நிர்மலா ராகவன்

உன்னையே நீ மதிக்கணும்

`… இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்..,’ என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள் தினசரியில்.

அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?)

இம்மாதிரியான அறிக்கைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர் தினசரியில் வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக வெளியிடுபவர்களில் எத்தனைபேர் இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக நடத்தினார்கள்?

கதை

கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அந்த மனிதர் மனைவியை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம்.

தாய் அனுபவித்த துன்பங்கள் தெரிந்திருந்தும், அவளது பெண்கள் இருவருக்கும் இரக்கம் கிடையாது.

“நீங்க என்னோட வந்து இருங்கோம்மா,” என்றாள் சின்னவள், உபசாரமாக. “சும்மா இருக்க வேண்டாம். ஒங்க பென்ஷன் பணத்தைக் குடுத்துட்டு இருங்கோ!”

சில வருடங்கள் கழித்து, அந்த தாய் தனியாகவே வாழ்ந்து இறந்தபின், அப்பெண் கதறினாளே, பார்க்கவேண்டும்!

பெரும்பாலோருக்கு எதையும் இழந்தபின்தான் ஒரு நபர் அல்லது பொருளின் அருமை புரிகிறது.

கதை

“என் சட்டை! நானே மச்சு வெச்சுக்கறேன்,” என்று அடம்பிடிப்பான் என் மூன்று வயதான மகன்.

ஒரு கையால் சட்டையின் நுனியைப் பிடித்து, இன்னொன்றால் அதை விரல்களில் சுற்றுவான். இன்னும் கசங்கிவிடும். அவனைப் பொறுத்தவரை, அவன் திறமையுடன் செய்திருக்கிறான்.

அண்மையில், இதை நான் சொல்லிச் சிரித்தபோது, யாரோ கேட்டார்கள், “அப்புறம் நீ அதைச் சரியாக மடித்து வைத்துவிடுவியா?”

நான் அதிர்ந்து, “ஐயோ! அப்படிச் செய்வது, `நீ செய்தது தவறு!’ என்று அவனைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் இருக்குமே!” என்றேன்.

சும்மாடுபோல் சுருண்டு, கசங்கியிருந்த சட்டையைப் பார்க்கும்போதெல்லாம், `அப்போதே அவனுடைய அருமை புரிந்திருந்ததே!’ என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் இறந்தபின் குற்ற உணர்வு ஏற்படவில்லை.

சுயமதிப்பு ஏற்பட

குழந்தைகளைச் சுதந்திரமாக எதுவும் செய்யவிடாது, தம்மையே நாடிக்கொண்டிருந்தால் அந்த பிணைப்பையே அன்பு என்று நினைக்கிறார்கள் பலர்.

எந்த வயதானாலும் பிறரது உதவியை எதிர்பார்க்க நேர்ந்தால் ஒருவரால் எப்படித் தன்னையே மதிக்கத் தோன்றும்? தன்னையே மதிப்பவன்தான் மற்றவர்களையும் மதிக்கமுடியும். தன்னம்பிக்கை என்பது, `என்னால் முடியும்’ என்று தன் திறமைகளை உணர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது.

தன் வாணாளில் பிறருக்கு உபயோகமாக எதையாவது செய்தவரைத்தான் அவர் மறைந்தபின்னும் கொண்டாடுகிறோம்.

பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அண்மையில், அவருக்குப் பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டு இருக்கிறது. பாட்டின் பொருளை மனதில் கொண்டு, அதற்கேற்ப குரலில் உருக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொணர்ந்ததில் எத்தனைபேரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்!

பிறரை மகிழ்விக்க தம்மையே வருத்திக்கொள்கிறவர்கள்

இத்தகையவர்கள், `எனக்கு எல்லாரையும் பிடிக்கும். என்னையும் எல்லாருக்கும் பிடிக்கும். உனக்கு எத்தனை எதிரிகள், பார்!’ என்று தன்னம்பிக்கையோடு நடப்பவர்களைப் பழிப்பார்கள்.

`நான் இப்படி இருந்தால்தான் பிறர் மதிக்கிறார்கள்!’ என்று ஒருவர் தன் குணத்தையும், போக்கையும் மாற்றிக்கொண்டே இருந்தால், மற்றவர்களை விடுங்கள், அப்படி நினைப்பவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்காது.

தாம் சொல்வதற்கு மதிப்புக் கொடுக்காது அலட்சியம் செய்பவரை `கர்வி,’ `நட்புடன் பழகத் தெரியவில்லை’ என்று பலவாறாகப் பழிப்பார்கள். பிறர் மதிக்காததால் ஒருவரின் மதிப்பு குறைந்துவிடுமா?

சில சமயம், நம் மதிப்பு, நம்மால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பது நமக்கே தெரிவதில்லை. அதை உணர்த்த நல்ல உறவினரோ, நண்பரோ வேண்டும்.

கதை

புதிதாக காரோட்டும் உரிமம் பெற்றிருந்தாள் அப்பெண். அதன்பின், எங்கு காரோட்டிப் போனாலும் அவள் பக்கத்தில் யாராவது உட்கார்ந்திருக்க வேண்டும். தனியாகப் போனால் தவறு நேர்ந்துவிடும் என்ற பயம்.

ஒரு மாதம் இப்படிக் கழிந்தது.

அன்று அவசரமாக ஓரிடத்திற்குப் போக வேண்டியிருந்தது. வீட்டில் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

“என்னுடன் வாருங்கள், தாத்தா,” என்று கெஞ்சினாள்.

அவர் மென்மையாக, “நீ நடக்கப் பழகியபோது, விழுந்திருக்கிறாயோ?” என்று கேட்டார்.

`இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்று தோன்ற, பேத்தி சிரித்தாள். “யார்தான் விழாமல் நடை பழகியிருக்கிறார்கள்?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

அவர் விடவில்லை. “விழுந்துவிடுவோமோ என்று நடக்கப் பயந்து, எழுந்திருக்காமலேயே இருந்துவிட்டாயா?”

அவளுக்குப் புரிந்தது.

“நன்றாக ஓட்டிக் காட்டியதால்தானே உரிமம் கிடைத்திருக்கிறது! சிலர் தொலைபேசியில் ஒரு கண்ணை வைத்தபடியே ஓட்டுகிறார்கள். நீதான் பார்த்து ஓட்டவேண்டும்,” என்று அறிவுரை கூறினார்.

தெளிந்த மனத்துடன் அவள் போனாள். தனியாகவே.

பொருட்களை மதிப்பவர்கள்

நாம் நம்மேல், அல்லது பொருட்களின்மேல் அளவுகடந்த மதிப்பு வைக்கும்போது, நம் மதிப்பைக் குறைவாக எடைபோட்டு விடுகிறோம்.

கதை

ஒரு பார்ட்டி. வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்திருந்தார்கள்.

மலேசிய அதிகாரி ஒருவரின் (வெளிநாட்டு) மனைவியான ஜாக்குலின், “என் காப்பைப் (bracelet) பார்த்தீர்களா? இன்றுதான் வாங்கினேன்!” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் உயர்ந்த விலையையும் சேர்த்துக் கூறினாள்.

யாரும் கண்டுகொள்ளவில்லை.

`இவளுடைய மதிப்பு ஒரு ஆபரணத்திலா இருக்கிறது!’ என்று அலட்சியம் செய்தார்கள். அவளுடன் அதிகம் பேசவுமில்லை.

அடுத்த முறை, நான் அதேபோன்ற ஒரு விருந்துபசாரத்திற்குச் செல்ல நேரிட்டபோது, என்னிடமிருந்த தங்க நகைகளைப் புறக்கணித்தேன். இருபத்தைந்து காசு கொடுத்து வாங்கிய ஒரு பிளாஸ்டிக் வளையலைத் தேர்ந்தெடுத்தேன்.

“என்னம்மா!” என்று மகள் அதிர்ந்தபோது, “நான் ஜாக்குலினைப்போல் நடிக்கப்போவதில்லை,” என்றேன்.

தலையை நிமிர்த்தி, பிறருடன் எளிதாகப் பழக சுயமதிப்பு போதுமே!

பல விருந்தினர்கள் விருப்பத்துடன் என்னுடன் உரையாடினார்கள். யாரும் என் எளிய வளையலைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஒருவர் தன்னையே மதித்து நடந்தால், பிறர் அவரிடம் உண்மையுடன் பழகுவார்கள். நடிக்க மாட்டார்கள்.

தம்மைப்பற்றிக் குறைவாக மதிப்பிடுவர்கள்:

மனோபலம் குன்றியவர்களாக இருப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தை பெரிதாகப் பாராட்டுவது கிடையாது. அதனால், எளிதில் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள்.

காதலில் தோல்வி, நீண்டகாலம் ஒரு உறவில் நிலைக்க முடியவில்லை என்று, எடுத்த காரியங்களில் எல்லாவற்றிலும் தோல்வியைச் சந்திக்க நேரிடலாம்.

பிறரை ஓயாமல் குறைகூறுவது இவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்போதாவது தாம் உயர்ந்திருப்பதாக நினைக்கலாமே!

இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது?

பெற்றோரோ, ஆசிரியர்களோ சிறு வயதிலேயே ஒருவர் தன் குறைகளையோ, பிறருடையதையோ பாராட்டாதிருக்கப் பழக்கவேண்டும்.

கதை

பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு நான் போதித்தபோது, “உங்களில் ஒருவர் ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியாது என்றாலோ, தவறாகப் பதிலளித்தாலோ கேலி, சிரிப்பெல்லாம் கூடாது” என்று கண்டித்தேன்.

சில மாதங்களுக்குப்பின், என் சக ஆசிரியை, “உங்கள் வகுப்பில் மட்டும் ஒரு மாணவனைப் புகழ்ந்தால், மற்றவர்கள் எல்லாரும் தாமே பாராட்டப்பட்டதுபோல் பூரித்துப்போகிறார்களே!” என்று அதிசயப்பட்டாள்.

தவறு செய்வதால் ஒருவரின் மதிப்பு குன்றிவிடுவதில்லை என்று அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் அவர்களால் பிறரை ஏற்க முடிந்தது. அவர்களது வெற்றியிலும் பங்குகொள்ள முடிந்தது.

(நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.