இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

கௌசி, ஜெர்மனி
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க
உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவுக்கு அழிவில்லை. நிச்சய மோட்சம் கிடைத்து இறைவன் காலடி சேர்ந்தால் அன்றி உயிர்கள் மீண்டும் மீண்டும் தம்முடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. உலக வாழ்க்கையை விரும்பாத அடியார்கள் மீண்டும் பிறப்பெடுப்பதை விரும்பாது மோட்சம் கிடைப்பதையே விரும்புகின்றார்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் பிறப்புண்டானால் சிவனடியாராகவே இருந்து உன்னை என்றும் மறவாமை வேண்டும். அதைவிட வேண்டும் நீ சிவதாண்டவம் ஆடுகின்ற போது உன்னுடைய காலடியின் கீழிருந்து நான் பாடவேண்டும் என்று இறைவனிடடம் வரம் கேட்டுப் பாடியவரே காரைக்காலம்மையார்.இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இக்காலகட்டத்துடன் எடுத்து நோக்குவதற்கு முன் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு பற்றி நோக்குவோம்.
காரைக்காலம்மையார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். பாடல்களால் இறைவனைப் பூசித்தவர். இவர் பாடிய அற்புதத்திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை போன்ற நூல்களே பல்லவர்கால பக்தி இலக்கியங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன. நாம் வாழுகின்ற இந்த காலகட்டத்தில் இக்காரைக்காலம்மையார் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும் இப்பாடல் வரிகளின் ஆழத்தை நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. சிறுவயதில் இருந்தே சிவனில் பக்தி கொண்டிருந்த காரைக்காலம்மையார் சிவனடியார்களைச் சிவனெனப் போற்றும் பண்புள்ளவர். அவருக்கு பரமதத்தன் என்னும் வணிகனைத் திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். ஒருநாள் கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை பசியோடு வந்த சிவனடியார் ஒருவருக்குக் கொடுத்து விடுகின்றார். கணவனுக்கு உணவு பரிமாறும் போது அந்த மாங்கனியில் ஒன்றை உண்ட பரமதத்தன், அதன் சுவையில் ஈர்ப்படைந்து மற்றைய மாங்கனியையும் தனக்குப் பரிமாறுமாறு கேட்கின்றான். காரைக்காலம்மையாரும் சிவனடியாருக்கு அருந்தக் கொடுத்ததை மறைப்பதற்காக இறைவனிடம் வேண்டிநிற்கின்றார். சிவபெருமானின் அருளால் காரைக்காலம்மையாருக்கு ஒரு மாங்கனி கிடைக்கின்றது. அக்கனியைக் கணவனுக்குக் கொடுத்த போது இக்கனி அதிக சுவையுடையதாக இருப்பதை பரமதத்தன் உணர்கின்றான். இக்கனியின் சுவை வேறாக இருக்கின்றதே காரணம் என்ன என்று வினவுகின்றான். இறைவன் அருளால் அம்மாங்கனி கிடைத்ததாகக் காரைக்காலம்மையாரும் சொல்லுகின்றார். உடனே பரமதத்தனும் அதனை நிரூபித்துக் காட்டும்படிக் கூறவே இறைவன் அருளால் மீண்டும் ஒரு கனி இறைவன் அருளால் கிடைக்கின்றது. ஆச்சரியம் அடைந்த பரமதத்தனும் தெய்வீகப் பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தால் காரைக்காலம்மையாரை விட்டுப் பிரிந்து மதுரைக்குச் சென்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு காரைக்காலம்மையார் பெயரை வைத்து வாழுகின்றான்.
தன்னைப் பிரிந்து சென்ற கணவனை உறவினர் துணையுடன் மதுரைக்குச் சென்று கண்ட காரைக்காலம்மையார் கணவனுக்கு உதவாத இந்த உடல் அழகு தேவையில்லை என இறைவனை வேண்டித் தசை உடம்பு நீத்து என்புடலுடன் கைலாயமலை நோக்கிப் பயணமாகின்றார். அங்கே தலையாலே நடந்து செல்வதைக் கண்ட இறைவனும் அம்மையே வருக. வேண்டும் வரம் கேள் என்று கேட்டபோது இப்பாடலில் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மனிதனுடைய வாழ்க்கையில் சொர்க்கமும் நரகமும் அடங்கிக் கிடக்கின்றது. மனித வாழ்க்கையை விரும்பாத மனிதன் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையை அடியோடு விட்டுவிடுவான். எமக்கும் மேலே ஒரு உலகம் இருக்கின்றது என்று நம்பும் மனிதர்கள் அங்கே இறைவன் குடியிருப்பதாகவும் இறைவன் காலடியில் தன்னுடைய வாழ்க்கை சென்றடைய வேண்டும் என்றும் நினைப்பார்கள். இதுவே காரைக்காலம்மையார் விரும்பிக் கேட்டதாக அறிகின்றோம். அன்ன ஆகாரமின்றி இறைவனை நினைத்து விரதமிருப்பவர்களுக்கு எலும்பை அண்டியிருக்கும் தசைப்பகுதி குறைவடைவது இயற்கையே. Magersucht என்று ஜேர்மன் மொழியில் சொல்வார்கள். ஆக்மீக யாத்திரை செல்வதற்கு இலகுவான மெல்லிய என்புடலை காரைக்காலம்மையார் இறைவனை வேண்டிப் பெற்றிருக்கலாம்.
கைலாய மலையை அடைந்ததாகவும் இறைவன் வரம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ள கதை தற்போதைய Hologram போல் அக்காலத்தில் இருந்திருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. இம்முறையிலேயே திருநாவுக்கரசருக்கு சிவபெருமானின் திருநடனக் காட்சி கிடைத்தது.
மாங்கனி கிடைக்கும் நிகழ்வு தற்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது என்றாலும் வேண்டுதல்கள் நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாகவோ வேறு ஒரு சந்தர்ப்பத்திலோ எம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை நாம் இக்காலப்பகுதியில் அநுபவ ரீதியாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்கின்ற போது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எமக்கு ஒரு உதவி தேவைப்படுகின்ற போது எங்கிருந்தோ ஒருவர் வந்து உதவி செய்வார். எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் காரக்காலம்மையார் தன்னுடைய சிவனடியார்களைப் போற்றும் பணியைச் செய்திருக்கின்றார் என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. அக்காலகட்டத்தில் கணவனுக்குத் தெரியாமல் ஒரு பெண் யாருக்கும் எநத ஒரு ஆடவனுக்கும் ஏழைக்குக் கூட உணவு கொடுக்க முடியாது. அவ்வளவு சந்தேகக் கண் கொண்டு மனைவியரைப் பார்க்கின்றது மட்டுமன்றி தம்மை மீறிப் பெண்கள் எதுவும் செய்வதை ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே ஆண்கள் இருந்திருக்கின்றார்கள். இதற்குச் சிலப்பதிகாரத்தில்
“அறவோர்க் களித்தாலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் இழந்த என்னை” என்னும் வரிகளை நாம் காணலாம்.
இனிமையான கனி சுவைமிக்கதாக இருந்தால் தன்னைப் போல் தன் மனைவியும் அக்கனியை உண்டு இன்பம் அனுபவிக்கட்டும் என்று நினைக்காத பரமதத்தன்கள் இக்காலப்பகுதியிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால், அடிப்படையில் உலகம் உருண்டு கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கை நிகழ்வுகளும் உருண்டு கொண்டுதான் இருக்கின்றன. பரமதத்தனின் அதிகாரப் போக்கை அறிந்த காரைக்காலம்மையார் தேவையில்லாத பிரச்சினையை ஏன் கொண்டு வர வேண்டும் என்று ஒரு மாங்கனியை காரைக்காலம்மையார் வாங்கி வைத்திருக்கலாம். வியாபார நிமிர்த்தம் ஒவ்வொரு நாடாகச் செல்லும் வியாபாரிகள் தங்கியிருக்கும் நாடுகளில் தம்முடைய இச்சைகளை அனுபவிப்பதற்கு ஒரு பெண் வைத்திருப்பது அந்தக்காலத்தில் வழக்கமாக இருந்தது. பரமதத்தன் தான் வியாபார நோக்கத்திற்காகச் சென்ற இடத்தில் தொடர்பு கொண்ட பெண்ணுடன் வாழ்வதற்கு இந்த மாங்கனிப் பிரச்சினை ஒரு வடிகாலாக இருந்திருக்கும்.
இது புராணக்கதையாக இருந்தாலும் காரைக்காலம்மையார் பக்தி இலக்கியத்திற்கு முன்னோடி என்பதை நாம் அறிய வேண்டும்.