Tag: நிர்மலா ராகவன்

  • பழகத் தெரிய வேணும் – 61

    பழகத் தெரிய வேணும் – 61

    நிர்மலா ராகவன்

    தனிமை விரும்பிகள்

    “ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால், ஆண்களுக்குப் பிடிக்காது”.

    சில குடும்பங்களில் மூத்தவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதால், தம் புத்திசாலித்தனத்தை மறைத்துக்கொள்கிறார்கள் பல பெண்கள்.

    அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்தாள் ரேணு.

    `உன்னால் ஏன் யாருடனும் ஒத்துப்போக முடிவதில்லை?’

    `பிறர் என்ன சொல்வார்கள் என்று யோசித்துத்தான் எதையும் செய்ய வேண்டும்’.

    சிறு வயதிலிருந்தே பலவாறாகக் கண்டிக்கப்பட்டிருந்தாள்.

    தவறு அவள்மேல் இல்லை. சராசரி மனிதர்களைவிட அவளுக்குப் புத்திசாலித்தனம் மிக அதிகம் என்பதுதான் உண்மை.

    பிறர் ஏன் தன்னைப்பற்றி அப்படி நினைக்கிறார்கள் என்று புரிந்து, தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வர் அவளைப் போன்ற சிலர்.

    வேறு சிலரோ, நிறையக் கண்டனத்திற்கு ஆளாகித் தவிப்பார்கள். அதிர்ஷ்டவசமாக, என்றாவது தம்மைப்போன்ற ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால்தான் தெளிவு கிடைக்கும்.

    மௌனம் ஏன்?

    மற்றவர்கள் செவி கொடுத்துக் கேட்கிறார்களோ, இல்லையோ, `எனக்கு நிறையத் தெரியும்!’ என்று காட்டிக்கொள்வதைப்போல் பேசும் வழக்கம் ரேணுவைப்போன்ற அதிபுத்திசாலிகளுக்குக் கிடையாது. அதனால், நிறைய பேர் இருக்கும் இடத்தில் அதிகம் பேசமாட்டார்கள்.

    எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தாலும், தனக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளியிடாது, பிறர் கேட்டால் மட்டும் பதிலளிப்பார்கள் இத்தகையவர்கள்.

    இவர்கள் பெரும்பாலும் மௌனமாக, ஆனால் தம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம், கவனித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அமைதியான போக்கு பிடிபடாது, `கர்வி,’ `முட்டாள்’ என்று பிறர் கருதக்கூடும்.

    அது மட்டுமா!

    இவர்களது கருத்துக்களைப் பலராலும் ஏற்க முடியாது. மனம் வெதும்பி, `நீ பிறர் மனத்தை நோகடிக்கிறாய்!’ என்று வீண்விவாதம் செய்வார்கள்.

    அலுப்பு எழ, இப்படிப்பட்டவர்களுடன் பேசுவானேன் என்று தோன்றிப்போகும்.

    `என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்களேன்!’ என்ற எண்ணம் எழ, இவர்கள் தனிமையை நாடுவதில் என்ன ஆச்சரியம்!

    சுயமாகவே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடிவதால், பிறரது குறுக்கீடு இல்லாமல் விரைவில் ஒரு காரியத்தைச் செம்மையாகச் செய்து முடிப்பார்கள். தனிமையில் செயல்பட இதுவும் ஒரு காரணமாகிறது.

    என்றும் எதிர்நீச்சல்தான்

    பலரும் ஒரு திசையில் போக, தாம் மட்டும் எதிர்த்திசையில் பயணிக்கும் துணிச்சல் இருப்பதாலேயே இவர்கள் தனித்து நிற்கிறார்கள். யோசித்து, நிதானமாகப் பேசுவது இவர்களது குணம்.

    இவ்வளவெல்லாம் இருந்தும், தன்னால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று (அனுமனைப்போல்) தெரிவதில்லை. ஊக்குவிக்க ஓரிரு உறவினரோ, நண்பர்களோ அவசியமாகிறது.

    முதலில் இவர்களைப் பழித்தவர்கள் இவர்கள் முன்னேறியதும் புகழ்வார்கள். இது புரிந்து, புகழ், இகழ் இரண்டும் தம்மை வெகுவாகப் பாதிக்க விடமாட்டார்கள்.

    எதற்கு அநாவசியமான பயம்?

    தமக்குத் தெரியாததை `தெரியும்’ என்று சொல்லாமல், அவற்றைப் பிறரிடமிருந்து கற்பது புத்திசாலித்தனத்துக்குச் சான்று.

    பிறர் மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இல்லாவிட்டால் பலவற்றைக் கற்க முடியுமே!

    `எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புரிந்து வைத்திருப்பார்கள். ஆகையால், புதிய இடங்களுக்குப் போகையில், பலவற்றையும் அறியும் ஆர்வத்துடன் நிறையக் கேள்விகள் கேட்பார்கள்.

    இத்தன்மையால், `இதென்ன தொந்தரவு!’ என்று பிறரை அலுக்கச் செய்வதும் உண்டு!

    உணர்ச்சிபூர்வமாகவும் புத்திசாலித்தனம் அமைந்திருக்க, புதிய மனிதர்களைக் கண்டு மிரளாமல், அவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    புத்திசாலிகள் தவறே செய்யமாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

    அவ்வாறு செய்யாதிருக்க அவர்கள் என்ன கடவுளா? ஆனால், தவற்றை ஒத்துக்கொள்ளும் நேர்மை உண்டு.

    யார் புத்திசாலி?

    ஒருவர் இரண்டு அல்லது மூன்று பட்டங்கள் பெற்றிருக்கலாம். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். அதனால் மட்டுமே அவர் புத்திசாலி என்பதில்லை.

    வெகு சிலரே பெரும்பான்மையானவர்களைவிட புத்திசாலியாக இருப்பார்கள். இது கல்வியால் வருவதல்ல.

    தகுதி இல்லாதவர்களையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே புரிந்து வைத்திருப்பவரே புத்திசாலி.

    அறிவு மட்டும் இருந்தால் போதுமா? கருணையும் சேர்ந்திருந்தால்தான் அதற்கு மதிப்பு.

    கைமேல் பலன்

    கதை

    காவேரி ஒரு வீட்டில் வேலை செய்பவள். பதினைந்து வயதுதான். கிராமத்திலிருந்து அவளை அழைத்து வந்த அத்தை, தான் செய்யும் வேலைகளில் அவளையும் பழக்கினாள்.

    உணவும், தங்க இருப்பிடமும் – அது குடிசையே ஆனாலும் – கிடைத்த திருப்தி காவேரிக்கு. அத்துடன், ஒவ்வொரு முறை சம்பளம் கிடைத்தபோதும் ஒரு திரைப்படம்!

    ஒரு வீட்டு அம்மாள், `இவ்வளவு சின்னப்பெண் இப்படித் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறாளே!’ என்ற கரிசனத்துடன், அவளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

    மரியாதைக்காக ஓரிரு முறை பொறுத்துப்போன அச்சிறுமி, “வேணாம்மா. போரடிக்குது,” என்று மறுத்துவிட்டாள்.

    எந்த ஒரு காரியம் செய்தாலும் உடனே பலனை எதிர்பார்ப்பவர்கள் வாழ்வில் கீழ்மட்டதிலேயேதான் இருக்க நேரிடும்.

    காவேரியும் ரேணுவும் இரு வெவ்வேறு துருவங்கள்.

    ரேணுவோ, ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னர் திட்டம் போடுவாள். இதை இப்படிச் செய்யலாமா, வேறு எப்படிச் செய்தால் கூடுதலான பலன் கிடைக்கும், இதனால் வேண்டாத விளைவுகள் என்னென்ன எழும் என்று பலவாறாக யோசித்தபின்னர், நிதானமாக செயல்படத் தொடங்குவாள்.

    கதை

    ஒரு நாள் பெரிய மழை கொட்ட, வேலை செய்துகொண்டிருந்த காவேரி பெரிதாக அலறினாள்.

    ஒரேயடியாகப் பயந்து, வீட்டு அம்மாள் ஓடி வந்தாள்.

    பேச நாவெழாது, காவேரி மேலே சுட்டினாள். கூரையில் ஒரு சிறிய ஓட்டை. அதன்வழி மழை வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.

    “இவ்வளவுதானே! இப்போது பாத்திரங்களை அதனடியில் வை. நாளைக்கு ரிப்பேர் செய்யலாம்,” என்று வழி கூறிய அம்மாள் தன்னை அடக்கிக்கொள்ளும் புத்திசாலித்தனம் நிறைந்தவள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வாள். சூழ்நிலையையும் மாற்றுவாள்.

    “நல்லாத்தான் அலறினே, போ! பாம்போ, தேளோ ஒன்னைக் கடிச்சிடுச்சாக்கும்னு பயந்தே போயிட்டேன்!” என்று அவள் சிரித்தபோது, காவேரியும் சேர்ந்து சிரித்தாள்.

    நகைச்சுவை உணர்வு

    கதை

    புக்ககத்திலிருந்த சுசி, வெளியூரிலிருந்த தன் இளைய சகோதரியின் உடல்நிலை மிகுந்த சீர்கேடு அடைந்திருப்பதாக அறிந்தாள்.

    அவள் மூச்சு இரு நிமிடங்கள் அடங்கிப்போக, `இறந்துவிட்டாள்!’ என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். அதன்பின், உயிர் பிழைத்தாள் என்ற தகவல் பின்னர் கிடைத்தது.

    சகோதரிக்குச் உடல்நிலை சற்றே சீரானதும், தங்கையை அழைத்தாள் சுசி.

    “என்ன நீ! செத்துச் செத்துப் பிழைக்கிறாயாமே!” என்று ஆரம்பித்தாள்.

    `கொஞ்சங்கூட பச்சாதாபமே கிடையாதா இவளுக்கு!’ என்று முதலில் அதிர்ந்த தங்கை, கேலி புரிந்து, அவளுடைய சிரிப்பில் கலந்துகொண்டாள்.

    ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, தேறியபின்னரும் கடந்ததைப் பற்றியே பேசுவது எதற்கு?

    அப்படிச் செய்வதுதான் முறை என்றால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 60

    பழகத் தெரிய வேணும் – 60

    நிர்மலா ராகவன்

    பிறருடைய கருத்து

    எல்லாரும் இருப்பதுபோல் நாமும் இருந்தால்தான் சரியானது, நம்மை ஏற்பார்கள் என்று எண்ணி நடப்பவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. மனக் கிலேசமும் எழக்கூடும்.

    கருத்து வேறுபாடு

    குடும்பம்

    திருமணமானதும், முதல்முறையாக மாமியார் வீட்டில் கூட்டுக்குடித்தனம் செய்ய ஆயத்தமானாள் மலர்விழி.

    அவளுடைய தாய் வாய் ஓயாது உபதேசம் பண்ணி அனுப்பினாள். “எல்லாரிடமும் மரியாதையாகப் பழகு. பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு நட. உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்”.

    இந்த ரீதியில் தொடர்ந்து பல நாட்கள், `அறிவுரை’ என்று தனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதை கூறினாள் அந்த தாய். எல்லாம், `மகளை இப்படி வளர்த்திருக்கிறீர்களே!’ என்று ஏசிவிடுவார்களோ என்ற பயம்தான்!

    மலர்விழி பெரிய படிப்பு படித்தவள். சுயமாகச் சிந்திக்கும் திறனைக் கொண்டவள். முதலில் தாய் சொன்னதைக் கடைப்பிடித்தவள், `நான் ஏன் மகிழ்ச்சியாகவே இல்லை?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

    வெவ்வேறு குடும்பங்கள் ஆனதால், அவர்களது கலாசாரம் ஒத்துப்போகவில்லை. அதனால், மலர்விழி செய்வது, சொல்வது எல்லாம் பிறருக்குக் கேலியாக இருந்தது. `தன்மேல்தான் தவறோ?’ என்று இவள் ஓயாது விட்டுக்கொடுத்ததில், பிறரது அதிகாரம் கூடிப்போயிற்று.

    சில வருடங்கள் கஷ்டப்பட்டபின் அவளுக்குப் புரிந்தது. எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறவேண்டும், பிறர் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது முனையவேண்டும் என்றெல்லாம் நடந்துகொண்டிருந்த தான் பிறரது வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தது தவறு என்று புரிந்துகொண்டாள்.

    ஒரே வழி தனிக்குடித்தனம் போவதுதான் என்று முடிவெடுத்தாள். இழந்த உற்சாகமும் நிம்மதியும் மீண்டன.

    எந்த உறவிலும், ஒருவரை அவர் இருக்கிறபடியே ஏற்றால் இரு தரப்பிலும் மரியாதை இருக்கும். அதைவிட்டு, `நீ சொல்வதெல்லாம் தவறு. என் சொற்படிதான் நடக்கவேண்டும்,’ என்ற வாதம் கசப்பில்தான் முடியும். குடும்பம் இரண்டாகும்.

    திரைப்படங்கள்

    பொதுப்பான்மையான கருத்துகளை வைத்துப் திரைப்படம் எடுத்தால்தான் பலரும் பார்ப்பார்கள், நிறைய லாபம் கிடைக்கும் என்று நினைத்துச் செயல்படுகிறவர்கள் வெகு சிலரே. ஆனால், இவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள். நிஜவாழ்க்கையில் எப்போதாவது நடக்கும் சம்பவங்களைக் கதையாகப் பின்னுகிறார்கள் இவர்கள்.

    `இப்படியெல்லாமா நடக்கிறது!’ என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் எழ, அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    விமர்சகர்கள்

    திரைப்படங்களைப் பார்ப்பதற்குமுன் விமர்சகர்கள் அவற்றைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது பலருடைய வழக்கம், என்னுடையதும்தான்.

    அது எவ்வளவு தவறு என்று பிறகுதான் புரிந்தது. ஏனெனில், கருத்து என்பது உணர்ச்சிபூர்வமாக ஏற்படுவது. அப்போது அறிவு குறிக்கிடுவதில்லை.

    பிற மதத்தைச் சார்ந்த ஒருவரை இளம்பெண் ஒருத்தி காதலிக்கிறாள் என்று கதை அமைந்திருந்தால், கதை விறுவிறுப்பாக, உணர்ச்சிபூர்வமாக, நம்பத்தக்கதாக இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க ஒரு விமர்சகர் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அக்கருத்தை ஒத்துக்கொள்ளாது, அந்த திரைப்படத்தை எடுக்கத் துணிந்தவர்களைக் கண்டனம் செய்வார்.

    குடும்பத்தில்

    வேறு ஏதாவதொரு குடும்பத்தில் மதம், இனம் இவைகளில் வித்தியாசம் இருந்து, பெற்றோரைமீறி கல்யாணம் செய்துகொண்டவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதைக் கண்டு பயந்து, தம் குழந்தைகளும் அவ்வாறு துன்பப்படக்கூடாது என்ற ஆதங்கத்துடன் பெற்றோர் மறுப்பார்கள்.

    `பிறர் என்ன சொல்வார்கள்!’ என்ற அச்சத்தினாலும் மறுப்பு எழக்கூடும். இரு தரப்பிலும் இருக்கக்கூடிய உண்மையான அன்பும், நேர்மையும் அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

    அவர்களுக்குத் தோன்றியதை ஆத்திரப்படாமல் எடுத்துச் சொன்னால், விவகாரம் சுமுகமாக முடிய வழி இருக்கிறது.

    முரட்டுத்தனமும் வீரமும் ஒன்றுதான் என்று நினைப்பவர்களே சண்டையில் ஈடுபடுவார்கள்.

    எழுபது, எண்பது வருடங்களுக்குமுன் பன்னிரண்டு வயதுக்குள் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து முடித்து, புக்ககத்திற்கு அனுப்பினார்கள். அப்போது அவளால் வளைந்துகொடுக்க முடிந்தது. அவளுக்குத் தனித்திறமைகள் இருந்தாலும் அவை வெளிப்படவில்லை. ஏனெனில், அவளுக்கே தன்னால் என்ன முடியும் என்ற தெரிந்திருக்காது. பிறர் சொற்படி கேட்டு நடந்து, நல்ல பெயர் வாங்கினாள்.

    அப்படி ஒரு பெண்ணின் கதையைப் பார்ப்போமா?

    கதை

    மீனாட்சி நல்ல புத்திசாலி. எட்டு வயதிலேயே கல்யாணமாகி, கணவர் வீட்டுக்கு வந்தவள். பதின்மூன்று வயதிலிருந்து வருடத்திற்கு ஒரு பிள்ளை.

    `பெண்’ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்று நடந்தாலும், அவள் மனதில் ஏதோ வெறுமை. அவள் வளர்த்த குழந்தைகள் நன்கு படித்து, பெரிய உத்தியோகங்களில் அமர்ந்தபோது, தான் மட்டும் இப்படி வீடு, குடும்பம் என்று அடங்கிப்போய்விட்டோமே என்ற எண்ணமெழ, அது ஆத்திரமாக மருவியது.

    `ஏன் கல்யாணம் செய்துகொண்டோம்?’ என்ற எரிச்சல் எழ, சாதுவான கணவரைப் பார்த்துக் கத்தினாள். கறிகாய் விற்பவன், பேரன் பேத்திகள் எல்லாருக்கும் காரணமில்லாமல் `அர்ச்சனை’ விழும்.

    `பெண்களுக்கு என்ன இருக்கிறது, பாவம்!’ என்று புரிந்து, கணவரும் அடங்கிப்போனாராம்.

    இது அந்தக் காலம். இன்றும் இப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் சண்டை, சச்சரவு என்ற நீண்டுகொண்டே போகாதா!

    கதை

    வித்யாவின் கணவனுக்கு அவளுடைய உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது. ஆனால், தன் பெயர் கெடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான். விருந்தினர்களிடம் அன்புடன் பழகுவதுபோல் நடிப்பான்.

    ஓரிரு நாட்கள் கழிந்ததும், `அவர்களைத் திரும்பிப் போகச்சொல்,’ என்று தனிமையில் மனைவியிடம் கத்துவான்.

    வித்யாவுக்குத்தான் தர்மசங்கடமாகிவிடும். என்றாவது, அவர்களையே, `வெளியே போங்கள்!’ என்று ஏடாகூடமாகச் சொல்லிவிட்டால் என்ன செய்வது!

    அவளுக்கு ஒரு வழிதான் புலப்பட்டது. கணவனை அடக்க முயற்சித்து, தன் அதிகாரத்தைக் கூட்டிக்கொண்டாள்.

    அதைப் பார்த்து அதிர்ந்த விருந்தினர் பெண்மணி, தன் வீட்டுக்குத் திரும்பியதும், “வித்யா ரொம்ப மோசமான மனைவி! கணவனிடம் மரியாதையே இல்லாமல் நடந்துகொள்கிறாள்!” என்று பிற உறவினர்களிடம் பரப்பினாள்.

    உண்மையான நிலவரம் புரியாததால், “பாவம், அவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! இவளிடம் மாட்டிக்கொண்டுவிட்டாரே!” என்று கணவருக்குத்தான் அனுதாபம் கிடைத்தது! எந்தத் தவறு நடந்தாலும், பெண்ணின்மேல்தானே குற்றம் சுமத்துவார்கள் நம் சமூகத்தில்!

    வித்யாவுக்கு என்னவோ மகிழ்ச்சிதான் – கணவர் தன் உறவினர்களை விரட்டி அடிக்காமல் அவர்களைப் பாதுகாத்துவிட்டோமே என்று.

    உன் இலக்கு நோக்கிச் செல்

    சிலர் நல்ல வேலையை விட்டுவிட்டு, புதிதாக எதிலாவது ஈடுபடுவார்கள்.

    உற்றார் உறவினர் அனைவரும் `மடத்தனம்!’ என்று அதிர்வார்கள்.

    ஆனால், அவருக்குத்தான் தனது இலக்கு முக்கியம். பிறர் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கவனிக்காது, அதை நோக்கிப் பயணிக்கத் துணிவார். வெற்றி கிடைக்கலாம், கிட்டாமலும் போகலாம். ஆனாலும், `அப்படிச் செய்திருக்கலாமே!’ என்று என்றாவது ஏங்க நேரிடாதே!

    அனேகமாக எல்லாப் பெண்களுக்குமே எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. கூடவே, தயக்கமும் ஏற்படும்.

    `பெண்கள் திரும்பத் திரும்ப குடும்பக் கதைகள்தாம் எழுதுகிறார்கள். எல்லாம் ஒரேமாதிரிதான் இருக்கின்றன!’ என்று ஆண்கள் என்னிடம் குறை கூறியிருக்கிறார்கள்.

    `படிப்பவர்களுக்கு என்ன பிடிக்கும்? அத்துடன் நம் பெயர் கெடாமல் இருக்குமா?’ என்றெல்லாம் யோசனை செய்து எழுத ஆரம்பித்தால் வேறு எப்படி எழுத முடியும்?

    “நல்ல இலக்கியம் என்பது அதிக விமரிசனத்துக்கு உள்ளாவது” (ஓர் இலக்கியவாதி).

    நான் எழுதியவற்றைப் புகழ்ந்தவர்களைவிட அதில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் அதிகம்.

    `பெண்களுக்கு உணர்ச்சிகளே கூடாது. அப்படியே இருந்தாலும், அவற்றை அடக்கியே வைத்திருக்கவேண்டும்,’ என்ற கருத்துகொண்ட ஆண் தன்னைப் பலசாலி என்று கருதுகிறான். அவனுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது அதிர்ச்சி உண்டாகிறது. எழுத்தைவிட அதை எழுதியவள் கண்டனத்துக்கு ஆளாகிறாள்.

    இது புரிந்து, ஆண்கள் பழிக்கும்போதெல்லாம் பெண்கள் அவர்களை எதிர்த்து பதில் கடிதம் எழுதிவிடுவார்கள், எனக்குப் பக்கபலமாக.

    “என் பெயர் காதல்” என்ற தலைப்பில் நான் ஒரு கதை எழுதிவிட்டு, “எப்படிக் காதல் வயப்படுவது என்று அணு அணுவாக விவரித்திருக்கிறேன்,” என்று என் மகளிடம் பெருமையாகக் கூறினேன்.

    “ஐயோ, அம்மா!” என்று அதிர்ந்தாள். “உன் REPUTATION (நல்ல பெயர்) என்ன ஆவது?”

    “எனக்கா? நல்ல பெயர் இருக்கிறதா, என்ன!” என்று சிரித்தேன்.

    தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டபின், சாண் போனாலென்ன, முழம் போனாலென்ன!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 59

    பழகத் தெரிய வேணும் – 59

    நிர்மலா ராகவன்

    குறையேதும் உண்டோ?

    இந்த நாகரிக யுகத்தில் யூ டியூபைப் பார்ப்பவர்கள் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது எந்த நடிகை எப்படியெல்லாம் கெட்ட வழியில் போனாள், எந்த நடிகர் எத்தனைப் பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார், மனைவியுடன் சண்டை போட்டார் போன்ற செய்திகள்தாம்.

    இவை அடிக்கடி வெளியிடப்படுவது எதனால்?

    பிறரிடம் குற்றம் கண்டுபிடித்தால் நாம் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறோம் என்ற அற்ப திருப்தியைப் பிறருக்கு உண்டாக்குவதற்காக.

    பிறரை வருத்துவது எதற்காக?

    தன்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்று நினைப்பவரே அந்த வருத்தத்தைப் போக்க, அல்லது அதை மறைக்கவென பிறரது மகிழ்ச்சியைக் குலைக்கத் திட்டம் போடுவார்.

    இப்போது நல்ல நிலையில் இருப்பவர் ஒருவர் என்றோ தவறு செய்திருந்தால், இயன்றவரை அதைப் பரப்பி, அவருடைய மதிப்பைக் குறைக்க எண்ணுவார்.

    தம்மைப் போல் இல்லாத பிறரெல்லாம் `அசடு,’ `முட்டாள்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இவர்களுக்கு. தம்மால் இயலாததை, அல்லது புரியாததைச் செய்பவர்களைக் கண்டனத்துக்கு உரியவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். (இத்தகைய தாக்குதலுக்குப் பயந்தே பலரும் தமது ஆக்கப்பூர்வமான இயல்பை மறைத்து, பிறரைத் தொடர்ந்து நடக்கிறார்கள்).

    வெற்றி பெற்றவர்கள்தாம் மதிக்கத்தக்கவர்கள் என்பதில்லை. நற்பண்பு முக்கியமில்லையா?

    நற்குணம் என்பது மதம், இனம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் கடந்தது.

    கதை

    மலேசியாவிலிருந்த அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கலாவின் நாட்டியம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், அவள் ஒருத்திதான் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்றிருந்தாள்.

    அது போதாதா, சக மாணவிகளின் பொறாமையைத் தூண்டிவிடுவதற்கு!

    அவளுடன் படித்த யோக் மூய் (Yoke Mui) என்ற சீனப்பெண், “உன் தாய்க்கு உன்மேல் அன்பே கிடையாது,” என்று ஆரம்பிக்க, கலா விழித்தாள்.

    “பின் என்ன! உன் படிப்பைக் கெடுக்கிறார்களே! ஆடுவதற்கு விரயமாக்கும் நேரத்தில் நீ படிப்பில் கவனம் செலுத்தினால், பரீட்சைகளில் இன்னும் சிறப்பாக மதிப்பெண்கள் வாங்கலாமே!” என்று தூபம் போட்டாள்.

    யோக் மூய்க்கு அவளுடைய தாய் தன்னிடம் போதிய அன்பு காட்டவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். அதனால் இன்னொரு தாயைப் பழித்து, ஆறுதல் தேட நினைக்கிறாள்.

    `பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று பயந்தே அவளைப் போன்ற பலரும் தம்மை அடக்கிக்கொள்கிறார்கள். இதனால் நிம்மதியை இழந்துவிடுவோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

    கலா அதிரவில்லை. “படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று உன்னிடம் சொன்னேனா?” என்று அவள் வாயை அடைத்தாள்.

    பிறர் புகழ வாழ்கிறவர்கள்தான் இப்படிப்பட்ட தாக்குதல்களைச் சமாளிக்க நேரிடும்.

    பிறரைக் குறைகூறும் ஒருவர் தன்னையுமறியாது தன்னைப் பற்றித் தெரிவிக்கிறார். இது புரிந்தால், மனம் தளர விடமாட்டார்கள்.

    ஒரு பிரபல நடிகர் ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்து, ஒருசில படங்களுக்குப் பின்னர் மிகவும் பருமனாக ஆனார்.

    பத்திரிகைக்காரர்கள், விசிறிகள் என்று பலரும், `ஏன் இப்படி குண்டாகிக்கொண்டே இருக்கிறீர்கள்? உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்களேன்!” என்று வற்புறுத்தினார்கள். அவர்களால் அவருடைய நடிப்பினால் மட்டும் திருப்தி அடைய முடியவில்லை.

    ஒருவர் தன் வாணாளில் அனுபவித்தது, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்த விதம், கடந்தகால நினைவுகள் — இவற்றையெல்லாம் புரிந்துகொண்டால் மட்டுமே அவரைப் பற்றி முழுமையாக அறியமுடியும்.

    அந்த நடிகர் அளித்த மறுமொழி: “என் இளமைக் காலத்தில் நான் ஒரு இட்லிகூட கிடைக்காமல் பசியில் வாடி இருக்கிறேன். இப்போதுதான் போதிய வசதி கிடைத்திருக்கிறது. இனியும் வயிற்றைக் காயப் போடச் சொல்கிறீர்களே!”

    `எதற்காவது குறை கண்டுபிடிக்காது, என் நடிப்பை மட்டும் கவனியுங்களேன்!’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்!

    பிறர் நம்மைக் குறைகூறுகிறார்களே என்று மனம் உடைந்துவிடாமல், `யாரிடம்தான் குறையில்லை?’ என்று மனத்தைத் தேற்றிக்கொண்டதால் அவர் நிலைத்து நிற்கிறார்.

    பிறர் ஒருவரைக் குறைகூறுவது, தவறாக எடைபோடுவது—இதெல்லாம் அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

    கதை

    “இந்த லீலா ஆண்களுடன் எப்படிச் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்!” என்று நடுத்தர வயதுப் பெண்கள் பலர் தமக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

    `சிரித்துச் சிரித்து’ பேசிய லீலாவுக்கும் அவர்கள் வயதுதான். ஆனால், அவள் சிறு வயதிலிருந்தே ஆண்களுடன் சேர்ந்து பள்ளியில் பயின்று, அவர்களுடன் நன்கு பழகியவள். அயல்நாட்டில், நாகரிகமாக வளர்க்கப்பட்டவள்.

    இதில் தவறு யார்மேல்?

    தம்மையும் இவ்வாறு சுதந்திரமாகப் பழக விடவில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதான் வம்புப் பேச்சு.

    ஆண்களுடன் பேசினாலே கற்பு போய்விடும் என்பதுபோல் இளவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டு, முதலில் கணவரைக் கண்டு பயந்து, பிறகு அவரையே அதிகாரம் செய்யும் துணிச்சலை வளர்த்துக்கொண்ட அப்பெண்கள் மேலா, இல்லை, பலருடனும் சகஜமாகப் பழகிய லீலா மேலா?

    விடுமுறையில் பழகுவது

    பிறரது இல்லத்திற்கு குறுகிய காலம் விருந்தினராகப் போகிறவர்கள் வேடிக்கையாகப் பேசி அங்குள்ளவர்களைக் கவர நினைப்பார்கள். மிகுந்த கலகலப்புடன் இருப்பார்கள்.

    “எவ்வளவு நன்றாகப் பழகுகிறார்!” என்று வீட்டினர் மகிழ்வார்கள்.

    இது சரியான தீர்ப்புதானா என்று யோசிக்க வேண்டும்.

    அவருடைய குடும்பத்தினரிடமோ, அலுவலகத்திலோ அப்படியே இருப்பார் என்று சொல்ல முடியாது.

    வந்த இடத்தில் பிறர் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்று பலரும் நாடகம் போடுகிறார்கள். அவ்வளவுதான்.

    `நான் இதைச் செய்யலாம் என்றிருக்கிறேன்,’ என்று பிறரிடம் எதற்காகச் சொல்லவேண்டும்?

    ஒரு மேற்பயிற்சியின்போது, ஆசிரியை ஒருத்தி என்னிடம் கேட்டாள்: “ராமச்சந்திரனின் மனைவி சீனப் பெண்ணா?”

    குறிப்பிட்டவர், எங்களுடன் படித்தவர்.

    நான் சிரித்தேன். “நீ தவறானவளிடம் வந்து கேட்கிறாய்!”

    யார் எவளை மணந்திருந்தால் என்ன? அவருக்குப் பிடித்ததைச் செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு என்ன வந்தது?

    பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அவரிடமிருக்கும் குறைகள் அல்லது வித்தியாசங்கள் என்னென்ன என்ற ஆராய்ச்சிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதற்காக விரயம் செய்யும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறலாம் என்று ஆழமாக யோசித்தாலாவது பிரயோசனம் உண்டு.

    பார்ப்பவர்களைப் பற்றிக் கருத்து தெரிவிப்பது சாமானியர்களின் குணம். ஆனால், அவர்களைப் பற்றிப் புரிந்தும், எதுவும் கூறாது இருப்பது நற்குணம்.

    ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு அவர்களைப் பற்றிக் குறை கூறுவதும், பிறர் குற்றம் காண்பதை நம்புவதும் காரணமாகிறது.

    நாம் பிறரைக் குறைகூறுவதால் அவர்கள் எந்தப் பாதிப்பும் அடையப் போவதில்லை. மாறாக, நம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்கிறோம்.

    கதை

    கலைஞர் பட்டுசாமி அடிக்கடி பிற கலைஞர்களைக் குறை சொல்வார். கேட்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிரித்து ரசிப்பது அவருக்கு அருமருந்தாகியது. ஓயாமல் அப்படியே பேசத் தொடங்கினார்.

    ஒரு முறை நான், “எனக்கு இந்த சுருதிப் பெட்டியை இயக்கத் தெரியாது. அவர் சொல்லிக் கொடுத்தார்,” என்று வேறொருவருடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

    பட்டுசாமி அதிர்ந்து, “அப்போது, என்னைப் பற்றிக்கூடப் பேசுவீர்களா?” என்று கேட்டார்.

    “ஆமாம். நீங்க மற்றவர்களைப் பத்திப் பேசலியா?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்க, அவர் வாய் அடைத்துப் போயிற்று. (இத்தனைக்கும், நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே!)

    அவர் பிற கலைஞர்களைப் பற்றித் தாறுமாறாகப் பேசியது அவர்கள் குற்றமில்லை. தனக்கு எத்தனையோ திறமை இருந்தும், தான் அவர்களைப்போல் புகழ் பெறாமல் முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் அவருக்கு. அவர்களைப் பழித்து, தன்னையே சமாதானப்படுத்திக்கொள்கிறார்.

    அவர்களிடம் குறை இருந்தாலும்தான் என்ன!

    யாரிடம்தான் குறை இல்லை?

    நாம் பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாவிட்டால், நம்மைப் பற்றி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நம் கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம்.

    Share
  • கோந்து ஸார் (சிறுகதை)

    கோந்து ஸார் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து,  கோய்ந்து, கோந்து என்று மருவிவிட்டது.

    பெயர்தான் கோந்தே தவிர, இந்தக் கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது.

    பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும் பெற முடியவில்லை.

    அதற்கு இயற்கையிலேயே அமைந்த ஞானமும், கடினமான உழைப்பும் வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். அதனால் கோந்துமேல் ஆத்திரம்தான் எழுந்தது.

    “போன வாரம் பொண்டாட்டி சமேதரா நம்ப வீட்டுக்கு வந்து, மனுஷன் பாயசத்தையே உறிஞ்சு, உறிஞ்சுக் குடிச்சாரே! அந்த நன்றிகூட இல்லாம, எப்படி என் பாட்டைக் கிழி கிழின்னு கிழிச்சிருக்கார்!” என்று வீட்டாரிடம் சொல்லி மாய்ந்துபோவார்கள்.

    “என்னமோ, நக்கீரன் பரம்பரையில் வந்தமாதிரிதான்! கண்ணிலே விளக்கெண்ணையும், காதிலே நல்லெண்ணையும் போட்டுக்கொண்டு, `எங்கேடா தப்பு கண்டுபிடிக்கலாம்?’ என்று உட்கார்ந்திருப்பார்,” என்று பிற கலைஞர்களுடன் எவ்வளவுதான் பேசினாலும், அவர்களுடைய மனம் ஆறாது.

    அடுத்த முறை, முன்வரிசையில் பேப்பர், பேனாவுடன் அவரைப் பார்த்தால் நடுக்கம் வந்துவிடும்.

    அவரோ, எங்கோ வேடிக்கை பார்ப்பதுபோல் அலட்சியமாக உட்கார்ந்திருப்பார்.

    இதனாலேயே, அவரது கலை விமரிசனங்களை தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் சாமண்ணா, `கோந்து ஸார் எழுதினால் நம்பலாம்,’ என்று எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வார். அந்த காட்டமான படைப்புகளைப் படிப்பதற்கென்றே பலரும் அப்பத்திரிகையை வாங்கினார்களே!

    ஆனால் மனைவி பொன்னம்மாவுக்கு அவரது போக்கு கவலையைத்தான் அளித்தது.

    ஒரு முறை, “நீங்க இப்படி எல்லாரையும் கண்டபடி தாக்கி எழுதறது நன்னாவே இல்லே. மத்தவா சாபம் நம்பளை சும்மா விடாது,” என்று மெல்ல ஆரம்பித்தாள்.

    “போடி, அசடு. நான் செய்யறது சாமி காரியம். சரஸ்வதி தேவியும், ராக, ஸ்வர தேவதைகளும் இந்த ஞானசூனியங்களால் கஷ்டப்பட விடலாமோ?” என்று அவள் வாயை அடைத்தார்.

    கோந்து ஸார் அபூர்வமாக எந்தக் கலைஞரையாவது புகழ்ந்து எழுதினால், அந்தப் பாடகரின் மதிப்பும், அத்துடன் ரேட்டும், உயர்ந்துவிடும்.

    விவரம் தெரியாத ஒரு சிலர், “நாளைக்கு என் கச்சேரி நடக்கிறது, மாமா. நீங்க அவசியம் வந்து அதைப்பத்தி நாலு வார்த்தை நல்லதா எழுதணும்,” என்று வேண்டுகோள் விடுப்பார்கள்.

    “நல்லதுன்னு இப்பவே எப்படி தீர்மானிக்க முடியும்? நான் எப்படி எழுதுவேன்னு ஒங்களுக்குத் தெரியும்தானே?”

    கேட்டவர் மிரண்டுபோவார். இவரைப்போய் அழைக்க நம் புத்தி போனதே என்று நொந்துகொள்வார். பிறகு, கெஞ்சுவதுபோல், “பரவாயில்ல. சும்மா வாங்கோ!” என்பார்.

    “அப்படின்னா என்ன? எழுத வேண்டாமா?” கோந்து சிரிப்பார்.

    ஒரு முறை, `கவர்ச்சி’ என்ற பெயரில் அரைகுறையாக உடுத்துக்கொண்டு ஒரு சினிமா நடிகை `பரதநாட்டியம்’ ஆடுவதாக இருந்தது.

    பத்திரிகைகள் அந்த நிகழ்ச்சியைப்பற்றி முதலிலேயே நிறைய எழுதிக் குவிக்க, சாமண்ணா சும்மா இருப்பாரா? கோந்து ஸாரை அங்கு அனுப்பினார்.

    விமரிசனம் ஒரே வாக்கியத்துடன் ஆரம்பித்து முடிந்தது: `நாட்டில் துணிப் பஞ்சமா?’

    இன்னொரு நாட்டிய நிகழ்ச்சியைப்பற்றிய அவருடைய கருத்து: `மேடை அலங்காரத்துக்குச் செலுத்திய கவனத்தில் ஒரு சிறு பகுதியையாவது நாட்டியத்தில் காட்டியிருக்கலாம்’.

    அடுத்த முறை, அவரைப் பார்த்துவிட்டு, அந்த நாட்டியக்கலைஞர் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்.

    இப்படிப்பட்டவரிடம் எப்போது பேசினால் காரியம் ஆகும் என்று புரிந்து வைத்திருந்த பொன்னம்மா, இரவில் படுத்துப் பல நிமிடங்கள் கழிந்தபின், மெள்ள ஆரம்பித்தாள், “என் சிநேகிதி தர்மாம்பா இல்லே? அவ மாட்டுப்பொண் இந்த சனிக்கிழமை ஆடறாளாம். ஏதோ சின்ன எடத்திலேதான்னு சொன்னா. நீங்கதான் எழுதணும்னு ரொம்ப ஆசைப்படறா!” என்று.

    “அதுக்கென்ன! போய் பாத்தாப்போச்சு!” என்று `குஷி மூடில்’ ஒத்துக்கொண்டார் கணவரும்.

    “அவளே நாலு பேருக்குச் சொல்லித்தராளாம்!” என்று இழுத்தாள் பொன்னம்மா.

    “அதான் சரின்னு சொன்னேனே! காது விழலியா ஒனக்கு? மனுஷன் ஒடம்பு ஓய்ஞ்சுபோய் தூங்கறச்சே, என்ன தொணதொணன்னு!” என்று எரிந்து விழுந்தார்.

    அவள் பயந்து வாயை மூடிக்கொண்டாள்.

    நாட்டியமணி கண்ணுக்குக்கீழ் நிறைய மை தீட்டியிருந்ததில் அழகாகவே இருந்தாள்.

    “பரவாயில்லே. ஒடம்பு ஒத்தாப்போல இருக்கு. ரெண்டு குழந்தை பெத்திருக்காளாமே” என்று மனைவி காதில் மட்டும் விழும்படி முணுமுணுத்தார் கோந்து.

    பிறகு, ஏதோ சந்தேகம் எழ, “நல்ல கலரா இருக்கா இல்லே?” என்று கேட்டார்.

    “பாத்தா தெரியலியா? தர்மாம்பா ஆனமட்டும் தடுத்துப்பாத்தா. அவ பிள்ளை கேக்கலே. இந்த ஹோ ஹெங்கைக் கல்யாணம் பண்ணிண்டான்,” என்று கூடிய தகவல் தந்தாள்.

    ஹோ ஹெங் ஆட ஆரம்பித்ததும், கோந்துவின் கண்கள் அவள் கால்களில் பதிந்தன.

    `தாளகதிக்குச் சரியா ஆடமாட்டாளோ ஒருத்தி? இந்த லட்சணத்திலே, ஒண்ணும் தெரியாத மத்த குழந்தைகளுக்குச் சொல்லி வேற கொடுக்கறாளாமா?’ என்று அவர் மனம் கொதித்தது.

    தர்மாம்பாவின் புதல்வன் ஓட்டமும் நடையுமாக அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான். “நேத்திக்கு ராத்திரி அவளுக்கு நல்ல ஜூரம்,” என்றான், மன்னிப்புக் கேட்கும் தொனியில்.

    தலையை ஒருமுறை மேலும் கீழும் ஆட்டினார் கோந்து ஸார், அதை அங்கீகரிக்கும் வகையில்.

    `இவர் என்ன எழுதிவிடப்போகிறாரோ!’ என்ற பயம் அவன் குரலில் கேட்டது அவருக்குப் புரியாதா!

    “என்ன இப்படி எழுதியிருக்கேள்!” அதிசயப்பட்டுக் கேட்ட மனைவியைப் பார்த்து லேசாகச் சிரித்தார் கோந்து.

    “இது நம்ப கலை. அவ, பாவம், பாஷை தெரியாத சீனப்பொண்ணு. சின்னச் சின்ன குழந்தைகளையும் வெச்சுண்டு, இவ்வளவு தூரம் கத்துக்க எத்தனை மெனக்கெட்டிருப்பா! ஏதோ, தனக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு உண்மையா சொல்லியும் குடுக்கறா! அதைப் பாராட்ட வேண்டாமா?”

    Share
  • பழகத் தெரிய வேணும் – 58

    பழகத் தெரிய வேணும் – 58

    நிர்மலா ராகவன்

    பரோபகாரம் போதுமா?

    தலைவர்கள் தாம் சாதித்ததாக எண்ணுவதைத் தேர்தல் சமயத்தில் பட்டியலிடுவார்கள்.

    அரசியலில் மட்டுமல்ல, எந்த ஒரு சிறு குழுவின் தலைவர்களாக இருப்பவர்களும்கூட.

    வெற்றி என்பது ஒருவரது சாதனைகளின் மட்டுமல்ல. மற்றவர்களுக்காக எதுவும் செய்யாது, தமக்குத்தாமே நன்மை செய்துகொண்டிருப்பவர்களால் பிறருக்கு என்ன லாபம்?

    ஒரு சிலர், `குறுகிய காலத்தில் நான் இத்தனை பட்டங்கள் பெற்றேன், சொத்து சேர்த்தேன்,’ என்று பெருமை பேசிக்கொள்வார்கள்.

    அறிவும் பணமும் மட்டும் நிறைவைக் கொடுத்துவிடாது. (ஆனால், அது காலம்கடந்துதான் புரியும்).

    தகுந்த தருணத்தில், அல்லல்படும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவதால் கிடைக்கும் திருப்தி அதைவிடப் பெரிது. பிறர் பிரமித்து, பாராட்டாவிட்டால் என்ன!

    தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை எப்படியாவது தாம் இருக்கும் தாழ்ந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றெண்ணி, அதன்படி செயல்படுபவர்கள் கீழேயேதானே இருக்க நேரிடும். இது எத்தனை பேருக்குப் புரிகிறது?

    மாறாக, பிறரை உயர்த்த நம்மால் ஆன உதவியைச் செய்தால், நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், விளைவைக் கருத்தில்கொண்டு செயல்படுவது நலனைத் தருவதில்லை.

    கதை

    தான் மற்ற உறவினர்களைவிடச் செல்வச்செழிப்புடன் இருக்கிறோமே, அதைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டால், அந்த ஆற்றாமை ஏதாவது தீய விளைவில் கொண்டுவிடப்போகிறதே என்று பயந்தாள் மைதிலி.

    உறவினர்களைப் பார்க்கும்போதெல்லாம், கைநிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். அடிக்கடி எல்லாருக்கும் கடிதம் எழுதி, அவர்கள் நலனை விசாரிப்பாள். தான் மிகவும் நல்ல இருதயம் படைத்தவள் என்று நம்பி, அவர்கள் வாழ்த்த வேண்டுமாம்!

    மைதிலியின் குழந்தைகள் பெரியவர்களானதும், ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு இடர். விபத்தில் ஒரே மகளுக்குக் கால் ஊனமாகியது.

    `நாங்கள் பிறருக்கு அவ்வளவு செய்தோமே! எங்களுக்கு ஏன் இப்படி ஒரு துயரம்?’ என்று கதறினாள் மைதிலி.

    பிறர் நமக்கு என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துச் செய்வது பலன் தராது.

    திருமணங்களின்போது, தங்களுக்கு யார் எத்தனை மொய் எழுதியிருக்கிறார்கள் என்று கணக்கு எழுதி வைத்துக்கொண்டு, அதே தொகையை அவர்கள் வீட்டு வைபவங்களுக்குத் திருப்பி அளிப்பதும், குறைவாகக் கிடைத்தால் சண்டைபோடுவதும் எதில் சேர்த்தி?

    குழுச் சண்டைகள்

    பிறருடன் ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், பொறாமை அல்லது கோபத்தால் விளையும் சிறிய சச்சரவுகள் எழும். அப்போதுதான் புரிந்துணர்வு அவசியமாகிவிடுகிறது. பிறரது மனநிலையில் நம்மை வைத்துக்கொண்டு பார்த்தால், பிறர் செய்வது நம்மை அதிகமாகப் பாதிக்காது.

    இதனால்தான் ஒத்த மனதினருடன் ஒரு குழுவில் இணையவேண்டும் என்பது. `நமக்கு ஆதரவு அளிக்க பலர் இருக்கிறார்களே!’ என்று புரிந்துபோக, ஒவ்வொருவரும் தனிப்பலம் அடைகிறார்கள்.

    அந்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியும், ஊக்கமும் அளித்துக்கொள்வதால் அதில் இருப்பவர்கள் அனைவருமே வெற்றி அடைகிறார்கள்.

    மொத்த முழுவிற்கும் அவர்களால் நன்மை. ஏனெனில், `அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கலந்தாலோசிக்கிறார்கள்.

    “விரைந்து செல்லத் தனியாகப் போகவேண்டும். ஆனால், நீ தொலைதூரம் செல்ல வேண்டுமானால், பிறருடன் சேர்ந்து போ!’ என்று அறிவுரை கூறுகிறார் திரு.அனுபவசாலி.

    கஷ்டங்கள் விலக

    நம்மைப்பற்றியே வேண்டாத யோசனை செய்துகொண்டிருந்தாற்போல் நிலைமை மாறிவிடப்போவதில்லை

    சிலர் தாம் படும் சிறு, சிறு கஷ்டங்களைப்பற்றி உபகாரியானவரிடம் ஓயாது பேசி, அவற்றின் பாதிப்பைக் குறைக்க நினைக்கிறார்கள். இவர்களுக்குப் பிறரைப்பற்றிய சிந்தனையே கிடையாது.

    `உதவி செய்கிறோம்!’ என்ற நல்லெண்ணத்துடன் அந்த அவலங்களைச் செவிகொடுத்து கேட்க நேரிடுபவர்கள் நிலை பரிதாபம். அவர்களே அல்லல்படுவதுபோல் வருத்தம் எழும்.

    இவ்வாறு ஓயாமல் மூக்கால் அழுபவர்களை விலக்குவதே புத்திசாலித்தனம். ஏனெனில், நம் பரிதாப உணர்ச்சியால் ஆக்ககரமாக எதுவும் நடக்கப்போவதில்லை.

    அப்படி நேரத்தை வீணாக்குவதைவிட தகுதியுள்ள பிறருக்கு உதவி செய்தால் நம் கஷ்டங்கள் விலகுகிறதோ, இல்லையோ, நம் நிம்மதியாவது குலையாமல் இருக்கும்.

    `இவள் தேவலை! தன் காரியத்தைத் தானே பாத்துக்கொண்டுவிடறா!’ இப்படி ஏளனமாக எழும் ஒரு குரலைக் கேட்கும்போது குற்ற உணர்ச்சி எழுந்தால் அது தவறு.

    பிறருக்கு உதவிபுரியுமுன் முக்கியமாகச் செய்ய வேண்டுவது: நம் நலனைக் கவனித்துக்கொள்வது.

    கதை

    பிறருக்கு உதவி செய்வதே ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் வளர்க்கப்பட்டிருந்தாள் சுமித்திரா.

    தன்னைவிட வயதில் மூத்தவர்களின் கைவேலையைப் பிடுங்கிச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொண்டாள் அப்பேதை.

    ஆனால், அதற்குமுன் அவள் தன்னையும் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூற எவருக்கும் தோன்றவில்லை.

    படிப்பில் சோடைபோனாள். பிறருக்குக் கேலியாக ஆயிற்று. யாரும் தன்னை மதிக்காதது வருத்தத்தை உண்டாக்கியது. சுதந்திரமாக நடக்கவும் அவளுக்குத் தெரியவில்லை.

    எங்கு, யாரால் தவறு நிகழ்ந்தது என்று காலம் கடந்து புரியும்போது இப்படிப்பட்டவர்களுக்கு அளவிலா வருத்தம் ஏற்படும். அல்லது, பிறர்மீது பழிசுமத்தத் தோன்றும்.

    பொருளாதாரச் சுதந்திரம்

    முதுமை அடைந்தபின்னரோ, உடல்நிலை கெட்டபின்னரோ பலரும், `கடமை’ என்றெண்ணி, தம் சொத்து அனைத்தையும் பெற்ற பிள்ளைகளுக்கு அளித்துவிடுவார்கள்.

    உயிர் இருக்கும்வரை நம்மைக் காத்துக்கொள்ள பொருளாதாரச் சுதந்திரம் வேண்டாமா?

    முன்யோசனை இல்லாது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கையை எதிர்பார்ப்பது அடிமைத்தனம்.

    தமக்கே உதவி செய்துகொள்வது கேவலம், அல்லது சுயநலம் என்று எண்ணாது, முன்யோசனையுடன் நடந்தால் தன்னம்பிக்கை என்றும் குன்றாது.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 57

    பழகத் தெரிய வேணும் – 57

    நிர்மலா ராகவன்

    பொறாமை ஏன் எழுகிறது?

    புதிதாக மணமானவன் சீலன். `உன்னை யாராவது உற்றுப் பார்த்தால்கூட என்னால் தாங்க முடிவதில்லை,’ என்று அடிக்கடி மனைவியிடம் கூறுவான்.

    `நீ ரொம்ப அழகு. நான் உனக்கு ஏற்றவனே அல்ல!’

    `இவருக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு!’ என்றெண்ணி மனைவி பெருமைப்படுவாள். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான்.

    ஆனால், உண்மை அதுவல்ல.

    ஒருவர்மீது ஆதிக்கம் செலுத்தி, எப்போதும் கட்டுப்படுத்த ஓயாத புகழ்ச்சி ஒரு வழி.

    பொதுவாகவே, தனக்குக் கிடைத்தற்கரிய உறவாக ஒரு பெண்ணை மணந்தவன் அளப்பரிய அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்கிறான். அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயம்.

    பாராட்டுவதுபோல் கூறுவது பொறாமையின் வெளிப்பாடு. அவனுடைய கணக்குப்படி, அவன் தாழ்ந்திருக்கிறான். மகிழ்ச்சி அற்றுப்போக, தன்னை வருத்திக்கொண்டு, பிறரையும் நோக அடிக்கிறான்.

    ஆண் மட்டுமல்ல, தன் தகுதிக்குமீறிய ஒருவரை மணந்துவிட்டோமோ என்று குழம்பும் பெண்ணும் இத்தகைய உணர்ச்சிகளால் தன்னையே வருத்திக்கொள்ளக்கூடும்.

    பொறாமை ஏன் எழுகிறது?

    பொறாமை என்கிற குணம் எல்லா மனிதர்களிடமும் இயற்கையாக அமைந்திருப்பது.

    தன்னைவிட வேறு ஒருவர் பணம், அழகு, அந்தஸ்து இப்படி எதிலாவது சிறந்திருக்கிறாரோ என்ற சிறுமை உணர்ச்சி, அதனால் எழும் அச்சம், பொறாமையாக மாறுகிறது.

    ஒரு பெண் கணவனைவிட அதிக உயரமாக இருந்தால், `அவர்களிடையே ஒற்றுமை இருக்குமா?’ என்று அதிசயப்பட்டுப் பார்க்கிறோம்.

    பொதுவாகவே, மனைவி தன்னை எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு ஆண்களுக்கு உண்டு.

    ஆனால் ஒரு முரண். அவள் பிறரைப் பொறாமையில் ஆழ்த்தும் அளவிற்கு உயர்ந்த தகுதி உடையவளாக இருக்கவேண்டும்.

    எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மனைவி சராசரியைவிட மிக அதிகமான உயரம். அந்த நபரை விளையாட்டாகக் கேட்டேன், “நீ உன் மனைவியைவிட உயரமா?”

    “Of course!” சற்றே கோபத்துடன் வந்த அவரது பதிலின் தொனி, `இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்பதுபோல் இருந்தது.

    இல்லறத்தில் அன்புதானே முக்கியம்? அதற்கும் தகுதிக்கும் என்ன சம்பந்தம்?

    குழந்தைகளிடையே பொறாமை

    தாயின் மடியில் இன்னொரு குழந்தை தவழ்வதைக் கண்டால் ஒரு குழந்தையின் சுபாவமே மாறிப்போகும். யாரும் பார்க்காதபோது, சின்னக் குழந்தையின் கண்ணைக் குத்த வரும். தாய் திட்டுவாள். அதனால் தம்பி அல்லது தங்கையைப் பிடிக்காமல் போகும்.

    சற்று வளர்ந்ததும், அக்காள் தன்னிடம் ஏன் அன்பாக இல்லை என்று புரியாது, அவள் சொல்வதையெல்லாம் தாயிடம் போய் கோள் சொல்வாள் தங்கை.

    `இது ஏதோ குழந்தைகள் சண்டை!’ என்று தாய் அதைப் பெரிதுபடுத்தாது விடவேண்டும்.

    அல்லது, “நான் கேட்டேனா? இன்னொருவரைப்பற்றிக் கோள் சொல்லாதே!” என்று இளையவளுக்குப் புத்திகூற வேண்டும்.

    அதைவிட்டு, பெரியவளைக் கண்டித்தால், சகோதரிகளிடையே இருக்கும் உறவில் விரிசல் அதிகமாகும்.

    பிறர்தான் என்னைவிட உயர்த்தி

    சிலருக்குத் தன்னிடமிருக்கும் சீரிய தன்மைகள் முக்கியமாகத் தோன்றாது.

    பார்ப்பவர்கள், கேள்விப்படுகிறவர்கள் எல்லாரையும்விடத் தான் தாழ்ந்திருப்பதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய அமைதி பறிபோகாமல் என்ன செய்யும்?

    கதை

    பதின்ம வயதிலேயே திருமணமாகிவிட்ட அபிராமிக்குத் தான் அதிகம் படிக்கவில்லையே என்று குறை. தனக்குக் கிடைக்காதது எல்லாம் மகளுக்குக் கிடைக்கவேண்டும் என்று உறுதிபூண்டாள்.

    மகளும் தாயின் ஆதங்கம் புரிந்து, நல்ல உழைப்பால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.

    சிறுமியாக இருந்தபோது, மகள் அடைந்த சிறு, சிறு வெற்றிகளால் பூரித்த அபிராமி மாறிப்போனாள். அவள் வளர்ந்தபின்னரோ பொறாமைதான் ஏற்பட்டது.

    அபிராமியைப்போல் அவள் மகளுக்குக் கோலம் போடவோ, சமைக்கவோ தெரியாது. எந்த பண்டிகைக்கு என்ன செய்யவேண்டும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. தாயைப்போல் எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தாது, படிப்பிலேயே கவனம் செலுத்தினாள். இதெல்லாம் தாய்க்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம்.

    பிறர் அடையும் வெற்றியால் மற்றொருவர் எதையும் இழந்துவிடுவதில்லை.

    தான் அடைந்த வெற்றியைவிடப் பிறரது வெற்றியைக் கவனித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவது ஒருவர் தன்மேல் கொண்டிருக்கும் மிகையான அன்பின் வெளிப்பாடு.

    ஒப்பீடு எதற்கு?

    தமக்கு இருக்கும் திறமைகளைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்கிறவர்கள், `நான்தான் சிறந்தவன்! நான் செய்வதையெல்லாம் உன்னால் செய்ய முடியுமா?’ என்று சவால் விடுவார்கள். இதனால் எந்தவிதப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

    பொறாமைக்கு ஆளானவர்களுக்கு உள்ளுக்குள் ஏதோ கசப்பு இருக்கும். நம்மைப்பற்றி – நம்மிடமே – அவதூறாகப் பேசுவார்கள்.

    நம்மிடமுள்ள சிறப்புகளைப் பொறுக்க முடியாதவர்களே `இவனிடம் என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கலாம்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் உறவுகளையும், நட்பையும் பிரிக்க முயல்வார்கள்.

    கதை

    எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடன் வேலைபார்த்த மோகனா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். சில ஆண்டுகளிலேயே மோகம் குறைந்தது.

    கல்யாணத்துக்குப் பிறகு கணவர் தன்னைக் கவனியாது, நண்பர்களுடனேயே பொழுதைப் போக்குகிறாரே என்ற வருத்தம் மோகனாவிற்கு. அந்த உணர்வு தன்னைப்போல் இல்லாது, மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தும் பிற பெண்கள்பால் திரும்பியது.

    அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா!

    `உன் கணவரைப் பிற பெண்களுடன் பார்த்தேன்,’ என்று ஆரம்பிப்பாள்.

    அந்த மனிதர் வேலை முடிந்து, அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தன் காரில் ஏற்றிப் போயிருப்பார். அதிகம் ஆராயாது, கணவர்மேல் சந்தேகம் கொண்டு, சண்டை பிடிப்பாள் மனைவி.

    இதைத்தானே மோகனாவும் எதிர்பார்த்தாள்!

    இப்படியாக, பல குடும்பங்களில் தகராறு எழச் செய்தாள் மோகனா. அதில் ஒரு அற்பதிருப்தி.

    அவளுடைய திட்டம் புரிந்த ஆண்கள் தம் மனைவியை எச்சரிக்கை செய்யும் அளவிற்குப் போயிற்று அவளது கலகம்.

    யாரைத்தான் நம்புவது?

    வெற்றி பெற்றவர்களும், தம்மால் இயன்றதை மட்டும் செய்து திருப்தி அடைந்தவர்களும் பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை.

    இவர்களால் நமது வெற்றியை ஊக்கமாகக்கொண்டு நடக்க முடியும். நம் வீழ்ச்சி இவர்களை வருத்தம் கொள்ள வைக்கும்.

    கீழே இருப்பவர்கள்

    தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தம்மைப்போல் கீழே இறக்கிவிட நினைத்து, அதன்படி நடப்பவர்கள் கீழேயேதான் இருப்பார்கள்.

    இது புரிந்து, அவர்களது செய்கையால் நாம் மாறவும் கூடாது, மனம் வருந்துவதிலும் பயனில்லை.

    தாழ்ந்திருப்பவரைப் பார்த்து யாராவது  பொறாமை கொள்கிறார்களா?

    பிறரைப் பொறாமைப்படவைக்கும் அளவுக்கு நாம் சிறந்திருக்கிறோமே என்று பெருமைகொள்ள வேண்டியதுதான்!

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

    Share
  • பழகத் தெரிய வேணும் – 56

    பழகத் தெரிய வேணும் – 56

    நிர்மலா ராகவன்

    கற்பனையும் தசைநார்களும்

    `ஆனாலும், நீ ஒரே உணர்ச்சிக் குவியல்!’

    சிலர் இப்படியொரு கண்டனத்திற்கு ஆளாவார்கள். உணர்ச்சியே இல்லாதிருக்க மனிதர்களென்ன மரக்கட்டைகளா?

    நான்கு வயதுச் சிறுவன் தானே பேசிக்கொள்வது ஓயாது எழும் கற்பனைக்கு வடிகால். மற்றும் சில குழந்தைகள் சுவற்றிலோ, காலிலோ கிறுக்கித் தள்ளுவார்கள்.

    சில குழந்தைகள் தானே பேசிக்கொள்வார்கள்.

    இம்மாதிரியான குழந்தைகளைக் கேலியாகப் பார்ப்பவர்களுக்குத்தான் குழந்தைகளின் சுபாவம் புரியவில்லை. எழுதவோ, படிக்கவோ தெரியாத அவ்வயதில் தமக்குத் தோன்றியதைத் தெரிந்தவிதத்தில், பிடித்தவகையில்,  வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

    ஏளனம் செய்யாது வளர்க்கப்பட்டால், பெரியவர்களானதும், `இவர்களது கற்பனைக்கு எல்லையே கிடையாதோ!’ என்ற பிரமிப்பு எழும். குழந்தைகளைப்போல் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் என்றென்றும் குறையாது நிலைத்திருக்கும்.

    பேச்சைக் குறை

    நம் ஒவ்வொருவருக்கும் கற்பனைத்திறன் இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதில் திளைத்திருக்க தனிமையும், சந்தடியற்ற  அமைதியும் அவசியம்.

    தனிமை வேண்டாத எண்ணங்களுக்கு இடம்கொடுக்கிறது என்று அஞ்சி, பிறருடன் ஓயாமல் பேசுகிறவர்கள் தம் கற்பனைத்திறனைப் பயன்படுத்துவது குறைவு. எதிரில் எவரும் இல்லாவிட்டால், தொலைபேசி. அதுவும் முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி.

    ஒரு முறை, பரீட்சை முடிந்த உற்சாகத்தில் நான் பேசினேன், பேசினேன், பேசிக்கொண்டே இருந்தேன். வீட்டில் மற்றவர்களுக்குதான் தலைவலி. `என்ன இப்படிப் பேசறா!’ என்று சலித்துக்கொண்டார்கள்.

    “அவ கையிலே ஒரு புத்தகத்தைக் குடு,” என்று அம்மா ஒரு வழி சொன்னாள்.

    அதன்பின் ஏன் பேசுகிறேன்! கற்பனையில் பல உலகத்திற்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களுடன் உலா வந்தேன்.

    படிக்கும் பழக்கம்

    சிலர் பொழுதைக் கழிக்க எப்போதாவது படிப்பார்கள். சிலருக்கு தூக்கத்தை வரவழைக்க இது ஒரு உத்தி. அவ்வளவுதான்.

    இடைநிலைப் பள்ளியில் விஞ்ஞானம் போதித்த ஆசிரியை எங்களுக்கு ஏதாவது எழுத்துவேலை அளித்துவிட்டு, ஆங்கில நாவலில் ஆழ்ந்திருப்பது வழக்கம். அவ்வப்போது நாங்கள் ஆசிரியை பக்கம் பார்த்துவிட்டு, ஒருவருக்கொருவர் சமிக்ஞை செய்துகொள்வோம்.

    எப்போதும் சிடுசிடுவென்றிருக்கும் முகத்தில் படிக்கும்போது மட்டும் இதழ்கள் புன்னகையால் விரிவது ஆச்சரியத்தை அளிக்காதா?

    இவ்வாறு புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுபவர்களுக்குக் கற்பனைத்திறன் மிகுதியாக இருக்கும்.

    கதாநாயகியின் காதல் நிறைவேறவில்லையா? அதற்கு வருத்தம். பிடித்த பாத்திரத்தை எழுத்தாளர் சித்திரவதை செய்து, கொன்றே விட்டாரா? அதற்கு அழுகை. `கற்பனைதானே!’ என்று அலட்சியமாக இருந்துவிடமாட்டார்கள்.

    மற்றவரைப்பற்றிச் சொல்வானேன்! நானே அப்படித்தான்.

    ஒரு முறை, நான் தனித்திருந்தபோது உரக்கச் சிரிக்கும் ஒலியைக் கேட்டு, என் தாய், “எதுக்கு இப்படித் தானே சிரிச்சுக்கறா? பைத்தியம் பிடிச்சுடுத்தா?” என்று உள்ளேயிருந்து கேட்டது காதில் விழுந்தது.

    தொடர்ந்து, “எதையாவது படிச்சிருப்பா!” என்று என் தங்கையின் அலட்சியக்குரல்.

    “பைத்தியம்தான்!” என்றாள் அம்மா முடிவாக.

    நான் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பிறருக்காக என் இயற்கையை மாற்றிக்கொள்வானேன்!

    எழுத்தாளரின் கற்பனை

    கதை என்பது எழுத்தாளரின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழவேண்டும். அப்போதுதான் படிப்பவர்களையும் உணர்ச்சிவசப்படுத்த முடியும். கதையும் சிறப்பாக அமையும்.

    சிலருக்கு உடற்குறை இருக்கலாம். ஆனாலும், இயற்கையாக அமைந்த கற்பனைத்திறனை வளர்த்துக்கொண்டார்கள்.

    கதை

    ஆக்டேவியா பட்லர் (Octavia Butler) என்ற பெண்மணிக்கு டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்ற குறைபாடு இருந்ததால், சரியாகப் படிக்க முடியாது. எழுத்துகள் நாட்டியமாடுவதைப்போல் காட்சியளிக்கும். இதனால் உச்சரிப்பும் பிழையாக இருக்கும்.

    பள்ளியில் படிக்கும்போது, சக வயதினரின் கேலி பொறுக்காது கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் ஆக்டேவியா.

    பத்து வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்தவள், 2006-ல் இறப்பதற்குமுன் அறிவியல் புனைக்கதைகளை எழுதிக் குவித்துப் புகழ்பெற்றாள்.

    படித்தால் கற்பனை வளருமா?

    `நான் புத்தகங்களைப் படித்து, பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன்!’ என்று பெருமை ஏற்பட்டாலும், கற்பனை வேறு, அறிவு வேறு.

    உபயோகமான புத்தகங்களைப் படித்தால் அறிவு வளரலாம். ஆனால், இன்னொருவருடைய கற்பனையில் எழுந்ததைத்தானே ஏற்கிறோம்?

    இடைநிலைப்பள்ளிக்குள் நுழைந்த என் மாணவிகள், “புத்தகத்தில் படமே இல்லையே!” என்றார்கள், குறையுடன்!

    “ஏன் படிக்கப் படிக்கவில்லை?” என்று நான் கேட்டதற்குப் பதில் அது.

    தொலைக்காட்சிமுன் உட்கார்ந்து, நேரத்தைக் கழித்தால், பிறரது கற்பனையில் ஊறியவற்றை நாம் ஏற்கிறோம். ஓசை, அமைதியின்மை ஆகியவற்றால் படிக்கும் பருவத்தில் கற்பனை வரட்சி ஏற்பட்டுவிடும். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பார்க்கும் மாணவ மாணவியருக்கு புத்தகங்களில் படங்கள் போட்டிருந்தால்தான் படிப்பது புரியும். வகுப்பிலோ, கரும்பலகைதான் படம் காட்டும் திரை.

    `எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்,’ என்று அதிகம் யோசியாது தம் வயதையொத்த பிறரைத் தொடர்ந்து செல்கிறவர்கள் ஒரே இடத்தில்தான் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நாளடைவில், `ஏன் இந்த அலுப்பு!’ என்ற குழப்பம் எழாது என்ன செய்யும்?

    நிறைய யோசி

    ஒன்றைச் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன், அதைப்பற்றியே தனிமையில் யோசித்தால் அதைச் செயலாக்க முடியும்.

    நல்லது, கெட்டது ஆகிய இரண்டில் எதை அடைய வேண்டுமானாலும் இந்த ஒரே வழிதான்.

    கற்பனை என்றால், புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமில்லை. புதியவகைப் பலகாரங்களை எப்படிச் செய்வது என்று கண்டுபிடிப்போர் மட்டுமென்ன! பிறருக்குத் தோன்றாதது அவர்களுக்குப் புலப்பட்டு இருக்கிறதே!

    வாழ்க்கை ஒரே சீராக இருந்தால் சலிப்பைத் தரும். கற்பனையில் திளைக்கும்போது அலுப்பு தெரியாது.

    ஆனால், யோசித்துக்கொண்டே இருந்தாற்போல் எதையும் அடைந்துவிட முடியாது. இலக்கை எப்படி அடைவது என்று திட்டம் வகுக்க வேண்டும். மூளை நம்மையும் அறியாமல் சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.

    புதிது புதிதாக நிறைய சாதனங்களைக் கண்டுபிடிப்பவர்களின் ரகசியம் என்ன?

    பிறருக்குப் புலப்படாததை இவர்கள் ஊகித்தே அறிகிறார்கள்.

    கேலிக்கோ, பழிப்புக்கோ அஞ்சாது, தாம் ஆரம்பித்ததை முடிப்பார்கள். ஏனெனில், அச்சம் கற்பனையை அழித்துவிடும்.

    பல தோல்விகள் கிடைத்தாலும் மனம் தளரமாட்டார்கள். சில வெற்றிகளே அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப் போதுமானது.

    “கற்பனை தசைநார்களுக்கு ஒப்பானது. பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் விரிவடையும்!” என்கிறார் திரு. அனுபவசாலி.

    மனிதன் நாகரிகமாக ஆனதற்கு கற்பனைத்திறன் கொண்டவர்கள் முக்கிய காரணம். (இல்லாவிட்டால், இறைச்சியைக் குடிசையில் வைத்து, பின் அந்தக் குடிசையையே எரித்தால்தான் சுவையாக இருக்கும் என்று முன்னோர் செய்ததையே இன்றும் செய்துகொண்டிருப்பான். அடுப்பு என்று ஒன்று புழக்கத்திற்கு வந்திராது).

    கதை

    என் அத்தை ஒருவருக்குச் சிறுவயதிலிருந்தே, `பெண்குழந்தைகள் குனிந்து, இடுப்பை வளைத்து வேலை செய்யவேண்டும்!’ என்று போதிக்கப்பட்டது.

    அதற்காக, அம்மியில் அரைக்கும்போது கூடவா!

    பெரியவர்கள் சொற்படி நடந்ததன் விளைவு, தலை குனிந்தபடி இருக்கும் — அடக்கத்தால் அல்ல.

    அத்தையின் முதுகு நிரந்தரமாக வளைந்துவிட்டது. வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடிதான் எப்போதும் நடக்க முடியும்.

    நல்லவேளை, யாரோ ஒரு புண்ணியவான் மின்சாரத்தால் இயங்கும் கிரைண்டரைக் கண்டுபிடித்தார். பெண்களின் முதுகு பிழைத்தது. சமையல் செய்வதால் இடுப்பிலோ, தோளிலோ அதிக வலி கிடையாது. நேரமும் மிச்சம்.

    மாற மறுப்பவர்கள்

    வேலைப்பளுவைக் குறைக்க சாதனங்கள் வந்துவிட்டாலும், சிலர் பழைமையை விடாது பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு, வீட்டு வேலைசெய்யும் ஒரு மராத்திய மாதுவை புனேயில் பார்த்தேன். அவளுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். நின்ற நிலையில், இடுப்பை வளைத்து, தரையை மெழுகுவாள். பல வீடுகளிலும் இப்படித்தான் செய்வதாக அறிந்தேன்.

    அப்போதுதான் அவளுக்கு வேலையைத் திறம்படச் செய்த திருப்தி கிடைக்கிறதாம்.

    வயது முதிர்ந்த காலத்தில் எப்படி அவதிப்படப்போகிறாளோ என்ற பச்சாதாபம் எழுந்தது எனக்குள்.

    ஒருவளை, `மாற்றம் என்றாலே கெடுதல்!’ என்ற அச்சமாக இருக்குமோ?

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

  • பழகத் தெரிய வேணும் – 55

    பழகத் தெரிய வேணும் – 55

    நிர்மலா ராகவன்

    திட்டம் போடுங்களேன்!

    `அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்!’

    எந்தமாதிரியான கோலம் போடுவது என்று யோசியாது, எதையோ செய்துவைப்போம் என்று செய்தால் இப்படித்தான் ஆகும்.

    முன் திட்டமில்லாது, பேச்சாளரோ, பாடகரோ மேடையில் ஏறியபின் என்ன செய்வது என்று புரியாது விழித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

    உரையாற்ற அழைத்து, நிர்வாகிகள் தலைப்பை அளித்துவிட்டால், உடனடியாக என்ன பேசுவது என்று தோன்ற ஆரம்பிக்கும். குறித்துக்கொள்ளாவிட்டால் மறக்கும் அபாயம் உண்டு.

    நான் உரையாற்ற அவைக்குமுன் நின்று, சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்ப்பேன்.

    லேசான சிரிப்பு எழும்.

    `என் பேச்சால் உங்களைக் கவரப்போகிறேன். மனம்விட்டுச் சிரிக்கப்போகிறீர்கள்!’ என்று அவர்களுக்கு மானசீகமாக ஒரு செய்தியை இப்படி அனுப்புகிறேன்.

    எங்கோ படித்த இம்முறையை நான் கையாள, பத்து வினாடிகளுக்குள் அவையினர் எனக்குக் கட்டுப்படுவார்கள். சிரிப்பு தானாக எழும்.

    நான் எப்போதோ படித்தது: “தினமும் ஒரே நேரத்தில் காகிதத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பேனாவைப் பிடியுங்கள். தானே கதை எழுதமுடியும்!”

    இது எப்படி இருக்கிறது தெரியுமா? எங்கே போகவேண்டும் என்ற முன்யோசனை இல்லாது, கால்போன போக்கில் செல்வதுபோல்தான். எங்காவது கொண்டு விட்டுவிடும்.

    ஒரு கதை எழுத ஆரம்பிக்குமுன் கருவை யோசித்தாலே போதும். அதன்பின், பாத்திரங்கள். இவற்றை வைத்து ஆரம்பித்தாலே போதும். முடிவு எழுத்தாளர் கையில் இல்லை. கதை தானே நகரும் — பாத்திரங்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

    தினசரி திட்டமிடு

    கதை

    “ஒவ்வொரு நாளும் சமைக்க உனக்கு எத்தனை மணிநேரம் ஆகும்?” என்று என் சக ஆசிரியை கேட்டாள். அத்தனை வேலைப்பளுவிலும் என்னால் எப்படி எழுதவும் முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியம்.

    என் பதிலைக் கேட்டு, “என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டாமா?” என்று கேட்டாள்.

    “வாங்கும்போதே நிச்சயித்துவிடுவேன், எந்தக் கறிகாயை எப்படி ஆக்குவது என்று”.

    “அதற்கே எனக்கு ஒரு மணி ஆகும்,” என்று பெருமூச்சு விட்டாள்.

    என் பாட்டி முதல் நாள் இரவே சின்ன வெங்காயத்தின் இரு முனைகளிலும் நறுக்கி, தண்ணீரில் ஊற வைத்து விடுவார்கள். மறுநாள் சற்றே கசக்கினால் தோல் எளிதாக அகன்றுவிடும்.

    `நல்ல வெயில் அடிக்கிறது! அப்பளம் இடவேண்டும்!’ என்று குடும்பத் தலைவிகள் திட்டமிடுவார்கள்.

    பலரும் முன்யோசனை இல்லாது ஏதாவது செய்துவிட்டு, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று வருந்துவார்கள். மழைகாலத்தில் அப்பளம் இடத் திட்டம் போடுவதுபோல்தான்.

    கதை

    ஒருவர் நீண்ட காலம் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். உடல்நிலை மிகக் கெட்டு, `இப்பழக்கத்தை அறவே ஒழிக்காவிட்டால் இறந்து போவீர்கள்!’ என்று மருத்துவர்கள் எச்சரிக்க, அதை விட்டார்.

    உற்றவர்களிடமெல்லாம், “நான் குடிக்காமல் இருந்திருந்தால், ஐயாயிரம் வெள்ளியை மிச்சப்படுத்தி இருப்பேன்! ருசியான எந்த ஆகாரத்தைச் சாப்பிடவும் முடிவில்லை. மருந்தே உணவாகிவிட்டது. இப்படியாவது உயிர் வாழ வேண்டுமா?” என்று புலம்பினார்.

    காலம் கடந்தபின் புத்தி வந்து என்ன பயன்?

    செய்த தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்கலாமே!

    என் மாணவன் ஒருவன் உழைத்துப் படிப்பான். ஏனோ, பிறகு படிப்பில் மனம் போகவில்லை.

    நான் அவனை விசாரித்தபோது, “எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள், டீச்சர்,” என்று ஒப்புக்கொண்டான் — அலட்சியமாக.

    “தப்பு என்றுதான் உனக்குத் தெரிகிறதே! அவற்றை விடுவதுதானே!” என்றேன்.

    “எப்படி முடியும்? என் நண்பர்கள் எல்லாரும் விஷம்!” என்றான்.

    குறுகிய காலத்தில் எப்படி உல்லாசமாகக் கழிக்கலாம் என்று நண்பர்கள் வழிகாட்டியதை ஏற்றான். அவர்கள் தன்னைக் கெடுக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்களிடமிருந்து விலக முடியவில்லை.

    `நான் பெரிய ஆளாவேன்!’ என்று கனவு கண்டால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சிகள் வேண்டாமா?

    “ஆறு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டுமானால், நான் முதல் ஒரு மணியைக் கோடரியைத் தீட்டுவதற்காகச் செலவழிப்பேன்!” என்று முன்னுக்கு வரும் வழியைக் காட்டுகிறார் மாஜி அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்.

    பள்ளிப் பரீட்சைக்கு ஆயத்தம்

    `சிறந்த கல்விக்கூடம்’ என்று பெயரெடுத்தவைகளில் ஒவ்வொரு வாரமும் முதல் வாரத்தில் நடந்த பாடங்களில் ஒரு சிறு பரீட்சை வைப்பார்கள். அதன்பின், மாதாந்திர பரீட்சை. நீண்ட விடுமுறைக்காலத்திற்குமுன் பெரிய பரீட்சைகள். அவைகளை எதிர்கொள்ள `படிப்புக்காக’ என்று ஒரு மாத விடுப்பு அளிப்பதும் உண்டு.

    இல்லாவிட்டால், `இவ்வளவு பக்கங்களா! எப்படி படித்து முடிப்பது!’ என்று மலைப்பாக இருக்கும். ஓயாமல் படிக்க நேரிடும்போது, அவ்வப்போது வயிற்றையும் கொஞ்சம் கவனித்து, பழவகைகள் சாப்பிட்டால், உடல்சோர்வைத் தவிர்க்கலாம்.

    அதிகாலையில் அவ்வளவாக கவனம் சிதறாது. ஆகையால், கணக்கு, விஞ்ஞானம் போன்றவற்றை அப்போது படித்தால் தெளிவாக விளங்கும். இவை இரண்டிலும் உள்ள கணக்குகளை எழுதிப் பழக வேண்டும். விஞ்ஞானப்பாடத்தில் வரும் படங்களையும் வரைந்து பழகவேண்டும்.

    கால்மணி நேர ஓய்வுக்குப்பின், சரித்திரம், பூகோளம். இறுதியில் மொழி.

    முதலிலேயே, ஒவ்வொரு பாடத்திலும் எங்கு ஆரம்பித்து, எதுவரை படிக்கவேண்டும் என்றெல்லாம் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

    வருட ஆரம்பத்திலேயே மாணவர்களுக்குத் தெரியப்படுத்திவிடுவதால், அவர்கள் தயாராக இருப்பார்கள். மாநிலங்களில் சில பள்ளி மாணவர்களே முதன்மையாக வரும் ரகசியம் இதுதான்.

    இப்படியில்லாது, கடைசி நிமிடத்தில் டீ, காப்பி என்று மணிக்கொரு தடவை குடித்து, கண்விழித்துப் படித்தால் தலை கனத்துப்போகும். வயிற்றைப் புரட்டும். புத்தகம் படிப்பது என்பது வெறுக்கத்தக்க காரியம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.

    செய்ய முடியாத காரியத்தை வீம்புக்காகச் செய்வதைவிட, திறமையும் ஆர்வமும் உள்ளவற்றில் ஈடுபடுவது மேல்.

    கதை

    ரூபாவுக்குப் பதினைந்து வயதாக இருந்தபோது, அவளுடைய ஆசிரியை வருந்திக் கூறினாள்: “நீ என் பாடத்தில் எப்படித் தேர்ச்சி பெறுவாய்? என் சதவிகிதம் உன்னால் குறைந்துவிடப்போகிறது!”

    அந்த மாணவியின் கைகளில் ஐந்து வயதுக்குரிய ஆற்றல்தான் இருந்தன. படங்கள் வரைய முடியாது.

    ஆனால், அவள் மொழிகளில் கெட்டிக்காரி.

    இது புரிந்து, ரூபாவின் பெற்றோர் அவள் ஓர் அந்நிய மொழி கற்க ஏற்பாடு செய்தார்கள். அதற்காகக் கூடுதலாகச் செலவு. இருந்தாலும், அவளால் முடிந்த காரியத்தைச் செய்தபோது, மகிழ்வுடன் பெரும் வெற்றியும் கிடைத்தது.

    பயணத் திட்டம்

    “எனக்கு வெளியூர் போகவே பிடிக்காது. போகுமுன் நிறைய சாமான்களை எடுத்துக்கொள்ள வேண்டும். திரும்பியபின், அவைகளை சுத்தப்படுத்தி ஒழித்துவைக்க இன்னும் வேலை!” என்று முகம் சுளித்தாள் என் சக ஆசிரியை.

    என்னைப் பொறுத்தவரை, உல்லாசமாக ஓரிடத்திற்குப் போவதற்குமுன் அதற்கான திட்டங்கள் வகுப்பதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.

    குளிர் ஊரானால், அதற்குத் தகுந்த ஆடைகள் எடுத்துப்போக வேண்டும். வெளியூர் எங்கு போவதானாலும் தலைவலி, காய்ச்சல், வயிற்று உபாதைகள் எல்லாவற்றிற்கும் மருந்துகள். அவை தேவைப்படாது, திரும்பக் கொண்டுவந்திருக்கிறேன்.

    அதனால் என்ன! மருந்துக் கடைகளைத் தேடிப் போகும் அசௌகரியத்தை தவிர்க்கலாமே!

    புதிய இடங்களைச் சுற்றிப்பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சலும் எழாது.

    வீடு திரும்பியதும், உடல் சோர்வாக இருந்தாலும், மனம் உற்சாகமாக இருக்கும். வழக்கம்போல் செய்யும் காரியங்களில் எப்போதும் ஏற்படும் அலுப்பு மறைந்திருக்கும்.

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

    Share
  • பழகத் தெரிய வேணும் – 54

    பழகத் தெரிய வேணும் – 54

    நிர்மலா ராகவன்

    குடும்பம் எனும் பல்கலைக்கழகம்

    தற்போது, குடும்பங்களில் வன்முறை, விவாகரத்து எல்லாம் பெருகிவிட்டதாம்.

    அனுதினமும் பார்ப்பவர்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்போது நமக்கு அவர்களுடைய மதிப்பு புரிவதில்லை.

    வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதும், இப்பூவுலகத்திலிருந்து மறையும்போதும் நம்முடன் இருப்பவர்கள் குடும்பத்தினர்தான். (இடையில் வரும் நண்பர்கள் நிலைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது).

    இதனாலேயே, குடும்பத்தில் நடக்கும்போது முக்கியமாகப் படாத சில விஷயங்கள் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் நல்ல நினைவாக நிலைத்திருக்கும். உற்றார் நம்மைத் திட்டியது நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்று மனம் தெளிவடையும்.

    கதை

    “இந்தப் பெண் ஓயாமல் படிக்கிறதே! கண் கெட்டுவிடுமே!” என்று என் பாட்டி தினமும் வீட்டில் நட்டிருந்த மரத்திலிருந்து முருங்கைக்கீரையைப் பறித்து, நெய்யில் வதக்குவார்கள் – என் ஒருத்திக்கு மட்டும். மற்ற சமயங்களில் எல்லாம் ஓயாமல் திட்டுவார்கள்! என்னை முன்னுக்குக் கொண்டுவருவதாக எண்ணியதன் விளைவு!

    அப்போது, திட்டுதான் மனத்தில் பதிந்தது. (எவ்வளவு திட்டினாலும், நான் வாயே திறக்கமாட்டேன். அதுவே பாட்டிக்குப் பலமாகிப் போனதோ?)

    பல வருடங்கள் கழித்துத்தான் அந்த அன்பு, கரிசனம் புரிந்தது.

    அன்பான குடும்பத்தினருக்கு நம் ஆற்றல், பலவீனங்கள் இரண்டும் புரிய, கேலி செய்யாது, இருக்கிறபடியே நம்மை ஏற்பார்கள். அபூர்வமாக, இத்தகைய நண்பர்கள் அமைவதும் உண்டு.

    தூண்டுகோல்

    குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் பெற்றோர் அவர்கள் முன்னேறத் தூண்டுகோலாக அமைகிறார்கள்.

    கீழே விழும்போதோ, அல்லது ஏதாவது ஆபத்து வரும்போதோ, `அம்மா!’ என்றுதானே கத்துகிறோம்?

    அம்மா எவ்வளவுதான் திட்டினாலும், பள்ளிக்கூடத்தில் தன்னைத் தோழிகள் வாட்டுகிறார்கள் என்று சொல்லியபடி ஒரு சிறுமி வீடு திரும்பும்போது ஆறுதலாக நான்கு வார்த்தை கூறுவாள்.

    இப்போதெல்லாம்,` நான் என் குழந்தைகளுக்கு quality time அளிக்கிறேன்,’ என்று பெருமையாகப் பேசுகிறார்கள் பெண்கள். ஆனால், குழந்தைகளுக்குத் தேவையானபோது அருகில் இருக்கமாட்டார்கள்.

    மனம் கசந்து, நண்பர்களை நாடுவார்கள் பிள்ளைகள்.

    கதை

    நான் நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது, துருக்கி நாட்டிலிருந்து வந்திருந்த எக்ரின் என்ற பெயர்கொண்ட பெண்மணியைச் சந்தித்தேன்.

    தன் தாயுடனும், இரு சிறு, ஆண்குழந்தைகளுடனும் வசித்து வருவதாகச் சொல்லியிருந்தாள்.

    மலைப்பாங்கான நேபாள நாட்டில், எளிதில் செல்ல முடியாத இடங்களிலும் போலியோ மருந்து கிடைக்கும்படிச் செய்வதாகக் கூறினாள். “அடிக்கடி வருகிறேன்,” என்றும் தெரிவித்தாள் எக்ரின்.

    நான் சற்றும் யோசியாது, “உன் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்கிறாயோ?” என்று கேட்டேன்.

    என் மாணவ மாணவிகளில் பலர், பெற்றோரின் கண்காணிப்போ, அரவணைப்போ இல்லாததால் பதின்ம வயதில் தீய பழக்கங்களுக்கு ஆளானதைக் கண்டிருந்ததால் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

    அன்பான குடும்பத்தினால்தானே ஒருவர் நற்குணவானாகிறார்!

    `தந்தை இல்லாத வீடு’ என்று அவள் சொல்லாமலே புரிந்திருந்தது. தாயும் அடிக்கடி, `சமூக சேவை செய்கிறேன்’ என்று வெளிநாடு போனால் குழந்தைகள் யாரை நாடுவார்கள்?

    முகம் மாறாது, “ஆம். முடிந்த போதெல்லாம், அவர்களையும் என்னுடன் இங்கு அழைத்து வருவதுண்டு,” என்று பதிலளித்தாள் எக்ரின்.

    சமூக சேவைக்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தில் அக்கறை காட்டாமல் இருந்துவிடவில்லை அவள்.

    தாயின் அன்பு கிடைத்ததால் குழந்தைகளும் ஒற்றுமையாக வளர்வார்கள்.

    ஒற்றுமை இழந்த குடும்பங்கள்

    பெரிய குடும்பங்களில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பார்கள். பெற்றோர் மகன்களுக்கு அதிகமான சுதந்திரம் அளிக்கிறார்களே என்ற ஆத்திரமாக இருக்கலாம். அல்லது, அவர்களது குணாதிசயங்கள் பிடிபடாமல் இருக்கலாம்.

    வேறு சில குடும்பங்களில், `மகள் கல்யாணமாகி, புக்ககத்திற்குப் போய்விட்டால் அங்கு அவளை எப்படி நடத்துவார்களோ!’ என்ற கரிசனத்துடன், மிக அருமையாக நடத்துவார்கள். அவளுடைய சகோதரர்களுக்கு, `நாம் ஏதோ விதத்தில் மட்டம்!’ என்ற தாழ்வு மனப்பான்மை எழுப்பும்.

    `எங்கள் பெற்றோருடன் ஒரே குடும்பத்தில்தான் வளர்ந்தோம். ஆனால், எங்களிடையே இருக்கும் வேறுபாட்டால் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை!’ என்று நினைப்பவர்கள் புரிந்துகொள்ளாதது — ஒரு மரத்தின் கிளைகள் ஒன்றுபோல் இல்லாவிடினும், வேர் ஒன்றுதான்.

    கதை

    பொறுப்பில்லாத, சுயநலமியான தந்தையால் அக்குடும்பமே கஷ்டப்பட்டது. தாய் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை. அவர்களுக்காக நேரத்தையோ, அன்பையோ அவளால் அளிக்க முடியவில்லை.

    குழந்தைகளிடம் ஒற்றுமை என்பது அறவே இல்லாமல் போயிற்று. சண்டை, பொறாமை என்று வளர்ந்தார்கள்.

    அச்சூழ்நிலையில் வளர்ந்த ஐயாசாமி தனக்கு ஒரு குடும்பம் அமைந்தால், அது இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தான்.

    புரிந்துணர்வு மிக்க மனைவியைத் தேடிப்பிடித்தான். ஆனால், கடந்த காலத்தின் கசப்பை மறக்க முடியாது, தன் நிம்மதியையும், அத்துடன் மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறித்தான்.

    தான் சிறுவயதில் பெறாத அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று அவனுக்குப் புரியத்தானில்லை. ஓய்வு நேரங்களில்கூட குடும்பத்தைச் சரியாகக் கவனிக்கத் தோன்றவில்லை.

    வாலிபமும் பணமும் இருந்த காலத்தில் ஐயாசாமிக்கு அமைந்த நண்பர்கள் வயது முதிர்ந்த காலத்தில் காணாமல் போனார்கள். அப்போது குடும்பத்தின் ஆதரவு வேண்டியிருந்தது.

    தான் அவர்களைச் சரிவரக் கவனிக்காமல் போனோமே என்ற வருத்தம் மிகுந்தது. பணத்தைவிடக் குடும்பம்தான் முக்கியம் என்று உணர்ந்தான்.

    பணம்தான் எல்லாமா?

    `பணமே பிரதானம்’ என்று கழித்த காலம் போனதும்தான் அன்பு, நட்புடன் கூடிய பாதுகாப்பான உறவு போன்றவற்றின் அருமை புலனாகிறது.

    அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், உத்தியோகத்தில் மிகச் சிறக்கவேண்டும், வெற்றிகள் பல அடையவேண்டும் என்ற வெறியுடன் காலத்தைக் கழித்தவர்களுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் வருத்தம் எழும் – குடும்பத்தைச் சரிவரக் கவனியாது போனோமே என்று.

    பண்டிகைக் காலங்கள்

    பண்டிகை என்றாலே குழந்தைகளுக்கு உற்சாகம்தான்.

    மலேசியாவில், சீனப் புத்தாண்டின்போது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் தம் குழந்தைகளுடன் வெளியூர்களில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்கப் போவது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக இப்படிப் போவார்கள். மற்ற சமயங்களில் குழந்தைகளுக்குப் பரீட்சை, அல்லது வேறு ஏதாவது அசௌகரியம் நிகழ்ந்துவிடும்.

    தொற்றுநோயைத் தடுக்கவென, இவ்வருடம் பத்து கிலோமீட்டருக்குள்தான் பயணிக்க வேண்டும் என்று பல மாநிலங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதில் மிக வருந்தியவர்கள் வயது முதிர்ந்த பெற்றோர். என்னதான் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டாலும், நேரில் பார்த்து, தம் தனிமையின் ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பேரக் குழந்தைகளை அரவணைப்பதுபோல் ஆகுமா?

    எல்லாரும் எப்போதும் ஒன்றாக இருந்தால் போட்டி, மனத்தாங்கல் என்று ஏதாவது குழப்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், அவ்வப்போது மட்டுமே சந்திப்பவர்களுக்கு இடையே ஒற்றுமை விலகாதிருக்கும். தம்பதியரோ, பெரிய குடும்பத்தினரோ, எல்லாருக்கும் இந்த விதி பொருந்தும்.

    எந்தக் குடும்பமும் பிரச்சினைகள் இல்லாது இருப்பதில்லை. ஆனால், அதில் ஒற்றுமை இருந்தாலே போதும். வெளியில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் சமாளித்துவிடலாமே!

    (நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A)

    Share
  • வெற்றிக்குக் காரணம் (சிறுகதை)

    வெற்றிக்குக் காரணம் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    ராமனுக்கு மனைவியிடம் எரிச்சல்தான் எழுந்தது.

    அப்படி என்ன உலகில் இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள்? அதற்காக ஓயாமல் அழுதுகொண்டிருந்தால்?

    முதல் குழந்தை என்று அவனும் எத்தனையோ கனவுகளுடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தெரியவில்லையே, அது குறையுடன் பிறக்கும், இருக்கும் நிம்மதியையும் பறித்துவிடும் என்று!

    `வீணா அதைக் கொஞ்சிக்கிட்டு இருக்காதே. கீழேயே போட்டுவை. அது அல்பாயுசில போனதும் ரொம்ப வேதனையாப் போயிடும்!’ என்னமோ, அதன் இறப்புக்கு நாள் குறித்தவர்கள் போல் பலரும் அறிவுரை கூறியதை புனிதா காதில் வாங்கவேயில்லை.

    தலையிலிருந்து ஒரு மயிரிழை உதிர்ந்தால்கூட சற்றே வருந்தும் பெண்ணாயிற்றே! தன் உடலில் ஒரு பாகமாக இருந்த குழந்தையின் இழப்பை நினைத்தும் பார்க்கமுடியுமா?

    குழந்தையின் உடலும், கண்களும் மஞ்சள் நிறமாக மாறியபோதுதான் முதலில் சந்தேகம் எழுந்தது அவளுக்கு.

    சிரிப்பும் களிப்புமாக இருக்கவேண்டிய குழந்தை! இப்படி சுரத்தில்லாமல் இருக்கிறதே! அடிக்கடி வாந்தி வேறு.

    `வயிற்றுப்பகுதியில் இருக்கும் பெரிய உறுப்பு. கழிவுகளை அகற்றி, கொழுப்பைச் சேர்த்துவைப்பது என்று பல உபயோகங்கள் கொண்ட அவயவம்,’ என்றெல்லாம் மருத்துவர் விளக்கிய கல்லீரல் பழுதாகி இருந்தது.

    “குழந்தைக்கு மாற்று லிவர் பொருத்தவேண்டும். இல்லாவிட்டால்..,” என்று அவர் முகத்தில் பரிவைத் தேக்கி வைத்துக்கொண்டு கூறியபோது, தான் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் இருக்குமோ என்று எழுந்த சந்தேகத்தை உதறினான் ராமன். அதை மனைவியின்மேல் ஆத்திரமாக மாற்றிக்கொள்வது எளிதாக இருந்தது.

    `உருப்படியா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடத் துப்பில்லே!’ என்று சாடினான். “சனியன் செத்துத் தொலையட்டும். ஒரே அழுகையோட போயிடும்!”

    “அப்படியெல்லாம் சொல்லாதீங்க,” என்று கதறினாள் பெற்றவள். “நான் என்னோடதைக் குடுக்கறேன்”.

    “ஹூம்!” உறுமிவிட்டு அப்பால் நகர்ந்தான் ராமன்.

    இவளோட கல்லீரலைத் தானம் கொடுக்கப்போகிறாளாம்! கருவிலிருக்கும் இன்னொரு உயிரும் குறையுடன் வெளியாகவா?

    டாக்டர் தான், `இந்த நிலையில் முடியாது!’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாரே! அது தெரிந்தும் நாடகமாடுகிறாள்!

    `நீ ஆம்பளை. ஒழைச்சுக் கொட்டணும். ஒன் ஒடம்பிலே எதையாவது அறுத்தா, அப்புறம் ஒன்னால வேலை செய்ய முடியுமா?’ என்ற தந்தையின் விவாதம் நியாயமாகப்பட்டது அவனுடைய குழம்பிய மனதிற்கு.

    அம்மாவும் ஒத்துப் பாடினாள்: “ஒரு பொட்டைக்கழுதை போனா என்னடா? இன்னும் அஞ்சு மாசத்திலே இன்னொண்ணுதான் பிறக்கப்போகுதே!” வசதியற்ற குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து, அனுபவித்த வேதனைகள் அவளை அப்படிப் பேச வைத்தது.

    தாத்தா பாட்டியின் நம்பிக்கைக்குச் சவால் விடுவதுபோல், ஒரு வயதுக்குமேல் அந்தக் குழந்தை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தது.

    புனிதாவின் உறுப்பில் ஒரு பகுதி குழந்தை பூரணிக்குப் பொருத்தப்பட்டது.

    நான்கே மாதங்களில் இருவரது கல்லீரலும் முழுமையாக வளர்ந்தது. அவளும் வளர்ந்தாள்.

    “நீ பிழைக்கவே மாட்டேன்னு நினைச்சோம் டீ,” என்று கிழவர் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார். “நான், ஒங்க பாட்டி, எல்லாரும், `இந்தப் பொட்டைக்குட்டி போனா என்னா?’ ன்னுகூட சொல்லியிருக்கோம். ஒங்கம்மா கேக்கலியே!’

    “அப்பா?” மெல்லிய குரலில் கேட்டாள்.

    “அவனும்தான்! ஒடம்பில எதையாவது அறுத்துக் குடுத்தா, அப்புறம் எப்படி வேலை செஞ்சு சம்பாதிக்க முடியும்னு யோசிச்சான். நியாயம்தானே!” பழியை அவன்மேலேயே திருப்பினார்.

    பூரணிக்கு வருத்தமாக இருந்தது. யாருக்குமே தான் முக்கியமாகப் படவில்லை!

    தனக்குள் எழுந்த ஆத்திரத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியே தள்ளினாள்.

    “நம் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். இதற்கு யாரெல்லாம் காரணம்?” என்று கேட்டார் ஒரு பேட்டியாளர்.

    “என் கல்லீரலும் அம்மாவும்!” என்று உறுதியாகப் பதிலளித்தாள் பூரணி.

    `என்னை `வேண்டாம்’னு சொன்ன அப்பாவுக்கு நன்றியும், பாராட்டும் ஒரு கேடா!’ என்ற வீம்பு எழுந்தது அவளுக்குள்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 53

    பழகத் தெரிய வேணும் – 53

    நிர்மலா ராகவன்

    உன்னையே நீ மதிக்கணும்

    `… இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்..,’ என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள் தினசரியில்.

    அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?)

    இம்மாதிரியான அறிக்கைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர் தினசரியில் வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக வெளியிடுபவர்களில் எத்தனைபேர் இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக நடத்தினார்கள்?

    கதை

    கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அந்த மனிதர் மனைவியை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம்.

    தாய் அனுபவித்த துன்பங்கள் தெரிந்திருந்தும், அவளது பெண்கள் இருவருக்கும் இரக்கம் கிடையாது.

    “நீங்க என்னோட வந்து இருங்கோம்மா,” என்றாள் சின்னவள், உபசாரமாக. “சும்மா இருக்க வேண்டாம். ஒங்க பென்ஷன் பணத்தைக் குடுத்துட்டு இருங்கோ!”

    சில வருடங்கள் கழித்து, அந்த தாய் தனியாகவே வாழ்ந்து இறந்தபின், அப்பெண் கதறினாளே, பார்க்கவேண்டும்!

    பெரும்பாலோருக்கு எதையும் இழந்தபின்தான் ஒரு நபர் அல்லது பொருளின் அருமை புரிகிறது.

    கதை

    “என் சட்டை! நானே மச்சு வெச்சுக்கறேன்,” என்று அடம்பிடிப்பான் என் மூன்று வயதான மகன்.

    ஒரு கையால் சட்டையின் நுனியைப் பிடித்து, இன்னொன்றால் அதை விரல்களில் சுற்றுவான். இன்னும் கசங்கிவிடும். அவனைப் பொறுத்தவரை, அவன் திறமையுடன் செய்திருக்கிறான்.

    அண்மையில், இதை நான் சொல்லிச் சிரித்தபோது, யாரோ கேட்டார்கள், “அப்புறம் நீ அதைச் சரியாக மடித்து வைத்துவிடுவியா?”

    நான் அதிர்ந்து, “ஐயோ! அப்படிச் செய்வது, `நீ செய்தது தவறு!’ என்று அவனைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் இருக்குமே!” என்றேன்.

    சும்மாடுபோல் சுருண்டு, கசங்கியிருந்த சட்டையைப் பார்க்கும்போதெல்லாம், `அப்போதே அவனுடைய அருமை புரிந்திருந்ததே!’ என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் இறந்தபின் குற்ற உணர்வு ஏற்படவில்லை.

    சுயமதிப்பு ஏற்பட

    குழந்தைகளைச் சுதந்திரமாக எதுவும் செய்யவிடாது, தம்மையே நாடிக்கொண்டிருந்தால் அந்த பிணைப்பையே அன்பு என்று நினைக்கிறார்கள் பலர்.

    எந்த வயதானாலும் பிறரது உதவியை எதிர்பார்க்க நேர்ந்தால் ஒருவரால் எப்படித் தன்னையே மதிக்கத் தோன்றும்? தன்னையே மதிப்பவன்தான் மற்றவர்களையும் மதிக்கமுடியும். தன்னம்பிக்கை என்பது, `என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது.

    தன் வாணாளில் பிறருக்கு உபயோகமாக எதையாவது செய்தவரைத்தான் அவர் மறைந்தபின்னும் கொண்டாடுகிறோம்.

    பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அண்மையில், அவருக்குப் பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. பாட்டின் பொருளை மனதில் கொண்டு, அதற்கேற்ப குரலில் உருக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்ததில் எத்தனைபேரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்!

    பிறரை மகிழ்விக்க தம்மையே வருத்திக்கொள்கிறவர்கள்

    இத்தகையவர்கள், `எனக்கு எல்லாரையும் பிடிக்கும். என்னையும் எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கு எத்தனை எதிரிகள், பார்!’ என்று தன்னம்பிக்கையோடு நடப்பவர்களைப் பழிப்பார்கள்.

    `நான் இப்படி இருந்தால்தான் பிறர் மதிக்கிறார்கள்!’ என்று ஒருவர் தன் குணத்தையும், போக்கையும் மாற்றிக்கொண்டே இருந்தால், மற்றவர்களை விடுங்கள், அப்படி நினைப்பவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்காது.

    தாம் சொல்வதற்கு மதிப்புக் கொடுக்காது அலட்சியம் செய்பவரை `கர்வி,’ `நட்புடன் பழகத் தெரியவில்லை’ என்று பலவாறாகப் பழிப்பார்கள். பிறர் மதிக்காததால் ஒருவரின் மதிப்பு குறைந்துவிடுமா?

    சில சமயம், நம் மதிப்பு, நம்மால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது நமக்கே தெரிவதில்லை. அதை உணர்த்த நல்ல உறவினரோ, நண்பரோ வேண்டும்.

    கதை

    புதிதாக காரோட்டும் உரிமம் பெற்றிருந்தாள் அப்பெண். அதன்பின், எங்கு காரோட்டிப் போனாலும் அவள் பக்கத்தில் யாராவது உட்கார்ந்திருக்க வேண்டும். தனியாகப் போனால் தவறு நேர்ந்துவிடும் என்ற பயம்.

    ஒரு மாதம் இப்படிக் கழிந்தது.

    அன்று அவசரமாக ஓரிடத்திற்குப் போக வேண்டியிருந்தது. வீட்டில் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

    “என்னுடன் வாருங்கள், தாத்தா,” என்று கெஞ்சினாள்.

    அவர் மென்மையாக, “நீ நடக்கப் பழகியபோது, விழுந்திருக்கிறாயோ?” என்று கேட்டார்.

    `இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்று தோன்ற, பேத்தி சிரித்தாள். “யார்தான் விழாமல் நடை பழகியிருக்கிறார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

    அவர் விடவில்லை. “விழுந்துவிடுவோமோ என்று நடக்கப் பயந்து, எழுந்திருக்காமலேயே இருந்துவிட்டாயா?”

    அவளுக்குப் புரிந்தது.

    “நன்றாக ஓட்டிக் காட்டியதால்தானே உரிமம் கிடைத்திருக்கிறது! சிலர் தொலைபேசியில் ஒரு கண்ணை வைத்தபடியே ஓட்டுகிறார்கள். நீதான் பார்த்து ஓட்டவேண்டும்,” என்று அறிவுரை கூறினார்.

    தெளிந்த மனத்துடன் அவள் போனாள். தனியாகவே.

    பொருட்களை மதிப்பவர்கள்

    நாம் நம்மேல், அல்லது பொருட்களின்மேல் அளவுகடந்த மதிப்பு வைக்கும்போது, நம் மதிப்பைக் குறைவாக எடைபோட்டு விடுகிறோம்.

    கதை

    ஒரு பார்ட்டி. வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்திருந்தார்கள்.

    மலேசிய அதிகாரி ஒருவரின் (வெளிநாட்டு) மனைவியான ஜாக்குலின், “என் காப்பைப் (bracelet) பார்த்தீர்களா? இன்றுதான் வாங்கினேன்!” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் உயர்ந்த விலையையும் சேர்த்துக் கூறினாள்.

    யாரும் கண்டுகொள்ளவில்லை.

    `இவளுடைய மதிப்பு ஒரு ஆபரணத்திலா இருக்கிறது!’ என்று அலட்சியம் செய்தார்கள். அவளுடன் அதிகம் பேசவுமில்லை.

    அடுத்த முறை, நான் அதேபோன்ற ஒரு விருந்துபசாரத்திற்குச் செல்ல நேரிட்டபோது, என்னிடமிருந்த தங்க நகைகளைப் புறக்கணித்தேன். இருபத்தைந்து காசு கொடுத்து வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வளையலைத் தேர்ந்தெடுத்தேன்.

    “என்னம்மா!” என்று மகள் அதிர்ந்தபோது, “நான் ஜாக்குலினைப்போல் நடிக்கப்போவதில்லை,” என்றேன்.

    தலையை நிமிர்த்தி, பிறருடன் எளிதாகப் பழக சுயமதிப்பு போதுமே!

    பல விருந்தினர்கள் விருப்பத்துடன் என்னுடன் உரையாடினார்கள். யாரும் என் எளிய வளையலைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

    ஒருவர் தன்னையே மதித்து நடந்தால், பிறர் அவரிடம் உண்மையுடன் பழகுவார்கள். நடிக்க மாட்டார்கள்.

    தம்மைப்பற்றிக் குறைவாக மதிப்பிடுவர்கள்:

    மனோபலம் குன்றியவர்களாக இருப்பார்கள்.

    உடல் ஆரோக்கியத்தை பெரிதாகப் பாராட்டுவது கிடையாது. அதனால், எளிதில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள்.

    காதலில் தோல்வி, நீண்டகாலம் ஒரு உறவில் நிலைக்க முடியவில்லை என்று, எடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்திக்க நேரிடலாம்.

    பிறரை ஓயாமல் குறைகூறுவது இவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்போதாவது தாம் உயர்ந்திருப்பதாக நினைக்கலாமே!

    இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது?

    பெற்றோரோ, ஆசிரியர்களோ சிறு வயதிலேயே ஒருவர் தன் குறைகளையோ, பிறருடையதையோ பாராட்டாதிருக்கப் பழக்கவேண்டும்.

    கதை

    பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு நான் போதித்தபோது, “உங்களில் ஒருவர் ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாது என்றாலோ, தவறாகப் பதிலளித்தாலோ கேலி, சிரிப்பெல்லாம் கூடாது” என்று கண்டித்தேன்.

    சில மாதங்களுக்குப்பின், என் சக ஆசிரியை, “உங்கள் வகுப்பில் மட்டும் ஒரு மாணவனைப் புகழ்ந்தால், மற்றவர்கள் எல்லாரும் தாமே பாராட்டப்பட்டதுபோல் பூரித்துப்போகிறார்களே!” என்று அதிசயப்பட்டாள்.

    தவறு செய்வதால் ஒருவரின் மதிப்பு குன்றிவிடுவதில்லை என்று அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் அவர்களால் பிறரை ஏற்க முடிந்தது. அவர்களது வெற்றியிலும் பங்குகொள்ள முடிந்தது.

    (நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 52

    பழகத் தெரிய வேணும் – 52

    நிர்மலா ராகவன்

    இந்த மனிதர்களின் மனம்!

    “வீண் வேலை! இவ்வளவு சிறிய மல்லிகைக் கிளையை உடைத்துவந்து நடுகிறாயே! எங்காவது செடி முளைக்குமா?” அவநம்பிக்கை தெரிவித்தாள் தாய்.

    ஏன் செய்கிறோம் என்றே புரியாது எதையாவது ஆரம்பித்துவிட்டு, சக்தி, நேரம் இரண்டையும் வீண்டிக்கும் பலரைக் கண்டிருப்பவள் அவள்.

    சீத்தலைச் சாத்தனாரைப்போல், செய்த தவற்றுக்காகத் தன்னையே தண்டித்துக் கொண்டுவிடுவாளோ மகள் என்ற அனுசரணையே அத்தாயை அவநம்பிக்கை தெரிவிக்க வைத்திருக்கும்.

    “முளைக்கும்,” என்றாள் கீதா, உறுதியாக.

    அவள் நினைத்தபடியே ஆயிற்று.

    ஒருக்கால் அந்தச் சிறிய கிளை பெரிய செடியாக வளர்ந்திருக்காவிட்டாலும், கீதா மனம் தளர்ந்திருக்கமாட்டாள். அடுத்தமுறை, வேறு விதமாகச் செய்துபார்ப்பாள்.

    நல்லதுதான் நடக்கும், வெற்றி கிட்டும் என்ற குணம் முன்னுக்கு வருபவர்களுக்கே உரித்தானது.

    நானா! தவறு செய்தேனா!

    தான் செய்தது தவறுதான் என்று புரிந்தும், `அது சரிதான்!’ என்று வாதாடுபவர்களுக்கு, `பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையே!’ என்ற ஏக்கம் இருக்கும்.

    செய்வது சிறிய காரியமாக இருந்தாலும் அதைச் செவ்வனே செய்து முடித்தால் போதாதா?

    `அதிகம் படிக்க முடியவில்லை, பணக்காரனாக ஆக முடியவில்லை’ என்று தம் விதியை எண்ணி நொந்து, தாம் பின்தங்கிவிட்டதற்குச் சந்தர்ப்ப சூழ்நிலையைக் குற்றம் சாட்டுபவர்கள் அநேகர்.

    ஒருவருக்கு திறமை, ஊக்கம் இரண்டும் இருக்கலாம். இருப்பினும், எடுத்துக்கொண்ட காரியத்தைப்பற்றிய மனப்பான்மையே அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதை நிர்ணயிக்கிறது.

    `எனக்குத் திறமையும், உழைப்பும், எல்லாவற்றிற்கும் மேலாக, `நான் முன்னுக்கு வருவேன்’ என்கிற திடமான நம்பிக்கையும் இருக்கிறதே!’ என்று சிந்தித்தால், எவரும் முன்னுக்கு வரலாம்.

    இருவருக்கு ஒரேமாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் அதை எதிர்கொள்வது வெவ்வேறாக அமையக்கூடும். அதனால் அவர்கள் வாழ்க்கையின் திசையே மாறுபட்டுவிடும்.

    கதை

    சகோதரிகள் பாமா, ருக்மணி இருவருமே உறவினர் ஒருவரால் பாலியல் வதைக்கு ஆளானார்கள். வெவ்வேறு தருணங்களில்.

    அந்தச் சம்பவம் தீராத வடுவை ஏற்படுத்திவிட்டது சிறியவள் ருக்மணிக்குள். எந்த ஆணையுமே நம்பக்கூடாது, எல்லாருமே காமுகர்கள் என்று தீர்மானித்தாள். எத்தனை வயதாகியும், அவளது முடிவு மாறவேயில்லை.

    திருமணமான பின்னரும், கணவர் பிற பெண்களுடன் பேசிப் பழகினால், அச்சம் ஏற்பட்டது. அவரும் ஆண்தானே! மயங்கிவிடுவாரே!

    ருக்மணியைப்போன்றுதான் பலரும் நடக்கிறார்கள். வாழ்வில் நடப்பது பத்து சதவிகிதமாக இருந்தால், அதை நினைத்து அஞ்சி, வருந்தி, இன்னும் பல எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகித் தவிப்பது மீதி.

    பாமாவோ, `அது ஒரு கெட்ட நிகழ்வு’ என்று ஒதுக்கினாள். மறக்க முடியாததாக இருந்தாலும், பிறரிடம் எப்படி ஜாக்கிரதையாகப் பழகவேண்டும் என்று அதிலிருந்து பாடம் கற்றாள். உத்தியோகம் வகிக்கையில், ஆண்களுடன் பழகவேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்தபோது, அவர்கள் குணாதிசயங்கள் பிடிபட்டன. எல்லாருமே தீயவர்கள் அல்லர் என்று தெளிந்தாள்.

    `ஆண்களுடன் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாயே!’ என்று தங்கை முகம் சுளித்தாள்.

    பாமா தன் பங்கு நியாயத்தை எடுத்துச்சொல்ல முயலவில்லை.

    குழந்தைகள் போலிருப்பது

    பிறர் நம்மிடம் குறை கண்டுபிடித்தால், உடனே அவரிடம் என்ன தவறு என்று கூறித் தாக்குவது சிறுபிள்ளைத்தனம்.

    இருப்பினும், குழந்தைகளிடமிருந்து நாம் கற்கவேண்டியது நிறையவே இருக்கிறது. நாம் வளர, வளர, சிறுவயதிலிருந்த பல நற்குணங்களை விட்டுவிட்டோம்.

    முக்கியமாக, சிறு குழந்தைகள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுக் கொள்வதில்லை. விலை உயர்ந்ததாக இருக்கிறதோ, இல்லையோ, எந்தப் பொருளையும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.

    கத்தரிக்காய் காம்பில் நூல் கட்டி, `வண்டி!’ என்று இழுத்துக்கொண்டு போவதும், பூசணி விதையை ஒருவர்மேல் ஒருவர் பிதுக்குவதும் குதூகலமான விளையாட்டுகள் அவர்களுக்கு!

    “எதுவும் இல்லாதபோது பொறுமை, எல்லாம் இருக்கையிலும் நிதானமாக நடப்பது – இவைகளால்தான் ஒருவர் உருவாகிறார்,” என்கிறார் BERNARD SHAW.

    எந்தப் புதிய விஷயத்திலும் ஆர்வம் காட்டுவது குழந்தைகளின் குணம்.

    அதேபோல், எத்தனை வயதானாலும், நம்மைச்சுற்றி நடப்பதில் ஆர்வம் காட்டுவது உற்சாகத்தை நிலைக்க வைத்திருக்கும் வழி.

    `குழந்தைபோல் இருக்கிறாள்!’ என்று சிலர் பழிக்கப்படுவார்கள். வயதுக்குரிய திறமையும், ஆற்றலும் இருந்தால், எதிலும் காட்டும் ஆர்வத்தையும் குறையாமல் பார்த்துக்கொண்டால் என்ன தவறு? அப்போதுதானே மகிழ்ச்சி குன்றாமல் இருக்கலாம்? நம்மைச் சுற்றி எப்போதும் சிரிப்பு நிலைத்திருக்கும். இல்லாவிட்டால், ஒவ்வொரு நாளும் செய்த காரியத்தையே செய்ய நேரிடும்போது வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.

    விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொள்ளுங்கள். `சவால்!’ என்று, சிறுகச் சிறுகத் தம் திறனை உயர்த்திக்கொண்டே போவார்கள். தற்காப்புக் கலைகளில், வெள்ளை இடுப்புப்பட்டியில் ஆரம்பித்து, மஞ்சள், சிவப்பு என்று படிப்படியாக உயர வழிசெய்திருக்கிறார்கள். கற்றதையே மீண்டும் மீண்டும் கற்றால், யாருக்குத்தான் அலுப்பு ஏற்படாது!

    சொல்லிக்கொடு, திட்டாதே!

    இப்போதெல்லாம், பேனாவால் எழுதுமுன் அதில் மை இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வேன்.

    சிறுவயதில், இப்படித் திட்டமிடத் தோன்றாததால் ஓர் ஆசிரியையிடம் நிறையத் திட்டு வாங்கினேன்.

    இலக்கை நோக்கிப் பயணிக்கையில், அதை எப்படி அணுகுவது என்ற திட்டம் வகுக்க வேண்டும் என்பது அப்போது புரியவில்லை.

    அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எனக்குப் பத்து வயதாக இருந்தபோது, பேனா இருந்தால், அதில் மை இருக்காது. இல்லையேல், கீழே போட்டதில் அதன் கூர்முனை உடைந்திருக்கும்.

    `ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை!’ என்று வாய்க்கு வாய் திட்டாது, என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். நொந்த மனதுடன், `ஏன் இப்படி?’ என்று யோசித்து, நானே கற்கும்படி ஆயிற்று.

    இளம்வயதினரை ஓயாது திட்டினால்தான் முன்னேறச் செய்ய முடியும் என்று (தவறாக) நம்பிய காலம் அது.

    அதற்கடுத்த வருடம், பள்ளி திறந்து ஒரு வாரத்துக்குள், `இந்தப் பிள்ளை இப்போ ரொம்ப சமர்த்தாகிட்டா!’ என்று என் ஒருத்தியைமட்டும் பாராட்டினார் அந்த ஆசிரியை.

    அன்று கற்ற பாடத்தால், இன்றுவரை, கறிகாயை நறுக்குமுன் கத்தியைத் தீட்டிக்கொள்வதும் பழக்கமாகிவிட்டது.

    என்னதான் நினைப்பார், நினைக்கட்டுமே!

    ஒரு கோயில் சன்னிதானத்தில் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார் — இசைக்கும் அப்பாடகருக்கும் வெகு தூரம் என்ற அயர்ச்சி எழுப்பும் அளவுக்கு.

    பக்தியுடன் பாடினால் அவருக்கு நிம்மதி, மகிழ்ச்சி. `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. பிறருக்காகத் தன் உற்சாகத்தை விட்டுக்கொடுக்க அவர் தயாரில்லை. அவருடையது சரியான அணுகுமுறை.

    மூளை செய்யும் வேலை

    நம்மையும் அறியாது, சுற்றி இருப்பவர்களைப்போல் நடக்க முனைகிறோம். இது நம் மூளையிலுள்ள நியூரான் செய்யும் வேலை.

    இது புரிந்து, ஆக்ககரமாகச் சிந்திப்பவர்களை நண்பர்களாக ஏற்கவேண்டும். ஆனால், இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏனெனில், பலரும் எப்போதும், எதைப்பற்றியாவது, குற்றமாகப் பேசுவதால், நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுகிறோம்.

    இது புரிந்து, அவர்களுடன் சேர விரும்பாது, தனியாக இருந்தால், `பழகத் தெரியவில்லை.  அசடு! முட்டாள்!’ என்று பிறர் தூற்றக்கூடும்.

    தம்மைப்போல் இல்லாதவர்களையெல்லாம் பழிப்பது பலகீனமானவர்களின் வழக்கம் என்று விடவேண்டியதுதான்.

    “முட்டாள்கள் நிறைந்த இடத்தில் மௌனமே சிறந்தது”.

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

    Share
  • முகநூலும் முத்துலட்சுமியும் (சிறுகதை)

    முகநூலும் முத்துலட்சுமியும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா.

    பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய விழா.

    இதெல்லாம் முன்னேபின்னே பார்த்தறியாத `நண்பர்’களுக்காக.

    பிடிக்கிறதோ, இல்லையோ, எல்லாவற்றையும் அவர்களும் பாராட்டிவைப்பார்கள். அப்போதுதானே, நாளைக்கு அவர்கள் எதையாவது வெளியிடும்போது பிறர் புகழ்வார்கள்!

    பேசத் தெரிந்தவுடன் பாடும் குழந்தையின் மழலைப் பாட்டைக் கேட்டதும், `இவ்வளவு சிறு வயதிலேயே ஒரேயடியாகக் கொண்டாடினால், உலகமே தனக்காகத்தான் இயங்குகிறது என்பதுபோல் கர்வப்பட்டு, யாரையும் மதிக்காமல் போய்விடாதா!’ என்று அவள் யோசனை போயிற்று.

    சலிப்புதான் வந்தது அமிர்தாவுக்கு. `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இவ்வளவு நேரம் கிடைக்கிறது?’ என்று, பொறாமையுடன் கலந்த ஆச்சரியம் எழ, கணினியில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்குத் திரும்ப ஆயத்தம் செய்தபோதுதான் அந்த கடிதம் கண்ணில் பட்டது.

    `ஒரு வேண்டுகோள்,’ என்று ஆரம்பித்திருந்தாள் முத்துலட்சுமி என்று யாரோ ஒருத்தி.

    ஏதாவது பண உதவியோ? இந்தக் கஷ்டகாலத்தில்தான் பலருக்கும் வேலை போய்விட்டதே!

    சுவாரசியம் எழ, அமிர்தா படித்தாள்.

    நூற்றுக்கு மேற்பட்டவர்கள், `உங்கள் நண்பராக விரும்புகிறேன்,’ என்று எனக்கு எழுதுகிறீர்கள் — அனுதினமும்.

    அந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? அழகான வார்த்தையைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

    அத்துடன் முடித்திருந்தாள்.

    அப்படி என்ன நடந்திருக்கும் அந்த – அவள் பெயர் என்ன? –ம்.. முத்துலட்சுமிக்கு?

    அவளை நேரில் பார்த்துக் கேட்டால் தனக்கு நல்லதொரு சமாசாரம் கிடைக்குமே என்ற ஆசை எழுந்தது அமிர்தாவுக்கு.

    அவளுடைய தொலைபேசி எண் கிடைத்தது. தன் ஃப்ரெண்டா அவள்?

    எப்போதோ, `முப்பது வயதுக்கு மேலிருக்காது’ என்று, அவளுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தானும் அவளுடைய நட்பை நாடியிருக்கிறோம்! வேடிக்கைதான்!

    முத்துலட்சுமியை அழைத்தாள். பதிலுக்குப் பேசியவள் குரல் கரகரப்பாக இருந்தது.

    தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் அமிர்தா.

    சிறிது நேரம் பேசிவிட்டு, “இதே ஊரிலதானே இருக்கே? நேரிலேயே வாயேன்!” என்று முத்துலட்சுமி அழைத்தபோது, ஒருமாதிரி இருந்தது அமிர்தாவுக்கு. எவ்வளவு மரியாதைக்குறைவாகப் பேசுகிறாள்!

    மரியாதையெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இது சமயமில்லை என்று மறுநாளே அவளைச் சந்திக்கப் போனாள்.

    “வாம்மா. அமிர்தாதானே? டி.வியில ஒன்னை நிறையப் பாத்திருக்கேன்,” என்று வரவேற்ற மாதுவுக்குக் குறைந்தபட்சம் எழுபது வயதாவது இருக்கும். கூடவே, “நான்தான் முத்துலட்சுமி,” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

    அமிர்தா அடைந்த அதிர்ச்சி முகத்தில் தெரிய, முத்துலட்சுமி மாமி சிரித்தாள்.

    “நீ என்னை எதிர்பாக்கலே, இல்லே?” என்றவள், “என்ன செய்யறது? பொண்கள் இளவட்டமா இருந்தாத்தானே மத்தவா கண்ணிலே படறது!” என்று தன் பொய்யை ஒத்துக்கொண்டாள்.

    “இங்க, வீட்டில, நாங்க ரெண்டே பேர். தினம் வெளியே போக முடியறதா! பொழுது போகணுமே! அதான், ஃபேஸ்புக்கில சேர்ந்தா, நாலு பேரைத் தெரிஞ்சுக்கலாம்னு தோணித்து”. பேசுவதற்கு யாரும் கிடைக்காமல் இருந்தவளுக்கு நேரிலேயே, அதுவும் பிரபலமான ஒரு பெண்ணைப் பார்த்ததும் குஷியாகிவிட்டது. படபடவென்று கொட்டினாள்.

    அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அது ஏன் அப்படி எழுதியிருக்கீங்க? யாராச்சும் தொந்தரவு பண்ணினாங்களா?” என்று கேட்டாள் அமிர்தா.

    “அதை ஏன் கேக்கறே!” என்று அங்கலாய்த்தாள். “ராத்திரி பத்து மணிக்கு எந்தத் தடியனோ ஃபோன் பண்றான், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு. அவங்கிட்ட சொல்ல முடியுமா, முக அழகைப் பாத்து நட்பு வரதில்லேடான்னு?”

    “சரியாச் சொன்னீங்க!” என்று ஊக்கினாள் அமிர்தா.

    “எங்காத்துக்காரரோ சந்தேகப் பேர்வழி. `அர்த்த ராத்திரியில எவன்கூடப் பேச்சுன்னு?’ கேட்டா? அதான் ஃபோனை பட்டுனு வெச்சுட்டேன்!” பெரிதாகச் சிரித்தாள்.

    “மழை காலத்திலே காளான் மொளைச்சமாதிரி, சில நாளிலேயே நூத்துக்கணக்கில ஃப்ரெண்ட்ஸ். அவா அத்தனை பேருக்கும் காலை வணக்கம், இரவு வணக்கம்னு சொல்லிண்டே இருக்கணும்னா எப்படி? எனக்கு வேற வேலையே கிடையாதா?”

    முதியவளைப் பேசவிட்டு, அமிர்தா மௌனமாக இருந்தாள். தான் ஊக்குவிக்காவிட்டாலும் அவள் பேசுவதை நிறுத்தப் போவதில்லை என்று அதற்குள் புரிந்திருந்தாள்.

    “ஒரு நாளைக்கு நாப்பது பேருக்குப் பிறந்தநாளாம். நான் HAPPY BIRTHDAY சொல்லி என்ன ஆகப்போறது!”

    “நானே பேசிண்டு இருக்கேனே! நீ என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தியோ!” என்று சற்று நிறுத்தினாள் முத்துலட்சுமி.

    “சும்மாத்தான், மாமி!”

    காபி குடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்ற அன்புக் கட்டளையை மறுக்கத் தோன்றவில்லை அமிர்தாவுக்கு.

    சமையலறையில் உரையாடல் தொடர்ந்தது.

    “அன்னிக்குப் பாரு, ஒருத்தன் அவனோட போட்டோ அனுப்பியிருந்தான். எப்படிங்கிறே? மேலே சட்டை போடாம, என்னமோ அழகுப்போட்டிக்குப் போஸ் குடுக்கிறமாதிரி. அது அவனோட போட்டோவாகவே இருக்காது. எவனோடதையோ எடுத்து, என்னை இம்ப்ரெஸ் பண்ண அனுப்பியிருக்கான். எதுக்கு? நாளைக்கு, `நீயும் இந்தமாதிரி ஒண்ணு அனுப்பேன்,’னு கேக்கத்தான்!”

    தழைந்த மார்பகத்துடன் இருக்கும் தன் முகநூல் சிநேகிதியைப் பார்த்து அவன் எவ்வளவு அதிர்ச்சி அடைவான்! சிரிக்காமலிருக்கப் பாடுபட்டாள் அமிர்தா.

    “இவருக்கு நான் படறபாடு புரியறதா! `ஒனக்கென்ன! புதுசு புதுசா, நிறைய ஃப்ரெண்ட்ஸ்!’ அப்படின்னு என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறார்”.

    அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, கலகலவென சிரித்தாள் அமிர்தா.

    தன் மனதில் இருந்ததையெல்லாம் இன்னொரு ஆத்மாவுடன் பகிர்ந்துகொண்டுவிட்ட நிம்மதியில், மாமியும் சிரித்தாள்.

    அடுத்த வாரம், `தெரிந்த முகமாக இருக்கிறதே!’ என்று பார்த்தாள் அமிர்தா.

    அதன் கீழ்: முத்துலட்சுமி என்னும் எனது இன்றைய போட்டோ இது. எனக்கு எழுபத்தைந்து வயது!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 51

    பழகத் தெரிய வேணும் – 51

    நிர்மலா ராகவன்

    புகழ்ச்சிக்கு மயங்கினால்…

    கலைவிமர்சராக ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

    புகழ்பெற்ற அக்கலைஞர் எனக்குத் தெரிந்தவர் என்றதால், மறுநாள் காலை அவரை அழைத்து, எந்தெந்த அம்சங்கள் சிறப்பாக இருந்தன என்று விவரிக்க ஆரம்பித்தேன்.

    அவர் உடனே என்னைத் தடுத்து, “எந்த இடம் சரியாக இல்லை என்று மட்டும் கூறுங்கள்,” என்றார்!

    அவர் முன்னேற்றம் அடைந்ததன் காரணம் புரிந்ததா?

    குறையை ஏற்காதவர்கள்

    `நான் தவறே செய்யமாட்டேன். என்னைக் குறை கூறுகிறவர்களுக்கு என்னைவிட அதிகமாகத் தெரியுமோ?’ என்பதுபோல்தான் பலரும் பேசுகிறார்கள்.

    இத்தகையினர் ஓரளவு உயர்ந்தபின், கர்வத்தால் அங்கேயே நிலையாக நின்றுவிடுவார்கள். பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

    இவர்களுக்குத் தம்மைப் புகழ்கிறவர்களைத்தான் பிடிக்கும். அவர்களே உற்ற நண்பர்கள் என்று நினைத்துவிடுவார்கள்.

    ஆணோ, பெண்ணோ, எந்த வயதினராக இருந்தாலும், அவர்களைப் புகழ்ந்தால் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது பலரது அனுபவம்.

    சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால், `நல்ல பிள்ளை, புத்திசாலி’ என்று பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள். அதன்மூலம் தன்னம்பிக்கை வளரும்.

    அதற்காக, ஒரேயடியாகப் புகழ்ந்தாலும் விளைவு எதிர்மாறாக அமைந்துவிடும்.

    கதை

    நான் உத்தியோகம் பார்த்த பள்ளி ஒன்றில், படிப்பில் கீழ்த்தங்கிய மாணவிகள் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். அங்கு பலரும் அழகாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமாகப் போயிற்று எனக்கு.

    வகுப்பில் கவனம் செலுத்தாமல், பென்சிலைக் கூர்செய்யும் சிறு சாதனத்தின் பின்புறம் இருந்த கண்ணாடியில் அடிக்கடி முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டார்கள் அந்த பதின்ம வயதுப் பெண்கள்.

    `ஏன் இப்படி?’ என்று யோசித்தேன்.

    `நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்று சிறு குழந்தையாக இருந்தபோது பாராட்டி இருப்பார்கள் பெற்றவளும் பிறரும். குழந்தையின் முகம் மலர்வதைக் கண்டு அவர்களுக்கும் மகிழ்ச்சி எழுந்திருக்கும்.

    வேறு எந்த குணமோ, திறமையோ முக்கியமில்லை என்பதுபோல் ஓயாமல் இதையே சொல்லிக்கொண்டு இருந்தால், பெரியவர்களானபின்பும், அழகைத் தக்க வைத்துக்கொள்வதைத் தவிர வேறு எதிலும் மனம் போகாது.

    தம் அழகைப் பாராட்டுகிறவர் நல்லவர்தானா, அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அப்படிச் செய்கிறாரா என்றெல்லாம் யோசனை போகாது.

    பெண்களை வசப்படுத்த புகழ்ச்சி ஒரு வழி என்று கண்டுகொண்டு, அநேக ஆண்கள் இம்முறையைப் பின்பற்றுவது உண்டு.

    தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆண்களைப்பற்றிய பேச்சு வந்தபோது, “உங்களிடம் முதலில் என்ன சொல்வார்கள்?” என்று என் மாணவிகளில் சிலரைக் கேட்டேன்.

    “அழகா இருக்கே!” இதையே பலவிதங்களில் கூறினார்கள், சற்று வியப்புடன். லேசான சிரிப்பும் கலந்து வந்தது.

    வீண்புகழ்ச்சியை நம்பினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது இதற்கு இது ஓர் உதாரணம்.

    அது மட்டுமா! புகழ்ச்சியை மட்டுமே சந்தித்தவர்கள் தம்மை யாரேனும் சற்றே திட்டினாலும் இடிந்துபோய்விடுவார்கள். பெரியவர்களாகப் போனதும், தம்மீது குறை காண்பவர்களின்மீது ஆத்திரம் எழும்.

    புகழவே கூடாதா?

    பாராட்டும்படியாக ஏதாவது இருந்தால், ஓரளவோடு புகழலாம். ஆனால், முகஸ்துதி செய்பவர்களை, அல்லது வெகுவாகப் புகழ்கிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். மிகப் பணிவாக நடந்துகொள்பவர்களும் இதே ரகம்தான். நம்ப முடியாது.

    எவ்வளவு புகழலாம்?

    “புகழ்ச்சி என்பது தேன் போன்றது. சிறிதளவு இனிமையாக இருக்கும். அளவுக்கு அதிகமாகப்போனால், வயிற்றைக் கெடுத்துவிடும்,” என்கிறார் ஒருவர். புகழ்ச்சிக்கு அடிமையாகி, இவர் எதையெல்லாம் இழந்தாரோ!

    கதை

    பிரபல நடிகர் நடித்த நீண்ட படம் அது.

    தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், சிங்கப்பூர் ரசிகர்களைக் கேட்டார்கள்: “படம் எப்படி இருந்தது?”

    அனேகமாக எல்லாரும், “சூப்பர்!” என்று பாராட்டினார்கள்.

    ஒருவர் மட்டும், “பல கோடி செலவழித்து, இரண்டு வருடங்கள் தயாரித்து வெளியிட அப்படி இதில் என்ன இருக்கிறது?”

    சொன்னவர் வைரத்தைத் தரம் பார்க்கிறவர்.

    அது ஏன் மற்றவர்கள் எல்லாரும் பாராட்டினார்கள்?

    பிரபல நடிகர் என்பதால் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.

    தங்கள் நேரம் வீணாகிவிட்டதென ஒத்துக்கொள்ள விரும்பாது, அதைப் பிறரும் அறிந்துவிடக்கூடாது என்ற நோக்கமாகக்கூட இருக்கலாம்.

    சாண்ட்விச் திட்டு

    சமையலில் அதிக அனுபவமில்லாத ஒரு பெண் சமைத்துவைத்ததைச் சாப்பிட்டபின், “இன்று பொரியல் நன்றாக இருந்தது. உப்பு, காரம் எல்லாம் அளவோடு இருந்தது,” என்று ஆரம்பித்தால் மகிழ்ந்துவிடுவாள்.

    அடுத்து, “எண்ணையைக் கொஞ்சம் குறைத்துவிடு. இல்லாவிட்டால், கடைசியில், ஓட்ஸ் சேர்த்து லேசாக வறுக்கலாம்,” என்று மெள்ளக் கூறினால், அக்குறை அவளைப் பெரிதாகப் பாதிக்காது.

    அடுத்த முறை, அதிக அக்கறையுடன் சமைப்பாள்.

    வளரும் குழந்தைகளிடம் குற்றம் கண்டுபிடிக்கும்போது, இம்முறை பயனளிக்கும்.

    இந்த நியதியைத் தவறாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு.

    கதை

    மலாய் ஆசிரியை ஜலீலாவுக்கு அவள் வீட்டுத் தோட்டக்காரர், மற்ற கடைநிலைத் தொழிலாளிகள் ஆகியோரின் இனத்தைச் சேர்ந்த தமிழ் மாணவி சுனந்தா அழகாகவும், புத்திகூர்மையானவளாகவும் இருந்தது எரிச்சலை ஊட்டியது.

    ”உன் கண் அழகாக இருக்கிறது. மூக்கும் அழகாக இருக்கிறது. உன் கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?” என்று கேட்டுக் கேட்டு அவளை வதைத்தாள்.

    மூக்கிற்கும் கையெழுத்திற்கும் என்ன சம்பந்தம்?

    ஏழு வயதுக் குழந்தைக்கு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசினால் என்ன புரியும்? குழப்பம் உண்டாக, கையெழுத்து இன்னும் மோசமாகிற்று.

    `ஏன் தினமும் அதையே சொல்கிறாள்? டீச்சருக்குப் பைத்தியமோ?’ சந்தேகத்தைத் தாயுடன் பகிர்ந்து கொண்டாள்.

    ஆதரவாகப் பதில் வந்தது. “நீ பெரியவளானதும், காசோலையில் மட்டும்தான் உன் கையெழுத்து இருக்கும். நீ மிகவும் புத்திசாலி! அதுதான் பலருக்கும் உன்னைப் பிடிப்பதில்லை”.

    அவள் வாக்கு பலித்தது. கணினி நடைமுறைக்கு வந்தபின், கையெழுத்து எப்படி இருந்தால் என்ன! அந்த ஆசிரியையைவிட மிக மிக உயர்ந்த நிலைக்குப் போனாள் சுனந்தா.

    நம்மிடம் ஒருவர் குற்றம் கண்டுபிடிக்கும்போது ஆத்திரம் எழும். குழப்பமும் எழக்கூடும். அது இயற்கை.

    அந்த உணர்ச்சிகளுக்கு பெருமதிப்பு கொடுக்காது, நாம் மதிக்கும் ஒருவர் நம் குறையைச் சுட்டிக்காட்டும்போது, அது நியாயமாக இருக்கிறது என்று தோன்றி திருத்திக்கொண்டால் உயரலாம். அதைத்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடனக் கலைஞர் செய்தார்.

    பலருக்கும் புகழை ஏற்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.

    தெரியாத்தனமாக, ஆரம்பகாலக் கலைஞர் ஒருவரை நான் பாராட்டிவிட்டேன்.

    அடுத்த நாள் அதே நிகழ்ச்சியில், நாட்டியத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தாது அவர் ஆடியதைப் பார்த்து நான் கற்றேன்: அளவோடு புகழவேண்டும். அதுவும், தகுதி இருந்தால்தான். இல்லாவிட்டால், தலைக்கனம் கூடிவிடும்.

    இதைத்தான் என் தாய் தினமும் சொல்லி வந்திருக்கிறாள்: “`தான்’ அப்படின்னு ஜம்பமா இருந்தா, சாமி தலையிலே பட்டுனு போட்டுடும்!”

    Share
  • தாம்பத்தியத்தில் கத்தரிக்காய் (சிறுகதை)

    தாம்பத்தியத்தில் கத்தரிக்காய் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “பாரு! இங்க வந்து பாரேன்,” உற்சாகமாகக் கூவினார் ஜம்பு.

    “வேலையா இருக்கேன்,” என்று பதில் குரல் கொடுத்தாள், அவருடைய தர்மபத்தினி.

    எரிச்சலுடன், `இவருக்கென்ன! மாசம் பொறந்தா, `டாண்’ணு பென்ஷன் வந்துடும்! பொண்ணாப் பிறந்தவளுக்கு ஏது ஓய்வு, ஒழிச்சல் எல்லாம்!’ என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

    “பாரு!” புழக்கடைத் தோட்டத்திலிருந்து வந்த குரலில் ஸ்ருதி இன்னும் ஏறியிருந்தது.

    அடுப்பைச் சிறியதாக எரியவிட்டாள் பாரு. இல்லாவிட்டால், கத்தரிக்காய் கறி கரியாகிவிடுமே!

    `ஒனக்குக் கொஞ்சமாவது பணத்தோட அருமை தெரியறதா?’ என்று அதற்கு வேறு கத்துவார்.

    கணவர் இன்னொருமுறை அலறுவதற்குள், “வந்துட்டேன்,” என்று குரல் கொடுத்தபடி பின்புறம் போனாள்.

    “அப்படி என்ன தலைபோற விஷயம்?”

    “இங்கே பாரேன்!” அவரது மகிழ்ச்சிக்குப் பாத்திரமாகி இருந்ததை ஒரு விரலால் சுட்டிக் காட்டினார். கத்தரிக்காய் செடியில் ஒரு மொட்டு. தான் நட்ட செடியில் முதன்முறையாகக் காய்க்கப்போகிறது!

    உதட்டைப் பிதுக்கினாள் பாரு. “இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

    “நான் மார்க்கெட்டில காய் வாங்கிண்டு வந்தா, சொத்தை, வாடல், பூச்சின்னு நூறு குத்தம் கண்டுபிடிப்பியே!” என்று அவளையே தாக்கினார். “இன்னும் கொஞ்ச நாளிலே பச்சை வாசனை போகாம, செடியிலேருந்து பறிச்ச ஒடனேயே சமைக்கலாம்!”

    அவருடைய பெருமையில் பங்குகொள்ளாது, “ஒங்களோட பேசிண்டிருந்தா, கறி தீய்ஞ்சுடும்,” என்றபடி உள்ளே நடந்தாள்.

    `ரசனையே துளிக்கூட இல்லாத அசமஞ்சம்!’ என்று திட்டினார். மெள்ளத்தான். எல்லாம், அவளுக்குக் கேட்கவா போகிறது என்ற தைரியம்தான்!

    இல்லாவிட்டால், இலையைக் கவனித்துப் பரிமாறுவாளா? `நீங்களே எடுத்துப் போட்டுக்கோங்கோ,’ என்று விறைப்பாகக் கூறிவிட்டு, தொலைக்காட்சியின்முன் உட்கார்ந்துவிடுவாளே!

    “இன்னிக்கு.. சமையல் ரொம்ப நன்னாயிருக்கு, பாரு – எங்கம்மா கைப்பக்குவம் மாதிரி. கத்திரிக்காயை எண்ணெயிலேயே குளிப்பாட்டி, உளுத்தம்பருப்பு, மிளகாய்வத்தல் ரெண்டையும் வறுத்துப் போட்டியா? ஆகா!” என்றபடி ஒரு பிடி பிடித்தார்.

    `டாக்டர் எண்ணெய்ச் சாமானே கூடாதுங்கிறார். இவருக்கோ அதுதான் பிடிக்கிறது. கண்ணுல படாம, கொஞ்சம் காயை ஒளிச்சு வெச்சிருக்கணும்!’ என்று தன்னையே நொந்துகொண்டவள், இனிமேல் அப்படித்தான் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

    அடுத்தடுத்த வாரங்களில் ஒரு சிறு டபராவில் இருந்ததைப் பார்த்து, “ஒரு கிலோ வாங்கினேனே! இவ்வளவுதானா இருக்கு?” என்றவருக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

    “எல்லாத்தையும் நீயே சாப்பிட்டுட்டியா?” என்று மேலும் துளைத்தார்.

    “நான் என்னிக்கு ஒங்களுக்கு முன்னாலே சாப்பிட்டிருக்கேன்!” என்று அலுத்த குரலில் கூறியவள், “வயசானா, நாக்கை அடக்கக் கத்துக்கணும். பாத்துச் சாப்பிடுங்கோ. நிறைய எண்ணெய் விட்டு வதக்கியிருக்கேன்,” என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு அப்போதெல்லாம் செவிசாய்த்திருந்தால் ஜம்புவின் இருதய அடைப்பு மோசமாகி, அவருக்கு நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்காது.

    `கத்தரிக்கா மொட்டுவிட்டபோது எப்படிப் பூரிச்சேள்! இப்போ, காய்ச்சுக் குலுங்கறதைப் பாத்தா, உசிரையே விட்டிருப்பேள்!’ பேச்சுவாக்கில் சொல்லிவிட்ட பாரு, நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

    `நல்ல பிஞ்சுக் காயாப் பறிச்சு, அவருக்குப் பிடிச்சமாதிரி வதக்கிப் படைக்கணும்!’

    மாலை அணிந்திருந்த சட்டத்துக்குள் அடைபட்டிருந்த ஜம்புவுக்கு அவளது ஆதங்கம் புரியவில்லை. எப்போதும்போல் விறைப்பாகத்தான் காட்சியளித்தார்.

    Share