், அவரும்.

    மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1

    இன்னம்பூரான்

    Word cloud concept illustration of diabetes condition
    Word cloud concept illustration of diabetes condition

    சில வருடங்களுக்கு முன் வல்லமையில் நீரிழிவு நோயை பற்றி எழுதியிருந்தேன். அதிகமான வாசகர்கள் என்றும் சொன்னார்கள். சென்னையின் ஒரு பிரபல டாக்டர் தன் ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் லாமினேட் செய்து அதை வைத்ததாக கடிதம் எழுதினார். செல்வன் மாற்றுக்கருத்து கூறினார். அது டாக்டர்களை பற்றி. ஆனாலும், நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை அசட்டுத்தனமாக இருக்கிறது. நாட்தோறும், முறைகேடாகத் தான், அபாயமாகத்தான் எதிர்சாரியில்பயணம் செய்கிறார்கள். இது நிற்க.

    நான் எந்ததொரு வைத்திய முறைகளையும், மேனாட்டு வைத்தியம், ஆயுர்வேதம், சித்தம், இயற்கை, ஹோமியோபதி, அக்குபஞ்சர் வகையறா எதையும் சிபாரிசு செய்யவில்லை. எல்லா முறைகளையிலும் நிவாரணமும் பக்க விளைவுகளும் உண்டு. ஆனால், நிச்சியமாக கொலை செய்யக்க்கூடியவர்கள், போலி டாக்டர்கள், அரைகுறை வைத்தியர்கள், சுற்றி வளைத்து, பொய்யை மெய்யாக்கும் விளம்பரங்கள், இயலாததை செய்து காட்டுவதாக உத்தரவாதங்கள். நீங்கள் உலகமெங்கும் சென்று உண்மையை ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீரிழிவு தீராத வியாதி. உணவு கட்டுப்பாடு, தேக பயிற்சி உதவும், ஆரம்பகாலத்தில். பின்னர் மருந்து, மாத்திரை. சிலருக்கு இன்ஸுலின் போட்டுக்கொள்ள வேண்டி வரும். அது தாய்ப்பால் போல. நான் நாட்தோறும் நான்கு முறை இன்ஸுலீன் போட்டுக்கொள்கிறேன். அதை நிறுத்தி விட்டு, அத்தையும், இத்தையும், கையாலகாதத்தையும் செய்வேன் என்ற வீராப்பு மக்களை ஏமாற்றுவது, வஞ்சகம், கொலைக்கு அஞ்சாத நெஞ்சம்.

    இந்த கதையை கேளுங்கள்: உசாத்துணையும் கொடுத்து இருக்கிறேன்.

    “இன்சுலின் ஊசியை நிறுத்தி சொன்ன அக்குபஞ்சர் டாக்டர்…. திருப்பூர் மாணவன் பரிதாப பலி By: Mathi Published: Saturday, May 28, 2016, 15:31 [IST] திருப்பூர்: “

    “அக்குபஞ்சர் டாக்டர் ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த மெக்கானிக் ஜெகதீஷ் என்பவரது மகன் சுபாஷ். பிளஸ் 2 படித்து வந்த சுபாஷ் 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தினமும் 2 முறை இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அக்கு ஹீலர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் அக்குபஞ்சர் டாக்டரான பாலமுருகனிடம் சுபாஷை ஜெகதீஷ் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திவிடுங்கள்… அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்கிறேன் என பாலமுருகன் கூறியிருக்கிறார். இதை கேட்டு ஜெகதீஷும் மகன் சுபாஷுக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் 2 நாட்களில் திடீரென சுபாஷின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போதும் ‘அக்குபஞ்சர்’ பாலமுருகனையே ஜெகதீஷ் தொடர்பு கொண்டு கேட்க நிலைமை சரியாகிவிடும் என கூறியிருக்கிறார். இருப்பினும் சுபாஷ் உடல்நிலை மோசடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அக்குபஞ்சர் மருத்துவரின் தவறான ஆலோசனையால் ஒரு இளம்தளிரின் உயிர் பறிபோயுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.”

    ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தியின் பகுதி:

    “…Asked about the matter, Balamurugan told Express that the boy might have been brought to him on the brink of death. “There are numerous patients whom I have cured. This case is one in a thousand. Other medical systems too do not guarantee saving life. They started taking treatment only after accepting my suggestion to stopping the insulin injections,” he said.

    Balamurugan, who owned a photo studio till 2010, completed his Diploma in Acupuncture Science through an open university course. He has been running a clinic at Ramnagar in Coimbatore from 2011.
    He accepted that there is no statutory body to register or regulate acupuncture healers, unlike systems of medicine like Siddha and Ayurveda.
    The family of Subash, who are yet to overcome the grief caused by his death, are yet to take a decision on proceeding with legal action against the therapist.

    There are numerous patients whom I have cured. This is one in a thousand. Other medical systems too do not guarantee saving life.”

    இந்தியா மண்ணின் மைந்தர்கள் ‘கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது’ என்றால் நம்பலாமா? நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.

    உசாத்துணை:
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/diabetic-teen-weaned-away-from-insulin-therapist-dies-at-tirupur-254747.html

    http://www.newindianexpress.com/states/tamil_nadu/Diabetic-teen-weaned-away-from-insulin-by-therapist-dies-at-Tirupur/2016/05/28/article3454446.ece

    சித்திரத்துக்கு நன்றி:https://smartypantsvitamins.com/wp-content/uploads/2013/04/Diabetes-wordcloud.jpg

    பழங்கதை:
    வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
    -ஆசிரியர்
    Innamburan Innamburan
    Mon, Nov 14, 2011 at 12:33 PM
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1
    சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள்
    விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.
    உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட? ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.
    நீரழியா வேதம்:
    பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
    தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
    நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே
    என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
    ‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.
    என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;
    சிறார்களை ‘கஷ்குமுக்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
    நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
    இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
    உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக், “கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
    மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.
    (தொடரும்)
    இன்னம்பூரான்
    14 11 2011

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: III:6 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[6]

    மானம் பறக்குது !

    இன்னம்பூரான்

    b4904e24-d17b-4131-93b9-9c2046fd0a0e

    ஒரு பென்சில் தயாரிக்கும் கம்பெனி. போர்டு தீர்மானம் போட்டு, அதன்படி ஒரு யானை வாங்கினார்கள். கம்பெனி ஆடிட்டர் போர்டு தீர்மானம் இருப்பதால் டிக் அடித்து விட்டார். அது கவர்மெண்ட் கம்பெனி. ஆடிட்டர் ஜெனரல் காரன் விடாப்பிடியாக பென்சில் கம்பெனிக்கு யானை எதற்கு என்று துளைத்து எடுத்து விட்டான்.

    அந்த மாதிரி இந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் விவகாரம் இந்தியாவின் மானத்தை பறக்க வைத்து விட்டது. ஹிந்து இதழில் தெரிவித்த ஆசிரியர் கருத்தின் சாராம்சம்: நாடாளும் மன்றத்தில் இந்த ஊழலை பற்றி பேசியது எல்லாம் பொருளற்றவை. இத்தாலிய்ன் கோர்ட்டில் இந்திய ராணுவத்தில் லஞ்ச லாவண்யம் அலசப்பட்டது. சோனியா போன்ற பிரமுகர்களை பற்றி குறை காணப்பட்டது என்றாலும், அவை ருசுவாகாத குற்றங்கள். ஆனால் நாம் அவற்றை தீவிரமாக விசாரிக்கவேண்டும். அந்த கட்டுரையின் மீது நான் எழுப்பிய வினாக்கள்: (1) ஸோனியா போன்றோர் ஒரு பிரமாணபத்திரம் தாக்கல் செய்யலாமே, பார்லிமெண்ட்டில் குய்யோ முறையோ என்று கூவாமல்.

    (2)இந்த விமானங்கள் ராணுவ உபயோகத்தை முன்னிட்டு ஆர்டர் செய்யப்படவில்லை. அரசியல் தலைவர்கள் உயர பறக்க ஒரு எல்லை வகுத்து, அதற்கு, இந்த கம்பேனி மட்டும் லாயக்கு என்றல்லவா செயல்பட்டார்கள். இந்த குட்டை ஏன் ஒரு ஊடகமும் எழுப்பவில்லை? நோ ரிப்ளை !

    இப்போது, நாக்கைப் பிடுங்கிகிறாப்போல ஆடிட்டர் ஜெனெரல் இரண்டு வருடங்கள் முன்னால் கேட்ட பத்து கேள்விகளையாவது பார்ப்போம்.

    ஆரம்பித்திலிருந்து ராணுவ இலாக்கா விதிகளை ஏன் மீறின?

    இந்த ஹெலிகாப்டர்கள் எத்தனை உயர பறக்க வேண்டும் என்ற நிர்ணயத்தை , இந்த ஒரு கம்பெனி மட்டுமே தரக்கூடும் என்ற செயற்கை நிர்ணயம் ஏன் வகுத்தீர்கள்?

    ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப இல்லாமல், விஐபி தேவைக்கு உகந்த டெண்டர் பொருளற்றதாக இருக்க செய்ததின் பின்னணி என்ன?

    விலை நிர்ணயம் தீர விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையே, ஏன்?

    சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் தான் செய்யப்படவேண்டும் என்ற விதி ஏன் மீறப்பட்டது?

    விதி மீறி வெளி நாட்டில் செய்த பரிசோதனை ஓட்டங்கள் இந்த விமானங்களில் செய்ய்ப்படவில்லை. வேறு வகை விமானங்களில் செய்யப்பட்டன. ஏன்?

    விவகாரம் முற்றுவதற்குள் மூன்று விமானங்கள் வந்து சேர்ந்தன. ஏன்?

    ஊழல் விவகாரம் வெளிச்சத்தற்கு வந்த பின்னும், அந்த கம்பெனியுடம் பண விவகாரம் நீடித்தது.

    சிபிஐ ஆய்வு 2012லியே தொடங்கினாலும், ஏன் சூடு பிடிக்கவில்லை.

    சொல்லிக்றாப்லெ இல்லை! எங்கே எங்கே எல்லாம் ஏமாந்தோமோ? இது முதல் தடவை இல்லை. போஃபோர்ஸ் ஆடிட் ரிப்போர்ட்டில் ஜவானின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய விவகாரம் ஆடிட்டால் கேட்கப்பட்டது. பீரங்கியை தயார் செய்து குண்டு வைக்கும் பெட்டியை திறந்தால், அது காலி. அதற்குள் எதிரி நம் ஜவானை சுட்டுத்தள்ளி விடுவான். இந்த கேள்வியை ஆடிட் எப்படி எழுப்பலாம்? காசா? பணமா? என்றார்கள், வசூல் ராஜாக்கள்.🚁
    -#-
    படித்தது: ஆடிட் ரிப்போர்ட் + Printable version | May 4, 2016 7:50:29 PM | http://www.thehindu.com/opinion/editorial/editorial-on-debate-in-parliament-on-agustawestland-helicopter-deal-more-noise-than-light/article8533351.ece
    © The Hindu

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.aircraftcompare.com/aircraft_images/382.jpg
    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: III:5 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[5]

    கூட்டுக்களவாணிகள்

    இன்னம்பூரான்

    innam
    “…தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்… உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும் தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே !.”.

    பாரததேசமென்று தோள் கொட்டியது கார்கில் போரில். பாரதத்துக்கு மோசம் செய்திடுவோம் என்று தேள் கொட்டியது மும்பை கொலாபாவில். உலகிலேயே விலை அதிகமான பூமி என்று அதற்கு புகழோ/இகழோ உண்டு. எனக்கு தெரிந்த கிராமமொன்றில், சுடுகாட்டில் போய் தகனமான பிணங்களின் தங்கப்பல்லை பிடுங்கும் மாபாவிகள் நிறைந்த இந்த சுதந்திர நாட்டில் ‘ஆதார்’ என்ற நற்பெயருக்குக் களங்கம் விளைத்து 2003ல் கட்டிய வானாளாவிய 31 தளங்கள் கொண்ட மாடமாளிகை ஒன்றை இடிக்கச்சொல்லி, இன்று மும்பாய் உச்சி மன்றம் ஆணையிட்டு இருக்கிறது. முழுக்கதையை சொல்ல ஒரு நூலே எழுதவேண்டும். இதையே விரல் விட்டு எண்ணக்கூடிய கனவான்கள் மட்டும் தான் படிப்பார்களோ? என்னமோ? இந்த அழகில் புத்தகம் போட்டால், கட்டை விரலை சப்பிக்க்கொள்ள வேண்டியது தான்! அதனால் ஆடிட்காரன் என்ன சொன்னான் என்பதை மட்டும் கேட்போம். 150 வருட பாரம்பரியம் கொண்டதும், அம்பேத்கார் அவர்களால் மிகவும் மதிக்கும் படி பேசப்பட்டு, இந்திய அரசியல் சாஸனத்துக்கு அடி பணிந்து ஊழியம் செய்யும் ஆடிட்டர் ஜெனெரலை கட்டிப்போட ஏன் விரும்பமாட்டார்கள், இந்த அரசியலர்?

    இந்த ஆதார் உப்பரிகை பற்றி ஆடிட் ரிப்போர்ட் நாக்கை பிடுங்கிறாப்பல கேட்ட எட்டு கேள்விகள்:

    வேலி பயிர் மேய்ந்த கதை, இது; இல்லை என்று நிரூபியுங்கள், பார்க்கலாம்;
    கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் விதவைகளுக்கும், தீவிர காயமடைந்த வீரர்களுக்கும், எத்தனையோ விதிமுறைகளை தளர்த்தி, இந்த இருப்பிடம் அவர்களுக்குத் தருவோம் என்று வாக்களிக்கும் முன்பே, உங்கள் திருட்டுக்கைவரிசையை தொடங்கிவிட்டது, இது தேசத்துரோகமா? இல்லையா?
    பொறுப்புடன் நிர்வகிக்க சம்பளம் வாங்கும் பலர் மோசடிகள் ஏன் செய்தார்கள்?
    மத்திய அரசு, மாநில அரசு, கட்டிட கலை வல்லுனர்கள், மந்திரிமார், உயர் அதிகாரிகள் எல்லாரும் செய்த இந்த அட்டூழியங்களை கூட்டுக்களவாணித்தனம் என்கிறோம். இல்லை என்று சொல்ல தகரியம் இருக்கிறதா?
    விதி தளர்த்துவது, கட்டிட அளவுகளை கூட்டி அளிப்பது போன்ற சலுகைகள் கேட்டபொது, ‘ இது கார்கில் வீரர்களுக்கு’ என்று பதிவுகள் செய்யும்போதே, அவை பொய் என்று தெரிந்தும் துரோகம் ஏன் செய்தீர்கள்?
    ஆகமொத்தம், ஆதாரத்தில் ஆதாய மீன் பிடித்தவர்களில், பெரும்பாலோர், கார்கில் சம்பந்தமற்ற அதிகாரிகள், பார்லிமண்ட் அங்கத்தினர்கள், பதவியில் இருப்பவர்களின் சொந்தபந்தம். இந்த அநீதி அடுக்குமா?
    முனிசிபல் கமிஷனர் திரு.ஜெயராஜ் பதக் பதுங்கி பதுங்கி செய்ய வேண்டிய விதி விலக்குகளை செய்து கொடுத்தார். அதற்கு கைக்கூலி தானா, கார்கில் அருகே மனதால் கூட செல்லாத அவருடைய திருமகனாருக்கு ஒரு மாளிகை? இது அடுக்குமா?
    எட்டு அகார்கிலார்களுக்கு (கார்கில் பக்கம் தலை வைக்காதவர்களுக்கு ) அலாட்மெண்ட் கொடுத்தால், அதிகப்படி கட்டிக்கலாம் என்றார்களே. இது எந்த ஊர் நியாயம்?

    கதை மேலும் பயங்கரமா போகிறது. முதல் அமைச்சரே முதலை அமைச்சரானார்.

    விவகாரம் மிகவும் பெரியது. வடூவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் நாவல் போன்றது.

    யாராவது கேட்டால் பார்க்கலாம். இல்லாவிடில் வாளாவிருக்கலாம்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    https://mathimaran.files.wordpress.com/2013/12/8354158838_726a876ae2_m.jpg?w=640

    இன்னம்பூரான்

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: இந்திய தணிக்கைத்துறையும் நானும்

     -இன்னம்பூரான்

    பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!

    “…தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்….”.

    இந்த நாசமாப்போன ரேஷன் வந்தாலும் வந்தது, ஊழலும் அதன் கழுத்தைக்கட்டிக்கொண்டு வந்து உபத்ரவம் செய்தது. அரசு கொள்முதலில் நியாயவிலையில், ‘லாபம் ஒண்ணு..’ என்று நெல்லைப் படியளக்கும்போது, அதை உமி நீத்து, தவிடுத் தவிர்த்து அரிசியாக்கி மக்களுக்கு தருவதற்குள், ஒரு மோசடி நடந்து முடிந்திருக்கும் ஒரு படி நெல்லை அரைத்தால் அரைப்படி அரிசி தேறும்; குருணை, தவிடு, உமி எல்லாம் விலை போகக்கூடியவைதான். சொதப்பலான ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்றால், ஒரு படி நெல்லுக்கு அரைப்படியை விட 10% குறைந்தால், பரவாயில்லை. 10% க்கு மேல் குறைந்தால் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பகிங்கரமாக அறிவித்து விடுவார்கள். திருடுவதற்கு, இதை விடச் சுகமான வழியே தேவையில்லை. ஒரு படி நெல்லுக்கு கால்படி அரிசி கொடுத்துவிட்டு, கால் படி அரிசி வேஸ்ட் ஆனதாகச்சொல்லி, அபராதத்தை டீக் ஆகக் கட்டி விடுவார்கள். நான் இந்தத் தந்திரத்தைக் கண்டது ஒரிசாவில்; இங்கு உள்ளவர்கள் அப்படி சேமித்த அரிசியைக் கேரளாவுக்கு அனுப்பி வந்தார்களோ? நான் சொல்வதைத் தப்பாக நினைக்காதீர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும்தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே!

    innampuran

    தணிக்கைத்துறையில் இதை மோப்பம் பிடித்து, அபராத விழுக்காடு திருடுவதற்கு ஊக்கத்தொகையாகப் பணிபுரிகிறது என்று நாங்கள் பொதுக்கணக்கு மன்றத்தில் புரியவைப்பது பெரும்பாடாகப் போய்விட்டது என்றாலும், அந்தத் துறை காரியதரிசி, ‘ஆடிட் சொல்வது உண்மையே. எங்களை இதைத் திருத்தவதை மேலா அனுமதிப்பதில்லை; ஆனால் ஆடிட் கூற்றை வைத்தே, அபராத விழுக்காட்டை ஐந்து மடங்கு உயர்த்திவிடுவோம் என்றார்.

    எதற்கு சொல்ல வரேன் என்றால்…. பாருங்களேன்!

    அடிக்கடி சென்னையில் காணப்படும் விருதா காட்சி ஒன்று: ‘ஆவின் பால் ஒப்பந்தவண்டி. அவசரம். வழி விடவேண்டும்.’ என்ற பதாகையுடன் வலம் வரும் லாரிகள். அவற்றில் பல நடுவழியில் நின்று நிதானமாக ரயில் இஞ்சின் மாதிரித் தண்ணிப்போட்டது வேறு சமாசாரம். இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள், லஞ்ச வாவண்யங்கள் மக்களின் ஒத்துழைப்பால் தான் ரயில்மேட்டுக் கத்தாழையாக வாழ்கின்றன.

    அரசு நிர்வாகமோ, தனியார் துறையோ, தன்னார்வக்குழுவோ, ஊழியர்கள் ‘கடைத்தேங்காயை எடுத்து தனது சமையலறையில் உடைத்து சட்னி செய்து ‘கொட்டிப்போம்.’ என்றால், பயிரை மேயும் வேலிகள் கைகட்டி நிற்கும்.

    இந்த ஆடிட் ரிப்போர்ட்டை பாருங்கள். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மாவட்ட அதிகாரிகள் ஊழல் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

    1. 29 அலுவலகங்களில் 9 அலுவலகங்களின் ஆவணங்களை, தணிக்கைக்கு வந்த செலவு ஆவணங்கள், ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்து ஆவணங்களுடன் இணைத்துப் பரிசோதனை செய்த போது, பஜாஜ், சேடக்,, வெஸ்பா, ஆக்டிவா வகையறா ஸ்கூட்டர்கள்,  புல்லட், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைகிள், செத்துப்போன வண்டிகள் (சாம்பிள்: டாட்டா சுமோ JKB 5826), டிராக்டர், புல்டோசர் எல்லா  வகையான வண்டிகளை நாலுகால் ப்ளெஷர் கார் எனப் பொய்க்கணக்கு எழுதி, துட்டு சம்பாதித்ததாக ‘பகீர்’ நிரூபணம்;
    2. ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்துக்கண்களில் படாத நம்பர் சில வண்டிகள் கணக்கில்!;
    3. டூப்ளிகேட் பில்களுக்குத் தெரிந்தே பொய்க்கணக்கு எழுதிப் பட்டுவாடா;
    4. ஒன்பது மாவட்டங்களில் வண்டி வாடகை கொடுத்தது 57.37 கோடி ரூபாய். வருமான வரி கழிக்காமல் விட்டது: 6.75 லக்ஷம் ரூபாய். இது பெரிதாகப்படாவிட்டாலும், எல்லா 29 மாவட்டங்களில் என்ன என்ன நடந்ததோ?
    5. இப்படி மானாவாரியாக வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்குக் கெடு: 24 12 2014.
      அதை மதிக்காமல் ஜம்மு மாவட்டத்தில் 771 வண்டிகள் வாடகைக்கு   எடுக்கப்பட்டன.
    1. விதித்த அளவுக்கு மீறி வண்டிகளை வாடகைக்கு எடுத்ததில் ஒரு நாளைக்கு அதிகப்படி செலவு: 25.89 லக்ஷம் ரூபாய்கள்.

    இப்படிப் போகிறது கதை. எல்லா மாநிலங்களிலும் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். சொன்னால் பொல்லாப்பு! இந்த ஆடிட் புண்ணியவான்கள் இப்படி பல துறைகளின் ஆவணங்களை அலசி, இந்த கந்தரகூளத்தை அம்பலத்துக்குக் கொண்டு வரலாமா?

    ஒரு ஐடியா தோன்றது. வண்டி வாங்காமல், பில்லை மட்டும் (லஞ்சம் கொடுத்து) வாங்கி, ஒரு பினாமி வாடகையாக அதை கற்பனையில் விட்டு துட்டு சம்பாதிக்கலாமா? ஆடிட் ஒழிக என்று கூச்சல் போடலாமா?

    -#-

    படித்தது:

    http://www.dailyexcelsior.com/2-wheelers-bulldozers-pvt-cars-govt-vehicles-hired-as-taxis/

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.imimg.com/data/V/R/MY-1534782/Lorry_Receipt_500x500.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம் — சுழலும் வட்டமேஜை

    —  இன்னம்பூரான்.

    round table

    இன்னம்பூரான் பக்கம் — சுழலும் வட்டமேஜை

    சில நாட்கள் எழுந்தவுடன் நரிமுக தரிசனம் கிடைக்கும். அந்த நாட்களில் எல்லாம் அமோகமாக நடந்தேறும். இன்று நரிமுகம் என்னை வட்டமேஜைக்கு இழுத்துச் சென்றது. அதுவும் அது என்னுடைய மாஜி வட்டமேஜை. இன்று காலை, வழக்கம் போல் ‘ஆல் ஓவெர் சென்னை’ சுற்றாமல் தாம்பரம், சித்லபாக்கம், சேலையூர், கிரோம்பேட் என்று குண்டுசட்டியில் குதிரை ஓட்டியபோது அசாத்திய அனுபவங்கள் கிட்டின.

    முதலில் அந்தமான் ‘கைதி’ கிருஷ்ணமூர்த்தி வசமாக நம்மிடம் சிக்கிக்கொண்டார். முனைவர் சதாசிவத்தை பார்க்கச் சென்றால், நெய்வேலி முரளி, சென்னை அரி (ஹரி அல்ல) பாபு புடைசூழ அமர்ந்திருந்த அந்தமானார் எம்மால் இற்செறிக்கப்பட்டார். ஜிலேபி, பழவகைகள், பசங்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு உண்டு, நான் மதிக்கும் சதாசிவத்தின் அன்னைக்கு வணக்கம், இல்லத்தரசிக்கு வாழ்த்துக்கள், சிறாருக்கு ஆசி கூறி, விடை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய புத்தகச்சுமையை தலையில் கட்டினார், அருமை நண்பர் சதாசிவம்; அந்தமானில் மாட்டிக்கொண்ட கம்பனும் கூட வந்தார்.

    இந்த நால்வர் அணி பைலட் ஆக முன் ஆடி வர, (சுழல் விளக்குதான் இல்லை) யாவரும் கிருஷாங்கிணி வீட்டுக்குப் படை எடுத்தோம். எக்கச்சக்க வரவேற்பு. ‘சுழலும் வட்டமேஜை’ தரிசனம். அது பற்றிய திண்ணைக் கட்டுரை மறு வாசிப்பு. அரவக்கோன் ஓவியங்கள் மனதுக்கு ஆறுதல் அளித்தன. ஏன் தெரியுமா? வண்டி ப்ரேக்டெளன்.

    அப்படியும் இப்படியும் கைபேசிகள் முணுமுணுத்த பின் மாற்று வண்டி பிடித்து, வீராங்கனை சீதாலக்ஷ்மி தரிசனம். அடேங்கப்பா! ராஜதர்பார் ஊஞ்சல். சீதாவை விட நல்லமாதிரி அவர்கள் தங்கை. உபசாரம் பலம். போனவிடம் எல்லாம் தண்ணீர்ப்பந்தல் தான், போங்கள். சீதாலக்ஷ்மியின் உறவினர்கள் விழுந்து கும்பிட்டார்கள். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜிப்பா!

    ஒரு பாடாக தங்கை கமலா வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன்.

    இன்னம்பூரான்
    ஏப்ரல் 17/19, 2016

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://www.ambfurniture.com/images/D/70495.jpg

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே [ 26]

    இன்னம்பூரான்
    ஏப்ரல் 16 ,2016
    innam

    கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஆளவந்தார் கொலை வழக்கு நாள்தோறும் தடபுடலாக, ஊடகங்களில் உலா வந்தபடி இருக்கும். கட்டுப்பெட்டி பெண்ணரசிகளும் கட்டுக்கடங்கா ஆண்வர்க்கமும் விழுந்தடித்துப் படிப்பார்கள். அவர்கள் சற்றே அசந்தால் போதும். நாங்களும் ஒரு கண்ணோட்டம் விடுவோம். வகுப்பில், அக்கு வேறு, ஆணி வேறாக அலசுவோம். ஒரு குறுக்கு விசாரணை:

    எதிர்த்தரப்பு வக்கீல்: ஆளவந்தாரும் தேவகியும் கட்டியணைத்து அந்தரங்கமாக இருந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எந்த ஜன்னல்?

    சாட்சி: குளியலறை ஜன்னல்.

    எ.வ: உங்கள் மூக்குக்கண்ணாடி சோடாபாட்டில் கண்ணாடியாக இருக்கிறதே. அதை போட்டுக்கொண்டு தான் பார்த்தீர்களா?

    சா: ஆமாம்.

    எ.வ. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

    சா. குளித்துக்கொண்டிருந்தேன்.

    எ.வ. ஓஹோ! கண்ணாடி போட்டுக்கொண்டுதான் குளிப்பீர்களோ?

    சா. உம்………

    எ.வ. குறுக்கு விசாரணை முடிந்து விட்டது, கனம் கோர்ட்டார் அவர்களே!
    [சாக்ஷியம் குப்பையிலே.]

    அதை நினைவூட்டும் வகையில் ஒரு அரசியல் கொலையைப் பற்றிய ஒரு கொலை வழக்கு ஏப்ரல் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. டாக்டர் ஶ்ரீதர் என்ற பிஜேபி திருச்சி பிரமுகரை, ஒரு மதவெறி கும்பல் பெப்ரவரி 2, 1999 அன்று இரவு பத்து மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவருடைய கூக்குரலை கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்த அவருடைய மகள் இதைக் கண்ணால் கண்டாள். அவளது நேர்முக சாட்சியத்தில் ஓட்டை கண்டுபிடிக்க, அவர் அந்த மங்கலான ஒளியில் இதைக் கண்டு இருக்கமுடியாது என்று குற்றம் சாற்றப்பட்டவர்களின் வக்கீல்கள் செய்த சாகசங்களை இப்போதைக்கு விடுவோம். தெரு விளக்கும், மற்ற விளக்குகளும் நல்ல வெளிச்சம் போட்டதால், அவரால் தன் தந்தையின் கொலைகாரர்களை காணமுடிந்தது என்பதில் ஐயமில்லை என்று உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பு. இந்த மாபெரும் இயல்பு – உண்மையைக் கண்டுபிடிக்க, அடித்தள கோர்ட்டார் மூன்று வருடங்களும், உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களும், உச்சநீதிமன்றம் எட்டு வருடங்களும் எடுத்துக்கொண்டன.

    தெரு விளக்கு வெளிச்சத்தில் வெளிச்சம் காண 16 வருடங்கள்!

    ஹூம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://www.thebigstorage.com/images/ebay/sa/E59383.jpg

    இன்னம்பூரான்

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3

    ‘சாதிப்பெயர்…’

    இன்னம்பூரான்
    25 03 2016

    சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?

    இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

    ‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’

    இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.

    hqdefault

    திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?

    நிகழ்காலத்துக்கு வருவோம்.

    சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்

    – இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?

    ‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘
    -இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?

    கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.

    -இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?

    சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.

    -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?

    கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?

    வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.

    இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
    -#-
    நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016

    சித்திரத்துக்கு நன்றி:
    https://i.ytimg.com/vi/ZggiwS7iv2A/hqdefault.jpg

    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28

    கந்துவட்டியும் கமிஷனர் துரையும்

    இன்னம்பூரான்
    25 03 2016

    innam

    எனக்கு அலுத்து விட்டது. இயற்றிய சட்டம், அதன் கிளைகள், தீர்வு அளித்த சட்டம், சட்ட நிர்வாகம், சட்ட சீர்திருத்தம் ஆகியவை பற்றி நான் தெளிவாக பலமுறை எழுதியிருந்தாலும், ‘தும்பை விட்டு, வாலையும் விட்டு, வெறும் காற்றை பிடிக்கப்பார்த்து ஏமாந்து போகிறார்கள் சிலர். நம்ம இன்னம்பூரான் தானே ! அவர் என்னத்தைக் கண்டார்? என்று ஒரு இனம். சட்டம் ஒரு இருட்டறை என்றால் எதுகையோ, மோனையோ, அலங்காரமாக இருக்குது; இது மற்றொரு இனம். சட்டம் ஒரு கழுதை என்றால், உவமை அணி என்றொரு கட்சி. ஆக மொத்தம், எல்லாரும் ராங்கு ! புது வாசகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களாவது படிக்கட்டுமே.

    அரசாங்கத்தைக் குறை சொல்வது எளிது; நடாத்துவது கடினம். பல வருடங்களாக, பற்பல அரசு நிர்வாகங்களுடன் இணைந்தும், எதிர்த்தும் நற்பணி செய்து வந்த நான் விதிகளையோ, சட்டப்புத்தகத்தையோ, ஈயடிச்சான் காப்பியாக அமல் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எங்கள் பயிற்சி மன்றத்தில் இது பற்றி பாடம் எடுத்தார்கள். ஒரு சிறிய உதாரணம். ஒரு நோயாளிக்கு அவசரமாக பென்ஷன் எடுத்துச்செல்ல ஆணையிட்டேன். இடம், பொருள், ஏவல் பெரிய கதை. ஃபோன்: ‘சார்! ஐந்து நிமிடம் முன்னால் அவர் இறந்து விட்டார். என்ன செய்ய?’. அந்தக்காலத்தில் அவர் மனைவிக்கு பென்ஷன் இல்லை; பழம்பாக்கி போய் சேர ஒரு வருடம் ஆகும். ‘சத்தமில்லாமல் பிரேதத்தின் கைநாட்டு எடுத்து வா. நான் அதற்கு சம்மதித்து ஆணையை பதிவு செய்கிறேன்.’ ஆட்டம் க்ளோஸ். என்னது இது? அவர் பேராசிரியர். அவர் கிட்ட கை நாட்டா? பிடி சார்ஜ் ஷீட். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட். அதுவும் செல்லுபடியாகும்!!!!

    சட்டம் இயற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு பின்னணியை முன்வைத்து பொது நலம் நாடுவார்கள்: ஜமீன்தாரி ஒழிப்பு. ஓட்டைகள் தவறியும், திட்டமிட்டும் அமையலாம். நீதிபதிகள் மோப்பம் பிடித்து சரி செய்த பின் அது சட்டம் ஆகும். இந்த வகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

    இந்த வழக்கை பாருங்கள். இந்தியாவின் மத்திய & பேரார் மாகாணத்தில் பேதுல் ஜில்லாவில் ஒரு லேவாதேவிக்காரர் ஒரு பழங்குடி மீது வட்டியும் முதலுமாக வசூலிக்க வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்கள் பக்கா. கடங்காரரோ, ‘ஐயோ! அந்த பாவி தான் கடங்காரன். காசா கொடுத்தேன். உழைப்பா கொடுத்தேன், சின்ன பசங்கக் கூட உழைத்தார்கள். அவன் நாசமா போக! கடவுளே! நீ கண்ணில்லா கபோதி! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. நோ ஆவணம். ‘ என்று கதறினான்.

    ஜட்ஜ்மெண்ட்:

    ‘சட்டப்படி வாதியின் வழக்கு சரியே. பிரதிவாதி இந்த கடனை தீர்க்கத்தான் வேண்டும். இல்லாவிடின் கடுங்காவல். வட்டியும் முதலுமாக அவர் ₹ 200 கட்டவேண்டும். அவரோ பரம ஏழை. ஆகவே, சட்டப்படி வருடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் 200 வருடங்கள் கட்டியே ஆகவேண்டும். இந்த ஷரத்துப்படி அப்பீல் கிடையாது.’

    -J G Bourne, Deputy Commissioner & ex officio Judge of the Small Cause Court.

    ஆதாரம்: MN Buch: 2008 When the Harvest Moon is Blue: Har Anand (p.56-57).

    சித்திரத்துக்கு நன்றி:
    http://epaper.theekkathir.org/epapers/1/1/2015/10/19/files/News_135409.jpg

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: 2

    — இன்னம்பூரான்.

    இன்னம்பூரான் பக்கம்: 2
    சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2
    ‘வீதியிருக்கு…’

     

     


    கணக்குப் படிக்கும் போது, வட்டத்துக்குள் வட்டம் வரைந்து அழகு பார்ப்பதும் உண்டு. பெரிய வட்டம் இந்திய சமுதாயம், அம்பானியிலிருந்து அம்மாக்கண்ணு வரையில். அம்பானி அம்பாரியில் ஏறி ஆனை சவாரி செய்வார். அம்மாக்கண்ணு அபலை. புதுமைப்பித்தன் தான் அவரை பற்றி எழுதிவிட்டாரே. அடுத்த உள்வட்டத்தில் சராசரியில் மேன்மக்கள், செல்வத்தில். பகவத் கீதை-விஸ்வரூப தரிசனத்தில் ஆசாரியன் சொன்ன மாதிரி பற்பல பிரபஞ்சங்கள் சுழன்றவண்ணம் உள.

    சில வருடங்களுக்கு முன் மும்பையில் மக்கள் ஆலோசனை மன்றத்துக்காக அலைந்து திரிந்தபோது, கால்களை இழந்த ஒரு மாற்றுத் திறனாளியை பேட்டி கண்டேன்; அவர் எனக்குக் குடும்பத்தினரை அறிமுகம் செய்து, தேநீர் வாங்கிக்கொடுத்தார்.

    அவர் கதையை நான் எழுதப்போவதால், சாரம்சம் மட்டும் இங்கே, பக்கவாட்டில் கற்பனைத் தேரோட்டி!

    ‘நான் பிச்சை எடுத்து வாழ்ந்தேன். நல்ல வருமானம்; ஆனால் அவமானம். இந்தப் படத்தில் நான் வணங்கும் இந்த பார்ஸி அம்மை தான், எனக்கு வண்டி வாங்கிக்கொடுத்து, பழைய பேப்பர் வாங்கி விற்கும் நுட்பங்கள் சொல்லிக்கொடுத்து, இந்த கடைக்கு மூலதனம் போட்டார். இன்று நல்ல வருமானம்; மாதம் நிகரலாபம் 50,000 ரூபாய். இந்த கொலாபா பிராந்தியத்தில் தான் இந்த வியாபாரம் கொழிக்கும். ஆனால், கனவில் கூட குடிசை கூட வாங்க முடியாது. அதனால், வீதி தான் வீடு. பசங்க இங்கே தான் பிறந்தாங்க. நல்ல செக்யூரிட்டி, எங்கள் பிரபஞ்சம் தான் என்றார். போலீஸ் மாமூலில் மாதம் 10,000 அவுட்.’ என்றார்.

    அடுத்த பேட்டி: மாதுங்கா போலீஸ் ஸ்டேஷன். டிஃபனும், இனிப்புடன் கொடுத்து, அசத்தி விட்டார்கள்.

    இன்ஸ்பெக்டர்:
    ‘ஐயா! உங்களுக்கு என்ன பதில் சொல்வது? நான் சிப்பாயாக சேர்ந்து, 20 வருடங்களில் இரு உயர் பதவிகள். ஆனால், அதே ஓர் அறை குடில். வசதி நில். நேரம், காலம் தவறிய ஊழியம். இரண்டு மகனும், இரண்டு மகளும் விவரம் தெரிந்த வயது. பெற்றோர்கள் உடன். எனக்கும் என் மனைவிக்கும் தனித்துப் பேசிக்கொள்ளக்கூட இடம் இல்லை. பிறந்த நாள், விவாக நாள் என்றால், ஹோட்டலில் இடம் பிடித்துத்தான் ஜல்ஸா செய்யமுடியும். நாங்களும் மனிதர்கள் தானே! கட்டுப்படியாகாது. லோக்கல் ரெளடி தான் இது உபயம். நான் வாயடைத்து நின்றேன்.

    ஹெப்ஸிபா (16) வாயு வேகத்தில் ஓட்டப்பந்தயத்தில் கெலிப்பாள்; அதிலேயே கரணம் போடுவாள். ரியோ டெ ஜெனீரோவில் நடந்த தெருவாசி பெண்களுக்கான பந்தயத்தில் வாகை சூடினாள். அது சரி. அவள் வளர்ந்த விதம் என்ன? செல்வந்தர்கள் வளைய வரும் நேரு ஸ்டேடியம் கட்ட, தெருவில் வளர்ந்து, உருண்டு பிரண்ட இந்தப் பெண் வெளியேற்றப்பட்டாள். ஏதோ சென்னை கார்ப்பரேஷன் நடத்திய சரணாலயத்தில் அபயம். கருணாலயா என்ற தன்னார்வக் குழு நடத்திய தெருவாசி பெண்களுக்கு ஆன பந்தயத்தில் நல்ல பேர் எடுத்தாள். மிகுந்த பிரயாசை செய்து, கடன் வாங்கி, கருணாலயா, அவளை ரியோ அழைத்துச்செல்ல, அவள் அங்கு வெற்றியுடன், பேசியே மக்கள் மனதைக் கவர்ந்தாள். அஷோக், ஸ்னேகாவும், உஷாவும் அங்கு சொன்ன சமாச்சாரம், ‘ நாங்கள் நாதோறும் போலீசுக்கு நடுங்கி வாழ்கிறோம். எங்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசால் தான் எங்களுக்கு அபாயம். அதிலிருந்து எங்களை தப்புவிக்க, போலீஸ் பயிற்சி மன்றங்களில் பேச எங்களைக் கூட்டிச்செல்லுங்கள்.’ இது இன்றைய ஹிந்து இதழ் செய்தி.

    ஐயாமார்களே!, அம்மாமார்களே!
    மூன்றுமே உண்மை செய்திகள். நன்றாகச் சிந்தித்து, இந்த மூன்றையும் மட்டும் பற்றி, திசை மாற்றாமல், உங்கள் கருத்தை வெளியிடுங்கள். எத்தனை பேர் சமுதாய சீர்திருத்தம் பற்றி 1% வது சிந்திக்கிறார்களோ, பார்ப்போம்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:
    https://s-media-cache-ak0.pinimg.com/originals/48/b2/de/48b2de51a8e11b3f3cd617f1d3226a51.jpg

    இன்னம்பூரான்
    22 03 2016

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • III:3: இன்னம்பூரான் பக்கம்: III:3

    இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3]
    ஆட்டைத்தூக்கி…!

    இன்னம்பூரான்
    மார்ச் 13, 2016

    joke16

    தணிக்கைத்துறை சகலகலாவல்லவனாக இருக்கமுடியாது. ஒரு நாள் கல்லூரி ஆடிட்; அடுத்த நாள் நீர் பாசனம்; அடுத்த நாள் ஆசுபத்திரி;அடுத்த நாள் ராணுவ தளவாடங்கள். எல்லாம் வேஸ்ட் சார்! இது காமன் எரிந்த கட்சி. சார்! கணக்கு வழக்குப் பார்ப்பவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்? ரோடு போடமுடியுமா? பதிலடி கொடுப்போம் இல்லை! இது ரதியும் எரிந்த கட்சி! தணிக்கை செய்யப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்து, ஆடிட் திட்டமிடப்படுகிறது. அந்த துறையின் பதிலும் உள்ளடக்கம். நாங்கள் உள்ளதை, உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, சொல்கிறோம். எங்கள் அறிக்கையை, அக்கு வேறு, ஆணி வேறாக அலச, சட்டசபையின் பொது கணக்கு கமிட்டி இருக்கிறது. இது காமன் எரியாத கட்சி.

    ஒரு பல்கலை கழகத்தின் நூலகம் சிதறி கிடைந்தது. நூல் வாங்க அளித்த பணத்தில் ஹாஸ்டலுக்கு அரிசி வாங்கினார்கள்; பாசனத்துக்கு சுழல்முறையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அது தவறினால், அநீதி நிகழும். ஒரு ஆசுபத்திரியில் செத்தவங்களுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதினார்கள். போஃபோர்ஸ் பீரங்கி தெரிந்த கதை. கணக்கு வழக்குப் பார்க்கிறவன், தோட்டாவை காணவில்லையே பெட்டியில். நமது சிப்பாய் எதிராளியை தாக்கமுடியாமல் சுடப்படுவானே என்று அங்கலாய்த்தால், அதில் என்ன தவறு?

    தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும். தணிக்கைத்துறையின் பயிற்சிக்கூடம் 1955 வரை சென்னையில் இருந்தது. பின்னர் சிம்லாவில் அங்கு தான் எங்களுக்கு அக்னிப்பரிக்ஷை.

    ஒரு அனுபவம். நான் இராணுவத்துறையில் பணிபுரிந்த போது, பொதுகணக்குத்துறையில் ஆடிட்டுக்கு எதிரணியில் பணி. உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் பீர் விலை ஏறிவிட்டது. இத்தனை நஷ்டம் என்று ஆடிட் புகார். நஷ்டமில்லை. விலையில் கூட்டிவிட்டோம் என்று பதில் அளித்தார், ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ். ஆடிட்டர் ஜெனெரல் ரங்கநாதனும் ஐ.சி.எஸ். ஆபீஸுக்கு வந்த பின் அந்த பதிலில் உள்ள தவறை ஹரீஷ் ஸரீனிடம் காண்பித்தேன். காலையில், முடிந்து போன கதையை மறுபடியும் எடுத்து, தவறை ஏற்றுக்கொண்டு, இரவே இந்த செலவை ஜவான் தலையில் கட்டக்கூடாது என்று எங்கள் தலையில் போட்டுக்கொண்டோம் என்றார், அவர். எல்லாரும் அதை சிலாகித்தார்கள். அந்த காலத்தில் எல்லாருமே மாரல் ஜட்ஜ்மெண்டில் குறியாக இருந்தார்கள். இது நிற்க.

    மாஜி ராணுவவீரர்கள் நாள்தோறும் செத்துப்பிழைத்தவர்கள். எல்லாநாடுகளிலும் அவர்களுக்கு தனி மரியாதை, சலுகைகளும் உண்டு. இந்தியாவிலும் தான். ஆனால் நடந்ததை பாருங்கள். மாஜி ராணுவ வீரர்கள், அவரை சார்ந்த குடும்பம், பெற்றோர்கள் ஆகியோருக்கு [47.34 லக்ஷம்: ஏப்ரல் 2015] கைக்காசு செலவழிக்காத வகையில் மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசு 2002ல் ECDS என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

    சமீபத்தில் நடந்த ஆடிட் முடிவுகள்:

    முதல் கோணல் முற்றும் கோணல்: உறுப்பினர்களுக்கு அடையாள சீட்டு அச்சடிக்கும் மிகவும் பொறுப்பான வேலையை ஐந்து வருடங்களுக்கு விதியை மீறி ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்ட்டது. சந்தை விலையை பற்றி ஒரு விசாரிப்பு இல்லை. அதிகப்படி தண்டம் ரூ.6.69 லக்ஷம் வேறே!

    இது இலவச பராமரிப்பு இல்லை. ஒரே தடவை-சந்தா காசு கட்டினால் தான் சிகிச்சை. வேறு செலவை மாஜிகள் தலையில் கட்டக்கூடாது; ஆனால் கட்டினார்கள். கேள்வி முறை இல்லையா?

    டில்லியில் மட்டும், மாஜிகளின் சந்தாவில் பணிபுரியும் இந்த ECDSலிருந்து தற்கால ராணுவ மருத்துவ இலாக்காவுக்கு அனுமதியில்லாமல் செய்த செலவு: ரூ.40.78 கோடி. அதான் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டார்கள்!

    பல பாலிக்ளினிக்களில் மருந்து பஞ்சம், வருடம் முழுதும்.

    காலாவதியான மருந்துகளை தன் செலவில் ஒப்பந்தக்காரர் எடுத்து செல்லவேண்டும் என்று ஷரத்து. ஆனால், அவற்றை திருப்பி அனுப்பாததால் நஷ்டம்: ரூ.73.44 லக்ஷம்.

    மற்றும் பல.

    ஆடிட் ரிப்போர்ட்டை முழுதும் படித்தால், நான் குறிப்பால் உணர்த்தியது சொற்பம் என்று தெரியும். அது இலவசம்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:http://3.bp.blogspot.com/-WMGqGIAUj0c/VJ1FJ7JubTI/AAAAAAAAP8E/rzVaZrxTRFE/s1600/joke16.jpg

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 5: கனம் கோர்ட்டார் அவர்களே! 27

    பெண்ணே! சகல சம்பத்துக்களுடன் வாழ்க.

    இன்னம்பூரான்
    10 03 2016

    innam

    ‘இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே’ என்ற தலைப்பில் வல்லமை ஆசிரியர் எழுதிய

    ‘… சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே. ‘

    என்ற குறிப்பின் மீது,  நான் எழுதிய

    ‘நான் கவனித்த வரை, இந்துத்திருமணச்சட்டம் இவ்வாறு இயங்கவில்லை. சான்றுகள் கொடுத்தால், ஆய்வு செய்து பதில் தருகிறேன். இஸ்லாமில் தான் பெண்களுக்கு இன்னல்கள், ப்ராக்டிலாக பார்த்தால்.’

    என்ற பின்னூட்டம், உணர்ச்சிவசமாக அவர் தொடங்கிய ‘மின் தமிழ், வல்லமை, தமிழ் வாசல்’ பதிவுகளில் காணக்கிடைக்கவில்லை. 1960 களில் நானும் வஸந்தாவும் மிகுந்த பொறுப்புடன் பங்கு கொண்ட ஒரு விவாகரத்து வழக்கில் பிறந்த பெண் குழந்தை தாயின் பராமரிப்பில் தான் வளரவேண்டும்; தகப்பனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் விசிட்டிங் உரிமையும் மறுக்கப்பட்டது என்று தீர்வு வழங்கப்பட்டது. மெரிட் என்று ஒன்றை பார்க்கிறார்கள் அல்லவா.

    திருமதி. ரேவதி நரசிம்மன் கொடுத்த அடி பலமானது.

    ‘மிக வருத்தம் தரும் செய்தி. ரத்து செய்ய பயந்து பொறுத்துப் போகும் பெண்களை அறிவேன்.‘

    என்று அவர் சொல்வது தான் அந்த பலமான அடி. ஏனென்றால், அதில் உண்மை புதைந்து இருக்கிறது. ஆனாலும், சுட்டெரிக்கும் அந்த உண்மைக்கு இந்து திருமண சட்டமோ, நீதிமன்றத்துத் தீர்ப்புகளோ காரணம் அல்ல.

    பவளசங்கரி கொடுத்த இணைப்பையும் அந்த தளத்தையும் முழுதும் படித்தேன். தகவல்கள் இருந்தாலும், பவளசங்கரியின் தொடருக்கு அது அணி சேர்க்கவில்லை. தற்பொழுது நடக்கும் உரையாடலை முழுதும் படிக்க வில்லை. இப்படியும் நடக்கத்தான் செய்கிறது என்ற இன்னல் சட்டத்தின் ஓட்டைகளால் இல்லை. இருந்தால் சொல்லுங்கள்.

    நீதிபதி கஜேந்திரகட்கர் அவர்கள் மிகவும் போற்றப்பட்ட நீதிபதி. அவருடைய தீர்வுகளும், கருத்துக்களும் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. சட்டக்கமிஷனின் தலைவராக இருந்த அவர் மார்ச் 1974ல் Hindu Marriage Act,1955 And Special Marriage Act, 1954 பற்றி அளித்த 59 வது ரிப்போர்ட்டை கவனித்தால் நல்லது பயக்கும். எனினும், அவரவர் உரிமைக்கேற்ப பெரும்பாலோர் என்னுடைய இத்தகைய கட்டுரைகளை படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனால், தெரிந்த நிதர்சனத்தை எடுத்துரைக்காமல் இருப்பதும் தவறு. எனவே, ஒரு அறிமுகத்துடன், இதை நிறுத்தி விடுகிறேன். தேவைக்கிணங்க, பிறகு பார்க்கலாம்.

    அக்காலத்து அரசும் அந்த கமிஷனும் விவாகரத்து செய்வதை எளிதாக்கவேண்டும், இல்லறத்தில் முழுமை, மறுமணம் செய்து கொள்வதற்கு துணை போகவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இயங்கினார்கள். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. கிரிமினல் கோட் ஷரத்து 488 படி ஜீவானம்சத்துக்கும் விவாகரத்து உரிமைக்கும், பெண்களுக்கு மட்டும் தான் கொடுத்தது. அதில் என்ன தவறு? அத்தகைய உரிமையை ஆணுக்கும் கொடுக்கலாமா? என்று அரசு வினா எழுப்பியது. அதில் என்ன தவறு?

    The Hindu Marriage Act 1955ல் அமலுக்கு வந்தது. Hindu Succession Act, 1956, Guardianship Act, 1956 and the Hindu Adoptions and Maintenance Act, 1956 அடுத்து வந்தன. இவற்றின் பின்னணி:

    “ …நமது சிந்தனைகளிலும் , அணுகுமுறையிலும் ஒரு புரட்சி வரவேண்டும். நமது தொன்மையிலிருந்து நாம் அணைந்த சாம்பலை உதறிவிட்டு, தீச்சுடர்களை எடுத்துக்கொள்ளவேண்டும். …

    [தரும சாஸ்திரம் சொல்லும், தமிழ் இலக்கியம் கூறும் எட்டு வகை விவாகங்களையும், சங்க நூல்கள் பாராட்டிய தலைவன் – தலைவி கூடல்-ஊடல், பகற்குறி, இரவுக்குறி, அலர், உடன்போக்கு ஆகியவற்றில் எது தீச்சுடர்? எது அணைந்த சாம்பல் என்றொரு பட்டிமன்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது!] … கடந்த காலத்தை நினைவில் வைப்போம்; நிகழ்காலத்தில் கவனம் வைப்போம்; மனதில் துணிவுடன், சுய நம்ப்பிக்கையுடன் வருங்காலத்தை படைப்போம்…” .
    – ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்

    மேற்படி சான்றுகளில் தவறு, பெண்ணுக்கு அநீதி இருந்தால், சொல்லுங்கள். இதை எதிர்த்தது பழமை, தர்ம சாத்திரங்கள், சாதீய பார்ப்பனர் போக்கு ஆகியவை. நாம் அவர்களுடன் கூட்டு சேரவேண்டுமா? சொத்து பெண்களுக்கு 1882 வரை இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. இந்திய சனாதன சாத்திரப்படி 12ம் நூற்றாண்டு காலகட்டத்தில், ஸ்த்ரீதனம் என்பதற்கு விக்னேஸ்வரர் என்ற வல்லுனர் இட்ட பட்டியல் கீழே:

    தந்தை தந்தது;
    தாய் தந்தது [மஞ்சக்காணி];
    கணவன் கொடுத்தது;
    உடன் பிறப்பு கொடுத்தது;
    மாமன்மார் கொடுத்தது;
    திருமணப்பரிசுகள்.;
    வாரிசு சொத்து;
    வாங்கிக்கொண்டது;
    சொத்துப்பிரிவினை;
    பிடுங்கிக்கொடுக்கப்படது.

    [இவை எல்லாம் மனுவும், யாஞ்யவல்கரும் மற்றோரும் கூறியபடி பெண்ணை சார்ந்தது].

    உண்மை சுடும் என்பதை சுட்டிக்காட்ட நீதிபதி கஜேந்திரகட்கர் சொன்னதை கேட்கவும்:

    “ இந்துமதம் சார்ந்த இந்த நான்கு சட்டங்களும் புரட்சிகரமானவை. தனிப்பட்டவர்களை கண்காணிக்கும் சட்டம் சமுதாயத்தை காக்கவேண்டும், மதரீதியை கழிக்க வேண்டும் (மற்ற மதங்களை பேசலாகாது; மட்டுறுத்துவார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அவனொரு இந்து) என்ற முற்போக்குக் கருத்தை பார்லிமெண்ட் அமல் படுத்துவது, நமது அரசியல் சாஸனத்தின் 14வது ஷரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது.’

    இது தவறா?

    இத்தனை சொன்னபின்னும் என்னுடைய எதிர்ப்பை சொல்லவில்லை.

    ‘தனிப்பட்ட ஒவ்வோருவரின் குணாதிசயமும் ஏற்படுத்தும் இழப்புக்கு மதங்கள் ,பழைய முறைகள் என்ன செய்யும் என்று தமிழ்த்தேனீ வினவியுள்ளார். ரேவதியின் கவலையை முன்பே எடுத்துரைத்தேன். ஆம். பெண்கள் எதிர் நீச்சல் அடிக்கவேண்டிருக்கிறது என்ற பொத்தாம்பொதுவான கருத்தை மூடி மறைக்க முடியாது. அது நிஜம் தான். காரணத்தைச் சொன்னால் அடிப்பார்கள். சொல்லி விட்டு விடை பெறுகிறேன். சட்டம் அளித்ததை அவரவர் சமூகங்கள் தட்டிப்பறிக்கின்றன. அது தான் உண்மை. அதனால் தான் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. 1974க்கு பிறகு பல முன்னேற்றங்கள், பின்னடைவுகள், பொய்யும் புளுகுகளும்.

    நான் ஆக்கப்பூர்வமாக யாராவது கேட்டால் பதில் சொல்கிறேன்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/75/MarriageAndMorals.jpg/220px-MarriageAndMorals.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • III:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்

    கடையில் இருக்கும் நெய்யே…!

    இன்னம்பூரான்
    மார்ச் 9, 2016

    8cf1ed83-5f46-411c-a667-39ea8d11e06b

    ஒருவர் சொத்தை மற்றொருவர் அபகரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பகற்கொள்ளை. சில சமயம் தீவட்டிக்கொள்ளை. சில சமயங்களில் கன்னம் வைப்பது. சில சமயம் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, பொய் கணக்கு எழுதுவது.

    சாணக்கியர் உரைத்தப்படி, திருடர்கள் இருப்பதை இல்லை என்பார்கள். இல்லாததை இருக்கிறது நம் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். [அந்த இழை தனியே ஓடும்.] இதையெல்லாம் சாங்கோபாங்கமாக குடைந்தெடுத்து, தணிக்கைத்துறை பொதுமன்றத்தில் வைத்தாலும், கொள்ளையர் சண்டியர் மாதிரி வீதிவலம் வருகிறார்களே என்று மெத்தப்படித்தவர்கள் கூட அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். குடியரசு ஆட்சியில், அரசியல் சாஸனத்தின் ஆணைக்கு உட்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்கள் சட்டசபையில் வைக்கப்படுகின்றன. அந்த நிமிடமே பொதுமன்றத்தில் அவை பிரசன்னம். இனி, மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தான் செயல்படவேண்டும்.

    இன்று எங்களுடைய மின் தமிழ் தளத்தில் முனைவர் சுபாஷிணி எழுதியது,

    ‘…அரசியல் என்று வரும் போது அரசியல்வாதி-பொதுமக்கள் என்ற இரு பகுதி இருக்கின்றது. அரசியல்வாதி தவறாகாச் செயல்படும் போது அதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உண்டு. அதிலும் அதிகமாக ஊடகங்களுக்கு உண்டு…’

    கனப்பொருத்தமாக அமைகிறது.

    Do not bark at the wrong tree, please.

    தணிக்கைத்துறையின் வரலாற்றுத் துளிகளும், சேகரத்துக்குகந்த பழைய நிகழ்வுகளும், என் அனுபவங்களும், தணிக்கை செய்முறை நுட்பங்களும், தற்காலிக சமாச்சாரங்களும், இழையில் ஊடாடி [seamlessly woven) வருபவையாகும். வாசகர்கள் ஊன்றி படித்தாலொழிய, ஆடிட் ஆவணங்களை புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும், அந்த துறை பொதுமக்கள் பார்வைக்காக, ஐம்பது வருடங்களாக எளிய நடை தமிழில் அவற்றின் சாராம்சத்தை பதிவு செய்கிறார்கள். விழிப்புணர்ச்சிக்கு அது தேவை. காலம் கெட்டுக்கிடக்கிறது. மத்திய அரசின் ஒற்றர் இலாகா கூட இன்று ஆர்வலர்-ஒற்றர் நாடி விளம்பரம் செய்து இருக்கிறது ! சிட்டிஸன் -ஆடிட்டரைத்தான் காணமுடியவில்லை!

    மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 தான் முதல் முதலாக ஆடிட் பற்றி தெளிவான திட்டம் வகுத்தது. ஆடிட்டர்களுக்கு நிம்மதி வேண்டும்; சிந்திக்க அவகாசம் தேவை; அவர்களை மாஸ்டர்கள் தொணத்தக்கூடாது; அவர்கள் தன்னிச்சையாக செயல்பட வசதி அளிக்கவேண்டும்; இத்யாதி. அன்னியநாட்டை அடக்கி ஆளும் கலோனிய அரசு இத்தகைய சுவாதீனத்தைத் தணிக்கைத்துறைக்குக் கொடுத்தது போற்றத்தக்கது; வியப்பை அளிக்கிறது. இது ஒரு முகாந்திரம். ஒரு நிகழ்வு. அந்த துறையின் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் வைஸ்ராய் செய்த செலவுகளை கண்டித்தார். அது துரைத்தனத்தாருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அடுத்தபடி ஆடிட்டர் ஜெனெரலாக அப்போதைக்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்தது. அதே துரைத்தனத்தார், தன்னிச்சையாக செயல்படுபவர் என்று இவரையே அந்த பதவியில் அமர்த்தினர்.

    நான் தணிக்கைத்துறையில் கால் வைத்தது 1954ல், குமாஸ்தாவாக. வேலை கனஜோர். மேலதிகாரிகளை இம்பெரஸ் பண்ணுவதற்காக, வந்த ஆவணங்களை மறைத்து வைத்து விட்டு, ‘ஏன் அனுப்பவில்லை?’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு! வபையாக மாட்டிக்கொண்டவனை திண்டாட வைத்ததும் உண்டு. இதை சொல்வதின் காரணம்: [1] ஆடிட்காரனும் பாமர மனிதனே; சில்லரை விஷமம் அங்கேயும் உண்டு. [2] அடுத்த வருடமே பெரிய பதவி ஏற்ற நான் பாவ்லா செய்பவர்களை பிடிக்க முடிந்தது என்பதே.

    இன்றைய சங்கதிக்குக் கோடி காட்டி விட்டு போகிறேன். ஏற்கனவே, நீண்டு விட்டது.

    அவுட்! 12,400 கோடி ரூபாய் அபேஸ்! ஆடிட்டர் ஜெனரல் துல்லியமாக தனியார் துறை கணக்குப்புத்தகங்களை அலசி, வடிகட்டி எடுத்த குற்றச்சாட்டு. நமது நண்பர்கள் முதலாளித்துவத்தை போன்ற உயரிய பொருளியல் தத்துவம் கிடையாது; போட்டி இருப்பதால் சந்தை விலையை குறைக்கும் என்பார்கள். சந்தையெல்லாம் மொந்தைக்கள் தான். மற்றும் சிலர் அயல் நாட்டுச்சரக்கை வரவேற்க வேண்டும் என்று ரத்னகம்பளம் விரிப்பார்கள்.

    நடந்தது என்ன?

    ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல்,வோடோஃபோன், ஐடியாஸ். ஏர்செல் ஆகிய தனியார் துறை மகானுபாவர்கள் 2006 -2010 காலகட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி, அரசை ஏமாற்றிய செல்வம்: 12,400 கோடி ரூபாய். ஆதாரம், அவர்கள் காட்ட மறுத்து பல கோர்ட்டுகளை அணுகி, கெஞ்சி,வாய்தா கேட்டு, கேட்டு, எல்லாவிதமான தகடுத்தத்தங்கள் ஃபெயில் ஆனபின், 2014ல் தான் உச்ச நீதி மன்ற தீர்வுக்கு பிறகு, அரைமனதுடன் காண்பித்த கணக்குப்புத்தகங்கள் அளித்த வாக்குமூலம், இது.

    சாமான்யமாக ஆடிட் செய்ய முடியவில்லை. ‘கல்லைக்கண்டா நாயை காணோம்; நாயை கண்டா கல்லைக்கானோம்.’ என்ற அலங்கோலம் தான். ஆனாலும், இந்த தணிக்கைத்துறைக்கு பொறுமை ஜாஸ்தி. வணங்கா முடி வேறே.

    கொசுறு: இந்த ஊடகக்காரர்கள் [மீடியா] அந்த தனியார் நிறுவனங்களை அணுகி, ‘என்னப்பா சமாச்சாரம்? ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா? ‘ என்று கேட்டார்கள். ஒரே மூச்சாக எல்லாரும் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.

    ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா: மார்ச் 9ம் 2016,
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://www.starlightinvestigations.co.uk/wp-content/uploads/2015/01/Investigation-1038×576.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: III:1 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[1]

    இன்னம்பூரான்

    a1

    150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன். இதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.

    விட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.
    தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.

    நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில. ஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை? ஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை? அரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்! எல்லாம் வேஸ்ட் ஸார்!!!
    நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.

    இன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.

    *கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்களை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:
    அனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;
    நஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;
    17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;
    52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;
    ஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;
    22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.
    13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.

    நான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.

    சுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:http://euromaidanpress.com/wp-content/uploads/2014/11/auditor.jpg

    ஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.

    இன்னம்பூரான்

    Share