இன்னம்பூரான் பக்கம்: III:1 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[1]

2

இன்னம்பூரான்

a1

150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன். இதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.

விட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.
தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.

நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில. ஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை? ஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை? அரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்! எல்லாம் வேஸ்ட் ஸார்!!!
நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.

இன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.

*கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்களை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:
அனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;
நஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;
17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;
52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;
ஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;
22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.
13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.

நான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.

சுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://euromaidanpress.com/wp-content/uploads/2014/11/auditor.jpg

ஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.

இன்னம்பூரான்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இன்னம்பூரான் பக்கம்: III:1 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[1]

  1. நன்றி, திரு.சக்தி தாசன்,
    மற்ற நாடுகளை பற்றியும் எழுதுகிறேன். இங்கிலாந்தில் ஆயுட்காலம் ஆடிட்டர் ஜெனெரல் பதவி. இருந்தும், சில நடவடிக்கைகளில் முறை தவறினார் என்ற ஒரே குற்றச்சாட்டினால், அவரே ராஜினாமா செய்ய நேரிட்டது. அவருக்கு ‘சர்’ விருது கிடைக்கும் என்று ஆரூடம் கூறினேன். ஆனால், அது கிடைத்தும், அவர் விலக நேரிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *