கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27
-மேகலா இராமமூர்த்தி
நூலறிவும் வாலறிவும் நிரம்பிய அருங்குணத்தோனான மாருதி, உருசியமுக மலையேறிவந்த குரிசில்களான இராம இலக்குவரோடு அளவளாவி அவர்கள்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவனானான். சுக்கிரீவனின் துயரத்தைத் தீர்க்க இவர்களால்தாம் இயலும் என்றுணர்ந்தவன், ”சிறுபோது இங்கே இருப்பீர்; சுக்கிரீவனை விரைந்து கொணர்கின்றேன்” என்றுகூறிச் சென்றான்.
சுக்கிரீவனை அணுகிய அனுமன், ”வாலிக்கு வந்துசேர்ந்தான் காலன்; நாம் இடர்க்கடல் கடந்தோம்” என்று மகிழ்வோடியம்பி, இராமனின் வரலாற்றை விரிவாக அவனிடம் விளம்பத் தொடங்கினான். மாய மான் வடிவெடுத்து வந்த மாரீசனின் கதையை இராமன் முடித்ததைச் சொல்லவந்த அனுமன்,
”காவலனே! மானிடக் காயத்தில் (உடம்பில்) உள்ள இராமன் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலேயன்றி வேறு யாருமல்லன்! அவ் அம்மானோடு (பெருமைக்குரியவன்) நீ நட்புக் கொள்! மாய மானாக வந்த மாரீசன் மாயும்படி அவனுக்கு மா யமானாக (பெரிய யமன்; யமான் – யமன் என்பதன் நீட்டல் விகாரம்) ஆனவன் இந்த இராமன்” என்று தேர்ந்த சொற்களால் சுக்கிரீவனிடம் இராமனின் திறலுரைத்தான்.
ஆயமால் நாகர் தாழ் ஆழியானே அலால்
காயமான் ஆயினான் யாவனே காவலா
நீ அம்மான் நேர்தியால் நேர்இல் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3898)
தொடர்ந்தவன்… ”நிருதர்கோனான இராவணன் மதியின்மையால் இராமன் மனைவியை வஞ்சனையால் கவர்ந்துசென்றான்; அவளைத் தேடிவந்த அம்மானுடர்களின் கிடைத்தற்கரிய நட்பு நினக்குக் கிட்டியது நின் தவப்பயனே!” என்று இராமலக்குவரின் இயல்பைத் தன் நுண்ணறிவினால் கண்டுணர்ந்த அனுமன் அதனைச் சொல்வன்மை தோன்றத் தன் தலைவனிடம் விண்டுரைக்கின்றான்.
இச்செய்திகளால் மனமகிழ்ந்த அருக்கனின் (சூரியன்) அருமை மைந்தன் சுக்கிரீவன், தன் துணைவர்கள் உடன்வர அனுமனோடு சென்று அண்ணல் இராமனைக் காணுகின்றான். ”திருமாலே மானுடனாய் வடிவெடுத்து வந்ததுபோல் அல்லவா இவன் இருக்கின்றான்!” என்று இராமனைக் கண்டு தன்னுள் வியந்தவன், இறைவனே மானுட வடிவில் தோற்றரவு செய்திருப்பதால் மற்றுள்ள தேவர் குழுக்களையெல்லாம் மானுடம் வென்றுவிட்டது என்று தெளிந்தான்.
இராமனுக்கு அருகில்சென்ற சுக்கிரீவன், முற்பிறவியில் நானியற்றிய நல்வினைகளாலேயே உன்னைக் காணும் பேறுபெற்றேன் என்று உபசார மொழிகள் கூறிநின்றான். அதனைக் கேட்ட இராமன், ”சவரி எனும் மூதாட்டி வழிகாட்டியதன்பேரில் நாங்கள் உன்னைத் தேடிவந்தோம்; எங்கள் கையறு துன்பம் உன்னால் நீங்குமென்று மெய்யாய் நம்புகின்றோம்” என்று தாங்கள் சுக்கிரீவனைத் தேடிவந்த காரணத்தைச் செப்பினான்.
ஆனால் சுக்கிரீவனோ சீதையைத் தேடுதற்குத் தான் துணை செய்கின்றேன் என்று உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, “என் அண்ணன் வாலி தன் தடக்கைகளை ஓங்கிக்கொண்டு என்னை இருள் நிலைபெற்ற இவ்வுலகிற்கு அப்பாலும் துரத்திவர, இம்மலையே எனக்குப் பாதுகாவல் என்று கருதி இங்கு ஒளிந்து உயிர்பிழைத்தேன்; உயிரைவிடவும் துணிவில்லாத நான் உன்னைச் சரண் புகுந்தேன்; என்னைக் காத்தலே உனக்கு தருமமாகும்!” என்று தனக்கு முதலில் உதவுமாறு இராமனிடம் இறைஞ்சுகின்றான்.
முரணுடைத் தடக் கை ஓச்சி
முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகு
எங்கும் தொடர இக் குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்
ஆர் உயிர் துறக்கலாற்றேன்
சரண் உனைப் புகுந்தேன் என்னைத்
தாங்குதல் தருமம் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3912)
எந்த உயிருமே முதலில் தன்னைப் பற்றித்தான் சிந்திக்கும்; தான்படும் தொல்லைகளிலிருந்து விடுபடவே விழையும்; விரையும். பின்புதான் மற்றவர்களின் துயருக்கு உதவத் தலைப்படும். இதுவே உயிர்களின் உளவியல். இந்த உளவியலைச் சுக்கிரீவன் பாத்திரப் படைப்பு வாயிலாக நமக்குத் தெளிவாய் உணர்த்திவிடுகின்றார் கல்வியில் வல்லவரான கம்பர்.
சுக்கிரீவனின் நிலைகண்டு இரங்கிய இராமன், அவன் துன்பத்தை முதலில் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்தவனாய், ”இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நின்னை வருத்தியவர் என்னை வருத்தியவர் ஆவர்; தீயரே ஆயினும் உனக்கு நட்பானவர்கள் எனக்கும் நண்பரே; உன் உறவினர் எனக்கு உறவினர்; என் சுற்றத்தார் உன் சுற்றத்தார்; நீ என் இன்னுயிர் நண்பன்!” என்று கூறி அவனோடு நட்புக் கொள்கின்றான்.
மற்றுஇனி உரைப்பது என்னே
வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்
தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன்
கிளை எனது என் காதல்
சுற்றம் உன்சுற்றம் நீ என்
இன் உயிர்த் துணைவன் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3914)
எளியோரின் நிலைகண்டு இரங்குதலும் அவர்கட்கு உதவுதலும் உயர்ந்தோர் பண்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் சுக்கிரீவனைப் பற்றியும் அவன் அண்ணன் வாலியைப் பற்றியும் முழுமையாக எதுவும் அறிந்துகொள்ளாத நிலையில் சுக்கிரீவனிடம் உன் பகைவர் எனக்குப் பகைவர்; உன் நண்பர் எனக்கும் நண்பர் என்று இராமன் வாக்குறுதி அளிப்பதை அறிவுடைய செயலாகக் கருத இயலவில்லை. ”தேறற்க யாரையும் தேராது” என்பது வள்ளுவம் அல்லவா?
சுக்கிரீவனுக்கும் இராமனுக்குமிடையே மலர்ந்த நட்பைக்கண்டு மகிழ்ந்த குரக்குச் சேனை ஆர்த்தது; அஞ்சனைச் சிறுவனும் மேனி பூரித்தான். இராமலக்குவரோடு ஆங்குள சோலைநோக்கிச் சென்றனர் அனைவரும். சோலைபுக்கதும், இராமனும் சுக்கிரீவனும் பூக்களால் செய்த அணையில் அமர்ந்து உரையாடினர்.
பின்னர், நீராடிவிட்டு வானரர்கள் படைத்த விருந்தை உண்டு மகிழ்ந்த இராமன், அங்கே விருந்தோம்பப் பெண்டிர் யாரும் இல்லாததைக் கண்டான். அதன்மூலம் சுக்கிரீவனும் தன் மனையாட்டியைப் பிரிந்திருக்கின்றானோ என்று ஐயப்பாடுற்றான். அதனை அறிந்துகொள்ளுமுகத்தான், ”நன்மனைக்குரிய பூவையை நீயும் பிரிந்துளாயா?” என்று வினவினான்.
……பொருந்து நன் மனைக்கு
உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும்
பின் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3922)
விருந்தோம்புதலை மகளிர்க்குரிய தலையாயக் கடனாக – அறனாகக் கருதியவர்கள் தமிழர்கள். கோவலனோடு மதுரையில் தங்கியிருந்த கண்ணகி, அவனைப் பிரிந்திருந்த காலத்தில், அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலுமாகிய மகளிர்க்குரிய அறங்கள் அனைத்தையும் தான் செய்யமுடியாமல் போனதுபற்றி அவனிடம் வருந்தியதை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.
சுக்கிரீவன் நிலையை விரிவாக விளக்குவதே இராமனின் வினாவுக்கான விடையாக அமையும் எனக் கருதிய அனுமன், சுக்கிரீவனின் தமையனான வாலி பற்றி இராமனிடம் சொல்லத் தொடங்கினான்.
நான்கு வேதங்களையும் வேலிபோல் பாதுகாக்கும் சிவபெருமானின் அருளைப் பெற்றவனும், பெருவலி படைத்தவனுமாகிய ஒருவன் இங்கே இருக்கின்றான்; அவன் பெயர் வாலி!
திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த அமரரும் அவுணரும் முயன்று வலியற்று நின்றவேளையில் அங்குவந்த வாலி, தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்த தோள்களை உடையவன். நிலம் நீர் காற்று நெருப்பு எனும் நான்கு பூதங்களின் ஆற்றலையும் தான் ஒருவனே பெற்றவன்.
வாலியை எதிர்த்து யார் போருக்கு வந்தாலும் வந்தவர்களின் வலிமையில் செம்பாதி அவனுக்கு வந்துவிடும் வரத்தைச் சிவபிரானிடம் பெற்றவன் அவன். அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை நாள்தவறாது எட்டுத் திக்கும் சென்று பணிபவன். [பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் (இயமான னாம்விமலா – திருவாசகம்) ஆகியோர் அட்டமூர்த்திகள் எனப்படுவர். இவ் எண்மரையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின் சிவபிரான் ‘அட்டமூர்த்தி’ எனப்பட்டான்.]
கிட்டுவார்பொரக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான்
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3927)
அந்த வாலியின் வேகத்துக்கு ஈடுகொடுத்துக் காற்றுச் செல்லாது; கந்தவேளின் வேலும் அவன் மார்பைத் துளைக்காது; அவன் வால் செல்லும் இடத்தில் இராவணனின் கோல் செல்லாது; அவனது வெற்றிக் கொடியும் செல்லாது என்றுரைக்கின்றான் அனுமன்.
கால்செலாது அவன் முன்னர்
கந்த வேள்
வேல் செலாது அவன்
மார்பில் வென்றியான்
வால் செலாத வாய்
அலது இராவணன்
கோல் செலாது அவன்
குடை செலாது அரோ. (கம்ப: நட்புக் கோட் படலம் – 3928)
”இந்திரன் முதலான தேவர்களை வென்றவன் நான்” எனத் தருக்கித் திரியும் தசமுகனான இராவணனின் வீரமும் வாலியிடம் எடுபடவில்லை. அவ்வளவு ஏன்? இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கமும் வாலியின் தோள்வலியின்முன் நிற்கும் திறனற்றது என்று வாலியின் இணையற்ற தோளாற்றலை இராமனுக்கு அறியத் தருகின்றான் அஞ்சனையின் அரும் புதல்வன்.
அந்த வலிமிகு வாலி அரசனாகவும் சுக்கிரீவன் இளவரசனாகவும் இந்தக் கிட்கிந்தையை ஆட்சிசெய்து வருகின்ற காலத்தில் ஒருநாள் மயன் மகனான அரக்கன் மாயாவி, வாலியோடு போர்புரிய வந்தான். சிறிது நேரத்துக்குள்ளாகவே வாலியை எதிர்த்துநிற்க இயலாமல் ஆற்றல்குன்றித் தோற்றோடினான். பூமியில் எங்கிருந்தாலும் வாலி தன்னைத் தேடிவந்து காலிசெய்து விடுவான் என்றஞ்சிய மாயாவி புகுவதற்கரிய பிலம் (பூமிக்குள் செல்லும் சுரங்கவழி) ஒன்றிற்குள் ஓடி ஒளிந்தான்.
வாலியும் அவனை விடவில்லை; துரத்திச் சென்றான். பிலத்தருகே வந்தவன் தம்பி சுக்கிரீவனிடம், “நான் உள்ளே சென்று மாயாவியைப் பிடித்துக் கொணர்வேன். அதுவரை அவன் வெளியில் எங்கும் தப்பிச் செல்லாவண்ணம் நீ பிலத்தின் வாயிலில் சிறிதுநேரம் காவல் இரு!” என்று கூறிவிட்டுப் பிலத்தினுள் புகுந்தான்.
காலம் கரைந்தது; இருபத்தெட்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் வாலி வெளியில் வரவில்லை. ”இவ்வளவு காலமாகியும் வாலி வெளியில் வரவில்லையே…ஒருவேளை அவன் இறந்துபட்டானோ?” என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு ஏற்படலாயிற்று.
நாடோ அரசனில்லாது தாயற்ற குழவிபோல் தவித்திருந்தது. அதனைக்கண்ட நாங்கள், ”நீ அரசாட்சியை ஏற்றுக்கொள்” என்று இளவரசனான சுக்கிரீவனிடம் வேண்டினோம் என்றான் அனுமன்.
சுக்கிரீவன் அதற்கு உடன்பட்டானா?
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.