இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [1]

இன்னம்பூரான்
ஜூன் 11, 2016

hinduism-and-women

பல வருடங்களாக பெண்ணியத்தைப் பற்றி பலர் எழுதுவதைப் படித்து வருகிறேன். எனக்கும் அது பற்றி ஆழமான கருத்துக்கள் உண்டு. சமுதாயத்தின் பல படிநிலைகளில் வாழும் மனிதர்களுடன், குறிப்பாக பெண்பாலாருடன் என்னால் இயல்பாகப் பழக முடிவதால், பெண்பாலாரில் பலரின் கருத்துக்களம், எண்ணவோட்டம், நினைவலைகள், உள்ளக்கிடக்கை, செயல்பாடுகள், அணுகுமுறை, வாழ்க்கை வழங்கிய மர்மங்கள் ஆகியவற்றை, சட்டப்பூர்வமான ஆலோசகன், நண்பன், நேசன், காதலன், கணவன், உடன்பிறப்பு, வாரிசுகள் என்ற பலவித கோணங்களில் ஓரளவு புரிந்து கொள்ளும் வாய்ப்பு பல வருடங்களாக எனக்குக் கிட்டியிருந்ததாலும், தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பேன் என்று மகளிர் என்னிடம் நம்பிக்கை வைத்திருப்பதாலும், என்னுடைய ஆழமான கருத்துகள் அசைக்கப்பட்டுள்ளன, கிளரப்பட்டுள்ளன. முரண் தோன்றி மறைந்ததும் உண்டு. இனியும் மாறலாம், தீவிரமான சிந்தனைகள் பகிரப்பட்டால். என் பேச்சுரிமை தங்கு தடையில்லாமல் இயங்கும்.

பெண்ணியம் ஒரு மென்மையான சமுதாய சிந்தனை, நடைமுறை, எதிர்பார்ப்பு. மெல்ல, மெல்ல நடக்கும் புரட்சி. உலகெங்கும் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக நியாயம் கிடைக்கவில்லை. என் பாட்டி பள்ளி சென்றதில்லை. ஆனால், அவளுடைய தெளிவு வீட்டு ஆண்மகன்களில் சிலருக்கு சுத்தமாக இல்லை. என் அத்தையை படிக்கவைத்திருந்தால், அவர் கண்டிப்பான நிர்வாகத்தை வழி நடத்தியிருப்பார். ஏன்? தானே பக்கோடா பொட்டல காகிதத்தைப் பின்னர் படித்து வியக்கும் வகையில் விமர்சனம் செய்வார். பல மொழிகள் கற்றுக்கொண்டார். என் தங்கைகளின் படிப்பு படி தாண்டவில்லை. அடுத்த தலைமுறையில் முனைவர்களும், கலைஞர்களும், நிர்வாகிகளும் தலை எடுத்தனர்,என் பாட்டி படித்திருந்தால், நாங்கள் எங்கேயோ போயிருப்போம். சுற்றத்தில் இந்த முன்னேற்றம் குறைவு. ஆனால், காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் உண்டு. யாருமே குற்றம் காணவில்லை.

தலித்துகளில் கடை நிலை எனப்படும் ஆதி அருந்ததி குடும்பம் ஒன்று எங்களுடன் வாழ்கிறது. தலைவியை இந்திரா காந்திக்கு ஒப்பிட்டால், மிகையாகாது. சாக்கடையை துப்புறவு செய்யும் அவரும், அவரது பெருந்தன்மை கணவரும், தங்கள் குக்கிராமங்களிலிருந்து வறுமையான குடும்பங்களை வரவழைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, பற்பல உறவினர் முன்னேற ஏற்பாடு செய்தார்கள். [அவர்கள் இப்போது இல்லை]. பிராமணகுடும்பங்களில் இதைக் கண்டிருக்கிறேன், மிக சொற்பமாக. ஆனால், பெண்கள் பின் தள்ளப்படுவார்கள். அப்படி வந்த இரண்டாம் தலைமுறை வாரிசு, இன்றளவும் எங்களுடன் 40 வருடங்களாக தொடர்பில் இருக்கிறார். அத்தகைய குடும்பங்களில் கணவன்மார் குடிபோதையில் இருப்பார்கள். வீட்டுக்கு சல்லிக்காசு கொடுக்கமாட்டார்கள். மகனும், மகளும் படித்து முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தால் தலித் சான்றிதழ்களை கூட தர மறுத்தான், அவளுடைய கணவன். என்னிடம் செம்மையாக அடி வாங்கின பின் தான் தந்தான். ஒரு பிரபல தலித் உத்தியோகஸ்தர் உதவியுடன், ஒரு ஐயங்கார் வந்து சிறார்களுக்கு சான்றிதழ் வாங்க உதவினார். ஆனாலும் நம் தலைவிக்கு பெண்ணை படிக்க வைக்க ஆர்வமில்லை; கணவன் கிடைக்கமாட்டான் என்ற கவலை. என் மனைவி வஸந்தா அடம் பிடித்து, அந்தப் பெண்ணை படிக்க வைத்தாள். அந்தப் பெண் தடபுடலாக ஆங்கில இலக்கியத்தில் முது நிலை பட்டம் வாங்கியுள்ளாள். சுருங்கச்சொல்லின், பெண்மையை நசுக்க விரும்புவது ஆண் வர்க்கம்; உதவி அந்தந்த தலை முறை பெண் சமுதாயம். இன்று கூட, ஒரு மேல்மட்டத்தை சார்ந்த முதிய பெண்மணி ‘பெண்கள் இருக்கும் இடம் தெரியக்கூடாது; வேலைக்கு செல்வது கற்பை குலைக்கிறது என்றார். எனக்கு வேண்டப்பட்ட ஒரு செல்வந்தர், நாயக்கர் இனம். தன் பெண்ணின் திருமணத்துக்கு என்னை அழைக்க வந்தார், குடும்பத்துடன். எல்லாரிடம் அவருடைய நன்கு படித்த மணப்பெண் வேலைக்கு செல்வாள் என்று சொல்லி விடுங்கள் என்ற சத்தியப்பிரமாணம் வாங்கினேன். என்னிடம் சம்மதம் சொல்லி விட்டு, அங்கு திட்டமிட்டு, அதை கோட்டை விட்டார். இது எல்லாம் 2016ம் வருடம். இது நிற்க.

இவ்வாறு என்னை எழுதத் தூண்டியது சில மணி நேரம் முன்னால் வந்த ஒரு நாளிதழ் செய்தி. டாடா உலகளாவிய ஒரு மாபெரும் தனியார் மூலாதார நிறுவனம். அதன் பிரிவுகள் பல. ஒவ்வொன்றும் பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல், மற்றும் பற்பல. அந்த மூலாதார கம்பெனியில் 1.45 லட்சம் பெண்கள் ஊழியத்தில் இருந்தும் உயர்ந்த பதவிகள் அவர்களுக்குக் கிட்டுவது அரிது. பலர் பொறுப்பான பதவிகள் வகிக்கிறார்கள், ஒரு எல்லைக்கு உட்பட்டு. ஒரு ஆணுக்கு அந்த எல்லையில்லை. ஒரு நிறுவனத்திலாவது தலைமை பொறுப்பு பெண்ணினத்துக்குக் கொடுக்கப்படவில்லை.

இது மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல. தற்காலம் முதன்மை பொறுப்பு ஏற்று இருக்கும் திரு.சைரஸ் மிஸ்திரி அவர்கள் 2020ம் ஆண்டுக்குள் ஆயிரம் மேலாண்மை பொறுப்பு பெண்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, இப்போது 300 பெண் அதிகாரிகளுக்குத் தீவிரபயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதன் நுட்பம் யாதெனில், எல்லாவிதமான துறைகளின் தலைவர்கள் பயிற்சி அளிப்பதால், இந்த பெண்ணரசிகள் எல்லாத் துறைகளிலும் துரிதமாக முன்னேற முடியும் என்பதே. திரு.சைரஸ் மிஸ்திரி அவர்களின் கனவு நனவு ஆகட்டும் என வாழ்த்துவோம்.

சீரும் சிறப்புமாகவும் முன்னோடியாகவும் திகழும் டாடா நிறுவனத்திலேயே இந்த கதி. மற்றவர்களை பற்றி கேட்கவேண்டாம். ஆண் சுவபாவத்தை பற்றி ஒரு உண்மை விளம்பல். எங்கள் தணிக்கைத்துறையில் அல்லி ராஜ்யம் என்று சொல்லலாம். பெண் அதிகாரிகள் தான் அதிகம். நான் 1955ல் சேர்ந்த போது பெண் அதிகாரிகள் பத்து பேர்கள் கூட இல்லை. ஆரம்பகாலத்தில் பெண் அதிகாரிகளிடம் வேலை செய்வதை நான் தட்டிக்கழிக்கப் பார்த்தேன். ஆனால், பெண் அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைத்தது. பெண்ணினத்தின் திறன் புரிந்தது. 25-30 வருடங்கள் முன்னால், ஆணாதிக்கம் கொடி கட்டி பறந்த ஒரு அலுவலகத்தில், ஒரு இக்கட்டான நிலையை சமாளிக்க ஒரு பெண்ணதிகாரிக்கு நான் கொடுத்தப் பொறுப்பு மிகுந்த பக்குவத்துடன் கையாளப்பட்டது. அதனால், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது பெரிய கதை. யாராவது கேட்டால், பார்த்துக்கொள்ளலாம்.

பல காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை நான் இணைத்து வழங்கியதின் காரணம்: பெண்ணியம் தலையெடுக்க சமுதாயம் திருந்த வேண்டும். மேலும் திடுக்கிடும் அட்டூழியங்களைப் பற்றி எழுத விருப்பம். பார்க்கலாம். வெறும் பேச்சு வீண்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://lh3.googleusercontent.com/-p7Iu97JWTgM/TYCzTPJe1WI/AAAAAAAAGws/Mkwo65IlHHo/s1600/hinduism-and-women.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *