Advertisements
Featuredhome-litஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி .. (54)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

10578393_970813379639528_1917690085_n
67945931@N04_rராஜ எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (4)

 1. Avatar

  என்ன என்ன எண்ணங்கள் இச்

  சின்னப் பெண்ணின் நெஞ்சினில்
  சின்னச் சின்ன விழிகளினுள்
  தேங்கி நிற்கும் ஏக்கங்கள்

  நாளையிந்த வாழ்வினில் தான்
  பயணம் போகும் பாதையில்
  தைக்கப் போகும் நெருஞ்சி முட்கள்
  தரப்போகும் வலிகளை எண்ணுகிறாளோ ?

  பாட்டியவள் மடியிலே இன்று
  பாவமவள் வாழும் வாழ்க்கை தரும்
  பாதுகாப்பு தொடர்ந்திடுமோ புவியில்
  பாட்டி கதை முடிந்து போனால் !

  வாழ்வு தனது பரீட்சைகளை அவளுக்கு
  வழங்கி மனதை வலுப்படுத்தி – நாளை
  மங்கையரெல்லாம் பெருமைப்படும் வகை
  மாண்புமிகு புகழ் அடைந்து உயர்ந்திடுவாளோ ?

  காலமொரு விசித்திர காற்றாடி
  சுற்றிச் சுற்றி வரும்போது அவரவர்
  சூழல் எங்கு நிலை கொள்ளுமோ வாழ்வுச்
  சூத்திரமே அதுதானே அகிலத்தினிலே

  பிஞ்சு மனக் கனவுகள் அவளை வாழ்வில்
  விஞ்சுமொரு நிலைக்கு உயர்த்தும் வகை
  நானிலத்தின் மனிதவகை உழைத்திட்டால்
  நாளையந்தச் சிறுமியின் விழிகளில் நாம்
  காண்பதெல்லாம் ஆனந்த நர்த்தனமே !

  சக்தி சக்திதாசன்

 2. Avatar

  ஏக்கம்…

  அன்பு இல்லத்தில்,
  மூதாட்டியின் முணுமுணுப்பு-
  ஐந்து பெற்றும்
  அனாதையாய் நான்,
  யாரோ பெற்று
  அனாதையாய் நீ..

  இருவரும் ஒன்றானோம் இங்கு-
  பிள்ளைகள் கைவிட்டனர்
  என்னை,
  பெற்றவர் கைவிட்டனர்
  உன்னை…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. Avatar

  பால்யமும் முதுமையும்
  ஒருவர் மடியிலே ஒருவர்.

  பாலவிழிகளில்
  பால்மணம் மாறா ஏக்கம்….

  கால்களற்ற சிறுமியின்
  கரங்களில் என்னவோ
  கால்களில் பூட்டி ஓடும்
  சறுக்கும் சக்கரக் கால்கள்….

  முதுமையில்வாடும்
  மூத்தகுடி மகளுக்கு
  இந்த இளைய சிறுமி
  என்செய இயலும்…

  கால இடைவெளி
  கண்ணைக்கட்டுமோ….
  ஓலமிடத்தான்
  உள்மனம் சுட்டுமோ…
  ஞாலந்தனில் இது
  நியாயமோ இயற்கை
  ஜாலமோ விந்தைசெயும்
  மாயமோ நிலை மாயுமோ…

  முதுமையின் புலம்பல்
  முக்கலாய் முனகலாய்….
  புதுச்சுடர் விழிகளில்
  புரியும் சொற்களாய்……

  அருகருகே அன்றொருநாள்
  இளமையும் முதுமையும்
  இனிதாகச் சந்தித்தன….

  முகச்சுருக்கங்கள் முகவரியாம்
  முதுமையினைப் பார்த்தபடி
  இளவட்ட இளமைதான
  ஏளனமாய்க் கேட்டது…..

  காலதேவனின் கடைவாயிலில்
  கண்மயங்க நின்றதென்ன….
  ஓலமிடும் உள்நாக்கின்
  உணர்விழந்து நின்றதென்ன……

  காலதேவனின் நுழைவாயிலில
  கால்பதிக்கும் கட்டிளமையே…
  பாலபருவம் படிக்கவேண்டிய
  பாடங்கள்தான் நிகழ்காலம்…
  அனுபவங்களால் முதிர்ச்சியுற்றேன்,
  அவலங்களால் அதிர்ச்சியுற்றேன்,
  நினைவலையில் நிறையவரும்
  நிகழுணர்வால் முதுமையுற்றேன்,

  அழகிழந்ததாய் நினைக்கின்றாய்
  அகவுணர்வால் அழகுற்றேன,
  நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டேன்
  நிம்மதியாய் இருக்கின்றேன்.
  காலனவன் அழைத்தாலும்
  கவலையில்லை ஏற்றிடுவேன்
  வாழுங்காலம் உனதன்றோ
  வாழ்ந்துவிடு இளமையிலே….

  வாய்க்கின்ற வாழ்க்கையிங்கு
  வாழ்நளில் ஒருமுறைதான்
  பேய்த்தனமான குணம்நீக்கிப்
  பெருவாழ்வு வாழ்ந்துபார்,
  நோயுடலம் கொள்ளாமல்
  நோன்புவாழ்வு வாழ்ந்துபார்,
  தேய்பிறையாய் வாழாமல்
  திருப்தியுடன் வாழ்ந்துபார்.

  முதுமையிலும் சுருக்கமின்றி
  முழுமையாக வாழ்ந்திடலாம்,
  புதுமையெனும் இளமையோடு
  பொலிவுறவே வாழ்ந்திடலாம்.

  இதுகேட்ட இளமைதான்
  இறுமாப்பை நீக்கிவிட்டு
  எதுசரியோ அதுவொன்றே
  இளமையினது வழியென்றே
  பொதுவான நல்பதிலை
  புன்னகையாய்த் தானளித்து
  முதுமையினை வணங்கியதே
  முகமலர்ந்து கரங்குவித்தே.

        கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை.

 4. Avatar

  உன்னால் உயரும்

  புலியை முறத்தால் விரட்டிய  
  புறநானுற்றுப் பெண் கூட
  ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
  சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என
  ஆணாதிக்க சிந்தனைக்குள்
  அமிழ்ந்து போனாள்

  போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனை
  தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி

  அடக்குதலும் அடுக்களையில்
  முடக்குதலுமே தம் பணியென
  எம் தலைமுறையினர்
  சிறையிட்டு சிரித்தனர்

  என் அன்புப் பேத்தியே
  மாற்றங்கள் மலருகின்ற
  மகத்தான தருணமிது
  சமுதாய சன்னல்கள்
  மெல்லத் திறந்து
  முடங்கி கிடந்த நம் மீது
  விடுதலை வெளிச்சத்தை
  பாய்ச்சுகின்ற நேரமிது

  இனி ஆணுக்கு நிகராக அல்ல
  அதை விடவும் மேலாக 
  சாதித்து காட்டி
  சரித்திரம் படைப்பது
  நம் கடமை

  ஆணினத்தின் பலவீனமாம்
  கொலை களவு காமம் மது
  இவற்றில் பங்கு கேட்பதல்ல
  நாம் கோரும் பெண்ணுரிமை!

  ஆடை குறைப்பும்
  அலங்கார மாற்றங்களும்
  அடிமை விலங்கொடித்த
  அறிகுறிகள் ஆகாது!
  ஜான்ஸி ராணி முதற்கொண்டு
  சானியா மிர்சா வரை
  சாதனைகளால் மட்டுமே
  நினைவு கொள்ளப்படுகிறார்கள்

  என் செல்லமே
  அறிவியல் அரசியல்
  இலக்கியம் ஆன்மீகம்
  இன்னும் பல துறைகளில்
  பெண்கள் கோலோச்சும் போதுதான்
  நாம் கொண்ட துயரங்கள்
  நம்மை விட்டு விலகும்!

  வறுமையில் வாடும் பாட்டியின்
  வார்த்தைகளா இவையென
  நீ வியப்பது புரிகிறது
  அறிவுக்கு வறுமையில்லை
  என் அன்பு செல்லமே

  நாளைய நாடு
  பெண்களால் மட்டுமே மலரும்
  நம்பிக்கைக் கொள்
  உன்னாலும் இந்த உலகம்
  உயரப் போகிறது ஒரு நாள்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க