வெற்றிக்குக் காரணம் (சிறுகதை)
நிர்மலா ராகவன்
ராமனுக்கு மனைவியிடம் எரிச்சல்தான் எழுந்தது.
அப்படி என்ன உலகில் இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள்? அதற்காக ஓயாமல் அழுதுகொண்டிருந்தால்?
முதல் குழந்தை என்று அவனும் எத்தனையோ கனவுகளுடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தெரியவில்லையே, அது குறையுடன் பிறக்கும், இருக்கும் நிம்மதியையும் பறித்துவிடும் என்று!
`வீணா அதைக் கொஞ்சிக்கிட்டு இருக்காதே. கீழேயே போட்டுவை. அது அல்பாயுசில போனதும் ரொம்ப வேதனையாப் போயிடும்!’ என்னமோ, அதன் இறப்புக்கு நாள் குறித்தவர்கள் போல் பலரும் அறிவுரை கூறியதை புனிதா காதில் வாங்கவேயில்லை.
தலையிலிருந்து ஒரு மயிரிழை உதிர்ந்தால்கூட சற்றே வருந்தும் பெண்ணாயிற்றே! தன் உடலில் ஒரு பாகமாக இருந்த குழந்தையின் இழப்பை நினைத்தும் பார்க்கமுடியுமா?
குழந்தையின் உடலும், கண்களும் மஞ்சள் நிறமாக மாறியபோதுதான் முதலில் சந்தேகம் எழுந்தது அவளுக்கு.
சிரிப்பும் களிப்புமாக இருக்கவேண்டிய குழந்தை! இப்படி சுரத்தில்லாமல் இருக்கிறதே! அடிக்கடி வாந்தி வேறு.
`வயிற்றுப்பகுதியில் இருக்கும் பெரிய உறுப்பு. கழிவுகளை அகற்றி, கொழுப்பைச் சேர்த்துவைப்பது என்று பல உபயோகங்கள் கொண்ட அவயவம்,’ என்றெல்லாம் மருத்துவர் விளக்கிய கல்லீரல் பழுதாகி இருந்தது.
“குழந்தைக்கு மாற்று லிவர் பொருத்தவேண்டும். இல்லாவிட்டால்..,” என்று அவர் முகத்தில் பரிவைத் தேக்கி வைத்துக்கொண்டு கூறியபோது, தான் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் இருக்குமோ என்று எழுந்த சந்தேகத்தை உதறினான் ராமன். அதை மனைவியின்மேல் ஆத்திரமாக மாற்றிக்கொள்வது எளிதாக இருந்தது.
`உருப்படியா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடத் துப்பில்லே!’ என்று சாடினான். “சனியன் செத்துத் தொலையட்டும். ஒரே அழுகையோட போயிடும்!”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க,” என்று கதறினாள் பெற்றவள். “நான் என்னோடதைக் குடுக்கறேன்”.
“ஹூம்!” உறுமிவிட்டு அப்பால் நகர்ந்தான் ராமன்.
இவளோட கல்லீரலைத் தானம் கொடுக்கப்போகிறாளாம்! கருவிலிருக்கும் இன்னொரு உயிரும் குறையுடன் வெளியாகவா?
டாக்டர் தான், `இந்த நிலையில் முடியாது!’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாரே! அது தெரிந்தும் நாடகமாடுகிறாள்!
`நீ ஆம்பளை. ஒழைச்சுக் கொட்டணும். ஒன் ஒடம்பிலே எதையாவது அறுத்தா, அப்புறம் ஒன்னால வேலை செய்ய முடியுமா?’ என்ற தந்தையின் விவாதம் நியாயமாகப்பட்டது அவனுடைய குழம்பிய மனதிற்கு.
அம்மாவும் ஒத்துப் பாடினாள்: “ஒரு பொட்டைக்கழுதை போனா என்னடா? இன்னும் அஞ்சு மாசத்திலே இன்னொண்ணுதான் பிறக்கப்போகுதே!” வசதியற்ற குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து, அனுபவித்த வேதனைகள் அவளை அப்படிப் பேச வைத்தது.
தாத்தா பாட்டியின் நம்பிக்கைக்குச் சவால் விடுவதுபோல், ஒரு வயதுக்குமேல் அந்தக் குழந்தை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தது.
புனிதாவின் உறுப்பில் ஒரு பகுதி குழந்தை பூரணிக்குப் பொருத்தப்பட்டது.
நான்கே மாதங்களில் இருவரது கல்லீரலும் முழுமையாக வளர்ந்தது. அவளும் வளர்ந்தாள்.
“நீ பிழைக்கவே மாட்டேன்னு நினைச்சோம் டீ,” என்று கிழவர் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டார். “நான், ஒங்க பாட்டி, எல்லாரும், `இந்தப் பொட்டைக்குட்டி போனா என்னா?’ ன்னுகூட சொல்லியிருக்கோம். ஒங்கம்மா கேக்கலியே!’
“அப்பா?” மெல்லிய குரலில் கேட்டாள்.
“அவனும்தான்! ஒடம்பில எதையாவது அறுத்துக் குடுத்தா, அப்புறம் எப்படி வேலை செஞ்சு சம்பாதிக்க முடியும்னு யோசிச்சான். நியாயம்தானே!” பழியை அவன்மேலேயே திருப்பினார்.
பூரணிக்கு வருத்தமாக இருந்தது. யாருக்குமே தான் முக்கியமாகப் படவில்லை!
தனக்குள் எழுந்த ஆத்திரத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியே தள்ளினாள்.
“நம் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். இதற்கு யாரெல்லாம் காரணம்?” என்று கேட்டார் ஒரு பேட்டியாளர்.
“என் கல்லீரலும் அம்மாவும்!” என்று உறுதியாகப் பதிலளித்தாள் பூரணி.
`என்னை `வேண்டாம்’னு சொன்ன அப்பாவுக்கு நன்றியும், பாராட்டும் ஒரு கேடா!’ என்ற வீம்பு எழுந்தது அவளுக்குள்.