படக்கவிதைப் போட்டி – 294

(அனைவருக்கும் வணக்கம். வல்லமை மின்னிதழ் சிறிது தடைப்பட்டதால், இதே படத்தை மீண்டும் அறிவிக்கின்றோம். வரும் சனிக்கிழமை வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அதன் பிறகு முடிவுகளை அறிவிப்போம். – ஆசிரியர்)
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் சரவணன் தண்டபாணி எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
பிள்ளை உள்ளம்
துள்ளிப் பாயும் வெள்ளோட்டம்
பள்ளம் மேடு பார்ப்பதில்லை
கள்ளம் இல்லா உள்ளத்தில்
பொய்யும் கசடும் சேர்வதில்லை
விரிந்து மலர்ந்த மலரைப் போல்
சிரித்து மலர்ந்த முகம் கொண்டு
திறந்து வைத்த புத்தகமென – மனதை
மறைத்து மூடிப் பூட்டவில்லை
சொல்லும் சொல்லில் பொய்யில்லை
வெள்ளை கருப்புப் பேதம் இல்லை
உள்ளத்தில் உள்ளதை மறைப்பதில்லை
பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை
மண்ணில் மலரும் மலர்களாயினும்
தண்ணீரில் மலரும் மலர்களாயினும்
கண்ணுக்கு தெரிந்த மலர்கள் நம்
கைகளுக்கு வருவதில்லை ….
குளத்தில் மலரும் அல்லியை பறிக்க குளிர்ந்த நீரில் இறங்கி உடல் நனைய
மூச்சை அடக்கி நீந்தி முயன்றால்
எட்டாதாயினும் கிட்டிடும் நம் கைகளில்
அதுபோல்…..
வாழ்வு சிறக்க வாப்புகள் பல உண்டு
வாப்புகள் வாசல் தேடி வருவதில்லை
மலரை தேடும் தேனீக்களைப் போல
மனிதனே நீயும் வாய்ப்பை தேடிட வெற்றி நிச்சயம்….
மாறுபாடு…
துள்ளித் திரியும் வயது,
துடுக்காகச் சென்று
சிறுவன்
பறித்துவிட்டான் மலரை..
சுள்ளென வெயிலில்
மலர்
வாடுவது கண்டு
வாடுகிறது அவன் முகமும்-
வருத்தத்தில்..
பிஞ்சு மனத்திற்குப்
புரிகிறது தவறென,
அஞ்சுகிறது அவன் மனது..
அச்சமிது போய்விடுகிறதே
அவன் வளர்ந்ததும்,
ஆம்
பஞ்சமா பாதகங்களையும்
அஞ்சாமல் செய்கிறானே
மனிதன்..
இதுதான் இயற்கையா,
மாறுமா மனிதனின் குணம்…!
செண்பக ஜெகதீசன்…