குறளின் கதிர்களாய்…(124)
செண்பக ஜெகதீசன்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
-திருக்குறள் -479(வலியறிதல்)
புதுக் கவிதையில்…
உள்ள பொருளின் அளவறிந்து
வாழாதவன் வாழ்க்கை,
உள்ளது போலத் தோன்றி
இல்லாததாகி
எதுவும் தோன்றாமல் கெட்டழியும்…!
குறும்பாவில்…
கைப்பொருள் அளவறியான் வாழ்க்கை,
உளதுபோல் தோன்றி இல்லாததாகிக்
கெட்டிடும் எதுவுமேயின்றி…!
மரபுக் கவிதையில்…
இருக்கும் பொருளின் அளவறிந்தே
இயல்பாய் வாழத் தெரியாதவன்
பெரிதாய்க் கொண்ட வாழ்வதுதான்
பார்க்கத் தோன்றும் உள்ளதுபோல்,
கருத்தில் கொண்டிடு உண்மையிதை
காணுமிவ் வாழ்க்கை இல்லாதுபோய்,
உருவம் தடயம் ஏதுமின்றி
ஒன்றாய்க் கெட்டே அழிந்திடுமே…!
லிமரைக்கூ…
கைப்பொருளின் அளவறிந்திடான் வாழ்வு,
உள்ளதுபோல் தோன்றி இல்லாததாய்
எதுவுமேயின்றி கெட்டுவருமே தாழ்வு…!
கிராமிய பாணியில்…
வாழணும் வாழணும் வாழ்க்க வாழணும்
கைப்பொருள் அளவறிஞ்சி வாழ்க்க வாழணும்..
அளவறிஞ்சி வாழாதவன் வாழ்க்க
அப்புடியே உள்ளதுபோலத் தோணும்,
உண்மயியல அது இல்லாமலே போவும்
எதுவுமில்லாமக் கெட்டழிஞ்சிபோவும்..
வாழணும் வாழணும் வாழ்க்க வாழணும்
கைப்பொருள் அளவறிஞ்சி வாழ்க்க வாழணும்…!
-செண்பக ஜெகதீசன்…