பழகத் தெரிய வேணும் – 57

நிர்மலா ராகவன்
பொறாமை ஏன் எழுகிறது?
புதிதாக மணமானவன் சீலன். `உன்னை யாராவது உற்றுப் பார்த்தால்கூட என்னால் தாங்க முடிவதில்லை,’ என்று அடிக்கடி மனைவியிடம் கூறுவான்.
`நீ ரொம்ப அழகு. நான் உனக்கு ஏற்றவனே அல்ல!’
`இவருக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு!’ என்றெண்ணி மனைவி பெருமைப்படுவாள். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான்.
ஆனால், உண்மை அதுவல்ல.
ஒருவர்மீது ஆதிக்கம் செலுத்தி, எப்போதும் கட்டுப்படுத்த ஓயாத புகழ்ச்சி ஒரு வழி.
பொதுவாகவே, தனக்குக் கிடைத்தற்கரிய உறவாக ஒரு பெண்ணை மணந்தவன் அளப்பரிய அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்கிறான். அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயம்.
பாராட்டுவதுபோல் கூறுவது பொறாமையின் வெளிப்பாடு. அவனுடைய கணக்குப்படி, அவன் தாழ்ந்திருக்கிறான். மகிழ்ச்சி அற்றுப்போக, தன்னை வருத்திக்கொண்டு, பிறரையும் நோக அடிக்கிறான்.
ஆண் மட்டுமல்ல, தன் தகுதிக்குமீறிய ஒருவரை மணந்துவிட்டோமோ என்று குழம்பும் பெண்ணும் இத்தகைய உணர்ச்சிகளால் தன்னையே வருத்திக்கொள்ளக்கூடும்.
பொறாமை ஏன் எழுகிறது?
பொறாமை என்கிற குணம் எல்லா மனிதர்களிடமும் இயற்கையாக அமைந்திருப்பது.
தன்னைவிட வேறு ஒருவர் பணம், அழகு, அந்தஸ்து இப்படி எதிலாவது சிறந்திருக்கிறாரோ என்ற சிறுமை உணர்ச்சி, அதனால் எழும் அச்சம், பொறாமையாக மாறுகிறது.
ஒரு பெண் கணவனைவிட அதிக உயரமாக இருந்தால், `அவர்களிடையே ஒற்றுமை இருக்குமா?’ என்று அதிசயப்பட்டுப் பார்க்கிறோம்.
பொதுவாகவே, மனைவி தன்னை எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு ஆண்களுக்கு உண்டு.
ஆனால் ஒரு முரண். அவள் பிறரைப் பொறாமையில் ஆழ்த்தும் அளவிற்கு உயர்ந்த தகுதி உடையவளாக இருக்கவேண்டும்.
எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மனைவி சராசரியைவிட மிக அதிகமான உயரம். அந்த நபரை விளையாட்டாகக் கேட்டேன், “நீ உன் மனைவியைவிட உயரமா?”
“Of course!” சற்றே கோபத்துடன் வந்த அவரது பதிலின் தொனி, `இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்பதுபோல் இருந்தது.
இல்லறத்தில் அன்புதானே முக்கியம்? அதற்கும் தகுதிக்கும் என்ன சம்பந்தம்?
குழந்தைகளிடையே பொறாமை
தாயின் மடியில் இன்னொரு குழந்தை தவழ்வதைக் கண்டால் ஒரு குழந்தையின் சுபாவமே மாறிப்போகும். யாரும் பார்க்காதபோது, சின்னக் குழந்தையின் கண்ணைக் குத்த வரும். தாய் திட்டுவாள். அதனால் தம்பி அல்லது தங்கையைப் பிடிக்காமல் போகும்.
சற்று வளர்ந்ததும், அக்காள் தன்னிடம் ஏன் அன்பாக இல்லை என்று புரியாது, அவள் சொல்வதையெல்லாம் தாயிடம் போய் கோள் சொல்வாள் தங்கை.
`இது ஏதோ குழந்தைகள் சண்டை!’ என்று தாய் அதைப் பெரிதுபடுத்தாது விடவேண்டும்.
அல்லது, “நான் கேட்டேனா? இன்னொருவரைப்பற்றிக் கோள் சொல்லாதே!” என்று இளையவளுக்குப் புத்திகூற வேண்டும்.
அதைவிட்டு, பெரியவளைக் கண்டித்தால், சகோதரிகளிடையே இருக்கும் உறவில் விரிசல் அதிகமாகும்.
பிறர்தான் என்னைவிட உயர்த்தி
சிலருக்குத் தன்னிடமிருக்கும் சீரிய தன்மைகள் முக்கியமாகத் தோன்றாது.
பார்ப்பவர்கள், கேள்விப்படுகிறவர்கள் எல்லாரையும்விடத் தான் தாழ்ந்திருப்பதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய அமைதி பறிபோகாமல் என்ன செய்யும்?
கதை
பதின்ம வயதிலேயே திருமணமாகிவிட்ட அபிராமிக்குத் தான் அதிகம் படிக்கவில்லையே என்று குறை. தனக்குக் கிடைக்காதது எல்லாம் மகளுக்குக் கிடைக்கவேண்டும் என்று உறுதிபூண்டாள்.
மகளும் தாயின் ஆதங்கம் புரிந்து, நல்ல உழைப்பால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.
சிறுமியாக இருந்தபோது, மகள் அடைந்த சிறு, சிறு வெற்றிகளால் பூரித்த அபிராமி மாறிப்போனாள். அவள் வளர்ந்தபின்னரோ பொறாமைதான் ஏற்பட்டது.
அபிராமியைப்போல் அவள் மகளுக்குக் கோலம் போடவோ, சமைக்கவோ தெரியாது. எந்த பண்டிகைக்கு என்ன செய்யவேண்டும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. தாயைப்போல் எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தாது, படிப்பிலேயே கவனம் செலுத்தினாள். இதெல்லாம் தாய்க்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம்.
பிறர் அடையும் வெற்றியால் மற்றொருவர் எதையும் இழந்துவிடுவதில்லை.
தான் அடைந்த வெற்றியைவிடப் பிறரது வெற்றியைக் கவனித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவது ஒருவர் தன்மேல் கொண்டிருக்கும் மிகையான அன்பின் வெளிப்பாடு.
ஒப்பீடு எதற்கு?
தமக்கு இருக்கும் திறமைகளைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்கிறவர்கள், `நான்தான் சிறந்தவன்! நான் செய்வதையெல்லாம் உன்னால் செய்ய முடியுமா?’ என்று சவால் விடுவார்கள். இதனால் எந்தவிதப் பலனும் கிடைக்கப்போவதில்லை.
பொறாமைக்கு ஆளானவர்களுக்கு உள்ளுக்குள் ஏதோ கசப்பு இருக்கும். நம்மைப்பற்றி – நம்மிடமே – அவதூறாகப் பேசுவார்கள்.
நம்மிடமுள்ள சிறப்புகளைப் பொறுக்க முடியாதவர்களே `இவனிடம் என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கலாம்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் உறவுகளையும், நட்பையும் பிரிக்க முயல்வார்கள்.
கதை
எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடன் வேலைபார்த்த மோகனா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். சில ஆண்டுகளிலேயே மோகம் குறைந்தது.
கல்யாணத்துக்குப் பிறகு கணவர் தன்னைக் கவனியாது, நண்பர்களுடனேயே பொழுதைப் போக்குகிறாரே என்ற வருத்தம் மோகனாவிற்கு. அந்த உணர்வு தன்னைப்போல் இல்லாது, மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தும் பிற பெண்கள்பால் திரும்பியது.
அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா!
`உன் கணவரைப் பிற பெண்களுடன் பார்த்தேன்,’ என்று ஆரம்பிப்பாள்.
அந்த மனிதர் வேலை முடிந்து, அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தன் காரில் ஏற்றிப் போயிருப்பார். அதிகம் ஆராயாது, கணவர்மேல் சந்தேகம் கொண்டு, சண்டை பிடிப்பாள் மனைவி.
இதைத்தானே மோகனாவும் எதிர்பார்த்தாள்!
இப்படியாக, பல குடும்பங்களில் தகராறு எழச் செய்தாள் மோகனா. அதில் ஒரு அற்பதிருப்தி.
அவளுடைய திட்டம் புரிந்த ஆண்கள் தம் மனைவியை எச்சரிக்கை செய்யும் அளவிற்குப் போயிற்று அவளது கலகம்.
யாரைத்தான் நம்புவது?
வெற்றி பெற்றவர்களும், தம்மால் இயன்றதை மட்டும் செய்து திருப்தி அடைந்தவர்களும் பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை.
இவர்களால் நமது வெற்றியை ஊக்கமாகக்கொண்டு நடக்க முடியும். நம் வீழ்ச்சி இவர்களை வருத்தம் கொள்ள வைக்கும்.
கீழே இருப்பவர்கள்
தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தம்மைப்போல் கீழே இறக்கிவிட நினைத்து, அதன்படி நடப்பவர்கள் கீழேயேதான் இருப்பார்கள்.
இது புரிந்து, அவர்களது செய்கையால் நாம் மாறவும் கூடாது, மனம் வருந்துவதிலும் பயனில்லை.
தாழ்ந்திருப்பவரைப் பார்த்து யாராவது பொறாமை கொள்கிறார்களா?
பிறரைப் பொறாமைப்படவைக்கும் அளவுக்கு நாம் சிறந்திருக்கிறோமே என்று பெருமைகொள்ள வேண்டியதுதான்!
நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்:
https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A