Tag: கவிஜி
-
நீ ஆன நான்…
உருமாறிக் கிடத்தல்உயிர் தாவி கடத்தல்அற்றவன் பெறுகிறான்கற்றதன் பொருள்மற்றவையும் சொல்லலாம்மாற்றுதலுக்குரியதுமௌனம்- செயல்- தூக்கம்- பசி…சொல்லற்ற சூட்சுமக்குறியீட்டு கொட்டகைகல் உடைத்த நெஞ்சம்பஞ்சின் வண்ணம்…மயில் தோகைமையல்தேடும் யோகம்- யாகம்காற்றுத் திசைகைவிரித்த பெருங்காடுபுள்ளியாய் -அதுமானாகவும் புலியாகவும்பூவாகிபுழுவாகி, தொட்டால்சிணுங்கிய சுண்டு விரலாகிநடுங்கிய பனிக்குள்மூடு மந்திரயந்திர தந்திரத்தில்….வெண்ணிற வாடைவெற்றிட வேகம் கொண்டுதீ மூட்டும் வெறிக் கண்கள்கருவளையம் ஐம்பதுக்கு மேல்…கடைசி துணியும்திமிர் பிடிக்கதீயான, நீர் ஆனா நீஅது நான் ஆன, பின் நீ ஆனநான்…கவிஜி -
கொடுமணம் – வரலாற்றுத் தடம்
— கவிஜி.
கொடுமணம் – வரலாற்றுத் தடம்
பயணங்கள் தரும் தியானம் உணருதலின் உள் சங்கமம் தீரவே முடியாத தாகத்தை நமக்குள் தெளித்துக் கொண்டே செல்லும். வெற்றிட மழை அது கவனத்தை ஒரு மனதாக சேர்க்கும் நுட்பம் எல்லா பயணங்களுக்கும் உண்டு என்றே நம்புகிறேன். முடிய முடிய நீளும், முடியாத நீட்சியின் தொடுவானத்தில் ஒரு முனை நம்மோடே வருவதில்தான் நூலிழை திருப்பங்கள் பயணம் எங்கும் கிறுக்கல்களை கவிதையாக்கும். காகித பூக்கள் எனது பயணமெங்கும் நான் பயணிக்க பயணிக்க பயணமாகவே மாறி விடுவதில் எனக்குள் இருக்கும் நான் செத்து போகிறான். நானுக்குள் இருக்கும் நான் பிழைத்துக் கொள்கிறான். தேடல்களில் இல்லாத எதுவும் சிந்தனையாய் இருக்க முடியாது என்பதாக எனது சிந்தனையும்; தேடலாகவே மாறி விடுவதில்தான் எனது பயணம், நான் நினைத்தது போல அல்லாமல் வேறொன்றாக இருக்கிறது.
வேர் தேடி செல்லுதல் எவைக்கும் உண்டு. அவை கொண்ட சுவைக்கும் உண்டு. பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கும் நவீன வசனம் போல ஒரு துளி இப்பக்கம், மறு துளி அப்பக்கம் இடையினில் நீண்டதொரு வாசகமாய் நான் என்ற நான். எப்பக்கமும் என் பக்கமாய் அப்பக்கத்தில் நான் பக்கமாய், சிறகு முளைத்த வானம் போல வானமெங்கும் பறவையாகிய போதுதான் கண்கள் முழுக்க காடாய் விரிந்து கிடந்தது கொடுமணல் என்ற பகுதி.
கொடுமணல் என்பது ஒரு தொல்லியல் களம். இது ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளகோயில் மற்றும் சென்னிமலைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். ஈரோடு நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டரில் இருக்கிறது. காவிரி ஆற்றில் கலக்கும் எங்கள் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருப்பதில் பெரு மகிழ்வு. ஆனால் நொய்யல் அங்கு இல்லை என்பது பேரதிர்ச்சி (கோவை தோழர்கள் கவனிக்க) ஒரத்தபாளையம் அணை அத்தனை அற்புதம். ஆனால் நீருக்கு பதில் முழுக்க கழிவு நீர் (இது வேறு கட்டுரை).
சங்க இலக்கிய பதிற்றுப்பத்தில் இவ்விடம் கொடுமணம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேர நாட்டின் தலைநகரான கரூரை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இவ்விடம் இருந்திருப்பது சமீப கால தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவ்விடத்தில் கால் வைக்க வைக்க எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை என்னவென்று வர்ணிப்பது. அது ஒரு வகை அமானுஷ்யம். நம் மூதாதையர்களுடனான ஒரு வித தொடர்பை நான் பெற்று விட்டதாகவே எனது கற்பனை கண்கள் விரிந்தன. அங்கும் இங்கும் நடந்தேன் ஓடினேன். கிடைத்த மண்டை ஓடுகள், கற்கள், நடுகல்களுடன் என்னை இணைத்துக் கொண்டே இருந்தே.ன் அங்கிருந்த காலம் சற்று நின்று விட்டதாக ஒர் எண்ணம்.
கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்க களமாகக் காணப்படுகின்றன. இதனை சுற்றி சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்களும் செவி வழி செய்தியாக அதை உறுதி படுத்தினார்கள். இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. நான் கண்ட சில புதைகுழிகள், கீழிடையாக இரு அறைகள் கொண்டதாகவே இருந்தன. சில இடங்களில் நடுகல்கள் பாதி பனைமரம் அளவுக்கும், சற்று அதை விட குறைவான உயரத்துக்கும் இருந்தன. அது எப்படி இத்தனை காலம் அப்படியே நிற்கிறது என்ற பிரமிப்பில் நான் மிரண்டு, சுருண்டு மூளையை இன்னும் கொஞ்சம் இழுத்து இழுத்து யோசிக்க வேண்டியாதாகப் போனது.
கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக்கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது என்பது தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்கும் உண்மை என்பதற்கு இதை விட சான்று வேறு என்ன இருக்க முடியும். இத்தனை பக்கத்தில் இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் இருப்பதில் ஒரு கணம் ஸ்தம்பிக்காமல் இருக்க முடியவில்லை.
இதோடு மட்டுமல்லாமல் கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சில், அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. ரோம் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது. கிமு 500க்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது கூடுதல் செய்தி.
சுற்றியும் புதையப் பட்டிருக்கும் கல்களின் நடுவே மண்ணுக்குள் கண்டிப்பாக ஒரு தாழியோ அதற்கு மேற்பட்டவையோ இருக்கலாம், அதற்குள் மனித பிணங்கள் இருக்கலாம் என்பது அதன் சுற்று வட்டார குடிகளின் எண்ணம். அது நிஜமாகதான் இருக்கும் என்றே எனக்கும் படுகிறது. ஏனெனில் கண்ட காட்சிகள் வெறும் காட்சிப் பிழையாக இருக்க முடியாது. காலப் பிழையாக வேண்டுமானால் இருக்கலாம். காலப் பிழை என்பது பின்னால் வரும் உயிர்கள் கண்டு கொள்ள, விட்டு செல்லும் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் மனிதகுலம் ஒவ்வொரு கால கட்டத்திலும் தன் வரலாறுகளை ஏதாவது ஒரு வழியில் பதிந்து விட்டு தான் செல்கிறது. அது தான் நம் எதிர்காலத்தின் நூலிழை தொடர்பின் பாதைகள் என்பது எத்தனை யோசித்தும் கிடைக்காத மூலக் கவிதை. கவிதையின் கால் தடம் எனது தேடலின் பயணமாய் இருப்பதில் நான் மீண்டும் மீண்டும் மீண்டு விடுகிறேன் ஒரு மீட்சியென அல்லது ஒரு நீட்சியென.
நன்றி: விக்கிபீடியா
-
விபத்தின் முகமாய் இருக்கிறது!
-கவிஜி
காடு தேடும் பாதையைத்
தொலைத்த பாதங்களே
கண்டு பிடிகின்றன!***
வளைந்து கொண்டே
சென்ற மனதில்
சட்டெனப் புகுந்த முடிதல்
ஒரு விபத்தின்
முகமாய் இருக்கிறது!***
நிறங்களின் கதைகளில்
கருப்பு வெள்ளை
நாயகனும் வில்லனும்!***
பலியாடுகளின் தேசத்தில்
ஒரு கத்தியாவது
உடைந்து கிடக்க, வேண்டும்
அய்யனார்
மீசை முறுக்காதவராக
இருக்கிறார்! -
தற்கொலை!
-கவிஜி
நீளப் புரியாமை
நிறமாறிய வானவில்லில்
தொடுவானமாய்ச் சிதறிய
பின்னோக்கிய சிந்தனைக்
கூடுகளின் கற்குவியல்
பயங்களாய்
கூடு விட்டுக் குருவியான
இலக்கியச் சந்தையில்
தீ சுட்ட ஒற்றை விரலை
மருதாணி சிவக்கடிக்க,
சிந்திய வெண்பனி
மழைத் தேசத் தாவலாய்
தன்னிலை மறக்க…
உச்சி மலைப் பாட்டை
காற்றொன்று தேடுவதாய்த்
தலை விரித்த கவிதையாய்
உடல் வளைத்த ஆடையில்
மிச்சமென ஒரு
நிர்வாணம்
இலை இணுங்கிய
சிறு துளிகளில்
ஓ வெனக் கதறியது அருவி…
அது தீ சுட்ட புகை
என்ற மாற்றுக்
கருத்தில்
என் தற்கொலை! -
யாதுமாகிய யாவும்!
-கவிஜி
காதல் ஒன்றுமில்லை…
காதல்
கடவுள் ஒன்றுமில்லை…
கடவுள்
நான் ஒன்றுமில்லை…
நான்
நீ ஒன்றுமில்லை…
நீ
ஒன்றுமில்லாத ஒன்று
ஒன்றுமில்லாத, ஒன்று…
புரிதல், அறிதல்
பின்பக்கம்-முன்பக்கம்
மாற்று-என் பக்கம்
உன் பக்கம்…எது அது – அது இது
சுற்றும், நிற்கும்
நிற்கும், சுற்றும்…
உடைந்த பின்
உடையாது…
உடையாது உடைந்த
பின்னும்…எரிகிறது காடு
வலிக்கிறது ஆகாயம்…
பூமி பாதமாகின்-
யாதுமாகிய யாவும்
சாவும்-பிறவி…
ஒன்று இருக்கிறது
உவமை-யாக
உடைத்தெரியுங்கள் கண்ணாடியை…! -
அமரந்தா …
— கவிஜி.
இரவு தன் கண்களை நன்றாகத் திறந்திருந்தது தன் சிறகுகளைத் திறந்திருந்தது போலவே. சாலையெங்கும் பகலின் சாயல் தன்னை ஒரு இளைப்பாறலாய் அணத்துக் கொண்டிருந்தது. இரவு எதையோ தேடுவதாகப் படுகிறது. அமரந்தா தன் இருசக்கர வாகனத்தில் இலைமறை காயாய் விசும்பலைப் பார்வையாக்கி வெறித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தாள். இரவின் தேடலுக்குள் தொலைவது அவளின் தேடலாக இருக்க வேண்டிய சூழலாய் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது அவளின் ஆழ் மனம். உடல் முழுக்க பூத்திருந்த வியர்வைத் துளிகளில் நள்ளிரவைத் தொடும் வெளிர் காற்று ஒத்தடம் தந்து பறித்துக் கொண்டிருந்தது அவளின் பகலின் இயந்திரத்தை.
அவள் வண்டியை இன்னும் வேகமாக்கினாள். காற்றோடு குழல் சொல்லும் குதியாட்டத்தில் நாலரை மணிக்கு எழுந்து விடும் தொண்டையடைக்கும் து(தூ)க்கம் தப்பியோடிக் கொண்டிருந்தது. நீண்டு பின் சரிந்து பின் சரியாகி பின் வளைந்து நெளியும் சாலையில் வெறி கொண்ட சர்ப்பமென விழி மூடா கோபங்களைத் துப்பிக் கொண்டே சென்றாள். சாலையோரக் கடைகளின் தூக்கம் கதவடைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.
பெருமூச்சு விட்டாலும் தேநீர் போட்டு, இட்லி அவித்து, மதியத்திற்கு சாதம் வடித்து, அதற்குத் தேவையான சட்னி சாம்பார் குழம்பு பொறியல் என டிபன் டிபனாய் அடுக்கி, பெரியவனை எழுப்பி, சின்னவளை அதட்டிக் குளிக்க வைத்து, குளித்து, இஸ்திரி செய்து, கணவனை அனுப்பி விட்டு, மாமனார் மாமியாரை சாப்பிட வைத்து, குழந்தைகள் இருவரையும் பள்ளிக்குச் சரியான நேரத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு, பின் அரக்க பறக்க இரண்டு இட்லிகளை நின்று கொண்டே வயிற்றுக்குள் போட்டு (சிலபோது தேநீரோடு காலைக் கதை முடியும்) வண்டியில் விரைந்து, பின்னால் முன்னால் சரி செய்து கொண்டே அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தும் போது பத்து நிமிடம் தாமதமாகி இருக்கும். அதற்கென்றே பிரத்யேக சிரிப்பொன்றை வளர்த்துக் கொண்டே மேலாளரின் அறை திறக்கச் செய்யும் அன்றைய வேலை அப்போது தான் தன் பீரங்கி கதவைத் திறக்கும்.
உறக்கத்தின் உச்சியில் சாலையோர வாசிகள் கொசு கடித்தாலும் தூங்கி விடும் வரம் பெற்ற புண்ணியவான்கள். கண்கள் நிறைய கண்டு கொண்டே இன்னும் வேகமாய் வண்டியை ஓட்டினாள் அமரந்தா.
ஆசுவாசப் படாத அத்தனை உணர்வுகளும் கலங்கிய கண்களை காட்சியோடு பிழையாகிக் கடக்கச் செய்து கொண்டிருந்தன. ஏனோ அழுகை மட்டும் வரவில்லை. அழுது விடக் கூடாது என்பதிலும் தீவிர சிந்தனையை தேடலாக்கினாள். வண்டியின் காதோரங்களில் தன்னை பின்னோக்கி நீட்டிக் கொண்டே ஒரு பகலின் தீவிரத்தை விழுங்கிய மலைப் பாம்பாய் மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் சுருண்டு கொண்டிருந்தது சாலை. ஆங்காங்கே தப்பித்து வாழும் சில மரங்கள் “போகாதே போகாதே” என்பது போல தலையாட்டி, உடல் ஆட்டி, உயிராட்டிக் கொண்டிருந்தன. இனம் புரியாத பயத்தை இடம் பொருள் அறியாமல் தன் மீது யாரோ விதைப்பதாக ஒரு உறுமல் அவளை தப்பிக்கச் சொல்வதாக இருந்தது அமரந்தாவின் வேகம்.
வேகம் … வேகம்… வேகம் … அந்த ஃபோன் இந்த ஃபோன் … அந்த பில் இந்த பில் …
“ஓ … அந்த விஷயமா? அது அமரந்தாவுக்குத் தெரியும்”
“அமர் சார் கூப்பிடறார் “
“அமரந்தா மேடம் நீங்கதானே?”
வைத்த தேநீர் பாலாடை பூத்து பட்டுப் போன பின் எடுத்து ஒரே மடக்கில் குடித்து விட்டு, நேரம் காலம் தெரியாமல் வழிய வலிய வலிய வழிய வந்து நிற்கும் சக ஊழியனிடம் ஜாடை காட்டி கொஞ்சம் இளைப்பாற ஓய்வு அறை செல்கையில், அவனின் நமட்டுச் சிரிப்பு அவனுக்கு எதுவுமே வராது என்பது போல இருக்கும். அமரந்தாவுக்கு என்னவோ போல் இருக்கும்.
அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி இரவு ஏழை நெருங்க நெருங்க …
நெருங்கி வந்து ஹே… ஹே… என்று கத்திப் போகும் இருசக்கர வாகன இளைஞர்களைப் பார்த்து அவளும் “ஹே” வெனக் கத்தினாள். அவர்களை இன்னும் வேகமாய் விரட்டினாள். அவளின் இதயத் துடிப்பின் வேகம் இன்னும் … இன்னும் … வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த குருதியின் நிறத்தி, கரப்பான் பூச்சியின் குருதியை கொட்டி விட்டது போல் சிறகு முளைக்கத் தொடங்கி கோபங்களின் எண்ணமாய் சாலை கடந்தது.
எண்ணம் செயலானாலும் “அது சரியில்லை இது சரியில்லை” என்று புலம்பும் மாமியார். “இந்த காலத்து புள்ளைங்க மதிக்கறதே இல்ல” என்று புலம்பும் மாமனார். குழந்தைகளின் வீட்டுப் பாடம், இரவுச் சோறு, அவர்கள் சண்டை இவர்கள் சண்டை, நாத்தனாரின் நகைப் பிரச்சினை, அடுத்த மாத தவணைப் பிரச்சினை என்று யோசித்து, ஒரு வழியாக சமாளிப்பதற்கான முடிவெடுத்து, பின் பாத்திரம் கழுவி, துணி துவைத்து, அடுக்களை சுத்தம் செய்து, படுக்கையில் வந்து விழும் போது கை வந்து விழும் கணவன் என்ற கொம்பனாய். ஈடுபாடு இல்லை என்ற முகச் சுளிப்போடு முகம் திருப்பும் கணவனை சமாதானம் செய்யக் கூட வழியின்றி வலிமையின்றி கண் மூடுகையில் மணி 11 தாண்டியிருக்கும்.
“ஏன் 11 மணிக்கு பொம்பள வெளிய வரக் கூடாது?” கேள்விக்கு இடமே இல்லை இங்கு. எல்லாமே பதில்தான். புரிந்தும் புரியாதது போல் புரிந்து கொள்ளும் பதில். அசைவற்ற முகத்தில் அத்து மீறும் கனத்தோடு நின்றாள் அமரந்தா.
“என்ன வழக்கம் போல. கோபமா?” வேர்த்து பூத்து வாசல் வந்த ஜீவா, பிரிந்து கிடந்த தலை முடியை வளைத்து நெளித்து கொண்டை போட்டபடியே கேட்டாள். சிரிக்கவே முடியாத உதடு கன்னிக் கிடந்தது. அவள் உடல் மீது சாராய வாடை.
“வர்றவனுங்க எல்லாருமே குடிச்சிட்டு தான் வர்றானுங்க” அமரந்தாவின் வெற்றுப் பார்வைக்கு பொட்டு வைத்து பூ சூடியது ஜீவாவின் விளக்கம்.
“என்ன செய்ய. இது பத்தாவது ஆள். அம்மா கீழ விழுந்து கால உடைச்சுகிச்சு. காலைல ஒரு ரெண்டாயிரமாவது அனுப்பனும் அதான்” என்றாள் ஜீவா அவளின் கண்கள் சிரித்தது குரூரமாய். அவளின் கண்களில் கண்ணீர் பழைய கதையை பழையதாகவே வடித்துக் கொண்டிருந்தது குரூர சிரிப்பின் மறு அசைவாய்.
11வது ஆள் வீட்டுக்குள் போக ஜீவாவைத் தடுத்தாள் அமரந்தா.
ஜீவாவின் கேள்விப் பார்வைக்கு அமரந்தாவின் பதில் இப்படி இருந்தது
“ஜீவா இருடா. நான் போறேன்”
-
சம்பளத்தின் மரணம்
-கவிஜி
பித்த நிலைக்குள்
போகும் உன்னதத் தருணம்
மொத்தக்
கொடியில் ஒத்த ஆடை…தாவரங்கள் துருவங்கள்
இலைமறையாய்
உள்ளங்கை
மறைக்கும் உயிரோசைக்குள்
காடு கொண்ட ஒற்றையடி…மதி கொண்ட நிறத்தின்
மௌன மொழி மண்டிய
பயத்தில் முயங்கித்
திரிவது பூனை
மறந்த மதில்…சொல்லுதல் செய்தல்
இடைவெளி இல்லாத
நூலகத்தில் பாசி படர்ந்து
தூசுகளூடே சிறு கீற்று
வெளிச்சம்…தத்தம் கண்களின் கவிதை
கொன்று குவிக்கும்
குருட்டுச் சிந்தனைக்குள்
மயிரடர்ந்த
மயக்கத் தாழ்…இரு கைகள் ஆணி
இறங்க
இன்னும் இரு கைகள்
நீட்டியவனே
சம்பளம்… -
பறவையே எங்கிருக்கிறாய்?
— கவிஜி.
ஜன்னலோரம் இருந்த அந்தக் கட்டிலில் அவன் அமர்ந்திருந்தான். ஏதோ யோசனை! அவன் முகம் தெளிவாய் இருந்தது முடிவெடுத்த பின் சாகத் துணியும் தற்கொலைக்காரன் போல, முடிவெடுத்த பின் கொலை செய்யத் துணிந்த போர் வீரன் போல, தெளிவான மனநிலைக்குள் குழப்பத்தை தேடுபவன் போல. சற்று நேரத்தில் அவன் இதழ் மெல்ல விரிந்தது. அவன் ஜன்னலை உற்று நோக்கினான். ஏதோ சட சட, தட தடவென ஒரு சத்தம். அது கேட்டதினால் தான் அந்த சிரிப்பு உதிர்ந்திருக்க வேண்டும்.
“என்ன வந்திட்டியா பறவை”,என்றான், இரு புருவங்களையும் உயர்த்தியபடி.
அதே தட தட, சட சட சத்தம் ஜன்னலுக்கு பின்னால் கேட்டது. கேட்டுக் கொண்டே இருந்தது. ஆம், வந்து விட்டது அந்தப் பெயர் தெரியாத பறவை. ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான், தன் காதுகளை கூர்மையாக்கி. அறையெங்கும் ஒரு வித சூடு பரவியிருந்தது. அது அவனுள் எந்தவித முக மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் பார்வை ஆங்காங்கே நிலை குத்தி நின்று கொண்டிருந்தது.
” ஆமா பறவை. உன் பேர் என்ன? எத்தன தடவ கேட்டாலும் நீ சொல்ல மாட்டேங்கற ம்..ம்… சரி விடு இப்ப, பேரா முக்கியம். வாழணும் அதுதான் முக்கியம்”
“நான் உன்னப் பத்தி யாருட்ட சொன்னாலும், என்னை பைத்தியக்காரன்னு சொல்றாங்க பறவை” என்று சட்டென நிறுத்தினான்.
மெல்ல தலையை இடது புறம் தூக்கி ஜன்னலைப் பார்த்தான். கொஞ்சம் திறந்திருந்த ஜன்னலில் எவ்வித அசைவும் இல்லை. பறவை கவனத்தோடு கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தான் புன்னகைத்துக் கொண்டான்.
“சரி விடு பறவை நான் பைத்தியமாவே இருந்துட்டுப் போறேன். இங்க எல்லாருமே, தான் பைத்தியம் இல்லங்கறத நிரூபிக்கத்தான் வாழறாங்க. ஆனா, நீயும் நானும் வாழ்றதுனால பைத்தியமா இருந்தா இருந்துட்டுப் போலாமே” என்று சொல்லி சிரித்தான். பின், அவனே தொடர்ந்தான் …
“ஆமா பறவை . நீ உயரமா பறக்கும் போது என்ன நினைப்ப? நாங்கெல்லாம் உயரமா பறக்கும் போது, உயிர் போகாம கீழ வரணும்னுதான் நினைப்போம். ஆனா நீ வரம் வாங்கின உயிர் ஆச்சே உனக்கு உன் மனசுதான் உயரம். இல்ல!,” என்று சொல்லி அமைதியானான். நன்றாக சுவரில் சாய்ந்து கொண்டு, இரு கால்களையும் குத்த வைத்து அமர்ந்து கொண்டான்
“பறவை. ஹலோ பறவை என்ன இருக்கியா? “என்றான் ஜன்னலைப் பார்த்தபடி.
அதே பட பட, சட சட சத்தம்.
“அதானே. என்னைப் புரிஞ்சுக்கற அழகான ஜீவனாச்சே நீ. நீயா என்ன விட்டு போவ?”
“நீ ஒண்ணும் கவலைப் படாத பறவை. இந்த மனுஷங்க, எப்பவுமே உன்னை புரிஞ்சுக்க மாட்டாங்க. உனக்காக செலவு செய்ய அவுங்ககிட்ட நேரம் இல்ல. ஏன்னா, எல்லாருமே அவுங்க நிழல் கூட ஓடற கூட்டந்தான் அவுங்களப் பத்தி யோசிக்காத. உன்ன மாதிரி பறவையா இருக்கிற வரம் இவுங்க யாருக்குமே இல்ல பறவை”
“நீ நடப்ப பறப்ப. நினைச்சா தூங்குவ. இந்த உலகமே உன்னுதுன்னு நினைப்ப உனக்கு ஜாதி இல்ல, மதம் இல்ல, அணுகுண்டு உனக்குத் தெரியாது. மின்சாரத்துக்கான சண்டைல நீ இருக்க மாட்ட. ஆனா உன் கனவு பெரிய கனவு. அந்தக் கனவுல வானம் இன்னும் பெருசா இருக்கும். எல்லாருக்கும் உன் சிறக கொடுத்துப் பறக்க வைப்பநீ. வேற வேற தேசம் போவ. உனக்கு எதிரிங்க யாருமே இல்ல. ஆயுதமும் தோட்டாவும் உன் தோட்டத்துல விளையாது. நீ அழ மாட்ட. அப்படியே அழுதாலும் அது யாருக்குமே தெரியாது. நீ எங்களயெல்லாம் விட பெரிய ஆள் பறவை.”
“உன்னால மத்தவங்களுக்கு எப்பவுமே ஒரு தீங்கு கூட வராது. எறும்பு கூட உன்ன கடிக்காது பறவை. மழையையும், வெயிலையும், இலையுதிர்தலையும், பனியையும் அப்படியே வாங்கிக்குவ.”
“நீ குடைகளற்ற உயிர் பறவை இதெல்லாம் விட, ஒரு உயிர் பேசுறத எந்த இடையூறும் இல்லாம கேக்கற மனப்பக்குவம் இருக்கே. அதுல நீ தான் பறவை உச்சம். என்ன சிரிப்பு வருதா? சிரி பறவை, சிரி. இங்க எல்லாருமே ஒண்ணுதான். நீ நீயா இருக்கறதும், நான் நானா இருக்கறதும், எல்லாமே ஒண்ணுதான்” என்றபடியே மெல்ல எழுந்து ஜன்னலில் எட்டிப் பார்த்தான்.கண்கள் கலங்கியபடி.
கால்களில் சங்கிலி கட்டிய அந்த அலங்கோல பெண் மெல்ல தலையாட்டியபடியே நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
அங்கே ஒரு பறவையின் இறகு விழுந்து கிடந்தது.
-
கறையான் நச்சரிப்பு!
–கவிஜி
காலத் துருவை
அகற்றும்
அமிலக் கண்ணீரென
ஒரு விவாகரத்தும்,
மாற்றி யோசிக்கும்
அடுத்த நூற்றாண்டின்
மானுடப் பரிணாமமென
ஒரு சேர்ந்து வாழ்தலும்,
இரண்டிலும் இலைமறையாய்
வளர்ந்து
வரலாற்றுப் பிழையாகிக்
கறையான் நச்சரிப்பில்
ஊர்ந்து கிடக்கிறது
மனதைச் சிதைத்த
குழந்தைகள்! -
பூங்குழலி
— கவிஜி.
காதல் ஒரு போதும் தீர்வதில்லை. தீர்வது போல ஒரு தீவிரத்தை இந்த வாழ்க்கை வலை வீசி கதை பேசினாலும் காதல் தீராது என்பதே தீராதுதானே?
தீ சுட்ட இதழ் கொண்டவனாய் ஆதி பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் கனவுகளை விரட்டி பிடித்து பின் விரட்டி விடுபவன். கனவு காண்பது அவனின் தீராப் பசி. மந்திர மனதுக்காரன். எல்லாமே பெரியது அவனுக்கு. வான் கொண்ட நீலமும் அது கொண்ட நீளமும், தான் கொண்ட யாகமும் அது கொண்ட தேகமும் அவனை தீரா சிந்தனைக்குள் சிதறடித்துக் கொண்டே இருந்தது.
தீ சுடினும் வலி காட்டாத முகம் ரசனை மிகுந்தது என்பது அவனின் உள் நோக்கிய சித்தாந்தம். நீண்ட தலை முடியும் நீண்ட தாடியும் அவனை அழகாக்கிக் கொண்டிருப்பதாக அவன் வீட்டு நிலைக்கண்ணாடி நிலை கொள்ளாமல் கூறுவதாக அவன் நம்பினான். நம்புவது மட்டுமே நிஜம். அது ‘ஜனனமாகட்டும். மரணமாகட்டும்’என்பது அவனின் வேதாந்தம்
‘இன்னைக்கு ஆபீஸ் போக பிடிக்கல’ வார்த்தைகள் காதோரம் கிசுகிசுக்க, கவனத்தை பின்னால் அமர்ந்திருந்த தன் மனைவி பூங்குழலியின் பக்கம் சற்று திரும்பிய உடல் மொழியில் கொடுத்தான்.
“ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா?” என்றான் ஆதி வழக்கமான நிதானத்துடன்.
அப்பப்பா, எவ்வளவு வாகனங்கள். இங்கு வண்டி ஒட்டி அலுவலகம் செல்வதும் வீடு திரும்புவதும் போர்க்களம் கடந்து உயிர் திரும்புதல், நிதானம் இழந்த உள் மனசு புலம்பத் தொடங்கியது .
“வீடு ஆபீஸ் சமைக்கறது துணி துவைக்கறது தூங்கறது. ச்சே… நாம மனசு விட்டுப் பேசியே ரெம்ப நாளாச்சுல்ல. ப்ளீஸ் ஆதி என்னை எங்கயாது கூட்டிட்டுப்போ. லைப் போர் அடிக்குதுடா” என்றாள் பூங்குழலி.
அவள் குரலில் இந்த அசுர வாழ்க்கை தூவியிருந்த கலப்பட விதைகள் முளை விட்டிருந்ததை உணர முடிந்தது. ஆதி எதுவும் பேசவில்லை. பைக் நகரம் தாண்டி மேட்டுப் பாளைய சாலையில் பயணிக்கத் தொடங்கியிருந்தது. பூங்குழலி பைக்கில் சற்று முன்னால் நகர்ந்து அமர்ந்தாள் மெல்ல கட்டிக் கொண்டாள். எதிர்க்காற்று அவளின் முகத்தை தழுவிச் சென்றது. அடைபட்டு சுருண்டு கிடந்த கூந்தல் தன் சிறகுகளை விரித்து காற்றோடு கை கோர்க்கத் தொடங்கியது.
“என்ன ஆதி. எதும் பேச மாட்டேன்கிற…ம்ம்ம்ம் … என்னை உனக்கு பிடிக்குமா?”புல்வெளியில் அமர்ந்த படி அவனையே பார்த்துக் கொண்டு கேட்டாள் பூங்குழலி.
“புடிக்காமத்தான் லவ் சொல்லி உன் பதிலுக்காக ஆறு மாசம் காத்திருந்தேனா?”மெல்ல வலது கண்ணை சுருக்கி கண் அடித்தபடியே பதில் கூறினான் ஆதி.
சிம்ஸ் பூங்கா வெறிச்சோடிக் கிடந்தது. ஆங்காங்கே சில குடும்பங்கள் சில ஜோடிகள் என்று பெயருக்கு பூத்த பூக்கள் போல மரங்கள் கொண்ட மைதானமாய் விரிந்து கிடந்தது.
“காதலிக்கும் போது அவ்ளோ பேசுவ கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் இவ்ளோ யோசனை”
“ஹே… ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு மாதிரி இருக்கறதுதான் வாழ்க்கை. பதினாறு வயசுல இருந்த மாதிரியே இருபத்தியாறு வயசுல இருக்க முடியுமா? இல்ல இருபத்தியாறு வயசுல இருந்த மாதிரி முப்பத்தாறு வயசுல இருக்க முடியுமா? ம்..அதுக்காக காதல் குறைஞ்சிடுச்சுன்னு அர்த்தம் இல்ல என்ற ஆதி அவளை ஆழமாகப் பார்த்தான்.
“உன் தாடியும் தலை முடியும் தாண்டா உனக்கு செம லுக் குடுக்குது. இருபது வயசுல பார்த்த மாதிரியே தான் முப்பது வயசுலயும் இருக்க. நான் பாரு ஆண்ட்டி ஆகிட்டேன்” என்றாள் பூங்குழலி
அவளின் உடல் மொழி சிணுங்கியது. அவன் தன்னை இன்னும் இளமையாக உணரத் தொடங்கினான். நிறைய பேசினார்கள் நிறைந்து பேசினார்கள் பேச்சில் காதலும் காமமும் மழை விடத் தொடங்கியிருந்தது. உச்சி மலைக் காற்றின் நெடுந்தூர பயணம் அவர்களைத் தழுவிச் சென்றது. மீண்டும் பூத்த பூவாகி இருந்தாள் பூங்குழலி. அரும்பு மீசை வந்தவனாக தன்னை உணர்ந்தான் ஆதி. வாழ்வின் நெருக்கடியில் இருந்து தொடுவானம் தீண்ட துடிக்கும் பறவைக் கூட்டங்களுக்குள் ஒளிந்து கொண்டவர்களாகி போனார்கள். இருவரும் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் ஜோடிகளைப் பார்த்து அவர்களுக்குள்ளாகவே பேசி சிரித்துக் கொண்டார்கள்(பழைய நினைவுகள்).
“ஆதி அந்த பையனப் பாரேன். கிஸ் பண்ண எவ்வளவோ ட்ரை பண்றான். ஆனா அது விவரமான பொண்ணு. விட மாட்டேங்கறா பாரு”
பூங்குழலி காட்டி பேசிய திசையில் ஆதியும் திரும்பி அந்தக் காட்சியை ரசித்தான்.
“என்ன விவரமா இருந்து என்ன பிரயோஜனம். முக்கியமான நேரத்துல கவுந்துருவீங்கள்ல” என்று கண் அடித்து சிரித்தான் ஆதி.
“போடா பி ஹச் டி ” என்று சொல்லி கன்னத்தில் செல்லமாக அடித்தாள் பூங்குழலி.
பேச்சு எங்கெல்லாமோ சென்று ‘அடுத்த ஜன்மத்திலும் நீயே என் துணையாக வேண்டும்’ என்றான்.
“என்ன திடீர்னு எமோசனல்?” பூங்குழலி. விழி விரியக் கேட்டாள். அவள் பார்வை முழுக்க ஆதியின் முகமே காட்சியாகி இருந்தது.
“சரி எமோசனல் இல்ல. ஜாலி. ஓகேயா” என்று தொடர்ந்தான்அவன் கண்கள் மெல்ல சிவக்கத் தொடங்கி இருந்தது.
“சின்ன உடம்பு, பெரிய கண்ணு, லைட்டா தூக்கின மாதிரி மூக்கு, ரோஸ் கலர் உதடு, வலது பக்கம் வகிடெடுத்து சீவின தலைமுடி,உடம்பை ஒட்டின மாதிரி தாவணி, ஜல் ஜல்ன்னு கணுக்கால்ல ஆட்டம் போடற கொலுசு, இடது மூக்குத்தில மின்னற முகம், வயசு ஒரு பதினெட்டு இருக்குமா? அங்க பாருடி ப்பா. சின்ன வயசுல உன்ன பார்த்த மாதிரியே இருக்குல்ல.” என்றான் ஆதி. அவன் கண்களில் கவிதை படித்த திருப்தி. அவனின் கண்கள் நிலை குத்திய இடத்தில் பூங்குழலியும் பார்த்தாள்
“ம்ஹும். யாரை சொல்ற ஆதி. நீ சொல்ற மாதிரி யாருமே அங்க இல்லையே” பூங்குழலி சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் தேடியபடியே கூறினாள்.
“ஹே லூசு. அந்த சிவப்பு தாவணிடி”
“நீதான் லூசு. கிட்டத்தட்ட எல்லாருமே யூனிபார்ம் மாதிரி சிவப்பு தாவணிதான் போட்ருக்காங்க” பூங்குழலியின் முகம் தேடலைச் சுமந்த பார்வையானது. சட்டென ஏதோ மாந்தரீகன் போல ஆதி கூறினான்
“அவ இங்க வருவா பாரு. வந்து அதோ அங்க இருக்கற சேர்ல உக்காருவா, போட்டோ எடுத்துக்குவா. அவ பார்வை முழுக்க என் மேல தான் இருக்கும்”
பூங்குழலி மந்திரக்காரனைப் பார்ப்பது போல பார்த்தாள் ஆதியும் தவம் கலைந்தவனின் புரியாமை போல புலம்புவதாகவே உணர்ந்தான். அவள் அவன் சொன்னது போலவே அங்கு வந்து அமர்ந்தாள் புகைப் படம் எடுத்துக் கொண்டாள்.
“ம்ம்.. பாரு. சேர்ல பாரு” கிசுகிசுத்த கணவனை செல்ல முறை முறைத்தாள் பூங்குழலி.
“ஒரு கூட்டமே உக்காந்து போட்டோ எடுக்குது இதுல யாரன்னு பாக்க” அலுத்துக் கொண்டாள் பூங்குழலி.
அவளின் கண்கள் ஆதியையே தேடியது.
கண்களை அழுந்த துடைத்துக் கொண்ட பூங்குழலியின் கண்களில் எதிரே புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த அந்த இளம் ஜோடி அவளின் காதலையும், காதல் கணவனையும், அவர்கள் வந்து கொண்டாடிய அந்த ஒரு அழகிய நாளையும் கண் முன்னே நினைவுகளாக்கிக் கொண்டிருந்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மனதுக்குள் வெட்டிய மின்னலென அந்த ஜோடி அவளின் எண்ணங்களை சுழல வைத்ததுக் கொண்டிருந்தது. இன்னும் ஆழமாய்ப் பார்த்தாள். உள்ளமும் உடலும் ஒரு வித நடுக்கத்தை உராய்வை உணர்ந்தது.
நீண்ட தலை முடியும் தாடியும் வைத்துக் கொண்டு அந்தப் பையன் தன் கணவன் ஆதியைப் போலவே இருக்கிறான். அந்த பெண் ஆதி அன்று சொன்ன அந்த ஒற்றை மூக்குத்தி கணுக்கால் கொலுசு வலது பக்க வகிடு சிவப்பு தாவணிப் பெண் போலவே இருக்கிறாள். ‘கடவுளே’ என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் பூங்குழலி. அவளுக்கு எல்லாமே கற்பனையாக கனவு போல இருந்தது. இறந்து போன தன் கணவனைப் போலவே ஒருவன், தன் கணவன் கூறிய பார்த்த ரசித்த அதே உடலமைப்பு கொண்ட பெண்ணுடன் தாங்கள் வந்தமர்ந்த அதே இடத்தில். பூங்குழலிக்குத் தலை சுற்றியது.
ஒரு வேலை மறு ஜென்மமா?!! அவள் இன்னும் இன்னும் குழம்பினாள். தன் கணவன் கூறிய அத்தனை அடையாளங்களும் அவளுடன் ஒத்துப் போகிறது. அது மட்டுமல்ல அந்தப் பையன் அப்படியே தன் கணவனைப் போலவே இருக்கிறான். பூங்குழலியின் மனம் துடித்தது. ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தாள். நெஞ்சு விம்மியது சந்தோசம் மட்டுமே வாழ்வென தெரிவது போல அந்த ஜோடி இன்னும் இன்னும் நெருக்கமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஏக்கம் பெருந்தவிப்பை பூங்குழலிக்குள் விதைத்தது. துக்கம் சட்டென வடிந்து போன மழையின் வழியென காய்ந்தும் ஈரம் பசை கொண்ட வழியாக தன்னை வழியாக்கிக் கிடந்தது. கண்டிப்பாக அது தன் கணவன் ஆதியேதான். அதே இடது கை பழக்கம். வலது கையில் கடிகாரம் கட்டும் அதே சுபாவம் இன்னும் உற்று நோக்கினாள். வலது கண்ணை சுருக்கி கண் அடிக்கும் அதே குறும்பு முகம். சரி அவன் ஆதியாகவே இருந்தாலும் என்ன செய்ய முடியும்? தான் தவழ்ந்த கைகளில் வேறொரு பெண்.
அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல ஒரு ஊற்று கொப்பளிக்கத் தொடங்கியது அவள் எங்கும். காற்றில்லா தேசத்து மரமாக அமர்ந்திருந்தாள் அவர்களை ஆழமாய் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆதியின் சாயலில் இருந்தவன் தன் காதல் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததை இப்போது சற்று உற்றுக் கவனிக்கையில் கேட்க முடிந்தது.
“சிவப்பு கலர் சுடிதாரில் சின்ன கண்கள் கொண்ட ஒருத்தி பாப் கட்டிங் கொண்ட தலை முடியோடு. ப்பா.. எவ்ளோ அழகு அவ. நீ வேண்ணா பாரேன் அவ இங்க வந்து உட்காருவா. என்னப் பார்த்துக்கிட்டே போட்டோ எடுத்துக்குவா.”
திக் என்றது பூங்குழலிக்கு.
“ஆதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????”
வாய்க்குள் வார்த்தை நீச்சல் மறந்து மூழ்கியது. ஏதேதோ எண்ணங்களின் சுழற்சி அவளைக் கொத்தத் தொடங்கியது. இருப்பினும் சமாளித்துக் கொண்டே பூங்குழலி அவன் காட்டிய திசையில் ஆவலோடு கண் விரிய பார்த்தாள்.
சிவப்பு கலர் சுடிதாரில் ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளின் பார்வை முழுக்க ஆதியைப் போல இருந்தவன் மேல் தான் இருந்தது. அது தீரா காதலுக்கான பார்வையாகப் பட்டது. நடை உடை பாவனை. அதிர வைக்க இன்னும் ஆழமாய் உடல் வியர்த்து உள்ளம் நடுங்கி கூர்ந்து கவனித்தாள் பூங்குழலி.
வந்து கொண்டிருந்தவள்…..வந்து கொண்டிருந்தவள்…….பூங்குழலியைப் போலவே இருந்தாள்.
சிறு குறிப்பு: 25 வருடங்களுக்கு முன் சிம்ஸ் பூங்காவிற்கு வந்து விட்டு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானது ஆதி மட்டுமல்ல.
-
மெல்லினமே …
— கவிஜி.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டே இருந்தது.
அவனால் நன்றாக உணர முடிந்தது. புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் கைக்கெட்டும் தூரத்தில் கண்கள் உருட்டிக் கிடந்தது. ஒரு விதமான வியர்வை சட்டென முதுகை நனைத்தது. யாருமற்ற பாதங்களின், தூரமற்ற ஓசைகளின் துகள்களை உன்னிப்பாக சுமக்க முடியும் உத்வேகம் ஒன்றாய், உள்ளுக்குள் போராடும் மிகப் பெரிய வளைவுகளில் வளைந்து கொண்டே இருக்கும் பார்வையில், இல்லாத இருட்டை பகல் மயக்கி சரியும் வானம் கீழிறங்காமலே கூடாரம் ஆவதை அவன் கண்கள் பொத்திக் கேட்டான்.
அறையின் அரை வெளிச்ச இருட்டில் உடல் முழுக்க போர்த்தியது போல “ஒன்று” அவனின் தலையின் அருகே அமர்ந்து அவனை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை அவனால் உணர்ந்தும், கண்டும், கடக்க முடியாத கணத்தில், ஒரு கிணறு வெட்டும் பூதத்தின் விரல்களின் நறுமணத்தோடு நுகரும் வாசனையோடு மூச்சு வாங்கத் தொடங்கினான். அது பார்க்கும் கூர்மையில் பசுமரத்தாணி ஒன்றை முதுகில் யாரோ அடித்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும் பச்சை ரத்தம் ஒழுகும், சூடு கொண்ட கரு மயக்கங்கள் கரை தாண்டி மூழ்கும் கண்களைப் போல, உள்ளுக்குள் விழித்துக் கொண்டு கவனித்தான்.
தூரத்து ரயில் எத்தனை தூரத்தில் வருகிறது என்று விரிந்த கண்கள் காணக் காண, சட்டென வந்து தட தடவெனக் கடந்து போகும் கணத்தை பிடித்தாற்போல சட்டென எழுந்து அமர்ந்தான். எழ எழவே, அவன் முகம் வலது பக்கம் தன்னைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் “அதன்” மீது தான் இருந்தது. “அது” அவனைப் பார்த்தது. கண்கள் கொண்டு ஈட்டியாய், தீட்டிய வெற்றிட வண்ணத்தில் குழைந்து குழைந்து நழுவிச் செல்லும் காற்றில் வளைவுகளைக் கண்டு மிரண்டான்.
“கனவென்றால் கண்கள் விழித்தும் எப்படி அந்த உருவம் காற்றில் அப்படியே இருக்கும்???” அவன் மிரண்டு, எவ்வித முன் யோசனையும் இன்றி, ஸ்தம்பித்தப் பார்வையில் இருக்கும் போதே அந்த உருவம் மெல்ல மறைந்தது. மறையும் நொடியெல்லாம் அவன் மீது எதையோ “அது” பூசியது போல நடுங்கினான். அந்த அறை வெளிகளால் மிதக்கப் படுகிறதோ என்று கூட எண்ணிய பதற்றத்தில் அவன் எடை இழந்தது போல பிரமித்தான். வெள்ளைத் தாளென ஒரு கிழிந்த பக்கத்தில் பெயர் இல்லாத எழுத்துகள் கொண்ட வட்டங்களுக்குள் புள்ளி ஒன்றை விதைக்க விதைக்க விழிப்பு நிலை வீரியம் ஆகி, தலை வெடித்து விடும் நிலையில் மீண்டும் மீண்டும் யோசித்தான்.
அதன் பிறகு அவன் ஏதேதோ உணர்வுகளுக்கு ஆட்பட்டான். அறை முழுக்க வெப்ப சலனம். உள்ளுக்குள் ஏதோ எரிந்தது. மறைக்க மறைக்க முகத்தை முன் கொண்டு வரும், கண் திறத்தலின் காணாமல் போகும், கண்ணாமூச்சி ஆட்டத்தின் விளிம்பு நிலை பாதரசம் சுரக்கும் கண்ணாடிகளின் நெளிவுகளாகிப் போனது வளையல் கொண்ட கைகளும் கொலுசு கொண்ட கால்களும். பூனை நடை நடக்கும் சப்தமும் அடுத்த அறை முழுக்க நிரம்பிக் கிடத்தலில் நொடிக்கு ஒரு திரை அடிக்கொரு முறை விழுந்து கொண்டே இருந்தது. உடல் முழுக்க வலி. உயிருக்குள் ஓலமிடும் ஊஞ்சலை வெட்ட வெட்ட அது வளர்ந்து கொண்டே இருப்பதாய் உணர்ந்த போது ஓடத் துவங்கினான் எத்தனை தூரம் ஓட முடியும்? ஓர் அறை. அதை தாண்டினால் ஹால் அங்கும் ஓடி முடிந்த பின்னால், சமையல் அறை, பின் குளியலறை. நடுங்கிக் கொண்டே சிறுநீர் கழித்தான்
ஒரு கதையில் நின்று கொண்டு சிறுநீர் போவது குறித்து சாரு நிவேதிதா சொல்லிய வரிகள் ஞாபகத்துக்கு வர சட்டென அமர்ந்து போகத் தொடங்கினான். அவன் பயம் முழுக்க சிறுநீராய் உருகி ஓடினாற் போல ஒரு பெரு மூச்சு விட்டான். ஏதோ பாரம் இறங்கினாற் போல வந்து அறையில் அமர்ந்தான்
டிவியை ஆன் செய்தான்.
“ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனி மேல்தான். அருகினில் வருவேண்டி ஆசையில் தொடுவேண்டி.” என்று நாகார்ஜுன் மிரட்டிக் கொண்டிருந்தார்
திக் … திக் … திக் … அவனால் நன்றாக மீண்டும் உணர முடிந்தது. அவனுக்கு பின்னால் “அது” உட்கார்ந்து கொண்டு தலையை ஆட்டியபடியே டிவி பார்ப்பதை பாப்பாவின் கடைசி சுற்றில் நன்றாகக் கண்டான். காண்பவை எல்லாம் கனவாய் போக கூடாதோ என்று, உணர்வுக்குள் ஓடும் திருப்பத்தில் தத்ரூபமாக, மனதுக்குள் பனி மூட்டம் சூழ, நினைவுக்குள் தீச்சுடர் தலை கீழாய் எரிந்துக் கொண்டிருந்தது. அவன் திரும்பியே பார்க்கவில்லை. செயலற்று தைரியம் வரவழைத்து அடித் தொண்டையில் கேட்டான்.
“யார் நீ”
தான் கேட்ட சொல் தனக்கே எதிரொலிக்கும் தனிமையின் சொல்லில், சொல் எதுவோ என்று கடந்து போன ஒலியின் வால் பிடித்து ஒளியின் வேகத்தில் முன்னோக்கி சென்று முகம் பார்க்க முயன்ற பொது சொல் ஒலியாகி ஒன்றுமில்லாமல் போயிருந்தது ஒன்றுமில்லை என்பதால் தான் யூகிக்க, யோசிக்க வேண்டி இருக்கிறது. இல்லாமை, இல்லாமையா?
மெல்ல மெல்ல அறை நிதானத்துக்கு வந்தது. அவனுக்கும் உள்ளே இருந்த பயம் மெல்ல மறையத் தொடங்கியது. எழுந்து போய் ஜன்னலைத் திறந்தான். கை வளையல் ஓசை இப்போது நன்றாகக் கேட்டது. சட்டெனத் திரும்பினான். முகத்தில் பட்ட காற்றில் பெண்மை மென்மையான சுகந்தத்தில், கீற்றுச் சுவர்கள் ஈர மொழிப் பூக்களை காற்றாக்கி அனுப்பும் தென்மேற்குப் பருவம். தெவிட்டாத இதழுடன் தித்திக்குதே என்று மெய் மறந்தான். மனச்சூடு மெல்ல ஆற ஆற, அது சொல்லிய பதிலை திரும்ப திரும்ப நினைவு படுத்தினான். ஆனால் எதுவும் புரியவில்லை. புரியாத சொல்லில்தானே புரிந்தவைகளின் நிர்வாணம் தலை கவிழ்ந்து கிடக்கிறது. கொலை செய்யும் கொடுவாளின் கூர்முனைக்குள் குருதி தேடும் நாக்கு ஒளிந்து கிடப்பது போல மானுடப் பசியின் தீர்வுக்குள் நாக்குகளாய் சுழன்று கழன்று கிடப்பது எச்சில் வடியும் வேகத்தின் மூச்சு வாங்கல் தானே!
அவன் குளிக்கத் தொடங்கினான். பின்னிரவு வேளையில் குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற இனிமை எதுவும் இல்லை என்று உணர்ந்த போது குளியலறையில் ஒரு பெண் குளித்து விட்டு அப்போது தான் வெளியேறிய வாசம் அலை அலையாய் இல்லாத கூந்தலாய் அங்கு மிதந்தது. மிர்தாத்தின் வரிகளெனக் காலம் மறக்கும் சூழலை மிர்தாத்தின் புத்தகம் விதைக்கும். விதைத்த எல்லாமே எடை இழக்கச் செய்யும் ஆத்மார்த்தம். ஆத்மார்த்தங்களில் தத்துவங்கள் பசி அறியா சிறகுகளை சில்லிட்ட வெளி கொண்டு செதுக்கும். செதுக்கிய சூட்சுமங்களுக்குள் இருந்த வாசனை நுகர்வதும் அல்லாத அதற்கும் மேற்பட்ட புரிதலின் சுவாசம்.
சுவற்றுப் பொட்டுக்களில் இன்று மஞ்சள் நிறப் பொட்டு எண்ணினான், 38 இருந்தது. பெண் குளிக்கும் குளியலறையிலிருந்து வரும் வாசம் தீரா மோகத்தை விதைக்கிறது. அது ஆரம்பமும் இல்லாத அந்தமும் இல்லாத இடைவேளையில், காய்ந்தும் காயாமல் கிடக்கும் கோடை ஆடை போல, மனதுக்குள் கிடக்கும் மயக்க நிலைக்குள், ஒரு வித பால் மயக்க பூத்தூவல் நீராக்கி விடுகிறது. அவன் குளிக்க குளிக்க அவளின் வாசம். அவன் மீது ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது. ஒட்டுதலின் உறவுக்குள் உண்மை நிலை கருப் பொருள் கொண்ட தத்துவக் கோட்டுக்குள் இலையுதிர் காலக் கனவுச் சித்திரம் போல வேக சலனம். தேக சலனம் ஆனது ஆகட்டும் என ஆனது ஆனதும்.
இரவுகள் செல்வதும் இரவுக்குள் செல்வதும் இரவாகவே செல்வதும் கொதி நிலைக்குள் குளிர்ந்த நீரில் குத்துக் காலிட்டு அமர்ந்து கிடந்தது அவளின் நிர்வாணம். குளியலறைக்குள் புறமுதுகிட்டு நிற்கும் போது பின்னால் தலை விரி கோலமாய் நிற்கும் நிர்வாணத்தை அவன் பின்னோக்கி பார்க்கும் தைரியம் அற்றவனாக வெளியே வந்தான். வந்து கொண்டிருந்தான்.வெற்றிடம் அள்ளி பூசத் தோன்றிய மணித் துளியில் மிரண்டு மீண்டும் ஆடை அணிந்தான். அணிதலின் அளவு அது மீறும் அடுத்த நொடிக்கு சொந்தமில்லை முந்தைய எண்ணத்திலும் ஆடை ஒன்றும் பெரியது அல்ல.
“ஒரு வேளை மோகினி பிசாசாக இருக்குமோ?”
நாட்கள் நகர நகர இரவுகளுக்கு காத்திருக்கத் தொடங்கினான். “அது” வருவதும் சமையலில் ருசி சேர்ப்பதும் வீடு முழுக்க சுத்தம் செய்வதும் அவன் ஆடைகளை துவைத்து வைக்கவும்என்று ஒரு துணையாகிப் போனது.
கண்ணாடி பார்த்து தலை சீவும் போது அவன் மேல் படரும் கூந்தல் சிலதுகளில் நீட்டமும் நீர்த்துளியும் அவள் ஒரு கூந்தல்காரி என்பதைக் காட்டியது. பெயர் கேட்டான் பதில் இல்லை. இறந்தவளா? எப்படி இங்கு? கேட்டான். பதில் இல்லை. காற்றை வேகமாக்கிப் பயணிக்கும் வேற்று கிரக பெண்ணா? என்றான். பதில் இல்லை. கேள்வியோடு மௌனம் கொண்டு விசுக்கென அணைத்து சென்றது. மூச்சு முட்டி விழிக்கையில் விசும்பல் சப்தம் வீடெங்கும் சிதறும். அடிக்கடி சிதறியது அது அமானுஷங்களின் கூடாக, சமதளமற்ற மேடு பள்ளமாக, அப்போதைய மனநிலை போலவே வீடும் மாறிப் போவதில்தான். ஓடி ஓடி ஜன்னல் அடைத்து ஒடுங்கி நிற்பான் … நிற்கிறான் தொடர்தலைப் போல நிற்பதும் தொடர்கிறது. தொடர்ந்தது. தொடும் தூரத்தில் நின்று தீர்க்கும் “அது”.
நள்ளிரவு வேளைகளில் மெல்ல மேலே படருவதை முதலில் ஆட்சேபித்தான். பின் விட்டு விட்டான். அவனுக்கும் மெல்ல பிடிக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் மஞ்சள் நிற ஆடைகள் வீட்டுக்குள் ஆங்காங்கே தென்படத் தொடங்கியிருந்தன. அவளின் உள்ளாடைகள் கொடியில் காய்ந்து கொண்டிருப்பதை கண்டு திகைத்து பின் புன்னகைத்த நாட்களும் உண்டு. இருவரும் சேனல் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் போது கூட அவன் முகம் பார்க்கத் திரும்பினால், அவள் காணாமல் போய் விடுகிறாள். கோபம் கூட வந்தது.
“பெயர் கூட சொல்லாமல் எப்படி உன்னுடன் வாழ்வது. உருவமே இல்லாமல் எப்படி நான் உன்னோடு சயனிப்பது. காதலும் இல்லை. காமமும் இல்லை. கவிதையும் இல்லை. கற்பனையும் இல்லை. என்னதான் நீ? எது தான் நீ? ஏன் இங்கு நீ? அல்லது நான்?”
நகப் பூச்சுகளில் நெளி நெளியாய் வளைந்து விடுகின்ற புகைந்து கிடக்கும் வானவில் என்று ஒரு கடிதம், வீட்டுக்குள் காணக் கிடைத்த இடங்களிலெல்லாம்பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்தது. பிடித்து பார்த்தான். படித்தும் பார்த்தான்.
“என்ன பிரமிள் கவிதையைப் போல காற்றெங்கும் விதைக்கிறதா உன் முத்தங்களை?”இதழ் பதிந்த முத்த சுவட்டில் அவன் இதழ் பதித்தான். அவள் வரும் போதெல்லாம் ஒரு வித மஞ்சள் வண்ணம் வீடெங்கும் நிரம்பத் தொடங்கியதை உணர முடிந்தது. உணருதல் தானே உயிர்ப்பும் கூட . உயிர்ப்பில் தானே உள்ளம் உருளுகிறது உண்மையைப் போல. மஞ்சள் வாசம் நீர் இறைக்கும் சிவந்த உள்ளங்கைகளில் மீசையாகி குத்தும் கயிறின் அழுத்தமாய் ஆடி ஆடி தலை தூக்கும் வாளியின் முகப்பில் அசைந்தாடும். சிறு எறும்பின் மரணம் போல மனமெல்லாம் தளும்புவதை சுமந்து கொண்ட நிலை. சமநிலை அல்லாத சமன் பாட்டு சித்திரம்.
ஒரு நாள் பாட்டு போட்டு ஆடத் தொடங்கினான், நாணத்துடன் அவளும் ஆடினாள். ஆட ஆட, ஆட்டங்கள் தன் எல்லை விரிக்க, பாட்டுக்குள் புது சொற்கள் பிறக்க வண்ணமற்ற ஓவியங்களுக்குள் புகுந்து வண்ணம் விதைக்கும் உயிர் நிலை மாற்றத்தை வானவில் செய்தே பழக்கப் பட்ட கற்பனை கொண்டு புது பாடல் சமைத்தாள். சிறகு முளைத்த கூட்டுக்குள் தூர தேசம் பொத்தி வைக்கப் படுகின்றனவோ!
கொலுசொலியில் ஜல் … ஜல்… ஜல் …என்ற இசை கண்டிப்பாக அந்த இரவை மிரளத்தான் செய்திருக்க வேண்டும். எப்படித்தான் நெருங்கிப் பழகினாலும் இல்லாத உருவம் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியது. அவன் கண்கள் சுற்றி, தலை சுற்றி அவளை அத்தனை அருகினில் தெரிந்தும் தெரியாமல் தேடியபடி அங்கே ஒரு சித்து விளையாட்டு. தத்தம் வழியினில் பாதம் விதைக்க, நெளிந்த பாதையின் பின்னோக்கிய பயணமாய் அவன். அறை முழுக்க ஆத்திரம் கொண்டு அமைதியாகி சுற்றினான். சுற்றுதல் ஒன்றும் பெரிதல்ல சுற்றிய பின் மயக்க நிலை மகத்துவம் சொல்லும் சிறு மரணம் என்பது போல வீழ்ந்தான்.
“வீழ்வது எதுவாக இருப்பினும் அதுவாக வீழ்வதும் அழகே” கருத்து சொல்லி முகம் திருப்பிக்கொண்ட சுவரொட்டியை முறைத்துப் பார்க்க ஒரு காலம் விழித்துக் கிடந்தது.
எழுகையில் மடி போல ஏதோ தலையில் அழுந்தியது. மார்புகளின் கனத்த வாசம், அவன் நெற்றியில் படிந்தது தீர்க்க தரிசனம் போல. தீர்க்கும் தரிசனம் போல தீர்த்தலே தரிசனம் போல. தவம் கலைந்த போதி மரத்தின் இலைகள் என ஆற்றுப் படுகையில் நீராடி சென்றது அவன் என்ற நிழல்.
மாறுதலே மாறுதல் ஆகிறது. மற்றது எல்லாமே வேஷங்களின் கரையென மூழ்குவதும் எழுவதும் ஆற்றின் சூட்சம் இல்லை. அது கடந்து விட்ட காலமாகவேதான் இருக்கிறது. யார் என்று யோசித்தலின் கைப் பிடி விரலில், தான் என்று யொசிப்பதுதான் மானுடம் தப்பிப் பிழைக்க நீயாக இரு என்பதாக போராடி சொன்னது அவள் என்ற நிஜம்.யாரோ கதவைத் தட்டினார்கள். கதவு திறக்கப் பட்டதும் எதிரேதபால்காரர்.
“நிரஞ்சன் இருக்காருங்களா? ரிஜிஸ்தர் போஸ்ட் வந்துருக்கு”
“நோ… நோ… இங்க நிரஞ்சன்னு யாரும் இல்ல. நான்தான் இருக்கேன். பேர் நிவ்யா” என்றாள் அவள்.
காலையில்தான் மீசை தாடி எடுத்திருக்கும் அச்சு அவளின் முகத்தில் இருப்பதை பார்த்து விட்டு யோசித்துக் கொண்டே சென்றார் தபால்காரர்.
“போன முறை வரும் போது இதே இதே முகத்தை, நிரஞ்சனாக பார்த்தோமே !!!!!!” என்பது அவரின் முணுமுணுப்பு.
-
ரவி வர்மாவின் ஓவியம்
— கவிஜி.
“இது ஒரு வகை மன நோயா..?” என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை.
ரவி வர்மா வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான். தோள் வரை புரண்டு நீண்ட தலை முடியை காற்றின் விரல்களில் தவழ விட்டு, இளைஞர்களுக்கே உண்டான மோட்டார் பைக்கில் அதிவேகமாய் போகத் தொடங்கினான்.
“பகலில் காணும் இடங்களை இரவில் கண்டால் எப்படி இருக்கும்?” என்பது ரவி வர்மாவின் ஆர்வம்… ஆசை… திரில்…
வெறும் ஆர்வத்தோடு ஒரு போதும் அவன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில்லை. இன்பம் பேரின்பமாக ஆகும் வரை, துன்பம் பேரிடர் தந்து புரட்டும் வரை, எதையும் அவன் விடுவதில்லை. விடிய விடிய வானம் நோக்கி விழி விரித்துக் கிடக்கும் தொடுவானத்துக்காரன். வண்ணத்துப் பூச்சியின் வாசலெங்கும் தானே ஒரு ‘வெளி’ யாக கிடக்கும் வகையின் வேற்று உருவம். மழை வரும் நாளில் மனம் திறந்து கிடப்பவன். மழை வராத நாளிலும் மனம் திறந்தே கிடப்பதுதான் ரவி வர்மாவின் வேண்டுதல்.
பகலில் தேடிக் கண்டுபிடித்த ஒன்றோ? அல்லது பகலே தேடிக் கண்டு பிடித்த ஒன்றோ?
விட்ட இடத்தில் வந்து நிற்கும் வேகம் கொண்டவன். இரவின் மடியில் ஈரம் சுமப்பவன். ஈரம் சொட்டச் சொட்ட, துளிகளின் வழிகளை உயிர் தீண்டத் தீண்ட, உரக்க கத்தி சாகவே வேண்டும் என தற்கொலைகளின் தொடர்பற்று, மீண்டும் பகலில் தொலைந்த இடத்திற்கே சென்று தன் உயிர் காத்துக் கொள்ள துடிக்கும் இரவின் மௌனம், அவனது பயணம்….
அந்த வகையில் இன்று பகலில் சென்று வந்த கோவை குற்றாலத்திற்குத்தான், உயிர் தேடி இந்த இரவில் சென்று கொண்டிருக்கிறான். கோடையின் பின்புறம் செல்வது போல, வியர்வையும் வெப்பமும் தன்னை உலர்த்திக் கொண்டேயிருக்க, எதிர்க்காற்றில் ஏகாந்தம் தேடி இலை மறை காயாய் புன்னகைத்தே பயணிக்கிறான்…
“சாலையின் பயணங்கள் தீர்வதேயில்லை… சாலை முடிந்த பின்னும்”
திடும்மென உதிர்ந்த வரிகளை ஆல்கஹால் பதியாத மூளை ஒன்றில் பதிந்து கொண்டான். பேரூர் சாலை. எதிரே இருக்கும் மலை குடைந்து போவது போலொரு காட்சி. பாரதியின் பார்வையில் காட்சிப்பிழை. அதற்குள்ளும் துளிர்க்கும் நம்பிக்கை என்று திறந்து கிடந்த பட்டன்களை தாண்டி கழுத்தின் வழியே முதுகு தொட்ட தென்றல் கழுத்தைப் பிடித்து, வயிறு கிள்ளி, கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.
ரவி வர்மாவின் கூர் பார்வையும், பார் கூர்மையும்…. காடும் மழையும், காட்சிப் பொருளல்ல, ஆட்சி பொருள். திமிர்களின் தேவலோகம். பசுமைகளின் பெருத்த உடலில் பேரின்பம் தீண்டத் தீண்ட திகட்டுவதேயில்லை. உலகம் மெல்ல மெல்ல தனது கடைசி பெட்டியை கழற்றி விட்டுக் கொள்வது போல, நாகரீக நகர சாலை, அவனை உதிர்த்துக் கொண்டேயிருக்க, உள்ளுக்குள் உருளும் காட்டாற்றின் நிர்வாணத்தை கறுமையாக்கி, அவன் மட்டும் காணும் கண்கள் பெற்றவனாய், அதிசயக் கூட்டு முயற்சியின் புதிய சிறகோடு, செக் போஸ்ட்க்கு பின்னால் இருந்த ஒற்றையடிப் பாதையில் காட்டின் கற்பில் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினான்.
பிடித்தவன் பதித்தால் வளரும் கற்பாய், இலை அசைத்து தலையாட்டியது மரம், ஆம், ரவி வர்மா மரங்களின் காதலன்.தூரத்தில் தன்னை குறுக்கி, கற்பு காக்க சுவரோடு ஒட்டி உட்காரும் கதாநாயகி போல, மரத்தடியில் பதுங்கி கிடந்தது ரவி வர்மாவின் மோட்டார் பைக்.
ஹோ ……வென இரையும் வெள்ளிக் கம்பிகளின் தொடர்ச்சி, அருவியாய் முத்துப் பற்கள் சிரிக்க, வெண்ணிலவின் ஒற்றைக் கால் தவம், காதலின் பெருங்கோபம் அல்லது பெருங்காட்டின் முகப்பு வெளிச்சமென தாறுமாறான சிந்தனைகளை சிக்கி முக்கி இரவின் விரல்களில் சொடுக்கெடுத்துக் கொண்டிருப்பதாக முகம் மலர்ந்தான்.
“இரவு சும்மா வருமா?”…….
அவன் கண்கள் சிரித்தது. இதோ மலையேறி, எட்டி குதித்தால் பிடித்து விடலாம் போல இந்த வானம். பகல் என்ற ஆடை துறந்து இரவென்னும் நிர்வாணம் பூட்டிக் கொள்ளும் வானம் வெட்கம் துறந்த விழிகளை தன்னெங்கிலும் வாழ விடுகிறது. வாழ்ந்தும் விடுகிறது. கோடை மழை போல வாடைக் காற்று ஜாடையின் அர்த்தம் உயிர் கரையும் நொடிகளில் ஆடை கனமானது அவனுக்கு.
அந்த வானமும் இந்த பூமியும் அற்புதங்களின் சாட்சி. சாட்சிகளின் நீள்வட்டப் பாதையிலிருந்து ஒரு பெண்ணின் முணங்கல் சத்தம் வர, முகத்தில் கிடந்த முடிக் கற்றைகளை லாவகமாகக் கோர்த்து பின்னோக்கி சரித்தான். அருவியின் இரைச்சலை ‘ம்யுட்’ செய்தான். அவன் சொன்னால் அது கேட்கும். இரவுக் காதலன் இணுங்கினாலும் இலைகளில் கவிதை உதிரும் என்பது அருவியின் போதனை.
இப்போது நன்றாகக் கேட்டது. ஆம்… அது ஒரு பெண்ணின் அழும் குரல். முணங்களாக மட்டுமே வெளி வர முடிந்த சிறகுகளின் ரத்தக் கசிவு என்பதை உணர்ந்த நொடியில், யானையின் பதிப்பாக ஓசையின்றி, சருகு தீண்டா சபலம் தாண்டி முன்னோக்கி கடந்தான். நடந்தான் என்பது சரியில்லை என்பதால் கடந்தான்.
கை கால் கட்டப்பட்டு, உடல் முழுக்க நடுக்கம் சுமந்து, வெள்ளுடையில் ஒருத்தி வியர்க்க விறுவிறுக்க அந்த மரத்தடியில் கிடந்த காட்சி ரவி வர்மாவின் மூளைக்குள் மின்னலை வெட்டச் செய்தது. ஓடியவன் அருகில் அமர்ந்து அவளைத் தட்டி எழுப்பினான்.
அரை மயக்கத்தில் கிடந்த அவள் இன்னும் வேகமாக உடல் உதறி, தலை ஆட்டி, வாய்க்குள் இருந்த துணியுடன் கட்டப்பட்ட கட்டோடு புரண்டு மயங்கினாள். பக்கத்தில் அமர்ந்தவாறே, சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. மனதுக்குள் பல கேள்விகள் இரவுகளை திறந்து விட்டுக் கொண்டேயிருந்தது. அருவியின் இரைச்சல் மீண்டும் கேட்கத் தொடங்கியது.
“யாரிவள்? யார் இப்படி கட்டிப் போட்டிருப்பார்கள்? யாருக்காவது தெரிந்தால் தன்னையல்லவா மாட்டி விடுவார்கள். காப்பாற்றலாமா? இப்படி இத்தனைக் கொடூரமாகக் கட்டிப் போட்டிருக்கிறார்களே, யாராக இருக்கும், என்னவாக இருக்கும்?” அவன் மனதுக்குள் போராட்டம்.
“அடக் கடவுளே, இரவைத் தேடி வந்ததிற்கு இது என்ன புது தண்டனை? என்ன செய்ய? விட்டுப் போகவும் மனம் வரவில்லை….” யோசித்துக் கொண்டே அவளின் கட்டுகளையெல்லாம் கலைந்தான். முகத்தில் முத்து முத்தாய் வியர்த்திருந்த துளிகளை உள்ளங்கையால் துடைத்தான்.
பளிசென்ற முகம், அங்கு இரு நிலவு இருப்பதாக கற்பனை விதைத்தது.
“பெண்களே அழகுதான். அதுவும் இந்த பெண் கொள்ளை அழகாக இருக்கிறாள். ஒரு வேளை, பேயாக இருப்பாளோ…..?” கண்கள் மிரண்டது.
கால்களில் கொலுசு மின்னியது,கண்கள் வரை வந்த கவிதை வெற்றுப் பார்வையானது.
“இவள் ஒரு யட்சியைப் போல இருக்கிறாளே?” மனம் தடம் புரண்ட இறகுகளால் வானம் பார்த்தது. சட்டென ஒரு வானம் விளக்கிய முகம் தெளிவாக பாதையும் விதைத்தது.
“இவள் ஒரு மோகினியாகவே இருந்தாலும் இவளைக் காப்பாற்றியே ஆக வேண்டும்….”. முடிவெடுத்த மணித் துளியில் மயங்கி கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டான். யாரோ பின்னாலிருந்து அவன் முதுகில் ஓங்கி உதைத்தார்கள்.
தோளில் கிடந்தவளின் கனமும் சேர, கண நேர தடுமாற்றத்தில் அவளோடு முன்னோக்கி சென்று செடிகளூடே விழுந்தான். சற்று சுதாரித்துக் கொண்டு எழுந்தவனின் முன்னால் நான்கு பேர் கோபங்களின் உச்சமாய் பற்கள் கடித்து நிற்க, ரத்தம் வரும் வரை காத்திருந்து தொட்டுப் பார்த்துப் பின் அடிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை.
சில பேரை பார்த்து, நிதானமாக அடிக்கவெல்லாம் முடியாது. பார்க்க பார்க்க அடிப்பதை விட, பார்த்தவுடன் அடித்து துவைப்பது, மூன்று வரியில் முழுதும் புரிந்துவிடும் ஹைக்கூ….
மூன்று மூன்று வரியாக நால்வரையும் மாற்றி மாற்றி வெளுத்தெடுத்தான். அடிக்க அடிக்க கோபம் குறையவேயில்லை. எப்படி குறைப்பது? கோபத்தை குறைத்தே ஆக வேண்டும். சட்டென முடிவெடுத்தவனாய் நிலாவின் சாட்சியாய், ஒவ்வொருவனின் காலையும் பற்றி இழுத்து, விழுந்து கொண்டிருக்கும் அருவியில் மலை மேலிருந்து …..தூக்கி… தூக்கி… தூக்கி… தூக்கி வீசினான்.
இரவு மிரண்டது. உடல் சுருண்டு கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, காட்டை விட்டு வேக வேகமாக வெளியேறியவன், நடந்து கொண்டேயிருந்தான்.
“அவனுங்கள புடிச்சு, யாரு என்னன்னு கேட்ருக்கலாமோ?
ச்சே…… ச்சே ….. கோபம் இப்பிடியா உடம்பை மறைக்கும். சரி சரி, சீக்கிரம் காட்டை விட்டு வெளியே போய்டணும்…..”
ரவி வர்மாவின் மனம் அதுவாகவே பேசிக் கொண்டிருக்க, கால்களே சுமையாக, அவளை தூக்கிக் கொண்டே தூங்கிய மௌனத்தோடு விழித்தவன், பாதை மாறி, மலை உச்சியில் போய் திக்கு முக்காடி நின்றான். என்ன ஏது என்று குழம்பிய பார்வையோடு, மயங்கி கிடந்தவளை மெல்ல இறக்கி மலை உச்சி சமவெளியின் சரித்தான், மனதுக்குள் விழுந்த அருவியை அடக்க முடியாமல் தவித்த படியே.
காத்திருந்த கண்கள் திறந்து கொண்டது. முகம் திறந்த சாவிகளாய், உச்சி மலைக் காற்றும், பிச்சிப் பூ வாசமும், உள்ளூர கிறங்கி தவித்த உணர்வுகளை கிள்ளி வைக்கத் தொடங்கியது.
“யாரிவன்?” என்று கூர்ந்து கவனித்து பின் கத்தினாள். காடு முழுக்க எதிரொலித்த யட்சியின் குரலில் சங்கீதம் தேங்கி கிடப்பதாக சட்டென கல் விழுந்த குளமாய், சலனப்பட்ட ரவியின் பார்வையில் வளையம் விரிந்தது. அவள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும் கத்தினாள். காற்றின் விரலுக்கு கற்றைக் கூந்தலை தந்தவன், வானம் நுகர்ந்து நின்றான்.
யட்சி மிரட்சியோடு கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடி, பின் மீண்டும் கத்திக் கூச்சலிட்டு மனம் நடுங்கி, திகைத்து, பயந்து, கீழே விழுந்து, உருண்டு, பின் நிதானிப்பது போல நிதானம் இழந்தவளாய் பரபரத்து, என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியாதது போல, அவனை நோக்கியே ஓடி… அவனை பின் புறத்திலிருந்து இறுக கட்டி அணைத்துக் கொண்டாள். அவளின் மார்புக்குள் மாட்டிக் கொண்ட விழிகளின் சிமிட்டலாய் அவளின் இதயத் துடிப்பு. அது தீரா தாகத்தின் ஓடையை வியர்வையாக்கிக் கொண்டே இருந்தது. நெஞ்சைத் துளைத்து வெளியேறும் வித்தை கற்றவளோ! கைகளின் பிடியை மெல்ல தளர்த்தி, மெல்ல மெல்ல திரும்பியவன், விழி நோக்க, இதழ் நோக்க, விரல் கொண்டு கழுத்தெங்கும் உயிர் காக்க, யட்சி நடுங்கிக் கொண்டே இன்னும் இன்னும் நெருங்கி அவன் நெடி நுகர்ந்தாள்.
இரவின் வேலைப்பாடு கசகசத்து நிற்க, செய்வதறியாமல் இருவரும் நேருக்கு நேர் நின்று, விழி மாற்றி தின்று, வானம் பூமி இடம் மாறி வித்தை கற்பதாக விரல் கோர்த்து நிற்கையில், அருவியின் அலறல் அவர்களை கலைத்து விடும் ஓவியமாகவே விழுந்து கொண்டிருந்தது.
எது கனவு… அவளே கனவா…..
எது நிஜம்… அவளே நிஜமா?கண்களுக்குள் நெல்லிக்கனி சாத்தியமா? நிலவொளியின் இரவில் அவள் புது வண்ணம் பூசி நிற்கிறாள். பூங்காற்றில் ஒரு தேகம் விளைந்தது எப்படி? மெல்லிடை மௌனங்களில் மெய்ம் மறக்க செய்யும், இலைகளில் தங்கிவிட்ட மழைத் துளியென சிலிர்ப்பை உதிர்ப்பவளா? விழி நோக்கின் கூர் வாள். இதழ் நோக்கின் மழை தூறும்.
வேகத் தடைகளில் சிக்கிய வாகனம் ஆடி அசைந்து நின்று நிதானிக்கும் தருணத்தின் நுனி பிடித்து, பட்டமாக பறக்கும் மனதை சற்று நேரம் கடந்தவனோ! அவன் பெருமூச்சில் காடெரிக்கும் மூங்கில் வாசம் கொண்டவனோ…..?
காதலின் உச்சம் மரணம். மரணத்தின் மிச்சம் இந்தக் காதல். தான் யார், நான் யார், யார் யார், யார் யார்? தெரியவில்லை. தெரிய வேண்டாம். பூலோகம் மறைந்து ஒரு புள்ளியாகி நிற்கையில் அதை பொட்டாக்கி வைத்துக் கொள்ள, நெற்றியில் வாழும் காதல். உடலற்று போகும் உயிர் பற்ற, யுத்த கதறல். யுத்தம் நெஞ்சோடு மார் நிற்கும் வித்தை, வித்தை துளைத்து வெளியேறும் சப்தம்.
மூங்கில் வாசிக்கும் காற்றில் புல்லாங்குழல், அவள் குழலானது. பட்டு பட்டு, தொட்டு தொட்டு, உயிர் வாசம் கலந்து, உணர்வாகி நெருங்கி, இமை மூடும் கணத்தில் செத்தாலும் சுகமே. அவன் கொன்றாலும் தகுமே. அவள் என்ற அவனும், அவன் என்ற அவளும், எதுவென்ற எதுவாகவோ, எது வென்ற எதுவாகவோ மறதிகளின் பிரபஞ்சம் போல, பால்வெளி தேசத்து கடுங்குளிராகி, பழங்கதை மறந்த பருவங்களின் பதியலை, தேகம் கலந்த போது, தேகமில்லை அங்கே, தேநீர் சூட்டின் கதகதப்பில், காடெங்கும் சிறகடித்த பறவைகளின் நகல்களாய் இறக்கை முளைத்தார்கள்.
விரல் கோர்த்து விழி கடக்க, விடியல் வந்து இசை வார்த்தது.
கதவு தட்டப்படும் சத்தம் ஆழ் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல, மூளையைத் தொட்டு தொட்டு ஒளிந்து கொண்டிருந்தது. கிடைத்து விட்ட இரவென சூடேறிக் கிடக்கும் மணல் குன்றுகளிலிருந்து ஒரு யட்சி மேலெழும்பி வந்து காது கடித்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தெழுந்தான் ரவி வர்மா.
அவனின் கண்கள் சிவந்து கிடந்தன. காடுகளின் வாசம், சுவாசமாகிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டே கண்கள் கசக்கி, தலை முடி சரி செய்து கொண்டே கதவு திறந்தான்.
காற்றில்லா தேசமோ இது? வெயில் மட்டும் வெள்ளிகளை உதிர்த்துக் கொண்டிருக்க, வியர்த்த முகத்துடன், சிவந்த தேகத்துடன், சிறு புன்னகை இதழில் அடக்கி, குறு நாணம் கண்கள் சுமக்க, கிறுகிறுக்கும் மேடுபள்ள வளைவுகளுடன் வாசல் கொண்ட புது கோலமாய் நின்று கொண்டிருந்தாள் தேவதை போலொரு பெண்ணொருத்தி….
அறைத் தோழன் வெற்றுக் காகிதமாக வெறித்திருக்க, கொட்ட கொட்ட விழிப்பதற்கே, கொக்கின் கால்களின் தவங்களை கருவாக்கிக் கொண்ட கண்கள் கொண்ட அவள், என்ன வீட்டுக்கு வந்தவங்கள, உள்ள கூப்ட மாட்டீங்களா?” என்றாள். குரலில் குறும்பு மிதந்தது. அரும்பு முடிகளில் மேலுதடு, மெல்லிசை மீட்டியது.
“ம்……. கூப்டலாம்…….. ஆனா நீங்க……. ” என்று முணங்கிய ரவிவர்மாவின் மனதுக்குள் மலையளவு தடுமாற்றம்.
சட்டென இனம் கண்டு கொண்ட நினைவுகளில் “இவள் எப்படி இங்கே?” கேள்வி வானம் கொத்திய பறவையின் அழகுகளாகி கீறிட்டது.
“என்னங்க, ஏதோ பேயப் பார்க்கற மாதிரி, பாக்கறீங்க?” என்றாள் அவள். இன்னும் வெட்கச் சிரிப்பை அடக்கவே முயன்று கொண்டிருந்தாள்.
ரவி வர்மா, செய்வதறியாத முகம் ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கியது. நடுக்கமே வியர்வையை பிடுங்கியது.
அறைத் தோழன், அருகே வந்தான். “என்னடா? புதுசா பொண்ணு! அதும் வீட்டுக்கே? ம்ம்ம்…… நடத்து நடத்து……..” என்றான் சன்னமான குரலில்.
“யாரடா… இவன் வேற…….” என்று நண்பனை முறைத்து விட்டு, “ஏங்க, உங்கள எனக்கு தெரியல, ஏதாவது அட்ரஸ் மாறி வந்திட்டீங்களா?” என்றான் ரவி வர்மா அப்பாவியாக.
அவன் மனதுக்குள் ஒரு கூடை யோசனை…”இவள் எப்படி நேராக?”
“அடப்பாவி, நைட் முழுக்க காட்டுக்குள்ள கூட இருந்துட்டு இப்போ யார்னா கேக்கற?” அவள் கண்களில் கொப்பளித்த கோபம், நண்பனையும் சேர்த்து எரிக்க முயற்சித்தது.
தலையை பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். தலைக்குள் அருவியின் பேயாட்டமும், உச்சி மலைக் காற்றின் பதட்டமும், முற்களை பதிப்பதாக தடுமாறினான்.
சுவற்றில் சாய்ந்து, நிலை தடுமாறியவனை சட்டென எட்டிப் பிடித்து அமர வைத்தான் நண்பன்.
“என்னடா நடக்குது? இந்தப் பொண்ணு யார்.? எந்த காட்டுக்குள்ளடா போன? ஒரு நைட் உன்னத் தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியல. இந்த பகல்ல பாக்கற மேட்டர, நைட்டிலயும் பாக்கற உன் பாழாப் போன பைத்தியகாரத்தனத்த எப்பதான் நிறுத்தப் போறாயோ?
………………………………………………………………………………………
“சொல்லுடா, டென்சன் பண்ணாத, நைட் எங்க போன? இந்தப் பொண்ணு யாரு? சொல்லுடா….”
சரி சரி என்பது போல் பார்த்த ரவி வர்மா தன் நண்பனை அருகில் வருமாறு ஜாடை செய்தான். ஒரு கண்ணில் அந்த பெண்ணும் இருக்கத்தான் செய்தாள். இருந்தும் ஏதோ ரகசியம் பேசுபவன் போல அவன் காதில் பேசத் தொடங்கினான்.
“மச்சான், நைட் நான் எங்கயும் போகலடா… ஆனா……” என இழுத்தான்.
“என்ன ஆனா? அதான் சொல்ல வந்துட்டீல்ல, சொல்லிடு. அப்பத்தான் ஏதாவது முடிவுக்கு வர முடியுண்டா…..” நண்பன் கண்கள் சிவந்தான்.
“சரி, நான் காட்டுக்குள்ள போகல. ஆனா நைட் முழுக்கக் காட்டுக்குள்ள இருந்த மாதிரியும், இந்த பொண்ணக் காப்பாத்தின மாதிரியும் ஒரு கற்பனை எனக்கு வந்துச்சு…..” என்றான் படு சீரியஸாக.
“என்னது கற்பனையா…..? லூசாடா நீ? நைட் முழுக்க கூட இருந்துட்டு, இப்ப கதை, கற்பனை, கனவுன்னு உளர்ற…” என்ற அவள் தலை சுற்றி விழாதது தான் பாக்கி. பூமி தன்னை சுற்றாமல் சூரியனை சுற்றுவது போல் உணர்ந்தாள்.
தலையில் கை வைத்து அமர்ந்தான் தோழன்.
“இதுல யார் லூசு? அனேகமா நாந்தான்னு நினைக்கறேன்…” என அவனாகவே புலம்பினான். அந்த அறையே ஆகாயத்தில் மிதப்பதாக உணர்ந்தான். உணர்வை கலைத்தது ரவியின் சொற்கள்.
“கதையோ கனவோ இல்ல. அது முழுக்க முழுக்க என் கற்பனை. தூங்கும் பொது வருவது கனவு. தூங்குவதற்கு முன் வருவது கற்பனை. கதையில் இரண்டும் வரும்”
“அடிங்……. வாய மூடு வெளக்கெண்ண…. விளக்கம் குடுக்கறாரு” நண்பனை அடக்கிய நண்பன், திரும்பி அந்தப் பெண்ணை சந்தேகத்தோடு பார்த்தான்.
“சத்தியமா நான் சொல்றது உண்மை. இல்லேன்னா இந்த அட்ரெஸ் எனக்கெப்பிடி தெரியும்? எப்படி காட்டுக்குள்ள போனேனே தெரியாத என்னை இவர் காப்பாத்தினது உண்மை. கண்டதும் காதல் வயப்பட்டது உண்மை. இரவோட கவிதையா நாங்க மனம் மாத்திக்கிட்டது உண்மை. பகல்ல பாக்கற இடத்தை நைட்டிலயும் பாக்கற வினோதமான ரசனை அவருக்கு இருக்குனு என்கிட்டே சொன்னது உண்மை. என்னை ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு அவசர வேலை இருக்கு வந்தர்ரேன்னு சொல்லிட்டு, ஒரு வேளை லேட் ஆனா வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லி இந்த வீட்டு முகவரியை இவர் சொன்னது உண்மை. ஆனா, இப்போ கனவு கற்பனைன்னு இவர் ஏன் மாத்தி பேசறார்னு எனக்கு புரியல….”, கிட்டத்தட்ட அழும் முகம் வாய்க்கத் தொடங்கியிருந்தது அவளுக்கு.
ரவி வர்மா புன்னகைத்தான். புன்னகை சிரிப்பானது. சிரிப்பு வெடிச் சத்தமானது.
நண்பன் செய்வதறியாமல் திகைத்தான். இதோ இருக்கிறேன் என்பது போல, வீதி நிறைந்த காற்று வீடெங்கும் விருட்சமானது. உயிர் பிரியும் வழிகளால் இரையத் துவங்கியதாக அவர்களை சுழன்றது.
இருவரையும் மாறி மாறி பார்த்தான் தோழன் .
“ஒரே சம்பவம். இவள் நிஜம் என்கிறாள். இவன் கற்பனை என்கிறான். யாரை நம்புவது? இவள் ஏமாற்று வேலையில் தகவல் திரட்டி வீடு வரை வந்து ஏமாற்றுகிறாளா ? இவன் நிஜங்களையும் கற்பனை என்று நம்பும் மன நிலைக்காரனா?
எது நிஜம்.. எது பொய்…..” தலை சுற்றி விழி பிதுங்கி நின்ற தோழனை, ரவி வர்மாவின் குரல் இன்னும் அதல பாதாளத்திற்கு அருவியாய் அழைத்து செல்லத் தொடங்கியது.
“டேய்….. சத்தியமா இது கற்பனைதான். ஏன்னா, கற்பனைல நடந்த ஒரு விஷயத்தை இந்த பொண்ணு சொல்லல. அதாவது நிஜமா நடந்திருந்தா அதையும் சொல்லிருக்கனணுமில்ல. என் கற்பனை அவளுக்கு தெரியாதுங்கறது தான் உண்மை. அதான் அந்த ஒரு விஷயத்தை இவ சொல்லல. சொல்லவும் முடியாது….”எப்படியும் தான் ஜெயித்து விடப் போகிறோம் என்பதாக சட்டென ஒரு உற்சாக வெளிப்பாடு ரவி வர்மாவிடம் வெளிப்பட்டது.
“மறுபடியும் என்ன சொல்லிக் குழப்ப போறானோ….?” என்பது போல நண்பன் பார்க்க, அவள் மூளை செயல் இழந்தவள் போல ரவி வர்மாவை மலங்க மலங்க விழித்தாள்.
“என்னோட கற்பனையில, நான்தான் இவள கடத்திட்டு போய், காட்டுக்குள்ள கட்டிப் போட்டேன். அப்புறம் நானேதான் இவள காப்பாத்தினேன். காப்பாத்தின பின்னால வழி மாறிப் போறது போல மலை உச்சி போனது உண்மை. அங்க கண நேரத்துல நாங்க காதல்ல விழுந்தது உண்மை. காதலும் இரவும், இவ கடத்தபட்டு கட்டிப் போடப்பட்ட கொடூரத்த கூட மறக்க வைச்சுது. இவ மறந்திட்டா, அது காதலோட சாபக் கேடு. நான் கூட காதல்ல எல்லாம் மறந்தேன். எல்லை கூட மறந்தேன். காதலின் உச்சம் மரணம்னு இவ முனங்கிணப்போதான் என் இலக்கு நியாபகம் வந்துச்சு. இவள மலை உச்சிலிருந்து தூக்கி கீழே வீசி கொன்னேன்.”
……………………………………………………………………………………………….
ஆமா….. கொன்னேன். ஆனா, இவள கொன்னுட்ட மேட்டர இவ இங்க சொல்லவே இல்ல. இதுலேர்ந்தே தெரியல, இது முழுக்க முழுக்க கற்பனைன்னு. ஆனா நிஜம்னு இவ ஏன் குழப்பறாரான்னுதான் தெரியல. யார் என்னனு விசாரிடா. இல்ல போலிஸ்…………….”, புன்னகை மாறாமல் ரவி வர்மா பேசிக் கொண்டே இருக்க…
விரல் சுட்ட நெருப்பாய், செயல்படத் தொடங்கிய மூளை கொண்டவள், விரிந்த கண்களோடு, விபரீதம் உணரத் தொடங்கினாள். உயிரின் கனம் சுமந்து நின்றவள், இப்போதுதான் புரியத் தொடங்கினாள். உடல் என்ற ஒன்றை தான் சுமக்காமல் நிற்பதை. உடல் தழுவிய கைகளில் ஒன்றும் கிடைக்காமல் தடுமாறியவள், தன்னை தூசுகளின் மொத்தம் கடந்து போவதை மிரட்சியோடு கவனித்தாள்.
நண்பன் மயங்கிச் சரிந்தான்.
காதலின் கண்களில் தன் மரணத்தை, தவணை முறையில் நினைவு படுத்தினாள். மரணமே காதில் கிசுகிசுத்தது அவளை. அவள் நேற்றிரவே இல்லாமல் போனதை உணர்ந்த நொடியில், கண்கள் மூடி அமர்ந்திருந்த ரவி வர்மாவின் தலைக்கு மேல், சுவற்றில் காற்றோடு பட படத்துக் கொண்டிருந்த காலண்டர் 2017 என்று வருடத்தை காட்டிக் கொண்டிருந்தது.
அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் எதற்காக இந்த மரணம் என்று புலம்பிக் கொண்டும் தூசுகளிடம் ஊர்ந்து கொண்டு திரிந்தவள், மெல்ல கண்கள் அற்று போனாள்.
காலண்டர் பின்னோக்கி படபடக்க 2015- ஜூன் மாதத்தில் ஒரு நாள்…….
அவள், அவனை செருப்பால் அடித்தாள். கல்லூரியே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி செருப்பால் அடித்தாள்.
“உன் மூஞ்சியக் கண்ணாடில பாத்திருக்கியா…..யூ….. பா…………. ஆளும், தலயும், ட்ரசும்…… பட்டிக்காட்டுப் பரதேசி….”
திட்டிக் கொண்டே கடந்து விட்டிருந்தாள் அந்த அழகிய அல்ட்ரா மாடர்ன் பெண்.
ஓடி வந்த நண்பன் அவனைத் தூக்கி விட்டு, சமாதானம் செய்து அவள் சுருட்டி வீசிய கடிதத்தில் பதிந்து கிடந்த ஆங்கில வரிகளைப் படித்தான்.
அத்தனை வரிகளின் ஒட்டு மொத்த நோக்கமும் கலவியாகவே இருந்தது.
அடிவாங்கி, அவமானத்தில், கூனி குறுகி, நடுங்கிக் கொண்டே அமர்ந்திருந்த ரவிச்சந்திர மூர்த்தி, தன் நண்பனின் அர்த்தமுள்ள கேள்வியின் பார்வைக்கு கண்கள் கலங்க பதிலலித்தான்.
“நம்ம சீனியர் யட்சிகாதான் லவ் லட்டெர இங்லீஸ்ல எழுதி குடு, அப்பத்தான் சிட்டி புள்ளைங்களுக்கு பிடிக்கும்ணு எழுதி குடுத்தாங்க…..”
குறிப்பு: தன்னை ஒரு கதாநாயகனாக நினைக்கும் போது, யாரிடமாவது சண்டை போடுவது போல நடிப்பது வெற்றி பெற்றவனாக நினைப்பது அவனின் கற்பனையின் மைல் கல்.
-
செந்தூரப்பூவே …
–கவிஜி.
சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக .. ஒரு தேவதை வந்தது நீராட ..
வெண்ணிற ரோஜா, தன்னிறம் மாறி மாலை சூடுதோ ..
அந்த வானம் பூக்களை தூவாதோ .. புது வாழ்த்துக் கவிதைகள் பாடாதோ ..அதற்கு மேல் ரவியால் அந்த பாடலை கேட்க முடியவில்லை. சில போது பிடித்த பாடலைக் கூட முழுதாகக் கேட்க முடிவதில்லை, காற்றெல்லாம் கனமானது போன்றே அந்த மதிய வேலை அவனுக்குள் பல வித யோசனைகளை அல்லது நினைவுகளை கிளறி விட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் பிடிக்காத தொழில் மோட்டார் தொழில். ஆனால் இன்று அவனின் வாழ்வாதாரம் அவன் செய்யும் இந்த டிரைவர் தொழில்தான்.
ஏனோ சற்று ஓய்வு தேவை என்று மனதிற்குப் பட்டதால் அந்த ஆற்றோரம் நிறுத்தினான்.
“எப்டிண்ணே இவ்ளோ பெரிய லாரியை நாய்க்குட்டி மாறி அடக்கற……’
சற்று சிக்கலான இடங்களில் மொத்த திறமையையும் பயன்படுத்தி லாவகமாக வண்டியை நிறுத்துவதும் இயக்குவதும் என்கின்ற பொழுதுகளில், அந்த லாரியின் கிளீனர் இலக்கி மேற்சொன்னவாறு கேட்பதுண்டு.
செய்யும் தொழில் ஒரு கட்டத்திற்குப் பின் மிகச் சரியாக பழகி விடும்.
வண்டியை நிறுத்திய பின் இலக்கி மதிய உணவு தயாரிக்க தொடங்கினான்.
“அண்ணே வெங்காய சாம்பார் வைச்சிடலாமா என்றான்” அதில் அவன் நிபுணன்.
தலையாட்டி விட்டு, வண்டியை விட்டு இறங்கி சாலையோரம் தலைவிரி கோலமாய் நின்ற ஆலமரத்தின் கீழ் அமர்ந்தான்.
மனதுக்குள் முணு முணுககாமல் இருக்க முடியவில்லை.
சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக ஒரு தேவதை வந்தது நீராட …….
தலையெல்லாம் ஆங்காங்கே ஒட்டியிருந்த பருத்தி நூலோடு சசிகலா நடந்து வந்து கொண்டிருக்க, இவன் அமர்ந்திருக்கும் தேநீர் கடையிலிருந்துதான் அந்த பாடல் கசிந்து கொண்டிருந்தது.
தேவதை வந்தது நீராட… என்ற வரிக்கும், அவள் யதேச்சையாக, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் ரவியை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. காலக் கணக்கு …
அட, நம்ம சசி!!! இதுவரை பார்த்த பார்வையில் இருந்து சட்டென விலகி வேறு யாரோ மாதிரி இருக்கிறாள். மெல்ல புன்னகைத்துப் போனாள். தெரிந்த பையனுக்கு எவ்ளோ புன்னைகையோ… அவ்ளோ.
சுள்ளென்று அடித்தது சில்லென்ற பனித்துளி… சுளீரென கடித்தது கையிலேறிய எறும்பு …
“ஏய் … ரவி … இன்னும் இங்க என்ன பண்ணற? படம் முடியற நேரம்டா……” அலாரம் அடித்துப் போனான் அன்பு.
அட ஆமா!!! என்று கடைசி மிடரை கபக்கென முழுங்கி விட்டு, தியேட்டருக்குள் ஓடி சைக்கிள் ஸ்டாண்டில் தயாராகி நின்றான்.
அவ்வப்போது எதிர்படுவாள். பெரிய வீதியில் கண்கள் உரசி, சிறு புன்னகையோடு கடந்து செல்வார்கள். ஆழ்மனதிற்குள் கொஞ்சூண்டு ஆசை அவள் மேல் இல்லாமல் இல்லை. ஆனால் அது விஸ்வரூபம் எடுக்கவில்லை. சின்ன முகம், மாநிறம், கீச் கீச் குரல்.. அவளுக்கு கிளி என்றொரு பெயரும் ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கிறது.
“மஞ்சு, இந்த ரவி நல்லா ஆடறான்ல…. நல்லா டிரஸ் பண்ணா, தியேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறவன் மாதிரியே இல்லல. நல்லா படிப்பாண்டி. ஆனா ஒன்பதாவதுக்கு மேல பள்ளி கூடத்துக்கு போக மாட்டேனுட்டான்”, இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் தோழி மஞ்சுவிடம் இப்படி நிறைய அவனைப் பற்றி பேசியிருக்கிறாள்.
ஆனால், இந்த விஷயம் ரவிக்கு தெரிந்ததேயில்லை. இவர்கள் இருவருமே சிறுவயதில் ஒன்றாக விளையாடியவர்கள்தான். அவன் ஒன்பதாவதில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவன். அவள் பத்தாவதில் முடித்துக் கொண்டவள். ஏனோ, பதின் பருவத்துக்கு மேல் அவர்கள் பேசிக் கொள்வதில்லை. சிறு புன்னகை, சிறு சிரிப்பு, சிறு வாழ்த்து, கோயில் திருவிழாக்களில் ஆடிய பின் வரும் கை குலுக்கல் அவ்வளவே.
அந்த மதிய வேளை அவர்களால் வாழ்ந்தது என்று இந்த காட்சி முடியும் போது தெரியும். அவள் அன்று காலையில் வேலைக்குப் போகவில்லை போலும், மதியம் நடந்து கொண்டிருந்தாள் பருத்தி கம்பெனி நோக்கி.
“பங்காளி, சைக்கிள் புதுசா?” என்றபடியே பங்காளி லட்சுமி(காந்த் ) அருகே ரவி வந்தான்.
“ஆமா, பங்காளி… இப்பதான் ஆப்பகூடல்ல இருந்து ஓட்டிட்டே வரேன். இந்தா… ஒரு ரவுண்டு அடிச்சு பாரு,” என்றான்.
அடுத்த காட்சிக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்க, சைக்கிளை வாங்கி கொண்டு வெள்ளையம்பாளையம் நோக்கி ஓட்டத் துவங்கினான் ரவி.
வர வேண்டும் என்று முடிவெடுத்த பின், இந்த காதல் வந்தே தீரும்.
மதிய வேளை, சூரியனும் வியர்வையும் மட்டுமே, சாலையெங்கும் கானல் நீர், சுற்றிலும் மேட்டாங்காடு, பாதை மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கும் நீண்டதொரு ஓவியத்தில் உறைந்து விட்ட வண்ணமென சசிகலா நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். சிவப்பு தாவணியில் சின்னதாய், புதுக்கவிதையாய், மூக்குத்தி சுமக்கிறது சூரியனை. கன்னங்களில் மூக்குத்திகளாய் வியர்வைதுளிகள்.
நெருங்கி விட்டான். அவளும் பார்த்து விட்டாள். புன்னகை எப்போதும் போல…..
“என்ன கம்பனிக்கா?”
“ஆமா ரவி, இப்பதான் போறேன். காலைல கொஞ்சம் வேல இருந்துச்சு. ஆமா, என்ன இந்த பக்கம்….!”அவள் கேட்டபடியே நடந்து கொண்டிருக்க, இவன் அவள் பேசுவதை கேட்டபடியே மெல்ல சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான்.
“இல்ல….. பங்காளி லட்சுமியோட புது சைக்கிள். சும்மா ஒரு ரவுண்டு அடிக்கலாமேன்னுதான்….. ” வார்த்தைகளை இழுத்தவன், கேட்டே விட்டான்.
“கம்பெனிக்குதான ….. வா… நா எறக்கி விடறேன்,” அவள் முகத்தையே பார்த்தான். மினு மினு என்றிருந்தது முகம்.
அவள், “நானே கேக்கலான்னுதான் நினைச்சேன், வெயில்லு….. நடக்க முடியலப்பா..”, என்றபடியே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். மனமெங்கும் ஒரு வித குளுமையை உணர முடிந்தது. ஏதோ பெரிய சாதனை செய்தவன் போல முகமெங்கும் இனம் புரியாத சந்தோசம்.
“ஏய்…. எங்க போற? கம்பெனி இந்த பக்கம்’” என்றாள் இடது பக்கம் சென்ற பாதையை காட்டி.
“வெள்ளையம்பாளையம் போய் ஒரு கலர் குடிச்சுட்டு திரும்ப வந்தர்லாம்,” என்றான்.
அவனால் அவளுடன் பயணிக்கும் தருணங்களை விட்டுத் தர முடியவில்லை. அவள் மௌனத்தில் சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வண்டி வெள்ளையும்பாளையம் தாண்டி, பிரம்மதேசம் நோக்கி பயணிக்க….
“ஏய் ரவி…… விளாடாத, நேரமாச்சு…. வண்டிய திருப்பு,” என்றாள் சசி.
முடியாது என்றவன், பிரம்மதேசம் வரை போயிட்டு வந்தர்லாம் என்றான். வியர்த்திருந்த முகத்தில், கழுத்தில் சைக்கிள் கிழித்துக் கொண்டு செல்லும் குளிர்ச்சி குளுகுளுவென்றிருந்தது.
“இப்ப வண்டிய திருப்ப போறீயா இல்லையா?” சற்று கடுமையாகவே இருந்தது வார்த்தைகள்.
அவனால் இந்த சந்தோசத்தை இழக்க முடியவில்லை. சட்டெனக் கேட்டு விட்டான். “எனக்கு ஒரு முத்தம் தா.. வண்டிய திருப்பிடறேன்”.
கண்டிப்பா தர மாட்டா.. வண்டில கொஞ்ச தூரம் போலாம் என்பது அவனின் எண்ணம்.
“வண்டிய நிறுத்து தர்றேன்,” என்றாள்.
அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வண்டியை நிறுத்தினான். இறங்கியவள், “என்ன தரமாட்டேன்னு நினைச்சியா?” என்றபடியே அவன் சட்டையை பிடித்து முன்னால் இழுத்து இதழோடு இதழ் பதித்தாள். சற்று முன் அவள் போட்டிருந்த வெற்றிலை இடம் மாறியது.
கானல் நீரெங்கும் கொக்குகளும் மீன்களும் போல மர அசைவின் நிழல்கள்.
சைக்கிள் கம்பெனி நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. முன்னால் அவள் அமர்ந்திருந்தாள். அவன் ஆகாயத்தில்.
கம்பெனி முன்னால் இறக்கி விட்டுவிட்டு கேட்டன், “சசி… லவ் பண்றதான?”
ஆண்களின் சந்தேகம் சந்தேகம் தான்.
“லவ் பண்ணமையா முத்தங் குடுத்தேன்?” சிரித்தபடியே உள்ளே ஒடினாள்.
“அண்ணே சாப்பாடு ஆச்சு.. வாங்க…”
கிளீனரின் குரலில் கலைந்தான் ரவி. அவனக்கு இப்போது குடிக்க வேண்டும் போல் தோன்றியது.
“இப்ப எதுக்கு குடிச்சுட்டு இருக்க? வீட்ல விஷயம் தெரிஞ்சா, எதுத்து சண்டை போடணும். இல்ல, என்ன கூட்டிட்டு போய்டு. அத விட்டுட்டு குடிச்சா சரியா போய்டுமா?”
சைக்கிள் ஸ்டாண்டுக்கே வந்துவிட்டாள் சசிகலா.“அது இல்ல சசி, உங்கம்மா என்னை எவ்ளோ கேவலமா பேசிருச்சு தெரியுமா? தேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறது கேவலமான தொழிலா? வாரம் ஐநூறு ரூபா சம்பாதிக்கறேன், பாத்தாது ?” என்றான் ரவி.
புலம்பத் தொடங்கியவனை, ” சரி விடுடா… எங்கம்மாவா உன்ன கட்டிக்க போகுது? நான் தான? எப்பவும் நான் உன்ன விட்டுட்டு போக மாட்டேன், சரியா?” என்றபடியே அவன் வைத்திருந்த இரண்டு மிடறுக்கான சரக்கை சட்டென எடுத்து வாய்க்குள் ஊற்றினாள்.
“ஏய்… என்னடி பண்ற? இது தப்பு,” என்றான், சைக்கிளில் இருந்து எழுந்த படியே.
“எனக்கு ரெம்ப நாளா இதக் குடிச்சு பாக்கனும்னு ஆசை,”என்று கண் அடித்தாள். சைக்கிள் ஸ்டாண்டில் இருக்கும் அந்த ஒற்றை லைட்டில் பிரகாசமாய் தெரிந்தாள்.
“வாழ்க்கைல ஆசைப்பட்டதப் பண்ணிப் பார்த்திடனு. இப்ப என்ன? இதக் குடிக்கணும்… அவ்ளோதானே?” என்றவன், இருந்த சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து கொடுத்தான். கண்களை இறுக மூடி, முகத்தைக் கோணி என்னென்னவோ பாவனைகளில் அந்த கிளாஸ் முழுக்க உள்ளே போனது.
கண்கள் சொருக, அவனையே பார்த்தாள், “என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்?” என்றாள் இன்னும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு.
உள்ளே செந்தூரப் பூவே படம் ஓடிக் கொண்டிருந்தது…….
“சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை…..” பாடல் காதில் தேனாய்ப்பாய அவன் அவளையே பார்த்தான்.
“ஏய் சசி….. இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் உன் ஞாபகமாகவே இருக்கு, நீயும் நானும் ஆதார மாறியே ஒரு இது.. இது…”
“இதுன்னா?”
“இதுன்னா… ஒரு .. ஒரு ஜாலி…”, அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
கல்யாணத்துக்கப்புறம் நாம இங்கயே இருக்கலாமா? இல்ல, வெளியூர் போய்டலாமா?” அவள் வாய் குழறியது, காரணமின்றி சிரித்தாள்.
“ஹேய்….. ச, உங்கம்மா ஒத்துக்குமா? எனக்கு பயமா இருக்குடி….”
இருவரும் எதிரெதிரே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.
“எங்கம்மா ஒத்துக்கும்… ஒத்துக்க வைப்பேன், பாக்கதான் நான் அமைதி, கோவம் வந்துச்சுனா பத்ரகாளிதான்….”
“அப்டியா… எங்க கோவப் படு……….. பாக்கலாம்……..” என்று முகத்தை அவள் முன்னால் கொண்டு போய்க் காட்ட…அவள் கபக்கென வாந்தி எடுத்தாள்.
“ஐயே…….ஏய் .. எ…. யா…. லூசு…. எஐ லூசு….. வோவ்…”
காதல் வளர்ந்தது, அந்த ஒரு மாதத்தில் தாவணி பரிசளித்தான். கண்ணாடி பரிசளித்தாள், பாசிமணி வாங்கி கொடுத்தான். போன சனிக்கிழமை இரண்டாவது காட்சிக்கு குடும்பத்தோடு செந்தூரப்பூவே பார்க்க போயிருக்க, சந்திரனிடம் சொல்லி ஸ்பெசல் டீ , முறுக்கு, இடைவேளையில் கிடைக்கச் செய்தான். கிளியின் தாத்தாவுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பினான். இன்னும் என்னென்னமோ செய்தான். பங்காளியின் புது சைக்கிள் ரெம்ப உதவியது.
செந்தூரப்பூவே படம் பயங்கர பிக் அப். கூட்டம் நான்கு காட்சிகளிலும் பட்டையை கிளப்பியது. இன்னும் சொல்லப் போனால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நிரோஷா அழும் காட்சிகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அருவி தியேட்டர் சிங்காரி தியேட்டருடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரே ரீல் பெட்டி இரு தியேட்டர்களிலும் ஓடும். அதாவது முதல் ரீல் முடிந்ததும், அதை டேக்ஸியில் வைத்து அடுத்த தியேட்டருக்கு கொண்டு சென்று ஓட்டுவார்கள். அடுத்த அரை மணியில் ரெண்டாவது ரீல், அப்போது அங்கு முதல் ரீல் முடியும் நேரமாய் இருக்கும். சில போது அடுத்த ரீலின் வரவுக்காக ஐந்து, பத்து நிமிடம் படம் பார்ப்பவர்கள் காத்திருக்கவும் நேரிடும். அப்படி ஒரு நாளில் டாக்சி டிரைவர் உடம்பு முடியாமல் படுத்து விட, அடித்தது டிரைவர் யோகம் ரவிக்கு. தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பது தியேட்டர் ஓனருக்கு அரசால் புரசலாக காதில் விழுமாறு சில பல அறிவாளி வேலைகளையெல்லாம் ஏற்கனவே ரவி செய்திருந்தான்.
இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ரவி காரில் பறந்து கொண்டிருக்கிறான்.
தியேட்டரின் எதிரே இருக்கும் மஞ்சு வீட்டில் அமர்ந்திருக்கிறாள் சசி.
“எனக்கு தெரியும்.. ஆமா…. எப்டி உங்கம்மாவ சம்மதிக்க வைச்ச?” என்றாள் மஞ்சு.
அவ்வப் போது வாசலில் எட்டி எட்டி தியேட்டரை பார்த்துக் கொண்டாள் சசி.
“நான் அவனை கட்டிக்கலன்னா வேசி ஆகிடுவேன்னு மிரட்டினேன். எங்கம்மா பயந்துடுச்சு” என்றாள் கண்களை உருட்டி.
“ஏய்…. நீ பெரிய கைகாரிடி, உன்கிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்,” என்றாள் மஞ்சு.
மணி இரவு 12……..
சாலையில் ஒரு ஆள் இல்லை. பனி பெய்யும் காலமிது. குளிர் கொன்று கொண்டிருக்கிறது. ஸ்வெட்டர் போட்டு, தலைக்கு ஸ்கார்ப் கட்டிக் கொண்டு தான் மஞ்சுவுடன் படுத்துக் கொண்டிருந்தாள் சசிகலா. இந்த விஷயத்தை ரவியிடம் அன்றே சொல்லத் தோன்றியது. அவளும் மாலை 7 மணியிலிருந்து அவனை பார்த்து விட முயன்று கொண்டிருக்கிறாள். “இப்பதாம்மா போறான்….” “இப்ப வந்துருவான்.. ” இப்படியே மணி 12 ஆகி விட்டது.
இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
“சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக…..” பாடல் நன்றாக கேட்கிறது.
அவனின் புன்னகை, பூக்களாக, அருவியாக, அலையாக அவளின் மீது விழுவதாக நினைத்துக் கொண்டாள்.
மெல்ல எழுந்தாள். மஞ்சு தூங்கிக் கொண்டிருந்தா. கதவைத் திறந்து கொண்டு சாலைக்கு வந்தாள். எப்படியும் அவன் இப்போதோ அல்லது கொஞ்ச நேரத்திலோ தியேட்டருக்குள் அல்லது தியேட்டருக்குள்ளிருந்து வந்தே ஆக வேண்டு. எப்படியும் விஷயத்தை சொல்லி விடலாம். சந்தோசப் படுவான்.
காதலில் சாத்தியமாகிறது எதுவும். நல்ல இருட்டு. .. தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஸ்ட்ரீட் லைட் கடந்த வாரம் முதல் எரிவதில்லை. அது வசதியாய் இருக்கும் இன்று அவனை சந்திப்பதற்கு என்றெல்லாம் மனம் தவித்தது. கன்னாபின்னாவென யோசிக்கிறது கன்னியின் மனம். அவனைப் பார்க்க வேண்டும். விஷயத்தை சொல்ல வேண்டும். விடிதலுக்கான நேரம் வெகு தூரத்தில் இருப்பதாகவே பட்டது. அதுவரை யுகமாகிப் போகும் தனிமை.
அதோ… அந்த வண்டியாகத்தான் இருக்கும். அதே தான்… வெள்ளைக் கார் என்பதற்கான வெளிச்சத்துடன் வர… சட்டென சாலையை கடக்க முயற்சிக்கையில், கண நேர கணக்கில் இந்தப் பக்கம் இருந்து படு வேகமாய் வந்த மணல் லாரி அவளை மோத, அட இல்லை.. அதற்குள் சுதாரித்துக் கொண்டு, இன்னும் வேகமாய் மீதம் இருந்த பாதி சாலையை கடந்து…….
க்ரீச் …………………………………………………
ப்ரேக் பிடிக்கப்பட்டது. ஆனால் அவள் மீது மோதி டப் டப்… என ஓரிரு சத்தம். லாரி போன வேகத்தில் அந்தச் சத்தமும் கேட்டிருக்காது.
வண்டியை விட்டு இறங்கிப் பார்த்த சந்திரன், ஓடி வந்து வண்டியில் ஏறினான். “மாப்ள இறங்காத… ஆள் காலின்னு நினைக்கறேன் …மேட்டர் ராணிடா …… நைட்ல அவதான் இப்படி சுத்திட்டுத் திரிவா….”
சசி குப்புற விழுந்து கிடந்தது, தலையில் மூடிக் கிடந்த ஸ்கார்ப், ஸ்வட்டர் … அவளது அடையாளத்தை மறைத்திருந்தது.
“மாப்ள, லாரில அடி பட்டு செத்ததாவே இருக்கட்டும். வண்டிய தியேட்டருக்குள்ள விடு என்றான் சந்திரன்”.
நடுங்கி கொண்டே வண்டியை உள்ளே விட்டான்.
படம் முடிந்து, மக்கள் கூட்டம் வெளியே வர, கண்ணில் பட்ட சசியை ஒரு மாதிரி அனுமானித்து சில நல்ல உள்ளங்கள் தூக்கி, அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.
விடிந்திருந்தது……..
சந்திரனிடம் புலம்பிக் கொண்டிருந்தான், “அந்தப் பொண்ணு, அதுவா வந்து உள்ள விழுந்துடுச்சுடா. நான் என்ன பண்றது….?”
“சரி விடு மாப்ள, யாருக்கும் தெரியாது. நீயா உளறிடாத. மணல் லாரிக்காரனுங்க எப்பவுமே ஸ்பீடுனு எல்லாருக்குமே தெரியும். கேஸ் அப்பிடியே திரும்பிடும்”
மூச்சிரைக்க ஓடி வந்து நின்றான், கேண்டீனில் வேலை செய்யும் பாபு.
“அண்ணே, நேத்து நைட் அடிபட்டு செத்தது சசிகலாக்காண்ணே”
“டயரை ஓங்கி ஓங்கி உதைத்தபடியே கத்தி அழுதான் ரவி”
அந்த லாரியும் மௌனமாய் நின்று கொண்டிருந்தது. விபத்துகளின் கோர முகத்தை தாங்கி கொண்டு……
-
அம்மு
கவிஜி
அம்மு…………………..
இந்த பெயரை
உச்சரிக்க நினைக்கும்
போதே, குடை தாண்டி
ஒரு மழை என்னை
நனைக்கத் தொடங்குகிறது..அம்மு……….
கடற்கரையில் மழையோடு நிற்பதென்பது அலையோடு துளியாவது. பட்டுத் தெறிக்கும் மழையெல்லாம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெள்ளிக் கம்பிகளின் குட்டித் தம்பியென, ஒரு சாயலில் தலை சாய்க்கும், வித்தை விதைக்கிறது. பூத்தூவும் மழையில் நானும், ஆர்ப்பரிக்கும் கடலும், அழகிய அலையும் ஒரு நேர்க்கோட்டு சிந்தனையில், சட சடவென, குளிருக்கு நடுங்கும் குடையுடன், விரியும் கண்களில் வெண்மேகத் துளிகளின் ரீங்காரத்தை கண்களால் நிரப்பிக் கொண்டு காணாமல் போய்க் கொண்டிருந்தோம்….. மேகத்தை பிழிவதை உணர முடியும் தருணம். எங்கு பார்க்கினும், எங்கெங்கு பார்க்கினும் மழையே…… மழைதான் வெளியின் அர்த்தமோ..!
எனது அர்த்தங்கள் கண் நிரம்பிய குளங்களானது ….மழையோடு, அவளோடு இருந்த நாட்கள், கனவோடு விடிந்த பூக்கள்…. இரும்பு பூக்களை இனம் மாற்றும் வித்தை இந்த மழைக்கு தெரிந்திருக்கிறது.
சர்ர்ரென …. ஒரு புது வீணை மீட்டலாய், முதல் துளியை விரட்டிக் கொண்டே விழும் துளிகளெல்லாம் புதுத் துளிகள்தான் என்பாள்,கண்கள் விரிந்த மீனலோட்சனி. மழை மீது அவளுக்கு காதல். அவள் மீது எனக்கு காதல். என் மீது மழைக்கு காதல். அது ஒரு தொடர் சிந்தனை. எத்தனை யோசித்தாலும் புத்தனைப் புரியாததைப் போல, மழையின் தொடர்பற்ற தொடர்புகள் நினைவுகளைக் கிளறுவதில் சல்லடை தாண்டிய சில் ஊசிகள்….
ஒரு பெரு மழை நாளில்தான் இதே இடத்தில் தன் காதலைக் கூறினாள் மீனலோட்சனி… உள்ளங்கையில் பிடித்த மழைத் துளிகளை தீர்த்தம் போல முகத்தில் தெளித்தாள் . நொடிகளில்,முகம் திருப்பி திரும்புவதற்குள், மழையோடு நீ இருந்தால், மனமெல்லாம் சுகமே என்றாள். குடை சாய்த்து, அவளைக் காணுகையில் மழைப் பெண்ணாய் கண்கள் விரிய நின்றாள். ஏதோ, இந்த மழையே அவளுக்காக பெய்வது போல் ஒரு கர்வம் அந்த மொட்டு கண்களில் கண் மை கரையச் செய்து கொண்டிருந்தது…மழைத் துளிகளால் நெய்யப்பட்டவள் போலொரு தோற்றம். முன் நெற்றியில் அரை நெற்றியை கூந்தலால் மறைத்திருந்தாள். மிச்சத்தை மழை போல் துளிகளாக்கி, அரை வட்ட நிலாவாய் நனையச் செய்திருந்தாள்.
நினைவுகளின் கூடாரமாய், என்னைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தது அவளின் மழைத் துளிகள். வானக் கண்ணில் நானொரு இறக்கை விரிந்த காகமாய் தெரியலாம். குடையின் படபடப்பு, நடுங்குவதாய் கூட உணரச் செய்யலாம். நின்று, நிதானமாய் மழைக்குள் மழை பார்ப்பது, சிந்தனைகளை நிறமாற்றிக் கொண்டிருந்தது. வெற்றிடத்தின் வியர்வைத் துளிகள் செவ்வக வடிவில் குறிப்பிட்ட இடைவெளியில் கடல், கரையை, வெளியை, பகலை நிறைத்துக் கொண்டேயிருந்தது… அம்முவின் அரவணைப்புகள் பெரும்பாலும் மழை நாளில் அதிகமாகும். அத்துமீறும் பெண்மையை, உணர்வது, ஆண்மையின் தவம். என் தவங்களை வரமாக்கிய போதனைகளின் துளிகளை, இந்த மழையே, காலம் காலமாய் கொண்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன், உணர்கிறேன்…. காது முழுக்க ஒரே விதமான பேரிசை, மழையின் சிரிப்பு அல்லது…. சிலிர்ப்பு. அது கத்திச் சொல்லும் காதலை கடல் அறிந்ததோ இல்லையோ நான் அறிவேன். மழையோடு தீர்ந்தவள் என் அம்மு…மழை இல்லாத ஊரில் அவள் இறந்து விடுவாள். அவள் அப்படித்தான்….முன் பின் போய் வந்த எண்ணங்களை மழை என்னும் திரைக்கதையாய் ஓட செய்கிறவள் அம்மு. காதலோடு இருக்க கல்யாணம் எதற்கு என்று அவள் கேட்ட நாளில் ஒரு மிதமான மழை வந்து கொண்டிருந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. அணைத்துக் கொண்டேன். இன்னொன்றும் கூறினாள். அன்று பெரு மழை நாள். “மனித பிறவியில் குழந்தை பெற்றுக் கொண்டே தீர வேண்டுமா? இந்த பூமியில் சந்ததிகளை விட்டுச் செல்லத்தான் வேண்டுமா?” என்றாள். இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன்….
பாலம் பாலமாய் வெடித்துக் கிடக்கும் மண்ணைக் கண்டால், கண்களில் பெருமழை சிந்துவாள். அவளைப் புரிந்து கொள்வது சிரமம் என்றெல்லாம் இல்லை…. சுலபமாக புரிந்து கொள்ளலாம், மழையை புரிந்து கொள்வது போல….குழந்தைகளுக்கு பதிலாக, நாங்கள் மரம் வளர்த்தோம்…. மரம் சொன்ன கதைகள் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருக்கும்….எங்களிடம் மரங்கள் பேசின…. அவளிடம் நிறைய ரகசியங்கள் சொல்வதாக கூறுவாள்….வயதாக, வயதாக தலைமுடியில் கருப்பு மை அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றிய எண்ணத்தில் வெள்ளை அடித்தாள். ஐம்பது வயது தோற்றம், ஐம்பது வயதில் அப்படித்தான் இருக்கிறது…. இருக்கட்டும் என்றாள். . பால் போன்ற தலைமுடியில், ஒரு வித அனுபவம் பரிசுத்தமாகிறது…… அவளை சுலபமாக உணர்ந்து கொள்ளும் தருணங்களை இந்த மழை எனக்கு துளி துளியாய் சொல்லித் தந்திருக்கிறது……
சொன்னால் நம்புவதற்கு சிரமம் தான். மழை மேல் சத்தியமாய் நாங்கள் ஒரு முறை கூட சண்டை போட்டது கிடையாது. கருத்து முரண்பாடுகளை கூட, இடம் மாற்றி யோசித்து புரிந்து கொள்வோம்…ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முத்தங்களாவது பரிமாறிக் கொள்வோம். காதலை காமத்தில் உணர்ந்து கொண்டேயிருப்போம். காமத்தை காதலில் புரிந்து கொண்டேயிருப்போம். மழை விடாத நாட்களில் மையிருட்டின் புயலை அவளிடம் உணர்ந்திருக்கிறேன்…. நிலவில் மழை வேண்டும் என்று வேண்டுவாள், மழையில் நடக்கும் நிலவாக. மெல்லிய தீண்டல்களின் பரிணாமமே, மழைத்துளியின் தொடுதல் என்பாள். விரல் கோர்த்துக் கொண்டு வீதி தாண்டும் வேளையில், குழியில் சேர்ந்திருக்கும் மழை நீரில் சடாரென எட்டிக் குதித்து சிரிப்பாள்…
சிறுவயதில் ஒரு மழைநாளில், வீடே அதிர அதிர சிரித்த கதை ஒன்றைக் கூறுவாள். ‘அ ‘ வை பெரியதாக எழுதிவிட்டு, அது தான் ” ஆ ” என்று சொன்னதாக, அதற்கு பின்னால் பனி மூட்டமாய் ஒளிந்து கிடந்த மழலையின் புரிதல், சிரிப்பாய் வெளிப்பட்டதை நினைவு கூறுவாள். நான் சிரிக்கின்றேன். இப்போதும் சிரிக்கத் தூண்டும் செயல் அது…. அதுவும் அவள் கூறும் போது, அது இன்னும் சுவையாக மாறும், அதிகாலை மழை போல… என்னால், கடலில் கடலாகும் மழையை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. இந்த மழை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்கிறது… அது கடலுக்கு புரிகிறது. அதையே, வேறு மாதிரி கரை புரிந்து கொள்கிறது….வெளியின் புரிதல் வினோதம். அது பல நேரங்களில் ஜன்னலையும், கதவையும் அடைத்து விடுகிறது….
என் குடை, காற்றிலும், தட்… தட்… தட்…. என படும் துளிகளிலும் தலையாட்டி கதை கேட்டுக் கொண்டிருக்கிறது. தீரா தனிமைக்குள் சுதந்திரமாய், தன் ஆடைகளை கலைகிறது இந்த மழை. நிர்வாண மழையில் கற்புக்கு வேலையில்லை…. உயிர் கரைதலை உணர்த்தும் இம் மழை கணங்களில் மாறிக் கொண்டேயிருக்கும் புகைப்படம். அம்முவின் பல புகைப்படங்களில் சிறையாகி நிற்கும், மழைக் கம்பிகள், புகைப்படத்தின் காலங்கள்….மழையில் மழை நனைவதாக அவள் எழுதிய கவிதைகள் இன்னும் காயவில்லை என் நினைவு பாலையில். சிலபோது, மழையேறி, வான் வெளியில் மேகமாகிவிடும் மண் துகள்களின் மின்மினி அவள். அவளாக இருப்பது அழகு…. அவளோடு இருப்பது பேரழகு…. நான் பேரழகன் என்பாள்… இந்த முப்பது வருடங்களில் அவளின்றி கடல் கண்டது இதுவே முதல் முறை. இப்போது கடலாகவும் அவள் மாறிவிட்டதாக, அவளாகிய மழை சொல்லும் ரகசியம், என் தனிமையின் ஆழமாய் மணலுக்குள் ஆழப் பதிந்த என் பாதச் சுவடுகளை நனைக்கிறது…..
எனக்குள் ஒரு வித கரைதல். நான் அழுது விடக் கூடாது. அழுவது அவளுக்கு பிடிக்காது. கண்ணீருக்கும் அழுகைக்கும் சம்பந்தம் இல்லை என்பது அவளின் மழைப்பாட்டு. கண்ணீரைத் துடைத்து, பின்னாலேயே பயணித்தது குடை தாண்டிய மழை…சட்டென நினைவு வருகிறது. அவளுக்கு குடை பிடிக்காது…. என்னால் இனி இந்த குடையைப் பிடிக்க முடியாது…. காய்ச்சல் தந்து விடும் என்பதால் வேறு வழியின்றி, பிடித்துக் கொள் என்பாள். வந்தாலும் பரவாயில்லை என்று குடை மறப்பேன் நான். இதோ இன்றும் குடையை காற்றின் கைகளில் தவழ விட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்…
சாலையெங்கும் மழைத் துளிகளின் தலைவிரி கோலம். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிய மனித கூட்டம், மழையை வெறித்த கண்களோடு , ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது….மரமற்ற சாலை, இனி ஒரு மழைக்காக எத்தனை காலம் காத்திருக்குமோ….? சாலையின் இருபக்கமும் வளைந்து இதழ்கள் தீண்டி நிற்கும் இலைகளோடு, மரங்கள் இருந்த காலத்தில், மீனலோட்சனி பச்சைக் கண்காரியாய் சிறகு விரித்து, மழையாக சிதறிக் கொண்டிருந்தாள் . இன்று சாலை மட்டுமே இருக்கிறது…
காயாத சாலையில், உஷ்ணம், வெண் புகையாய் வெளியேறிக் கொண்டிருந்தது…திரும்பி பார்த்தேன்…. மழை நிறைந்த பெருவானமாய் கடல், பிரபஞ்சம் நனைத்துக் கொண்டிருந்தது….
திறந்து கிடந்த வீட்டுக்குள் சாரல் துளிகள் சல்லடை துளைத்த துளி மீன்களாய் சிதறிக் கொண்டிருந்தது…வாசல் தாண்டி வீட்டுக்குள் நுழைந்த என் மீனலோட்சனி, உள்ளங்கையில் ஒளித்து வைத்திருந்த, மழைத்துளிகளை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப் படத்தில் தெளித்தாள்….அவளுக்கு மரணமும் வாழ்வும் ஒன்று தான்….அவளின் புன்னகை ஒரு பெரு மழையை தேக்கி வைத்திருந்தது….
வாசலில் நனைந்து கொண்டிருந்தது, நான் கடற்கரையில் மழையோடு விட்ட குடை……
-
ஆயிரம் முகங்கள் எனக்கு!
-கவிஜி
உயிர் சுமந்து
திரியும்
இடைவெளியற்ற
மாற்றுச் சிந்தையில்
மற்றுமோர்
தீவுக்குள் தொலைவதைத் தவிர
வழியில்லை…உடல் கொண்ட
பலம் முழுக்க
முதிர்ந்துபட்ட
கல்லடிகள்தான்…உடைத்த கல்
உன் விழிக்குள் தூசியாகும்
உடைந்த கண்ணாடி
ஆனாலும் ஆயிரம்
முகங்கள் எனக்கு!அத்துமீறி நுழையும்
காட்டுயானையைக் கேட்டு பார்…!
அத்திசை சொல்லும்
தாகம் – சுரண்டுபவள்
நீ என்கும்…!பூக்கள் வியக்கும்
பிணமாகி, கிடப்பதில்தான்
பூர்த்தியாகிறது பயணம்
பாதம் நக்கும்
நாய் போல…!நீ இல்லாத தேசத்திலும்
இனி நான் இருப்பேன்
இருத்தல் உனைக் கடந்த
என் சவத்தோடு!

