படக்கவிதைப் போட்டி – 298
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் ராமலக்ஷ்மி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
உழைப்பிலே…
உலக வாழ்வில் உயர்வுபெற
உன்னை நம்பி உழைத்திடுவாய்,
பலனது சொல்வார் பிழைத்திடவே
பார்த்தே உனது கையினையே,
நலமென நம்பிப் படுத்திடாதே
நாளை வாழ்வு உழைத்தால்தான்,
நலம்பெற உதவிடு அவருக்கும்
நம்பிச் செயல்படு கடமையிலே…!
செண்பக ஜெகதீசன்…
குறி கேளீர்
அறமும் திறமும் கொண்டோரை
அறச்சொல் ஏதும் செய்வதில்லை
அறிவும் உழைப்பும் இழந்துவிட்டால்
அதிர்ஷ்டம் உதவத் தேவையில்லை
நற்சிந்தைக் கொண்டு வாழ்வோரை
நாளும் கோளும் கெடுப்பதில்லை
இன்சொல் இயல்பாய் அமைந்துவிட்டால்
இன்பம் வாழ்வில் தொலைவதில்லை
நேர்மறை எண்ணம் நிறைந்திருக்க
நித்தமும் நிறைவு தேய்வதில்லை
சோர்வைத் தவிர்த்துச் செயல்பட்டால்
சுகத்துக்கு எப்போதும் கேடில்லை
கடமையைத் தொடர்ந்துச் செய்திருக்கக்
காலம் கணியாமல் போவதில்லை
கட்டுப்பாடும் கலந்திருந்தால்
கண்ணியம் வாழ்வில் குறைவதில்லை
எறும்பாய் என்றும் உழைத்திருக்க
எதிர்காலக் கவலை ஏதுமில்லை
குறிக்கோளில் குறியாய் இருந்திருக்க
குறிச்சொல் கேட்கத் தேவையில்லை
படக்கவிதைப் போட்டி 298
கருப்பு வெள்ளை நிறமதனில்
கண்டுகளித்த உன் முகமதனை
கற்பனையில் வடித்திட்டு
கவிதையொன்றை சொல்லவா?
கையினிலே கோலேந்தி
குறி சொல்லும் குலத்தவளா
குறுநகையோடு இருப்பவளா இல்லை
குடும்பச் சுமை சுமந்திட்டு
குத்துவிளக்காய் வலம் வருபவளா
கடைத்தெருவில் காலாற
நடந்துவரும் உன்னடையழகில்
கறுப்புவெள்ளை என்பதெல்லாம்
கண்டுகொள்ள மாட்டாறன்றோ
மொத்தத்தில் நீ நடந்து வந்தால்
திருவாரூர் தேரழகி
காணக் கோடிக் கண்களென
காத்துநிற்பர் கடைத்தெருவினிலே
பொருள் வாங்க மறப்பர் தன்னிலைதனிலே
மற்றவரின் கைபிடித்து
மாறிவரும் காலநேரம்
மணிக்கணக்கில் நீ உறைத்திட்டாலும்
மாறிடுமோ உன் சொல் நயம்தான்
ஆம்
நீ கையினிலே கோலேந்தி
குறிசொல்லும் குலத்தவளே!!
சுதா மாதவன்