கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

0

-மேகலா இராமமூர்த்தி

ஏன் இன்னும் இலக்குவன் மீளவில்லை? ஒருவேளை சீதையை கவர்ந்துசென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களோடு வெஞ்சமர் புரியத் தொடங்கிவிட்டானோ? இராவணன் என் இளவலையும் கவர்ந்துசென்று கொன்றுவிட்டானோ? என்றெல்லாம் எண்ணிக் கவன்ற இராமன், தன்னைத்தானே வாளால் குத்திக்கொண்டு மாள எத்தனித்த வேளையில், அயோமுகியால் தூக்கிச்செல்லப்பட்ட இலக்குவன் அவளின் வசிய வித்தையிலிருந்து மீண்டு, சூர்ப்பனகையின் நாசியை அறுத்து அவளைத் தண்டித்ததுபோலவே, அயோமுகியின் நாசியையும் அறுத்தான். அவள் வலிதாளாது அலறிய பேரொலி இராமன் செவிகளில் விழுந்தது.

இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற இந்தப் பேரொலி ஏதோ ஓர் அரக்கியின் குரலாகவே இருக்கவேண்டும் என ஊகித்த இராமன், சாகும் எண்ணத்தைக் கைவிட்டு, இலக்குவனைக் காக்க விரைந்தான். அப்போது இலக்குவனே இராமனுக்கு எதிரில் வந்துவிட்டான். வந்தவன், தன்னைக் குறித்து அண்ணன் கொண்டிருக்கும் கவலையைப் போக்கும் விதத்தில், ”அண்ணா! அடியனேன் வந்துவிட்டேன்; ஆதலால் அஞ்ஞான இருள்படியாத உளமுடைய நீ வருந்தற்க!” என்று உரைத்தவண்ணம் அண்ணனின் தளிரொத்த திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அதுகண்ட இராமன், இழந்த கண்களை மீண்டும் பெற்றதுபோல் மகிழ்ந்தான்.

வந்தனென் அடியனேன் வருந்தல்
வாழி நின்
அந்தம் இல் உள்ளம் என்று
அறியக் கூறுவான்
சந்த மென் தளிர் புரை
சரணம் சார்ந்தனன்
சிந்தின நயனம்
வந்தனைய செய்கையான். (கம்ப: அயோமுகிப் படலம் – 3724)

நடந்த நிகழ்ச்சிகளை இலக்குவனிடம் கேட்டறிந்த இராமன், இலக்குவன் உற்ற இடர்ப்பாட்டுக்காகத் துன்பமும், அதனின்று அவன் வெற்றிகரமாய் மீண்டமைக்காக உவமையும் எய்தினான் ஒருங்கே.
பின்னர்ச் சிறிதுநேரம் காட்டிடை ஓய்வுகொண்டனர் இருவரும். சீதையைப் பிரிந்தபின் இராமன் உண்ணவும் இல்லை; அவமானத்தின் தாக்கத்தால் உறங்கவும் இல்லை. கானத்தில் நோக்கும் திசையெல்லாம் அவனுக்குச் சானகி உருவமே தெரிந்தது. இதுவும் அரக்கர்செய் மாயையோ என உளம் நொந்தான் அவன்.

ஒருபொருளை ஆழமாய் எப்போதும் சிந்தித்திருந்தால், அப்பொருளே எங்குநோக்கினும் காட்சியளிக்கும் என்பது உளவியல் உண்மை.
முன்பு இராவணனும் தன் தங்கை சூர்ப்பனகை வாயிலாய்ச் சீதையின் அழகையறிந்து அவள் நினைவால் வாடி, அவளின் உருவெளித் தோற்றத்தைக் கண்டு, அது சீதைதானா என்று சூர்ப்பனகையிடம் வினவ, அவளோ இராமனையே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்த காரணத்தால் அவ்வுருவம் இராமனுடையது என்று விடை பகர்ந்ததைக் கண்டோம்; இப்போது இராமனின் நிலையும் அவ்வாறானது.

கங்குல் பொழுதை மிகுந்த மனத்துயரோடு கழித்த இராமன், பொழுது புலர்ந்ததும் இளவலோடு தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஐம்பது யோசனை தூரத்தை இருவரும் நடந்தே கடந்தனர். ஒருநாள் உச்சிப்போதில் கவந்தன் எனும் அரக்கன் வதியும் இடத்தருகே வந்துசேர்ந்தனர். ஆங்கே அடுத்த சோதனை ஆரம்பித்தது அவர்களுக்கு.
இந்தக் கவந்தன், வயிற்றிலே பெரிய வாயைக் கொண்டிருக்கும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்டவன். இருந்த இடத்திலிருந்தபடியே வெகுதூரத்திற்குக் கைகளை நீட்டி யானை முதல் எறும்பு வரை அனைத்துயிர்களையும் உண்ணக்கூடியவன். அவனுடைய கைகளில் இராம இலக்குவர் சிக்கினர். சீதையைக் கவர்ந்துசென்ற அரக்கர் படைதாம் தம்மை எதிர்த்து வந்திருக்கின்றதோ என்றெண்ணினான் இராமன்.

அவ் அரக்கனின் கை அவர்களைத் தன் வாயருகே கொண்டுசெல்ல முயன்றபோது இஃது அரக்கர் சேனையன்று; பயங்கர வடிவுடைய ஓர் அரக்கனே என்று தெளிந்த இராம இலக்குவர், இன்னும் சற்றுநேரத்தில் தாமிருவரும் அவனுக்கு இரையாகப் போகின்றோம் என்பதையும் அறிந்தனர்.

அப்போது இராமன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், ”இளவலே! தோகை சீதையும் எனைப் பிரிந்தனள்; தந்தை போன்றிருந்த சடாயுவும் துஞ்சினன். இவர்களையெல்லாம் காக்கத் தவறிய பெரும்பழியைச் சுமந்துகொண்டு இனியும் நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனவே, நான் இந்தப் பூத வடிவினனுக்கு உணவாகின்றேன்; நீ தப்பித்துச் செல்!” என்றான்.

தோகையும் பிரிந்தனள்
எந்தை துஞ்சினன்
வேக வெம் பழி சுமந்து
உழல வேண்டலேன்
ஆகலின் யான்
இனி இதனுக்கு ஆமிடம்
ஏகுதி ஈண்டுநின்று
இளவலே என்றான். (கம்ப: கவந்தன் வதைப் படலம் – 3766)

அதைக்கேட்ட இலக்குவன், ”உமக்கு ஏதேனும் தீங்குவந்தால் உமக்கு முன்பாக நான் என்னுயிரை முடித்துக்கொள்ள வேண்டும். அப்படியிருக்க நீர் உயிர்துறக்கவும் நான் ஊர்திரும்பவும் செய்யலாம் என்றால் அச்செயல் மிக நன்று” என்றான் வேதனையோடு. தன் அன்னை சுமித்திரை இராமனுக்கு ஏதேனும் தீங்கென்றால் அவனுக்கு முன்பாக நீ மடி; உயிரை முடி என்று சொன்னதை இலக்குவன் மறக்கவில்லை என்பதை அவன் பேச்சு ஈண்டு நமக்கு உணர்த்துகின்றது.

இராமன் துவளும்போதெல்லாம் அவனைத் தேற்றும் தம்பி இலக்குவன் இப்போதும் அப்பணியைச் செவ்வனே செய்து இராமனுக்கு உள்ள உரமூட்டினான். பின்னர் இருவரும் கவந்தனைத் தீரத்தோடு எதிர்த்து அவன் தோள்களை வெட்டி வீழ்த்தினர். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இராமனின் ஆயுதத்தால் வெட்டுண்ட கவந்தன், கூட்டைவிட்டு நீங்கிய பறவைபோல் வானிடைத் தோன்றினான்.

விசும்பில் நின்றபடி,
“ஆதிப் பிரமனும் நீ
ஆதிப் பரமனும் நீ
ஆதி எனும் பொருளுக்கு அப்பால்
உண்டாகிலும் நீ
சோதிச் சுடர்ப் பிழம்பு நீ” (கம்ப: கவந்தன் வதைப் படலம் – 3787)
என்று இராமனைப் பலபடத் துதித்தான்.

இராம இலக்குவர் அவனை வியப்போடு நோக்கிக்கொண்டிருந்தபோது தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான் அவன்.

”ஐயன்மீர்! நான் தனு எனும் பெயர்கொண்ட கந்தருவன் ஆவேன். முனிவர் ஒருவரின் சாபத்தால் இந்தக் கொடிய வடிவமெடுத்தேன். இப்போது உம்முடைய மலர்போன்ற கரங்களால் தீண்டப்பெற்றதால் என் சாபம் நீங்கி முந்தைய வடிவமெடுத்தேன்” என்றுரைத்தவன், ”நான் சொல்வதைக் கேட்பீர்! ஒப்பற்ற திறலுடையோராய் நீவிர் இருவரும் இருந்தாலும் சீதையைத் தேடிக் கண்டடைவதற்கு உமக்குத் துணைவலி தேவை; எனவே, உயிர்களுக்குத் தாயினும் சாலப் பரிந்து உதவுகின்ற சவரி எனும் அம்மையைச் சந்தித்து, அவள் காட்டுகின்ற வழியிற்சென்று இரலைக் குன்றத்தை (உருசியமுக பர்வதம்) அடைவீர். ஆங்கே கதிரவன்செல்வனும், பொன்வண்ணத்தவனுமாகிய சுக்கிரீவனோடு நட்பு கொள்வீர். அவன் சீதையைத் தேட உதவுவான்!” என்றுரைத்து விண்வழி ஏகினான்.

சீதையைத் தேடி இராம இலக்குவர் பயணப்படுகின்றார்கள் என்பதைக் கவந்தன் எப்படி அறிந்தான் என்பதைக் கம்பர் தம் காப்பியத்தில் குறிப்பிடவில்லை. அவன் தேவன் என்பதால் ஒருகால் அவர்கள் சொல்லாமலேயே அவர்களைப்பற்றி அறிந்தானோ என்று எண்ணவேண்டியுள்ளது.

கவந்தனின் வழிகாட்டுதல்படி சவரியைத் தேடிப் புறப்பட்டனர் சோதரர்கள் இருவரும். பூவுலக சொர்க்கம் என்று சொல்லும்படியான சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்தது மதங்கர் எனும் முனிவரின் குடில். அங்குதான் சவரி எனும் வேட்டுவகுலப் பெண்மணி நெடுங்காலமாக இராமனை தியானித்துக்கொண்டும் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டும் காலங்கழித்து வந்தாள். விரைவில் அவள் இராமனைச் சந்திப்பாள் என்று தேவர்கள் சொல்லிச் சென்றிருந்தனர். ஆதலால் அந்த நன்னாளை ஆவலோடு அவள் எதிர்பார்த்திருந்த வேளையில் இராமன் அவளைத் தேடிவரவே மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றாள் அம்மாதரசி.

அவ் அம்மையைப் பார்த்து இராமன், ”தீதின்றி நலமாய் இருக்கின்றீரா?” என்று வினவினான். அம்மொழிகள் அமுதமென அவள் செவிகளில் பாய, இவ்வுலகப் பாசம் எனை விட்டகன்றது; பிறவியும் தொலைந்தது என்றெண்ணி உவந்தவளாய் இராம இலக்குவர் உண்ணக் கனிகள் படைத்தாள் கனிவோடு.

அவர்கள் உண்ணுவதை மகிழ்வோடு கண்ணுற்றபடி, ”எந்தையே! நீ இங்கே வருவாய் என்ற செய்தி அறிந்தமையால் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்; இன்றுதான் என் தவம் பலித்தது” என்றாள். அதைக்கேட்ட இராம இலக்குவர் அத் தவத்துறை அரசியை அன்புற நோக்கி, ”எம் வழிநடைத் துயர்தீர்த்த அன்னையே! நீ வாழ்க!” என்று வாழ்த்தினர்.

இருந்தனென் எந்தை நீ ஈண்டு
எய்துதி என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என்
புண்ணியம் பூத்தது என்ன
அருந் தவத்து அரசிதன்னை
அன்புற நோக்கி எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய்
அம்மனை வாழி என்றார். (கம்ப: சவரி பிறப்பு நீங்கு படலம் – 3805)

”அம்மையே!” என்று காரைக்கால் அம்மையாரைச் சிவனார் விளித்ததுபோல் இங்கே பத்தியிற் சிறந்த சவரியை ”தாயே” என்று இராம இலக்குவர் விளிக்கக் காண்கின்றோம்.

அந்த நாளை அங்கேயே கழித்தனர் சகோதரர்கள். மறுநாள் காலை அம்மாதரசி காய்கதிர்செல்வன் மைந்தனாகிய சுக்கிரீவன் வதியும் உருசியமுக மலையை அடையும் வழியை அவர்களுக்கு விளக்கமாய் எடுத்துரைத்தாள்; அதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டனர் இருவரும்.

யோகநெறியால் ஞானமடைந்தவளான சவரி, இராம இலக்குவர் அங்கிருந்து புறப்படும் முன்னரே, தன் உடலை உகுத்து வீடுபேறுற்றாள். அந்த அதியசத்தைக் கண்டு வியந்தவாறே சுக்கிரீவனைச் சந்திக்கும்பொருட்டு உருசியமுக மலைநோக்கிப் புறப்பட்டனர் இருவரும்; கணக்கற்ற ஆறுகளையும் குன்றுகளையும் கடந்து நல்வினைகளின் இருப்பிடம் என்று விளங்கித் தோன்றிய பம்பை எனும் பொய்கையை அடைந்தனர்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *